நலம் புனைந்துரைத்தல்

தலைவியின் அழகு நலத்தைப் புகழ்ந்துரைக்கும் அதிகாரம் இது.

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள். (1111)

அனிச்சமே இதுவரை நீயே மெல்லியவள் என்றிருந்தாய். இவளோ நின்னினும் மெல்லியள்.

அனிச்சத்தை வாழ்த்துவதுபோல வாழ்த்திவிட்டு தலைவியை அதனினும் மேலான இடத்தில் வைத்துப் புகழ்கிறார். பெண்ணைப் பூவாகக் கண்ட முதல் கவி யார்? அந்தக் கவிதை எப்போது எழுதப்பட்டிருக்கும்? தொல்காப்பியத்திற்கு முந்தைய காலத்திலேயே பிறந்திருக்க வாய்ப்புள்ள இந்த உவமை, இலக்கியம் இருக்கும் மட்டும் இருக்கும். ஒரு ஆண் கொஞ்சம் மலர்ந்து மணந்த அந்த ஆதி கணத்திலேயே பூ பூவையாகி இருக்கக் கூடும்.

பூ பூவையாகி, பூவையராகி பேருந்தின் முன்னிருக்கையில் அமர்ந்திருக்க, பொறுக்கியொருவன் சீட்டுக்கடியில் காலை விட்டு நோண்டுவது நவீன வாழ்வின் சித்திரம். மலரைக் கண்டு மனிதன் இன்னொரு மலராக வேண்டுமென்பதுதான் இயற்கையின் விருப்பம். ஆனால் விபரீதமாக சமயங்களில் குரங்காகி விடுகிறான்.

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூஒக்கும் என்று. (1112)

பலரும் பூ என்று கண்டு செல்லும் அதை அவளின் கண் என்று மயங்கி நிற்கிறாயே மடநெஞ்சே!

காதலில் வீழ்ந்த தலைவனின் கண்கள் காதலின் கண்கள் ஆகிவிடுகின்றன. அவை காண்பதெல்லாம் ஒரே காட்சி. அக்காட்சி முழுக்க ஒரே முகம்.அது தலைவியின் முகம். எங்கெங்கும் அவள் நீக்கமற நிறைந்துவிடுகிறாள். பூவில் மட்டுமல்ல, புழுவிலும் கூட காதலியின் முகமே நெளிந்து எழும் பருவம் அது.

மையாத்தல் – மயங்குதல்

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
 வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு (1113)

அவள் மேனிதளிர்; பற்கள் முத்து; மணமோ நறுமணம்; கண்ணது வேல்; தோளது வேய்.

இதில் புத்தம் புதிய உவமை ஒன்றுமில்லைதான். ஆனால் சப்தம் புதிது. சப்த சொர்க்கம் இது. இந்த சப்த இனிமையால் ஒரு இனிப்புப் பண்டத்தை வாயுள் அடக்கிச் சுவைப்பது போல, குறளொன்றைச் சித்தத்துள் இருத்தி நாளெல்லாம் சுவைக்கலாம்.

முறி – தளிர், முத்தம் – முத்து, வெறி – நறுமணம், வேய்- மூங்கில்

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.( 1114)

என் தலைவியின் கண்களைக் கண்டால், தான் இதற்கு இணையில்லையென்று குவளை நாணி நிலம் நோக்கும்.

குவளையில் செங்குவளை,கருங்குவளை என்று இரண்டுண்டாம். கண்ணிற்கு உவமையாவது கருங்குவளை. குவளையை நான் இலக்கியங்களில்தான் அதிகம் கண்டிருக்கிறேன். நேரில் கண்டதாக நினைவில்லை அல்லது அந்தப் பெயரோடு சேர்த்துக் கண்டதில்லை. குளத்தில் காணக்கூடும் என்று சொல்கிறார்கள். முதலில் குளத்தைத் தேடிப் பிடிக்க வேண்டும். பிறகு குவளையை.

மாணிழை – சிறந்த அணிகலன்களை அணிந்தவள்

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை ( 1115 )

அந்தோ! இவளொரு பிழை செய்து விட்டாள். அனிச்சப்பூவைக் காம்பு கிள்ளாமல் தலையில் சூடி விட்டாள். எனவே பாரம் தாளாது இவள் இடை ஒடியப்போவது உறுதி.

அந்தோ! என்கிற பதற்றம் சொல்லில் இல்லை, ஆனால் பொருளில் ஒளிந்துள்ளது.

‘நல்ல பறை படா’ என்கிற வரி நுட்பமானது. இடை ஒடிந்து செத்து விட்டது. சாவு வீடென்றால் பறை முழங்க வேண்டுமல்லவா? அந்தப் பறைதான் அந்த வரியில் முழங்குகிறது. ஆனால் ‘நல்ல பறை படா’ என்றெழுதுகிறார். அதாவது மங்கல வாத்தியங்கள் இல்லை. சாவிற்கு இசைக்கப்படும் பறைதான் அவள் இடைக்கு இசைக்கப்பட வாய்ப்பு என்கிறார். பரிமேலழகர் உரை இதை ‘நெய்தற் பறை’ என்கிறது.

