தலைவனை காதல் பீடித்துக் கொண்டது. தலைவியின் நிலையை அறிய வேண்டுமல்லவா? அதை அறிந்து கொள்ளும் அதிகாரம் இது.
1.
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

எளிது: இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து.

இவளது உண்ணும் கண்களில் இரு நோக்குகள் உண்டு. ஒரு நோக்கு நோய் நோக்கு. மறுநோக்கோ அந்நோய்க்கு மருந்து.

இதில் தலைவனுக்குக் குழப்பமான குறிப்பே கிடைக்கிறது. நோய் நோக்கில் முகத்தைத் திருப்பிக் கொண்டு கலங்கடிப்பவள், மருந்து நோக்கில் அன்பொழுகப் பார்க்கிறாள்.

இப்பாடலை ‘குறிப்பறிதல்’ என்கிற அதிகாரத்தின் பிடியிலிருந்து விடுவித்து ஒரு தனிப்பாடலாக வாசிக்கையில் மேலும் இனிதாகிறது. மேலும் செறிவாகிறது.

எது நோயோ அதுவே மருந்தாகும் விந்தை காமத்தில் நேர்கிறது. மருந்து வேறெங்கும் வெளியில் இல்லை என்பதால்தான் நாம் நோய்மையின் சந்நிதியிலேயே விழுந்து கதற வேண்டியுள்ளது. அதாவது ஒரு நோக்கிலேயே மருந்தும், நோயும் கலந்திருக்கிறது என்கிற வாசிப்பிற்கு நகர முடிகிறது.
2.
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

அவளது கடைக்கண் சிறுநோக்கம்… அதுவே காமத்தில் சரிபாதியை நிறைத்து விடுகிறது. இல்லையில்லை, அதற்கு மேலும் நிறைத்து விடுகிறது.

இப்போது தலைவனுக்கு நற்குறிப்பு கிடைத்துவிட்டது. தலைவி பொது நோக்கு நோக்கவில்லை.களவு நோக்கு நோக்குகிறாள்.களவும்,காதலும் இரட்டைப் பிறவிகள் அன்றோ ? நள்ளிரவில் பரணில் இருந்து இறங்கி வரும் தலைவியைக் கண்டதாகக் கத்துகிறாள் ஒரு சங்கத்துத் தாய். நம் வீட்டில் பேய்களின் நடமாட்டம் அதிகமாகிவிட்டது… நீ பார்த்தது நம் தலைவியின் உருவெடுத்து வந்த ஒரு பேயாக இருக்கும் என்று கூசாமல் புளுகுகிறாள் தோழி. நமது மாணவக் கண்மணிகளுக்கு காதல் பூக்கும்போது அது ‘ஸ்பெஷல் கிளாஸ்’ களோடு சேர்ந்தே பூப்பதைக் காண்கிறோம்.

களவுநோக்கு காமத்தில் செம்பாகம் எனும்போதே கவிதை வானமண்டலத்தைத் தொட்டுவிடுகிறது. “அன்று பெரிது” என்பது அதையும் தாண்டி மேலும் ஒரு “டைவ்” அடிப்பது.
3.
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

அவளது கள்ளநோக்கும், நாணமும்தான் நீராய் மாறி நித்தமும் காதலை வளர்க்கிறது.

யாத்தல் எனில் கட்டுதல். யாப்பு என்பது இங்கு இருவரையும் கட்டிப் பிணைத்திருக்கும் காதலைக் குறித்து நிற்கிறது. அக்காதல் செழித்து வளர நீர் வேண்டுமல்லவா? அவளது நோக்கும், நாணமும்தான் அந்த நீர். அவை தலைவனுக்குக் கிடைத்துவிட்டன.

இறைஞ்சுதல் – வணங்குதல், குனிதல், இங்கு நாணுதல்.
4.
யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்.

நான் அவளை நோக்கினால் அவள் நிலத்தை நோக்குவாள். நோக்காத போதோ என்னை நோக்கி மெல்லச் சிரிப்பாள்.

