ஆகஸ்ட் 4ஆம் தேதி நள்ளிரவு. காஷ்மீர் உறைந்து போனது. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர்அப்துல்லா, மஹபூப் முப்தி உட்பட பல அரசியல் தலைவர்கள் வீடுகளில் சிறைப்படுத்தப்பட்டார்கள். நாடு முழுவதும் சிறைச்சாலை ஆனது. 70 லட்சம் காஷ்மீரிகள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத நிலை. ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த ராணுவத்துடன் புதிதாக 35000த்துகும் மேற்பட்ட ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். அமர்நாத் யாத்திரை சென்றவர்களும், பிற சுற்றுலா பயணிகளும் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என்ற பொய்க் காரணம் காட்டி அச்சுறுத்தப்பட்டு, ஏர் இந்தியா விமானத்தில் 50 சதவிகிதம் சலுகை கட்டணத்தில் காஷ்மீரை விட்டு அவசர அவசரமாக விரட்டப்பட்டார்கள். எல்லாத் தொலைத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்டது. பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டார்கள் வெளி மாநிலங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் தங்கள் இல்லங்களுக்குத் தொடர்பு கொள்ள இயலாத அவலநிலை உண்டாக்கப்பட்டது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி எல்லா சட்டரீதியான சடங்குகளும் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டன. பாராளுமன்றத்தில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சட்டப்பிரிவு சிறப்பு அந்தஸ்து 370 மற்றும் 35ஏ நீக்கம் செய்யப்பட்டன. ஜம்மு- காஷ்மீர் இனி புதுடெல்லியில் மத்திய அரசின் மூலம் நேரடியான ஆளுகைக்கு உட்பட தீர்மானிக்கப்பட்டது. காஷ்மீரில் சட்டசபை அமைக்கப்பட்டாலும், அதற்கு அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டன. லடாக் நேரடியாக டெல்லியின் அதிகாரத்துக்கு உட்பட்டு விடும், அங்கு எந்தவித சட்டமன்றமும் இல்லை என்ற தீர்மானங்களையும் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்த தீர்மானத்தையும் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் படித்துப் பார்க்கக் கூட நேரம் கொடுக்கப்படாமல் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன. திறந்த பேனாவுடன் காத்திருந்த நம் நாட்டின் குடியரசுத் தலைவர் காஷ்மீர் மக்களின் ஊசல் ஆடிக் கொண்டிருந்த நம்பிக்கைகளைத் தன் கையெழுத்தின் மூலம் உடைத்து தள்ளினார் இப்படி நடந்தது பலருக்கு ஏதோ திடீரென்று நடந்த தாக்குதல் போல தெரியலாம் ஆனால் இது பாஜகவின் பல ஆண்டு கனவுத் திட்டம். முதல் முறை பொறுப்பேற்ற உடனே முயற்சித்து, அது இயலவில்லை. ஆனால் இந்த முறை அறுதிப் பெரும்பான்மையுடன் இந்த நீதிக் கொலையை அரங்கேற்றி உள்ளது.

