சாமியை முதல் தடவை எங்கே பார்த்தேன் என்பது நன்றாக நினைவில் இருக்கிறது. காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு எதிர்ப்புறமிருந்த ஒரு டீக்கடை வாசலில், பழைய செய்தித்தாளை விரித்து, அதில் உளுந்து வடையை உதிர்த்துப் போட்டுக் கொண்டே காகம் போல ஒலியெழுப்பினார். நிமிடங்களில் அவரைக் காகங்கள் சூழ்ந்து கொண்டன. சாலையில் இந்தப் பக்கத்திலிருந்து பார்த்தால் போதகர் சுவிஷேசம் சொல்லிக் கொண்டிருப்பது போலவும் அவரைச் சூழ்ந்திருந்த காகங்கள் தேவஜனங்கள் போலவும் தெரிய நான் ’இந்த ஆளிடம்தான் வேலை கேட்கப் போகிறேனா?’ என்கிற யோசனைக்குப் போனேன். திடீர் திடீரென்று ஒரு காக்கை எழுந்து இரு கரங்களையும் உயர்த்தி ‘கர்த்தருக்கு ஸ்தோத்திரம்’ என்று அமர்ந்தது. பாறையுச்சிப் பருந்து வெயிலுக்கு இறக்கையை விரித்து நிற்பது போதகரின் தோரணை. காக்கைகளிடம் ’தனித்திறன் வெளிப்படுத்துதலே’ இல்லை. உணவுக்காக அவ்வப்போது தனியாகக் கரைந்தாலும் பெரும்பாலும் கோரஸ்தான். தரையில் தவ்வித் தவ்வி குழுநடனம்தான். சிறு பிள்ளைகள் காகத்தை அவ்வளவு எளிதாக வரைந்து விடுகின்றனர். கூட்டல் குறியோ, பெருக்கற்குறியோ தப்பாகப் போனாலும் காகங்களின் கால்களுக்குப் பொருந்திவிடுகிறது, பெரியமூக்கும், பாதிசதுரத்தலையும் கோமாளித் தோற்றத்தை உண்டாக்கி விட, காகங்கள் தலைமுடியை சரியாக வெட்டிக் கொள்ளாத பையனைப்போலவும் இருக்கின்றன. அட, இந்த ஆளுக்கும் தலைமுடி அப்படித்தான் இருக்கிறது. வணங்காமுடி!

“என்னல்லாந்தெரியும்? ”

“ஒண்ணுந்தெரியாது, ஆனா, எத சொல்லிக் குடுத்தாலும் கத்துக்கத் தயாரா இருக்கறன்” என்றேன். கத்தரி சிகரெட்டை பற்ற வைத்தபடியே கிண்டலாக சிரித்துக் கொண்டார் அந்த ஆள்.

“வண்டி ஓட்டத்தெரியுமா?” என்று சிகரெட் புகையப் புகைய அந்தாள் கேட்ட மாத்திரத்தில் தலையாட்டினேன். சாவியை எறிந்தார். பிடித்தேன். “எடு’’ என்றார். நான் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டேன் என்பதைப் புரிந்துகொண்டேன். அவருக்கு பதிப்புதான் தொழில். பூச்செண்டுகளில் வைக்கிற இரண்டங்குல வாழ்த்து அட்டை துவங்கி முழுச் சுவரொட்டி அளவிலான விஷயங்கள் வரையிலான பல்வேறு நிறுவனங்களின் தேவை நிமித்த உத்தரவுகள் அந்தாளின் கைவசமிருந்தன. என்னைக் கூடவே வைத்துக் கொண்டார். நிறுவனங்களின் உத்தரவுகளை நேரில் விபரங்களுடன் கேட்டுக்கொள்ள, விநியோகம் செய்ய, பெரும்பொட்டலங்களாக கட்டி அனுப்ப என்று பலவாறாக பயன்படுத்துவார். பெரும்பாலான சமயங்களில் அவரது இரண்டு சக்கர வாகனத்தின் ஓட்டுனராக இருப்பேன். சில சமயங்களில் அந்தாளே ஓட்ட, பின்னே அமர்ந்து ‘உம்’ கொட்டிக்கொண்டிருந்தால் போதும். பேச்சு, பேச்சு, பேச்சு. பேசிக்கொண்டே இருப்பார். நானும் இரண்டுமுறை ஆர்டர்கள் எடுத்தேன். இரண்டுமே மாபெரும் தோல்வி! முதல் ஆர்டர் ஒரு நகைக்கடைக்காரர் தந்தது. சட்டைப்பையில் வைத்துக் கொள்ளும் அளவிலான விநாயகர் படம். அதற்குக் கீழே வாடிக்கையாளருக்கு சகல செல்வமும் கிடைக்க ஒரு வாழ்த்தும், செய்கூலி சேதாரமில்லை என்பதைத் தனித்த நிறத்திலும் போட்டுவரச் சொல்லியிருந்தார். ஐயாயிரம் ரூபாயை அச்சாரமாகவும் கொடுத்திருந்தார். அவருடைய ஒரே நிபந்தனை ’விநாயகரின் பின்னணி நிறம் கருநீல நிறத்தில் இருக்க வேண்டும்’ என்பதுதான். வடிவமைக்கும்போது நான் இந்தாளிடம்,

“கருநீலந்தா வேணுங்கறாருங்க”

என்று மூன்றுதடவை அடிக்கோடிட்டுச் சொன்னேன்.

“அதெல்லாம் வந்துரும்யா ”. என்றார்.

சிவகாசியிலிருந்து வந்திருந்த பார்சலைப் பிரித்துப் பார்த்தால் அவ்வளவு அழகாக வந்திருந்தது படம். விநாயகரின் ஆபரணங்களில் எல்லாம் சொர்ணப்பூக்கோலங்கள். ஆயினும் பயன் என்ன? பின்னணியில் வந்திருந்தது ஆகாய நீலம் ! பாதாளத்துக்கும் கேட்கும்படி பெருமூச்சு விட்டேன்.

“கொண்டுபோய் குடுத்துட்டு, காச வாங்கிட்டு வா” என்றார்.

நான் தீர்மானமாக சொன்னேன்:

“பணம் வராதுங்க”

“ஓஹோ, ஏன்?”

“இது கருநீலமில்லை… அவரு ஒத்துக்க மாட்டாரு… கருநீலத்துல ஏதோ செண்டிமெண்ட் இருக்குது அவருக்கு”

“நீயே முடிவு பண்ணிக்காத…”

“கையிலிருப்பதை விற்பதுதான் நல்ல விற்பனையாளனுக்கு அழகு” என்பதாகச் சொன்னார். அதை ஏற்றுக்கொள்ளமுடியாமல்  “அது நம்முடைய தயாரிப்பாக இருந்தால் விற்றுவிடலாம். வாடிக்கையாளர், ஒரு பொருளை இன்னின்ன மாதிரிதான் வேண்டும் என்று கொடுத்த ஆர்டரில் நம்முடைய வசதிக்குத் தகுந்தாற்போல் மாற்றிவிட்டு அவர்கள் தலையில் கட்டப் பார்ப்பது சரியில்லை” என்றேன். சிகரெட்டைப் பற்றவைத்து விட்டு புகைக்கு நடுவே சுருங்கிய முகத்தோடு,

“ப்ச்… போய் பாரப்பா” என்றார் சலிப்பாக.

