11-4-19 அன்று இரவு சென்னைக்கும் ராஜஸ்தானுக்கும் இடையிலான ஜி20 ஆட்டம் முடியும் தறுவாயில் இருக்கிறது. முதலில் ஆடியிருந்த ராஜஸ்தான் சென்னைக்கு நியமித்த இலக்கு 151. ஆரம்பத்தில் தடுமாறிய சென்னை பின்னர் தோனி மற்றும் ராயுடுவின் கூட்டணிமூலம் வெற்றி விளிம்பில் கைப்பற்றிக்கொண்டு ஏற முயன்றபோது, கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை எனும் நெருக்கடி நிலையில், தோனி அவுட் ஆனார். அடுத்தாட வேண்டியவர்கள் ஜடேஜாவும் சேண்ட்னரும். அவர்கள் பெயர்பெற்ற மட்டையாளர்கள் அல்ல. அவர்கள் பொலார்டோ, ரஸலோ அல்ல. ஆகையால் தோனியின் விக்கெட் ஒரு பெரிய சரிவாக அமைந்தது.
தோனி டக்-அவுட்டிலிருந்து ஆட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். முதல் பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடித்தபின், தோனியின் விக்கெட்டுக்குப்பின் அடுத்த பந்தில் நோ-பால் என அறிவிக்கிறார் நடுவர் உல்லாஸ் காந்தி. ஒரு உபரி எண் மற்றும் freehit கிடைக்கும். இது ஒரு முக்கியமான சந்தர்ப்பம். எல்லாம் சரியாகப் போனால் இந்தப் பந்துடன் ஆட்டம் நிச்சயம் சென்னையில் சட்டைப்பையில் விழுந்துவிடும். தோனி அதையே எதிர்பார்த்திருப்பார். ஆனால் ஒரு திருப்பம்.

ஸ்கொயர் லெக் நிலையில் உள்ள நடுவர் புரூஸ் ஆக்ஸன்போர்ட் இந்த நோ பாலை ரத்து செய்வதாய் அறிவிக்கிறார். யாருடைய தீர்ப்பு சரி? குழப்பம். ஆனால் இந்திய நடுவர் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆக்ஸன்போர்டின் முடிவை ஏற்கிறார். மேலும் நோ-பால் குறித்து தீர்ப்பு வழங்குவது ஸ்கொயர் லெக் நடுவரின் பொறுப்பு என்பதே விதிமுறை. ஆகையால், அதுவே நியாயம். இந்தச் சந்தர்ப்பத்தில் குழப்பம் விளையக் காரணமே வழமையைமீறிக் காந்தி நோ-பால் அறிவித்ததுதான். பொதுவாக நடுவர் ஸ்கொயர் லெக் நடுவரை ஆலோசித்து விட்டே முடிவை அறிவிப்பார். திருமணத்தின்போது மனைவி தாலியை பிடுங்கி கணவருக்குக் கட்டி விட்டுப் பின்னர் கணவர் அதைப் பறித்து மனைவிக்குக் கட்ட முயல்வது போன்ற அபத்த நகைச்சுவையாக இது முடிந்திருக்க வேண்டும்.

ஆனால் டக் அவுட்டில் பார்த்துக் கொண்டிருந்த தோனி கோபத்தின் உச்சிக்கே போனார். தன்மீதான கட்டுப்பாட்டை இழந்தார். குழாயடியில் சிண்டைப் பிடித்து அறைய குடத்துடன் ஆவேச நடையிட்டுச் செல்லும் பெண்களைப் போல அவர் ஆடுதளம் நோக்கிக் கிளம்பினார். நடுவர்களுடன் கோபத்தில் உரையாடினார். நடுவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டு எப்படி முடிவை மாற்ற முடியும் எனத் திரும்பத் திரும்பக் கேட்டார். இது ஒரு அபத்தமான எதிர்வினை என்பது தோனிக்குப் பின்னர் விளங்கி இருக்கும். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் தோனியைப் போன்றே இல்லை. அவர் சில நிமிடங்கள் கோலியின் ஆவி தனக்குள் புகுந்தது போல நடந்து கொண்டார். இறுதியில் ஆக்ஸன்போர்ட் பிடிவாதமாய் தோனியிடம் தன் முடிவை மாற்ற முடியாது எனக் கூறி அவரைத் திரும்ப அனுப்பினார்.

