நவம்பர் 22, 2017 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான மனித உரிமைகள் அமைப்பு’ ஒரு அமர்வை ஏற்பாடு செய்கிறது, அதன் தொடர்ச்சியாக அந்த அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிடுகிறது, அந்த அறிக்கையின் சாராம்சம் இதுதான்: “இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்வது வேதனையளிக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. மூன்றில் ஒரு பெண், மிக கடுமையான பாலியல் அத்துமீறல்களை அவள் வாழ்நாளில் ஒருமுறையாவது எதிர்கொள்கிறாள். உலக அளவில் இதற்கான விழிப்புணர்வுகள் அதிகரித்த போதிலும், பொறுப்பான வழிமுறைகளை தொடர்ச்சியாக நம்மைப் போன்ற அமைப்புகள் பரிந்துரை செய்த போதிலும் இந்தக் குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் செல்கிறது. அதற்கு முக்கியமான காரணம் சர்வதேச அமைப்புகள் பரிந்துரைக்கும் வழிமுறைகளை அந்தந்த நாடுகள் முழுமையாக ஏற்பதில்லை அல்லது அதற்கு அத்தனை முக்கியத்துவம் தருவதும் இல்லை. ஒவ்வொரு நாட்டின் பழமையான பண்பாட்டு, கலாச்சார விழுமியங்கள் பெண்களுக்கு எதிரான மனப்பான்மையைக் கொண்டிருப்பதை அவர்கள் உணர்வதில்லை. சமூகத்தில் நிலவியிருக்கும் இந்தக் கருத்தாக்கங்களினால் பாதிக்கப்பட்ட பெண்களின் மீதே அதற்கான பழியையும் சுமத்திவிடும் (Victim Blaming) போக்கே தொடர்கிறது. இந்த மனப்பான்மையால் பாதிக்கப்படும் பெண்கள் தங்கள் மீது இழைக்கப்பட்ட குற்றங்களைப் பெரும்பாலான நேரங்களில் வெளியே சொல்லாமல் மறைத்து விடுகின்றனர். அது குற்றம் செய்பவர்களுக்கு சாதகமாகப் போய்விடுவதால் அவர்கள் மேன்மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகின்றனர், அதனால் பெண்கள் மீண்டும் மீண்டும் இத்தகையை குற்றங்களினால் பாதிக்கப்படுகிறார்கள் (Revictimization)”. இதில் Victim Blaming மற்றும் Revictimization என்பது அந்த அறிக்கையில் கவனப்படுத்த வேண்டிய வார்த்தைகள் என்பதுபோல அடிகோடிடப்பட்டிருக்கின்றன.

இந்தக் குற்றங்களுக்குத் தீர்வு என பல நெறிமுறைகள் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தாலும் அடிப்படையான ஒன்றை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது “பெண்களின் அனுமதியில்லாமல் அவள் மீது நடக்கும் எந்த அத்துமீறலும் குற்றச் செயலே. உடை, குணாதிசயம், பண்புகள், தொழில், கலாச்சார விழுமியங்கள் போன்ற எந்தக் காரணங்களைக் கொண்டும் அந்த அத்துமீறலை நியாயப்படுத்த குடிமைசமூகம் நினைக்கக்கூடாது”. பெண்களின் மீது நிகழும் தொடர் வன்முறைகள், அத்துமீறல்கள், குற்றங்கள் போன்றவைகளுக்கான தீர்வு என்பது மேலே குறிப்பிட்ட அந்த அணுகுமுறையில் இருந்து தான் தொடங்குகிறது.
சமீபத்தில் பிங்க் என்ற ஹிந்திப் படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் ஒரு நீதிமன்றக் காட்சியில் பெண்களின் மீது பாலியல் வல்லுறவு குற்றம் சாட்டம்பட்ட இளைஞன் ஒருவனிடம் அந்த பெண்களின் சார்பாக வாதிடும் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்வார். “எதை வைத்து அந்த பெண்கள் பாலுறவுக்குத் தயாராகத்தான் இருந்தார்கள் என சொல்கிறீர்கள்?” என கேட்பார்.