மின்னஞ்சலை சிவகாசிக்கு அனுப்புவதற்கு முன்பாக, நிறம் வைக்கும்போது இன்ன நிறத்துக்கு இவ்வளவு சதவீதம் வைத்தால் காகிதப் பதிப்பில் இந்த நிறம் வரும் என்பதெல்லாம் இந்தாளுக்கு அத்துப்படி. கோட்டை விட்டு விட்டதை, கவனக்குறைவை ஒப்புக் கொள்ள மறுக்கிறார். முதலாளி அல்லவா?

நகைக்கடை முன்பு வண்டியை மூட்டையோடு நிறுத்திவிட்டுக் கையில் ஒரு படத்தை மட்டும் எடுத்துக் கொண்டுபோய் முதலாளியிடம் நீட்டினேன். வாடிக்கையாளப் பெண்ணுக்கு மஞ்சள் துணிப்பைக்குள் வைத்த நகைப்பெட்டியை இரண்டு கைகளாலும் கொடுத்தபடியே என்கையிலிருந்த படத்தைப் பார்த்தவர், வெடுக்கென்று திரும்பிக் கொண்டார். அந்தப் பெண்ணிடம் படுசெயற்கையாகப் புன்னகைத்து

“நகை நெறைய சேரட்டும்மா… ஆகட்டும்மா… நல்லதும்மா…” என்றார் கும்பிட்டபடி.

மேசையின்மீது அந்தப் படத்தை வைத்தேன். கேரம் காயினைச் சுண்டுவது போல ஒற்றை விரலால் சுண்டினார். நான் பேச வாயெடுத்தபோது இடது உள்ளங்கையை முகத்துக்கு நேராகக் காட்டி வாயடைக்கச்செய்தார். நான் மெதுவாக,

“பதினாறாயிரம் படங்கள்” என்றேன்.

“அதுக்கு?”

எனக்கே என்மேல் பரிதாபம் வந்தது.

“அட்வான்ஸ திருப்பித் தர வேண்டாம் போ … நாசமாப் போச்சுன்னு நெனச்சுக்கறேன்…ஆனா… இனிமே இந்தப்பக்கம் வரவேண்டாம்.”

ஒரு இடைவெளி விட்டு,

“ஏமாத்திட்ட ” என்றார் எங்கேயோ பார்த்தபடி.

வெகுபாரமாய் தோளிலிருந்து நெஞ்சை அழுத்திய பதினாறாயிரம் அவமானங்களையும் சுமந்துவந்து அலுவலகத்தின் நடுத்தரையில் விசிறிவிட்டு வெளியே வந்து சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டேன். இந்தாள் வந்து “வுடப்பா… இதுக்கெல்லாம் கவலப்படக் கூடாது. இந்த மாதிரி எவ்ளோ பாத்துருப்பேந்தெரிமா?… டீ சாப்புடலாம் வா” என்று தோளில் கை போட்டு இழுத்தார்.

இருவரும் வண்டியில் பேசிக்கொண்டே காசோலைப் புத்தகத்தை எடுத்து வருவதற்காக வீட்டுக்குப் போனபோது அவரது மனைவியைப் பார்த்தேன். மாமிக்கு மஞ்சள் ஒளி பொருந்திய அழகு முகம். லட்சுமிகரம். தென்னைமரத்தின் ஓரத்திலிருந்த வேலிக்கல்லின் மீது சோற்றைக் கவளமாகப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தார். பொதுபொதுப்பான கைகள். கொஞ்சம் குண்டு லட்சுமி.

இந்தாள், “செக் புக்கப் பாத்தியா மாலினி” என்றார்.

“போயி… எங்க வெச்சீங்களோ அங்கயே பாருங்க.”

என்று மாமி திரும்பாமலேயே பதில் சொன்னதும், இந்தாள் உள்ளே போனார். இந்த இடைவெளியில் தென்னைமரத்திலிருந்து ஒரு அணில் இறங்கி மாமி வைத்த கவளத்தை தின்னத் துவங்கியது. நான் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தபோதே பிசைந்து கொண்டிருந்த கையை அசைக்காமல் அணிலை நோக்கி மாமி நீட்ட அணிலும் சர்வ சாதாரணமாக கையில் ஏறி பருக்கைகளைத் தின்பதும் மாமியின் தோளுக்கு ஏறி பின் மணிக்கட்டுக்கு இறங்குவதுமாய் இருந்தது. உள்ளங்கையில் நின்று இரண்டு முன்னங்கைகளாலும் தின்னும்போது மாமியைக் கும்பிடுகிறது போல ஒரு தோற்றம். சொல்லி வைத்தது போல கூரையின் மீதும் வேப்பங்குலையிலும் அமர்ந்திருந்த காகங்கள் கரைந்தன. தோணித்தகரம் அதிர மாமி அதிகாரமாய் குரல் எழுப்பினார் “ஏய்… இருங்க… வருவன்ல?” என்றபடியே அணிலுக்குத் தெரியாமல் மறைக்கிற பாவனையில் இடக்கையில் கிண்ணத்திலிருந்த சோற்றை அள்ளி விசிற காக்கைகள் தரையிறங்கின.

அந்தாள் வேகமாக வந்து ”வா போலாம்” என்றார்.

”கெடச்சிருச்சா?” என்று கேட்டேன். எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்க்கும் ஆவலாதி.

உதடு பிதுக்கி “ம்ஹீம்… ஏறுய்யா போலாம்” என்றார். வண்டியை இந்தாள் உதைத்த வேகத்திற்கு அணிலோ, காக்கைகளோ, அல்லது மாமியுமோ கூட சலனப்பட்டதாக தெரியவில்லை. கொஞ்ச தூரம் வந்து ஆவின் பால் டீக்கடையில் வண்டியை நிறுத்தி சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டார். “டீ சொல்லு” என்றார். சொன்னேன். புகையை ஊதியபடியே பேசினார்:

”எம் பையனுக்கு கண்டமிருக்கு, அவன சாமிக்குத் தத்து குடுத்து வாங்கணும்னு சொல்லிட்டாரு ஜோஸியரு! என்ன பண்றதுன்னே தெரியல ரெண்டு பேருக்கும். கோவிலுக்குப்போய் அவரு சொன்னபடி சாமி சன்னதியில குழந்தைய விட்டுட்டு தவுட்டக் குடுத்து வாங்கிட்டு வந்தோம்” ஒரு மிடறு, ஒரு இழுப்பு.