வரலாற்றுப் பாதையில் காஷ்மீரிகள் போராட்டம்

1952 பொதுத் தேர்தலில் பா.ஜ.காவின்  தாய் கட்சி ஜனசங்கம்  சிறப்பு பிரிவு 370 ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், ஜம்மு-காஷ்மீர் முழுவதுமாக இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று தங்கள் பொது தேர்தல் அறிக்கையில் கோரிக்கை வைத்தது. இந்தியா என்ற பேரரசை நிறுவியபோது இந்தியா- பாகிஸ்தான் எல்லைக்கோட்டின் இரு புறங்களிலும் பல லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட வரலாற்றை நாம் அறிவோம். பஞ்சாபிலிருந்து அப்போது இந்துக்களும், சீக்கியர்களும் ஜம்முவில் குடியேறினர். பல லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஜம்முவில் இருந்து 5 லட்சம் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஓடிச் சென்றனர். அப்போது ஜம்மு-காஷ்மீரின் அரசு அதைத் தடுக்க, முஸ்லிம்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவற்றுக்கு முன்னால் 1944இல் ஷேக் அப்துல்லா தலைமை தாங்கிய காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி 1948இல் காஷ்மீர்–ஜம்மு சுதந்திர நாடாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியது. மகாராஜா ஹரி சிங்கின் முன்னோரான குலாப்சிங் காஷ்மீரையும் அதன் மக்களையும் எழுபத்தைந்து லட்சம் ரூபாய் கொடுத்து பிரிட்டிஷாரிடம் இருந்து விலைக்கு வாங்கியிருந்தார். இந்த விற்பனை செல்லாது, ராஜா ஹரிசிங் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும், காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே! என்ற முழக்கத்தை வைத்தது ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி. ஆனால் இந்தக் கலகத்திற்கு எதிராக ராஜாவின் படைகள் ஒடுக்குமுறையில் இறங்கின. அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக நாடெங்கிலும் கிளர்ச்சி தொடங்கியது. ஷேக் அப்துல்லா அரசரால் சிறைபிடிக்கப்பட்டார்.

பாகிஸ்தானை ஒட்டியுள்ள பூஞ்ச் இனத்தவர் 1947இல் ஹரி சிங் அரசின் கொடுமையான வரி விதிப்பிற்கு (ஜி.எஸ்.டி.) எதிராகக் கலகம் செய்தனர். பூஞ்ச் கலகக்காரர்களுக்கு உதவி செய்ய அங்கு வசித்த பழங்குடிகள் காஷ்மீருக்குள் நுழைந்து தாக்கினார்கள். அவர்கள் சாதி மத பேதமின்றி கொலை,  கொள்ளைகளில் ஈடுபட்டார்கள். அருகில் இருந்த பாகிஸ்தான் காஷ்மீர் மன்னரை, நடந்த தாக்குதல்கள் குறித்து நடுநிலை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியது. மன்னரும் விசாரணை நடத்தப்படும் என்று கூறிய போதிலும் அப்படி எதையும் அவர் செய்யவில்லை. இந்தக் கிளர்ச்சியின் விளைவாக 1947 அக்டோபர் 4 காஷ்மீர் ஜனநாயக குடியரசு எனும் தற்காலிக அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது ஆனால் அது 20 நாட்கள் மட்டுமே நீடித்தது. அதைத்தொடர்ந்து அரசர் மறுபடியும் ஆட்சியைக் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து அரசாட்சியை விலக்கி, மக்கள் ஆட்சியைக் கொண்டுவர ஆங்காங்கே கிளர்ச்சிகள் நடைபெறத்தொடங்கின.கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தானின் ஆதரவுடன் மீண்டும் மகாராஜாவின் ஆட்சி மீது படையெடுப்பு நடத்தினார்கள் மகாராஜாவிற்கு நாடு தன் கையை விட்டு நழுவி விடும் சூழ்நிலை ஏற்பட்ட உடன், இந்தியாவின் ராணுவ உதவியை நாடினார். ஜம்மு காஷ்மீரை நிபந்தனைகளோடு இந்தியாவுடன் சேர்க்கவும் முடிவு செய்தார். பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனாலும் 1947 அக்டோபர் 26 ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைப்பதற்கான ஆவணத்தில் ராஜா ஹரிசிங் கையொப்பமிட்டார். (Instrumentation of accession). அந்த ஆவணத்தில் ஏராளமான அடித்தல் திருத்தல்கள் இருந்தனவாம்.

