இன்று இலங்கையில் நடப்பது முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான யுத்தமல்ல. இன்று நடப்பது முஸ்லிம் ஜனநாயக சக்திகளுக்கும் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் இடையிலான போராகும். இதில் மனுக்குலம் முஸ்லிம் ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்க வேண்டும். லிபியாவில் இருந்து ஈராக் வரையிலான முஸ்லிம் நாடுகளின் அழிவுக்கு அடிப்படை அங்கெல்லாம் முஸ்லிம் அடிப்படைவாதிகளிடம் முஸ்லிம் ஜனநாயக சக்திகள் தோற்றுப்போனதுதான். அதன்பிறகுதான் அமெரிக்காவாலும் இஸ்ரேலாலும் அந்த நாடுகளை சீர்குலைத்து அழிக்க முடிந்தது.

இன்று தென்னாசியாவின் பெரும் கலாச்சார நெருக்கடியே ஒருசிலர் தமக்கு யார் பௌத்தன்? யார் இந்து? யார் முஸ்லிம்? என முடிவுசெய்யும் அதிகாரம் இருக்கிறது என கருதுவதுதான். இந்த ஒருசிலர்தான் தென்னாசியாவின் மத அடிப்படைவாதச் சாக்கடைகளின் ஊற்றுக் கண்களாக இருக்கிறார்கள். இவர்கள்தான் தென்னாசிய ஜனநாயக சக்திகளின் முதல் எதிரிகளாக இருக்கிறார்கள்.

இந்தத் தருணத்தில் ஈழத் தமிழரதும் மலையகத் தமிழரதும் தமிழகத் தமிழரதும் உலகத் தமிழரதும் புலம்பெயர்ந்த தமிழரதும் சிங்கள ஜனநாயக சக்திகளதும் அரவணைப்பும் ஆதரவும் இலங்கை முஸ்லிம்களுக்குத் தேவை. நாம் எல்லோரும் முஸ்லிம் ஜனநாயக சக்திகளை உறுதியாக ஆதரிக்க வேண்டிய தருணம். ஏனெனில் அவர்கள் மட்டும்தான் இலங்கைத் தீவின் இன்றைய பிரச்சினைக்கான பதிலாகும்.

ஈழவிடுதலைப்போர் முறிந்து பத்து வருடங்களுக்குப்பிறகு கடந்த 21 ஈஸ்டர் பண்டிகை காலைப்பொழுதில் திடீரென தற்கொலைக் குண்டுவெடிப்புகள், சாவு என சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகிவிட்டது. இம்முறை மீண்டும் விடுதலைப்புலிகளல்ல. இம்முறை தற்கொலைத் தாக்குதலில் அடிப்படைவாதிகளாக வழிதவறிய சில இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஏப்ரல் 21 ஈஸ்டர் பண்டிகைக்காக கிறிஸ்துவ தேவாலயங்களிலும் ஈஸ்டர் விடுமுறையில் ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் மக்கள் குவிந்திருந்த அதிகாலையில் நடந்த தாக்குதலில் கிறிஸ்துவர்களும் 12 பணக்கார நாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பயணிகளும் பலியாகி உள்ளனர். உடனடியாக அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டு முப்படைகளும் காவல்துறையும் சகல அதிகாரங்களோடும் வீதிக்கு இறக்கப்பட்டனர் இருந்தபோதும் உச்ச மனித விழுமியங்களை மனிதாபிமானத்தோடு கிறிஸ்துவ திருச்சபையும், தலைவர் பிசப் மல்கம் ரஞ்சித் அவர்களும் வெளிப்படுத்தியதுதான் ரத்தக்களரியைத் தடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. கடந்த கால நெருக்கடிகளில் ஏனைய மத நிறுவனங்கள் எதுவும் இத்தகைய சமூகப்பொறுப்புடன் செயல்படவில்லை என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டியுள்ளது. தாக்குதல்களில் தமிழர்களும் குறிவைக்கப்பட்டபோதும் தமிழர் தலைவர் சம்பந்தனும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் மிகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டார்.