உலகமே உற்றுக் கவனிக்கும் ஒரு ஆட்டத்தொடர் இது. முன்னாள் வீரர்கள், நிபுணர்கள், நிர்வாகிகள் எனப் பலரும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர் (பந்து வீச்சாளர் இங்கிலாந்தை சேர்ந்தவர், நடுவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியர்). தோனி என்னதான் நட்சத்திர வீரர் என்றாலும் அவர் தன்னை நடுவர்களுக்கு மேலாகக் கருத வேண்டியதில்லை, இது ஒரு மோசமான உதாரணத்தை அடுத்து வரும் வீரர்களுக்கு அளிக்கும் என்பது போன்ற பார்வைகள் முன்வைக்கப்பட்டன. இந்தியாவின் சார்பில் பிஷன் சிங் பேடி (கிரிக்கெட் வாரியம் மற்றும் நட்சத்திர வீரர்களின் பிம்பத்தைச் சுக்குநூறாய் உடைத்து விளாச விரும்பும்) -கடுமையாய் தோனியை விமர்சித்தார். கங்குலியோ “தோனியும் மனிதர்தானே, இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்” என்றார்.

மேட்ச் ரெபரி இதுகுறித்து விசாரணை நடத்தினார். இத்தகைய குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனையாக ஒன்றிரண்டு ஆட்டங்களில் தோனியைத் தடை செய்யலாம் அல்லது குறைந்தபட்ச தண்டனையாக 50% ஆட்டக் கட்டணத்தை அபராதமாக விதிக்கலாம். இந்தக் குறைந்தபட்ச தண்டனைக்காக மேட்ச் ரெபரியும் கண்டனத்துக்கு உள்ளானார். ஒரே கலவரச் சூழல்!

பார்வையாளர்களுக்கு யாரை ஆதரிப்பது, இது தோனியேதானா என்பது போன்ற குழப்பம். வழக்கமாய் நடப்பது போல, ராஜஸ்தான் ரசிகர்கள் கூட எதிர்ப்பக்கம் எடுக்கவில்லை. சென்னை ரசிகர்கள் நடுவர்களை வைது விட்டு விலகிக் கொண்டார்கள். பரவலாக ஏற்பட்டிருந்த உணர்ச்சி ஒருவித ஆச்சரியம். “தோனிக்கு என்ன ஆச்சு?”

இந்தச் சர்ச்சையில் பத்ரிநாத் தெரிவித்த கருத்துதான் முக்கியமானது. அவர் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர். தோனியின்கீழ் ஆடியவர். “தோனி இப்படிக் கொந்தளிப்பதை முன்பே டிரெஸ்ஸிங் ரூமில் நடந்து நான் பார்த்திருக்கிறேன். ஆனால் வெளிப்படையாக ஒரு நடுவரிடம் அவர் மோதியது ஆச்சரியம் அளிக்கிறது” என்றார் பத்ரிநாத். தனது சுயசரிதையான 281 and Beyond  எனும் நூலில் வி.வி.எஸ். லஷ்மண் தோனியை தான் ஆடிய அணித்தலைவர்களில் சிறந்தவர் என்கிறார். அதற்கு அவர் குறிப்பிடும் முக்கிய காரணம், தோனியும் அலுத்துக் கொள்ளாத இயல்பும். அவருக்குப் பந்தா இல்லை, மிக நிதானமாய் திட்டமிட்டு செயல்படுவார், வீரர்களிடம் கனிவாக இருப்பார், அணி மிக மோசமாய் ஆடித் தோற்றாலும் அவர் ஜோக் அடித்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல நடந்து கொள்வார். அதே நேரம் வீரர்களிடம் தன் கருத்தை வலுவாகத் தெரிவித்து பிழைகளைத் திருத்தும்படி கேட்டுக் கொள்வார், ஆனால் அவர்களின் கடமையுணர்வைக் கேள்வி கேட்கமாட்டார். தோனியால் எப்படி இவ்வளவு சுயகட்டுப்பாட்டுடன் ஒரு ஐஸ் மனிதன் போல இருக்க முடிந்தது என லஷ்மண் ஆச்சரியப்படுகிறார்.

