வாக்குரிமை என்பது வாக்களிக்காமல் தவிர்க்கும் உரிமையையும் உள்ளடக்கியதே.

ஆம். 1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 79 (டி) பிரிவு தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கும் உரிமையை ஓர் இந்தியக் குடிமகனுக்கு அளிக்கிறது: “Electoral Right” Means The Right Of A Person To Stand Or Not To Stand As, Or (To Withdraw Or Not To Withdraw) From Being, A Candidate, Or To Vote Or Refrain From Voting At An Election. இந்த முக்கிய‌ உரிமையை அமல்படுத்தும் விதமாகவே 49ஓ, Nota ஆகிய‌ன கொண்டுவரப்பட்டன.
2013ஆம் ஆண்டில் அன்றைய‌ உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியான‌ பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இந்திய ஜனநாயகத்தின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. ஒருவர் தன் தொகுதியில் நிற்கும் எந்த வேட்பாளரும் தகுதி அற்றவர் என்று எண்ணினால் அதை ரகசியமாகப் பதிவுசெய்யும் வழிமுறையைத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என்பதே அந்த 51 பக்க தீர்ப்பின் சாரம்.

குறிப்பிட்ட வரி: “We Direct The Election Commission To Provide Necessary Provision In The ballot Papers/Evms And Another Bîtton Called “None Of The Above” (Nota) May Be Provided In Evms So That The Voters, Who Come To The Polling Booth And Decide Not To Vote For Any Of The Candidates In The Fray, Are ABle To Exercise Their Right Not To Vote While Maintaining Their Right Of Secrecy.”ஆக, Negative Vote எனப்படும் எதிர்மறை வாக்குமுறையை ரகசியமாய்ப் பதிவுசெய்யும் முறையை அறிமுகப்படுத்தி இருக்கும் 14ஆவது நாடாக அன்று சேர்ந்தது இந்தியா.

யாருக்கும் ஓட்டுப்போட விருப்பமில்லை என்ற முடிவைப் பதிவு செய்யும் வசதி கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாகவே இந்தியாவில் இருந்து வருவதுதான். ஆனால் அதில் பிரச்சினைகள் இருந்தன. பாமரன் அணுகும் எளிமையில் இல்லை. முக்கியமாய் ரகசியமானதாய் இல்லை. அதைத்தான் இந்தத் தீர்ப்பு சரி செய்தது.
ஒருவர் தன் ஓட்டை யாருக்கும் போட வேண்டாம் என முடிவு செய்தால் அதைச் செயல்படுத்த வேறு மறைமுக மார்க்கங்கள் இருக்கின்றன. முதலாவது, ஓட்டு போடாமலேயே இருந்துவிடுவது. ஆனால் அதில் பிரச்சினை, உங்கள் வாக்கை வேறு எவரேனும் கள்ள ஓட்டாகப் போட்டுவிடும் சாத்தியம் இருக்கிறது. அடுத்தவழி, முன்பெல்லாம் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தினார்கள். அதில் யாருக்கும் முத்திரை குத்தாமல் வெற்று வாக்குச் சீட்டைப் பெட்டியில் போட்டுவிடுவது (அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சின்னங்களில் முத்திரை இட்டுவிடுவது). இதில் பிரச்சினை என்னவெனில் இது எதிர்மறை வாக்காகக் கருதப்படாது, செல்லாத ஓட்டு என்றே எடுத்துக்கொள்வர். காரணம் நீங்கள் யாரும் தகுதியற்றவர் என சொல்ல வருகிறீர்களா அல்லது ஓட்டுப்போடவே தெரியாமல் செய்த தவறா என மற்றவர்களுக்குத் தெரியாது. தவிர, இப்போது மின்னணு வாக்குப்பதிவுமுறை வந்தபிறகு இப்படி நூதனமாய் செல்லாத ஓட்டு போடும் சாத்தியமும் கிடையாது.
இந்தப் பிரச்சினை எல்லாம் தீர்க்கத்தான் 49-ஓ முறையைக் கொண்டுவந்தார்கள்.

