ஆண்-பெண் உறவு பிக்பாஸ் வீட்டில் (மலையாளம் மற்றும் தமிழில்) எப்படி உள்ளது, இது நமது சமகால பண்பாட்டை, பாலினங்களின் அதிகாரப் படிநிலைகளைப் பிரதிபலிப்பதாக உள்ளதா என சமீபத்தில் நான் எழுதிய பிக்பாஸ் கட்டுரைகளில் கேட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இப்போது பெண்கள் ஆண்களை எதிர்கொள்வதில் தமிழில் இருந்து மலையாளத்துக்கு உள்ள ஒரு முக்கியமான வித்தியாசத்தைப் பற்றி இப்போது பேசப் போகிறோம். இந்தி பிக்பாஸில் பெண்களின் நிலையையும் மேலோட்டமாய் ஒப்பிடுவோம்.

தமிழ் பிக்பாஸின் இரண்டு பருவங்களிலும் ஆண்-பெண் சமத்துவம் வீட்டின் பங்கேற்பாளர்களின் நடவடிக்கைகளில் தெரிகிறது என ஒரு தோழி ஒருமுறை குறிப்பிட்டார். அவர் அப்படி சொல்லக் காரணம் மலையாள பிக்பாஸின் முதல் பருவத்தின் ஒரு குறிப்பிட்ட வாரத்தில் சினிமா நடிகர் அனூப் சந்திரன் வீட்டின் காரணவர் (தலைவர்) ஆன போது நடந்த சில விசயங்களே. வீட்டின் உறுப்பினர்களுக்கு பணிகளை ஒதுக்கும் போது அவர் சமையல் வேலைகளை மொத்தமாய் பெண்களிடமும் ஒப்படைத்து விட்டார். இது சமத்துவத்துக்கு எதிரானது அல்லவா என்று நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் மோகன்லால் மறைமுகமாய் கேள்வி கேட்டார். பெண்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என வீட்டின் பெண் பங்கேற்பாளர்களிடமும் கேள்வியை முன்வைத்தார். ஆனால் அவர்களில் ரஞ்சினி சற்று வெளிப்படையாய் இதை கண்டிக்க முயன்றார். ஆனால் பிற பெண்கள் ஆவேசமாய் இதை எதிர்க்காததால் அவரது சொற்கள் வெறும் முனகலாய் அமுங்கிப் போயின. அனூப் இதற்கு விளக்கமளிக்கையில் தான் பெண்களை மதிப்பதாகவும் அவர்களாலே மிகுந்த அக்கறையுடன் சமையலறையின் காரியங்களைக் கவனிக்க முடியும் என்பதாலே, ஒருவித அங்கீகாரமாய் மட்டுமே அப்பணியை முழுக்க அவர்களிடம் தான் ஒப்படைத்ததாய் சொன்னார். இதற்கும் பெண்களிடம் இருந்து எதிர்வினைகள் இல்லை. சமையல் வேலையை எடுத்துக் கொண்டு நூறாண்டுகளுக்கு முன்பான இல்லாள்களைப் போல செயல்பட அவர்கள் உற்சாகம் காட்டுவதாகவே தென்பட்டது. இத்தனைக்கும் மலையாள பிக்பாஸில் அரசியல் மொழி நன்கு பரிச்சயமான, போராடவும் மறுத்துரைக்கவும் தயங்காத பெண்கள் அதிகம். அவர்கள் ஏன் தம்மீது திணிக்கப்படும் பாலின கட்டமைப்பை எதிர்க்கவில்லை?

