“சார் நாங்க ப்யூர் வெஜிடேரியன்.” இந்த வாக்கியம் நம்மைத் துணுக்குறச் செய்யுமா? அப்படி ஒன்றும் தவறான, வன்கொடுமை குற்றத்திற்குரிய வாக்கியம் ஒன்றுமில்லையே இது என்றுதானே கருதுவோம் ? ஒருவேளை இப்படிப் பேசுபவர்கள் சூதுவாதில்லாத ஆட்களாகவே பட்டாலும், இதன் பின்னர் அசிங்கமான மதவெறி ஒளிந்துள்ளது என்கிற உண்மையைத்தான் பார்க்கவிருக்கிறோம் !

நெய் ரோஸ்ட்

மதத்தை, சாதியை ஒருபோதும் வாக்குச் சேகரிக்கப் பயன்படுத்தக் கூடாது என்று கடுமையாக எச்சரித்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். போக, மத நல்லிணக்கத்திற்கெதிராகப் பரப்புரை செய்வோரை இப்போது தண்டிக்கவும் ஆரம்பித்திருக்கிறது. முதல் பலி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். மூன்று முழு நாட்களுக்கு அவர் பரப்புரை செய்யவோ, பேசவோ, எழுதவோ கூடாதெனக் கடுமையாக உத்தரவிட்டிருந்தது தேர்தல் ஆணையம். ஆனால் வெளிப்படையாக சமூக ஊடகங்களில், வலைத்தளங்களில் நடைபெறுவது என்ன தெரியுமா?

பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனீயர்கள் நிரம்பியிருக்கும் வலைத்தளக் குழு ஒன்றில் பெரும்பாலோர் இந்துத்துவர்களே. அவர்களில் நிறையப் பேர் பதிவிடும் பதிவுகளின் சாரமே வெளிப்படையாக, “இந்துக்களே திமுகவுக்கு ஒருபோதும் வாக்களிக்காதீர்கள்” என்றே இருக்கும்! கொஞ்சம் கூடுதலாக, “சூடு சுரணை இருந்தால் இந்துக்கள், இந்துவிரோத திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது” என்கிற மிரட்டல் தொனி பதிவுகளும் நிறைய வரும்.

இந்த வகையிலான மதச்சார்பு பிரச்சாரத்தின் நோக்கம், ‘திமுகவில் இந்துக்களே இல்லை, சிறுபான்மையினர் மட்டும்தான் அதன் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்’ என நிறுவ முயல்வதுதான். இவர்கள் இப்படிச் செய்ய, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசியர்கள் போன்றோர், ‘திமுக அபிமானிகள் எல்லோருமே மொழிச் சிறுபான்மையினர், அவர்கள் தமிழர்களே அல்ல, வந்தேறிகள் அல்லது வடுகர்கள் ’ என்று காள்காளெனக் கத்திக் கொண்டிருப்பார்கள்!

மதத்தின் பெயரால் நடக்கும் சமூகத் தீங்குகள், அவலங்கள், மதவாதிகளால் தொடர்ந்து பரப்பப்படும் பிற்போக்குவாதங்கள், புராணங்களிலிருந்து மேற்கோள் காட்டப்படும் அபத்தங்கள், இவைகளையெல்லாம் இன்று வெளிப்படையாக எதிர்த்துப் பேசிவிட முடியாதளவு மதவெறியர்கள் தலைவிரித்தாடும் போக்கு எங்கெங்கும் காண முடிகிறது. காரணம், அவர்களுக்குப் பேச, எழுத கிடைக்கும் அபரிமிதமான தளங்கள்!

அறிவியல் வளர்ச்சியால் இத்தகைய வாய்ப்பு கிட்டிய இவர்கள் செய்வதென்னமோ, அப்படியே அதற்கு நேர்மாறான பிற்போக்குவாதங்களையும், மூட நம்பிக்கைகளையும் விதைப்பது, மாற்றுக் கருத்தாளர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களைப் பயமுறுத்துவது, கலவரங்களைத் தூண்டுவது, கலவரங்களின் பின்விளைவுகளைத் தங்களுக்குச் சாதகமான கட்சிகளுக்கு வாக்குகளாக மாற்றுவது போன்ற ஈனச் செயல்கள்!

