இரண்டாம் முறை மோடி பதவியேற்றுக்கொண்ட பிறகு நாட்டு மக்களுக்கு ஆயாசம் ஏற்பட்டதே தவிர பெரிய அதிர்ச்சிகள் இல்லை. ஏனென்றால் அவர் தீமைகளின் எல்லா எல்லைகளையும் தனது முதலாம் ஆட்சிக் காலத்திலேயே தொட்டுவிட்டார். அவரிடம் மக்களுக்கு நன்மைக்கான எதிர்பார்ப்பும் இல்லை. மீட்சிக்கான எந்தக் கனவும் இல்லை. சமூகங்களிடையே ஒற்றுமையும் மாநிலங்களிடையே சம நீதியும் வழங்குவார் என யாருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஐந்தாண்டுகள் பாசிசத்தின் நாயகனாக வலம்வந்த ஒருவரை இந்த நாடு மீண்டும் தேர்ந்தெடுக்கிறது என்றால் அந்த நாட்டின் மக்களின் இதயங்களில் பாசிசத்தின் விஷம் இறங்கத் தொடங்கிவிட்டதா என்ற கேள்வியே எழுகிறது. ஹிட்லர் அப்படித்தான் ஜெர்மனியை அன்று பாசிசமயமாக்கினார்.

மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலம் முதலாம் ஆட்சிக் காலத்தைவிட இந்த நாட்டிற்குப் பெரும் துயரங்களைக் கொண்டுவரப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தோன்றிவிட்டன. புதிய கல்விக்கொள்கை, இந்தித் திணிப்பு, மறைமுக குலக்கல்வி முறை, கல்வியில் மாநில உரிமைகளை முற்றாகப் பறித்தல், மதம் சார்ந்த பழமைவாதத்தை இளம் மனங்களில் விதைத்தல் என ஏராளமான அபாயங்களுடன் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இன்னும் பல டினோசர்கள் மோடியின் இருட்குகைகளிலிருந்து வெளியே வரவிருக்கின்றன.

இந்தியாவை இந்துத்துவா பெரும்பான்மை வாதத்தால் ஆள்வது, அதற்காக பல்வேறு மோதல்கள் வழியே இந்து அடையாளத்தை தொடர்ந்து மக்களிடம் வலுவாக கட்டமைப்பது என்ற பா.ஜ.க.வின் செயல்திட்டம் இப்போது உக்கிரம் அடைந்திருக்கிறது. மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளான பிரக்யாசிங் தாக்கூரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் பி.ஜே.பி. அரசாளும் நாட்டில் நீதிமன்றங்களில் எப்படிப்பட்ட தீர்ப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் காணவேண்டும்

குஜராத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான சஞ்சீவ் பட்டுக்கு, முப்பது ஆண்டுகால வழக்கொன்றில் ஆயுள் தண்டனை வழங்கி, ஜாம் நகர் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குஜராத்தின் ஜாம்நகரில் 1990இல் நடைபெற்ற பந்த்தில் சில வன்முறைகள் நடைபெற்றன. அந்த நேரத்தில் சஞ்சீவ்பட் ஜாம்நகரின் மூத்த காவல்துறை கண்காணிப்பு அதிகாரியாக இருந்தார். அந்த வன்முறை தொடர்பாக காவல்துறை 100 பேரைக் கைது செய்தது. அதில் ஒருவர் பிரபுதாஸ் மாதவ்ஜி வைஷ்ணவி. அவர் மருத்துமனையில் உயிரிழந்தார். அதற்கு சஞ்சீவ்பட்தான் முக்கியக் காரணம் என்று தொடுக்கபட்ட வழக்கில் அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் அந்த வழக்கு தோண்டி எடுக்கப்பட்டு, இப்போது சஞ்சீவ்பட்டிற்கு ஆயுள்தண்டனை வழங்கபட்டுள்ளது. குஜராத்தில் நடந்த எத்தனையோ லாக்கப் மரணங்கள், போலி என்கவுண்டர்களில் யாருக்கும் எந்தத் தண்டனையும் இதுவரை வழங்கப்படவில்லை.
ஆனால் சஞ்சீவ்பட் செய்த உண்மையான குற்றம் என்ன? குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை அனுமதிக்குமாறு முதல்வர் நரேந்திர மோடி, அம்மாநில காவல்துறைக்கு உத்தரவு வழங்கியதாக அன்று நடந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்ற சஞ்சய்பட் உச்சநீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். மோடி அரசின் பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஆளான சஞ்சீவ்பட் பல்வேறு பொய்வழக்குகளில் கைது செய்யப்பட்டார். இப்போது ஒரு வழக்கில் ஆயுள்தண்டனையும் அளிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். மோடியை எதிர்த்தால் என்ன பரிசு கிடைக்கும் என்பதற்கு சஞ்சீவ்பட் ஒரு சாட்சியம்.