அதற்கு அந்த இளைஞன் “நான் கூப்பிட்டவுடன் அவர்கள் என்னுடன் இரவு விருந்துக்கு வந்தார்கள், என்னுடன் மது அருந்தினார்கள், சிரித்துப் பேசினார்கள், குறைவான உடை அணிந்திருந்தார்கள் அதையெல்லாம் வைத்துதான் நான் அவர்கள் பாலுறவுக்குத் தயாராக இருந்தார்கள் என்ற முடிவுக்கு வந்தேன்.”
இதுதான் நமது சமூகத்தின் பொது மனசாட்சி. ஒரு பெண்ணை அவளின் உடையை வைத்து, அவளின் அணுகும் முறையைக் கொண்டு, அவளின் சிரிப்பைக் கொண்டு, அவளின் இயல்பான பண்புகளைக் கொண்டு அவளைப் பாலியல் விருப்பங்களைப் பற்றி எளிதான ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம். பெண்களின்மீது நடக்கும் அனைத்து விதமான வன்முறைகளுக்கும் இந்தப் பொது மனப்பான்மை முக்கியமான காரணமாக இருக்கிறது என்பதைத்தான் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றன. ஆனால் இன்னமும் ‘தண்டனைகள் அதிகமாகினால் குற்றங்கள் குறைந்துவிடும்’ என்ற மேலோட்டமான சிந்தனைகளிலேயே நாம் இருக்கிறோம்.

டெல்லி நிர்பயா வழக்கிற்குப் பிறகு பெண்கள்மீதான பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளை இந்திய அரசாங்கம் கடுமையாக்கியிருக்கிறது அது மட்டும் இல்லாமல் சிறார் குற்றங்கள் சட்டங்களிலும் கூட (Juvenile Justice Act) நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. குற்றங்கள் குறைந்துவிட்டதா என்ன? அதிகமாகிக் கொண்டுதான் செல்கிறது. இதற்கான முழுமையான தீர்வு என்பது தனிமனிதர்களுக்கான தண்டனைகளை அதிகப்படுத்துவதில் இல்லை, இந்தக் குற்றச் செயல்களுக்கும் சமூகத்தின் விழுமியங்களான தொடர்புகளைத் திறந்த மனதுடன் பரிசீலிப்பதும், பெண்களுக்கு எதிராக நமது சமூக அமைப்பில் உள்ள கெட்டிப்பட்டு போன சிந்தனைகளை உடைப்பதும் அது தொடர்பாக ஒரு ஆரோக்கியமான சுய பரிசோதனையை செய்து கொள்வதுமே ஆகும். அதற்கான தேவையை பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் போன்ற சம்பவங்களில் இருந்து உணரலாம்.

இந்த பொள்ளாச்சி சம்பவங்களைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுந்த விவாதங்களை நுட்பமாக கவனித்துப் பார்த்த யாராலும் இந்த விஷயம் சார்ந்த நமது சமூகத்தின் எண்ணோட்டங்களை சுலபமாய் புரிந்து கொண்டிருக்க முடியும். மூன்று விதமான மனவோட்டங்கள் மக்களிடம் இருந்தன. ஒன்று, “தூக்கில் போட வேண்டும்”, “சுட்டுக் கொல்ல வேண்டும்”, “உடனடியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” போன்ற பொது உணர்வெழுச்சியின் விளைவாக வரக்கூடிய அதீத மனநிலை. ஒரு குற்றச் செயல் நடக்கும்போது அதன் மீது ஒரு ஆழ்ந்த புரிதலற்ற அல்லது அதை சார்ந்து எழக்கூடிய மேலோட்டமான உணர்வுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வருவது தான் இப்படிப்பட்ட எண்ணங்கள். இவை வெறும் உடனடி உணர்வெழுச்சியின் வெளிப்பாடே அல்லாமல் அதன் வழியாக எந்த ஒரு தீர்வையும் எட்ட முடியாது. இதை தவிர்த்து மேலும் இரண்டு விதமான கருத்தாக்கங்களைப் பொதுவாகக் காண முடிந்தது. வலதுசாரி அமைப்புகளை சார்ந்தவர்கள் பெரும்பாலும் இந்த சம்பவங்களுக்கு காரணமாக பெண்களையே சுட்டிக்காட்டினர். அவர்களது உடை, மாறிவரும் பழக்கவழக்கங்கள், பெண்களுக்கு