சுல்தானின் நாணயங்கள்

நேற்றிரவு கடை சாத்தும்போது

சுல்தான்களின் பழங்கால நாணயங்களை சேகரிப்பவன் ஒருவன் வந்தான்

‘பத்து நிமிடங்கள் உங்களிடம்

சுல்தான்களின் நாணயங்களைக் காட்ட விரும்புகிறேன் ‘ என்றான்

அந்த நாணயங்களைத் தொடும்போது

என் மூதாதையர்களின் கதகதக்கும்

உடல்களைத் தொட்டேன்

அவை பாம்புகள் பின்னிக் கிடப்பதுபோன்ற எழுத்துக்களால் கருத்திருந்தன

‘சுல்தான்கள் எங்கே நாடு பிடித்தாலும்

பத்தே நாள் ஆண்டாலும்

தங்கள் பெயரில் ஒரு நாணயத்தை வெளியிடுவார்கள்’ என்றும்

‘ பணத்திலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது

என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்’ என்றும்

‘வழிபாட்டிற்குப் பின்

ஆற்றில் வீசியெறிந்த காசுகளிலிருந்தும்

சாக்கடை நீரிலிருந்தும்

இதை சேகரித்தேன்’ என்றும்

பலவாறு பேசிக்கொண்டிருந்தான்

எனக்கு வீட்டிற்குப் போகவேண்டியிருந்தது

‘ மீண்டும் சந்திப்போம்‘ என்றுகைகுலுக்கினேன்

‘ வந்த வேலையை மறந்துவிட்டேன் பாருங்கள்

உங்களது புதிய கவிதை நூல் வேண்டும்

அவை எத்தனை தினார்கள்?’

என்று அவன் கேட்டதும்

திடுக்கிட்டு அவன் முகத்தைப் பார்த்தேன்

‘நான்தான் சுல்தான் வந்திருக்கிறேன்’

என்றான் கரகரத்த வேறு குரலில்

 

 

பயணத்தின் பாதைகள்

எல்லா ரயில் பயணங்களிலும்

படியருகே சக்கர நாற்காலியிலிருந்தபடி

முகத்தில் காற்றறைய

நிலக்காட்சிகள் காண்பேன்

ஒவ்வொருமுறையும்

பித்தேறிய

ஏதோ ஒரு கணத்தில் பத்துவினாடிகள்

என் சக்கர நாற்காலியின்

‘ப்ரேக்‘கை விடுவிப்பேன்

 

ஓடும் ரயியின் வேகத்தில்

ஒரு சக்கர நாற்காலி மெல்ல

பெருவெளி நோக்கி நகர்வது

ஒரு அற்புதம்

 

பயணத்தின் பாதைகள்

நாம் நிச்சயிப்பதுபோல இல்லை

நண்பர்களே

 

 

உட்கார்ந்திருக்கும் மனிதனை அணைத்தல்

அன்பை வெளிப்படுத்த

அணைத்துக்கொள்வதே சிறந்தது

உட்கார்ந்தே இருக்கும் மனிதனை

எப்படி அணைத்துக்கொள்வது?

நின்றுகொண்டிருக்கும் இருவர் அணைத்துக்கொள்வதுபோல

உட்கார்ந்திருக்கும் ஒருவனை

நிற்கும் ஒருவர் அணைப்பதில்

ஒரு சங்கடம் இருக்கிறது

அது ஒரு கிணற்று நீரைக்

குனிந்து கை நீட்டி

தவறி விழுந்துவிடாமல்

தொடுவதுபோல

 

மறதியின் கடல்

முதல் சந்திப்பின் அறிமுகத்திலேயே

உன் தொலைபேசி எண்ணைக்கொடுத்துவிட்டு

 

அழைப்பாள் எனக் காத்திருக்கும்

எத்தனையாவது ஆள் நீ?

 

இந்த எண் யாருடையது என

அவள் குழம்பிக்கொண்டிருப்பதை

உனக்கு எப்படிப் புரிய வைப்பது?

 

அவ்வளவுதான் இந்தக் காலம்

காதில் இரைகிறது

மறதிகளின் பெருங்கடல்