ஈஸ்டர் தாக்குதலில் எட்டு தற்கொலை குண்டுதாரிகள், நாற்பது வெளிநாட்டவர்கள் உட்பட 359பேர் இறந்துள்ளதாக அரசு அறிவித்திருந்தது. குண்டுவெடிப்புகளில் உடல் சிதறி சிதைந்துவிடுவதில் கணக்கெடுப்பது இலகுவல்ல. டி.என்.ஏ ஆய்வுக்குபின் இறந்தவர்கள் எண்ணிக்கை 253 எனத் திருத்தப்பட்டுள்ளது.
தற்கொலை தாக்குதல் முஸ்லிம் அடிப்படைவாதிகள் சம்பந்தப்பட்டது, மேற்கு நாடுகளில் பரவிவரும் இஸ்லாமிய எதிர்ப்பு வியாதி என்பவற்றுக்கு அப்பால் அமெரிக்கா, சீனா உட்பட 12 பணக்கார நாடுகளைச் சேர்ந்த உயர்குடி உல்லாசப்பயணிகள் இறந்திருப்பதும் தாக்குதலில் வெளிநாட்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதும் ஈஸ்டர் தாக்குதலை சர்வதேசப் பிரச்சினையாக்கியுள்ளது. இலங்கை காவல்துறை மட்டுமன்றி அமெரிக்க எஃப்.பி.ஐ., இங்கிலாந்தின் ஸ்காட்லாண்ட்யாட், இஸ்ரேலிய மொசாட் என மேற்குலகின் உளவுத்துறையினர் வரவால் பிரச்சினை புதிய பரிமாணங்களை எடுத்துள்ளது. இதனால் இலங்கை இனத்துவ அரசியலில் 2009 மே மாத இறுதிப்போரைப்போல 2019 ஏப்ரல் தாக்குதலும் அடையாளக் கல் ஆகிவிட்டது.

தொகுத்துப் பார்த்தால் 21 ஏப்ரல் 2019 ஈஸ்டர் அதிகாலை தற்கொலைத் தாக்குதல்களில் கொன்றழிக்கப்பட்ட மக்களோடு வெடித்துச் சிதறியது இலங்கையின் நன்மதிப்பும் இன ஐக்கியமும் உல்லாசப் பயணிகளிலும் வெளிநாட்டு முதலீடுகளிலும் தங்கியுள்ள இலங்கை பொருளாதாரமும் மட்டுமல்ல. ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ் சிங்கள மக்களுக்கு அடுத்ததாக இலங்கை முஸ்லிம் மக்களின் அமைதியான வாழ்வுதான் முக்கிய பலியாகியுள்ளது. தற்போது நிமைமை வளமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது என்றும் 29ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுமென்றும் மட்டக்களப்பு நண்பர்கள் சொன்னார்கள். மேலும் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அனுதாபமாக இலங்கை ராணுவம் செயல்படுவதாக பொதுக்கருத்து உருவாகி உள்ளது. இது யுத்த காலத்தில் நிலவிய பொதுக்கருத்துக்கு நேரெதிரானதாகும். சிங்களப் பகுதியிலும் தமிழ் பகுதிகளிலும் உயர்ந்துள்ள வெறுப்பும் கோபமும் வடிய ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியாகும். எனினும் சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவு ஈஸ்டருக்கு முந்தைய இயல்பு நிலைக்குத் திரும்ப நெடுங்காலமாகும் என்பதுதான் காலத்தின் சோகம்.