என்று இந்தக் கலாச்சார அமைப்பு கட்டிவைத்திருக்கும் பிம்பங்களை உடைத்துக் கொண்டு அவர்கள் வெளியேவருவது போன்றவை காரணங்களாக சொல்லப்பட்டன. அதுவும் ஒரு பத்திரிகை இதற்கான பழியைத் திராவிட அமைப்புகளின் மீது போட்டது. அதாவது “திராவிட அமைப்புகள்தான் பெண் கல்வி, பெண் சுதந்திரம், பாலின சமத்துவம் என்றெல்லாம் பேசி பெண்களின் புரதான பணிகளில் இருந்து வெளியே கொண்டுவந்து விட்டது. அதன் விளைவாகதான் அவர்கள் இது போன்ற குற்றங்களை எதிர்கொள்கின்றனர். குடும்ப அமைப்பினுள்ளே பெண்கள் இருந்தால் இவை போன்ற பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடக்காது” என்கிறது. சாலையில் விபத்துகள் அதிகரிக்கின்றன என்பதற்காக “இனி யாரும் போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது, எங்கு சென்றாலும் நடந்தே தான் செல்ல வேண்டும்” என்று சொல்வதைப் போன்ற அபத்தமானது கருத்தாக்கம் அது.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் இருந்த‘Victim Blaming’ எவ்வளவு அதிகமாக இங்கு நடந்தது என்பதைக் கண்கூடாகப் பார்த்தோம். ஒரு குற்றச்செயலில் பாதிக்கப்படுபவரின் மீதே அதற்கான பழியை சுமத்தும் அளவிற்கு பெண்களுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருக்கும் சமூகத்தில் அவர்களுக்கான பாதுகாப்பை நாம் எப்படிப் பெற முடியும்? அப்படிப்பட்ட சமூகத்தில் இது போன்ற குற்றங்கள் எழுவது இயல்பானதுதானே! பெண்களுக்கு எதிராக இங்கு நிகழும் குற்றங்களுக்கு இந்த சமூகமும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருக்கும்போது, நாம் எப்படி தனிநபர்களுக்கு மட்டும் தண்டனையைக் கொடுக்க முடியும்? “தண்டனைகள் கடுமையானால்..” போன்ற கருத்தாக்கங்களின் வழியாக இந்த சமூகம் குற்றத்தின் முழு பொறுப்பையும் தனிநபர்களின் மீது செலுத்திவிட்டுதான் ஒதுங்கிக்கொள்ளத்தானே விழைகிறது!

ஒரு சமூகத்தில், ஒரே விதமான குற்றங்கள் தொடர்ச்சியாக நடக்கும்போது நாம் அந்தக் குற்றங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே அணுகிக்கொண்டிருக்காமல், அந்தக் குற்றச் செயலை எல்லாபரிணாமங்களின் வழியாகவும் திறந்த மனதுடன் அணுக வேண்டியது அவசியமாகிறது. அந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களின் தனிப்பட்ட மனநிலை என்பது ஒரு பரிணாமம் என்றால், அந்தக் குற்றச் செயல் சார்ந்து இருக்கக்கூடிய இந்த சமூகத்தின் மனநிலை இன்னொரு பரிணாமம். அதே போல அதைத் தடுக்க நினைப்பதில் அந்த அரசாங்கங்களுக்கு இருக்கக்கூடிய உள்ளார்ந்த ஆர்வம் அதற்கான சட்டங்கள் அடுத்த பரிணாமம். இவை மூன்றையும் நாம் நுட்பமாக ஆராய்ந்து அதில் உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதின் வழியாகவே நாம் அந்த தொடர் குற்றச்செயலைத் தடுக்க முடியும்.

தனி நபர்களின் மனநிலையைப் பொறுத்தவரையில் ஒரு முக்கியமான கேள்வி இந்த சம்பவம் சார்ந்து இங்கு எழுப்பப்படுகிறது. “இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எப்படி சுலபமாக இது போன்ற குற்றச்செயல்களில் சிக்கிக்கொள்கிறார்கள்? சமூக வலைதளங்கள் அதற்கு முக்கியமான காரணம் என்று சொல்லலாமா?”