பட்டர் பன்னீர் மசாலா

தமிழகத்தில், சென்னை வேப்பேரி, புரசைவாக்கம், கீழ்பாக்கம், இப்போது பெரம்பூர் வரை பரவியிருக்கும் ஒரு புதுக்கலாச்சாரம் வெஜிடேரியன் அபார்ட்மென்ட்ஸ்!
முதலில் இது செங்குன்றம் பகுதியில் பெரிய அளவில் இடங்களை வாங்கி, அங்கு ஜைனக் கோயில்களை எழுப்பிய ஜைனர்களால் தோற்றுவிக்கப்பட்டது எனலாம். சௌகார்பேட்டை மார்வாடி மற்றும் குஜராத்தி உட்பட பிற ஜைனர்கள் கூட்டாக ஓர் அறக்கட்டளையை நிறுவி, நன்கொடைகள் வசூலித்து. செங்குன்றத்தில் பிரம்மாண்ட இடத்தை வாங்குகிறார்கள். முதலில் அங்கு ஓர் ஆலயம் எழுப்பப்படுகிறது. பிறகு மிச்சமிருக்கும் இடங்களில் அடுக்ககங்களைக் கட்டி அவர்கள் மட்டுமே அதிலிருக்குமாறு செய்ய ஒன்லி ஃபார் ஜெயின்ஸ் என்கிற வார்த்தைகளுக்கு மாற்றாக ஒன்லி ஃபார் வெஜிடேரியன்ஸ் என்று அறிவிக்கிறார்கள். அங்கு வெஜிடேரியன் நகர் என்ற ஒன்றையே உருவாக்கியும் விட்டார்கள்.

பிறகுதான் இந்தக் கலாச்சாரம் அப்படியே வேப்பேரி, புரசைவாக்கம், பெரம்பூர் போன்ற வட மற்றும் மத்திய சென்னை பகுதிகளுக்கும் பரவியது. காரணம், சௌகார்பேட்டையின் குறுகலான தெருக்களின் இண்டு இடுக்குகளில் சகித்து வாழ்ந்துவந்த பழைய தலைமுறை ஆட்கள் போலல்லாது, செழிப்பாய் வளர்ந்த அவர்களின் புதிய தலைமுறை மக்கள், வளர்ந்த பின்னணி பற்றிய எந்த அக்கறையும், புரிதலுமின்றி, மதத்தூய்மைவாத கொள்கைகளுக்காட்பட்டு, தன்னாட்கள், தன் மதம், என்று வட இந்தியக் கலாச்சாரத்தை இங்கு மீட்டுருவாக்கம் செய்ய முயல்கின்றனர். இவர்களால்தான் வெஜிடேரியன் அப்பார்ட்மென்ட் கலாச்சாரம் வெற்றிகரமாகப் பரவி வருகிறது

நவீனகால அக்ரஹாரங்களாக இப்போது இந்த வெஜிடேரியன் அடுக்ககக் கலாச்சாரம் தோன்றியிருப்பதாகத்தான் அவதானிக்க வேண்டியுள்ளது. காரணம், இதில் ஒருபோதும் ஆமா, நாங்களும் ப்யூர் வெஜிடேரியன்கள்தான் என்று இஸ்லாமியர்களோ, கிருத்துவர்களோ, ஒடுக்கப்பட்ட இனத்து மக்களோ வீடுகளை வாங்கிவிட முடியாது. பிற்பட்ட இன மக்கள் கூட எவ்வளவு பெரிய பணபலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கும் வீடு கிட்டாது. மிக எளிதாக அவர்களைத் தவிர்த்துவிட, அந்த ஒன்லி ஃபார் வெஜிடேரியன்ஸ் வாக்கியங்கள் உதவும். பார்ப்பனர்களுக்கோ, முற்பட்ட வகுப்பிலிருக்கும் பார்ப்பனீயர்களுக்கோ இந்த விலக்கு இருக்காது. இவர்களை ராஜஸ்தான், குஜராத், வட இந்திய ஜைனர்கள் உச்சிமுகர்ந்து வரவேற்று, தங்களுடன் இணைந்து வாழ வரவேற்பார்கள்!

