உங்களது முதல் தொகுப்பான நெடுவழித் தனிமையில் பெரும்பாலான கவிதைகளில் இறுதி வரிகளில் ஒரு திடுக்கிடல் அல்லது ஒரு படிமம் தவறாது இடம்பெறுகிறது. அது எதனால்?
என் முதல் கவிதை கணையாழியில் பிரசுரம் ஆனபிறகு 13 வருடங்கள் கழித்து என்னுடைய முதல் தொகுப்பு வெளியானது. அந்தச் சிறு நூலுக்கு பொருட்படுத்தும்படியாகச் சில மதிப்புரைகளும் விமர்சனங்களும் வந்தன அதன் வழியாகவே கவிதைகளை அலசி, ஆராய்ந்து மதிப்பிடும் நோக்கு எனக்குக் கூடிவந்தது. அதற்கு முன்வரையிலும் எழுதியதைப் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் கூடிய நண்பர்கள் குறைவே. படித்த பலவற்றைக்கொண்டு என் மனதிற்குள் உருவாகி வந்த சட்டகத்திற்குத் தக நானாகக் கற்பித்துக்கொண்ட ஒரு வடிவத்தில் எனது கவிதைகளை எழுதிவந்தேன். அப்போதைய அந்த மனநிலைக்கு நீங்கள் குறிப்பிடுவதைப் போன்ற ஒரு முடிப்பு அல்லது முத்தாய்ப்பு எனக்கு நிறைவளிப்பதாக இருந்திருக்கலாம். ஆனால் அவை எதுவும் வலிந்து மேற்கொள்ளப்பட்டவை அல்ல.

உங்களது எல்லாத் தொகுப்புகளிலும் ஒரு குரங்கு குதித்தாடிக்கொண்டே இருக்கிறதே அது ஏன்?வேடிக்கையாகவா அல்லது வினையமாகவா, எந்த அர்த்தத்தில் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவ்வாறான படிமம் என் தொகுப்புகளில் தொடர்ந்து வருவது எதேச்சையான ஒன்றே. நீங்கள் கேட்கும் முன்வரையிலும் அதைப் பற்றிய கவனம் எதுவும் எனக்கில்லை. ஒருவேளை அறிவின் சுமையால் அழுந்தப்பெற்று எந்நேரமும் தலையைக் கவிழ்ந்தவாறே நடக்கும் மனிதனைக் குறித்த விமர்சனமாக அந்தக் குதித்தாடும் குரங்கு தோன்றியிருக்கலாம். ருஷ்ய எழுத்தாளரான எவ்கேனி ஜாமிடியானின் வேடிக்கையான கூற்று ஒன்றைப் படித்த நினைவிருக்கிறது. ‘குரங்கிலிருந்து மனிதன் தோன்றியபோது அல்ல, மாறாக முதல் புத்தகம் எழுதப்பட்டபோதுதான் பூமியில் பரிணாமத்தின் நோக்கம் முழுமையடைந்தது. அதை மனிதன் மறந்துவிட்டாலும் அந்த வஞ்சத்தைக் குரங்கு இன்னும் மறக்கவில்லை. அதன் முன் ஒரு புத்தகத்தை நீங்கள் நீட்டினால் அதை வாங்கிக் கிழித்தெறிந்துவிட்டுதான் அது அமைதியடையும்.’ ஆக, அறிவை ஐயுறவும் கேலிசெய்யவும் நாம் முற்படும் போதெல்லாம் நம் முன்னோரைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறோம் என்பதாக அதை உருவகப்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு கவிஞனுடைய இருத்தலை இருபத்தோராம் நூற்றாண்டில் நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள் என்பதற்கான சாட்சியமாய் உங்களது ‘தோற்றப்பிழை’ கவிதையை எடுத்துக்கொள்ளலாமா?
அதை அப்படி எளிதாகப் பொதுமைப்படுத்திச் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. வேண்டுமானால் இப்படி எடுத்துக்கொள்ளலாம், தன் இருபதுகளில் இருக்கும் இளைஞன் ஒருவனுக்கு தன் மீதும் தன்னைச் சுற்றிலும் இருக்கும் எல்லாவற்றின் மேலும் தோன்றிடும் அவநம்பிக்கையையும் இனம் புரியாத கோபத்தையும் அது பிரதிபலிக்கிறது எனலாம். அவ்வாறெனில் அதுவே பலவருடங்களுக்குப் பிறகான எனது இப்போதைய மனநிலையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக ‘கிழக்கிருத்தல்’ கவிதையை நீங்கள் வாசிக்கலாம்.

பழக்கத்தின் பாசி இன்னும் படர்ந்திடாத சிறு விழிகளுடன் எனும் வரி இருபது வருடங்களுக்குப் பிறகு இப்போது என்னவாக இருக்கிறது உங்களுக்கு?
பரிச்சயமழிப்பு (Defamiliarization) என்பது பொதுவாகக் கலைகளிலும் குறிப்பாகக் கவிதைகளிலும் பயின்றுவரும் அடிப்படையான ஒரு நுட்பம் ஆகும். அதைக் கடைப்பிடிக்காமல் புதிய நோக்கோ வடிவமோ சாத்தியமில்லை. எல்லோரும் பார்ப்பதையேதான் யாரும் பார்க்காத ஒரு கோணத்தில் நோக்குவதிலிருந்துதான் கலைக்கான தேவை பிறக்கிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் பழக்கத்தில் படிந்துவிடுகிற பாசியை அவ்வப்போது களைந்துவிடுகிற ஊக்கத்தை இயன்ற அளவிற்குத் தக்கவைத்துக்கொள்ளவே முயலுகிறேன்.

உங்கள் கவிதைகளில் வாழ்க்கையைப் பற்றிய புகார்கள் இல்லையென்றாலும் வாழ்நாள் எல்லாம் தலைக்குமேல் கருத்த நிழலாகத் தொடரும் வெறுமையை இப்போதும் அண்ணார்ந்து பார்க்கின்றீர்களா?
புறவாழ்வில் சில போதாமைகள், புறக்கணிப்புகள், வேதனைகளை அனுபவித்ததுண்டு என்றாலும், அவற்றின் விளைவுகளைத் தற்காலிகமான ஒன்றாகக் கடந்துவிட முடிந்தது. அவை ஒருபோதும் என் அகச் சமநிலையை பாதிப்பதாக அமைந்ததில்லை. எனவே நீங்கள் குறிப்பிடுவதைப் போன்ற நிழலான

நீள் கவிதைகள் எழுதப்படுவதற்கான அவசியம் ஒரு வலிமையான மையப் படிமத்திலிருந்து உருவாகிறதா அல்லது ஒரு அனுபவத்தை மேலும் மேலும் விரித்துக்கொண்டே செல்கிற ஒரு கதை சொல்லல் முறையா?