“ஆனாலும் கண்டமிருக்குன்னு சொல்லிட்டாரே ? உள்ளுக்குள்ள ஒரு பயம் இருந்து தின்னுட்டே இருக்கு. கோவிலுக்கும் வீட்டுக்குமா அலைஞ்சிட்டு இருந்தோம். ஒரு நாள் சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலுக்குப் போயிட்டு வரும்போது வீட்டு வாசல்ல விழுந்து கெடந்தது ஒரு அணில் குஞ்சு. அதை எடுத்து இங்க் ஃபில்லர்ல பாலூத்தி வளக்கத் தொடங்கிட்டா இவ… வீட்டுக்குள்ள ஓடியாடி வெளையாடறதும் இவமேல ஏறி எறங்கறதுமா நல்லா இருந்தது. பொசுக்குனு செத்துப் போச்சு… இவளுக்கு மனசே விட்டுப் போச்சு… திரும்பவும் கோவில் கோவிலா சுத்திட்டிருந்தோம். இங்கதான் ராம் நகர் கோவில்ல எதேச்சையா ஜோஸியரப் பாத்தோம். பேச்சுவாக்குல அணிலப் பத்தியும் பேச ஆரம்பிச்சு எல்லாத்தையும் சொன்னா… அந்த மனுஷன் ’புள்ளயோட கண்டத்தை இப்படி சரி பண்ணிட்டியே ராமா?’ அப்படீங்கறார்!… எனக்கு ஒண்ணுமே புரியல… என்னாங்க சொல்றீங்கன்னு கேட்டா… மிருகங்கள்ல அணிலையும் கீரியையும் மட்டுந்தானேங்க புள்ளைங்கன்னு சொல்றோம்.. அந்தப் புள்ள தானா வந்தது, அம்மா கையால சாப்பிட்டு, அம்மா புள்ளையாவே செத்தும் போச்சு. கணக்கு தீந்தது… போங்க உங்க புள்ள பொழச்சுட்டான்னாரு… எனக்கு ஒடம்பெல்லாம் சிலுத்துக்கிச்சு. சொன்னா நம்ப மாட்ட. அப்படியே ஒக்காந்து அழுதம்பாரு ஒரு அழுகை… ஐயப்பா ”பேசிக் கொண்டே இருந்தவர் சட்டென்று சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு “வா.. போலாம்… பார்சல் போடணும் மதுரைக்கு” என்றார்.

இரண்டாவது ஆர்டர் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு நிறுவனத்தினுடையது. அங்கே பொறுப்பில் இருந்தவர் ஒரு பெண். கண்டிப்பான டீச்சர் போலிருந்தார். உள்ளே போய் அமர்ந்ததும். “கோவிச்சுக்காம ஷூ, சாக்ஸ் ரெண்டையும் கழட்டி வெச்சுட்டு, பக்கத்துல பைப் இருக்கு. காலைக் கழுவிட்டு வந்துருங்க சார். இன்னிக்கு வெள்ளிக்கிழம” என்றார் மூக்கு நுனியைத் தடவியபடி.

ஆர்டரெல்லாம் கிடைத்தது. கம்ப்யூட்டர் சாம்பிராணிப் பெட்டிகள். இந்த முறை நிறம் வைக்கும்போது கூடவே இருந்து பார்த்துக் கொண்டேன்.

“ஒரு சாம்பிள் அனுப்பச் சொல்லுங்களேன்?’’ என்று இந்தாளிடம் கேட்டேன். \

“அட… ஒரு தடவை மிஸ்ஸாகும்பா… ஏதோ கவனக் கொறவு… இனி ஆகாது நீ தைரியமா போ… போய் சிட்டி டிராவல்ஸுல பார்சல் வந்துருச்சான்னு பாரு.’’

பெட்டிகள் வந்து சேர்ந்தன. நிறம் எல்லாம் சொல்லி வைத்தது போல் கச்சிதமாக இருந்தது. பத்து சாம்பிராணிகளை வைத்து மூட வேண்டிய கையகலப் பெட்டிகளுக்குப் பதிலாக பழைய படங்களில் டாக்டர் கையோடு கொண்டுவருகிற மருந்துப்பெட்டியின் அளவில் வந்திருந்தது!. அதில் பத்திருபது சம்பிராணிப் பெட்டிகளையே அடுக்கி வைக்கலாம்! நம்மாள் இந்த முறை அளவு வைக்கும்போது சொதப்பியிருக்கிறார். இருபதாயிரம் பெட்டிகள்! நான் சிகரெட்டைக் கடித்துத் துப்பினேன். அப்போதும் அசராமல் சமாளிக்கும் விதமாக,

“அப்படியே பெட்டியா தொங்க விடலாம்பா கடைகள்ல. விளம்பரம் ஆகும்ல?” என்றவரை முறைத்தேன். ‘முட்டாப் பயல எல்லாம் தாண்டவக்கோனே.’

“ஏங்க… பெட்டிக்கடையில தொங்க விடற சைஸா இது? சூட்கேஸத் தொங்கவிடற அளவுல கடைக இருக்கா நம்மூருல?”

காலைக் கழுவிட்டு உள்ளே வரச்சொன்ன டீச்சர் முகம் நினைவுக்கு வர நான் போக மறுத்துவிட்டேன்.

“நானே பாத்துக்கிறேன்” என்றார். தினமும் பார்க்கிறார். இன்றுவரை இருபதாயிரம் சூட்கேஸு’களும் அவர் பார்வைக்கு உட்பட்டவையாக இங்கேயேதான் இருக்கின்றன.

