எக்ஸ்பிரஸ் அவென்யூ

நண்பனுக்குச் சட்டை எடுத்தோம்
அவன் பச்சையில் கட்டம்போட்டதை
நான் வெள்ளையில் பூப்போட்டதை
அவன் காக்கியை நான் டெனிமை
மாலில் தரை வழுக்கியது
கண்ணாடியைவிட கண்ணாடி
என் தோலுக்கு அடியிலிருப்பது தெரிந்தது
எதிரே ஒரு கடை
நாலரை அடி சிப்பந்திப்பெண்
அதே உயரத்துக்கு விளக்கு
திரேதாயுகத்திலிருந்து என்பதைப்போல்
இருவருக்கும் மாறாத முகபாவனை
ஓய்வறைக்குச் சென்றேன்
என் கன்னத்தில் இரண்டு அப்பு அப்பினேன்
அங்கே நானும்
இங்கே அந்தப்பெண்ணும்
நிற்கவிடாது செய்த ஏதோ ஒன்றுக்கு
என் பாராட்டு
மேலும்
திரும்ப வருவேன்

பின்பாலியல் உயிரி

ஒருகாலத்தில் நான் பெண்ணாக இருந்தேன்
அதாவது பதின்ம வயதில்
அப்போதெல்லாம் என் இடுப்பில் கைகளை ஊன்றி
எப்போதாவது நின்றால்
என் அம்மா கண்டிப்பாள்
“பெண்ணாக லட்சணமாக இரு”
பலவருடங்கள் கழித்து
பெண்ணாக இருக்க ஒருவாறாக மறந்தபின்
-தாடையில் முளைத்த முடிகளை
எந்த ஆணுக்காகவும்
நீக்க யத்தனிக்காது இருந்த வருடங்கள் அவை-
பெண்ணாக இருக்க
எனக்கு அபூர்வமாக ஆசைவந்ததுண்டு
கண்ணில் மை,
ரோஜா நிற நகப்பூச்சு அணிந்த நாட்களில்
-இதயத்திலும் அதே நிறக் காதல் ரத்தம்
ஊறிப் பரவும் அப்போது-
முயல்குட்டி என்று காதலன் குலாவ வந்ததுண்டு
அந்தக் கிளிஷே உருவகத்துக்காக
மார்பில் சாய்ந்த அவனை விலக்கித் தள்ளியதுண்டு
பின்னர் நாய்க்குட்டிகளாக இருக்கலாமென்று
இருவரும் ஏகோபித்து முடிவுசெய்தோம்
ஒரே நீளத்தில் இரண்டு நீளசங்கிலிகள்
ஒரு நாய்க்குட்டியின் சங்கிலி இன்னொன்றிடம்
என்றாலும் பரஸ்த்ரீகளிடம் நாள் கிழமை பார்க்காமல்
ஓடிய ஆண் நாய்க்குட்டியை
பெண்நாய்க்குட்டி கடித்துக் குதறாமல்
சங்கிலியை அறுத்துப்போட்டது

என் அடுத்த அடையாளம்
பின்பாலியல் உயிரி
பல்லாண்டுகள் பழகிய
நண்பன் வைத்தபெயர்
யாராவது நீயார் என்று கேட்டால்
குடித்திராவிட்டாலும் பின்பாலியல் உயிரி
எனத் தன்னிச்சையாகச் சொல்கிறேன்
நல்ல திடகாத்திர ஆண் ரோபோக்கள்
பங்குபெறும் ஐரோப்பியச் சந்தைக்கு
அடுத்தவாரம் செல்கிறேன்
ஆண் ரோபோவுக்கு பாட்டரிகள் உண்டு
அவற்றை அக்கறையோடு
சார்ஜ் செய்துவைப்பது
அவற்றைப் போட்டுவிடுவது
அவற்றை நீக்க வைக்கும்போது
எந்திர முரட்டுமேனியைத் தடவுவது

காமத்தின் என்சைக்ளோபீடியா
புதிதாக எழுதப்படவேண்டும்

தென்சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பு

எப்போதும்
‘வெஜிடேரியன்களுக்கு மட்டும்’
போர்டை அடையார் டைம்ஸ்
மயிலாப்பூர் டைம்ஸ்
தவிர வாய்களில் மாட்டியிருக்கிறார்கள்
கருகரு மீசை வாட்ச்மேன்கள்
எப்போதும் ஏதோ ஒரு காரைக்
கழுவிக் கொண்டிருக்கிறார்கள்
ஏதோ ஒரு மேல்மாடி வீட்டில்
வேலைசெய்யும் அவர்கள் மனைவிகள்
தென்சென்னையில்
அவர்கள் கொண்டுவந்து வைத்திருக்கும்
மதுராந்தகங்கள், கல்பாக்கங்கள், திண்டிவனங்கள்
எப்போதும் சாவகாசமாய் நடக்கும்
ஒரு குண்டுப்பூனை
அதை அணைத்துக் கொள்வதால்
பைத்தியம் பிடிப்பதைப்
பத்துவருடம் தள்ளிவைக்கமுடியும்