சென்னை புரசைவாக்கத்தில் மிகப் பிரபலமான திரையரங்கமாக இருந்தது அபிராமி காம்ப்ளெக்ஸ். வெறுமனே திரையரங்கமாக மட்டுமல்லாது அது பிரபல மாலாகவும் மிளிர்ந்தது. புதுப்படங்களைத் திரையிட்டு வசூல்களைக் குவிப்பதில் சிறந்து விளங்கிய திரையரங்கம். பனி உலகம், குழந்தைகளுக்கான பொழுது போக்கு விளையாட்டு அரங்கம் என எப்போதுமே நெரிசலாக, அதிக வருவாயை அள்ளித்தந்த ஒன்றாகவே அந்த அபிராமி மால் இருந்தது. ஆனால், இந்த வெஜிடேரியன் மக்களுக்கு, அந்த மால் இருந்த நகரின் மையப்பகுதி மற்றும் இதர வசதிகள் உறுத்தியிருக்க வேண்டும். அபிராமி மால் ஓனரைச் சம்மதிக்கவைத்து, அந்த மொத்த மாலையே மூடி விட்டார்கள். அதில் எத்தனை ஆயிரம் பேர் வேலை பார்த்தார்களோ? அவர்களின் எதிர்காலம் என்னவானதோ? அதைப்பற்றி யாருக்கு என்ன கவலை? அங்கு பதினான்கு மாடி உயரத்திற்கு ஓர் அடுக்ககம் வரப்போகிறது. அதில் பல தியேட்டர்கள், மால் எல்லாமே உருவாகவிருக்கிறது, மகிழ்ச்சி.

ஆனால், அந்த மகிழ்ச்சி வெஜிடேரியன் மக்களுக்கு மட்டுமேயானது. ஆமாம், அங்கு வீடுகள் வாங்கி வசிக்கப்போகும் மக்கள் ப்யூர் வெஜிடேரியன்ஸ் மட்டுமே. ஓனரே அங்கு வீடு வாங்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் என்ன ஓர் அவல நகைச்சுவை எனில், அங்கு அந்த வீடுகள் மட்டுமே வெஜிடேரியர்களால் அலங்கரிக்கப்படும். சினிமா தியேட்டர்களில் சிக்கன் பப்ஸ் கிட்டுமாம். மால்களில் தலைப்பாகட்டி, கே.எஃப்.சி.க்களுக்கு அனுமதி உண்டாம்!

இந்த வணிக நுட்பங்களையும், மதத் தூய்மைவாதங்களையும் எளிதாய் நம்மால் உணரமுடியும். எனில், அரசால் உணர முடியாதா? பிறகெப்படி இந்த நவீன அக்ரஹாரங்கள் உருவாக இவர்கள் அனுமதிக்கிறார்கள்? பிராமணாள் மட்டும், ஜைனர்கள் மட்டும் என்று போட்டால்தானே இன மதவாதமாகிறது? அதனால்தான் ஒன்லி வெஜிடேரியன் என நாசூக்காக நமக்கு நமுட்டுச் சிரிப்போடு சொல்கிறார்கள்.

வெண்பொங்கல் மெதுவடை

மக்கள் ஒருகாலத்தில் இப்படி மதம் சார்ந்து, இனம் சார்ந்து, சாதி சார்ந்து, அவரவர் அவரவர் இடங்களில்தான் வசிக்க ஆரம்பித்தார்கள். இன்றளவும் கிராமங்களில் இத்தகைய நடைமுறைதான் இந்தியா முழுக்கவே உண்டு. ஆனால், வந்தேறிகளால் நிரம்பிக் கிடக்கும் அனைத்து இந்திய நகரங்களிலும் இத்தகைய வெளிப்படையான வேற்றுமைகளைப் பார்க்க முடியாது. அட, இதர இந்திய நகரங்களை விடுங்கள். தமிழக நகரங்களில் அவ்வளவு எளிதாகப் பகுத்தறிய முடியாதளவுதான் வேற்றுமையில் ஒற்றுமை பரவலாக அறியப்பட்டிருந்தது. மதம் பீடித்த மதவாதிகளால்தான் இத்தகைய கலாச்சாரங்கள் இங்கு வேர்விட்டன. அது பார்த்தீனியமாய் இப்போது பரவி அசிங்கமாக வெஜிடேரியன்ஸ் ஒன்லி என மருவிக்கிடக்கிறது!

