மதவெறி, இனவெறி, சாதிவெறி, நிறவெறி, மொழி வெறிக்கு இணையாக இப்போது தரவெறியும் சேர்ந்துகொண்டு மக்களுக்குக் கடும் இன்னல்களைத் தருகிறது. தரம் என்ற சொல்லும் அதன் அர்த்தமும் மிகுந்த மாறுதலுக்கு உள்ளாகும் மற்றும் தெளிவாக வரையறுக்கமுடியாத ஒன்றாக இருந்தாலும் இதனைப் பயன்படுத்தி பெரும்பான்மை மக்களை உளவியல்ரீதியாக அடிமையாக, தாழ்வுமனப்பான்மை கொண்டோராக மாற்ற ஆளும் அதிகாரவர்க்கம் தொடர்ந்து தரம்சார்ந்த புதுபுது விதிகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.

தரம், தகுதி என்பவற்றைப் பள்ளிக்கோ, கல்லூரிகளில் சேருவதற்கோ அடிப்படையாக வைக்க வேண்டும் என்ற குரல்களின் பின்னணியில் ஆதிக்க மனப்பான்மை மற்றும் தங்களின் பிடி குறையக்கூடாது எனும் வன்மம்தான் இருக்கிறது. இடஒதுக்கீட்டுக்கு எதிரான முதல் மற்றும் முக்கியவாதம் இதுதான். ஆனால் உலகில் இடஒதுக்கீடு இல்லாத பதவி, படிப்பு என்று ஒன்றைக்கூட சுட்டிக்காட்ட முடியாது.

ராணுவத்தில் போர்வீரராகப் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கான அடிப்படைத் தகுதிகளான உயரம், படிப்பு, எடை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.இலங்கை அரசு, விடுதலைப் புலிகளோடு போராடிக் கொண்டிருந்தபோது, சேர விருப்பம் தெரிவித்த அனைவரையும் சேர்த்துக்கொண்டு பல்வேறு நாடுகளில் அவர்களைப் பயிற்சிக்கு அனுப்பி போருக்குப் பயன்படுத்திக் கொண்டது. கார்கில் யுத்தத்தின்போது அதிகாரிகளுக்கான பயிற்சி மையங்களில் அடிப்படைப் பயிற்சி காலம் குறைக்கப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி கொடுத்து போர்முனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

போர் சூழல்களில் அந்தந்தப் பகுதிகளில் உடனடியாக ஆட்களைச் சேர்த்து, பயிற்சி கொடுத்து போர் வீரராக பணிபுரிய வைக்கவும் அதிகாரம் உண்டு. உயிருக்கு ஆபத்தைத் தரக்கூடிய பணியிலேயே உலகின் எந்த நாடாக இருந்தாலும் இதுதான் தகுதி, தரம். நிலை இப்படி இருக்க, பள்ளிக் கல்வியில் தரம் இல்லாத சூழல் என்று துயரத்தை முற்போக்காளர்களும் கொட்டித் தீர்ப்பது விந்தையாக இருக்கிறது. உலகின் எந்தப் பணியாக இருந்தாலும் அதில் சேர, பணிபுரிய, பணிக்காக பயிற்சி எடுக்க அடிப்படைத் தேவை மனிதநேயமும், கற்றுக்கொள்வதற்கான ஆர்வமும் தான்.

உலகில் உள்ள எல்லா நாடுகளும் அவர்கள் நாட்டிலுள்ள பணிகள், படிப்பு போன்றவற்றை அந்தந்த நாட்டு மக்களை வைத்தே நிரப்பத்தான் முழு முயற்சி எடுக்கின்றன. அதற்காகப் பல சட்டங்களை இயற்றுகின்றன. விமானி, மருத்துவர், ஆட்சிப் பணித்துறை அதிகாரி, அரசியல்வாதி, ஆசிரியர், நீதி அரசர் என எந்தத் துறையாக இருந்தாலும் அவர்கள் நாட்டு மக்களுக்குத்தான் முதலிடம் மட்டுமல்ல, எல்லா இடங்களும் என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன.
அப்படி பணிகளுக்கு அவர்கள் இல்லாத சூழலில் வேறு வழியில்லாமல் மற்றவர்களின் உதவியை நாடும்போதே, அந்தப் பணிகளைச் செய்ய தங்கள் நாட்டு மக்களைத் தயார்படுத்தும் பணியைத் துவக்கிவிடுகின்றன. தங்கள் நாட்டைச் சார்ந்தவர்களைக் குறிப்பிட்ட நாட்டைச் சார்ந்தவர்கள் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் பணிகளுக்குத் தேவையான படிப்பை, பயிற்சியை எடுக்க பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புகின்றன.