கடந்த ஐம்பதாண்டுகளில் கிடைத்த கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் விளைவாக பெண் சுதந்திரம் என்பதை ஓரளவுக்கேனும் உணரத் தொடங்கிய முதல் தலைமுறை பெண்களைப் பெரும்பாலும் உள்ளடக்கியது தான் இன்றைய காலம். கிடைத்த கல்வி, வேலைவாய்ப்புகளின் வழியாக பெண்களுக்கான பொருளாதாரத் தன்னிறைவும், சார்பற்ற நிலையும் இன்று சாத்தியமாகியிருக்கிறது. அதன் விளைவாக ஆண்ஙீபெண் உறவுகளுக்கு இடையே இருந்த இறுக்கம் இப்போது சற்று தளர்வடையத் தொடங்கியிருக்கிறது, முந்தைய காலகட்டங்களில் இருந்த மரபான ஆண் பெண் உறவு என்பது இப்போது மிக இயல்பான ஒன்றாக மாறியிருக்கிறது. அதை ஒரு ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்க வேண்டும். ஆனால், சில நேரங்களில் இந்த உறவுகளை சில ஆண்கள் தங்களது பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்த தொடங்கும்போது, அதுவும் அந்தக் குறிப்பிட்ட பெண்ணின் நம்பிக்கையை சீர்குலைத்து அதை செய்யும்போது பெண்கள் அதில் சுலபமாக சிக்கிக்கொள்கிறார்கள். இன்னும் இரண்டு தலைமுறைகளைத் தாண்டி வரும்போது நிச்சயம் பெண்கள் இப்போது உள்ளதைவிட மிகத் தெளிவானவர்களாக மாறிவிடுவார்கள். அப்போது அவர்களின் நம்பிக்கைகளை இப்போது உள்ளது போல சுலபமாக ஏமாற்றிவிட முடியாது.

சமூக வலைதளங்களின் காரணமாகத்தான் இப்படிப்பட்ட குற்றச்செயல்கள் நடக்கின்றன என சொல்வது உண்மையல்ல. சமூக வலைதளங்கள் இதை எளிமையாக்கியிருக்கின்றன என்று வேண்டுமானால் சொல்லலாம். அது ஒரு ஊடகம். அவ்வளவுதான். ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பழக நினைப்பதை, நெருங்க நினைப்பதை இந்த ஊடகம் சுலபமாக்கியிருக்கின்றன. மற்றபடி இவை மட்டுமே முதன்மையான காரணம் என்று ஏற்க முடியாது. இவை இல்லையென்றால் இன்னொரு ஊடகம் வழியாக அந்தப் பெண்ணை நெருங்கத் தொடங்குவான். ஆனால் சமூக வலைதளங்களின் வழியாக இவை போன்ற ஆபத்துகள் வருவதற்கு வாய்ப்புண்டு என்பதைப் பெண்கள் உணர்ந்து அதைப் பொறுப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் உபயோகப்படுத்துவது அவசியமாகிறது.