தோனியின்கீழ் இந்திய அணி அடைந்த மிக மட்டமான தோல்விகளுடன் (உலகக்கோப்பையை வென்றபின் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்த இந்திய அணி அனைத்து ஆட்டங்களையும் இழந்தது) ஒப்பிடுகையில் இந்த ஒரு ஐ.பி.எல். ஆட்டத்தின் முடிவு ஒன்றுமே இல்லை எனலாம். அந்த நோ பால் தீர்ப்பினால் அந்த ஒரு ஆட்டத்தை சென்னை இழந்திருந்தாலும்கூட சென்னையால் நிச்சயமாய் இறுதிப் போட்டியை அடைய முடியும், வெல்லவும் முடியும். ஆனால் தோனி ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டும்? ஏன் புறாவுக்காகப் போரிட வேண்டும்? அதுவும் இந்திய அணி தலைவராக அவர் மிக அமைதியானவராகவும் சென்னை அணியின் ஐ.பி.எல். தலைவராக அவர் அவ்வப்போது நிதானம் இழப்பவராகவும் (பத்ரிநாத் சொல்வதைக் கருத்தில் கொண்டால்) ஏன் இருக்கிறார்? ஒரு சர்வதேச ஆட்டம் அளிக்காத நெருக்கடியை ஐ.பி.எல். ஆட்டம் தோனிக்கு அளிக்கிறதா? ஆம், என்றால் ஏன்?

இதற்கு விடைகாண நாம் இன்றைய கார்ப்பரேட் பணிச்சூழல் மனிதர்களை ஆட்டுவிக்கும் விதத்தை அலச வேண்டும். வேலைச் சூழல்களில் நாம் இன்று நீக்கமறாது காண்பவை நெருக்கடி, பயம், பாதுகாப்பின்மை, பரஸ்பர சந்தேகம், சகமனிதரைத் துச்சமாகப் பாவிக்கும் மனப்பான்மை, தன் முன்னேற்றத்துக்காக யாரையும் பயன்படுத்தலாம், தன் பாதுகாப்புக்காக யாரையும் வெறுக்கலாம் எனும் மிதப்பு, எந்திரத்தனமான உறவுகள், பிளாஸ்டிக்கான புன்னகைகள், கசப்பான முகங்கள், வெறுப்பை உமிழும் கண்கள், பரஸ்பர அண்மையின் வெக்கை தாள முடியாத அசூயைஞ் அமெரிக்காவில் எண்பதுகளில் ஜனாதிபதி ரீகனின் தலைமையில் தபால் துறை கார்ப்பரேட்மயமாகத் துவங்கியபோது ஊழியர்கள் மத்தியில் மன அழுத்தமும் நெருக்கடியும் பாதுகாப்பின்மையும் உச்சம் பெற்றன. அப்போதுதான் ஊழியர்கள் பரஸ்பரம் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதும், மேலதிகாரிகளை சுட்டுவிட்டுத் தற்கொலை பண்ணிக் கொள்வதும் அதிகமாயின. இச்சம்பவங்கள் ஒரு தனிப் போக்காக உருக்கொள்ள இப்படியான வேலையிட கட்டுப்பாடற்ற கோபச் செயல்களைச் சுட்ட going  postal எனும் சொற்றொடரே ஆங்கிலத்தில் தோன்றி பிரபலமானது.