பயிற்சி, படிப்பு சேர்க்கைக்கான அனைத்துத் தகுதி, திறன்களைத் தூக்கி குப்பையில் வீசிவிட்டு, குடியுரிமை என்ற ஒன்றின் அடிப்படையில் மட்டுமே அவர்களை தேர்ந்தெடுக்கின்றன. பணி செய்வதற்கான குறைந்தபட்ச திறன் என்பதைக்கூட முடிந்த அளவு குறைக்கத் தயங்குவது கிடையாது.

அய்யோ இந்தப் பதவிக்கு நல்ல தகுதி, திறன் படைத்தவர் இல்லாவிட்டால் அவ்வளவுதான் என்று சொல்லக்கூடிய பதவி, பணி ஏதாவது இருக்கிறதா என்று வெகு நாட்களாகத் தேடிக்கொண்டே இருக்கிறேன். குறிப்பிட்ட பணியைத் திறம்பட செய்ய கடின உழைப்பும், சரியாக செய்ய, அதனால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்க முழு முயற்சி செய்யும் மனநிலை இருந்தால் ஐ.நா. செயலாளர் முதல் சாலை போடுபவர்வரை செய்யும் பணியில் சிறந்து விளங்க முடியும்.
விடுப்புக் கடிதம் எழுதத் தெரியாத ஒருவர் என்பதைத் தகுதி குறைவாகப் பார்க்கும் பார்வை உண்மையில் வியக்க வைக்கிறது. எழுத்திலும், பேச்சிலும் தவறுகள் என்பதை பெரும் குற்றமாக, கல்வி அமைப்பின் மாபெரும் தவறாகப் பார்க்கும் பலர் இருப்பது வருத்தம் தருகிறது.

கல்வி, பள்ளிகள், கல்லூரிகள் அதன் நோக்கம் என்றால் என்னவென்றே அறியாத ஒரு கூட்டம் ஆளும்நிலைக்கு வந்தது அவலம் என்றால், அவர்களின் கூற்றுக்களை வேத வாக்காகக்கொண்டு, தரம், ஐயோ எப்படி இருந்த தமிழகக் கல்வியின் தரம் இப்படி ஆகிவிட்டதே என்று புலம்பும் இன்னொரு பெரும் கூட்டமும் உருவாகி இருப்பது மிகுந்த வேதனைதான்

வேத மந்திரங்களைப்போல சில குறிப்புகளை, (ஆய்வுகளை ஊடகங்கள் எடுக்கும் ஒப்பீனியன்போல் ஒத்த ஒன்று) வைத்துக்கொண்டு இவர்கள் ஆடும் வெறியாட்டம் தாங்க முடியவில்லை

பள்ளிக் கல்வியை பலரும் பாதியில்விட, குறிப்பாக பெண்கள் பாதியில் நிறுத்த என்ன காரணங்கள் என்பதை சமூக அக்கறையோடு ஆராய்ந்து, பல்வேறு திட்டங்கள், முயற்சிகள், ஊக்கத் தொகை, தங்கம் என்று பள்ளிப் படிப்பை நிறுத்துவதை அடியோடு குறைத்த அரசுகள் வில்லனாக முன் நிறுத்தப்படுவதை வெறியோடு மனசாட்சியே இல்லாமல் செய்வதற்கான காரணங்கள் அரசியல் என்பதில் சந்தேகமே இல்லை.

பள்ளிப் படிப்பை, கல்லூரிப் படிப்பை முடித்த இளம் சிறார்களை, மாணவ மாணவிகளை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று சொல்லக் கொடும்பாதகர்கள்கூட அஞ்சுவார்கள் என்ற நம்பிக்கையும் தகர்ந்துபோகும் என்று கனவிலும் எண்ணியதில்லை