இதைப் பற்றி உரையாடுகையில் தான் தோழி கேட்டார்: இதுவே தமிழ் பிக்பாஸில் என்றால் ஒரு பருவத்தில் நமீதாவும் காயத்ரியும் ஜூலியும் அடுத்த பருவத்தில் மும்தாஜ், ஐஸ்வர்யா, ரித்விகா போன்றோரும் கடுமையாய் எதிர்த்திருப்பார்கள். அது மட்டுமல்ல, இந்த முடிவை எடுத்தமைக்காக கமல்ஹாசன் அந்த வீட்டுத் தலைவரை அரைமணிநேரம் குழப்பிக் குழப்பி கண்டித்து மூளை கொதிக்க வைத்து தெறிக்க விட்டிருப்பார். ஆனால் மோகன்லால் ஒப்பிடுகையில், பெண் என்பவள் என்ன சமையலறைக் கைதியா என்றெல்லாம் கொதிக்கவில்லை. கேரளா மிக முற்போக்கான மாநிலம் என்கிறோம். அங்கு தாய்வழி சமூகங்கள் தழைத்தன என்றும், அங்குள்ள பெண்கள் துணிச்சலானவர்கள் என்றும் படித்திருக்கிறோம், பார்த்திருக்கிறோம். ஆனால் ஏன் இப்படி சில விசயங்களில் அவர்கள் மிகப்பிற்போக்காய் இருக்கிறார்கள்?

இந்தக் கேள்வியுடன் தமிழ் பிக்பாஸுக்கு வந்த தோழி அங்கு பெண்கள் கூடுதல் சுயமரியாதையுடன் இருப்பதாய் கூறினார்.
சரி, இது உண்மையெனில், தமிழகம் மற்றும் கேரளாவில் ஆண்-ஙீபெண் உறவு இப்படித் தான் மிகவும் முரணாக உள்ளதா என நான் என்னையே கேட்டுக் கொண்டேன். ஒரு முற்போக்கான மாநிலம் ஆண்-ஙீபெண் விசயத்தில் பிற்போக்காய் நடந்து கொள்கிறது. ஒரு பிற்போக்கான மாநிலமாய் காணப்படும் தமிழகமோ பெண்களை கண்ணியமாய் சுயமரியாதைக்கு இடமளித்து நடத்துகிறது. ஏன் இப்படி?
இந்த கேள்வியுடன் எங்கள் உரையாடல் முடிந்து போனாலும் நான் மேற்கொண்டு இதைப் பற்றி யோசித்தேன். இரண்டு பதில்கள் எனக்குத் தோன்றின.
ஒன்று, எல்லா சமூகங்களும் இப்படி முரண்பாட்டு முடிச்சுகளாகவே இருக்க முடியும். ஒரு பெண் முற்போக்காக வெளிப்பட அவளது இருப்பில் ஒரு பிற்போக்குத் தன்மை இருந்தே ஆக வேண்டும்.