கடந்த கால்நூற்றாண்டில் உலகமெங்கும் நடந்துள்ள வேலையிட துப்பாக்கிச் சூடுகள், கொலைகள் மற்றும் தற்கொலைகளில் பிரான்ஸ், ரஷ்யா, துருக்கி, சீனா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் இடம்பெற்றிருந்தாலும் முதலிடம் அமெரிக்காவுக்குத்தான். இதற்குக் காரணம் அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம் மட்டுமல்ல; கார்ப்பரேட் வேலையிட சுரண்டலும்தான். சதா கண்காணிக்கப்படும், மதிப்பிடப்படும் பதற்றம், தனது அன்றாட செயல்பாடுகளின் அடிப்படையில் கறாராய் மதிப்பிடப்படுகிறோம் எனும் உணர்வு, சின்ன சின்னத் தவறுகளுக்குக் கூட நாம் மிகப்பெரிய அளவில் விலைகொடுக்க வேண்டி வரும் எனும் பயம் ஆகியவை இன்றைய பண்பாட்டில் ஊறிப் போய் விட்டவை. எந்த அளவுக்கு என்றால் மிக இயல்பான கனிவான மனிதர்கள் கூட டிவி ரியாலிட்டி ஷோக்களில், விளையாட்டுப் போட்டிகளில், சினிமா சம்பந்தப்பட்ட சர்ச்சைகளில், ஒரு படமோ நிகழ்ச்சியோ வெற்றி பெற்றாக வேண்டும் எனும் நெருக்கடியில் வினோதமாய் நடந்து கொள்வதைப் பார்க்கிறோம். காரணம் வெற்றி அடைந்தே ஆக வேண்டும் எனும் உயிர்போகும் ஆவேசம் நம் அனைவரின் மென்னியைப் பற்றி நெரிக்கிறது. அது எளிய ஊழியர்களை மட்டுமல்ல; பெரும் கலைஞர்கள், விளையாட்டு வீரர்களையும் தம் இயல்பை மாற்றிக் கொண்டு வெறியாட்டம் ஆட வைக்கிறது. இந்தக் காலத்தின் மிக ஆபத்தான சொல்லாக “வெற்றி” உருமாறிவிட்டது. ஏன்?

வெற்றி என்பது முன்பு இவ்வளவு பொருண்மையாக, தகவல்பூர்வமாய் புரிந்து கொள்ளப்பட்டதில்லை. இன்று நான் ஒரு கட்டுரையைப் பிரசுரித்ததும் அதை எத்தனை பேர் பார்வையிட்டார்கள், அதற்கு எத்தனை பேர் விருப்பக்குறி தந்தார்கள், பகிர்ந்து கொண்டார்கள் எனும் தகவல்கள் கேட்டோ கேட்காமலோ எனக்கு அளிக்கப்படுகின்றன. எழுத்தின் நோக்கம் பாராட்டு மட்டுமல்ல என்பதிலிருந்து கவனம், பாராட்டு, ஏற்பு, பரவலான கவனம் எனத் தலைகீழாக இன்று மாறி உள்ளது. ஒரு பக்கம் இளம் எழுத்தாளர்கள் சமூகவலைகளைப் பயன்படுத்தி பிரபலமாவதை, பின்னர் அது தரும் அழுத்தம் பொறுக்காமல் விலகி, சில நேரம் முழுக்க இணையத்திலிருந்து விலகி வாழ்வதை, பின்னர் “மனம் திருந்தி” சமூக வலைதளங்களுக்குத் திரும்புவதைப் பார்க்கிறோம். இப்படி எழுதும் தளங்களிலிருந்து படைப்பாளிகள் விலகித் திரும்பும் சந்தர்ப்பங்கள் முன்பு மிக மிகக் குறைவு – சு.ரா. சற்று காலம் எழுத்திலிருந்து விலகி இருந்து தன் வணிகத்தைக் கவனித்தார்; ஜெயகாந்தன் ஒரேயடியாய் எழுதுவதைக் கைவிட்டு நீண்ட காலத்துக்குப் பின் திரும்பினார். ஆனால் இன்றைய எழுத்தாளனால் அப்படியொரு முடிவைச் சுலபத்தில் எடுக்க முடியாது. இன்று நாம் எழுதும் ஒவ்வொரு சொல்லும் மதிப்பிடப்படுகிறது, ஒவ்வொரு சொல்லும் நம் கைக்குவளையில் கனக்கிறது. இன்று எழுதுவதே ஒரு பாரமாய் மாறி விட்டது. இந்தப் பாரத்தின் அழுத்தத்திலிருந்து விடுபட நாம் சதா சுயபகடியில் ஈடுபடுகிறோம், மிகையாய் உணர்ச்சிகளைக் கொட்டுகிறோம், சுயமிகளைத் தொடர்ந்து பதிவேற்றுகிறோம், வடிவேலுவின் வசனங்களுக்குள் நம் முகங்களை மறைத்துக் கொள்கிறோம். நம்மைப் போன்ற சின்ன மீன்களே இவ்வளவு தத்தளிக்கும்போது தோனியைப் போன்ற ஒரு திமிங்கலம் இந்த கார்ப்பரேட் கழுத்தறுப்பு கலாச்சாரத்தில் சுலபத்தில் பலியாகாது தப்பிக்க முடியுமா சொல்லுங்கள்?