அரசு வேலைகளுக்கு, தனியார் வேலைகளுக்கு, உலகெங்கும் உள்ள வேலைகளுக்கு அடிப்படை பள்ளி பொதுத்தேர்வு மதிப்பெண்கள், கல்லூரிப் பட்டப்படிப்புதான் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இதன் அடிப்படையில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ மாணவிகள் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்த, பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்றபின் கல்லூரிக்குச் சேரும் மாணவ மாணவிகளைப் பல மடங்கு அதிகரித்த மாநிலமான தமிழகத்தின்மீது கல்வி தரமற்றது, பயனற்றது என்று வீசப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்ட அரசியல் சார்ந்த வன்மம் என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது .
அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசுப் பேருந்துகள், அரசு நடத்தும் பஸ், ரயில், நிறுவனங்கள் என அனைத்தையும் மிக மோசம் என்று முன்னிறுத்தி பலரை நம்பவைப்பதில் வெற்றிபெற்ற கூட்டம் இப்போது நம்ப இயலாத வன்மத்தோடு, ‘சீ சீ என்ன கல்வியோ, என்ன தரமோ!’ என்று முழு வீச்சில் இறங்கி இருப்பதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

Pass, fail வைத்துதான் பணிகளுக்குச் சேரும் தகுதி, மேற்படிப்பு எல்லாம் முடிவு செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் மாணவ மாணவிகள் தேர்ச்சி சதவீதம் குறைவு, கல்லூரிகளில் பட்டபடிப்புக்காகப் பெறுபவர்கள் குறைவு என்று வருந்தினால் நியாயம், அர்த்தம் இருக்கிறது. ஆனால் நிலை அப்படியா?
வன்மமும் உள்நோக்கமும் கொண்டு ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களை, கல்லூரிப் படிப்பை முடித்தவர்களை அறிவற்றவர்கள், தரம் இல்லாதவர்கள் என்று சொல்வதை அக்கறை என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

தேர்ச்சி பெற்றவர், தேர்ச்சி பெறாதவர் என்பதை வைத்துதான் ஒரு மாணவனின் தகுதி மேற்படிப்புக்கோ, பணிகளுக்கோ முடிவு செய்யப்படுகிறது எனும் அடிப்படைகூட புரியாதவர் அல்ல இவர்கள். இருந்தும் இப்படி, ‘அய்யோ தாழ்ந்த தமிழகமே, அழிந்த கல்வியே’ என்று முழக்கமிடுவதன் பின்னே உள்ள உள்நோக்கமும் சிதம்பர ரகசியம் அல்ல; கல்வியில் இருந்து ஒரு புள்ளியை எடுத்துவிட்டால் வரும் கலவியில் இதே தரம், ஒருவன், ஒருத்தி எப்படி இருக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்தால் ஆயிரத்தில் ஒருவருக்குக்கூட திருமனம் நடக்காது. நடக்கக்கூடாது.

‘சீ சீ? தரமே இல்லாமல் எவ்வளவு பி.எம்.ஐ., பல் வரிசை, மூக்கு வரிசை, sவீஜ் பேக், சொட்டை, இளநரை, நானூறு மீட்டர் நடந்தாலே மூச்சுவாங்கும் தகுதியே இல்லாத இளைஞர் கூட்டத்தை உருவாக்கி இருக்கிறோமே’ என்று வருந்துவதில் இருக்கும் நியாயத்தில் நூற்றில் ஒரு பங்குகூட தரமே இல்லாத பள்ளி படிப்பை, கல்லூரிப் படிப்பை முடித்த மாணவ மாணவிகளை உருவாக்கி இருக்கிறோம் என்று சொல்வதில் கிடையாது. மீண்டும் நவோதயா பள்ளிகளை முன்வைத்து தர வெறிக்கூட்டம் வெறியாட்டம் ஆடத் துவங்கிவிட்டது .

பத்து வயது மாணவ மாணவிகள் இடையே நுழைவுத் தேர்வு வைத்து அதில் நூறில் 99 பேரை நிராகரித்து ஒருவருக்கு மட்டும் கட்டாயமாக குடியிருப்பு பள்ளியில், அதுவும் அதே மாவட்டத்தில் தாய் தந்தை வசிக்கின்ற சூழலில் இளம் சிறார்களை வலுக்கட்டாயமாகப் பிரித்து அரசு, ஆயிரத்தில் ஒரு மாணவருக்கு மட்டும் சிறப்புக் கல்வி, சிறப்பு பயிற்சி தருவது சரியான ஒன்றா?

தாய்-தந்தை உறவு, நட்பு இருக்கும் குழந்தையைப் பத்து வயதில் வலுக்கட்டாயமாகப் பிரித்து குடியிருப்பு பள்ளியில் படிக்கவைப்பது சாடிசம் கீழ்தான் வரும். குழந்தை தொழிலாளர், குழந்தை போர்வீரர் போலதான் இதுவும்.

‘தனியார் குடியிருப்பு பள்ளிகள் இல்லையா’ என்று அறிவுஜீவித்தனமான கேள்விகள் வரும். அரசு எங்கும் குழந்தை தொழிலாளர்களைப் பயன்படுத்துவது கிடையாது. அவர்களை மீட்கவேண்டிய பொறுப்புதான் அரசுக்கு உண்டு. ராணுவ வீரர்களை பயிற்சிக்குக்கூட 16 வயதுக்கு முன் சேர்க்க மாட்டேன் என்ற சர்வதேச ஐ.நா.நாடுகளின் கருத்தரங்கத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்து போட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இந்தி இல்லை, தமிழ் உண்டு என்று ஒத்துக்கொண்டாலும் நவோதயா பள்ளிகளில் நுழைவுத் தேர்வு மூலம் மாணவ மாணவிகள் சேர்க்கை இருக்கக்கூடாது. சீட்டு குலுக்கிப்போட்டு விண்ணப்பித்த மாணவ மாணவிகள் இடையே இருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு 33 சதவீதம் என்பதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

தமிழ்நாடு எங்கும் இருக்கும் அநாதை இல்லங்களை மத்திய அரசு நவோதயா தங்கும்பள்ளிகளாக மாற்றினால் இரு கை தட்டி வரவேற்பேன். தாய்-தந்தை இல்லாத குழந்தைகளுக்குக் குடியிருப்பு பள்ளிகளை உருவாக்கியதில் இருக்கும் நியாயம், மனித நேயம் நுழைவுத் தேர்வு வைத்து நூறில் ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கிறதா? முற்போக்கான சமூகம் குடியிருப்பு பள்ளிகளைப் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக நடத்துமா அல்லது குழந்தைகளுக்கு இடையே நுழைவுத்தேர்வு வைத்து நூறில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து பெற்றோரிடம் இருந்து பத்து வயது குழந்தைகளை வலுக்கட்டாயமாகப் பிரித்துப் பெரும் செலவு செய்து குடியிருப்புப் பள்ளிகளில் அவர்களுக்கு கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்தி தருமா?

எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய அற்புத விளக்காக அடிக்கடி சில நம் முன்னே கொண்டு வரப்படும். மோடி, Demonetisation, GST நீட் வரிசையில் அடுத்த அற்புத விளக்கு நவோதயா. ஒழுங்காக நடந்துகொண்டிருந்த மருத்துவக் கல்லூரி சேர்க்கையை, மாணவ மாணவிகளுக்கு மாநிலம் முழுவதும் பள்ளிப் படிப்பை நன்கு படித்தால் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் என்ற நம்பிக்கையை உருவாக்கிய சேர்க்கைமுறையை, மாணவர்களுக்கு இணையாக மாணவிகளும் இடங்களை பிடித்த முறையை, இடஒதுக்கீடு பெறும் சாதிகளைச் சார்ந்த மாணவர்கள் பொது இடங்களிலும் குறிப்பிடத்தக்க சதவீதம் இடம் பிடித்த முறையை அடித்து நொறுக்கிவிட்டு இந்தி, இந்து வெறியர்களின் தீர்வாக முன்நிறுத்தப்படும் இந்தி சார்ந்த தேர்வுகளில் ஒன்றுதான் நவோதயா பள்ளி.
ஒரு மாணவனுக்கு ஆண்டுக்கு 85000 ரூபாய் மத்திய அரசு செலவு செய்யுமாம் என்று பெருமிதத்தோடு சொல்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் நுழைவுத்தேர்வு வைத்து 80 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து சிறந்த கல்வியைத் தருவார்களாம்.ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்குச் சேர தமிழகத்தில் இருக்கும் மாவட்டங்களில் பள்ளிகளில் சேர 30000 மாணவ மாணவிகளுக்குக் குறையாத மாணவர்கள் உண்டு. இதில் ஆறாம் வகுப்பில் எண்பது பேரை கடுமையான போட்டிக்குப் பிறகு சேர்த்துக்கொண்டு அற்புத கல்வியைத் தருவார்களாம். அவர்களுக்குக் கல்லூரிகளில் இடம் எளிதாக கிடைக்குமாம் என்று சில புள்ளி விவரங்களை உள்நோக்கத்தோடு அரைகுறையாக நம்முன் கொட்டுகிறார்கள்.

நாடு முழுவதும் பல ஆண்டுகளாக 1128 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருக்கின்றன.அதில் இருந்து எத்தனை பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள் என்பதை வெளியிட்டால் அவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு இடையேகூட பள்ளிகளில்கூட வர்ணாசிரமத்தை உருவாக்கும் வருத்தம் தரும் உண்மை முகத்தில் அறையும்.