அடுத்து, கேரள சமூகம் முற்போக்கின், கல்வியின், இடதுசாரி அறிவியக்கங்களின், சமூக நீதியில் கலைகளின் பாதையில் நடந்து அரைநூற்றாண்டு கடந்து விட்டதென்றாலும், அங்கு பெண் ஆணுக்கு ஒரு அங்குலம் ‘உயரத்தில்’ குறைவுதான். அங்கு பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதும் அதிகம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தமிழ் சமூகம் நிலப்பிரபுத்துவ பண்பாட்டு கட்டமைப்பில் இருந்து இன்னும் மீளவில்லை என்றாலும் பெண்கள் இங்கு கூடுதல் சுதந்திரத்துடன், தன்னியல்புடன், தன்னிறைவுடன் உள்ளார்கள் என்பதே உண்மை. இன்னொரு பக்கம், இங்கு பெண்களின் சுயமுனைப்பும் துணிச்சலும் ஆண்களை பின்னுக்குத் தள்ளி அவர்களின் அதிகாரத்தை அச்சுறுத்துகிறது. தாம் குடும்ப வெளிக்குள், உறவு வெளிக்குள் இடமற்று புறந்தள்ளப்படுவோம் எனும் அச்சம் இங்கு ஆண்களுக்கு மிகுதி. வடிவேலுவை கோவை சரளா துவைத்தெடுக்கும் நகைச்சுவைக் காட்சி நினைவுள்ளதா? அது போல மலையாளத்தில் ஒரு காட்சி கூட இல்லை. “மொழி” படத்தில் குடித்துவிட்டு தன் மனைவியை துன்புறுத்தும் கணவனை ஜோதிகா துணிச்சலாய் அடித்து திருத்துவார். இதைக் கண்டு தான் ப்ரித்விராஜ் அவர் மீது மையல் கொள்வார். பெண்ணுக்காய் மறுகி உருகி பாட்டோ பாட்டென்று பாடி பின்னே திரியும் சோக நாயகன்கள் தமிழில் தொண்ணூறுகள் வரை பிரசித்தம். முரளி இதற்கென்றே தனிமுத்திரை பெற்றார். ஆனால் கேரளாவிலோ பெண்ணால் நிராகரிக்கப்பட்டு அந்த துயரம் தாளாமல் நெஞ்சம் உருக காதலில் சிக்கி அழியும் காதலன் எனும் தொன்மமே இல்லை எனலாம். அப்படியான நாயகர்கள் தோன்றும் போதும் (‘அன்னயும் ரசூலும்’ போல) அவர்கள் தமிழ்ப் படங்களின் நேரடி தாக்கத்தினாலே உருவாகிறார்கள். ‘பிரேமத்தில்’ நிவின் பாலி தன்னிரக்கம் தொனிக்க தோன்ற வேண்டிய பாத்திரம். ஆனால் அவர் மாறாகத் தொடர்ந்து பெண்களால் நிராகரிக்கப்பட்டாலும் “ஸ்படிகம்” மோகன்லால் போல திமிறும் ஆண்மையுடன் தான் தெரிகிறார். இந்த நிவின் பாலியை ‘காதல்’ படத்தின் பரத்துடன் ஒப்பிட்டால் வித்தியாசம் புரியும். தமிழக ஆண் தொன்மத்தில் தோன்றும் நாயகன் சற்று பலவீனப்பட்ட, பாவப்பட்ட பிறவியாக ஒரு புறமும் “சிங்கம்” சூர்யா போல மிகையான ஆற்றல் கொண்டவனாக இன்னொரு பக்கமும் இருக்கிறான். ஆனால் மலையாள சினிமாவில் இத்தகைய சித்தரிப்புகள் மிக மிக அரிது.
இது தமிழக, கேரள சமூக நிலையை நேரடியாக பிரதிபலிப்பதாக நான் கூற முயலவில்லை; இது அம்மாநில மக்களின் உள்ளார்ந்த விழைவுகளை சித்தரிப்பதாக கூறுகிறேன்.

தமிழ் இலக்கிய கதைகளை எடுத்துக் கொண்டால் கூட நமக்கு இத்தகைய ஆண் சித்திரமே கிடைக்கிறது – இமையம், ஜெ.பி சாணக்யா, லஷ்மி சரவணகுமார், தேவி பாரதி ஆகியோரின் கதைகளில் வரும் ஆண்களைப் பாருங்கள்; அவர்கள் ஆண்மை மறுக்கப்பட்டவர்களாக(Demasculinized), அந்நிலையின் தடுமாற்றங்கள் மிக்கவர்களாக, பெண்களின் அதிகார வீச்சின் முன்பு, துணிச்சலான ஆதிக்கமான செயல்பாடுகள் முன்பு வெம்பி வெதும்புகிறவர்களாகவே இருக்கிறார்கள். நமது ஆண்கள் மீசையை முறுக்கி மிரட்டலாய் தெரிந்தாலும் அவர்களுக்குப் பின்னால் தலைகுனித்து செல்லும் பெண்ணொருத்தி தோன்றினாலும் இந்த மேல்-கீழ் அதிகார பந்தம் மேலோட்டமானதே; ஆழத்தில் இருவருக்கும் இடையிலான அதிகாரப் படிநிலை தலைகீழாகவே இருக்கும். இதை சுட்டவே வடிவேலு மனைவியிடம் அப்படி செம அடி வாங்கும் காட்சியில் நடிக்கிறார்.