தேர்தலின் வழக்கமான ரகசிய பாணியில் அல்லாமல் வெளிப்படையாக‌ எந்த வேட்பாளருக்கும் தான் வாக்களிக்கவில்லை எனப் பதியும் வசதி அது. 49-ஓ என்பது தேர்தல் நடைமுறை சம்பந்தப்பட்ட‌ ஒரு விதி. Manual of election law இரண்டாவது வால்யூமில் வரும்the conduct of elections rules, 1961இன் நான்காவது பகுதியான voting in parliamentary and assembly constituencies என்பதில் இரண்டாவது அத்தியாயமான voting By electronic voting machinesஇல் இந்த விதிவருகிறது.

“49-O. Elector deciding not to vote.—If an elector, after his electoral roll number has been duly entered in the register of voters in Form 17A and has put his signature or thumb impression thereon as required under sub-rule (1) of rule 49L, decided not to record his vote, a remark to this effect shall be made against the said entry in Form 17A by the presiding officer and the signature or thumb impression of the elector shall be obtained against such remark.”என்கிறது இவ்விதி.

அதாவது நீங்கள் ஓட்டுப்போடவில்லை என அதிகாரப்பூர்வமாக அரசாங்கத்துக்கு அறிவிக்கிறீர்கள். இது ஓட்டு அல்ல. எதிர்மறை ஓட்டு. நடுநிலை ஓட்டு. ஓட்டுப்போடவில்லை என்கிற கணக்கு. அதாவது non-vote / negative vote / neutral vote. வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் தகவலறியும் சட்டத்தின்கீழ் இப்படி 49ஓ-வின்கீழ் பதிவான non-voteகளின் எண்ணிக்கை எவ்வளவு எனத் தெரிந்து கொள்ளலாம்.

2014ஆம் ஆண்டுவரை இதை ஒருவர் பகிரங்கமாக மட்டுமே பதிவுசெய்ய முடியும்.

உங்கள் வாக்குச்சாவடியின் தேர்தல் அதிகாரியிடம் நீங்கள் 49-ஓ விதியின்கீழ் வாக்களிக்க விரும்புவதைத் தெரிவிக்க வேண்டும். அவர் 17ணீ என்றழைக்கப்படுகிற‌ வாக்காளர் பதிவேட்டில் உங்கள் பெயர் மற்றும் வாக்காளர் எண்ணுக்கு நேராக நீங்கள் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதன் ஒப்புதலாக உங்களின் கையெழுத்தையோ, கைநாட்டையோ பெற்றுக்கொள்வார். அவரும் கையெழுத்திடுவார். அவ்வளவுதான். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவுசெய்யவோ, வாக்குச்சீட்டில் முத்திரை குத்தவோ தேவையில்லை.

பொதுவாய் எல்லா பூத்களிலும் நேர்மையாய் வாக்குப்பதிவு நடப்பதை உறுதிசெய்ய அனைத்துக் கட்சி தேர்தல் முகவர்களும் அமர்ந்திருப்பர். அவர்களுக்கு இன்னார் 49-ஓ பதிவுசெய்தார் என்பது சுலபமாய்த் தெரிந்துபோகும்.இது நமது வழக்கமான ரக‌சிய ஓட்டளிக்கும் முறைக்கு எதிரானது. இந்த‌ விஷயமானது எதிர்காலத்தில் அந்த வாக்காளரின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கவும் வாய்ப்பு உண்டு. குறைந்தபட்சம் அவருக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள், சலுகைகள் வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டு பழிதீர்க்கப்படும் சங்கடங்கள் நிகழவாய்ப்புண்டு.

இதை எல்லாம் உத்தேசித்துத்தான் தேர்தல்ஆணையம் 49-ஓ என்பதைப் பதிவுசெய்ய ரகசிய வழிமுறையைக் கொண்டுவரவேண்டும் என மத்திய அரசிடம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வலியுறுத்தியபடியே இருந்தது.

2004இல் அப்போதைய இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தேர்தல் சீர்திருத்தங்களுக்கான வரைவுத்திட்டங்கள் அடங்கிய குறிப்புகளைச் சமர்ப்பித்தார். தேர்தலில் பயன்படுத்தப்படுவது வாக்குச்சீட்டோ, வாக்குப்பதிவு இயந்திரமோ எதுவென்றாலும் அதில் அனைத்து வேட்பாளர்களின் பெயருக்குப்பின் கடைசியாக ‘None of the above’ என்பதையும் பட்டியலில் சேர்க்கச் சட்டதிருத்தம் கொண்டுவரவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் அதைக் கண்டுகொள்ளவில்லை.