மன்னர் இந்தியாவுடன் செய்த ஒப்பந்தத்தைப் போலவே பாகிஸ்தானுடனும் ஒரு ஒப்பந்தம் செய்து இருந்திருக்கிறார். எனவே இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்தது சட்டவிரோதமானது என்றது பாகிஸ்தான். அதன் காரணமாகத் தங்கள் படைகளை காஷ்மீருக்குள் நிறுத்தத் தொடங்கியது பாகிஸ்தான். அதேபோல இந்திய நாட்டு படைகளும் காஷ்மீருக்குள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நுழைந்தன. பாகிஸ்தான் படைகளை வெளியேற்ற வழி இந்தியா-பாகிஸ்தான் இரு நாட்டு படைகளும் விலகி சர்வதேச பார்வையாளர்கள் கண்காணிப்பின்கீழ் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது. ஆனால் அதை இந்தியா ஏற்கவில்லை. எனவே பாகிஸ்தான் தங்கள் படையைத் தொடர்ந்து காஷ்மீருக்குள் அனுப்பத் தொடங்கியது. எனவே இந்திய ராணுவத்துடன் போர் தொடங்கியது. இந்த இரு தரப்பு  மோதல்கள் 1949 ஜனவரி வரை நீடித்தது.

1948 ஜனவரியில் இந்தியா காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. பாதுகாப்பு அவைக்கு எடுத்துச் சென்றது. பிறகு 1949 ஜனவரி முதல் தேதி இந்தியா—பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. போரின் முடிவில் பாகிஸ்தான் வசம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்றில் ஒரு பகுதியான ஆசாத் காஷ்மீரும், மூன்றில் இரு பகுதிகள் இந்தியா வசமும் ஒதுக்கப்பட்டது..பிறகு  1971ஆம் ஆண்டு  நடந்த இந்தியா பாகிஸ்தான் போருக்குப் பிறகு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி (LOC) என்பது வரையறுக்கப்பட்டது.

1948-இல் இந்தியா பாகிஸ்தான் குறித்த ஐ.நா.கமிஷன் பொது வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் கொண்டு வந்தது. அதன்படி காஷ்மீரில் ஊடுருவியுள்ள ராணுவத்தை இரு நாடுகளும் திரும்பப்பெற வேண்டும், மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியது. ஆனால் இரு நாடுகளுமே அப்படிச் செய்யவில்லை.  இந்தியா காஷ்மீரைத் தன் பக்கம் இறுத்திக் கொள்ள சட்ட ரீதியான ஒரு முயற்சியை மேற்கொண்டது. அதுதான் சிறப்பு அந்தஸ்து எனும் பிரிவு. 1949 அக்டோபர் 17ஆம் தேதி இந்திய அரசமைப்பு அவை (Constituent Assembly) அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 370ஐ உருவாக்கியது. காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியைக் கொடுத்து சுயாட்சியை வழங்கும் இந்த பிரிவின்படி, பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், தகவல் தொடர்பு ஆகிய மூன்று மட்டுமே மத்திய அரசாங்கத்தின் அதிகார எல்லைக்குள் இருக்கும். காஷ்மீரை இந்தியாவுடன் சேர்க்கும் ஆவணத்திலும் இப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிற சமஸ்தானங்களைப் போலன்றி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தனிக்கொடி வைத்துக் கொள்வதற்கும், அந்த மாநிலத்திற்கான பிரதமரையும் குடியரசுத் தலைவரையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீரில் பாகிஸ்தான் விசுவாசிகள்தான் ஆட்சிக்கு வருகிறார்கள். ஐ.எஸ்.ஐ மற்றும் பாகிஸ்தானிடம்தான் அதிகாரம் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களைக் கொண்ட அரசு, 1949 கராச்சி ஒப்பந்தப்படி மக்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளாமலேயே பாகிஸ்தான் அரசுக்கு அந்தப் பகுதியை ஒப்படைத்தது. பின்னாளில் இந்தியாவும் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் அடிச்சுவட்டைப் பின்பற்றத் தொடங்கியது.