இப்போது ‘பிக்பாஸ்’ தமிழுக்கு வருவோம். இதில் ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையிலேயே பங்கேற்றார்கள். ஆனால் இப்பருவத்தை பற்றி சிந்திக்கையில் ஆளுமை மிக்க ஆண் பங்கேற்பாளர்கள் என ஸ்நேகன், சக்தி, ஹரீஷ் ஆக்யோர் தாம் நம் நினைவுக்கு வருகிறார்கள். முதல் பருவத்தில் ஆரவ் இறுதியில் வென்றார் என்றாலும் அவரது பிம்பம் பெரிதாக மக்கள் மனதில் பதியவில்லை என்பதே உண்மை. ஓவியா பாதியில் வெளியேறவில்லை என்றால் அவரே எளிதில் முதல் பருவத்தை வென்றிருப்பார். மாறாக பெண்களில் ஓவியா, ஜூலி, காயத்ரி, நமீதா, ரைஸா, காஜல், பிந்து மாதவி, சுஜா வருணி என ஒவ்வொருவரும் இந்த ஷோவில் ஆட்டநாயகிகள். அவர்கள் கிட்டத்தட்ட எல்லா நாட்களையும் ஆதிக்கம் செலுத்தினார்கள். போட்டி வலுத்து வீடு ரெண்டாய் பிரியும் நிலை வந்தபோதும் பெயர் பெற்ற நடிகைகள் ஒரு அணியாகி அவர்களுக்குக் கீழ் சில ஆண்கள், புகழ் ஏணியில் இரண்டாம் நிலையில் உள்ள பெண் போட்டியாளர்கள் மற்றொரு அணியாகி அவர்களுடன் கூடமாட சில ஆண்கள் என முகாம்கள் அமைந்தன. இரண்டாம் பருவத்தில், ஆண் பங்கேற்பாளர்கள் கூடுதல் வலுவுடன் உறுதியுடன் போட்டியிட்டார்கள். குறிப்பாய் டானியல், மஹத், பாலாஜி ஆகியோர். ஆனால் இப்பருவத்திலும் ஐஸ்வர்யா, யாஷிகா, மும்தாஜ், நித்யா, ரித்விகா, விஜயலஷ்மி ஆகியோர் முடிசூடா ராணிகளாய் ஷோவை வழிநடத்தினர். போட்டி முறுகிய பின்னர் வீடு வடக்கு—தெற்கு என பிரிந்து பரஸ்பரம் மோதியது. மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோர் ஓர் அணி என்றால் இவர்களுக்கு தளபதிகள் போல மஹத் மற்றும் ஷாரிக் செயல்பட்டனர். இன்னொரு பக்கம் தென்னகப் பெண்கள் நித்யா, ரித்விகா, விஜயலஷ்மி, ரம்யா, ஜனனி ஐயர், வைஷ்ணவி ஆகியோர் ஒரு முகாம் அமைத்தனர். இந்த முகாமில் பெயர் அளவுக்குக் கூட ஆண்கள் வழிநடத்தும் ஆலோசனை நல்கும் இடத்தில் இல்லை. நமது பெண்ணியவாதிகள் sisterhood எனச் சொல்வார்களே அவ்வாறு பரஸ்பரம் ஆதரித்து ஆண்களை புறக்கணிக்கும் பெண்ணிய சகோதரிகளின் அமைப்பு ஒன்றைப் போல இந்த பிக்பாஸ் தென்னக பெண்கள் முகாம் செயல்பட்டது. இந்த முகாமில் சேர முடியாத ஆண்கள் (பொன்னம்பலம், பாலாஜி, அனந்த் வைத்தியநாதன்) தனித்தனியாய் பிரிந்து செயல்பட்டனர். – பிக்பாஸ் வீட்டின் வழக்கப்படி இந்த தனி வீரர்கள் வலுவிழந்து விரைவில் துவண்டனர். வெளியேற்றப்பட்டனர். இவர்களில் பாலாஜி மட்டுமே சிறிது காலம் தாக்குப் பிடித்தார்.

இப்போது இந்நிலை மலையாள பிக்பாஸ் முதல் பருவத்தில் எப்படி உள்ளது எனப் பார்ப்போம்.