பிறகுதான் People’s Union for Civil Liberties (PUCL) என்ற அரசுசாரா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் இதுபற்றி ஒரு பொதுநல வழக்குத் தொடர்ந்து, சென்ற ஆண்டு மேற்சொன்ன முக்கியத் தீர்ப்பு வந்திருக்கிறது. இதன்படி இனி தேர்தலில் வாக்குச்சீட்டோ வாக்கு இயந்திரமோ எது பயன்படுத்தப்பட்டாலும் அனைத்து வேட்பாளர்களின் பெயருக்குக்கீழே, கடைசி ஆப்ஷனாய் ஆங்கிலத்தில் ‘Nota’ என்பதும் இருக்கும். இயந்திரத்தில் அதற்கு நேராய்த் தனிபட்டனும் இருக்கும்.

யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர் பிற எல்லா வாக்காளர்களையும் போல் மௌனமாய் Nota-வுக்கான பட்டனை அமுக்கிவிட்டு வந்தால் போதுமானது.

இந்திய அரசியல் சாசனத்தின் 19வது பிரிவு உறுதிப்படுத்தும் கருத்துரிமையின் பாதுகாப்பு மற்றும் 1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 128ஆவது பிரிவு குறிப்பிடும் ரகசிய வாக்குப்பதிவு -இரண்டு விஷயங்களும் இதன்மூலம் நிறைவேறியது; அதுவரையில் இருந்துவந்த‌ 49-ஓ முறை அதோடு ரத்தானது.

முதன்முறையாக‌ 2013இல் நடந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிஸோரம், டெல்லி சட்டசபைத் தேர்தல்களில் வாக்கு இயந்திரங்களில் இந்த ரகசிய Nota ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் அதேசமயம் நடந்த ஏற்காடு இடைத்தேர்தலில் இது அறிமுகமானது. (சட்டீஸ்கரில் அதிகபட்சமாக 3.06% வாக்குகள் நோட்டாவுக்குப் பதிவாகின.)

நாடுமுழுக்க இது பயன்படுத்தப்பட்டது 2014இல் நடந்த‌ லோக்சபா தேர்தலில்தான். (அந்தத் தேர்தலில் இந்தியா முழுக்க 1.8% வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தது.)

2014 மற்றும் 2015இல் தேர்தல் ஆணையம் அனுப்பிய இரு சுற்றறிக்கைகளின்படி சட்டசபை உறுப்பினர்கள் பங்கேற்கும் ராஜ்யசபா தேர்தலிலும் அச்சடிக்கப்பட்ட வாக்குச்சீட்டில் இனி ‘Nota’ என்ற தனி ஆப்ஷன் இடம்பெறும் என அறிவித்தது. ஆனால் 2018இல் அதை ரத்துசெய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நோட்டா என்பது குடிமக்களின் வாக்குரிமைக்கு மட்டுமே செல்லும், ராஜ்யசபா போன்ற Proportional Representation by means of the Single Transferable Vote-க்கு அதை அளிப்பது அரசியல் சாசனச் சட்டத்தின் பிரிவு 80(4)-ஐ மீறுவதாகும் என்று தீர்ப்பளித்தது.
வாக்களிக்காமலிருக்கும் உரிமையை அளிக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்குமானது மட்டுமே என்பதைச்சுட்டி 2015இல் நடந்த கேரளப் பஞ்சாயத்துத் தேர்தல்களில் அந்த வசதியைச் சேர்க்கவில்லை.

*

அடுத்து Nota குறித்த சில மூடநம்பிக்கைகள், அவநம்பிக்கைகளைப் பார்க்கலாம்.

பொதுமக்கள் மத்தியில் Nota பற்றி பல நம்பிக்கைகள் நிலவுகின்றன. அவற்றில் முக்கியமான இரண்டைப் பார்ப்போம்: 1. ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையைவிட Nota வாக்குகளின் எண்ணிக்கை அதிகமென்றால், அந்தத் தேர்தலை செல்லாததாக்கி மறுதேர்தல் நடத்துவார்கள். 2. அத்தொகுதியில் Nota எண்ணிக்கையை விட குறைவாக ஓட்டு வாங்கியவர்கள் தம் வாழ்நாள் முழுமைக்கும் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்படுவார்கள்.
இவை இரண்டுமே ஒரு சதவிகிதம் கூட உண்மையில்லாத மூட நம்பிக்கைகள்.