தோனி சர்வதேச கிரிக்கெட்டில் சற்றே விட்டேந்தியான விளையாட்டுத்தனமான அணுகுமுறையைப் பின்பற்றியவர். தோனி தலைவரான பின், ஒருநாள், அணி வீரர்களுக்கான பேருந்தைத் தானே ஜாலியாக ஓட்டிச் சென்றதை வி.வி.எஸ் லஷ்மண் தன் சுயசரிதையில் ஆச்சரியமாய் குறிப்பிடுகிறார். உறுதியான தலைவராக இருந்தாலும் தோனி அந்த உறுதிப்பாட்டை இறுக்கமாக, உச்சிக்கோபுரத்தில் குடியிருக்கும் அதிகார மமதையாய் மாற்றாதவர். அந்த “கூல்” மனப்பாங்கே அவரது ஆதார இயல்பு. -ஆரம்பத்தில் இருந்தே அவர் அப்படித்தான். தினேஷ் கார்த்திக்கும் தோனியும் ஆரம்பத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இடத்துக்கான போட்டியில் இருந்தார்கள். வங்கதேசத்தில் இந்திய அணி ஆடிக் கொண்டிருக்கையில் கார்த்திக் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் தோனி கார்த்திக்குக்கு பவுலிங் செய்கிறார். தனது போட்டியாளர் பயிற்சி செய்து மெருகேற தான் உதவலாமா எனும் கேள்விகளுக்கெல்லாம் தோனியின் உலகில் பிரசித்தமில்லை. அவருக்குப் பரஸ்பர போட்டி கூட ஜாலியான விளையாட்டு தான். தன்மீதான அபார தன்னம்பிக்கையை அவர் கைவிடாததற்குக் காரணம் கிரிக்கெட்டை அவர் ஒரு விளையாட்டாக மட்டுமே கண்டார் என்பது; – ஒரு தொழிலாக, கலையாக, தன் உயிருக்கும் மேலான ஒன்றாக அவர் கிரிக்கெட்டைப் பார்க்கவில்லை. அவருக்கு பைக், பேருந்து ஓட்டுவது, ராணுவத்தில் பயிற்சி பெறுவது, பிளே ஸ்டேஷன் விளையாடுவது, நண்பர்களுடன் ஜாலியாக இருப்பது போன்று தான் கிரிக்கெட் ஆடுவதும். எல்லா விசயங்களிலும் சீரியஸாக இருப்பார், கிரிக்கெட் ஒரு தொழிலும் கூட என்பதால் அதற்காக தோனி கூடுதலாய் உழைப்பார். ஆனால் கிரிக்கெட் தனக்கு எந்த விதத்திலும் நெருக்கடி அளிக்க அனுமதிக்க மாட்டார். இந்த அணுகுமுறையை அவர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராகப் பிற வீரர்களுக்கும் பகிர்ந்தளித்தார். அதனாலே அவருக்குக்கீழ் மூத்த மற்றும் இளம் வீரர்கள் மிகச்சிறப்பாய் ஆடினார்கள். கிரிக்கெட்டை எப்படி மீண்டும் விளையாட்டாகக் காண்பது என அவர் தன் சகவீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

“தவறுகளிலிருந்து கற்றுக் கொள்வதும், ஒரே தவறைத் திரும்பச் செய்யாதிருப்பதும் முக்கியம். நடந்ததை மாற்ற முடியாது.”