இந்த சம்பவத்தின் தொடர்பாக நாம் சுயபரிசீலனை செய்து கொள்ள வேண்டிய மற்றொன்று நமது குடும்ப அமைப்பு. நமது குடும்ப அமைப்பு என்பது குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எத்தனை இலகுவாக இருக்கிறது என்பதை நாம் ஆராய வேண்டும். பாலின பேதங்களையும், பெண்களின்மீதான ஒடுக்குமுறையையும் போதிக்கும் அமைப்பாகவே நமது குடும்ப அமைப்பு இருந்து வருகிறது, குழந்தைகளின் மீது பெற்றோர்களுக்கு வரக்கூடிய இயல்பான அன்பையும், பாசத்தையும், உணர்வுகளையும் கலாச்சாரம், பண்பாடு, சாதி போன்ற கோட்பாடுகளைக் கொண்டு நிராகரிக்கிறோம். அவர்களின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை எல்லாம் ஸ்டிக்மட்டைஸ் செய்து அதைப் பற்றி பகிர்ந்து கொள்வதையே நாம் தடுத்து விடுகிறோம். பெண் உடல், கற்பு போன்றவற்றின் மீது செயற்கையாய் பூசப்பட்ட புனிதபிம்பங்களை அவர்களுக்குள் திணிக்கிறோம். அதனால் அவர்கள் இது தொடர்பாக தங்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளையும், இன்னல்களையும் வெளியே சொல்லாமல் தங்களுக்குள் மறைத்துக் கொள்கின்றனர்; இந்த வெளிப்படையற்ற நிலையைத்தான் குற்றவாளிகள் உபயோகப்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த பொள்ளாச்சி சம்பவத்தையே எடுத்துக் கொண்டால், கடந்த நான்கைந்து ஆண்டுகளில் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாய் சொல்கிறார்கள். ஏன் அது இத்தனை ஆண்டுகளாய் வெளியே தெரியவில்லை? இருநூறு பெண்களில் ஒரே ஒரு பெண் வந்து சொல்லியிருந்தால் கூட இதை அப்போதே தடுத்திருக்கலாமே? ஏன் ஒரு பெண் கூட இதை வெளியே சொல்லவில்லை? யாரின் மீது உள்ள பயம்? நமது குடும்ப அமைப்பின் மீதுள்ள பயம். ஒரு வேளை, ஏதோ ஒரு பெண் அவள் வீட்டில் இதைச் சொல்லியிருந்தால் என்னவாகியிருக்கும்? அவளது பெற்றோர் முதிர்ச்சியுடனும், புரிதலுடனும் இதை எதிர்கொண்டிருப்பார்களா? நிச்சயம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அப்படி இருந்தால் யாராவது அவர்களது வீட்டில் சொல்லியிருப்பார்களே! இந்தக் குடும்ப அமைப்பின் மீது அவளுக்கு இருக்கும் பயத்தைதான் அந்த ஆண்கள் அவ்வளவு காலமும் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். இதே ஒரு ஆண் இது போன்ற சிக்கலில் மாட்டியிருந்தால் குடும்ப அமைப்பு இதேபோன்றுதான் இறுக்கமாக இருந்திருக்குமா அவன்மீதே குற்றம் சொல்லியிருக்குமா? அவனை சிக்கலில் இருந்து வெளிக்கொண்டுவருவதில் தீவிரமாக இருந்திருக்குமா? அல்லது மானம், மரியாதை, கலாச்சாரம், பண்பாடு என வெட்டிக் கதைகள் பேசிக்கொண்டிருந்திருக்குமா? ஒரு குடும்பத்தைப் பொறுத்தவரை அதன் பண்பாட்டு பெருமையைவிட, அதன் மரபான புனிதங்களைவிட, சாதியப் பெருமைகளைவிட அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கை முக்கியமானது. அதுதான் முதன்மையானதாக இருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லாமல் அதற்கு நேர்மாறாக இயங்கிக் கொண்டிருக்கும் அமைப்பினால் ஒருபோதும் தனது குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக இருக்க முடியாது. ஒரு குடும்பம் என்பது பாலினப் பாகுபாடுகள் இல்லாது இருப்பதும், தங்களது குழந்தைகளிடம் இறுக்கத்தைக் கலைத்து வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதும்கூட பெண்களின்மீதான குற்றங்களைத் தடுப்பதில் அவசியமானவை.

தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில், மனித உறவுகளுக்கிடையேயான மதிப்பீடுகள், எதிர்பார்ப்புகள், பரஸ்பர புரிதல்கள் போன்றவை மாறியிருக்கின்றன. இரண்டு பேருக்கு இடையேயான உறவு என்பதே மேலோட்டமானதாக, சகிப்புத்தன்மைகள் அற்று, சுயநலம் நிரம்பியதாய் மாறிக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் சக மனிதர்கள்மீதான வெறுப்புகளும், பிரிவினைகளும், பாகுபாடுகளும் மிக சுலபமாக நிறுவப்படுகின்றன. அதற்கு நமது மரபு சார்ந்த சாதி, மதம், மொழி, இனம் போன்ற அடையாளங்கள் அத்தனை சாதகமானவைகளாக இருக்கின்றன. சமூக வலைதளங்களில் இவை போன்ற அடிப்படைவாத அடையாளங்கள் வேறெப்போதும்விட மிக அதிகமாக வெளிப்படுவதை நாம் சமீப காலங்களில் தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறோம். ஒருவரைவிட இன்னொருவர் உயர்ந்தவர் என சொல்வதற்கு இந்த பிறப்பின் வழியாக வந்த அடையாளங்கள் ஏதுவாகத் துணை நிற்கின்றன. பெண்கள் மீதான வன்முறைகள், குற்றங்கள் அதிகமானதற்கும் உறவுகளுக்கு இடையே குறைந்துபோன மதிப்பீடுகள் கூட ஒரு காரணமாக இருக்கலாம். பெண் உடல் ஒரு பண்டமாக, ஒரு கவர்ச்சி பொருளாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது அதே நேரத்தில் கற்பு என்பது புனிதமானது என்பது வலியுறுத்தப்படுகிறது. இதுபோன்ற பண்பாட்டு முரண்பாடுகளும், சக மனிதர்கள்மீதான சகிப்புத் தன்மையின்மையும், இறுக்கமான குடும்ப அமைப்பும் பெண்களுக்கு எதிரான பெருகி வரும் குற்றங்களுக்கு முக்கியமான காரணம்.

ஒரு குடிமை சமூகமாக, இந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்பின்மீதும் நம் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது. அவள் ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியேறும் போது இந்த சமூகத்தின் மீதுள்ள நம்பிக்கையில், நம்மீது உள்ள நம்பிக்கையில்தான் செல்கிறாள். அவளின் இந்த நம்பிக்கையைக் கேள்வி கேட்க முடியாது. ஏனென்றால் இந்த சமூகம் அவளுக்குப் பாதுகாப்பானது என்பதை அவள் முழுமையாக நம்புகிறாள். அது உண்மையில்லை என்றால் நாம்தான் ஒரு சமூகமாக நம்மை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதை எப்படி பாதுகாப்பானதாக மாற்றுவது என்பதை யோசிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரானதாக இருக்கும் பழமைவாத மரபுகளையும், சித்தாந்தங்களையும், விழுமியங்களையும் பெருமைகள் என தூக்கி சுமக்காமல் அதனை காலத்திற்கு ஏற்றது போல தகவமைத்துக்கொள்ள வேண்டும். நதிகளுக்கு பெயரிடுவதனாலோ, தேசத்திற்கு பெயரிடுவதாலோ மட்டுமே ஒரு சமூகம் பெண்களுக்கான சமூகமாக மாறிவிடாது. அந்த சமூகத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பாதுகாப்பானதாக உணர வேண்டும், தங்களின் உரிமைகளைப் பெறுவதில் தடங்கல்கள் எதுவும் இல்லாதிருக்க வேண்டும். அவளுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுடன் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நிற்பதற்குத் தயாராக இருக்க வேண்டும், அவள் மீதான போலி கற்பிதங்கள், முன் அனுமானங்கள் என எவையும் இல்லாமல் அவளின் சுதந்திரத்தின்மீது முழு மதிப்புடன் நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும். ஏதோ ஒரே ஒரு பெண் ஒரு நாட்டின் உயர்ந்த அதிகாரப் பொறுப்பிற்கு வந்து விட்டால் அந்த நாடே பெண்ணிய சுதந்திர உணர்வு மிக்க நாடாக பெருமைப்பட்டுக் கொள்கிறது. உண்மையில் அதில் எந்தப் பெருமையும் இல்லை. ஒரு நாட்டின் விளிம்பு நிலையில் உள்ள ஒரு பெண்ணுக்கும் எல்லோருக்கும் கிடைக்கும் நீதியும், உரிமைகளும், பாதுகாப்பும் சமமாகக் கிடைக்கிறதா என்பது தான் முக்கியமானது. அப்படி இல்லாத பட்சத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான காரணங்கள் நம் ஒவ்வொர் இடமும் ஏதோ ஒரு வடிவத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை. இது போன்ற சம்பவங்கள் வழியாக நாம் அதை உணர்வதும், நம்மை மாற்றிக்கொள்வதும்தான் இந்த சம்பவங்களில் இருந்து நாம் பெறும்பாடங்களாக இருக்க வேண்டும்.