2

ஏறக்குறைய தமிழகத்தில் பாதி அளவான இலங்கையில் 75%ஆம் சிங்களவர், அவர்களது குடித்தொகை ஒன்றரைக்கோடிக்கு சற்று அதிகமாம். 75% தவிர 25% மக்கள் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்களுள் பூர்வீக குடிகளான இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்தவர்கள்போக மீதி 22 லட்சத்துக்கு சற்று அதிகம் (11.15%). இந்திய வம்சாவளி மலையக தமிழர்களுள் தமிழ்நாடு தாயகம் திரும்பியவர்களை தவிர்த்து 8 லட்சத்துக்கும் (4.12%) சற்று அதிகமாகவும் உள்ளனர். தாய்மொழி தமிழானாலும் இலங்கையில் வாழும் 19 லட்சம் (9.20%) முஸ்லிம்கள் தங்களைத் தனியான இனமாகவே கருதுகின்றனர். எனினும் சிங்களவர் தமிழர் போல ஓரிடச் செறிவில்லாமல் நாடெங்கும் தனித் தனியாகச் சிதறிய கிராமங்களில் வாழ்வதும் இனரீதியாக பலகீனமாகும். இதனால் இலங்கை எங்கும் சலுகை அரசியல் செய்ததில் தமிழரைவிட அதிகமாக பாரம்பரிய தாயகத்தை முஸ்லிம்கள் இழந்துள்ளார்கள். எனினும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தமிழரும் முஸ்லிம்களும் அரச ஆதரவில் குடியேறிய சிங்களர்களைவிட அதிகமாகவும் சமபலத்துடனும் இருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் 1985இல் இடம்பெற்ற இனக்கலவரம் வரைக்கும் தமிழர் மத்தியில் சைவ, கிறிஸ்துவ பக்தி மார்க்கமும் முஸ்லிம்கள் மத்தியில் நல்லிணக்கத்தின் கருவூலமான சூபித்துவமும் ஓங்கியிருந்ததில் காலம் காலமாக ஐக்கியமான அழகிய சமாதான சக வாழ்வு செழித்திருந்தது. எனினும் 1980இல் இருந்து தமிழர் மத்தியில் அரை நூற்றாண்டு தொடர்ந்த உரிமைக்கான அறவழிப் போராட்டங்கள் சிங்கள அரசினால் கொடுமையாக நசுக்கப்பட்டதன் எதிர்வினைவாக இந்திய தமிழக ஆதரவுடன் ஈழ விடுதலைப் போராளிகள் எழுச்சி பெற்றனர். அதேசமயம் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த சூபிகளின் பலம் குன்றி சிறு சிறு குழுக்களாக சவூதி அரேபிய ஆதரவு வகாபிய அடிப்படைவாதிகள் செல்வாக்குப் பெற்றனர். தனித் தனி இனமாக பிரிந்தியங்கிய தமிழர்களையும் முஸ்லிம்களையும் மொழிவாரியாக தமிழ் பேசும் மக்களாக அரவணைத்த செல்வநாயகத்தின் சகவாழ்வு கொள்கையின் அவசியத்தை தமிழ் இயக்கங்கள் புரிந்து கொள்ளவில்லை. புற நடையாகத் தமிழ் தரப்பில் ஒருசிலர் தமிழரும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் இணைந்து செயல்படவேண்டுமென குரல்கொடுத்தார்கள். புறநடையாக ஒருசில முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் பேசும் இன ஐக்கிய அடிப்படையில் இயக்கங்களில் இணைந்தார்கள் எனினும் இந்த இருபுறத்தும் சிறுபான்மையான ஆரோக்கியமான சூழல் தொகைரீதியாக அடிபட்டுப்போனது. இந்தச் சூழலில் வரலாற்று பிறழ்வாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் 1985ஆம் ஆண்டு தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் வெடித்தது. இந்தப் பின்னணியில் சிங்கள அரசு ராணுவ நிறுவனங்களின் பிரித்தாளும் கொள்கை பலப்பட்டது. வளர்ச்சிபெறும் போராளிகள் ஒருபுறமும் வளர்ச்சி பெறும் வாகாபி அடிப்படைவாதிகள் மறுபுறமும் என்கிற சூழல் பிரித்தாள்வோருக்கு மட்டுமே சாதகமாக அமைந்தது. இந்தப் பகைமைச் சூழல் கிழக்கு மாகாண நிலவரமாகும். தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த வடமாகாணத்திலும் சிங்களவர் பெரும்பான்மையாக வாழ்ந்த தென்மாகாணங்களிலும் தமிழ் முஸ்லிம் பகைமை ஏற்படவில்லை. எனினும் 1990களின் ஆரம்பத்தில் ராணுவத்தின் பிரித்தாளும் தந்திரமும் தமிழ் இயக்கங்களின் தமிழ் அடிப்படைவாதமும் அம்பாறை மாவட்டத்தில் பலம்பெற்றிருந்த முஸ்லிம் அடிப்படைவாதமும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் இன நெருக்கடிகளை உச்சப்படுத்தியது. தொடர்ச்சியாக தமிழர் விடுதலை வரலாற்றின் பெரும் தவறான வடபகுதி அப்பாவி முஸ்லிம்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட கொடுமை நிகழ்ந்தது. இது 2009ஆம் ஆண்டுவரை நீடித்த சூழலாகும்.