மோடி அரசின் குற்றச் செயல்களின் கருவியாகச் செயல்பட்டால் என்ன பரிசு கிடைக்கும் என்பதற்கு இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டபட்ட முன்னாள் போலீஸ் அதிகாரிகள் டி.ஜி.வன்சாரா, என்.கே.அமீன் ஆகியோரை அகமதாபாத் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த மே 28ஆம் தேதி விடுவித்தது, குஜராத் மாநிலம் அகமதாபாத் புறநகர் பகுதியில் கடந்த 2014, ஜூன் 15-ஆம் தேதி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் காவல்துறை என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இவர்கள் தீவிரவாதிகள் என்றும் அப்போதைய குஜராத் முதல்வர் மோடியைக் கொலைசெய்ய இவர்கள் திட்டமிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் சிறப்புப் புலனாய்வுக் குழுவை குஜராத் உயர்நீதிமன்றம் அமைத்தபிறகு, இது போலி என்கவுன்ட்டர் எனத் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் கடந்த 2013இல் சி.பி.ஐ. தனது முதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பி.பி.பாண்டே, வன்சாரா, ஜி.எல்.சிங்கால் உட்பட ஏழு காவல்துறை அதிகாரிகள்மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில் அரசு ஊழியர் ஒருவர் தனது அதிகாரப்பூர்வ பணியின்போது செய்த ஒரு செயலுக்கு எதிராக வழக்குத் தொடர, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 197-ஆவது பிரிவின்படி அரசின் அனுமதி அவசியம் என்பதால் அதற்கு குஜராத் அரசின் அனுமதியை சி.பி.ஐ. கோரியது. ஆனால் குஜராத் அரசு அனுமதி அளிக்கவில்லை. அதன் அடிப்படையில் அந்த இரண்டு அதிகாரிகளும் விடுவிக்கபட்டிருக்கிறார்களே ஒழிய குற்றமற்றவர்கள் என்பதால் அல்ல. அதாவது நான்கு அப்பாவிகளைப் படுகொலை செய்த அதிகாரிகளை மோடி அரசு வெளிப்படையாக ஆதரித்து நிற்கிறது. குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்துத்துவா பயங்கரவாதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி. அப்பாவிகளைக் கொலைசெய்த அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு. குஜராத் கலவரத்தின்போது முதலமைச்சராக இருந்த மோடியின் பாத்திரத்தை அம்பலப்படுத்திய சஞ்சீவ்பட் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

மோடியின் இரண்டாம் ஆட்சிக்காலத்தில் மத வன்முறையின் சில புதிய பரிமாணங்கள் உருவெடுத்திருக்கின்றன. பசு மாமிசம் சாப்பிடுவோர் என்று சொல்லி தலித்துகளையும் இஸ்லாமியர்களையும் தாக்கிப் படுகொலை செய்துவந்ததன் அடுத்தகட்ட நகர்வுகள் ஆரம்பமாகியிருக்கின்றன. நாடாளுமன்றத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்கள் எழுந்தபோது அது வெறும் தனிப்பட்ட மத நம்பிக்கையின் குரல் அல்ல. அடுத்தகட்ட வன்முறைக்கான அழைப்பு என்பது நிரூபணமாகியிருக்கிறது.
கடந்த மே மாதம் 25ஆ-ம் தேதி அன்று டெல்லி அருகேயுள்ள குர்கான் மாவட்டத்தில் முகமது பரக்கத் என்னும் இளைஞர் மசூதியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் ஐந்து பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து, அவரின் தலையில் இருந்த குல்லாவை எடுக்கச் சொல்லி ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கோஷமிடச் சொல்கிறார்கள். அதற்கு முகமது பரக்கத் மறுத்துள்ளார். உடனே அந்த ஐந்து பேர் கும்பலால் அவர் தாக்கப்படுகிறார். படுகாயங்களுடன் உயிர் தப்பினார் அந்த இளைஞர்.

அடுத்ததாக மேற்கு வங்கத்தில் இருவாரங்களுக்கு முன்பு ஓடும் ரயிலில் ஒரு கும்பல் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டுக் கொண்டே வந்தது. அவர்களுடன் அதே ரயிலில் ஹஃபீஸ் முகமது ஷாருக் என்பவரும் பயணம் செய்தார். தலையில் குல்லா அணிந்திருந்த அவரிடம், ‘ஏன் குல்லா அணிந்திருக்கிறாய்?’ என்று அந்தக் கும்பல் கேட்டுள்ளது. ஹஃபீஸ் அமைதியாக இருந்துள்ளார். அந்தக் கும்பல், அவரைத் தாக்கத் தொடங்கியது. தாக்கிக்கொண்டே, ஹஃபீஸை ‘ஜெய்ஸ்ரீராம்’ என முழக்கமிடச் சொல்லி, அந்தக் கும்பல் வற்புறுத்தி இருக்கிறது. அதற்கு மறுத்த ஹஃபீஸை ஓடும் ரயிலிலிருந்து அந்தக் கும்பல் கீழே தள்ளிவிட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, ஹஃபீஸ் உயிர் பிழைத்தார்.

