தற்போதைய தலைமுறையில் தனக்கு எழுத்தாள நண்பர்களாக என்று மூவரைக் குறிப்பிட்டதில் என் பெயரையும் குறிப்பிட்டு, சென்றாண்டு அமரர் தோப்பில் முகமது மீரான் அவர்கள் தமிழ் இந்து தினசரியில் ஒரு நேர்காணலில் சொல்லியிருப்பதை புதுவை பாரதி வசந்தன் ஒரு நாள் காலை நேரத்தில் கைபேசியில் அழைத்துத் தகவல் சொல்லி, பெருமையாக இருக்கிறது என்றார். தோப்பில் அவர்களின் கைபேசி எண்ணைக் கேட்டு வாங்கினார். அந்த நேர்காணலின் சில விடயங்கள் பற்றி அவரிடம் பேச வேண்டும் என்றார். அதன்பின்பே அந்த தினசரியை நான் தேடினேன்.
எங்களுக்கிடையிலான நட்பு வெகு இயல்பானதும் உளமார அன்பு பாராட்டக்கூடியதாகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது. செகந்திராபாத்திலிருந்து ‘கனவு’ ஆரம்பிக்கப்பட்டு உள்ளூர் தமிழர்களுக்கான இதழாக இரு இதழ்கள் வந்து உள்ளூர் தமிழர்களின் வரவேற்பு கிடைக்காததால் பின்பு தமிழகப் படைப்பாளிகளுக்குமாக அதை மாற்றியபின் தோப்பில் அவர்களின் ‘கடலோரத்து கிராமத்துக் கதை’ நாவலின் பிரதியை அனுப்பியிருந்தார். அதைப் படித்துவிட்டுத் தொலைபேசியில் அவரை அழைத்துப் பேசினேன். உங்கள் ஊர் தேங்காய்பட்டணத்தின் சரித்திரமா இந்நாவல் என்றுதான் என் கேள்வியை ஆரம்பித்தேன். அவர் இல்லை என்று சொல்லிவிட்டுத் திருப்பி ஒரு கேள்வியைக் கேட்டார். அதைப்பற்றி நான் யோசித்துப் பார்த்ததில்லை.
“ஆந்திர மாநிலத்தில் இருக்கிறீர்கள்.. தமிழனுக்கு எப்போதும் தான் ஒரு தமிழன் என்பதில் கொஞ்சம் கர்வமும் பெருமிதமும் இருக்கும். பாரம்பரியமாக இருப்பதுதான். அது ஆந்திரத் தமிழனுக்கும் உண்டா? என்றார். “அதுபற்றி நாவல் எழுதுங்கள்” என்றார் தோப்பில். என் சிறுகதைகளின் தொடர்ந்த பயணத்தில் இருந்தபோது நாவல் எழுத வேண்டும் என்ற விதையை அவர் அக்கேள்வி மூலம் விதைத்தார் என்றே சொல்லவேண்டும். அதுவே என் முதல் நாவல் ‘மற்றும் சிலர்’. ஹைதராபாத் பின்னணியில் தமிழர்களின் வாழ்வியலை அந்நாவல் பேசியது.
கவை பழனிச்சாமி சேலம் தமிழ்ச் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளராக இருந்தபோது புத்தக அறிமுகங்கள் என்று தோப்பில் உட்பட 5 எழுத்தாளர்களைக் கூப்பிட்டபோது நான் தோப்பில் அவர்களின் சிறுகதைத் தொகுப்பொன்றைப் பற்றிப் பேசினேன். “இறுக்கமான, தீவிரமான விமர்சன மொழியைப் புரிந்துகொள்ள இயலாததாக இருக்கிறது. எதிலும் எளிமைதான் எனக்குப் பிடிக்கும். மலையாளத்தில் எழுத ஆரம்பித்து தமிழுக்குத் தாவியவன் நான். தமிழ்மொழியின் பாரம்பரியம் மலையாள மொழியோடு ஒப்பிடும்போது மிகவும் வித்தியாசமாகவே இருக்கிறது. தேசியத்தைச் சார்ந்த எழுத்திற்குப் பெரிய வரவேற்பு இருக்கிறது” என்றார்.
பல்வேறு சந்திப்புகள்… அதிலெல்லாம் அவர் பல மலையாள அம்சங்களைப் பற்றி பேசியிருக்கிறார்.
அதிலொன்று: தமிழ்ப் பெண்களுக்கு இருக்கும் தைரியம், போராடும் குணம் மலையாளப் பெண்களிடம் அவ்வளவாக இல்லை என்பதைச் சொல்லியிருக்கிறார். தன் மனைவி வெகுளித்தனமானவள் என்பதைச் சொல்லி இதைச் சொல்வார்.
திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் புத்தகத் தேர்வுக்கு ஒரு ஆண்டு நடுவராக இருந்தபோது திருப்பூரில் ஒரு விடுதியில் தங்கியிருந்து புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது புத்தகங்களுடன் காணப்பட்ட உருவத்தை அவரின் வீட்டில் எப்போது பார்த்தாலும் அடையாளம் கண்டிருக்கிறேன். வெகு எளிமையான, யதார்த்தமான படைப்புகளில் அக்கறைகொண்டு அவற்றைப் பற்றிப் பேசுவார். வெகுசன ரசனைப் படைப்புகளைப் புறம்தள்ளுவார். வெகுசன இதழ்களில் படைப்புகளை எழுதாமல் இருப்பதே ஒரு படைப்பாளி தீவிரத்தன்மை கொண்டிருப்பதன் அடையாளம் என்பதை வலியுறுத்துவார்.
கடந்த இரு ஆண்டுகளில் அவரைக் கண்டபோதெல்லாம் அவரின் கால்களின் வீக்கம் அவர் நோய் காரணமாக பலவீனப்பட்டிருப்பதைச் சொல்லிக்காட்டின. வருத்தமே மேலிட்டது. கடைசி சந்திப்பில் என் ‘கோமணம்’ நாவலின் மலையாளப் பதிப்பில் ஷாபியின் மொழிபெயர்ப்பு எளிமை சிறப்பாக இருப்பதாகச் சொன்னார். மலையாளத்தில் என் சுடுமணல் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்த போது அதற்கு முன்னுரை எழுதியிருந்தார். கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான குரல் சுப்ரபாரதி மணியனுடையது என்று பொதுவான அபிப்ராயத்தையும் வெளியிட்டிருந்தார். இவ்வாண்டு பிப்ரவரியில் திருநெல்வேலி பல்கலைக்கழகத்தில் என் படைப்புகள் பற்றி ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கருத்தரங்கைத் துவக்கிவைக்க தோப்பில் மீரான் அவர்கள் ஒப்புக்கொண்டதாக அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பேரா.ராமபாண்டி தெரிவித்தார். ஆனால் நிகழ்ச்சிக்கு இரண்டு தினங்கள் முன்பிருந்தே அவரின் மகன் இயலாமையைத் தெரிவித்ததாகச் சொன்னார். நிகழ்ச்சியின் நாளன்றும்.
அந்நிகழ்ச்சியின்போது நானும் சென்று அவரைச் சந்திக்க இயலவில்லை. அவரின் வீடு இருந்த பேட்டைக்கும் பல்கலைக்கழகத்திற்குமான இடைவெளி நிரந்தரமாய் நீண்டுவிட்டதைப் பின்னர் உணர்ந்தேன்.