1951 ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இது பொது வாக்கெடுப்பு இல்லை என்று ஐ.நா. கூறிவிட்டது. ஏனெனில் 5 சதவீதம் மக்கள் மட்டுமே வாக்களித்தார்கள். இதில் எழுபத்தைந்து இடங்களில் 73 இடங்களை ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி கைப்பற்றியது. எதிர்ப்பு இல்லை, ஆனால் முறைகேடுகள் நிறைய இருந்தன என்று கூறப்படுகிறது இந்தத் தருணத்தில் 1955 ஆகஸ்ட் 7 அன்று, நேரு மக்களின் மனங்களில் தான் காஷ்மீர் குறித்த முடிவு எடுக்கப்படுமே தவிர, வெளியில் அல்ல என்று மறுபடியும் உறுதியளித்தார். ஷேக் அப்துல்லா 1952இல் காஷ்மீருக்கு சுயநிர்ணய உரிமை தரப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார். 1952ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் மத்திய மாநில உறவுகள் ஒப்பந்தம் ஒன்றில் மத்திய அரசுடன் கையெழுத்திட்டார். அதன்படி ஜம்மு-காஷ்மீர் லடாக் பகுதிகளுக்கு சுயாட்சி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதனடிப்படையில் ஷேக் அப்துல்லா கொண்டுவந்த நில சீர்திருத்தச் சட்டம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.  ஜம்மு இந்துக்கள் சுயஆட்சி  ஒப்பந்தத்தை எதிர்த்தார்கள். இந்தியாவுடன் இணைய வேண்டும் என்ற கோரிக்கை அங்கு வலுப்பெற்றது. இந்தக் கோரிக்கையை முதன் முதலில் எழுப்பியது பாஜகவின் முன்னோடியான ஜனசங்கம் ஆகும்.

1954 ஏப்ரலில் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான ஒரு அதிகாரியை இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் நியமிக்கலாம் என்று இந்தியாவும் பாகிஸ்தானும் 1953இல் உடன்பாட்டுக்கு வந்தனர். ஆனால் ஜம்மு-காஷ்மீர் அமைச்சரவையில் ஷேக் அப்துல்லாவுக்கு பெரும்பான்மை இல்லை எனக்கூறி டாக்டர் கரண் சிங் 1953இல், அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, இந்து விசுவாசியான பக்ஷி குலாம் முகமது என்பவரைப் பிரதமராக்கினார். கரண் சிங், மகாராஜா ஹரி சிங்கின் புதல்வர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஷேக் அப்துல்லாவிற்குப் பெரும்பான்மை இல்லை என்பது சட்டமன்றத்தினுடைய ஒட்டுமொத்தக் கணக்கெடுப்பினால் அல்ல. அமைச்சரவையின் பெரும்பான்மை இல்லை என்பது மட்டுமே காரணமாகக் கூறப்பட்டது. சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஷேக் அப்துல்லாவிற்கு வாய்ப்பு தரப்படவில்லை. மாறாக, அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு அரசுக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் பக்ஷி குலாம் முகமது இந்தியாவுடன் காஷ்மீர் சேர்க்கப்படுவதற்கு, ஜம்மு–காஷ்மீர் சட்டமன்றம் ஒப்புதல் அளிக்கும்படி செய்தார். இந்த சமயத்தில்தான் விசாரணையின்றி யாரையும் சிறை வைக்கும் சட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன. ஷேக் அப்துல்லாவைக் கைது செய்ததைக் கண்டித்து ஆசாத் காஷ்மீர் கண்டனப் போராட்டங்கள் நடத்தியது.

நெருக்கடி கால அரசும், மக்கள் எழுச்சியும்

அன்று 80 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் ஆக இருந்த போதிலும் அரசர் இந்துவாக இருந்ததால், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க அவர் விரும்பவில்லை. அது மட்டுமல்ல, காஷ்மீரி மக்கள் காஷ்மீர் தனி நாடாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். காஷ்மீர், இந்தியாவுடன் இணைந்ததால் மன்னராட்சி நீக்கப்பட்டு, ஷேக் அப்துல்லா தலைமையில் நெருக்கடி கால அரசு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்த இணைப்பை ஏற்றுக்கொண்ட நேரு தலைமையிலான அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதுதான் காஷ்மீர் பிரச்சினைகளில் மிக முக்கியமான அடிப்படை ஆகும்.