“மக்கள் என்னை ஒரு நல்ல மனிதனாக நினைவு கொள்ள வேண்டும், நல்ல கிரிக்கெட் வீரராக அல்ல.”

“என் வீட்டில் மூன்று நாய்கள் உண்டு. ஒரு தொடரையோ ஆட்டத்தையோ நான் இழந்து விட்ட பின்னரும் என் நாய்கள் என்னை வித்தியாசமாய் நடத்துவதில்லை.”

“வாழ்க்கையில் சில மோசமான நாட்கள் வரும். அப்போது நாம் ஊக்கத்தைக் கைவிடாமல் நினைவில் கொள்ள வேண்டும் – படம் இன்னும் முடியல நண்பா.”
போன்ற தோனியின் மேற்கோள்கள் அவரது இந்த அணுகுமுறையை அழகாய் காட்டுவன. இவற்றில் எனக்கு மிகவும் பிடித்தமானது இது: தோனியின் கீழ் இங்கிலாந்தில் தொடர்ந்து கேவலமாய் இந்திய அணி டெஸ்ட் ஆட்டங்களை ஒன்றுக்குப் பின் இன்னொன்றாய் இழந்த பின் ஊடகங்கள் கேட்டன – “இந்தத் தொடர் தோல்வியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்? உங்கள் ஆட்டவாழ்வில் எவ்வளவு மோசமான தோல்வி இது?” தோனி சொன்னார், “நீங்கள் சாகும்போது சாவீர்கள். அவ்வளவுதான். எப்படி சிறப்பாகச் சாவது என யோசிக்க மாட்டீங்க தானே?”

வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை இவ்வளவு நிதானமாய், நிர்தாட்சண்யமாய், விலகி நின்று தோனி எதிர்கொள்வதை நான் மிகவும் ரசித்தேன். நான் மட்டுமல்ல, தோனியின் ரசிகர்கள் பலரும் இதற்காகவே அவரைக் கொண்டாடினர்.

அதேநேரம் இது தோனியின் அணுகுமுறை மட்டுமல்ல என லஷ்மணின் சுயசரிதை நமக்குச் சொல்கிறது. ஒரு குறிப்பிட்ட ஆட்டத்திலோ ஆட்டத்தொடரிலோ ஒரு வீரரோ அணியோ ஆடுவதைக் கொண்டு அவர்களை மதிப்பிடக் கூடாது. ஒரு வீரரோ அணியோ மேம்பட்டு உச்சத்தை அடைய அவர்களை நீண்ட காலம் வாய்ப்பளித்து ஊக்கப்படுத்துவது முக்கியம். அணியின் பண்பாடே அதன் வெற்றி தோல்விகளைவிட முக்கியம் என்கிறார் லஷ்மண். தோனியும் இந்திய அணியின் பயிற்சியாளராக அப்போது திகழ்ந்த கேரி கிர்ஸ்டனும் இப்படியான ஒரு பண்பாட்டையே இந்திய அணிக்குள் அப்போது ஸ்தாபித்தனர்.

ஆனால் இன்று ஐ.பி.எல்.லில் இது சாத்தியமே இல்லை. நீங்கள் ஒரு சில ஆட்டங்களில் சொதப்பினால் அணியிலிருந்து நீக்கப்பட்டு ஒரு கட்டத்தில் உங்களை யாருமே ஏலத்தில் எடுக்காத நிலை ஏற்படும். ஒரு அணி தொடர்ந்து தோல்வியுற்றால் பார்வையாளர்கள், ஊடகம், உரிமையாளர்கள் என அனைத்து தரப்புமே அவ்வணியைக் கைவிட்டு விடுவார்கள்; கடும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாக்குவார்கள். நீண்ட கால பொறுமையும் ஆதரவும், வெற்றி தோல்வியைக் கடந்த அங்கீகாரமும் ஐ.பி.எல்லில் சாத்தியமே இல்லை. கையில காசு வாயில தோசை என்பதே ஐ.பி.எல்.லின் தாரக மந்திரம்.