ஒரு நாள் ஆபீஸுக்குப் போனால் எங்க வீட்டுக்குப் போயி மாமிக்கு ஹெல்ப் பண்ணு. நான் பார்சல் போட்டுட்டு வந்தர்றேன்” என்றார். அங்கே மாமியும் சமையற்காரப் பெண்ணும் சேர்ந்து தென்னை மரத்தடியில் தொட்டியில் மண்ணை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். ”என்ன மாமி வேலை?… செடி வைக்கணுமா?” என்று கேட்டேன். இல்லையென்பதுபோல தலையாட்டிவிட்டு மண்ணை நிரப்புவதிலேயே குறியாக இருக்க நான், “தள்ளிக்கோங்க… நா பண்றேன்… என்னென்ன செய்யணும்னு… சொல்லுங்க” என்றதும் மாமி சொன்ன வேலை கொஞ்சம் வித்யாசமானது. சுவாரசியமானதுங்கூட. மாமிவீட்டு அடுப்படியிலிருந்து வரும் கழிவு நீர் வந்து சேருகிற இடம் தென்னை மரத்தடி. அங்கே விழுகிற பருக்கைகளுக்கும் அணில்கள் இறங்கும். மாமி உள்ளே இருக்கிறபோது காக்கைகள் அணில்களை கொத்தித் துரத்துவதாகவும். சில நேரங்களில் அணில்குஞ்சுகளையே தூக்கிக் கொண்டு போய்விடுவதாகவும் அதைத் தடுப்பதற்காக ஒரு யோசனையும் சொன்னார். மாமியின் யோசனைப்படி கொய்யா மரக்கிளையை வெட்டி, மண்தொட்டியில் நிறுத்தி, அதைத் தென்னை மரத்தோடு சேர்த்து வைத்து விடுவது. பின்னர் கொய்யாக் கிளைக்கும், தென்னை மரத்திற்குமாக சேர்த்து தரையிலிருந்து ஒரு கம்பி வலையைப் போர்த்துவது. அணில் தென்னைமரத்தினூடாக வேர் வரை இறங்கும்படியும் கொய்யாக் கிளையில் ஏறி விளையாடும்படியும் சிறு இடைவெளிவிட்டு போர்த்திவிட்டால் அணில்களைக் காக்கைகள் தொடமுடியாது. நான் ஒப்புக் கொண்டேன். வெல்டிங் செய்யும் ஒரு ஆளைக் கூட்டி வந்து கூடுதலாக ஒரு ஐடியாவையும் சேர்த்தேன். மாமி சொன்ன அமைப்பிலேயே காதல் பறவைகள் கூண்டு போல ஒரு கதவு வைத்தேன். அப்புறம் மாமி அணிலுக்கு சோறு வைப்பது எப்படி? கொய்யாக் கிளைகளில் உச்சிகளில் சில்வர் கிண்ணங்களை திருகாணிகளால் முறுக்கி இணைத்தேன். இப்போது தண்ணிர் ஊற்றலாம். வேர்க்கடலை வைக்கலாம். அணில் குஞ்சுகளிடமிருந்து காகங்களால் தட்டிப் பறிக்க முடியாது. மாமிக்கு அவ்வளவு சந்தோஷம்.

அந்த ஆளுக்குப் புகைப்படத் தொழில் தொடர்புகள் நிறைய இருந்தது. புகைப்படக் கருவிகள், அது சம்பந்தமான பொருட்கள் விற்குமிடங்களில் பதிப்பு சம்பந்தமான அனைத்தையும் அவர்தான் உற்பவித்துக் கொடுத்தார். காகித உறைகள், பில் புத்தகங்கள், நடிக, நடிகையர் படங்கள் பதித்த அஞ்சலட்டையளவிலான புகைப்படங்களின் ஆல்பங்கள், பெரிய ஆல்பங்கள், இத்தனையையும் இங்கிருந்து மதுரை, திருச்சி, மங்களூரு, பெங்களூரு, ஷிமோகா போன்ற நகரங்களுக்கு அனுப்பிவிட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருமுறை நேரில் போய் கணக்கு சொல்லி காசு வாங்கி வரவேண்டும். முதலில் மதுரை, பின்பு பெங்களூரு, அதற்கப்புறம் மங்களூரு என்று என்னை வசூலுக்கு அனுப்பினார். புத்திசாலித்தனமான கணக்குகளும், முட்டாள்தனமான முடிவுகளுமான விசித்திரக் கலவையாக அந்தாள் இருந்தார். நானாக இருந்தால் என்னை வேலைக்கு எடுத்திருக்கவே மாட்டேன். அப்படியே எடுத்திருந்தாலும் கூடவே கூட்டிக் கொண்டு திரிய மாட்டேன்.

மாலைகளில் இருவரும் மதுச்சாலைகளில் இருப்போம். அந்தாள் மது குடிக்கவும் நான் தொடுகறி வகைகளை சாப்பிடவும் ஆர்வமாயிருப்போம். பரிசாரகனைப் பார்த்து அதே 110 என்பார். கால்குப்பி பிராந்தியும், காய்கறித் துண்டுகளும் வரும். 110 ரூபாய் பில்லாகும். எப்போதும் 110-ஐத் தாண்டிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். இது அந்த ஆளுக்கு மட்டுந்தான். எதிரில் அமர்ந்திருக்கும் யாரும் எதை வேண்டுமானாலும் வரவழைத்து சாப்பிடலாம். ஒரு முறை சோதித்துப் பார்க்க வேண்டி முழுக்கோழியை வரவழைத்தேன். ‘ஒட்டகம் இருந்தால் கூட வரவழைத்துச் சாப்பிடு’ என்றார். ஆனால் சாப்பிட வேண்டும் என்பதில் கண்டிப்பாய் இருப்பார். நல்ல போதையில் பாடுவார். பெரும்பாலும் புத்தம் புதிய பாடல்கள்! இன்னும் சந்தோஷமாக இருந்தால் நாடக பாணியில், சுத்தச்செந்தமிழில் பேசுவார்

“சோழன் மகளை சேரன் மணந்தான்…

சேரனுக்கு ஒரு செல்வன் பிறந்தான்…

செல்வன் இந்தச் சிலையை மணந்தான்”

“தெரிந்த கதை தானே இது?”

“நடந்த கதையும் கூட?”

“நடக்காத கதை ஒன்றைச் சொல்லுங்கள்..”

“சுவைக்காது கண்ணே அது…. ”

நடு ரோட்டில் அரசர் அழும்பு செய்வார். மனிதர் நடுராத்திரிவரை பேசிப்பேசி எவ்வளவு தாமதமாகப் படுத்தாலும் காலை 4.30க்கு எழுந்து கொள்வார்.

பெங்களூரில் கௌதம் லாட்ஜில் அறையெடுத்தோம். தானே நேரில் வந்தால் நிலுவையிலிருக்கிற பழைய பாக்கியையும் வசூல் செய்து விடலாம் என்பது இந்தாளின் திட்டம். கீழே இறங்கி தேநீரும் சிகரெட்டுமாக நின்று கொண்டிருந்தபோது இடது பக்கத்தில் ஒரு துணிக்கடையின் ஷோரூம் வாசலில் இட்லிக்கடை பரபரத்த விற்பனையில் இயங்கிக் கொண்டிருந்தது. குலையாத மார்பகங்களுடனான நடுவயதுள்ள ஒரு பெண் இட்லி ஊற்றிக் கொண்டிருந்தாள். எட்டிப் பார்த்தால் இட்லி அல்ல! இட்லி மாவை ஆப்பம் ஊற்றுவது போல் ஊற்றி மூடிவைத்தாள். ஓரிரு நிமிடங்கள் கழித்து வெந்ததை எடுத்து நின்றபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு வழங்க, இதென்னது? ’தோசையளவு அகலம் இட்லியளவு கனம்’ என்று வியந்தேன்.

“அதுதான்… தட்டே இட்லி” என்றார் இவர்.