காஷ்மீரில் சட்டம்–ஒழுங்கு நிலை நாட்டப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீர் மக்கள் சுதந்திரமாகத் தீர்மானித்து, ஜம்மு-காஷ்மீர் மக்கள் கருத்து கேட்கப்பட்டு ஒரு பொது வாக்கெடுப்பு எடுக்கப்படும் என்றும், அதில் மக்களின் விருப்பத்தை அறிந்து காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ப்பதா வேண்டாமா என்று தீர்மானிக்கப்படும் என்றும் நேரு அறிவித்தார். இந்திய அரசின் சார்பாக நேரு இந்த வாக்குறுதியைப் பலமுறை அளித்துள்ள போதிலும் அவருடைய எண்ணம் எல்லாம் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துவிட வேண்டும் என்பதாகவே இருந்தது.

1952 அக்டோபர் 7 தனது பாராளுமன்ற உரையில் மக்கள் விருப்பத்திற்கு எதிராகவும் ஆயுதப்படைகளின் உதவியோடும் மக்களை வெற்றி கொள்ள நாம் விரும்பவில்லை. ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் நம்மிடமிருந்து பிரிய விரும்பினால் அவர்கள் வழியில் செல்லலாம். நாம் வலிந்த கட்டாயத் திருமணங்களை விரும்பவில்லை. காஷ்மீர் இணைப்பு தற்காலிகமானதே! என்று நேரு பறைசாற்றினார் ஆனால் அப்படி ஒரு பொது வாக்கெடுப்பு கடைசிவரை நடக்கவே இல்லை.

இதற்கிடையே 1954 மே மாதம் பாகிஸ்தான் அமெரிக்காவின் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டது. போர்க் கால நேச அணிகள் உருவானது. பாகிஸ்தான் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்தவுடன் நேரு காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்துதல் என்பதைக் கைவிடத் தொடங்கினார். பாகிஸ்தான் பல்வேறு ராணுவக் கூட்டணிகளில் பிற நாடுகளுடன் இணைய தொடங்கியது. இதன் விளைவாக மறுபுறம் 1955 ஆம் ஆண்டு இந்தியா சோவியத் ரஷ்யாவுடன் கை கோர்த்தது. இந்தியா சோவியத் யூனியனிலிருந்து ராணுவ தளவாடங்களைப் பெறத்தொடங்கியது.

மறுபடியும் 1962இல் காஷ்மீரில் தீர்வு காணப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானம் ஐநா பாதுகாப்பு அவையில் கொண்டு வரப்பட்டபோது, இந்தியாவிற்கு சார்பாக சோவியத்யூனியன் தனது வீட்டோஅதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தத் தீர்மானத்தை தள்ளுபடி செய்துவிட்டது. எனவே பொது வாக்கெடுப்பு என்ற நிலைப்பாட்டை இந்தியா அப்போதே கைகழுவி விட்டது.

பிறகு பல்வேறு அரசியல் நிகழ்வுகள் உலக அரங்கில் நடந்தேறின. 1964இல் நேரு நோய்வாய்ப்பட்டார். காஷ்மீர் மக்களின் விருப்பத்தைக் கருத்தில் கொண்டு காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியை மேற்கொள்ளும் வகையில் சிறையிலிருந்த ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்து பாகிஸ்தானுக்கு சமாதான பேச்சுக்கு அனுப்பிவைத்தார். ஆனால் இரண்டு நாட்களில் நேரு இறந்து விட்டதால், அந்த முயற்சி தோல்வியடைந்தது.