ஆக, இந்தச் சூழலில் ஒருவரது / ஒரு அணியினது செயல்முறை, ஈடுபாடு, அர்ப்பணிப்பு, உழைப்பு, திறமை ஆகியவற்றுக்கு மதிப்பில்லை. ரன்கள், விக்கெட்டுகள், ரன்ரேட், வெற்றிப் புள்ளிகள் ஆகியவை குறித்த நிர்த்தாட்சண்யமான தகவல்களே நீங்கள் அடுத்த முறை டிவியில் காட்டப்படுவீர்களா, உங்களுக்கு விளம்பர வாய்ப்புகள் கிடைக்குமா என்பதைத் தீர்மானிக்கும். விராத் கோலியின் பெங்களூர் அணி தொடர்ந்து சில ஆட்டங்களில் தோற்றால் “கோலிக்குத் தலைமைப் பண்பு இல்லை” எனத் தயங்காமல் எல்லா விமர்சகர்களும் கூறுவர். ஆனால் இதே கோலி இந்திய அணியின் தலைவராய் சில தொடர்களை இழந்தால் கூட இத்தகைய விமர்சனங்களைச் சந்திக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, இப்படியான கார்ப்பரேட் சூழல் கிரிக்கெட்டுக்குள் ஐ.பி.எல். வழி இந்தியாவில் கடைவிரித்த வரலாற்று சந்தர்ப்பத்தில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸின் தலைவராகிறார். அத்துடன் அவர் மெல்ல மெல்ல தன்னை அறியாது மாறுகிறார். அவரது ஆளுமையையே அது அசைக்கிறது.

2013இல் ஏற்பட்ட சென்னைக்கு எதிரான சூதாட்ட சர்ச்சை ஒரு உதாரணம். அது வெறும் சர்ச்சை, அதைச் சீரியசாய் எடுத்துக் கொண்டு நம்மை உருக்குலைக்க அவசியம் இல்லையென தோனி கருதவில்லை. மாறாக, அவர் அதனால் பாதிக்கப்பட்டார். அவர் உணர்ச்சிரீதியாய் அதில் தன்னைப் பிணைத்துக் கொண்டார். சென்னை அணியின் நிர்வாகத்திற்கு எதிரான சொற்களைத் தனக்கு எதிரானவையாய் கண்டார். அதனால் தான் அவர் வெளிப்படையாகவே ஸ்ரீனிவாசன் மற்றும் குருநாத் மெய்யப்பனை ஆதரித்தார். தன் அணியுடன் சம்பந்தப்பட்ட ஒரு குற்றத்தைத் தன்னை மீறின ஒன்றாய் வழக்கமான முந்தைய தோனி கண்டிருப்பார். ஆனால் இன்றைய தோனியால் அப்படி விட்டேத்தியாய் யோசிக்க முடியாது. கார்ப்பரேட்டுகள் அதை அனுமதிக்காது. ஊழியர்கள் ஒட்டுமொத்தமாய் ஒரு நிறுவனத்தில் அத்தனை சிக்கல்களையும் தம் தலையில் சுமந்து போராட வேண்டும் என்பதே நவீன கார்ப்பரேட் மேலாண்மை தத்துவம்.- இதற்குத் தேன் தடவி ஊழியர்களை stakeholders என அழைக்கிறார்கள். கார்ப்பரேட்டில் நீங்கள் இன்று பணி செய்பவர் அல்ல, நீங்கள் வியாபாரத்தைப் பெருக்க வேண்டியவர்கள், வியாபாரத்தின் அத்தனை ரிஸ்க்குகளையும் சமாளிக்க வேண்டியவர்கள் என்பதே ஸ்டேக்ஹோல்டர் எனும் பதத்தின் பொருள். தோனியைப் போன்ற ஒரு கிரிக்கெட் கலைஞனும் ஒரு கார்ப்பரேட்டுக்கு ஒரு பெப்ஸி / கோக் முகவருக்கு இணையானவர்தான். இன்றைய தனிமனிதனின் அத்தனை நெருக்கடிகளும் இங்கிருந்துதான் பிறக்கின்றன.