போர்க்காலத்தில் முஸ்லிம்களோடு உறவாடிய அரசும் பாதுகாப்புப் படைகளும் சிங்கள பௌத்த பேர் இனவாத அமைப்புகளும் நிறுவனங்களும் அரசும் போருக்குப் பிந்திய காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகத் திரும்பியது. முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அன்றாட நினைவுகளாயின. இந்தப் புதிய நெருக்கடி முஸ்லிம் இளைஞர்களை அரசியல்ரீதியாக விரக்திக்குள்ளாக்கியது. இச்சூழல் அடிப்படை வாத செல்வாக்குள்ள இளைஞர்கள் சிலர் மத்தியில் இருந்து ஐ.எஸ். ஐ. எஸ். போன்ற பயங்கவாத இயக்கங்களின் ஈர்ப்பு ஏற்பட்டது.

ஈழ விடுதலைப் போரின் முறிவு பேரழிவுக்குப் பின்னர் சிங்களப் பேரினவாதிகளும் அரசும் தமிழ் மக்களின் நிபந்தனையற்ற அரசியல் சரணாகதியை எதிர்பார்த்தனர். ஆனால் சிங்கள அரசினதும் பேரினவாதிகளிதும் எதிர்பார்ப்புகளை கானல்நீராக்கிவிட்டு ஈழத் தமிழர்கள் அரசியல் ரீதியாகச் சரணடைவதற்குப் பதிலாக அரசியல் நீதியாக அறவழியில் உரிமைப்போரை அறப்போராட்டமாக மாற்றி தொடர்ந்தனர். உலகமயமாதலின் பின்னணியில் தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் தமிழர் ஆதரவுடன் சர்வதேச மட்டத்திலும் இந்து சமுத்திர அரசியலிலும் பலம்பெற்ற ஈழத்தமிழர் தலைமை இலங்கை அரசுக்குப் பலமான அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் தமிழருடன் ஏதோ ஒருவகையில் சமரசம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டது. சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எப்பவும் ஒரு எதிரிதேவை. மலையகத் தமிழர் மிக சிறுபான்மையினரானபோதும் தொழிற்சங்கமையமான அமைப்புரீதியான பலத்தாலும் ஏனைய தென்னிலங்கைத் தமிழர்கள் வடகிழக்கு இலங்கைத் தமிழருடனான மொழிவாரி இணைப்பு பலமடைந்து வருவதாலும் பலப்படும் இந்திய ஆதரவாலும் அரசியல் தலைமைகளின் எழுச்சியாலும் பலமான ஒரு சிறுபான்மையினமாக வலுப்பெற்றுள்ளது. அதனால் சிங்கள இனவாத அரசினதும் சிங்கள பௌத்த இனவாத நிறுவனங்களதும் கவனம் முஸ்லிம்களின் பக்கம் திரும்பியது. முஸ்லிம் அடிப்படைவாதிகளின் தாக்குதலைத் தூண்டி அதன்பின் அவர்களை அழிப்பதன்மூலம் சிங்கள மாவீரர்களாக இலங்கை அரசு தரப்பு முயன்றது வேடிக்கை. சிங்கள மாவீரர் பதக்கத்தை யார் அணிவது என்கிற ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த இராசபக்ச இடையிலான பனி யுத்தம்தான் ஈஸ்டர் தாக்குதல் பற்றிய தகவல் கசிந்திருந்தபோதும் தடுக்கப்படாமையின் காரணமாகும். தாக்குதல் பற்றிய உளவுத் தகவலை அமெரிக்காவும் இந்தியாவும் ஏற்கனவே வழங்கியிருந்தபோதும் யார் சிங்கள வீரராவது என்கிற போட்டிதான் உளவுத் தகவல் மறைக்கப்பட்ட வேடிக்கையாகும். தனக்குத் தராமல் ஜனாதிபதி மறைத்தார் என்று பிரதமரும் எனக்கே தகவல் தரப்படாமல் மறைக்கப்பட்டது என ஜனாதிபதியும் சொல்கிற வேடிக்கை. இது உலகில் எந்த நாட்டிலும் நடக்காத வேடிக்கை. எனினும் அமெரிக்கா அவசரப்பட்டால் பலர் தலைமறைவாகிவிடலாம். ஆனபடியால் பெரிய தாக்குதல் வரைக்கும் பொறுமையாகப் பின்தொடருங்கள் அதன்பின் ராணுவ ரீதியாக அழியுங்கள் என ஆலோசனை வழங்கியிருக்கவேண்டும் என ஊகிக்க முடிகிறது.
இந்தப் பின்னணியில் அடுத்தது தமிழ்நாடா எனப் பற்றவைக்கிறார்கள். எனினும் எச்சரிக்கை அவசியம்தான். ஏனெனில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வாழ்புல எல்லைக்குள் நடக்கிற உரிமைப் போராட்டமல்ல. இது எல்லையும் இலக்குமில்லாத சித்தாந்த பயங்கரவாதமாகும். ஏற்கனவே கேரளாவில் இருந்து இஸ்லாமிய பயங்கரவாதம் கோயம்புத்தூருக்கும் பெங்களூருக்கும் ஏற்றுதி செய்யபட்டிருக்கிறது. இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கொடூரம் அரங்கேறியுள்ளது. அதனால் கேரளாவுக்கும் இலங்கைக்கும் நடுவில் இருக்கும் தமிழ்நாடு பற்றிய அச்சம் இயல்பானதுதான். கடந்த 10 வருடங்களாக இலங்கையில் அரசுக்குத் தெரிந்தே இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்க்கப்படுகிறது பெற்றோர்களே பள்ளிவாசல்களே எல்லைமீறுமுன் உங்கள் பிள்ளைகளைக் கண்காணியுங்கள். தலையிட்டு அவர்களைக் காப்பாற்றுங்கள் எனக் குரல் கொடுத்து வந்தேன். இதற்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து சில ஆதரவுக்குரல்கள் எழுந்தன. சிலரால் காபீர் முனபிக் என்கிற பட்டங்களும் வழங்கப்பட்டது. இன்று தமிழ்நாட்டு முஸ்லிம்களைப் பார்த்தும் பள்ளிவாசல்களைப் பார்த்தும் உங்கள் இளைஞர்களைக் கண்காணியுங்கள், காலம் கடக்குமுன் காப்பாற்றுங்கள் என்று சொல்வேன். காலம் அப்படிக் கெட்டுக்கிடக்கிறது.

