கருவறை இருட்டு

 

ஆழ்துளைக் கிணற்றில்

குழந்தை விழுந்து

36 மணி நேரமாகிவிட்டது

 

ஒரு நீர் நிரம்பிய குளத்தில்

படிக்கட்டில் இறங்கிச் செல்வதுபோல

இருளின் குளத்தில்

ஒவ்வொரு படிக்கட்டாக இறங்கிச் செல்கிறான்

அந்தரத்தில் நூறு படிக்கட்டுகளை கடந்துவிட்டான்

 

மீட்புக் குழுவினர்

புதிர்வட்டப்பாதைகளில்

பதறப் பதற அலைந்து திரிகிறார்கள்

பூமியை எங்கிருந்து தோண்டுவது

என ரகசிய வழிகளைத் தேடுகிறார்கள்

 

அன்பின் கோடிக்கரங்கள்

குழந்தையைத் தொட்டுத்தூக்க நீள்கின்றன

பாதாள உலகமோ வெகு தொலைவில் இருக்கிறது

 

அவனது தாய்

அப்போதுதான் அவனைத் தாலாட்ட

ஒரு துணித் தொட்டில் தைத்துக்கொண்டிருக்கிறாள்

உலகின் மகத்தான தாலாட்டுப்பாடலொன்றை

கவியொருவன் புனைந்துகொண்டிருக்கிறான்

 

குழந்தை விழுந்துகொண்டிருக்கும்

அந்த இருட்டு

எங்கே போய்க்கொண்டிருக்கிறது

என்று தெரியவில்லை

கருவறை இருட்டாக இருந்தால் நல்லது

*

 

கடைசியாக குழந்தை இருந்த இடம்

 

சவப்பெட்டியில் இருப்பது

கிணற்றில் மீட்கப்பட்டதாகச் சொல்லப்படும்

குழந்தைதானா

என்று கேட்கிறார்கள் சிலர்

 

நம் காலத்தில்

எதுவேண்டுமானாலும் நடக்கலாம்

 

குழந்தை இருப்பது

கிணற்றிலோ

சவப்பெட்டியிலோ அல்ல

ஆழ்குழிக்கு ஒரு நிமிடம் முன்னால்

வயற்பரப்பில்

வண்ணத்துப் பூச்சியைத்

துரத்தியபடி ஓடிக்கொண்டிருக்கிறான்

 

அங்குதான்

குழந்தை கடைசியாக இருந்தது

*

 

திரும்பிப் பார்த்த தீபாவளி

 

தீபாவளிக்கு மறுநாள்

தாமதமாக கிடைத்த பணத்தோடு

தாமதமாக வந்த தகப்பன்

புத்தாடைகளையும்

பட்டாசுகளையும் கொண்டு வருகிறான்

 

ஒரே ஒரு வீட்டு வாசலில் மட்டும்

மத்தாப்பு பொரிகிறது

ஒரே ஒரு வீட்டின் குழந்தைகள் மட்டும்

புதுத்துணியைத்

தமக்குத் தாமே உற்றுப்பார்த்தபடி

ஓடித்திரிகிறார்கள்

 

ஊருக்கு வெளியே சென்றுகொண்டிருந்த தீபாவளி

நின்று ஒரு கணம்

திரும்பிப் பார்க்கிறது

*

 

மீண்டும் ஒரு கடைப்பெண்

 

அவமானத்தில் என் முகம்

கறுத்துவிடும் நாளில் எல்லாம்

நான் வழியில் தென்பட்ட ஏதேனும்

ஒரு கடைக்குள் நுழைந்துவிடுவேன்

எனக்கு எதுவும் தேவையில்லை

ஆனால் ஒரு வெற்றிடத்தை நிரப்ப

எதையேனும் வாங்கிக்கொண்டிருப்பேன்

 

இன்றும் அப்படித்தான்

மேற்கொண்டு எந்த வழியிலும் செல்ல முடியாமல்

ஒரு ஸ்வீட் ஸ்டாலுக்குள் புகுந்துகொண்டேன்

 

கூட்டமாக இருந்தது

தீபாவளி இனிப்புப் பெட்டிகளை

மக்கள் பரபரப்பாக வாங்கிக்கொண்டிருந்தார்கள்

பணியாளர்கள் யாரையும் ஏறெடுத்துப் பார்க்காமல்

பம்பரமாய் சுழன்றுகொண்டிருந்தார்கள்

 

கூட்டத்தில் தயங்கிக்கொண்டிருந்த என்னை

கவனித்தாள் ஒரு விற்பனைப்பெண்

உங்களுக்கும் தெரிந்த ஒரு புகழ்பெற்ற நடிகையின்

சாயலில் இருந்த அந்தப் பெண்

இப்படி ஒரு கடையில்

மேக்கப் இல்லாமல்

கடைப்பெண்ணாக இருந்தால்

எவ்வளவு வசீகரமாய் இருப்பாளோ

அதைவிட வசீகரமாய் இருந்தாள் அவள்

 

சட்டென தான் கவனித்துக்கொண்டிருந்த

வாடிக்கையாளனை அருகில் இருந்தவளிடம்

ஒப்படைத்துவிட்டு நேராக

என்னிடம் ஓடி வந்தாள்

ஒரு மலர்ந்த சிரிப்புடன்

ஒரு கூடையைக் கையிலெடுத்துக்கொண்டு

என் தேர்வுக்காக

அருகிலேயே நின்றுகொண்டாள்

நான் ஏதோ ஒரு பலகாரத்தை எடுத்தேன்

சட்டென காதருகே குனிந்து

“அது வேண்டாம் சார் கொஞ்சம் பழசு

இது நல்லாயிருக்கும்” என

நான் அவ்வளவாக விரும்பாத ஒரு பண்டத்தை

எடுத்துத்தந்தாள்

நான் மறுப்பின்றி வாங்கிக்கொண்டேன்

 

இனிப்புகளின் வரிசையில்

என் கசப்பை போக்கும் இனிப்பு

எதுவென்று தெரியாமல் நின்றேன்

“சார் ஸ்வீட் டேஸ்ட் பண்றீங்களா?” என்றாள்

எனக்கு அது வழக்கமல்ல என்றபோதும்

சரி என்றேன்

அவள் தந்தது ஒரு துண்டு இனிப்பல்ல

ஒரு முழு லட்டு

மேலாளன் கண்டால் பணி நீக்கம் செய்வான்

சட்டென ஒரு டிஸ்யூ பேப்பரில்

அதைச் சுற்றிக் கொடுத்தாள்

 

பில் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன்

என் உதவியாளன்

கடையின் வேறு பகுதியில் நின்றிருந்தான்

“சார் நான் உங்கள் சக்கர நாற்காலியைக்

கீழே இறக்கலாமா? என்றாள்

ஒரு சிறுமியைப்போல

வாசலிலிருந்து ஓரடி உயரத்திலிருந்தது கடை

‘உன்னால் முடியாது’ என்றேன்

‘முடியும் சார்’ என இறக்க முயன்றாள்

அவளுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது

தயக்கத்துடன் தன் முயற்சியைக் கைவிட்டு

“நான் வேணா உங்க ஆள் வரும் வரை

இந்தச் சேரை சும்மா பிடித்துக்கொண்டிருக்கட்டுமா”

என்றாள்

நான் வாய்விட்டு சிரித்தேன்

 

அவள் மிகவும் நாணமுற்றவளாக

“சார் நான் உங்களுக்குக் கொஞ்சம்

தண்ணீர் கொண்டுவரட்டுமா?” என்றாள்

நான் தண்ணீரை வாங்கிக்குடித்துக் கொண்டிருக்கும்போதே

“சார் உங்கள் பொருள்களைக் காரில் வைக்கட்டுமா?”