கடந்த 18-ஆம் தேதி, ஜார்க்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில் 24 வயது இளைஞர் அன்சாரி என்ற 24 வயது இளைஞரைத் திருடன் என்ற சந்தேகத்தில் அவரைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்து கடுமையாகத் தாக்குகிறது ஒரு கும்பல். அந்த இளைஞரை ‘ஜெய்ஸ்ரீராம்’, ‘ஜெய் ஹனுமான்’ என்று சொல்லுமாறு அந்தக் கும்பல் கட்டாயப்படுத்தியுள்ளது. அன்சாரி மயங்கிச் சரியும்வரை, சுமார் ஏழு மணி நேரம் பலமாகத் தாக்கியுள்ளனர். தாக்கப்பட்டதிலிருந்து 18 மணிநேரம் கழித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்சாரி, சிகிச்சை பலன் அளிக்காமல் ஜூன் 24-ஆம் தேதி உயிரிழந்தார்.

பா.ஜ.க. ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், நடந்த இந்தக் கொடூர நிகழ்வு தன் மனதில் காயத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதற்காக அந்த மாநிலத்தையே கொலைக்களமாக சித்தரிப்பது நியாயமல்ல என்றும் மாநிலங்களவையில் முதலைக் கண்ணீர் வடிக்கிறார் மோடி. ஆனால் இப்படி பசப்பலான வருத்தம் தெரிவிக்கும் வார்த்தைகளை மோடி பேசுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னும் அவர் இத்தகைய பாசாங்கான வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். ஆனால் சிறுபான்மையினர்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இந்தக் காவி பயங்கரவாதக் கும்பல்கள் எந்தத் தடையுமின்றி தங்கள் வன்முறைகளை விரிவுபடுத்திக்கொண்டே வருகின்றனர். இவர்களுக்கு எதிராக எந்த உறுதியான நடவடிக்கையும் இல்லை. கடந்த ஐந்தாண்டுகாலத்தில் இந்தக் குற்றச் செயல்களின் பட்டியல் மிக நீண்டது. அதன் அடுத்த கொலைக் கருவிதான் ‘ஜெய் ஸ்ரீராம்’ எனச் சொல்லச்சொல்லி நடக்கும் தாக்குதல்கள்.

நாடாளுமன்றத்தில் நிறைந்திருக்கும் மதவாத கும்பலுக்கு எதிராக திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் கடுமையாக போராடவேண்டிய நிர்ப்பந்தத்தை காலம் அவர்களுக்கு அளித்திருக்கிறது. அந்தப் போராட்டத்தை அவர்கள் ஏற்கனவே துவங்கிவிட்டார்கள். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் குரல் இந்தத் தேசத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் குரலாக இருக்கிறது. அதனால்தான் ‘தமிழ் வாழ்க’ என தமிழக உறுப்பினர்கள் சொன்னால் ‘பாரத் மாதாகீ ஜே’ என்கிறார்கள். பாரத் மாதாவை அவர்கள் இந்துத்துவா மாதாவாக, இந்தி மாதாவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது இந்த வெறிக்கூச்சலில் தெளிவாகத் தெரிகிறது. இந்து, -இந்தி,- இந்தியா என்ற சித்தாந்தத்தை அரசியல்ரீதியாக திராவிடம் முற்றாக நிராகரித்து தோற்கடித்துவிட்டது என்பதன் வெறுப்பும் ஆத்திரமும் அந்த வெறிக்கூச்சல்களில் மண்டிக்கிடக்கின்றன.

பாசிசத்தின் கரங்கள் நீண்டு விரிந்துகொண்டிருக்கின்றன. அதற்கு ஒரே தடை அரணாக இப்போது தென்னிந்தியா மட்டுமே, முக்கியமாக தமிழகமே இருக்கிறது. அந்தத் தடை அரணை உடைக்கவே பா.ஜ.க. தமிழகத்தில் அதிமுகவைப் பயன்படுத்தி, பல உதிரிக் கட்சிகளையும் தனிநபர்களையும் பயன்படுத்திப் பல நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது பா.ஜ.கவிடம் அல்ல, அவர்களுக்கு மறைமுகமாக உதவும்வகையில் திராவிட அரசியலை சிதைக்க முயலும் சக்திகளிடமே.

இந்தக் காலம் நீதியின் காலமல்ல. நீதிக்கான போராட்டத்தின் காலம்.