முடிவுரையாக ஒருசில சம்பவங்கள் நடக்கக்கூடுமாயினும் கைதுகள் அதிகரிக்கக்கூடுமாயினும் நிலைமை வழமைக்குத் திரும்ப ஆரம்பித்துவிட்டது மகிழ்ச்சியான சேதியாகும். இலங்கையில் முஸ்லிம் மக்கள் மத்தியில் தர்காக்களை உடைக்கும் விருப்பப்படி முனாபிக் பட்டம் வழங்கும் பெண்களை மத்திய காலத்துக்கு விரட்டும் இந்த உலகம் முஸ்லிம்களுக்கானது, காபீர்களைக் கொல்லலாம் என்கிற ஜனநாயக மறுப்பாளர்களுக்குப் பலமான எதிர்ப்பும் எதிர் விவாதங்களும் ஆரம்பித்துள்ளது. தடைபோட்ட அமைப்புகளே இன்று பெண்கள் வெளியில் செல்லும்போது முகத்தை மூட வேண்டாம் என அறிக்கை விடுகின்றன. புதிய பலம்பெறும் முஸ்லிம் ஜனநாயக சக்திகள் தமிழ் முஸ்லிம் உறவுக்காகக் குரல் கொடுக்கின்றன. இலங்கைத் தமிழர், மலையக, தமிழர் மட்டுமன்றி அகில உலகத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் சிங்கள ஜனநாயக சக்திகளும் எல்லா வையிலும் முஸ்லிம்களின் ஜனநாயக சக்திகள் பலம்பெற உதவ வேண்டும்.
இலங்கையில் தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர், சிங்கள ஜனநாயக சக்திகளின் ஐக்கியம் ஓங்கட்டும்.

முடிவுரை

இக்கட்டுரை எழுதி முடித்தபின் 26.04.19 இரவு கிழக்கில் ஊர் மக்களின் தகவல் அடிப்படையில் கல்முனை சாய்ந்தமருது பகுதியை பாதுகாப்புப் படைகள் சுற்றி வளைத்திருக்கிறது. அங்கு இரவிரவாக பாதுகாப்பு படைகளுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கி சண்டையும் குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்துள்ளது. சற்று தள்ளியிருக்கும் ஊரான சம்மாந்துறையில் குண்டுகளும் ஐ.எஸ். ஐ.எஸ் கொடியும் கைப்பற்றபட்டுள்ளது. பாதுகாப்பு படை தீவிரவாதிகளின் எதிர் நடவடிக்கைகளில் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

“முஸ்லிம் பயங்கரவாதிகளை வகை தொகையின்றி தேடி அழி” என்பதைதான் சிங்கள ஊடகங்கள் கட்டியெழுப்பும் ’பொதுப்புத்தி’ வற்புறுத்துகிறது. இரவு அடிப்படைவாதிகள் மட்டுமன்றி அப்பாவி பொதுமக்களும் கொல்லபட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் முஸ்லிம் மக்களை அச்சுறுத்தும் வகையில் திட்டமிட்டு அப்பாவிகளின் உயிர்சேதங்கள் அதிகரிக்கப்படக்கூடிய சூழல் கவலை தருகிறது. ஏனெனில் தமிழ் சிங்கள ஊர்களைவிட முஸ்லிம் ஊர்கள் சனநெருக்கம் மிக்கவை. அதற்கு சமூக பொருளாதாரக் கலாசார வரலாற்றுக் காரணங்கள் உள்ளது.

சென்ற பல நூற்றாண்டுகளில் இலங்கை முஸ்லிம் மக்கள் விவசாயத்தில் அதிகம் ஈடுபடமல் பாரம்பரியமாக வர்த்தகம்சார்ந்த பணிகள், பொதிமாடு சார் பண்ட போக்குவரத்து போன்ற துறைகளில் இருந்தனர். விவசாயம் சார்ந்து சிங்களவரும் தமிழரும் அகன்று நிலத்தில் தங்கள் ஊர்களைக் கட்டினார்கள். முஸ்லிம்களோ தங்கள் ஊர்களை ஒரு சில தனவந்தர்களின் மூலதனத்தில் பள்ளிவாசல்களையும் புனிதர்களின் அடக்கத்தலங்களையும் சூழ கட்டி எழுப்பினார்கள். நிலசெறிவற்று தீப்பெட்டிக் கட்டுக்கள்போல வீடுகளும் தீக்குச்சிகள் போல மக்களுமாக உள்ள முஸ்லிம் ஊர்களில் பொறுப்பில்லாத எந்த ராணுவ நடவடிக்கையும் பெரிய அளவில் உயிர்சேதத்தை உண்டுபண்ணக்கூடியவை.