உண்மையில் முதலில் மொத்த வாக்குகளில் Notaவுக்கு விழுந்த வாக்குகளின் எண்ணிக்கை கழிக்கப்பட்டுவிடும். ஏற்கனவே சொன்னதுபோல் Nota என்பது ஓட்டு அல்ல; ஓட்டு போடவில்லை என்ற கணக்கு தான். அதனால் அதை ஒதுக்கிவிட்டு மற்ற வாக்குகளைக் கொண்டே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார். ஒருவேளை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 90% Nota என்றாலும் மீதமிருக்கும் 10% வாக்குகளில் அதிக வாக்கு பெற்றவர் எவரோ அவரே தேர்தலில் வெற்றி பெற்றவர். இதுதான் Notaவின் இன்றைய நிலை.

தொகுதியில் ஒருவர் மட்டும் தான் நிற்கிறார் என்றால் அவரே போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்படுவார். Nota எத்தனை பதிவாகி இருந்தாலும் பிரச்சினை இல்லை.
இன்னும் சொல்லப் போனால் ஒரு வேட்பாளர் தான் தேர்தலில் நிற்கச் செலுத்திய செக்யூரிட்டி டெபாஸிட் தொகையைப் பெற மொத்தம் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளேனும் பெற வேண்டும், அதைக் கணக்கிடக் கூட தேர்தல் ஆணையம் Nota-வுக்கு விழுந்த வாக்குகளை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள வாக்குகளை மட்டும்தான் மொத்தவாக்குகளாய் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

அடுத்து Nota பற்றிய அவநம்பிக்கையைப் பார்க்கலாம். இத்தனை பலவீனமான, எந்த நேரடிப் பயனும் இல்லாத ஒரு விஷயத்துக்காக நான் ஏன் என் ஓட்டை வீண் செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கிறது.

இப்போதைக்கு Nota பலகீனமானதுதான். ஆனால் ஒன்றுமே இல்லாதது அல்ல.

முதன்மையாக Nota போடுவதனால் ஏற்படும் இரண்டு உடனடிப் பயன்கள் உண்டு: 1. நீங்கள் ஓட்டுப் போடவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்து விட்டீர்கள். 2. வேறு ஒருவர் உங்கள் ஓட்டைப் போடுவதைத் தவிர்த்து விட்டீர்கள்.

இவற்றைத் தவிர்த்து இப்போதே ஒரு மறைமுகப் பயன் இருக்கிறது. அது உங்கள் தொகுதியில் ஒருவர் கூட தகுதியான வேட்பாளர் / கட்சி இல்லை என நீங்கள் சொல்கிறீர்கள். இப்படி எத்தனை பேர் நினைக்கிறார்கள் என்ற கணக்கு தேர்தல் முடிவு வெளியானதும் தெரிய வரும். அந்த எதிர்ப்பு முகம் முக்கியம் ஆகிறது.
ஒருவேளை கணிசமான எண்ணிக்கையில் ஒரு தொகுதியில் Nota பதிவாகிறது எனில் (இப்போதைக்கு சுமார் 10% என்றாலேகூட) யாரோ ஒருவர் ஜெயித்தாலும் அது வேட்பாளரை நிறுத்திய அரசியல் கட்சிகளுக்குப் பெரிய அடிதான். அப்படி ஏன் கணிசமானோர் எதிர்த்தனர் என ஆராய முற்படுவர். மக்களிடம் கருத்தறிய முயல்வர். எல்லா கட்சிகளுமே அடுத்தமுறை அங்கு வேட்பாளர் நிறுத்துகையில் கவனமாய் இருப்பர். அடுத்து மக்களிடையேயும் இத்தனைபேர் Nota பதிந்தது தொடர்பாய் விழிப்புணர்வு ஏற்படும். நாமும் தேவைப்பட்டால் அந்த வசதியைப் பயன்படுத்தலாம் எனத் தோன்றும். இதுதான் மாற்றத்தின் ஆரம்பப்புள்ளி.
இவை தவிர, எதிர்காலத்தில் சில விளைவுகள்/மாற்றங்கள் சாத்தியமுண்டு.