1964இல் இந்தியா சட்டத் திருத்தம் செய்து காஷ்மீரைத் தனதாக்கியது. அது வரை அந்த மாநிலத்திற்குத் தரப்பட்டிருந்த சிறப்பு தகுதியின் காரணமாக அந்த மாநில மக்கள் தங்கள் பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் தேர்ந்தெடுத்து வந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பிரதமர் முதல் அமைச்சராக மாற்றப்பட்டார். இதற்கிடையே 1965இல் மெக்கா போய் திரும்பிய ஷேக்அப்துல்லா சூழ்நிலையை அறிந்து திரும்பினார்.  திரும்பியவுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் பொது வாக்கெடுப்பு முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அது தொடர்ந்து போராடத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக கொரில்லா குழுக்கள் வியட்நாம், அல்ஜீரியா போன்ற நாடுகளில் உள்ளது போல உருவாகத் தொடங்கின. ஆயுதமேந்திய பல குழுக்கள் உருவாகின. ராணுவக் குவிப்பும் அதிகரிக்கத் தொடங்கியது. தொடர் நிகழ்வுகள் காஷ்மீரில் நடந்த வண்ணம் இருந்தன. பல்வேறு விதமான போராட்டங்கள் அங்கே தொடர்ந்தன. 1982இல் ஷேக் அப்துல்லா மரணமடைந்து அவருடைய மகன் பரூக் அப்துல்லா தேசிய மாநாட்டின் தலைவரானார். பிறகு அவரே முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. 1998 மார்ச் 18 அன்று ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் டி.வி.கிருஷ்ணா ராவ் காஷ்மீரில் பல மனித உரிமை மீறல்களுக்கும், காஷ்மீரி மக்கள் கொலையுண்டதற்கும் இந்திய பாதுகாப்பு படையினர் தான் பொறுப்பு எனக் கூறி தன் மனவருத்தத்தையும் தெரிவித்தார். இப்படி நீண்ட தியாகப் போர் வரலாற்றைக் கொண்ட காஷ்மீரி மக்களின் நீண்டகால நம்பிக்கைக்குத்தான் ப.ஜ.க அரசு சமாதி கட்டியுள்ளது.

நீதியின் கொலை

டிசம்பர் 2018 முதல் ஜம்மு-காஷ்மீர் குடியரசுத் தலைவர் அதிகாரத்தின்கீழ் உள்ளது. எனவே ஜம்மு காஷ்மீரின் 370 ஆவது பிரிவை நீக்க அதற்கான ஒப்புதலை மத்திய அரசு நொடிப்பொழுதில் பெற்றது. இதிலிருந்து இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரம் யார் கையில் என்று புரிகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை தலைகீழாக ஆக்கி உள்ளது பாஜக அரசு. மாநிலமாக இருந்ததை, யூனியன் பிரதேசமாக மாற்றியுள்ளது. இது எத்தகைய கொடுமை.

காஷ்மீர் மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த சிறிதளவு ஜனநாயக உரிமைகள் கூட இதனால் பறிக்கப்பட்டு விட்டது. இது அம்மக்களை இந்தியாவிடமிருந்து மேலும் அந்நியமாக்கும். 370ஐ நீக்கியது என்பது இந்தியாவுடன் காஷ்மீர் முழுமையாக இணைக்கும் என்று கூறுவது நியாயமானது அல்ல. காஷ்மீர் மக்களின் தனி அடையாளத்தைக் காக்கவும் அவர்கள் நாட்டின் இறையாண்மையைத் தாக்காமல் இருக்கவும் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக அமைப்பு 370 சிறப்புப் பிரிவு. எந்த காஷ்மீர் தலைவருக்கும் தெரியாமல் அவர்களை சிறையில் அடைத்து விட்டு, மக்களை எல்லாம் வீட்டில் அடைத்து வைத்து, 370ஐ நீக்கியது அம்மக்களுக்கு அரசு இழைத்த துரோகம் ஆகும்.