எந்தப் படைப்பாக இருந்தாலும் அதில் தற்செயலின் பங்கு முதன்மையானது. ஓவியம், இசை, நாடகம், உரைநடை முதலியவற்றிற்கு ஓரளவிற்குத் திட்டமிடலும் முன்தயாரிப்பும் அவசியம் என்றாலுமேகூட அவற்றின் இறுதி விளைவு என்பது தொடக்க உத்தேசத்தைப் பெருமளவு மீறிய ஒன்றாகவே அமைந்திடும். கவிதை முழுக்கவும் எழுத முற்படும் அக்கணத்து மனநிலை அது தரும் உத்வேகம் அதன் தொடர்ச்சியான மொழி வழித் தேடல் எனப் பெரிதும் தன்னிச்சையான செயல்பாடாகவே அமைவது. அபூர்வமான சில தருணங்களில் மாத்திரமே அவை தம் முழுவடிவத்தில் முதல் வரைவிலேயே எழுதப்படும். மற்றபடி பலநேரங்களிலும் அதன் முழுமைக்காக மாதக்கணக்கிலும்கூட காத்திருக்க நேரிடலாம், எனவே நீள்கவிதை என்பது ஒரு மையப்படிமத்திலிருந்து உருவாவதோ அல்லது மேன்மேலும் விரித்துக்கொண்டே செல்கிற கதைசொல்லல் முறையோ மட்டுமல்ல, தான் சொல்ல வந்ததை முழுவதுமாகச் சொல்விவிடவேண்டும் என்கிற கவிஞனின் தவிப்பும் அதன் பின்னிருக்கிறது.

உங்கள் கவிதைகளில் நிழலும் நத்தையும் நேரடியாகவோ மறைபொருளாகவோ தொடர்ந்து வருகின்றன. ஒரு கோடையின் நண்பகல்கூட நிழலற்று வருவதில்லை… நிழல், நத்தை இரண்டுமே பரபரக்கும் நம் வாழ்நிலை மற்றும் மனநிலையிலிருந்து ஆசுவாசம் கொள்வதற்கான ஒரு எத்தனிப்பா?
ஒளியை நீங்கள் தொடர்ச்சியாகப் பார்க்க முடியாது. அதன் கீழ் நெடுநேரம் நிற்க இயலாது. நிழலின் இயல்பு அதுவல்ல, ஒருவிதத்தில் ஒளியை அர்த்தப்படுத்துவதே நிழல்தான், போலவே வேகம் என்பது விரைந்து மறையக்கூடிய ஒன்றாகவும் நிதானம் என்பது நீடித்து நிற்க முற்படுவதுடன் நித்தியத்துவத்துடன் பொருந்தும் தன்மையாகவும் ஆழ்மனதில் பதிந்துவிட்டிருக் கின்றது. என் இயல்பான குணமான சோம்பலின் காரணம் கொண்டும் இந்த நிழலும் நத்தையும் என் கவிதைகளில் இடம் பெற்றிருக்கக் கூடும்.

பூனைகள் தம்மளவில் எப்போதும் சுதந்திரமானவையாக இருக்கின்றன. அவை தான் நேசிக்கும் ஒருவரைக்கூட முழுமையாகச் சார்ந்திருப்பதில்லை. அது ஒருவருடன் இருந்துகொண்டே இல்லாமலிருக்கும் ஒரு நிலை. பூனைகளுடன் நீங்கள் கொள்ளும் வாஞ்சை பூனைகளின் இந்தச் சுதந்திர நிலைமீது உருவாகும் ஈர்ப்பா? மேலும், பூனைகளை பெண் பூனைகளெனத் தனித்து உங்கள் கவிமனம் இனம் காண்பதற்கு அவற்றின் பிரத்யேக இயல்புகள் ஏதேனும் இருக்கிறதா?
நீங்கள் என்னைப் புறக்கணிப்பீர்கள் என்றால் நான் அதைப் பொருட்படுத்தாமல்கூட போய் விடுவேன். ஆனால், என்மீது பரிவு காட்டும் பட்சத்தில் அதை உதறிவிட்டுச் செல்ல என்னால் ஒருபோதும் ஆகாது. பூனைகள் அவ்வாறல்ல. உங்கள் அன்பு, அலட்சியம் எதுவுமே அவற்றிற்கு ஒரு பொருட்டல்ல. நீங்க

துக்கம் என்பது ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை பற்றிய உள்ளார்ந்த எனது புரிதல் அல்லது புரிதலின்மையால் எனது எழுத்துகளில் அனிச்சையாகப் படர்வதாக இருக்கலாம். குறிப்பிட்ட அவற்றினுடைய அந்தச் சுதந்திர மனோபாவம்தான் அவைமீதான ஈர்ப்பிற்குக் காரணமாக இருக்கக்கூடும். அந்த விட்டேற்றியான சுயேச்சை குணத்தை மனித இயல்பிற்குப் பொருத்துகையில் என் தன்னிலை காரணமாக அது இயல்பாகவே பெண் பூனை என்பதாக அர்த்தம் கொண்டுவிடுகிறது அவ்வளவுதான்.

முதலிரண்டு கவிதைத் தொகுப்புகளில் காணாத சங்க இலக்கியப் படிமங்களும் சித்திரங்களும் மூன்றாவது தொகுப்பிலிருந்து அனைத்திலும் காணக் கிடைக்கின்றன. நவீன கவிதை என்பதே சம காலத்தின் அபத்தங்களையும் மனங்களின் சிதறுண்ட தன்மையையும்தான் பேசுகிறது எனும்போது அக்கவிதைகளில் சங்க இலக்கியச் சித்திரங்களின் இடமும் பங்கும் என்ன?
முதலிரண்டு தொகுப்புகள் வரையிலும் நான் ஊன்றிப் படித்தது நவீன இலக்கியங்களே. பிறகு மரபிலக்கிய வாசிப்பிற்கு என்னைப் பழக்கப்படுத்திக்கொண்டேன், அதுவும்கூட ஒரு காரணமாக இருக்கலாம். கவிதை ஒரு வகையான நினைவுகூரல் என்றால் அது தேடியெடுக்கும் ஆழப்பொருள் அத்தனையும் உறைந்திருப்பது மொழியில்தான். மொழியைப் பயன்படுத்தி என் எண்ணங்களை நான் சுயமாக எழுதுகிறேன் என்று கருதுவதே மேலெழுந்தவாரியான ஒரு நம்பிக்கைதான். நேரெதிர்கோணத்தில் மொழியும் மறைமுகமாக என் எழுத்தைப் பயன்படுத்தித் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதே உண்மை. எழுத்தில் என் கற்பனை, அனுபவம் என்று நான் உரிமை கொண்டாடுபவற்றில் என்னுடைய மொழியின் பங்கும் கணிசமாக உண்டு. அதன் மரபார்ந்த நிழலோ, பிரதிபலிப்போ இல்லாமல் எதுவொன்றையும் புதிதாக எழுத முடியாது. மொழி என்னை என் முன்னோருடன் இயல்பாகப் பிணைத்துவிடுகிறது. தந்தையின் சட்டையை அணிந்திருக்கும் தனயனைப் போலதான் என்னிலும் பல நூற்றாண்டுகள் மூத்த மொழியினை நான் பயன்படுத்துவதும். மேலும், சங்கால மனிதனுக்கும் இன்றைய நவீன கால மனிதனுக்கும் ஆதாரமான அடிப்படை உணர்வுகள் ஒரே தன்மையிலானவையே. அவற்றை உணருகின்ற விதங்களும் வெளிப்படுத்தும் முறைகளும்தான் வெவ்வேறானவை.

கவிதைகளைப் பற்றியும் சொற்களைப் பற்றியும் அதிக கவிதைகளை எழுதியுள்ளீர்கள். ஒரு சொல் காட்டும் அனுபவத்தைவிட அந்தச் சொல்லே ஒரு தனி அனுபவமாக மாறுகிறதா?
எழுதுவதைக் குறித்த எழுத்து என்பது எல்லா மொழிகளிலும் இலக்கியத்தின் ஒரு வகைமையாகவே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. எதைச் சொல்கிறோம் என்பதைவிடவும் எப்படிச் சொல்கிறோம் என்பதைக் குறித்து அதிக்கும் யோசிக்கக் கூடிய எழுத்தாளர்கள் கவிஞர்கள் பலரும் தங்கள் படைப்பின் ஒரு பகுதியாக இதைப் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறார்கள். எனக்கும் என்னுடைய கவிதையின் முழுமை, சொற்களின் தேர்வு, அவை உருவாக்கும் தொனி குறித்த அக்கறை இவற்றைக் குறித்த ஈடுபாடு ஒரு பீடிப்பு என்று சொல்லும்படிக்கு அதிகம். அது என்னுடைய தனிப்பட்ட இயல்பு அல்லது பலவீனம் என்றுகூட சொல்லாம்.

உங்களது பெரும்பாலான கவிதைகளில் நினைவேக்கம் அடிநாதமாக இருந்தாலும் உங்கள் பால்யத்தை எழுதுகிறபோது அவன் என்கிற படர்க்கையில் ஒரு வேற்றாளாகவும் காதல் கவிதைகளை நான் எனத் தன்னிலையாகவும் எழுதுகிறீர்கள். ஒருவிதத்தில் நம்முடைய பால்யம் என்பதும் நாம்தானே?
அது எப்போதும் நமக்குள் ஒளிந்திருக்கும் கனவு. ஆனால் அந்தக் கனவை ஏன் நீங்கள் அந்நியப்படுத்துகிறீர்கள்?
இப்போது நான் தாராளமாக உபயோகப்படுத்துகின்ற நவீன சாதனங்கள், பயணிக்கிற வாகனங்கள், அணிகிற உடைகள், உண்னும் உணவுகள், செலவழிக்கும் பணம் முதலிய வசதிகள் போதுமான அளவு இல்லாத சூழலில் தான் என் இளமை கழிந்தது. ஆனால் இன்று என்னை அழுத்தும் பொறுப்பின் சுமை, இயலாமையின் பாற்பட்ட கழிவிரக்கம், அலைக்கழித்திடும் குற்றவுணர்வின் நிழல்கள் எதுவும் என் பால்யத்தின் மீது படர்ந்திருக்கவில்லை. அது களங்கமின்மையின் ஒளியால் சுடர்வது. அந்தச் சிறுவனை எப்போதாவது சென்று எட்டி நின்று பார்த்துவிட்டு ஆறுதல் கொள்ளலாமே தவிர என்னுடையவன் என்று கட்டியணைத்துக் கொஞ்ச முடியாத அளவிற்கு உள்ளத்தில் கள்ளம் மிகுந்துவிட்டிருக்கிறது. நான் பால்யத்தைப் படர்க்கையில் எழுத உள்ளூர அதுகூட காரணமாக அமைந்திருக்கலாம். மற்றபடிக்கு அறிந்து அவ்விதமாக எழுதவில்லை.

வாழ்வின் மீதான எள்ளல் அல்லது கசந்த நகை என்பது கலையின் முக்கியமான அம்சமாக இருந்துகொண்டே இருக்கிறது. புதுமைப்பித்தனிடம் நாம் அதைத்தான் பார்க்கிறோம். இதுவே விதூசகர்களை ஒரு முக்கியமான படிமமாக மாற்றுகிறதா, அல்லது, வாழ்வின் துயரமான மௌனத்திற்கு எதிராக இந்தப் பாத்திரங்கள் எத்தகைய எதிர்வினையை ஆற்றுகின்றன?
ஒரு தனி மனிதனின் சராசரி ஆயுட்காலமான எழுபது, எண்பது வருடங்கள் என்பது அவன் தனது சுக துக்கங்களைத் துய்த்து அனுபவிக்கப் போதுமான காலம்தான். ஆனால் பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக நெடுங்கோடென நீளும் இம்மனித குல வரலாற்றுடன் ஒப்பிடுகையில் ஒரு மனிதனின் வாழ்வு சிறுபுள்ளிகூடக் கிடையாது. அவனின் கண்ணீருக்கும் புன்னகைக்கும் அங்கே எவ்வித அர்த்தமுமில்லை. உணர்வு வயப்பட்டவர்களுக்குத் துயரமானதாகத் தோன்றிடும் இவ்வுலகம் யோசனையில் ஆழ்ந்திருப்பவர்களுக்கோ நகைப்பூட்டக்கூடிய ஒன்றாகக் காட்சி தரும் என்பர்கள். நமது நாடகங்களிலும் சர்க்கஸ்களிலும் இடையில் தோன்றும் விதுஷகர்கள் நம்மை வெறுமனே நகைப்பூட்ட மட்டும் செய்வதில்லை, மாறாக நிகழ்வுகளைக் கண்டு நாம் மிகை உணர்ச்சிக்கு ஆட்படும்போதெல்லாம் நம்மை விலத்தி யோசிக்க வைப்பவர்கள். அவர்கள் இடம்பெறாத கவிதைகள் தம் சமநிலையைத் தக்கவைப்பது கடினம்.

உங்களது இருபத்தைந்து ஆண்டுக்காலக் கவிதை மொழி அடர்த்தியான படிமங்களிலிருந்து நேரடியான உரையாடல் தன்மைக்கு நகர்ந்து வந்திருப்பதாகத் தோன்றுகிறது. இந்த மாற்றத்தைத் தமிழில் பல கவிஞர்களிடமும் பார்க்க முடிகிறது. இதற்கு என்ன காரணமென நினைக்கிறீர்கள்?
பொதுவாகவே இளமையின் வேகத்திலும் தீவிரத்திலும் ஒருவர் இறுக்கமான மொழியையும் சிக்கலான படிமங்களையும் தன் படைப்புகளின் வழியே முன்வைப்பவராக உள்ளார். நாட்பட, அனுபவத்தின் கனிவில் அவரே இணக்கமானதும் எளிமையானதுவுமான ஒரு விவரணை மொழிக்கு நகர்ந்து வந்துவிடுவதைக் காணலாம். இந்த விதிக்கு நானும் விலக்கல்ல. கண்பொத்தி விளையாடும்போது எவரும் எளிதில் கண்டு பிடித்துவிடக்கூடாது என்று எங்காவது மறைவாகப் போய் ஒளிந்துகொள்ளும் சிறுவனைப் போன்றவன்தான் எழுத்தாளன். அவன் எந்த அளவிற்குத் தன் எழுத்தில் மறைந்துகொள்கிறானோ அதே அளவிற்கு, தனது வாசகர்களால் தான் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்றும் அவன் விரும்புகிறான். எனவே குற்றத்தில் ஒளிந்திருக்கும் தடயத்தைப் போல தன்னைப் பின்தொடர்வதற்கான இரகசிய வழிக்குறிப்புகளையும் ஒரு எழுத்தாளன் விட்டுச் செல்கிறான். தன் மொழியில் அவன் கைக்கொள்கிற சரளம் என்பது அவ்வாறான சாகசம்தான்.

நவீன கவிதைகளில் இயல்பான இசைத்தன்மை கொண்ட கவிதைகள் உங்களுடையவை. ஒரு கவிதையின் இசைத்தன்மைக்குச் சாரமாக இருப்பது அதன் வடிவமா சொற்களா?
புதுக்கவிதை திண்ணமாக உருக்கொண்டு ஓர் இலக்கிய வடிவமாகத் தன்னை நிறுவிக் கொண்டுவிடாத அதன் தொடக்க காலத்திலேயே க.நா.சு சரஸ்வதி இதழில் புதுக்கவிதைக்கு இருக்க வேண்டிய இலட்சணங்கள் எவை என்பதைக் குறித்து விளக்கும் விதமாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் மூன்றாவதாகவோ நான்காவதாகவோ ஓர் அம்சத்தைக் குறிப்பிட்டிருப்பார். ஒரு நல்ல கவிதையின் வரிகள் காரண காரியமற்று திடீரென நம் நினைவில் தோன்றி எதிரொலிக்கவேண்டும். இந்த எதிரொலிக்கும் தன்மை ஒரு கவிதையின் நீண்ட ஆயுளுக்கு அவசியம் என்று நம்புகிறேன். ஒரு வரியை நான் எழுதிவிட்டு, மறுபடியும் அடுத்த வரியை யோசிக்கும் முன் எழுதிய வரியை மானசீகமாக என் மனதின் காதில் ஒரு தரம் ஒலிக்கச் செய்கிறேன். நெருடினால் வேறு வார்த்தைகளுக்கு முயலுவேன். இலட்சக்கணக்கான சொற்களின் தொகையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் இலக்கணச் செழுமையும் உடைய மொழியில் உள்ளார்ந்த இசைத் தன்மைக்கு ஒருவர் பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை. அதேசமயம் அதை எதிர்மறையாகக் கருதி விலக்கவும் தேவையில்லை என்பதே என் எண்ணம்.

துக்காராம், போதி தர்மர், சார்லஸ் புக்கோவ்ஸ்கி என முற்றிலும் வெவ்வேறு காலத்தை சிந்தனையை நிலத்தைப் பின்னணியாகக் கொண்ட கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளீர்கள். அனைத்துக் கவிதைகளுமே இன்றும் சமகால மனங்களைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. எனில் ஒரு கவிதையில் நவீனத்துவம் என்பதன் பொருள்தான் என்ன?
போதிதர்மரும் பூக்கோவ்ஸ்கியும் துக்காராமும் வரலாற்றில் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள். அவர்கள் வசித்த சூழலும் பேசிய மொழியும் மாறுபட்டவை. ஆனால் கவிஞர்களாக அவர்கள் அண்டை வீட்டார்களாகவே அறியப்படுகிறார்கள். கவிதையில் காலம் முற்றிலும் வேறுவகையில் தொழிற்படுகிறது. நூறு வருடங்களுக்குள்ளாகவே வரலாற்றில் கற்பனைக் கெட்டாத அளவிற்கு மாறுதல்கள் நிகழ்ந்திருக்கும். ஆனால் கவிதையில் ஆயிரம் வருடங்கள் என்பதுகூட கையசைக்கும் நேரம்தான். ஐம்பது வருடம் பழைய உரைநடைகளைக் கூட அதன் வரலாற்றுப் பின்னணிக்காக அல்லாமல் இன்று படிப்பது சிரமம். ஆனால் கவிதையின் விவகாரம் அப்படியல்ல. கருத்துகளுக்கு வயதாவது போல அவ்வளவு சீக்கிரம் உணர்வுகள் பழையதாவதில்லை.

ரூமியிலிருந்து நவீன கவிஞர்கள் வரை நீங்கள் மொழிபெயர்க்கும் கவிதைகளில் பெரும்பாலானவை காதல் கவிதைகளாகவோ அல்லது தனிப்பட்ட உறவுகள் குறித்த கவிதைகளாகவோ இருப்பது தற்செயலாக அமைந்த ஒன்றா, அல்லது, உங்களது இயல்பான தேர்வு முறையா?
முதல் வாசிப்பில் என்னைத் தீண்டக்கூடிய, காட்சித்தன்மை கொண்ட, மொழிபெயர்ப்பில் இழப்பு குறைவாக இருக்கும்படியான, அளவில் சிறிய கவிதைகளே என் இயல்பான தேர்வு. இதில் பெரிதாக என்ன இருக்கிறது என்று நாம் கவனிக்காமல் அலட்சியமாகக் கடந்துபோகிற எளிய விஷயங்களை நுட்பமான கவிதைகளாக எவ்விதம் மாற்றியிருக்கிறார்கள் என்பதை அணுகி ஆராய்ந்து பார்ப்பதுதான் உண்மையில் எனது மொழிபெயர்ப்பின் நோக்கம். அவற்றுள் நீங்கள் சுட்டு
வதைப்போல காதல் கவிதைகளும் அடங்கியிருக்கலாம். ஆனால் அதைக் கடந்தும் பலவிஷயங்களைப் பேசும் கவிதைகளை மொழி பெயர்த்துள்ளேன். ‘நீருக்குக் கதவுகள் இல்லை’ அவ்வாறான கவிதைகள் கொண்டது. ‘நாங்கள் மேகங்களுடன் விளையாடிக்கொண்டிருந்தோம்’ தொகுப்பு முழுவதும் போரினால் குழந்தைகள் அடையும் பாதிப்புகளை விவரிக்கும் கவிதைகள் அடங்கியது.

உங்கள் ஆரம்பக்கால இலக்கிய ஆசிரியர்கள் யாவர்? இலக்கியத்தில் எந்தப் பாதை வழியாக நடந்து வந்ததாக நீங்கள் உணர்கிறீர்கள்?
நான் ஊன்றிக் கற்ற எழுத்தாளர்கள் எல்லோருமே ஏதோ ஒருவகையில் எனக்கு இலக்கிய ஆசிரியர்கள்தாம். என்றாலும் நேரில் கண்டு பழகும்போது ஓர் ஆளுமை
யாக அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது தனி அனுபவம். அவ்வகையில் நான் முதலில் தேடிப்போய்ப் பார்த்தது தருமபுரியில் இருந்த பிரம்மராஜனைத்தான். அவருடன் சேர்ந்து ஆர்.சிவக்குமார் அவர்களின் அறிமுகமும் அன்று கிடைத்தது. அதன் பிறகு ஜெயமோகன், பாவண்ணன் இருவரின் தொடர்பும் எனக்கு ஏற்பட்டது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் சேலம் நண்பர்கள் நடத்தி வந்த மாதாந்தர இலக்கிய சந்திப்பிற்கு நாஞ்சில் நாடன், ஞானி, ஞானக்கூத்தன், யுவன் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் வந்திருக்கிறார்கள், பிறகு பணிமாறுதலில் சேலம் வந்து தங்கியிருந்த கவிஞர் ஆனந்துடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் வழியே தேவதச்சன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர் அறிமுகமானார்கள். பிரம்மராஜன், கலாப்ரியா, க.வை. பழனிசாமி ஆகியோர் வெவ்வேறு தருணங்களில் நடத்திய கவிதை அரங்கங்களில் பங்கேற்றது பெரிய கண்திறப்பாக அமைந்தது. ஜெயமோகன் உதகையில் ஒருங்கிணைத்த தமிழ்-மலையாளக் கவிஞர்கள் சந்திப்பில் பல வருடங்களாகத் தொடர்ந்து கலந்துகொண்டது மறக்க முடியாத அனுபவம். முதல் தொகுப்பு தொடங்கி தமிழினி வசந்தகுமாருடனான என் உரையாடல்கள், என் எழுத்துகளை நெறிப்படுத்த உதவியிருக்கிறது. எம். கோபாலகிருஷ்ணனும் செங்கதிரும் வாசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து சக பயணிகள். ராஜசுந்தர ராஜன், சுகுமாரன், ஆர்.குப்புசாமி, பெருமாள் முருகன், யுவன் ஆகியோருடனான தொடர்ந்த உரையாடல்கள் என்னைப் பலவிதங்களிலும் செழுமைப்படுத்தியிருக்கிறது.

மொழிபெயர்ப்புக் கவிதைகள் நவீனத் தமிழ்க் கவிதையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? அப்படி முதன்மையாக பாதிப்பைச் செலுத்திய கவிஞர்கள் என யாரையெல்லாம் நினைக்கிறீர்கள்?
காகிதமும் அச்சுக்கலையும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உரைநடை எழுத்துகள் உலகம் முழுவதும் பெருகத் தொடங்கியது. செய்யுளில் யாப்பின் அவசியம் இல்லாமல்போக எல்லா மொழிகளிலும் வசன கவிதை தோன்றுகிறது. தமிழில் புதுக் கவிதை என்பதே மேலைக் கவிதைகளின் நேரடியான பாதிப்பிலிருந்து உருவானதுதான். சிற்றிதழ்கள் தொடர்ந்து மொழிபெயர்ப்புக் கவிதைகளை வெளியிட்டு வந்தன. அவை தமிழ்க் கவிதைகளின் உள்ளடக்கத்தையும் உருவத்தையும் பாதிக்கவே செய்தன. அவ்வகையில் VRM செட்டியார் மொழிபெயர்த்த தாகூர் கவிதைகள், புவியரசு மொழிபெயர்த்த கலீல் ஜிப்ரான் கவிதைகள், வே.ஸ்ரீராம் மொழிபெயர்த்த ழாக் ப்ரெவரின் ‘சொற்கள்’, பிரம்மராஜன் தொகுத்து வெளியிட்ட ‘சம கால உலகக்கவிதைகள்’, இந்திரன் மொழிபெயர்த்த ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ சுகுமாரன் மொழிபெயர்த்த ‘பாப்லோ நெருடா கவிதைகள்’ லதாராமகிருஷ்ணன் மொழிபெயர்த்த ‘அன்னா அக்மதோவா’ கவிதைகள் முதலியன நான் எழுதவந்த காலத்தில் செல்வாக்குச் செலுத்திய மொழிபெயர்ப்புக் கவிதை நூல்கள். இரண்டாயிரத்திற்கும் பிறகு இந்த வரிசையில் ஏராளமான நூல்கள் வெளியாகியுள்ளன, இந்நூல்களெல்லாமே நாம் இதுவரை அடைந்துள்ளவை, அடையத் தவறியவை எவை என்பதை ஒப்பிட்டுப் பார்க்க உதவும்.

உங்களது கவிதை மொழியைச் செழுமைப்படுத்தியதில் பிற மொழிக் கவிஞர்கள் செலுத்திய தாக்கம் என்ன?
ஒரு கவிஞனுடைய மொழி என்பது அவனுடைய அந்தராத்மாவின் குரல் எனலாம். அது அடுத்தவர் கவிதைகளாலோ அல்லது அயல் மொழிக் கவிதைகளின் தாக்கத்தாலோவெல்லாம் உடனடியாக மாறிவிடாது, ஆனால் தொடர்ந்த வாசிப்பின் காரணமாக ஒருவனது கூருணர்வு மேன்மேலும் நுண்மையடையும். அதன் விளைவாக அவன் கவிமொழியும் காலப்போக்கில் மாறக்கூடும். அது இயல்பான ஒன்றே. என் வெளிப்பாட்டு மொழியில் தெரியும் மாற்றமும் இத்தன்மை யானதே.

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக நாம் கவிதைகள் எழுதுகிறோம். நம்முடைய கவிதை மொழியாக்கத்தில் இயல்பாகவே ஒரு மரபார்ந்த தன்மை ஆதிக்கம் செலுத்துவது இயல்பானது. ஆனால் மொழிபெயர்ப்புக் கவிதைகள் தமிழ்க் கவிதைக்குள் ஒரு அந்நியமான, இன்னும் சொல்லப்போனால் உரைநடைத்தன்மை கொண்ட கவிதைகளை எழுதுவதற்கான ஒரு செயற்கையான மொழிக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளதா?
இது ஒரு சங்கடமான கேள்விதான், கால மாறுதலுக்கு உடனடியாக முகம் கொடுப்பது உரைநடைதான். கவிதையில் காலம் மிக மெதுவாகவே தன் தடத்தைப் பதிக்கிறது எனலாம். ஒரு விதத்தில் புதுக்கவிதை என்பதே மரபின் தாக்கத்தை முடிந்த அளவிற்கு உதறிக்கொள்ளும் பொருட்டே உருவாகிவந்தது. எனவே மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தாக்கத்தால் நம் மரபான மொழிக் கட்டமைப்பில் காலப்போக்கில் ஏற்படும் மாறுதல்கள் தவிர்க்க முடியாதது. அதன் தேவையையும் நியாயத்தையும் பொறுத்து அம்மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. தமிழில் இயற்சொல், திரிசொல் ஆகியவற்றோடு வட சொல், திசைச் சொல் என்று அயல்மொழிச் சொற்களை ஏற்றுப் பயன்படுத்துவதற்கான வழிவகையைக் குறித்துத் தொல்காப்பியம் பேசுகிறது. ஒரு மொழியில் இத்தகைய கலப்பு அல்லது மாறுதல்கள் தொன்றுதொட்டு நிகழ்ந்துவரக்கூடிய ஒன்றுதான்.

மேலைத்தேய கவிதைகளைவிட கீழைத்தேய சிந்தனைகளின் உணர்ச்சிப் பெருக்கும் ஆன்மிகத் தேடலும்கொண்ட கவிதைகள்தான் உங்களை மிகவும் வசீகரிக்கிறதா?
நான் எழுதுகின்ற கவிதைகள் என்னுடைய மவைார்ப்பிற்குத் தக அமையும் குறிப்பிட்ட தன்மையிலான கவிதைகளாகவே இருக்கின்றன. அத்தகைய கவிதைகளின் எல்லைக்கு அப்பால் எவ்விதமான வடிவங்களிலும் வகைமைகளிலும் பிற மொழிகளில் கவிதைகள் எழுதப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளும் ஆவலிலேயே நான் கவிதைகளை மொழிபெயர்க்கத் தேர்வு செய்கிறேன். அந்தப் புரிதல் எதாவது ஒரு விதத்தில் மறைமுகமாக என் எழுத்திற்கு உதவும் என்கிற எதிப்பார்ப்பும் எனக்கு உண்டு. அவ்வகையில் நான் சொந்தமாக எழுதுகிற கவிதைகளில் கீழைச் சிந்தனைகளின் பாதிப்பையும் மொழிமெயர்ப்பவற்றில் மேலை நோக்கின் இயல்பான தாக்கத்தையும் நீங்கள் உணரலாம்.

இரண்டாயிரத்திற்குப் பிறகு தமிழ்க் கவிதையில் நடந்த முக்கியமான மாற்றமாக எதைக் கருதுகிறீர்கள்?
இரண்டாயிரத்திற்குப் பிறகு இணையப் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்ததும் அச்சுப் பத்திரிகைகளின் முக்கியத்துவம் மெல்லக் குறையத் தொடங்கிற்று. வாசிப்பைவிடவும் இன்று காணொளிகளின் தாக்கம் பெருகியிருக்கிறது. நிறுத்தி நிதானமாக வாசிக்கக்கூடிய கட்டுரைகளுக்குப் பதிலாக குறுகிய நேரத்தில் விரைவாகப் படிக்கமுடிகிற பத்தி எழுத்துகளுக்கே மிகுதியும் கவனம் கிடைக்கிறது. எதுவொன்றையும் எழுதிய பிறகு மீள் பரிசீலனைக்காகக் காத்திருக்கத் தேவையின்றி உடனே தமது பக்கத்தில் பகிர்ந்துகொள்ள முடிகிறது. இவ்வளவு மாற்றங்களும் அவற்றின் அத்தனை சாதக பாதகங்களோடும் இன்றைய கவிதைகளில் பிரதிபலிக்கிறது. பேசுபொருட்களின் வகைகளும் எழுதுபவர்கள் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. அதே சமயத்தில் இந்த ஆரவாரங்களைக் கடந்து நல்ல கவிதைகளின் வீச்சு, சிற்றிதழ்களின் வரம்பான சில நூறு என்பதைக் கடந்து சில ஆயிரம் வாசகர்கள் என்கிற பெருந்தொகையை எட்டிப்பிடித்திருக்கின்றது. இதுவும் சொல்லிக்கொள்ளும்படியான நல்ல மாற்றம்தான்.

தமிழ்க் கவிதைகளின் பாடுபொருள்கள் புதிய தளங்களை எட்டியிருக்கிறதா?
ஐயமில்லாமல் புதிய தளங்களை எட்டியிருக்கிறது. இணையம் அறிமுகமான புதிதில் அச்சு இதழ்களில் அல்லாமல் முகநூலில் எழுதுவது கவிதையின் இயல்பான தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று தயங்கியவர்கள் உண்டு. நானும் அவ்வாறே நம்பினேன். ஆனால் இன்று அது ஓர் இன்றியமையாத பகிர்வுவெளியாகிவிட்டது. அதன் தொடர்பு எல்லை உலகளாவிய ஒன்றாகிவிட்டிருக்கிறது. அச்சு இதழ்களுக்கான பக்க வரையறை, தயாரிப்புச் செலவு, அவற்றை அனுப்புவதற்கான காலதாமதம் போன்ற தடங்கல்கள் இணைய இதழ்களில் கிடையாது. என் போன்றவர்களெல்லாம் இன்னும் முதுகில் சொட்டும் ஈரக்கூந்தலையே கடந்துவர முடியாமல் தயங்கி நின்றுகொண்டிருக்கையில் இசை ஸ்கூட்டியில் பறக்கும் லூஸ்ஹேரை எல்லாம் நவீன கவிதைக்குள் நைசாகக் கொண்டு வந்துவிட்டார். மனுஷ்யபுத்திரன் இன்றைய யுவவாழ்வில் பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள் அத்தனைக்கும் ஓர் அகராதி தயாரிக்குமளவிற்கு விரித்து உரை எழுதிக்கொண்டிருக்கிறார். நீங்களெல்லாம் சம்பிரதாயமாக இன்னமும் இணைய இதழ்களிலும் முகநூலிலும் மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இன்ஸ்டாவிலும் ஷார்ட்ஸ் எனப்படும் ரீல்ஸ்களிலும் நீங்கள் அறியாத இன்னொரு தலைமுறை எவற்றைப்பற்றியெல்லாமோ எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இளம் நண்பர் ஒருவர் சொன்னார். அவரிடம் நான் தக்கது தப்பிப் பிழைக்கும் என்றேன்.

தமிழ்க் கவிதைகள் மேலும் மேலும் உரைநடையை நெருங்கிச் செல்வதாகவும் புனைகதைத் தன்மையாக மாறி வருவதாகவும் தோன்றுகிறது. நம்முடைய காப்பிய மரபில் கவிதைகளில் கதைகள் சொல்லப்பட்டபோதும்கூட நவீன கவிதையில் அதன் பண்புக்கு ஏற்ற ஒன்றா இது?
இது இயல்பான மாறுதல்தான். இதைத் தொழில்நுட்பத்தின் காலம் எனலாம். உலகளாவிய தொடர்பு வலைப்பின்னலின் ஓர் அங்கமாக நம்மை அறியாமலே நாம் மாறிவிட்டிருக்கிற நிலையும்கூட. எனவே மொழியும் அவ்வாறான பொதுத்தன்மைகளை நோக்கி நகர அவசியமிருக்கிறது. அத்தகைய முன்னெடுப்புகள் உரைநடையில்தான் உடனடியாக சாத்தியம் ஆகும். இந்த அம்சமே இன்றைய கவிதைகளிலும் பிரதிபலிக்கிறது எனலாம். இது ஒன்றும் தவறில்லை. உண்மையில் உரைநடையில் கவித்துவத்தை எழுப்புவதுதான் சவாலானது. ஸ்ரீநேசன், போகன் சங்கர், சபரிநாதன், ஷங்கர் ராம சுப்ரமணியன் போல ஒரு சிலர் மட்டுமே அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

மொழிபெயர்ப்புக் கவிதைகளைத் தமிழ்வாசகப்பரப்பு சற்று சலுகை அளித்து வாசிப்பது போல் தோன்றுகிறது. அதாவது ‘அயல்நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்’ என்பதாக… உங்களால் அப்படி உணர முடிகிறதா? நீங்கள் மொழி பெயர்த்து அதிகமும் சிலாகிக்கப்பட்ட சில கவிதைளுக்குக் கீழே ஒரு தமிழ்க் கவியின் பெயர் இருந்தால் அது அவ்வளவு மெச்சப்படாது என்று தோன்றுகிறதே?
‘அறம் செய்ய விரும்பு’ என்று உங்கள் தமிழாசிரியர் சொல்வதற்கும் ஒளவையார் சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. தற்செயலாக என்றாலும் கவிதையின் ஒரு வரி உருவாவதற்குப் பின்னால் கவிஞனின் முழு அனுபவ உலகமும் தொழிற்படுகிறது. அதையும் கணக்கிலெடுத்துக் கொண்டுதான் அவ்வரியின் அர்த்தத்தை ஒரு வாசகன் புரிந்துகொள்ள முயலவேண்டும். தேவதச்சன் மொழியைக் கடன் வாங்கிச் சொல்வதென்றால் நாம் வெறுமனே இலைகளைப் பிடித்துக்கொண்டிருந்தால் காற்றின் நடனத்தை ஒருபோதும் நம்மால் பார்க்க முடியாது. ஒரு கவிதை எளிமையாகத் தோன்றுகிறது என்பதாலேயே அது எளிய கவிதை ஆகிவிடாது. உண்மையில் அவ்விதமாக எழுதுவதுதான் கடினம். நண்பர்களிடம் நான் எப்போதும் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. முயன்றால் கொஞ்சம் முன்பின்னாக அமைந்தாலும் மெளனியைப் போல சிக்கலான உரைநடையை ஒருவர் எழுதிவிடலாம். பஷீரைப் போல ஒரு பத்தி எழுதுவதுதான் உணமையில் கடினம்.

தமிழில் கவிதை விமர்சனங்கள் அருகிப்போய் விட்டதற்கு என்ன காரணம்? ஒரு புதிய வாசகன் விமர்சக அளவுகோல் இல்லாமல் ஒரு சிறந்த கவிதையை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?
கவிதை எழுதுவதைக் காட்டிலும் கவிதையைப் பற்றி எழுதுவதுதான் ஒப்பீட்டளவில் சிரமம், தான் எழுதிய கவிதைகளைக் குறித்தேகூட ஒரு கவிஞன் விளக்கிப் பேச அவ்வளவாக விரும்புவதில்லை. காரணம் அது கற்பனையில் உதித்து காகிதத்தில் அச்சாகி வரும் வரையிலான இடைப்பொழுதில் நிகழும் மாற்றங்கள் குறித்து அவனுக்கே தெளிவாக எதுவும் புரிவதில்லை. உரைநடையைப் பொறுத்தமட்டிலும் திடமான ஒரு பின்புலமும் கதைப் போக்கும் இருப்பதால் அறுதியிட்டு ஒரு
கருத்தை முன்வைக்கலாம். கவிதையைப் பொறுத்த வரையிலும் நாம் முன்வைக்க முயலும் கருத்துகள் யாவும் ஏறக்குறைய, தோராயமான ஒன்றுதான். எனவேதான் எழுதப்படுகிற அளவிற்குக் கவிதையைப் பற்றிப் பேசப்படுவது குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் விக்கிரமாதித்தியன், கலாப்ரியா, தேவதச்சன், சுகுமாரன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், யுவன், பெருந்தேவி, இளங்கோ கிருஷ்ணன் போன்ற சிலர் கவிதையைப் பற்றித் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

ஒருபுறம் கவிதைகள் விற்பதில்லை, படிக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. ஆனால் அதிகமும் கவிதைகள் எழுதப்படும் மொழி தமிழ்தான். இந்த முரண்பாட்டை எப்படிப் புரிந்துகொள்வது?
ஒருவரை ‘நீங்கள் அப்படியொன்றும் அறிவாளி இல்லை’என்று சொன்னால்கூட ஒப்புக்கொண்டுவிடுவார்கள். ஆனால் ஒருவரை ‘நீங்கள் கவிஞர் இல்லை’ என்று
சொல்லி அவ்வளவு எளிதில் நம்பவைக்க முடியாது அந்த நம்பிக்கை பதின்பருவத்தில், எல்லா எச்சரிக்கைகளையும் கடந்து ஒரு நஞ்சுத் தொற்றைப் போல் ஒரு
வரைப் பற்றக்கூடியது. அதற்கு முறிமருந்து கிடையாது. காலப்போக்கில் தானாகவே குணமானால்தான் உண்டு. இன்று பிரபலமான உரைநடையாளர்களாக அறியப்படுகிறவர்களுமேகூட கவிஞர்களாகவே தொடங்கியிருக்கிறார்கள். இயல்பாகவும் தெளிவாகவும் உணர்கிற ஒன்றை எழுதிச்செல்ல உரைநடையும் இயல்புக்கு மாறாக புதுமையாகவும் கிளர்ச்சியூட்டுவதாகவும் உணரநேரிடுகிற ஒன்றினை வெளிப்படுத்தக் கவிதையும் என்பதே உள்ளத்தின் இயல்பான தேர்வாக அமைகிறது. எனவேதான் எழுதத் தொடங்கும் ஒருவன் தன்னைக் கவிஞனாகவே முதலில் உணர்கிறான். அதன் குறுகிய வடிவம் யாரும் எழுதிவிடலாம் என்கிற நம்பிக்கையை எவருக்கும் தருகிறது.அதிகமும் கவிதைகள் அச்சாவது நல்லதுதான். அது ஒருவன் தன் மொழியோடு அந்தரங்கமாகக் கொண்டிருக்கும் பிணைப்பின் அடையாளம்.

2000த்துக்கு முன்பு தீவிர இலக்கிய விவாதங்கள் நடக்கும் சிற்றிதழ்ச் சூழல் வலிமையாக இருந்தது. இப்போதும் சிற்றிதழ் இயக்கம் இருந்தாலும்கூட இலக்கியம் சார்ந்த கோட்பாட்டு விவாதங்கள் பெரும்பாலும் இல்லை. இது இலக்கிய வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது?
அன்று கருத்தியல்களுக்கு நடுவிலான இடைவெளி களும் முரண்பாடுகளும் துலக்கமாக இருந்தன. இன்றோ எல்லாமும் ஒன்றுடன் ஒன்று ஊடுபரவி குழம்பிக் கலந்து தெளிவற்றுத் தோன்றுகின்றன. பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள், அரசியல் கட்சிகள், கல்வி நிலையங்கள் என எல்லாவற்றின் பின்னாலும் பெருநிறுவனங்களும் அவற்றின் முதலீடுகளும் நிழலாக நிற்கின்றன. எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்படுகின்ற காலத்தில் இருக்கிறோம். உலக அளவிலுமேகூட பல்கலைக்கழங்களில் மொழி, வரலாறு, மானுடவியல் போன்ற கலைத் துறைகள் மதிப்பிழந்து வெறும் அறிவியல், தொழில்நுட்பம் போன்ற படிப்புகளே முதன்மை பெற்று வருகின்றன. பண மதிப்பில்லாத எந்தவொன்றிற்கும் இன்று சமூக மதிப்பும் கிடையாது. சிறு வடையோடு ஒரு தேநீரை மட்டும் பருகிவிட்டு நாளில் பாதி கழியும் வரையிலும் இலக்கியம் பேசிய நாட்களெல்லாம் எங்கோ தொலைவில் நினைவாகிவிட்டன. ஒருவேளை நாம் இன்று அனுபவிக்கிற குறைந்த பட்ச வசதிகளேகூட அத்தகைய தீவிர மனநிலைக்கெல்லாம் ஒருவகை உறுத்தலாக மாறிவிட்டிருக்கிறதோ என்னவோ?

முன்னர் தீவிர இலக்கியக் குழுக்கள் செயல்பட்டன. அவற்றிற்குள் முரண்பாடுகளும் சச்சரவுகளும் இருந்தன. ஆனால் மொழி, சொல், பொருள் குறித்தும் கருத்தாக்கங்கள் குறித்தும் இலக்கியப் பிரதிகள் மேல் விமர்சனங்கள் செயல்பட்டன. இப்போது பெரும்பாலும் கவிதைகள் சமூக ஊடகங்களில் எழுதப்படுகின்றன. அவற்றிற்கு எதிர்வினையாக இலக்கியத்தோடு பெரிய பரிட்சயங்களற்ற உதிரியான வாசகர்கள் மறுமொழி அளிக்கிறார்கள். இந்தத் தொடர்பற்ற மறுமொழிகள் காலப்போக்கில் ஒரு படைப்பாளியைச் சோர்வடையச் செய்வது இல்லையா?
ஓர் எழுத்தாளனின் முதன்மையான நோக்கம் எழுதுவது மட்டுமே. பிரசுர வாய்ப்பு, வாசக ஏற்பு, அதனால் கிட்டும் புகழ், பணம் எல்லாம் இரண்டாம் பட்சமே. எழுதித் தன்னை அறிந்துகொண்டபின் அவன் ஏங்குவதெல்லாம் அவன் எழுத்தின் அந்தரங்கத்தை அறிந்துகொண்ட யாரோ ஒரு இலக்கிய வாசகனுக்காகத்தான். முன்பு இருந்த சிற்றிதழ்ச் சூழலில் இந்த நம்பிக்கைக்குப் பெரிதாகப் பாதகம் எதுவுமில்லாமல் இருந்தது. இன்றைய இணைய வெளி அந்த மனச் சித்திரத்தை முழுவதுமாக சீர்குலைத்துவிட்டது. இன்று உங்களுக்கு உடனடிப் புகழைப் போலவே திடீர்வசையும் வந்து சேரும். உங்கள் எழுத்தைக் குறித்து நீங்கள் யாரிடம் உரையாடுகிறீர்கள் என்கிற தெளிவே பலசமயங்களில் உங்களுக்குக் கிடைக்காது. இவற்றையெல்லாம் கண்டும் காணாது கடந்துபோகிற பக்குவம் எழுதுகிறவர்களுக்கு நாளடைவில் வந்துவிடும் என்றே நம்புகிறேன்.

ஒரு காலத்தில் சில புத்தகங்கள் வெளிவந்தபோது அவற்றின் இலக்கியப் பெருமதி சார்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. உதாரணமாக ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், கல்கியின் பொன்னியின் செல்வன், பாலகுமாரனின் இரும்பு குதிரைகள், சுஜாதாவின் என் இனிய இயந்திரா, சு.ரா.வின் ஜே.ஜே. சில குறிப்புகள், கலாப்ரியாவின் எட்டயபுரம், வண்ணநிலவனின் எஸ்தர், வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள், ஜெயமோகனின் விஷ்ணுபுரம் எனப் பல படைப்புகள் பரந்த வாசிப்பையும் நீண்ட உரையாடல்களையும் ஏற்படுத்தின. 2000த்துக்குப் பிறகு தமிழில் மிகச்சிறந்த பல படைப்புகள் தொடர்ந்து வெளிவந்தும்கூட அவை எந்தத் தொடர்கவனத்தையும் பெறுவதில்லை. இது இலக்கியச் சூழலில் காணப்படும் மந்தத்தனமா அல்லது எல்லாமே எளிதில் புறந்தள்ளப்படும் காலத்தின் பிரச்சினையா?
வாசிப்பு, செய்திகள் பொழுதுபோக்கு என்கிற அம்சங்கள் பத்திரிகைகளிலிருந்து இப்போது முற்றிலுமாக காட்சி ஊடகங்களுக்கு நகர்ந்துவிட்டன. நாள் முழுவதும் அவை நம்மைப் பரபரப்பாகவே வைத்திருக்கப் போட்டிபோடுகின்றன. வாசிப்பதற்கான நிதானமும் நேரமும் முன்னைக்காட்டிலும் அருகிவிட்டன என்பது வருத்தத்திற்குரிய உண்மை. இருப்பினும் இவையெல்லாம் பொதுவான நுகர்வோரின் கவலைகளே. தீவிர இலக்கிய வாசகரிடத்தே வாசிப்பின் உத்வேகம் தொடரவே செய்கிறது. இரண்டாயிரத்திற்குப் பிறகுதான் நீங்கள் குறிப்பிட்டதைப் போன்ற வெற்றியையும் வாசக கவனத்தையும் பெற்ற காவல்கோட்டம், ஆழி சூழ் உலகு, மாதொரு பாகன், மணற்கடிகை, நொய்யல் போன்ற நாவல்களும், நாஞ்சில் நாடன், வண்ணதாசன், பிரபஞ்சன் போன்றோரின் சிறுகதைகளின் மொத்தத் தொகுப்புகளும், ஓநாய் குலச்சின்னம், கரமசோவ் சகோதரர்கள், உருமாற்றம், தனிமையின் நூறு ஆண்டுகள், என் பெயர் சிவப்பு முதலிய மொழி பெயர்ப்புகளும் வெளியாகியுள்ளன. அலங்கார மின்விளக்குகளின் பகட்டொளி கூசச்செய்யும்போது அகல் ஒளி தரும் அமைதியை நாடி வருவோரும் உண்டுதானே.