ரகசிய Nota முறை கொண்டு வந்ததால் அதற்குப் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை அதிகமானால், அதன் நீட்சியாய் மக்கள் மத்தியில் இதைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து, தொடரும் சில ஆண்டுகளில் அதன் சதவிகிதம் அதிகரித்து மொத்த வாக்குகளில் கால்வாசி Nota வாக்குகள் என்ற நிலை வரும்போது இதைப் பற்றித் தேவையான சட்ட திருத்தங்கள் கொண்டு வரச் சொல்லி அரசாங்கத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் அழுத்தம் தரலாம். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகி இதைச் செயல்படுத்தலாம். மேலே மூட நம்பிக்கை என்று சொன்ன விஷயங்களை இந்த வழியில் இன்னும் சில ஆண்டுகளில் உண்மை ஆக்கலாம்.
கடந்த சில ஆண்டுகளில் Nota அதிகமாய்ப் பதிவானால் தேர்தலை செல்லாதது ஆக்கப் போடப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் அது இப்போதைய நிலைக்கு உச்சநீதிமன்றத்தின் பதில் எதிர்காலத்தில் கணிசமானோரின் முடிவாக Nota ஆகும்போது உச்சநீதிமன்றமோ அரசோ நாடாளுமன்றமோ அதை அவ்வளவு சுலபமாய் அதைப் புறம் தள்ளமுடியாது.

உள்ளாட்சித் தேர்தல்களில் ஏற்கனவே சில‌ மாநிலத் தேர்தல் ஆணையங்கள் நோட்டாவையொட்டி முக்கியமான‌ மாற்றங்களைக் கொண்டுவந்துவிட்டன.
2017இல் பூனாவின் போரிக்ராம் என்ற பஞ்சாயத்துக்கு நடந்த தேர்தலில் 85.57% வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தன. நந்தெட் மாவட்டத்தின் குகாவோன் குர்த் என்ற பஞ்சாயத்தில் ஜெயித்தவரைவிட நோட்டாவுக்கு ஐந்துமடங்கு அதிக வாக்குகள் கிடைத்தன. லஞ்சா தேசில் மாவட்ட கவாடி கிராமத்தில் ஜெயித்தவர் பெற்றது 130 ஓட்டுக்கள்; நோட்டாவுக்கு 210. இவை விவாதங்களைக் கிளப்பின.

2018 நவம்பரில் மகாராஷ்ட்ர தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு புதிய மாற்றத்தைக் கொணர்ந்தது. 1)தேர்தலில் நோட்டாவே அதிகவாக்குகள் பெற்றால், மறுதேர்தல் நடத்தப்படும். 2) ஒருவேளை மறுதேர்தலிலும் நோட்டாவே அதிகவாக்குகள் பெற்றால் அதற்கு அடுத்த இடத்தில் அதிகவாக்குகள் பெற்றவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். 3) ஆனால் முதன்முறை நின்றவர்கள் மறுதேர்தலில் நிற்கத் தடையில்லை. இதற்கு அடுத்தமாதம் ஹரியானா மாநிலத் தேர்தல் ஆணையமும் உள்ளாட்சித் தேர்தலில் இதே விதியை அமல்படுத்தியது.
ஜனநாயகத்தில் மாற்றம்வரத் தாமதம் ஆகும்தான். ஆனால் நிச்சயம் வரும்.

*

49-ஓ குறித்து தமிழகத்தில் கவனிப்பை ஏற்படுத்தியதில் எழுத்தாளர் ஞாநிக்குக் கணிசமான பங்கு உண்டு (நானும் பதினைந்தாண்டுகள்முன் அவரைப் படித்தே இதைப்பற்றி அறிந்தேன்). Nota பற்றி இப்போது பரவலாய்ப் பேசுகிறார்கள். Nota முறை வந்தபின் (49-ஓ காலத்தோடு ஒப்பிடும்போது) அதிக எண்ணிக்கையிலான‌ வாக்குகள் இதற்குப் பதிவாகின்றன‌. ஆனால் அதன் பிரச்சினைகள் / பலன்கள் பற்றிய போதுமான புரிதலும், விழிப்புணர்வும் இருக்கிறதா என்பது ஐயப்பாடுதான்.