குழந்தையிலேயே வெகுசிலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு அதிக பயிற்சி கொடுத்து, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை ஒன்றுபோல உருவாக்கி, அவர்களில் இருந்து மிக அதிகமானவர்கள் முக்கியப் பதவிகளில் அரசு அதிகாரிகளாக, நீதிபதிகளாக, ஊடகங்களில் பணியாற்றுபவர்களாக இருக்க எடுக்கப்படும் முயற்சிதான் நவோதயா பள்ளி.

சைனிக் பள்ளியை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பள்ளி நவோதயா பள்ளி. எல்லா மாநிலத்துக்கும் ராணுவத்தால் நடத்தப்படும் சைனிக் பள்ளி ஒன்று உண்டு. அதன் அடிப்படை நோக்கமே ராணுவத்துக்கு அதிகாரிகளைத் தேர்வு செய்வதுதான். ஒரே மாநிலத்தில், ஒரே சாதிக் குழுவில், ஒரே மொழியைப் பேசுபவர்கள், ஒரே மாதிரியான கலாச்சாரத்தைக் கொண்டவர்கள் மிக அதிகமான இடங்களைப் பிடிப்பதை மக்கள் ஆட்சியில் மக்கள், மக்களின் பிரதிநிதிகள் கேள்விக்குள்ளாவதைத் தடுக்க உருவாக்கப்பட்டவை இவை. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிவரை உள்ள பல்வேறு பகுதிகளைச் சார்ந்தவராக இருந்தாலும் சைனிக் பள்ளியில் படித்தவர்களின் சிந்தனை ஒன்றுபோலத்தான் இருக்கும்.

எந்த மாநிலமாக இருந்தாலும் சைனிக் பள்ளிகளில் பன்றிக்கறி கிடைக்குமே தவிர மாட்டுக் கறி கிடைக்காது. மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகைகள் இந்துப் பண்டிகைகள்தான். சமஸ்கிருத மயமாக்கப்பட்ட இந்தி எனும் மொழிக்குத்தான் மிக மிக முக்கியத்துவம். ஆறாம் வகுப்பில் இருந்து மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படும் பள்ளி சைனிக் பள்ளி. ராணுவம் போன்ற பணிகளில் சேர, சுயசிந்தனையின் காரணமாக எதிர்கேள்வி கேட்காமல் கொடுக்கப்பட்ட பணியைச் செய்ய வேண்டிய பணிக்கு இதுபோன்ற மாணவத் தயாரிப்புகளை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம் என்றாலும் மனிதநேயம், மனித உரிமைகள், போர் இல்லாத வாழ்க்கை, சம உரிமை என்பதை போன்ற சிந்தனைகள் வளர்ந்து வரும் காலகட்டங்களில் இவையும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட வேண்டியது அவசியமே!
தமிழ்நாட்டில் படித்தவரோ, காஷ்மீரில் படித்தவரோ, மணிப்பூரில் படித்தவரோ அவரின் சிந்தனை இந்தி எதிர்ப்பு, மாட்டுக்கறி எதிர்ப்பு, எது இந்தியாவின் மதம், எது இந்தியாவின் கலாச்சாரம், உணவு, உடை, வாழ்க்கைமுறை, அண்டைய நாடுகளின்மீதான எதிர்ப்புணர்வு என்பதில் ஒன்றுபோலவே இருக்கும். இவர்களில் இருந்துதான் கணிசமான அதிகாரிகள் ராணுவத்தில் பணியில் சேருகிறார்கள். எந்த மாநிலமாக இருந்தாலும், மாநிலத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான பள்ளிகளில் இருந்து மொத்தமாக ராணுவத்தில் சேரும் அதிகாரிகளைவிட ஒரே பள்ளியில் இருந்து பெறுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய சமமாக இருக்கும்.