இன்று காஷ்மீர் உலகிலேயே அதிக அளவு ராணுவ ஆக்கிரமிப்பு கொண்ட நகரமாக இருக்கிறது. முப்பது ஆண்டுகளாக மக்கள் ராணுவத்துடன் கெடுபிடியுடன் வாழ்ந்து வருகின்றார்கள். ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். 70,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்னும் ஆயிரக்கணக்கானோர் சித்ரவதைக் கூடங்களில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள். பல இளைஞர்கள் பெல்லட் துப்பாக்கி சூட்டினால் கண்களை இழந்திருக்கிறார்கள். எப்பொழுதும் ஒரு போர் சூழலிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்திப் போராடிய தீவிரவாதப் போராளிகள் அமைப்புகள் அடக்கப்பட்டு விட்டன. ஆனால் ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் கற்களை ஆயுதமாகக் கொண்டு தங்கள் உயிரைப் பணயம் வைத்து, தங்கள் சுதந்திர வேட்கையைப் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளையும், ஒப்பந்தங்களையும் காற்றில் பறக்க விட்டுவிட்டது. மக்களின் உணர்வுகள் எந்த அளவிலும் மதிக்கப்படவில்லை.

கொஞ்ச நஞ்சம் நம்பிக்கை கொடுத்த 370 சட்டப்பிரிவும் நீக்கப்பட்டு விட்டது.

இனி என்ன நடக்கும் என்று யோசித்தால் முதல் விளைவு பாஜகவிற்கு கோடிக்கணக்கில் பண வரவு அதிகரிக்கும். வளம் மிக்க, இயற்கை எழில் பொங்கும் காஷ்மீர் இனி அங்குலம் அங்குலமாக சுரண்டப்படும். உள்ளூர் மக்கள் கார்ப்பரேட்டுகளின் காவல்காரர்கள் ஆக மற்றும் கூலி ஆட்களாகப் பணிபுரிவார்கள். அனைத்து இயற்கை வளங்களும் கொள்ளை போகும். சொந்த ஊரிலேயே மக்கள் அகதிகளாகப்படுவார்கள்.

மறுபுறம் ஆயுதமேந்திய புதிய இளம் போராளிகள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உண்டு. தினமும் போர்ச்சூழலைச் சந்திப்பதிலிருந்து காஷ்மீர் மக்கள் தப்பிக்க இயலாது. இன்றைய மௌனம் நாளைய ஆபத்தான எதிர்ப்புக்கான முன்னுரை. இதைத் தவிர்க்க அரசு என்ன செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவது மனித உரிமையின் மீது அக்கறை கொண்ட அனைவரின் கடமையாகும்.

தற்போது நீக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவு 370 அரசு மீண்டும் அமல்படுத்துவது ஜனநாயகத்துக்கு செய்யும் நீதியாக இருக்கும். துண்டிக்கப்பட்ட அத்தனை தொலைத் தொடர்புகளையும் உடனடியாக அங்கே வழங்குவது அவசியம்.

கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் லட்சக்கணக்கில் குவிந்து கிடக்கும் ராணுவத்தை அங்கிருந்து திரும்பப்பெற வேண்டும்.

மக்களுடனான உரையாடலுக்குத் தொடர்ந்து வழிவகுக்க வேண்டும்.

ஜனநாயகம் என்பது மக்களின் விருப்பத்தோடு  செய்யப்படும் ஆட்சிமுறை என்பதை உணரவேண்டும். கார்ப்பரேட்டுகள் பாய்ந்தோடி இயற்கை வளங்களை சூறையாடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

நமது வேண்டுகோள்கள் காது கேளாதவர்களின் காதில் ஊதிய சங்காகப் போனாலும்கூட தொடர்ந்து ஊதப்படும்போது மக்களின் எழுச்சியை சாத்தியப்படுத்தும். நீதிக்கான பாதை அமைய உதவும்.