“சரி… வா வா… சலூன் எதாவது இருந்தா ஷேவ் பண்ணிட்டு குளிச்சுட்டு வருவோம்” என்றார். நடந்தோம். அந்த சாலையின் ஓரத்தில் வெறிச்சோடிக் கிடந்த சலூனில் இந்தாளுக்கு ஷேவிங் துவங்கி பாதி முகம் தெளிந்தபோது உள்ளறையிலிருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். வெள்ளையில் சரிகை வைத்த கேரளத்துப் பாரம்பரியப் புடவை, தாராளமாக பெருத்திருந்த தனங்கள், ஈரக்கூந்தல். சந்தன சோப்பின் வாசனையுடன் இடையிடையே உரசியபடி போவதும் வருவதுமாக இருந்தாள், அவள் வெளிப்படும் போதெல்லாம் இந்தாள் தலையைத் திருப்பினார். நானும்தான். ஷேவிங் செய்து கொண்டிருந்தவன் சலித்துக் கொள்ளவேயில்லை. ஷேவிங் முடிந்தது. அவளைக் காணோம். இந்தாள் இறங்கி ரொம்ப நிதானமாக சட்டையை உதறி, தலையைவாரி, அவளைத் தேடிக் கொண்டிருந்தார்.

“நீயும் பண்ணிக்கோ” என்றார் சமயோசிதமாக.

எனக்கு சவரம் செய்தபடியே இந்தாளையே பார்த்துக் கொண்டிருந்த அவன் சரளமாக தமிழ் பேசினான்.

“குரு… தலைக்கு ஆயில் மசாஜ் பண்ணிக்கிறீங்களா? அவங்க பண்ணிவிடுவாங்க.’’

எனக்கு ரத்தம் தலைக்கேறியது.

“அப்படியா பண்ணிக்கலாமே!”

“டூ ஃபிஃப்டி.”

“ப்ச்” எனக்கு அது பிரச்சினை அல்ல என்பதுபோல அலட்சியமாக முகத்தை சுழித்து ஒலியெழுப்பினார். அவன் அவளைக் கூப்பிட்டான். முன்பைவிடவும் மாராப்பு விலக்கப் பட்டிருக்கிறதோ என்று நான் சந்தேகித்தேன். பக்கத்து இருக்கையில் இந்தாள் அமர்ந்தார். அவள் இந்தாளுக்குப் பின்புறமாக வந்து தலையை ஆதரவாகப் பிடித்து இருக்கையில் பொருத்தி மார்பகங்களை இடது வலதாக முட்டுக் கொடுத்தாள். அவளது இரண்டு மார்புகளும் இந்தாள் தலையைத் தொட்டாற்போலிருக்க கோவில் தூணில் சாய்வது போல கண்களை மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார். இவன் வேறு என்னை சரியாகத் திரும்ப விடாமல் சிரத்தையாக சிரைத்துக் கொண்டிருக்கிறான். ’ஒரு ரூபாய் தேங்காயெண்ணையில் 250 ரூபாய்க்கு மஸாஜா?’ என்று எழுந்த கேள்வியை கழுத்தைத் திருகி உட்கார வைத்தேன். எனக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறதே? நான் இறங்கும்போது இந்தாளும் இறங்கினார். இவன் இப்போது தலையைச் சொறிந்தபடி சேவக பாவனையில்,

“அப்புறம் ஃபுல் பாடி மஸாஜ்… அது உள்ளே போய் பண்ணிக்கலாம்” என்றவன், இந்தாளின் முகத்தில் ஒளியைப் பார்த்ததும்,

“அதுக்கு 2500 ஆகும்” என்றான்.

நான் சுதாரிப்பதற்குள் அவளும் இந்தாளும் உள்ளறைக்குப் போயிருந்தார்கள். ஒரு மனிதன் எவ்வளவு நேரம்தான் கன்னட எழுத்துருக்களை ஆய்வு செய்வது? மூவாயிரம் ரூபாய்க்குப் பக்கமாக இழந்துவிட்டு வெளியேறினோம். இட்லிக்கடை இருந்த சுவடே இல்லை. ஷோரூமைத் திறந்திருந்தார்கள். ஆயில் மசாஜ் செய்துகொள்ள அனுமதி வழங்கப்படவில்லையென்ற கோபம் எனக்கு. இந்தாள் குஷியாக இருந்தார். பதினொன்றரைக்கு மேல் கிளம்பி கடைகளுக்குப் போனோம். ரொம்ப சாமர்த்தியமாக பேசிப்பேசி நான்கைந்து கடைகளிலுமாக மூன்றரை லட்சத்தை வசூல் செய்துவிட்டார். எனக்கு ராகிக்களியும் ஆட்டுக்கறிக்குழம்பும் வாங்கிக் கொடுத்தார். அவருக்கு தயிர்சாதம். லாட்ஜுக்கு வந்து தூங்கினோம். நான் கண் விழித்தபோது மாப்பிள்ளை கணக்காக உடுத்திக் கொண்டு புது சிகரெட் புகையப் புகைய பணத்தைப் பிரித்து பத்திரப்படுத்திக் கொண்டிருந்தார்.

“டக்குனு கௌம்புயா, வெளிய போவோம்”

இதற்கு மேல் குளித்துக் கிளம்பி எங்கே போகப் போகிறோம்? இன்னும் வசூல் பாக்கி இருக்கிறதா என்ன? பாக்கெட்டில் வைத்திருந்த குட்டி நோட்டில் பார்த்தால் எல்லாம் டிக் ஆகியிருந்தது.

“எங்கீங்க போறம்?”

இப்படியே மெத்தையில் படுத்துக் கொண்டு டீவி பார்த்தபடி இருந்தால் போதும் என்றிருந்தது.

“நீ கௌம்புன்னா கௌம்புப்பா”

ஆட்டோக்காரனிடம் ஏரியா பெயர் சொன்னார். புறநகர்ப்பகுதியில் ஒரு சின்ன கடை. அதில் குட்டி ஆல்பங்களுக்குப் பேசி ஆர்டர் வாங்கி விட்டார். ’பழைய பாக்கி இரண்டாயிரம் இருக்கிறதே?’ என்றதற்கு கடையில் இருந்தவன் ஆறு நூறு ரூபாய் கொடுத்தான். போன ஆட்டோவையே நிறுத்தி வைத்திருந்தார். ஆட்டோவில் ஏறியதும்,

“கௌதம் லாட்ஜ்” என்றேன் அனிச்சையாக.

இந்தாள் “ம்ஹீம்” என்று மறுப்பதாகத் தலையாட்டி சிகரெட்டைப் பற்றவைத்து அது புகையப் புகைய “சித்தார்த்க்கே பிடு” என்றார்.

சித்தார்த் லாட்ஜின் லிஃப்ட்டுக்குள் நுழைந்து

“ஃபோர்டீன்த்து ஃப்ளோர்” என்றார்.

அவன் கிண்டலாக இந்தாளை மேலும் கீழும் பார்த்து,

“ட்வெல்த்து ஃப்ளோரு மாத்திரானே இரோது அதே கொனெ“ என்றான். அவனை இந்தாள் மேலும் கீழுமாகப் பார்த்து,

“ஸ்வாகரு சாரு இதாரா… அவுரு நம்மொ ஸ்னேகிதரு” என்றார்.