காதல் பிறந்தவுடன் கள்ளம் பிறப்பது போலவே குறும்பும் கூடவே பிறந்து விடுகிறது. அந்தக் குறும்பில் விளைந்த நகை இது.

இருவரும் தமக்குள் காதலை ஒளித்துக் கொண்டு விளையாடும் விளையாட்டுதான் காதல் நாடகத்தின் ரசமான பகுதி. வெளியரங்கமான பிறகு ஏறத்தாழ கணவன், மனைவி ஆகிவிடுகிறார்கள். பிறகென்ன? ஐயங்கள், குழப்பங்கள், கூச்சல், கூப்பாடு. தீராத கவலை, வற்றாத கண்ணீர்..
5.
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

அவளென்னை நேராக நோக்கவில்லைதான். ஆயினும் ஒரு கண்ணைச் சுருக்கி, ஒரு கள்ளநோக்கு நோக்கி சிரிக்காமல் இல்லை.

‘சிறங்கணித்தல்’ என்பதற்கு ஒரு கண்ணைச் சுருக்கி நோக்குதல் என்றும், கடைக்கண் நோக்கு என்றும் பொருள் சொல்கின்றன அகராதிகள். எப்படியாயினும் கண் கொண்டு நிகழ்த்தப்படும் காதலின் சேட்டைகளில் ஒன்று என்பது தெளிவு.
6.
உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

புறத்தே அயலார் போல கடுஞ்சொல் பேசி நடித்தாலும் அகத்தே இருக்கும் அன்பின் சொல் விரைவிலேயே உணரப்படும்.

‘லூசு’ என்கிற வசைக்கு காதலர்கள் எவ்வளவு அகமகிழ்ந்து போகிறார்கள்! இரா முழுக்க அந்தச் சொல்லையே உருட்டி, உருட்டிப் பார்த்தபடி விழித்துக் கிடக்கிறார்கள்.

உறுதல் – சேருதல், உறார்- சேராதவர், அயலார், பகைவர்

செறுதல் – சினத்தல், செறார்- சினக்காதவர்
7.
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு

எளிது: செறாச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறார்போன்று உற்றார் குறிப்பு.
சினக்காது சொல்லும் கடுஞ்சொல்லும், சினந்தது போன்று நோக்கும் நடிப்பும் அயலார் போன்று தெரிவோரைக் காதலர் என்று காட்டும் குறிப்பு.
காதை இனிக்கச் செய்யும் இது போன்ற குறள்கள் புரிவதற்கு முன்பே பிடித்துப் போகின்றன. மந்திரமொன்றை திருத்தமாகப் பாடி முடித்தபிறகு ஒரு பக்தனுக்குள் என்ன நேர்கிறதோ, அதுவே இதுபோன்ற குறள்களிலும் நேர்கிறது. நேர்ந்தால் நாமொரு நல்வாசகர். இந்த மந்திரத்தன்மை குறைந்து விடுவதால்தான் அசை பிரித்து குறளை எளிமையாக்குவதைப் பண்டிதர்கள் விரும்புவதில்லை போலும்? நாம் அசை பிரித்துப் புரிந்துகொண்ட பிறகு திரும்பவும் குறளை மந்திரமாக்கி வாசித்து அனுபவிப்போமெனில் அதுவே நல்ல வாசிப்பு.
8.
அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்