சகிப்புத்தன்மையற்ற இப்போக்கு, மக்களாட்சிக்கு மிகவும் ஆபத்தான ஒன்று. வைரமுத்து ஆண்டாளைப் போற்றிப் புகழ்ந்த நூறு வரிகளை விட்டுவிட்டு, ஒரே ஒரு மேற்கோள் காட்டிய வரியை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அவர் ஆண்டாளை அவமதித்துவிட்டார் என்பதும் ;

தேவி என்று பெண்களை உவமைப்படுத்தி, அவர்களைத் தெய்வங்களாய் போற்றுவோம், ஆனால் நாம் உருவாவதற்குக் காரணமான தீட்டை மட்டும் வெறுக்கலாகுமோ? என்கிற நியாயமானதொரு கேள்வியை மனுஷ்ய புத்திரன் கவிதையாக்கினால், எந்த ஒன்றையுமே உள்வாங்காமல் எங்கள் தேவி என்கிற பெண் தெய்வத்தை ஒரு இஸ்லாமியர் இகழ்வதா என்றும்;

பெண்கள் நிர்வாணமாய் குளிப்பதை ஒளிந்திருந்து வேடிக்கை பார்ப்பதும், கரையிலிருந்த அவர்களின் ஆடைகளைக் கவர்ந்து கெஞ்சவிடுவதையும் ஓவியமாக்கி ஒவ்வோர் இல்லங்களிலும் மாட்டி வைத்திருக்கிறோமே? நமக்கு பொள்ளாச்சி சீண்டல்களுக்குப் பொங்க ஏதேனும் அருகதை உண்டோ என்று ஆசிரியர் வீரமணி கேட்டால் அய்யய்யோ, எங்க கிருஷ்ணரையே பொம்பளப் பொறுக்கின்னுட்டார், அவர் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு கேட்கிறார், எனவே இந்து சொந்தங்களே நீங்க திமுகவுக்கா வாக்களிக்கப் போகிறீர்கள் எனச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் திரித்து, தினமலர், தினமணி போன்ற ஊடகங்களே பொய் பரப்புவதும்;

மத ரீதியிலான பிற்போக்குத்தனங்கள் அன்றி வேறென்ன? நேரடியான மிரட்டல் அன்றி வேறென்ன? கருத்துச் சுதந்திரத்தை அடியோடு நசுக்கி, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு போன்றவைகளை இந்த மண்ணை விட்டே அகற்றத் துணியும் முரடர் கூடமாக நம் நாடு மாறிவருகிறது அன்றி வேறென்ன? ஆட்சியாளர்களே வெட்கமின்றி இதற்கெல்லாம் துணை போவதால்தான் இத்தனை பின்னடைவு? பெரியாரையும், அம்பேத்கரையும் உள்வாங்கிய ஆட்களால் இந்த மண் நிரம்பியிருப்பதால் மட்டுமே, இங்கு இன்னும் கலவரங்களோ, அத்துமீறல்களோ பேரளவு உண்டாகவில்லை, ஆனால் இதெல்லாம் எத்தனை நாளைக்கு? கையாலாகாதவர்களே மீண்டும் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால்? நாம் மிக வேகமாக 1719க்கோ, 1819க்கோ போய்விடுவோம். நம்ப மாட்டீர்கள்தானே? வாங்க பொன்பரப்பிக்குப் போவோம் !

இட்லி வடகறி கெட்டிச்சட்னி

பொன்பரப்பியில், எதற்காக ஒடுக்கப்பட்டவர்களின் வீடுகளை ஒரு கும்பல் சூறையாடுகின்றன? அந்தக் கூட்டத்தில் சிறுவர்களெல்லாம் இருக்கிறார்களே அவர்கள் யார்? எங்கிருந்து வருகிறது அவர்களுக்கு அந்தத் துணிவு?

பொன்னமராவதியில், வேறொரு காட்சி. அங்கு பெண்கள் வயது வித்தியாசமில்லாமல், கைகளில் துடைப்பக் கட்டைகளுடன் ஊர்வலமாகத் திரண்டு வருகிறார்கள். அதிலிருந்த ஆண்கள், காவல் நிலைய வாகனங்களைச் சூறையாடுகிறார்கள். பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துகிறார்கள். என்ன துரோகம் நிகழ்ந்தது அம்மக்களுக்கு?