நான் குழப்பமாக இரண்டு பேரையும் பார்த்துக் கொண்டிருந்தபோது அவன் முகம் மாறி, சலாம் வைத்து,

“ஆயித்து சார்… நீவு ஒகி”. என்றான்.

லிஃப்ட் 11, 12, 13 என்று ஒளிர்ந்து, மறைந்து, ஒளிர்ந்து, மறைந்து 14இல் நின்றது. நாங்கள் வெளியேறும்போது அவன் கையில் நூறு ரூபாய் நோட்டைத் திணித்தார். அவன் பதிலுக்கு ஆறு முறை சலாம் வைத்தான். லிஃப்டிலிருந்து வெளியே வந்ததும் சாம்பிராணி மணம் காற்றில் கலந்துவர, கூடவே கன்னடத்தில் தேவியை உருகியுருகி அழைத்துக் கொண்டிருந்த எஸ்.பி.பி.யும் வந்தார். தூரத்தில் பூஜை மணியோசை கேட்க, இந்தாள் நின்று நிதானமாக சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தார். கைக்கொள்ளுமளவு புகையும் ஊதுவத்திகளை ஏந்தியபடி எதிர்ப்பட்ட ஒருவர், சுவரில் மாட்டியிருந்த படங்களுக்கு, காலண்டருக்கு எல்லாம் பத்திப் புகையை காட்டியபடியே வந்தார். நாங்கள் நின்றிருந்த நிலைவாசற்படிக்குப் புகையைக் காட்டியபடியே

“ஏன்பேக்காயித்து சார்?” என்று கனிவாகக் கேட்டார்.

இவர் “லட்டூ” என்றார்.

எனக்கு சிரிப்பு வந்து விட்டது. ’நண்பர் போலிருக்கிறது.. விளையாடுகிறார்’ என்று நினைத்துக் கொண்டேன். அவர் அதற்கெல்லாம் அசந்தாரில்லை. பத்தி காட்டிய நிலைவாசற்படியின் கதவை ஒற்றை விரலால் தட்டி,

“அம்மா… சொல்பா தெகிரம்மா” என்றார்.

உள்ளே தாள் திறக்கும் சத்தம் கேட்ட அடுத்த வினாடி தோளால் தள்ளினார். விரிந்த கதவுக்கு அந்தப் பக்கம் அறையின் முக்கால் பாகத்திற்கு இடத்தை எடுத்துக் கொண்ட அகலமான கட்டிலில் இருந்து பேச்சும் சிரிப்புமாய் இருந்த பெண்கள் அத்தனை பேரும் பேச்சடக்கி எழுந்து நின்றார்கள். இருபது, இருபத்தைந்து பேர் இருப்பார்கள். ஊதுவத்திக்காரர் பயபக்தியாக ஒவ்வொரு பெண்ணின் இடுப்புக்கு அருகிலும் பத்திகளைக் காட்டி வலது கையால் புகையை அந்தரங்கப்பகுதிக்கு தள்ளிவிடுவது போல செய்தார். அவர் அப்படி ஒவ்வொருத்திக்கும் தூபம் காட்டிய போது சம்பந்தப்பட்ட பெண் கைகூப்பி வணங்கினாள். அத்தனை பேருக்கும் தூபம் காட்டிவிட்டு இவரைப்பார்த்து,

“நோடுறீ சார்! இதரல்லி யாவ லாடு நிம்மகெ பேக்கு?..செலக்ட் மாடு கொளி” என்றார் பணிவாக.

‘ஆஹா ஆஹா’ என்றபடி துள்ளிக்கொண்டிருந்தது என் மனது. ஓரக்கண்ணால் பார்த்தேன். பெரும்பாலானோர் புடவையில் இருந்தார்கள். வெகு நேர்த்தியான அலுவலகம் போகிற பெண்களைப் போலான குடும்பப் பாங்கான தோற்றம். இரண்டொருவர் மட்டும் லிப்ஸ்டிக் போட்டிருந்தார்கள். ஒருத்தி மட்டும் சுடிதார் அணிந்திருந்தாள்.

“தம்பி! செலக்ட் பண்ணுப்பா..” என்றார் நம்மாள்.

இப்போது தைரியமாகப் பெண்கள் ஒவ்வொருவரையும் நிதானமாகப் பார்த்தேன். உள்ளே கூச்சமாக இருந்தது. நடுவில் நின்றிருந்த ஒருத்தியை ரொம்பவும் பிடித்துப் போனது. மிதமான கருப்பு நிறம். ஒரு வகையில் மின்னும் கருப்பு அது. அதனாலேயே ஈர்த்தாள்.

“க்ரீன் ஸாரி” என்றேன்.

நான் கொஞ்சமும் எதிர்பாராதவகையில் இடது கோடியிலிருந்து ஒரு பச்சைப் புடவை என்னை நோக்கி வர, நான் பதறி,அவசரமாய்,

“இல்ல… இல்ல லைட் கிரீன்” என்று அவளை சுட்டிக் காட்டினேன்.

“ஆங்… லைட்டு கிரினு” என்று ஊதுவத்திக்காரர் மொழிபெயர்த்தார்.

உடனே ஒட்டமாய் ஓடி வந்து தோளைக்கட்டிக் கொண்டு நின்றாள். முழங்கையைத் தன்னுள் பொதிந்து கொள்ளப் பார்க்கிற அவளது மார்பின் பூரிப்பை , குளுமையை, அவளது மெல்லிய சுகந்தத்தை உள்வாங்கி அவை தந்த சுகத்தில் நெஞ்சை விடைத்து நரம்புகளில் விரைப்பேற நின்றேன். ஆனாலும் ஒரு சின்ன நடுக்கம். உடனே ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து நெஞ்சின் அடியாழம் வரைக்கும் புகையை இழுத்து வெளிவிட வேண்டும் போல ஒரு விம்மல். அவளோ, வெளியூரிலிருந்து இப்போதுதான் வந்தார் என் கணவர்’ என்பது போல மற்றவள்களுக்கு முன்பாகத் தோளைத் தழுவுவதும், முந்தியால் மணிக்கட்டைத் துடைத்து விடுவதுமாக இருந்தாள். எனக்கு போதையாக இருந்தது.

“சார் நிம்மகெ?” என்று இந்தாளைப் பார்த்துக் கேட்டார் தூபம்.

நம்மாள் வெகு நிதானமாகக் கண்களை ஓட்டி,

“வெள்ளை அந்த ஒயிட்டு” என்றார் ஒயிலாக.

“போலாம் போலாம் ரைட்.. ரூமுக்குப் போலாம்” என்று எனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தது என்குரல்.

மற்ற பெண்கள் உடலைத் தளர்த்தி கட்டிலில் இடம் பிடித்துப் பேச்சைத் தொடர, ஐந்து பேரும் வெளியே வந்தோம்.

தூபம் இந்தாளிடம்,

“ஒந்து சாரி, அர்த்தா கண்ட்டே, ஒந்து ஹவரு” என்று விலைப்பட்டியலைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் பொறுமை இழந்து “ரூமு?” என்று கேட்டுவிட்டேன்.