எளிது : அசையியற்கு உண்டு ஆண்டுஓர்ஏர் யான்நோக்கப்
பசையினள் பைய நகும்.
அவள் சினத்தை நிஜமென்று நம்பி வாடி வருந்தி நின்றேன். அப்போது சின்னதாய் ஒரு சிரிசிரித்தாள். அதுவே எனக்கான நற்குறிப்பு.
‘உண்டு ஆண்டு ஓர் ஏர் இதில் ஏர்’ என்கிற சொல்லிற்கு அழகு என்றும், நன்மை என்றும் இரு பொருள்கள் உண்டு. “அழகு” என்று பொருள் கொள்ளும் உரைகள் ‘அசையியற்கு’ என்கிற சொல்லை அசைதல், வளைதல், மெலிதல் என்று விரித்து அதைத் தலைவியின் பண்பாக்கி ‘மெல்லியவள்’ என்று சொல்கின்றன. ‘துவளுகின்ற துடியிடையாள்’ என்கிறது கலைஞர் உரை. அதாவது தலைவன் நோக்குகையில் தலைவி மெல்ல நகுகிறாள். அப்போது அவளிடம் ஒருவித புதிய அழகு பூக்கிறதாம்.
‘நன்மை’ என்று பொருள் கொள்ளும் உரைகள் ‘அசையியற்கு’ என்கிற சொல்லைத் தலைவனின் நிலையாக்கி ‘வாடி வருந்தி நிற்பவனுக்கு’ என்பதுபோல் பொருள் சொல்கின்றன. அப்படி அவன் வருந்தி நின்று மனம் சோர்ந்து போகும்போது அவனைத் தெம்பூட்டும் விதமாக அவள் ஒரு சிரிசிரித்து விடுகிறாள். அந்தச் சிரிப்புதான் அவனுக்கான நற்குறிப்பு என்கின்றன இவ்வகை உரைகள்.
பசையினள் – அன்பானவள், பரிவானவள்
9.
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

தமக்குள் ஒன்றுமேயில்லை என்பது போல பொது நோக்கு நோக்குதல் காதலர்க்கே உரித்தான கள்ளம்.
10.
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

கண்ணும், கண்ணும் பேசி காதல் புரியத் தொடங்கி விட்டால் பிறகு வாய்ச் சொற்களால் பயனொன்றும் இல்லை.
இப்போது பொதுநோக்கு என்கிற நடிப்பைத் துறந்து இருவரும் காதல்நோக்கு நோக்கிக் கொள்கிறார்கள். வாய் திக்கும்; திணறும். சொற்கள் நீளும்; குறையும்; உளறும். கண்களின் பாஷையிலோ சிக்கலொன்றுமில்லை.
அழகர் இப்பாடலைத் தோழியின் எண்ணமாகச் சொல்கிறார். ‘இருவர் கண்களிலும் ஒன்றே போலான கள்ளத்தனம் தெரிவதால் இவர்கள் தம்மிடம் சொல்லும் சொற்கள் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை’ என்று தோழி நினைப்பதாகச் சொல்கிறார்.
வாய்ச் சொற்கள் தேவையே இல்லாதபடிக்கு தலைவனும், தலைவியும் உள்ளம் கலந்து நிற்பதோடு நிறைகிறது காமத்துப்பாலின் இரண்டாம் அதிகாரம்.
சிலர் இதைக் கண்டதும் காதல் என்று கேலி பேசலாம். ஆனால் தொல்காப்பியம் இதை ‘இயற்கைப் புணர்ச்சி’ என்று முறை செய்கிறது. ஊழ்வினையின் பயனால்தான் காதலர் கலக்கின்றனர் என்கிறது. ‘பாலது ஆணையின் ஒத்த கிழவனும், கிழத்தியும் காண்ப…’ என்கிறது நூற்பா. பால் எனில் ஊழ்.
இயற்கைப் புணர்ச்சியில் உள்ளங்கள்தான் கலந்தனவா? உடல்கள்? அதற்கும் வாய்ப்புண்டு என்றே ஆய்வுகள் சொல்கின்றன. சான்றோர் என்னை முனியலாகாது ஏடு என்ன சொல்கிறதோ அதையே நான் சொல்கிறேன். “அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்பதில் நெஞ்சம் என்பது ஒருவித இடக்கரடக்கலே கலந்தவை உடல்கள்தான் என்கிறார் ஒரு மூத்த தமிழறிஞர். யாதும் தெய்வத்தின் சித்தம் என்பதால் மனிதர்களை முறைத்துப் பயனில்லை.
சரி… நமது நோக்கம் கவிதைதான்… கலகமல்ல. அடுத்த அதிகாரம் ‘புணர்ச்சி மகிழ்தல்’ அதாவது நிகழ்ந்த புணர்ச்சியை எண்ணி எண்ணி மகிழ்தல்.