இது இலங்கை ஜனாதிபதி தேர்தலையும் மாகாணசபை தேர்தல்களையும் எதிர்நோக்கியுள்ள பதட்டமான காலம். எனது கட்டுரையில் ஏற்கனவே தேர்தலின்முன் “யார் சிங்கள வீரராவது என்கிற போட்டி” ஜனாதிபது மைதிரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் எதிர்கட்சித் தலைவர் ராஜபக்சவுக்கும் இடையில் நிலவுகிறது என்பதை குறிப்பிட்டிருக்கிறேன். இந்தச் சூழலில்தான் நானே சிங்களவீரனாகுவேன் என்கிற கனவில் இருந்த சிங்கள ஆளும் வர்க்கத்தலைகள் பயங்கரவாதத்தை முளையில் கிள்ளாமல் வளர்த்தார்கள் என்றும் சொல்லியிருந்தேன். எனது கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் இன்று காலையே “அப்பன் குதிருக்குள் இல்லை” என்று பத்திரிகை செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. ராஜபக்சவின் தம்பியும் 10 வருடங்களுக்கு முன்னம் நிகழ்த்தபட்ட தமிழ் இன அழிப்பை நடத்தி ‘சிங்கள வீரன்’ எனக் கொண்டாடப்பட்டவருமான கோத்தபாய ராஜபக்ச “அடுத்த தேர்தலில் ஜனாதிபதியாகி இஸ்லாமிய பயங்கரவாதம் பரவுவதை தடுப்பேன்” என சூளுரைத்திருக்கிறார். ஈஸ்டர் தாக்குதல் பற்றிய அமெரிக்க இந்திய உளவுத்துறை தகவல்களை பிரதமர் ரணில் காதுகளுக்கு எட்டாமல் கோத்தபாய இராசபக்சவின் ஆட்கள்தான் தடுத்தார்களோ என சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாது.

இதைவிட அமெரிக்கா, சீனா, இந்தியாவும் இலங்கையில் செயல்படுகின்றன எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்சவை சீனாவும் ரணிலுக்குப்பின்னர் அமெரிக்காவும் ஆதரிப்பதில் உறுதியாக இருக்கிறது. இந்துசமுத்திர அரசியலில் இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவுக்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இருந்தபோதும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இந்துசமுத்திரத்தில் இலங்கையில் யாருக்கு முதல் மரியாதை என்கிற பனிபோரும் நிகழ்கிறது. ரணில் அமெரிக்காவுக்கு முதல்மரியாதை செய்பவர். ஈழ விடுதலை போர்க்காலங்களில் இருந்தே இந்த முரண்பாடு ராஜபக்சவுக்கும் சீனாவுக்கும் சாதகமாக இருந்து வருகிறது. இந்துசமுத்திர அரசியலில் இந்தியாவின் தோல்வியின் ஊற்று இங்குதான் உள்ளது.

நிலைமை வளமைக்கு திரும்பு முன்னம் தீவிரவாதிகளோடு நிறுத்தாமல் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களது ரத்தத்தாலும் ஆளும் வர்க்கம் நானே “சிங்கள வீரர்” என்கிற பாதாகைகளை எழுதிச் செல்லலாம்.