சம்பந்தமில்லாமல் 49-ஓ, Nota என்று திரைப்படங்களுக்குப் பெயர்வைக்கும் அளவில்தான் அதைப்பற்றிய‌ நம்புரிதல் இருக்கிறதோ எனத் தோன்றுகிறது.
இப்போதும் இந்தமுறையில் ஒருகுறை என்னவெனில் படிக்காதவர் (அதுவும் ஆங்கிலம் அறியாதவர்) Nota போடுவதில் உள்ள சிரமம். இப்போதைக்கு Nota-வுக்கென தனிச் சின்னம் கிடையாது. ஆங்கிலம் படிக்கத் தெரிந்தவர் மட்டுமே இதற்கு ஓட்டுப்போட முடியும். அதனால் Nota-வுக்குத் தனிச் சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது குறித்த கோரிக்கைகள் சமீப‌ ஆண்டுகளில் எழுந்திருக்கின்றன.

2013இல் நடந்த சட்டசபைத் தேர்தல்களில் ரிசர்வ் தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர்தான் நிற்க முடியும் என இருப்பதை பிற சாதியினர் எதிர்க்கும் நோக்கில் Nota முறையைப் பயன்படுத்தியதாக தரவுகளின் அடிப்படையில் தி இந்து சொல்கிறது. இது போன்ற பக்க விளைவுகள் சில‌ இதிலுண்டுதான்.
உதாரணமாய் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் சரி, இந்திய அளவிலும் சரி ஒருவர் நோட்டாவைப் பயன்படுத்தாமலிருப்பதே நல்லதென்பேன்.
காரணம், இம்முறை அசல் நடுநிலையாளர்களின் அக்கறை ஐந்தாண்டுகளாய்த் தேசத்தைப் பொருளாதாரரீதியாகவும், சமூகரீதியாகவும், கலாசாரரீதியாகவும் சீரழித்துவரும் ஃபாசிஸ இந்துத்துவ ஆட்சியை நீக்குவதாகவே இருக்கிறது. ஆனால் அந்தத் தரப்பு பெரும்பலங்கொண்டதாய் இருக்கிறது என்பதால் எதிர்ப்பு வாக்குகளைச் சிந்தாமல் ஓரிடத்தில் குவிக்கவேண்டி இருக்கிறது. யதார்த்த தீர்வாக‌ இருக்கும் அப்படியான ஒன்று – விமர்சனங்கள்தாண்டி – காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் (இங்கே திமுக+).

ஒருவர் தன் தொகுதியில் நோட்டாபோடுவது பாஜக (இங்கே அதிமுக+) எதிர்ப்பு வாக்குகளைப்பிரித்து அவர்கள் எளிதில் வெல்லக் காரணமாகிவிடும். (உதா: 2017 குஜராத் சட்டசபைத் தேர்தலிலும் 2018 கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டசபைத் தேர்தல்களிலும் சில தொகுதிகளில் வெற்றி வித்தியாச வாக்குகளைவிட நோட்டாவுக்கு விழுந்தவாக்குகள் அதிகமாய் இருந்தன.) அந்த அபத்தத்தைத் தவிர்க்கும் பொருட்டு நோட்டாவை இம்முறை பயன்படுத்தாதிருப்பதே நல்லது.

மக்கள்நீதி மய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் நோட்டாவுடன் போட்டியிடும் நிலைமையில் இருந்தாலும் அவை செய்யும் வேலை பாஜக / அதிமுக எதிர்ப்புவாக்குகளைப் பிரிப்பது. நோட்டாவும் கண்ணுக்குத் தெரியாமல் இருந்து அதையே செய்ய வல்லது. அதனால் இம்முறை அதைக் கவனமாகக் கையாளவேண்டும்.

நோட்டா என்பது ஒட்டுமொத்த தேசத்துக்கான அல்லது மாநிலத்துக்கான தீர்வல்ல; அது ஒரு தொகுதிக்கான வேட்பாளர்கள் பற்றிய உங்கள் கருத்தைப் பதிவுசெய்யும் கருவி மட்டுமே. இந்த வித்தியாசத்தை உணரவேண்டும். ஆனால் இம்முறை நம்நோக்கம் ஒட்டுமொத்த நாட்டிற்கான மாற்றத்தைக் கொண்டுவருவதே என்பதால் Nota-வை ஒதுக்க‌ வேண்டியுள்ளது. வாக்காளர்களும் ராஜதந்திரம் பழகவேண்டும்.

ஆயுதத்தின் பலம் அதை எப்போது பயன்படுத்தலாகாவென‌ அறிந்திருப்பதும்தான்.