பங்கேற்பாளர்களைப் பொறுத்தமட்டில், ஆண்களிலும் பெண்களிலும் இரண்டு பிரபல நட்சத்திரங்களை உள்ளே கொண்டு வந்தார்கள். அனூப் சந்திரனும் அரிஸ்டோ சுரேஷும் ஒரு பக்கம் என்றால், ஸ்வேதா மேனன் மற்றும் ரஞ்சினி இன்னொரு பக்கம். ஸ்வேதா விரைவில் வெளியேறினாலும் அவர் இருந்த வரையில் பெரும்பாலும் தலைவியாகவே நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டார். அவர் போன பிறகு ரஞ்சினி தனது அரசியல் மற்றும் ஆர்ப்பாட்ட அடாவடி சுபாவம் மூலமாக தொடர்ந்து வீட்டின் போக்கில் தாக்கம் செலுத்துபவராக இருந்தார். ஆரம்பத்தில், பெண்களில் தியா, ஹீமா, ஸ்ரீலஷ்மி, அஞ்சலி, அதிதி, அர்ச்சனா ஆகியோர் ஸ்வேதா மற்றும் ரஞ்சினியின் கீழ் இருந்து செயல்பட்டனர். ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல வீட்டின் அதிகார படிநிலையில் இருந்து ஸ்வேதாவும் ரஞ்சினியும் வழுக்கிட நிலைமை மாறியது. ஸ்வேதா ஆரம்பத்தில் எல்லோரது விருப்பத்துக்குரிய தலைவியாக, “தாயாக”, இருந்தாலும், பின்னர் மிதமிஞ்சி அனைவரையும் கட்டுப்படுத்துகிறவராய் ஆனார். இந்த முனைப்பு அவரை தனக்கு உடன்படாதவர்களை கண்காணித்து கண்டிப்பவராய், ஒடுக்குகிறவராய், அவர்களைப் பற்றி பொய்யும் புரட்டும் கூறுகிறவராக்கினது. அவரது பொய்களை பிக்பாஸ் அம்பலப்படுத்திட, அவர் வெளியேறுவது உறுதியானது. அவரது வெளியேற்றம் ரஞ்சினியை பலவீனப்படுத்தியது. இப்போது ரஞ்சினி பெண்களில் கணிசமானோரை தன் வசம் வைத்திருந்தபடியே அதிகம் எந்தப் பிரச்சனைகளிலும் பட்டுக் கொள்ளாதவராய் அமைதியானவராய் இருக்க முயன்றார். ஆனால் அவரது இயல்புக்கு நீண்ட காலம் இது இயலவில்லை. அவரது அதிகாரத் தளம் ஆட்டம் காண்பதை உணர்ந்த பிற பெண்கள் சின்னச் சின்ன அணிகளாய் பிரிந்து மறைமுகமாய் செயல்பட்டார்கள். ஸ்வேதாவின் ஆதிக்க காலம் தொட்டு அனூப், சாபு மோன், பஷீர், ஷியாஸ் ஆகியோர் அவரை வெளிப்படையாய் எதிர்க்கிறார்கள். ஆக, துவக்கம் முதலே மலையாள பிக்பாஸ் வீடு ஸ்வேதா / ரஞ்சினியின் தலைமையில் ஒரு பெண்கள் அணி, அனூப் / சாபு மோன் தலைமையில் ஒரு ஆண்கள் அணியுமாய் பிரிந்தது. ஸ்வேதா வெளியேறி, ரஞ்சினி தனிமையில் பலவீனமான பின்னர், ஆண்களின் முகாம் அவ்வாறே உறுதியாய் தொடந்தது.