மத நல்லிணக்கம் பற்றி நமக்கு எந்தக் கவலையுமில்லை. அவ்வப்போது சில சலசலப்புகள் தோன்றியிருந்தாலும், மதச் சகிப்புத்தன்மையைப் பொறுத்தவரை நம் மண் அமைதிப் பூங்காதான். ஆனால், மதம் பெற்ற சாத்தான் பிள்ளையான சாதி இணக்கம் மட்டும் நம்மிடையே அந்தக் காலத்திலிருந்து சவால்தான். எத்தனை ஆர்வலர்கள் பாடுபட்டும், அதை மட்டும் சாதிக்க விடாமல் கெடுத்து வருகிறார்கள் சாதி வெறியர்கள். அதற்குப் பெரிதும் உதவுவது இந்துத்துவமே!

இந்துத்துவர்கள்தான், மதச் சலசலப்பைக் கொண்டு இங்கு சாதிக்க முடியவில்லையே, இதைக் கிளறி விட்டாவது ஏதேனும் பலனறுக்கலாம் என்றே ஏதேதோ உசுப்பி விடுகிறார்கள். அப்படி விளைந்ததுதான் பொன்பரப்பி சம்பவமும், பொன்னமராவதி சம்பவமும். சக இனமான தன்னினத்தையே அரசியலுக்காகத் தன் குழந்தை குட்டிகளோடு அடிக்கப் பாய்பவனை எது கெடுத்தது? மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்திலிருந்து வந்த இவனைவிட அடிபடுபவன் தாழ்ந்தவனாம். அப்படி இவர்களை ஆக்கி வைத்தது யார் என இத்தனை வருடங்களில் அவன் பாடம் படித்திருக்க வேண்டாமா? அவனுடைய தலைவர்கள் அதை அவனுக்கு போதித்திருக்க வேண்டாமா?
ஆனால், அவன் அப்படியெல்லாம் அறிந்துவிடக் கூடாதென அந்தத் தலைவர்கள் பரம்பரை பரம்பரையாகப் பாடுபட்டு வருகிறார்கள் என்பதுதான் கசக்கும் உண்மை. அதனால்தான் அவர்களின் தலைவர்கள் சிறிதும் கூசாமல், மதவாதக் கட்சிகளுடன் கைகோர்க்க முடிகிறது!

இந்தியாவின் மக்களாட்சி இவ்வளவு திடத்துடன் வெற்றிகரமாக இயங்க ஒரே காரணம் நம்முடைய மத நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை, பன்முகத்தன்மை. இதையெல்லாம் இந்த ஐந்தே வருடங்களில் பெரிதும் சிதைக்க சில சக்திகள் கைகோர்த்து வெற்றிகரமாகச் செயல்படுவதன் வெளிப்பாடாகத்தான் இத்தகைய நடவடிக்கைகள் பெருகுகின்றன. அதனால் வெளிப்படையாகத் துணிந்து, நீ எங்களுடன் சேர்ந்து வசிக்க முடியாது, உனக்கு எங்கள் வாக்குகள் இல்லை, எங்களையே எதிர்த்துப் பேசுகிறாயா, உன் வீட்டை உடைப்பேன் என்றெல்லாம் இவர்களால் நம்மை வலம் வர முடிகிறது.

நாம் இல்லாமல், நம் தயவில்லாமல் அரை நாள் கூட வாழ லாயக்கற்றவன்கள் எல்லாம், நம்மை நிராகரித்து வாழுமளவுக்கா நாம் தாழ்ந்து போனோம்? விரைவில் இதற்கெல்லாம் விடிவு வரும். மீண்டும் இந்த மதவெறியன்களெல்லாம் கொட்டம் அடங்கி, தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்து வாழச் செய்ய வேண்டும். அந்தளவு கடுமையான பாடங்களை நாம் அவர்களுக்குப் போதிக்க வேண்டும். அதை இங்கு செய்துவிட்டோம். வடக்கிலும் செய்யத்தான் போகிறார்கள், நல்லதே நடக்கும். நாளை நமதே. நாடும் நமதே!