கார்ப்பரேட் கலாச்சாரத்தின் குறியீடாகவே ஐ.பி.எல். திகழ்கிறது. அங்கு ஒரு வீரரை ஒரு அணி நிர்வாகம் ஏலத்தில் வாங்கிய பின் அணியும் நிர்வாகமும் அந்த வீரரும் இரண்டல்ல. தோனி சென்னை அணியின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு stakeholders ஆகிறார். அவர் இந்திய அணியிடம் கொண்டதை விட அதிகமான ஒரு ஈடுபாட்டை சென்னையிடம் கொள்கிறார். ஆபத்தான பாதகமான அளவுக்கு. ஹாட்ஸ்டார் ஆவணப்படமான Roar of the lionஇல் பேசிய தோனி 2007 உலகக்கோப்பையில் இந்திய அணி படுமட்டமாய் ஆடி வெளியேறியபோது தான் அடைந்த மன அழுத்தத்தைவிட 2013இல் நடந்த சூதாட்ட சர்ச்சை அளித்த அழுத்தமும் காயமும் அதிகம் என்கிறார். இந்திய அணியுடனான உறவை விட சென்னை அணியுடனான உறவைப் பலமடங்கு உயரத்தில் வைக்கிறார். “பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணத்துடன்” அதை ஒப்பிடுகிறார். அதாவது சென்னை சூப்பர் கிங்க்ஸ் நிர்வாகத்தின் ஒரு “மணமகளாக” தன்னைப் பார்க்கிறார் (அவர் வெளிப்படையாகப் பால்நிலையைக் குறிப்பிடாவிட்டாலும் கூட). கணவரிடம் என்ன குறை ஏற்பட்டாலும் தாலியை கண்ணில் ஒற்றிக் கொள்ளும் மனைவி அவர். இந்த ஒப்பீட்டை மேலும் அலசினால் தோனியின் இப்போதைய மனநிலையை நாம் நுணுக்கமாய் அறிந்து கொள்ளலாம். ஒரு மனைவி தன் கணவனை, குடும்பத்தை, குழந்தைகளை, உறவினர்களைத் தன்னில் இருந்து வேறுபடுத்திப் பார்க்காதவள். அவள் உலகமே கணவன்தான்.

ஆக சென்னையின், கார்ப்பரேட் கிரிக்கெட்டின், மனைவியாகுமுன், தோனி ஒரு ஜாலியான பெண், கல்லூரி மாணவி, இந்திய கிரிக்கெட்டுடன் டூயட் பாடும் நாயகி. ஆனால் கார்ப்பரேட் அவரை வாங்கிய பின் அவர் தாலி பந்தத்தால் பிணைக்கப்பட்டபின் அவரால் அப்படி விட்டேந்தியாய் இருக்க முடிவதில்லை. இன்றைய கார்ப்பரேட் ஊழியர்கள் பலரையும் போல ஒவ்வொரு வேலை நாளும், ஐ.பி.எல். ஆடுகளத்தில் ஒவ்வொரு ஆட்டமும் அவருக்கு யுத்தகள மோதலாய் மாறி விட்டது. செயல்முறையே (process) முக்கியம், விளைவுகள் அல்ல என்று கூறிய தோனி இன்று இல்லை. ஏனென்றால் கார்ப்பரேட் அடிதடி நெருக்கடி சூழலில் நீங்கள் அப்படிக் கீதாபதேசம் பண்ண முடியாது. நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ராஜஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் நடுவருடன் அவர் மோதியது இந்த மனப்பான்மை மாற்றத்தின் ஒரு அறிகுறி மட்டுமே!

நாம் எவ்வளவு சீரழிவான ஒரு காலத்தில் வாழ்கிறோம் பாருங்கள். தோனியைப் போன்ற ஒருவரையே பைத்தியமாக்கும் காலம் இது. நீங்களும் நானும் எம்மாத்திரம்?