முடிவுரையாக இலங்கையிலும் தமிழகத்திலும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தென்னாப்பிரிக்காவிலும் புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளிலும் வாழும் தமிழ்/தமிழ்பேசும் முஸ்லிம் மக்களுக்கு சொல்ல விரும்புவது இதுதான். ஒரு நிலப்பரப்பில் மக்கள் உரிமைக்காக போராடியது எங்கள் காலம். மக்களாகிய நாம் எங்கள் போரின் நிலபுலத்தையும் இலக்கையும் நண்பர்களையும் எதிரிகளையும் தெரிந்து வைத்திருந்தோம். இலங்கையோ மத்திய கிழக்கோ கேரளாவோ தமிழகமோ எங்கும் இன்று காலம் மாறிவிட்டது. மத்திய கிழக்கில் இறுதிச் சிலுவை யுத்தம்போல அமெரிக்காவும் ஆதரவு மேற்குநாடுகளும் பேரழிவுத் தாக்குதல்களையும் முஸ்லிம் விரோத விசப்பாம்புகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது உலகெங்கும் வாழும் முஸ்லிம்களை அச்சுறுத்தும் சூழலாகும். இது உலகெங்கும் முஸ்லிம் இளைஞர்களை கொதித்தெழ வைக்கும் சவாலாகும். நிலபுலமில்லாத இலக்கு இல்லாத இந்த சித்தாந்தப்போர் கொதித்தெழும் இளைஞர்கள் வாழும் நாடுகளோடும் நம்மை சூழ்ந்து வாழும் மக்களோடும் பெரும்பாலும் நேரடியாகச் சம்பந்தப்படாத போர். இந்த இடத்தில்தான் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உள்நுழைகிறார்கள். அவர்கள் ஆணாதிக்க காபிர் எதிர்ப்பு மனுக்குல விரோத பதாகைகளை உயர்த்திப் பிடித்தபடி தொன்றுதொட்டு சூபி ஞானிகள் வளர்த்தெடுத்த இஸ்ல்லாமிய வாழ்வின் உன்னதங்களையும் சமாதான சகவாழ்வின் அங்திவாரங்களையும் தகர்க்க ஆரம்பிக்கிறார்கள். அமெரிக்காவல்ல இஸ்லிமியரை வாழவைக்கும் இஸ்லாமிய வாழ்வின் ஜனநாயகமும் பெண்களின் சுதந்திரமும்தான் அடிப்படைவாதிகளின் முதல் எதிரிகளாக இருக்கிறார்கள். இங்குதான் புதைந்திருக்கிறது அடிப்படைவாதத்தின் பின்னணிபற்றிய எல்லா விவாதங்களினதும் சூட்சுமம்.

அடிப்படைவாத போதகர்கள் உலகம் முழுவதும் கொல்லபடவேண்டிய காபிர்கள். கொன்றால் நிரந்தர சுவர்க்கமும் நித்திய கண்ணிகளும் கிடைப்பார்கள் என்கிறார்கள். இங்குதான் அமெரிக்க இஸ்லாமிய விரோத சூட்சிகளால் கொதித்து செய்வது அறியாது தவிக்கும் நம்பிள்ளைகள் வழிதறிவிடுகிறார்கள். அமெரிக்காவைவிட அடிப்படை வாதிகள் சற்றும் குறைந்த எதிரிகளல்ல என்பதை முஸ்லிம் பெற்றோர்கள் உணரவேண்டும்.

இந்தக் கட்டுரை உங்கள் கையில் இருக்கும்போது அனர்த்தங்களைத் தாண்டி இலங்கையில் நிலைமை சுமுகமாகியிருக்கும் என நம்புகிறேன். நம் எல்லோரதும் பிரார்த்தனையும் அதுவே. எனினும் இலங்கை முஸ்லிம்களின் வாழ்வில் ஈஸ்டர் 2019க்கு முன்பிருந்த சூழல் இனி ஏற்படாது. முஸ்லிம் ஜனநாயக சக்திகள் தமிழ் மலையகத்தமிழ் மற்றும் சிங்கள ஜனநாயக சக்திகளோடு ஒன்றுபட்டு முஸ்லிம் அடிப்படைவாதிகளை வென்றால் மட்டுமே இனி வாழ்வு. இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு.