உண்மையில் கவின் என்ன பாவம் பண்ணினார் எனத் தெரியவில்லை. (இதற்குமுன்பு ஆரவ்-ஓவியா விசயத்தில் என்ன தப்பு பண்ணினார் என்பதும்தான் புரியவில்லை.) கவின் ஆரம்பத்தில் இருந்தே வீட்டிலுள்ள பெண்களுடன் நட்பாக, சற்று ஜாலியாக பழகுகிறார். ஆனால் அவர் யாருடனும் நிரந்தரமாக ஒரு காதல் உறவை ஏற்படுத்த விரும்பவில்லை. இது ஒருபக்கம் பிக்பாஸ் விட்டுப் பெண்களுக்கு பிடித்திருந்தது; இன்னொருபக்கம் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் கவினுக்கு ஒரு ரோமியோ பிம்பம் ஏற்பட இது காரணமாகியது. சதா பெண்களுடனே ஒட்டிக்கொண்டு எல்லாரிடமும் விளையாட்டுத்தனமாக இருந்ததால் அவரால் தொடர்ந்து கேமராவுக்குத் தீனி அளிக்கவும் பார்வையாளர் கவனத்தில் இருக்கவும் முடிந்தது. வெளியே பேட்டியளித்த கவினின் நண்பர்கள் இது கவினின் நிஜமான இயல்பு அல்லவே அல்ல – அவர் இயல்பில் மிகக் கூச்சமானவர், இப்படி இடைவிடாமல் பெண்களுடன் ஜல்லியடிப்பவர் அல்ல எனக் கூறினர். ஒருவேளை, கவின் பிக்பாஸ் விளையாட்டில் தன்னைக் காதலனாக சித்தரித்து நடிக்கிறாரோ என ஐயம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கவின் சீரியஸான காதலனாக முடிவெடுத்து லோஸ்லியாவிடம் நெருங்கினார். இந்த உறவும் எந்தளவுக்கு நிஜமானது எனத் தெரியவில்லை. ஆனால் பார்வையாளர்களுக்கு இதில் ஏதோ ஒரு அவநம்பிக்கையும் கசப்பும் ஏற்பட்டது.

ஏன்?

துவக்கத்தில் இருந்தே கவின் மற்றும் லோஸ்லியாவிடம் ஒருவித ஒட்டாமை, தயக்கம், நிலையின்மை தென்பட்டன. ஓவியா வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஆரவ்தான் எனும் உறுதியாக இருக்க லோஸ்லியாவோ, ஏதோ உலக சினிமாவில் வரும் பாத்திரங்களைப் போல பட்டும்படாமல் காதலித்துக் கொண்டிருந்தார். சேரனை அவர் அப்பா, அப்பா என அழைத்து பாசமாக நடந்துகொண்டாலும் இன்னொருபக்கம், அவரை சுலபத்தில் விட்டுக் கொடுத்துச் செல்பவராக இருந்தார். கவினும் லோஸ்லியாவும் இணைந்திருக்கும் காட்சிகளில் நாம் எந்த ஒரு அன்னியோன்யத்தையும் பார்க்கவில்லை. மாறாக அன்னியோன்யமாக தெரியக்கூடாது எனும் பதற்றம்தான் தெரிந்தது. ஒருவேளை அவர்களிடையே ஈர்ப்பு இருந்திருந்தாலும் அது உறுதியான உறவாக இல்லை. அது இயல்புதான். நம்மிடையே எத்தனையோ ஆண்-பெண் உறவுகள் தெளிவாக முடிவெடுக்க இயலாமல் தத்தளிப்பவைதான் அல்லது ஒருவேளை இருவரும் சமயோஜிதமாக பிக்பாஸில் நீடிக்கும்பொருட்டு காதலை அரங்கேற்றியிருக்கலாம்.

எப்படியோ, அவர்களின் உறவாடலில் எந்தத் தப்பும் இல்லை. கவின் லோஸ்லியாவிடம் அத்துமீறவோ ,அவரது விருப்பத்தை மீறி துன்புறுத்தவோ இல்லை. லோஸ்லியாவும் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. ஒருவேளை, அவர்களின் காதலில் ஒரு செயற்கைத்தனம் தென்பட்டால் அது அவர்களின் தவறு அல்ல – யாரும் அந்த நிகழ்ச்சியை நிஜம் என நம்பிப் பார்ப்பதில்லை. அது ரியாலிட்டி ஷோவே அன்றி ரியாலிட்டி அல்ல. இங்குதான் அவர்கள் செய்த தவறு என்ன என நாம் சிந்திக்க வேண்டும்.

கவினுக்கு ரோமியோ, காதலன் ஆகிய பாத்திரங்களை விடுத்தால் அங்கே செய்வதற்கு என்று ஒரு தனித்த வேலையோ, எடுத்துக்கொள்ள அடையாளமோ இல்லை. லோஸ்லியாவுக்கோ ஆரம்பத்தில் அவர் சித்தரித்த சுட்டியான சுயபிம்பம், குழந்தைமை மெல்ல மெல்ல இப்போது மங்கிவிட்டது. அவர் ஓவியாயை போன்றே காதலில் ஈடுபட்டு ஒருவேளை, இறுதியில் கவின் தன்னைக் கைவிட்டதாக ஒரு நாடகம் போட்டு பிரசித்தமாக, அதிக வாக்குகளைப் பெற உத்தேசித்திருக்கலாம். ஆனால் மக்கள் மத்தியில் அவர்களின் காதலுக்கு கவனம் குறைய பிக்பாஸ் நிர்வாகத்தினர் ஏதேதோ உள்ளுக்குள் முடிவெடுத்து இருவருக்கும் இடையே கோடு கிழிக்க முயன்றனர்.

பிக்பாஸ் கமலஹாசன் வழி லோஸ்லியா மற்றும் கவினுக்கு காதலை மட்டுப்படுத்தும்படி அறிவுரை கூறினார். ஆனால் காதலிப்பதை விட்டுவிட்டு எதைத்தான் பண்ணுவது எனப் புரியாமல் அவர்கள் காதலையே தொடர்ந்தனர்.

இதை அடுத்து குடும்ப உறவுகளும் நண்பர்களும் வீட்டின் பங்கேற்பாளர்களைப் பார்க்க வந்தனர். லோஸ்லியாவின் அப்பா, அம்மா, தங்கை ஆகியோர் வந்து பழையபடி ‘கேம்’ ஆடி நல்ல பெயர் வாங்கும்படியும், கவினுடன் உள்ள உறவை துண்டிக்கும்படியும் வற்புறுத்தினார்கள். லோஸ்லியாவின் அப்பா நடந்துகொண்டவிதம்தான் இருப்பதிலேயே அபத்தமாக இருந்தது. அவர் வந்ததும் தன் மகளைக் கண்டித்தார்.  “பிச்சை எடுத்து வாழ்ந்தாலும் வாழலாம், மானமில்லாமல் வாழக்கூடாது” என்றார். ஆனால் லோஸ்லியாவின் மானங்கெட்ட செயல்தான் என்ன? காதலிப்பதா? சரி, அதுவே தவறு என்றால் அவர், எந்த அப்பாவையும் போல, கோபத்தை தன் மகளின் காதலனின்பால் தான் காண்பித்திருக்க வேண்டும். பளாரென கன்னத்தில் ஒரு அறை விட்டிருக்கலாம். (அது, சரி என நான் கூறவில்லை, ஆனால் இதுவே உலக நடைமுறை.) சேரனுக்கு கவின்மீது ஏற்படும் கோபமும் பொறாமையும்கூட லோஸ்லியாவின் அப்பாவுக்கு ஏற்படவில்லை என்பது விசித்திரமே. அவர் கவினை அணைத்துப் பாசமாக பேசிவிட்டு, தனக்கு கவின்மீது எந்த வருத்தமும் இல்லை எனச் சொல்லிவிட்டுச் சென்றார். ஒருவேளை அவரது நண்பர்கள் லோஸ்லியாவின் நடவடிக்கைகளை டி.வி.யில் கண்டு அவரைக் கேலி பண்ணியதாக அவர் சொன்னது உண்மையெனில் அவரால் அப்படி கவினை சுலபத்தில் மன்னித்திருக்க முடியாது. அந்தக் காதலும் பாதி பாசாங்கு, தன் மகள் அங்கு நிலைக்க அது தேவைப்பட்டது என அவர் புரிந்துகொண்டுள்ளார் என்பதையே இது காட்டுகிறது.

பிக்பாஸில் காதல் என்பது உண்மையும் அல்ல, பொய்யும் அல்ல – அது இடைப்பட்ட ஒன்று. இதுதான் லோஸ்லியா அப்பாவின் நடவடிக்கையின் ரகசியம்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் விடாமல் அங்குள்ளோர் உச்சரிக்கும் சொல் ‘கேம்’. அந்த வீடும் அங்குள்ள உறவுகளும் நிஜம் எனத் தோன்றி, உடனே தமது நிலையாமை நினைவுக்கு வந்து மனம் பதறும்போது அவர்கள் தமக்குத்தாமே “இது ஒரு கேம், இதை உணர்வுவயப்படாமலே ஆடவேண்டும்” எனச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அப்படி அவர்கள் ஆடத் தொடங்கும்போதே பிக்பாஸ் அவர்கள் போலியாக ஆடக் கூடாது, மனத்தில் பட்டதைச் சொல்லவேண்டும், பாவனையின்றி நடந்துகொள்ள வேண்டும் என வற்புறுத்துவார். அப்படியே அவர்கள் பாவனையின்றி காதலித்தாலும் பிக்பாஸ் ‘கேம்’ ஆடுங்கள், உங்கள் காரியத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு போட்டி போடுங்கள் என வற்புறுத்துகிறார். இப்போது என்னதான் பண்ணுவது – நடிக்கணுமா நிஜமாக நடந்துக்கணுமா?

இங்குதான் நாம் ஒரு நுணுக்கத்தைக் கவனிக்க வேண்டும். பிக்பாஸ் என்பது ஒரு  ‘கேம் ஷோ’ மட்டும் அல்ல. விளையாட்டு என்பது ஆட்டக்காரர்கள் கருத்தாக்கத்துடன் ஆடுவது. விளையாட்டில் நிஜம் இல்லை என்பதால் பார்வையாளர்களுக்கு அந்தரங்கத்தை எட்டிப் பார்க்கும் சுவாரஸ்யம் இராது. பிக்பாஸ் என்பது வெறும் ரியாலிட்டி மட்டுமே என்றால் அலுப்பாகிவிடும் – நிஜத்தைதான் அவர்கள் அனுதினமும் தம் வீட்டுக்குள்ளே பார்க்கிறார்கள். பிக்பாஸின் நிஜமான சுவாரஸ்யம் அது ஒரு வதைக்கூடம் என்பதில் உள்ளது. இந்த வதை என்பது நேரடியாக துன்புறுத்துவது அல்ல – பல்வேறு அபத்தமான கட்டுப்பாடுகளை விதித்து பங்கேற்பாளர்களை மெல்ல மெல்ல துன்புறுத்துவது; சொந்த பந்தங்கள், கணவன், மனைவி, (முக்கியமாக) குழந்தையுடன் இருந்து அவர்களைப் பிரித்து, அவர்களைத் தம் உற்றார், குடும்பத்தினர் பற்றி புலம்பச் செய்து, திக்ஷீமீமீக்ஷ்மீ சொல்லி குடும்பத்தினரை உள்ளே விட்டு பங்கேற்பாளர்களை அழுது துடிக்கவைப்பது. சிறையில் தள்ளி, கடுமையான டாஸ்க்குகளில் வதைபட்டு, நீச்சல் குளத்தில் தள்ளப்பட்டு, தலையில் குப்பை கொட்டப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டு, கண்டவர்களால் வசைபாடப்பட்டு அவர்கள் தவிப்பதைப் பார்ப்பதே பிக்பாஸின் சாடிஸ கிளர்ச்சி.

இதனால்தான் பிக்பாஸில் இருவர் லேசாக நெருங்கும்போதே அவர்களை இணையும்வரை காத்திருந்து மெல்ல மெல்ல அவர்களைப் பிரித்துவைத்து அல்லது அவர்களின் காதலுக்குப் பல்வேறு இடர்களை அளித்து, அதைக் காணும் பார்வையாளர்களுக்கு ஒரு செயற்கையான திகிலை, பரபரப்பைக் கொடுப்பது. ஓவியாவில் இருந்து லோஸ்லியா வரை பிக்பாஸ் பின்பற்றும் திரைக்கதை உத்தி இது.

பிக்பாஸில் மக்களுக்குக் கிடைக்கும் கிளர்ச்சி என்பது, எந்த ஒரு பாசிச சமூகத்திலும் எளிய மக்கள் தாம் அனுபவிக்கும் வதையில், அனுதினமும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி துடிப்பதில் கிடைக்கும் ஒருவித விசித்திரமான அனுபூதிதான். மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் இந்தியா முழுக்க மக்கள் அடைந்த பெரும் துன்பத்தை ஓரளவுக்கு இதனோடு ஒப்பிடலாம். இந்தத் துன்புறுத்தலை, தேசியவாத எழுச்சியின் உத்வேகத்தில், மக்கள் ஒருவித அதிகார கிளுகிளுப்பாக உணர்ந்தனர். ஆகையால் அடுத்துவந்த தேர்தலில் பாஜக-வுக்கு பெருமளவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். இதையடுத்து மோடி மேலும் பல நெருக்கடிகளை மக்களுக்கு கொடுக்க தொடங்கினார். நெருக்கடி அதிகமாக ஆக மக்களுக்கு சர்வாதிகார அரசின்மீதான மதிப்பும் அதிகமானது.

மக்கள் தமக்கு அரசதிகாரம் தரும் துன்பத்தை மற்றமை எனும் வடிகால்வழி வெளியே அனுப்பினர் -அதற்கு பாகிஸ்தான், தீவிரவாதம், காஷ்மீர், இஸ்லாமியர், தேசத்துரோகிகள் என பல்வேறு கதையாடல்கள் உதவின; தேசியவாத வெறி இந்தக் கதையாடல்களின் அஸ்திவாரம் ஆகியது. இப்போது மக்கள் அரசதிகாரத்தை துன்பமாக உணர்ந்து அத்துன்பத்துக்கு மற்றமையை காரணமாக்கி, அதிகாரச் செயல்பாட்டை தம் உடலில் உணரும் இன்பமாக மட்டும் கண்டு அதை பிரதமர் எனும் பிம்பத்துடன் இணைத்தார்கள். இதன்வழி அவர்கள் உச்சபட்ச அதிகாரத்துடன் தம்மை ஒன்றாக உணர்ந்துகொண்டார்கள்.

அதாவது, மக்கள் இரண்டாகப் பிரிந்தார்கள் – தம் உடல் என்பது இந்த ஒட்டுமொத்த தேசம் என்றும் (தேசத்தை எதிர்ப்போர்மீது அப்போது அவர்களுக்கு கோபம் எழுகிறது), தாம் பெரும் அதிகாரம் படைத்த ஒரு தலைவனின் சாட்டைக்குக்கீழ் துடிக்கும் ஒரு எளிய இருப்பு, அந்த சாட்டை நுனியே அதிகார உச்சம், ஒவ்வொரு அடியும் தம்மை அழிக்கும்போது தாம் பெருவலிமை, கிளர்ச்சி அடைவதாய் உள்ளுக்குள் உணர்ந்தனர் (தலைவனை எதிர்ப்பவர் தனிமனிதனாய் தம்மையே. தம் உடலையே எதிர்ப்பதாய்க் கருதினர்). அரச சாடிசத்துக்கும் குடிமக்களுக்குமான உறவு இப்படி மிக மிக சிக்கலானது.

பாஜக அரசுக்கு பிக்பாஸுக்குமான ஒரு அடிப்படையான ஒற்றுமை, இரண்டுமே முதலாளித்துவ அமைப்புகளின் முகங்கள், கரங்கள், கால்கள் என்பது. மற்றொன்று, இரண்டுமே மக்களை இரண்டாக உடைத்து தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது என்பது.

முதலீட்டியம் தனக்குக் கீழ் வாடிக்கையாளராகவும் பணியாளராகவும் இருப்பவர்களை அவர்களின் உடல்மீது அதிகாரத்தைச் செலுத்தி தன்னை எதிர்த்து யோசிக்காமல் இருக்கச் செய்கிறது. இந்த அதிகாரமே ஒருவித வதை. வதையின் துன்பம் அதிகமாக ஆக நாம் அதிகாரம் மிக்கவர்களாக நம்மை உணர்வோம். உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் வேலை பறிபோகும் அச்சம் பணியாளர்கள் மத்தியில் பரவுகிறது. அவர்கள் பரஸ்பரம் இதைப் பற்றியே பேசி நெருக்கடியை தம்மீதே குவிப்பார்கள். நிர்வாகம் இதைத் தடுக்காது. இந்த பீதியும் பதற்றமும் வேலைமீதான அக்கறையை ஊக்குவிக்க உதவும் என நிர்வாகம் நம்பும். விசித்திரமாக இந்த வதையுணர்வு ஊழியர்களை ஒருவித அதிகாரத்தை உணரச் செய்யும். வேலை தனக்கல்ல அடுத்தவர்களுக்கே பறிபோகும், தாம் பத்திரமாக இருப்பதாகவே இருக்கிறோம் என அவர்கள் கற்பனை பண்ணுவார்கள். இப்படி நினைக்கும் வேளையிலே அவர்கள் அதற்கு முரணாகவும் (ஐயோ! ஒருவேளை என் வேலைதான் பறிபோகுமோ?) நினைப்பார்கள். இந்த முரண் எண்ணங்கள் அவர்களை வெறித்தனமாக தம்மை மறந்து வேலை செய்யவைக்கும். முதலீட்டியம் இப்படித்தான் நம் உடல்மீது அதிகாரத்தை தக்கவைத்து அதை லாபமாக மாற்றுகிறது; அதையே நம்மை விரும்பவும் வைக்கிறது.

இதே உத்தியைத்தான் மோடியின் அரசும் பிக்பாஸ் நிர்வாகமும் மக்கள் மற்றும் பங்கேற்பாளர்கள்மீது பயன்படுத்துகிறார்கள். 2013இல், சிலி நாட்டில் ஒரு உளவியல் ஆய்வரங்கம் நடத்தினார்கள். அதில் ஒரு பட்டறையில் நடந்த ஆய்வில் இன்றைய கார்ப்பரேட் வேலையிடங்களில் பணியாளர்கள்மீது செலுத்தப்படும் அழுத்தம் எப்படி உடல் மற்றும் மனநோய்க்குறிகளாக (இதயம் வேகமாய் துடிப்பது, வயிற்று வலி ஏற்படுவது, கடுமையான பதற்றம்) வெளிப்படுகின்றது எனக் கண்டறிந்தார்கள். நிர்வாகம் ஒரு சுலபத்தில் அடைய சாத்தியமற்ற இலக்கை தம் ஊழியர்களுக்கு நிர்ணயித்து, அதில் தோற்றால் வேலை போய்விடும் என இடைவிடாமல் அச்சுறுத்தி, மெல்ல மெல்ல அந்த அச்சத்தையே இயல்பாக உணரவைக்கும். இது, இன்றைய நவீன வேலையிடங்களில் வாடிக்கையாகிவிட்டது (பிக்பாஸில் இதுவே வினோதமான டாஸ்க்குகள், போட்டிகளாக சித்தரிக்கப்படுகின்றன. இது டி.வி. பார்க்கும் மக்களை தம் கார்ப்பரேட் வேலையிடங்களில் இத்தகைய உளவியல் வதையை எதிர்கொள்ளத் தயாரிக்கின்றன எனலாம்).

சில்வியா பெடெரிச்சி போன்ற பின்-மார்க்ஸிய பெண்ணிய ஆய்வாளர்கள் இது குறித்து ஆராயும்போது மக்களின் உடல்களை தமது அதிகாரத்தைப் பரிசீலிக்கும் தளங்களாக முதலீட்டியம் பயன்படுத்துவதாய், இதுவே இன்றையச் சூழல் பல விநோத நோய்கள் தோன்றக் காரணமாகிறது என்கிறார். ஹார்ட் மற்றும் நெக்ரி ஆகிய சிந்தனையாளர்கள் (Multitude மற்றும் Declaration ஆகிய நூல்களில்) இந்தப் போக்கைப் பற்றி விரிவாக பேசி இருக்கிறார்கள். நவோமி கிளெய்ன் எனும் நவீன சிந்தனையாளரின் Shock Doctrine எனும் புத்தகமும் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிடவேண்டிய ஒன்று – நவ-தாராளவாத முதலீட்டியம் நெருக்கடி, துன்பம், பீதி, போதாமை ஆகிய உணர்வுகள் மேலிடும் சூழல்களில் அதிகமாக புத்திசாலித்தனமான முதலீடு செய்து தொழிலில் லாபம் சம்பாதிக்கக்கூடியது எனக்கூறும் கிளெயின், 2005இல் அமெரிக்காவில் நிகழ்ந்த கேத்ரீனா புயல் தாக்குதல், 2004இல் இலங்கையில் சுனாமி, 2003இல் ஈராக்மீது அமெரிக்கா நடத்திய போர் ஆகிய சந்தர்ப்பங்களில், மக்கள் சமூகங்கள் உருக்குலைந்த போது, கார்ப்ரேட்டுகள் மட்டும் சமயோஜிதமாக மக்களைச் சுரண்டி அதிகமாக சம்பாதித்ததைச் சுட்டிக்காட்டி, இதை கார்ப்பரேட்டுகளின் ‘அதிர்ச்சி சித்தாந்தம்’ என்கிறார். மோடி இதையே டீமானிடைசேஷன், பாகிஸ்தானுடனான மோதல், காஷ்மீரின் 370 சட்டப்பிரிவு நீக்கம் என பல்வேறு சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகள் மூலம் தேர்தல் லாபமாக உருமாற்றினார். காரப்ரேட்டுகள் இச்சூழல்களின் கடும் மன சமநிலைக்குலைவைப் பயன்படுத்தி வெற்றிகரமாக லாபம் ஈட்டுகின்றன. பிக்பாஸோ வாடிக்கையாளர்களை இன்றைய பாசிச அரசுகளும், நவதாராளவாத உலக சந்தையும் நடத்தும்விதத்தை ஒரு கதையாடலாக, ஒரு நீதிக்கதையாக நம் முன்பு நிகழ்த்துகிறது. இன்று ஒரு வாடிக்கையாளர் உணரும் நடுக்கத்தை, பதற்றத்தை பிக்பாஸ் வீட்டின் பங்கேற்பாளரை (கவின், லோஸ்லியா, சேண்டி) உணரச் செய்து, வெளியில் இருந்து அதை ரசிக்கவைத்து ,அதைவைத்து லாபம் ஈட்டுகிறார் பிக்பாஸ்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல, வேலையிடத்தில் நாம் தலைபோய்விடும் பயத்தில் அடித்துப்பிடித்து வேலை செய்யும்போது நம்மை நிர்வாகத்தின் பிரதிநிதியாக, நீட்சியாக உணர்ந்து இரண்டாகப் பிரிந்துபோகிறோம். ஒன்று, தோற்று வேலையிழக்கப் போகும் நமது பக்கத்து இருக்கை ஆள் மற்றொன்று, எப்படியாவது இலக்கை எட்டப் போகும் நாம் – இந்த இருவருமே நாம்தான் என சம்மந்தப்பட்ட நாம் உணர்வதில்லை. கார்ல் மார்க்ஸ், முந்தைய முதலீட்டிய சூழலில் ஒரு பணியாளன் தனது உழைப்பில் இருந்து அந்நியப்படுவதாகச் சொன்னார். இன்றைய முதலீட்டிய சூழலிலோ நாம் நமது உழைப்பில் இருந்து மட்டுமல்ல, நம்மில் இருந்தே அந்நியமாகி, இப்படி, இரண்டிரண்டாகப் பிரிகிறோம். நம்மை இப்படி பிரித்தாளும் முதலீட்டிய நிர்வாகம் இதனால் நாம் அவர்களை எதிர்க்காமல் பணிந்து வாழ்நாளெல்லாம் அடிமையாக இருப்போம் என உணர்ந்திருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் ஒரு பங்கேற்பாளர் கோபப்பட்டு கத்துவது, நிலையிழந்து பதறுவது, அடுத்தவர்களையும் தம்மையும் துன்புறுத்திக் கலங்குவது, அங்கிருந்து தப்பிக்கும்பொருட்டு ஏங்கி தவிப்பது ஆகியவற்றை ஒரு பார்வையாளராகக் கண்டு ரசிக்கும்போது இரண்டாக பிரிந்துபோகிறீர்கள் – அந்த பங்கேற்பாளர்கள் நீங்களேதான் என உங்களுக்கு அந்தக் கணத்தில் புரிவதில்லை; அது ஒருநாளும் சுலபத்தில் புரியப்போவதில்லை என்பதே பிக்பாஸின் வெற்றி!

மேற்சொன்ன விசயத்தின் உச்சம்போலத்தான் கவினின் நண்பர் ஒருவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து மக்களின் சார்பில் அவருக்கு ஒரு அறை கொடுத்தார். அதுவும் தன்மீது கவின் கோபப்படக் கூடாது என சொல்லிக்கொண்டே அடித்தார். அந்த அறை, பிற பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால் பிக்பாஸ் வீட்டின் அடிப்படையான விதிகளில் ஒன்று யாரும் யார்மீது வன்முறை பிரயோகிக்கக் கூடாது என்பது. அப்படி ஒருவர் தன்னையே துன்புறுத்தும்பட்சத்தில்கூட அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் (மதுமிதாவைப் போல). அப்படி இருக்க ஒரு வெளியாளை உள்ளே கொண்டுவந்து கவினை அறைய அனுமதிப்பது மட்டும் நியாயமாகுமா? பிக்பாஸ் நினைத்திருந்தால் ஒரே கட்டளையில் அதைத் தடுத்திருக்க முடியுமே!

இல்லை. இது பிக்பாஸ் நிர்வாகத்தின் தூண்டுதலில்பெயரில் நிகழ்த்தப்பட்ட வன்முறையா? எனில், இதன் நோக்கம் என்ன? கவினை அறைந்த அந்த நண்பர் யாருடைய பிரதிநிதி?

மக்களுக்கு கவின்மீது அந்தளவுக்கு தண்டிக்கும் வெறி ஒன்றும் இல்லை. சொல்லப்போனால் ஜூலி, வனிதா போன்றோர்மீது மக்களுக்கு உள்ள அதிருப்தி நிச்சயமாக கவின்மீது இல்லை. அப்படி இருக்க ஏன் அவர் அறையப்பட்டார்? அந்த காட்சியைக் கண்டபிறகு சில நாட்கள் என்னால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் ஒருவர் அப்படி அறை வாங்கும் காட்சி, அதுவும் அனுமதி பெற்று முறையாக, அனைவர் முன்னிலையிலும் அறையப்படும் காட்சி, அதை வாங்கிக் கொண்டு கவின் அமைதியாக இருந்தவிதம் என்னை மிகவும் தொந்தரவு பண்ணியது. இது ஒருவித மனித உரிமை மீறல் என்று தோன்றியதுடன், ஊடகங்கள்வழி நடத்தப்படும் யுத்தங்கள், மனித உரிமை மீறல்கள், சாதி மத வன்முறைகளையும் இது நினைவுபடுத்தியது. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நமது மத்திய அரசு காட்சிப்படுத்தி தேசியவாதத்தை ஒரு பொழுதுபோக்காக மாற்றியதைப் போலத்தான் பிக்பாஸ் இப்படி தனது நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் ஒருவர்மீது வன்முறையை நிகழ்த்தியதாக நினைத்தேன்.

ஆனால் மெல்ல மெல்ல இந்த வன்முறையில் எந்த விசித்திரமும் இல்லை எனப் பட்டது. மற்ற அத்தியாயங்களில் பிக்பாஸ் மறைமுகமாக நிகழ்த்தி வதையை ஒரு பொழுதுபோக்காக்கி விட்டிருந்தார். இப்போது இதையே பிக்பாஸ் நேரடியாக முகம் சுளிக்கும்படி பண்ணியிருக்கிறார். அவ்வளவுதான் வித்தியாசம்.

சரி, இந்த வன்முறையை மக்கள் எப்படி ஏற்கிறார்கள்? அது ஒரு குற்றம் என நமக்கு ஏன் தோன்றவில்லை? அதை ஒரு தமாஷாக கமலஹாசன் எடுத்துக்கொண்டு சிரித்தபடியே, “சேரன் இருந்த ரகசிய அறை, கவினுக்கு கிடைத்த அறை” என இரட்டை வசனம் பேசியபோது அது ஏன்? ஒரு ஆபாச உச்சமாக நமக்குப் படவில்லை? இங்குதான் பிக்பாஸின் சாமர்த்தியத்தை நாம் கவனிக்க வேண்டும். கவினின் நண்பர் அடித்தது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் சார்பில். இந்த ‘சமூகம்’ என்பது வெளியே இருப்பவர்கள் அல்ல; அவர்கள் டிவி முன்பும் ஹாட்ஸ்டார் முன்பும் இருக்கும் ‘நாம்’தான். நாம் விரும்பாவிடிலும்கூட கவினின் நண்பர் ‘நாம்’ ஆகிவிடுகிறோம் இங்கு. இப்போது கவினும் நாம்தாம், கவினின் நண்பரும் நாம்தாம். பிக்பாஸ் நம் கையை எடுத்து நம் கன்னத்திலே ஒரு அறை விடுகிறார். அதுதான் கவின் வாங்கிய அறை!