தூபம் இந்தாளைத் தாண்டி என்னைப் பார்த்து

“டென், லெவென். நீவு கரக்கொண்டு ஓகி சார்” என்று சொல்லிவிட்டு அவளிடம்,

“அத்து, அன்னொந்து… மா” என்றார்.

நான் அவள் தோளில் கை போட்டு மாரின் அகலத்தை அளந்தபடி நடந்தேன். அளக்கும் கையை அவளது செல்லப் பிராணியைப் போல தடவிவிட்டுக் கொண்டே வந்தாள். அறையைத் திறந்தவுடன் கதவை மூடினேன். கதவோடு அவளை சேர்த்து நிறுத்தி, மொத்த உடலையும் அவள்மீது சாய்த்து காளைக்கொம்பு நிலம் கீறுவதாக அவளைத் துளைத்து வெளியே வர முனைந்தேன்.

“ஸ்… ஸ்ஸ்ஸ்… மெல்லிங்கா. மெல்லிங்கா. யாலா. இந்தோன்டி அர்ஜெண்ட்டு? நிதானமு” என்றாள்.

“அட! தெலுங்கா”

“அவுனு”

“இன்னி பில்லலு உண்ட்டே கூடா, நன்னு மாத்ரமு யால நச்சிந்தி?” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தினாள்.

கைப்பந்து விளையாடுபவன் பந்தை எதிர்கொள்ளத் தயாராவது மாதிரி அரைப்பந்தாய் உள்ளங்கையைக் குழித்து அவளது நெஞ்சோரம் கொண்டுபோய் மாரைத் தொடாமல் அதன் மேல் கிடந்த மயிர்கற்றையைக் காட்டி,

“இதுதான்” என்றேன்.

“தொங்கா” என்று சிரித்தாள்.

முடிக்கற்றையை பூச்சரத்தோடு சேர்த்து இரண்டு விரல்களால் எடுத்தேன். எடுக்கும்போது தெரியாமல் பட்டதே தவிர அது என் எண்ணமில்லை என்பது போல் பிரிந்து, சரிந்து, பறந்தவாறு இருந்த கூந்தலிழைகளை பொறுமையாக விரல்களால் கூட்டிக்கூட்டிச் சேர்த்தேன். கூடுதல் கவனத்தோடு மீண்டும் மீண்டும் தவற விட்டேன். உள்ளே இருந்த இரண்டு ஆட்களும் விம்முவதைப் பார்த்ததும் சிரித்தேன். கையைக் கிள்ளி வைத்து,

“கொப்ப ரசிகுடு நுவ்வு ” என்றாள் கிசுகிசுப்பாக.

இரண்டு கைகளையும் பின்னங்கழுத்து வழியாக கூந்தலுக்குள் நுழைத்து மயிரள்ளி இறுக்க, கிறங்கி உதடுகளை மெல்லப்பிரித்து உயர்த்தினாள். ’தொம்’மென்று கதவை அறையும் சப்தம்.

“பாடாய்போயிந்தி” என்றாள் சிணுங்கி.

திறந்தால், நம்மாள் நிற்கிறார். பின்னால் அவருடைய ஒயிட்டு! என்ன ரசனையோ இந்தாளுக்கு? இருந்ததிலேயே ’அட்டு ஃபிகர்’ அதுவாகத்தான் இருக்கும். படுக்கவைத்து தண்ணீரைக் கவிழ்த்தால் தோளுக்கும் மாருக்கும் இடையே குழிவில் இரண்டு கிண்ணம் தண்ணீர் நிற்கும்.

“ஏங்க…” என்றேன் சட்டையை இழுத்து விட்டபடி. இப்போது நானொரு சங்கடஸ்தன்.

“சாரிப்பா” உள்ளே வந்தார்.

“உட்காரு… அட உட்காரப்பா” எனக்குக் கோபம் வந்தது . திரும்பி இவளைப் பார்த்தேன். அவளும் விசித்திரமாக அவரைப் பார்த்தாள்.

“ஏமய்யா குரூப் செக்ஸா?” கண்ணடித்துச் சிரித்தாள்.

“அய்யய்யோ! நான் பதறினேன். இந்த ஆளு வெவகாரமானவனா இருப்பானாட்டம் இருக்குதே?

“லேதம்மா… கொஞ்சேப்பு மாட்டலு ஆடுத்தா உண்ட்டாமு”

தெலுங்கும் தெரியுமா? பயங்கரமான ஆளுதான் என்று நினைத்துக் கொண்டேன். இல்லாவிட்டால் இத்தனை பெரிய வியாபாரம் நடக்குமா?

அவர்கள் இருவரையும் பார்த்து,

”ஊட்டா ஆயித்தா… ஏதாவது சாப்புடறீங்களா?”

இவள் புன்னகைத்து ”நாக்கு பீரு, தரவாத்த பிரியாணி” என்றாள்

இன்டெர்காமைத் தட்டி உணவுவகைகளை கொண்டுவரப் பணித்தார். என்னைப் பார்த்து,

“ரெண்டுமணி நேரம் இங்க தான் இருப்போம் அவசரப்படாதே” என்று சிரித்தார். இவளிடம் திரும்பி இளித்தபடி,

“மீ பேரு ஏமி?”

என் ஆள் “சாவித்திரி” என்றாள்.

ஒயிட்டு “சித்ரா” என்றது. ம்க்கும்.

பியரும், ஒயினும், பிராந்தியும், பிரியாணியும் அப்புறம் தயிர் சாதமும் வந்தது. இந்த ஆள் பாடத்துவங்கினார்.

“போவோமா… ஆ… ஆ ஊர்கோலம்…”

அதே மெட்டைத் தெலுங்கில் பாடினாள் சாவித்திரி.

“என்னென்னோ… ஓ… ஒ… அந்தாலு…” ஒரே சிரிப்பு.

காமச்சூடு மங்கி, மெல்ல ஒரு நட்பு உருவாகுவதுபோல தெரிய எனக்கு அது வினோதமாக தோன்றியது. கொஞ்சம் எரிச்சலாகவும் இருந்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? மெதுவாய் சாப்பிட்டு, மெல்லக் குடித்து, நிறைய பேசினோம். மனிதர்கள் பேச மொழி ஒரு தடையில்லைதான்.

சாப்பிட்டு முடித்ததும் “விளையாடலாமா?” என்றார்.

எனக்கு குரூப் செக்ஸ்தானோ? என்று அடி வயிற்றுக்குள்ளிருந்து அசூசை எழும்ப மெதுவாய் நெளிந்தேன். என்னைப் பார்த்து,

“கண்ணைக் கட்டி விளையாட்டு” என்றார் கண்களைச்சிமிட்டி. அப்பாடா!