என்றாள்

 

அவளுக்கு அங்கே நான் இருக்கும்

ஒவ்வொரு வினாடியும்

எனக்குத்தர ஏதேதோ இருந்துகொண்டேயிருந்தது

கடையில் வாடிக்கையாளர்கள்

க்யூவில் நின்றுகொண்டிருந்தார்கள்

சக பணியாளர்கள்

அவளை வினோதமாக உற்றுப்பார்த்தார்கள்

யாரென்று தெரியாத ஒருவனிடம்

அவள் மனம் யாரோ ஒருவரின் சாயலைக்கண்டது போலும்

அது வணிகத்தின் உபசரிப்பல்ல என்பது

அது அங்கு யாருக்கும் நிகழவில்லை

என்பதில் கண்டுகொண்டேன்

 

மனம் முறியும்போது

சிறிய மாற்று ஏற்பாடுகள்

சிறுபொழுதுக்கு எப்படியோ நிகழ்கின்றன

 

காரில் ஏறும்போது

கதவருகில் நின்றுகொண்டிருந்தவளிடம்

‘உன் பெயர் என்ன?’ என்றேன்

அவள் பெயர் சொன்னாள்

அந்தப் பெயர் என்னை நிலைகுலைய வைத்தது

ஒரே நடத்தையுள்ள இருவருக்கு

ஒரே பெயரா?

இந்த நாளில் கடவுள்

என்னோடு விளையாடுகிறார்

என்பதைப் புரிந்துகொள்ள

அதிக நேரமாகவில்லை

 

என் வழியில்

வாகனத்தைச் செலுத்திக்கொண்டுபோனேன்

எங்கும் சூழ்ந்திருந்தது மழை இருள்

நாளை அந்தக் கடைக்குப் போக மாட்டேன்

அந்தக் கடைப்பெண்

நாளை என்னைத் திரும்பிக்கூட பார்க்காதபடி

அவள் மனம் திரிந்துவிடக்கூடும்

*

 

பலியாட்களுடனான ஒப்பந்தங்கள்

 

ஒரு நாளைக்கு

நான் ஏழுமுறைதான்

வாள் முனையால் கீறப்பட வேண்டும் என

கடவுள் தெளிவாக விதித்திருக்கிறார்

 

நீ என்னை இன்று

எட்டாவது முறையாகவும்

காயப்படுத்துகிறாய்

 

நீ சில நாட்களில்

ஆறு முறை மட்டுமே காயப்படுத்தும்போது

நமக்கிடையே இன்னும் நம்பிக்கைக்கு

இடமிருக்கிறது என்று நம்புகிறேன்

 

ஐந்துமுறை மட்டுமே காயப்படுத்தும்போது

நாம் எல்லாவற்றையும் பேசித்தீர்த்துக்கொள்ளலாம்

என்று நினைக்கிறேன்

 

நான்குமுறை மட்டுமே காயப்படுத்துபோது

ஒரு விலையுயர்ந்த பரிசால்

உன்னை சமாதானப்படுத்தி விடலாம்

என்று தோன்றுகிறது

 

மூன்று முறை மட்டுமே காயப்படுத்தும்ப்போது

உன் நெஞ்சில் கருணை வற்றிவிடவில்லை

என்று சமாதானம் கொள்கிறேன்

 

இரண்டு முறை மட்டுமே காயப்படுத்தும்போது

எல்லாத் தவறும் என்னுடையதுதான் என

உண்மைக்கு மாறாக ஒத்துக்கொள்கிறேன்

 

ஒருமுறை மட்டுமே காயப்படுத்தும்போது

அது காயமே அல்ல

ஒரு முத்தம் என்று விளக்கமளிக்கிறேன்

 

கடவுளின் உத்தரவுக்குப் புறம்பாக

நீ ஒரு நாளில் எட்டாவது முறையாக

சவுக்கை வீசும்போதுதான்

எனக்கு வலி உறைக்கத் தொடங்குகிறது

என் நெஞ்சில் கனல் மூள்கிறது

 

அன்பே

அடிவாங்குகிறவர்களோடு

நாம் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள்

புனிதமானவை

அதை மீறாதே

மனமுறிந்து

உன்னை விட்டு நீங்கிவிடாதிருக்க

இந்த மரத்தில் வௌவாலாக

அத்தனை பிடிவாதமாகத்

தொங்கிக்கொண்டிருக்கிறேன்.