இதே நிலையை மற்ற பணிகளில் உருவாக்கத் தோன்றியதுதான் நவோதயா பள்ளிகள்.மத்திய அரசு இன்னும் எவ்வளவு ஆண்டுகளுக்குத்தான் ஒட்டுமொத்த மக்களின் நலனை நினைக்காமல், அவர்களின் உரிமைகளை, மொழிகளை, கடவுள்களை, கலாச்சாரத்தை மதிக்காமல் குயுக்தியாக, சூழ்ச்சியாக சிந்தித்து மக்களை ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்று ஒன்றுபோல மாற்றுவதே கடமை என்று நினைத்து திட்டங்களை வகுக்கும் என்று தெரியவில்லை.
தேர்வுகள் இல்லாத உலகை நோக்கிய பயணம்தான் ஐடியல் இலக்கு. இருக்கும் தேர்வுகளை முடிந்த அளவு குறைத்து எளிமையாக்குவதைத்தான் மக்கள் நலனை விரும்புவோர் செய்ய முயற்சிப்பார்கள். அதற்கு நேர்எதிராக சாடிஸ்ட்கள்தான் கடுமையான தேர்வுகள், தேர்ச்சி பெறுவது வெகு கடினமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்

லவ் ஜிஹாத், நாடகக் காதல் என்று பயமுறுத்தி மக்களைக் குறிப்பாக பெற்றோரை அச்சத்தில் தள்ளும் கூட்டத்துக்கும், கல்வி மிகமிக சீரழிந்துவிட்டது என்று பொதுப்படையாக, மாணவ மாணவிகள் தேர்ச்சி சதவீதம், GER போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் முன்னிறுத்துபவர்களுக்கும் இடையே வித்தியாசம் ஏதும் கிடையாது.

இவை அனைத்தும் தனி நபர் பயம், விருப்பு, வெறுப்பு, அரசியல் நம்பிக்கை சார்ந்த றிக்ஷீமீழீuபீவீநீமீபீ வியூஸ்தான் என்பதை மறுக்க இயலுமா?

கேந்திரிய வித்யாலயா -தமிழ்நாட்டு எம்.பி.க்களுக்கு ஒரு திறந்த மடல்

தமிழக அரசு பள்ளிகள் முழு இலவசம். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாயில் இருந்து பதினைந்தாயிரம்வரை ஆண்டுக்கு கட்டணம் கட்ட வேண்டும். மதிய உணவு கிடையாது. இலவசப் புத்தகங்கள் கிடையாது.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பீஸ் கட்ட வேண்டும். பதினைந்தாம் தேதிக்குள் கட்டாவிட்டால் அபராதம் உண்டு

நாடெங்கும் அங்கு படிக்கும் மாணவ மாணவிகளில் இருந்து மிமிஜி, நீட் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அரசு பள்ளிக் கட்டணம் வசூலிக்கும் கொடுமையும் உண்டு.

இந்தியும் கட்டாயம், வடமொழியும் கட்டாயம். தமிழ் மொழி, நாடெங்கும் உள்ள எந்த கேந்திரிய வித்யாலயா பள்ளியிலும் கிடையாது. முதல்முறையாக மதுரை கலெக்டர் பள்ளிக்குப் பத்து ஏக்கர் நிலம் எல்லாம் ஒதுக்கிக் கொண்டு வந்தார் .
தமிழை, தமிழ்நாட்டு சேர்ந்த மத்திய அரசு பணியில் உள்ளவர்கள் வாரிசுகள் படிக்க எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் வெறியோடு தடுப்பதுதான் மத்திய அரசு. மூன்றாம் மொழியாகக்கூட கிடையாது. அது கட்டாயம் சமஸ்கிருதம்தான்.தங்கள் செலவில் ஜெர்மன் சொல்லிக் கொடுக்க முன்வந்த னீணீஜ்னீuறீறீமீக்ஷீ பவனையும் இந்த அரசு மூன்றாம் மொழியாக அல்ல வேண்டுமானால் நான்காம் மொழியாக என்று தள்ளிவிட்டுவிட்டது

தமிழ்நாட்டைச் சார்ந்த எம்.பி.க்கள் நாடெங்கும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பள்ளிக்கு இருவர் (வடமொழிபோல) தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று கேட்டால் நியாயம். என்னைப் போன்ற தமிழகத்தைச் சார்ந்த மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள் தமிழைப் படிக்க வாய்ப்புகள் கிடைக்கும்.

மூவாயிரம் தமிழ் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு பணி கிடைக்கும். தமிழக அரசு பள்ளிகள்போல கட்டணம் இல்லாமல், மதிய உணவும் தரும் சூழல் வர போராடினால் நியாயம்.
இவை வந்த பிறகு, மாணவர்கள் மேல் கட்டாய மொழித் திணிப்பு இல்லாத சூழல் உருவான பிறகு தமிழ்நாட்டிலோ ஒடிசாவிலோ அதிக பள்ளிகளைத் திறக்க சொன்னால் நியாயம்.