இப்போது பெர்ளி சுரேஷ் மற்றும் ஸ்ரீனிஷை தன்னுடன் சேர்த்துக் கொண்டு தனி அணியாகிறார். அவரது சுட்டித்தனம், பாடி ஆடும் பாங்கு, குழந்தைமை, சுமாரான ஆனால் மனதைப் பறிக்கும் அழகு பார்வையாளர்களை வெகுவாய் கவர, பிற பெண்கள் மத்தியில் அவர் மீது கடும் பொறாமை தோன்றுகிறது.
இன்னொரு பக்கம், மோகன்லால் ஒரு அத்தியாயத்தில் சுரேஷைப் புகழ்ந்து பேச, அவரது பாட்டுப் பாடும் திறன் அவரை வெற்றியை நோக்கி நகர்த்தும் என ஊகிக்கும் பெண்கள் பலரும் அவருக்கு நெருக்கமாகிறார்கள். (அவரது குழந்தைத்தனமான கல்மிஷமில்லாத இயல்பு இதற்கு உதவுகிறது.) இப்போது பெர்ளி சுரேஷிடம் நெருங்கி நிறைய நேரம் பாட்டுப்பாடியும் உரையாடியும் கழிக்க, சுரேஷ் அவளைக் காதலிக்க துவங்குகிறார். எல்லா சிக்கல்களிலும் சச்சரவுகளிலும் அவர் வெளிப்படையாய் பெர்ளியை ஆதரிக்கிறார். பிற பெண்களிடம் இருந்து ஒரு கால்பந்தைப் போல சுரேஷை உதைத்து தன் பக்கம் கொண்டு சென்று விட்டார் பெர்ளி. இதோடு காண அழகான ஸ்ரீனிஷை வேறு பெர்ளி தன் ஜேப்பில் இட்டுக் கொண்டு போகிறார். இப்படி தனியாக இரு முக்கிய ஆண்களை பெர்ளி தன் வசப்படுத்தியதை உணரும் பிற பெண்கள் மிகவும் கடுப்பாகி, துவேசத்தில் அவளை தொடர்ந்து தூற்றுகிறார்கள், தனிமைப்படுத்துகிறார்கள்.

ஆண்களில் சுரேஷை விட அதிக வெற்றி வாய்ப்புள்ள ஒரு பிரகாச நட்சத்திரம் சாபுமோன். இதை உள்ளார்ந்து உணரும் பெண்களில் இருவர் அவரது அருகாமைக்காக போராடுகிறார்கள் – ஒருவர் ரஞ்சினி, மற்றொருவர் ஹீமா. ஹீமா சாபுவின் காதில் சென்று “ஐ லவ் யூ” சொல்லி பின்னர் அதை மோகன்லாலிடம் பகிங்கரப்படுத்துகிறார். இதுவும் போதாதென்று அவர் கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் பிற பெண்களிடம் தனக்கு சாபு மீதுள்ள ஈர்ப்பை காட்டுகிறார். ஹீமாவின் காதல் போலியானது, அவரை ஆட்கொண்டு தனது உடைமையாக்கும் தன்னல நோக்கு கொண்டது என புரிந்து கொள்ளும் சாபு அவரை நிராகரிக்கிறார்; ஒருமுறை அவரை தன் காலில் மிதித்த சாணியுடன் ஒப்பிடுகிறார். இதனால் காயப்படும் ஹீமா சாபுவை கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் எதிர்க்க முயல்கிறார்.
சாபுவும் சுரேஷும் பெண்களிடம் பெறும் இந்த கவனமானது இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டுமே பிரசித்தமானது; இதை விட்டு வெளியேறினால் சாபுவை இவர்கள் சீண்ட மாட்டார்கள். வெளியே அவர் ஒரு பெரிய நட்சத்திரம் அல்ல; மேலும் அவர் மணமானவர். சுரேஷும் வயதானவர்; பிரபலம் என்றாலும் பெரிய நட்சத்திரம் அல்ல. ஆனால் பெண்கள் மத்தியில் இந்த ஆண்கள், இந்த ணீறீஜீலீணீ னீணீறீமீs, பெற்ற முக்கியத்துவமும் மதிப்பும் வீட்டின் அரசியலுக்குள் கட்டமைக்கப்பட்டது. முதல் சில வாரங்களுக்குப் பிறகு இப்பெண்கள் இயல்பாகவே பலவீனமாய் உணர்ந்து ஆண்களின் ஆதரவை நாடுகிறார்கள். அதன் பிறகு மொத்த வீடும் ஒன்றிரண்டு ஆண்களின் தலைமையின்கீழ் வருகிறது.