சின்னப் பிள்ளைகள் போல நம்பர் சொல்லி சித்ராவை மாட்டிவிட்டு, சித்ராவின் கண்ணை அவளது துப்பட்டாவால் கட்டினார்கள். வறுமையிலும் வாழ்வு தேடிப் போராடுதலின் குறியீடாக எலும்பிலும் செழித்திருந்த மார்புகள் அவளுக்கு. அவள் கைகளை நீட்டி தேடிதேடிப் பிடிக்க, இந்தாள் பிரயத்தனமின்றி சிக்கிக் கொண்டார். கட்டி உருண்டார்கள். ஒரே சிரிப்பு. அப்புறம் கட்டிலைத் தள்ளிப் போட்டு மொசைக்கற்களை மைதானமாக்கி கபடி, பிறகு நொண்டி… எனக்கு இடையிடையே “என்ன இது இப்படி காச வேஸ்ட் பண்றான் இந்தாளு?” என்று தோன்றினாலும் விளையாடுவதும் பால்வேறுபாடின்றி விளையாடுவதில் உருவான உற்சாகமும், இரண்டு பெண்களின் சந்தோஷக் கூச்சலும், மேலே வந்து விழுவதில் உண்டாகும் ஸ்பரிச சுகங்களுமாகத் திளைத்தபடி இருந்தேன். விளையாடிக் களைத்து ஓய்ந்து உட்கார்ந்ததும் எனக்குக் குளிக்க வேண்டும் போலிருந்தது. குளித்தேன். தண்ணீர்ப்பொழிவில் என்னையுமறியாமல் விசில் அடித்தேன். நெஞ்சுக்குள் ஒன்றுமே இல்லை என்பது போல் லகுவாகி இருந்தேன். எனக்குப்பிறகு சாவித்திரி போனாள். போகும் முன்பு பத்திரமாக புடவையை அவிழ்த்து பாங்காக மடித்துவைத்தாள்.

இந்தாள் சாவித்திரியின் மாரைப் பார்த்தார்.

“ஹலோ?” நான் நிஜமாகவே முறைத்தேன்.

“சாரிப்பா” என்றார் பொய்யாக.

உடனே, இவள் சித்ராவின் துப்பட்டாவை எடுத்து மாருக்குப் போர்த்திக் கொண்டாள். சாவித்திரி குளித்துவிட்டு வருவதற்குள் அவர் சித்ராவை கூப்பிட்டுக் கொண்டு “நாங்க எங்க வீட்டுக்கு போறம்பா” என்று  சிரித்தபடி கிளம்ப ஆயத்தமாக சித்ரா, அவருடைய சிகரெட் பாக்கெட், மீதமிருந்த பியர் பாட்டில், பர்ஸ் என்று எல்லவற்றையும் பொறுப்பாக, பொறுமையாக எடுத்துக் கொண்டுபோய் அறை எண் 10-ல் வைத்து விட்டு வந்து, சாப்பிடும்போதும், விளையாட்டின் போதும் கலைந்திருந்தவைகளை ஒழுங்கு செய்தாள். கண்ணாடியைப் பார்த்து முகத்தை, உடையைத் திருத்திக் கொண்டாள். நான் முகத்தை தாழ்த்திக் கொண்டேன். ’இவளை கூட்டிக் கொண்டு கிளம்ப மாட்டேன் என்கிறாயே?’ என்பது போல இவரைப் பார்த்தேன். அவருக்குப் புரியவில்லை. குளியலறைக் கதவு திறந்து சாவித்திரி வெளியே வந்தாள். தம்பதி விடைபெற்றுக் கொள்ளும் விதமாக

“சரி  நேமு எல்லோஸ்தாமு”

அவர் எதோ சொல்ல வரும்முன்பு சாவித்திரி அவர் காலில் விழுந்து தொட்டு வணங்கி வெடித்து அழுதாள். என் நெஞ்சு ஒரு கணம்  நடுங்கியது. யாருமே எதிர்பார்க்கவில்லை. தண்ணீர்ப்பொழிவில் எனக்கு விசில் வந்தது போல, சாவித்திரிக்கு அழுகை வந்துவிட்டதோ? சித்ரா சாவு வீட்டுக்காரியைக் கட்டிக்கொள்வதுபோல சாவித்திரியைக் கட்டிக்கொண்டு அழுதபடியே அவளுக்கு முத்தங்களாகப் பொழிந்தாள். ஊடாக சிரிப்பும். எனக்கு இப்போது சித்ரா பேரழகியாகத் தெரிந்தாள். சிரிப்பும் அழுகையும் சங்கமிக்கிற முகம் இவ்வளவு அற்புதமானதா? சித்ரா எழுந்து அந்த ஆளுக்கும், எனக்கும் அதே அளவு வேகம் மாறாமல் முத்தங்கள் கொடுத்தாள். கன்னத்திலும் கழுத்திலும் தொடர்ச்சியாக மலர்ந்துகொண்டே இருந்த அவற்றில் காமம் இல்லை. அதற்கு வேறென்ன பெயரிடுவதென்றும் எனக்குத் தெரியவில்லை. அந்த ஆள் கட்டிடம் இடிந்து விழுவது போல் கட்டிலில் அமர்ந்தார். அவர் கண்களைப் பார்க்க முடியவில்லை. ரத்தச் சிவப்பு. சட்டைப்பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து திறந்தார். அதில் சிகரெட்டுகள் இல்லை. ஓங்கித்தரையில் அடித்தார். அப்போதே கேவல் போல எழுந்த அவரது சத்தத்திற்கு

“யாலண்ணா… ஏமயிந்தி அண்ணா”

என்று இரண்டு பேரும் அலறி அவரது கால்களுக்கடியில் அமர்ந்தார்கள். சித்ரா ஏதோ தோன்றியவளாக எழுந்து ஓடி உடனே திரும்பி வந்தாள். அவள் கையில் சிகரெட் பாக்கெட்டும், தீப்பெட்டியும். அவளே உருவி உதட்டில் பொருந்தி பற்றவைத்தாள். நெஞ்சைத் தடவி விட்டாள். இவர் அவளை, அவரது கண்களைத் துடைக்க விடாமல் தடுத்து அவற்றை என்னை நோக்கித் திருப்பினார். திராணியின்றித் தவித்தேன். சிவப்பும் மஞ்சளுமாய் இருந்த விழிகளில் தளும்பத் தளும்பக் கண்ணீர் காத்திருந்ததுபோல இறங்கி ஓட, என் கண்களை ஊடுருவிப் பார்த்தபடி, சிகரெட் புகையப்புகைய, நாடக பாணியில், சுத்தச்செந்தமிழில்

“இவளை நான் தேர்ந்தெடுத்தபோது…

அவ்வளவு ஒன்றும் அழகியில்லையே… என்று  நீ  நினைத்திருக்கலாம்… இல்லையா?…

தம்பி! அணில்களுக்கு மட்டுமல்ல காக்கைகளுக்கும் பசிக்கும்”

என்று சொன்னார். அன்றிலிருந்துதான் நான் இந்த ஆளை ‘சாமி’ என்று கூப்பிட ஆரம்பித்தேன்.