இங்கு இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும் – வீட்டுத் தலைவரின் பெயர் மலையாள பிக்பாஸில் காரணவர். இது பாரம்பரிய நாயர் கூட்டுக்குடும்ப வீடான தறவாட்டின் ஆண் தலைவரது பெயர். உச்சபட்ச அதிகாரத்தைக் கொண்ட ஒரு சர்வாதிகாரி தலைவரே காரணவர்; இந்த பதவிப் பெயருக்குப் பின்னே ஆணாதிக்கம் நுணுக்கமாய் பின்னப்பட்டுள்ளது. ஆக ஒரு ஆணையோ பெண்ணையோ காரணவராய் பிக்பாஸ் வீட்டில் நியமிக்கும் பிக்பாஸ் ஒற்றை ஆண் அதிகாரத்துக்குக் கீழ் பலர் தலைகுனிந்து பணிந்து வாழும் நிலப்பிரத்துவ சூழலை நமக்கு நினைவுபடுத்தி, ஆணுக்குக் கீழ் பெண் வாழ வேண்டிய நிலையை மறைமுகமாய் வலியுறுத்துகிறார். இதுவே கேரள கலாச்சாரத்துக்கும் ஒத்து வருவதால் இந்த வீட்டில் ஆண்-பெண் உறவாடல் சற்று பிற்போக்காகவே உள்ளது.

மாறாக இத்தகைய ஆண் சார்பை பெண் பங்கேற்பாளர்களிடம் நீங்கள் தமிழ் பிக்பாஸில் காணவே முடியாது. வடநாட்டவர் பங்கேற்றாலும் கூட தமிழ் மண்ணில் நடக்கும் விளையாட்டு என்பதால் பெண்ணுக்கு கூடுதல் மரியாதை அளிக்கும் தமிழ்ப் பண்பாடே இந்த ஆட்டத்தின் அறமானது. உ.தா., மும்தாஜ் போன்ற ஒரு குலுக்கு நடிகை பற்றின ஆபாசமான குறிப்புகளை, சமிக்ஞைகளை, அவதானிப்புகளை ஆண் பங்கேற்பாளர்கள் ஒருமுறை கூட வெளிப்படுத்தவில்லை. மாறாக மும்தாஜ் தன் கவர்ச்சி பிம்பத்தில் இருந்து கழன்று கொண்டு ஒரு தாய் பிம்பத்தை வெற்றிகரமாய் ஏற்றுக் கொண்டார். ஆனால் மலையாள பிக்பாஸில் மும்தாஜுக்கு இணையான கிளாமர் நடிகையான ஸ்வேதா, அவர் என்ன தான் வீட்டின் தாயாக துவக்கத்தில் பாராட்டப்பட்டாலும், அனூப்பிடம் இருந்து தொடர்ந்து ஆபாசப் தாக்குதல்களுக்கு உள்ளானார். இதன் பொருள் தமிழர்கள் பெண்களை மிகுந்த மரியாதையுடன் எப்போதுமே நடத்துகிறார்கள் என்றல்ல; மாறாக பெண்களை ஆபாசமாய் சித்தரித்து பொதுவெளியில் கிண்டலடிப்பது தமிழ் மனத்துக்கு ஏற்கத்தக்கதல்ல என்பதே.

நான் பார்த்த வரையில் இந்தி பிக்பாஸின் பன்னிரெண்டாவது பருவத்திலும் கேரள பிக்பாஸின் பாணிதான் பின்பற்றப்படுகிறது. பெண்கள் ஆண்களுடன் ஒரு ஜோடியாக அங்கு தம்மை பாவிக்க வேண்டும். ஆணைப் பின்பற்றி அவனை கருத்தளவில் திருப்தி செய்கிறவளாக ஒரு பெண் போட்டியாளர் அங்கு இருக்க வேண்டும். தமிழ் பிக்பாஸ் ஒப்பிடுகையில் மிக வித்தியாசமானது.

பொதுவாக, தமிழர்களின் பிற்போக்கான நுண்ணுணர்வற்ற ஆணாதிக்கத்தைக் கண்டித்து நிராகரிக்கும் என் தோழி இந்த விசயத்தில் மட்டும் தமிழர்களின் பண்பாட்டின் ஆழத்தில் உள்ள சிறிய நன்மையை, முற்போக்கை, முதன்முதலாய் பாராட்டினார். தமிழகத்தில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த அவரது கனவின் சிறுதுளி இந்த ரியாலிட்டி ஷோ எனலாம்.