கால் – காம்பு, நுசுப்பு – இடை

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன். ( 1116)

எது மதி? எது எம் தலைவியின் முகமென அறியாது வானத்து மீன்கள் கலங்கித் தவிக்கின்றன.

விண்மீன்கள் சமயங்களில் ஓடி எரிந்தடங்குவதைக் கண்டிருக்கிறோம். அந்த ஓட்டம்தான் இந்தப்பாடலில் உள்ளதா என்பதில் தெளிவில்லை. உரைகள் பலவும் ‘தன் நிலையில் இல்லாது திரிகின்றன’ என்பது போல உரை சொல்கின்றன.

நிலவு இலக்கியத்தின் தீராத செல்வம். குன்றாத பிரகாசம். ஒவ்வொரு நாளும் தோன்றுவது ஒரே நிலவல்ல. காண்பதும் அதே கண்ணல்ல. அது ஒரு கிரகம், எங்கோ தூரத்தில் இருக்கிறது நிம்மதியாக இருக்கட்டும் என்று விட்டுவிடுவதில்லை நம்மவர். தனக்கு நேரும் ஒன்றை நிலவின் மேல் ஏற்றிப் பாடுவது கவிமரபு. ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ என்கிற வரி நிலவு உதிர்ந்து உலகு இருண்ட பின்னும் ஒளிரும் வரியல்லவா?

காதலன் உடன் இருக்கிறான். நிலவு தண்ணென்றிருக்கிறது. மந்த மாருதம் வீசுகிறது. அவன் உடன் இல்லை. பிரிந்து சென்று விட்டான். தலைவியை விரகம் வாட்டுகிறது. உடனே நிலவில் குப்பென்று தீப்பற்றிக் கொள்கிறது. ‘நெருப்பு வட்டமான நிலா’ என்று நொந்து சாகிறாள் ஒரு தனிப்பாடல் தலைவி.

காதல் வந்ததும் நிலவில் காதலர் முகம் தெரிய வேண்டும் என்பது ஒரு நியதி. ஒரே ஒரு முகம்தான் தெரிய வேண்டுமென்பதால் நவீனக்காதலர் மதியைப் புலியென அஞ்சுவர்.

பதி – இருப்பிடம்

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து ( 1117 )

தேய்வதும், நிறைவதுமான நிலவில் உள்ளது போன்று கறையேதுமுண்டோ எம் தலைவியின் முகத்தில்?

முதல் பாடலில் மதியும், முகமும் ஒத்தது என்று சொன்னவர் இதில் ஏன் ஒவ்வாதது என்று சொல்கிறார். ஒரு நாள் மங்கியும், இன்னொரு நாள் பிரகாசித்தும் தோன்றுகிற தன்மை இவளிடத்தில் இல்லை.என்றும் குன்றாத ஒளியிவள். எனவே இரண்டும் ஒன்றல்ல.

அறுதல் – தேய்தல் மறைதல் அவிர்தல் பிரகாசித்தல் அவிர்மதி- பிரகாசிக்கும் மதி

மாதர் முகம்போல ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி ( 1118)

அவள் முகம் போல நீயும் ஒளிவிட வல்லையாயின், மதியே ! நான் உன்னையும் கூடக் காதலிப்பேன்.

வாழி என்பதில் ஒரு சின்னக் கேலி ஒளிந்திருக்கிறது.அந்தக் கேலி முடியவே முடியாது என்று அடித்துச் சொல்கிறது. கூடவே ‘பாவம்.. ஏழை நிலவு’ என்பதான இரக்கமும் தொனிக்கிறது இதில்.

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி. ( 1119)

நிலவே! என் தலைவியின் முகமும், உன் முகமும் ஒன்று போலவே ஒளிவிட வல்லது என்று பீற்றிக்கொள்ள விரும்புகிறாயா? அப்படியாயின் பலர் காண வந்துவிடாதே.

பலர் காண வந்தால் உன் அறியாமையை எண்ணி ஊர் சிரிப்பது உறுதி. ‘வெளியில சொல்லிறாத மச்சி’ என்பது நவயுக இளைஞர்களின் கேலி. இது இக்குறளின் தொனிக்கு அருகில் இருக்கிறது.

தோன்றல் – தோன்று+அல், தோன்றிவிடாதே

மலரன்ன கண்ணாள் மலர் போன்ற கண்களை உடையவள்

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். (1120)

அனிச்ச மலரும், அன்னத்தின் இறகும் தலைவியின் காலடிக்கு நெருஞ்சி என உறுத்தும். அவ்வளவு மிருது அவள் காலடி.

வதனத்தில் சந்திரபிம்பம் உள்ளது போன்று கால்களில் ஒரு ஓவியம் உள்ளது. முனிகளின் கமண்டலத்து நீரைக் காக்கைகள் குடிக்கச் செய்யும் ஓவியம் அது. “இட்டடி நோவ, எடுத்தடி கொப்பளிக்க..” என்று அமராவதியின் நடை வருத்தத்தைப் பாடுகிறான் அம்பிகாபதி. எவ்வளவு மெதுவாக வைத்தாலும் வைத்த அடி நோகுமாம். வைத்து எடுத்த அடி கொப்பளித்து விடுமாம். அவ்வளவு மெல்லியது அவள் பாதங்கள் என்கிறான்.

இந்த அதிகாரம் அனிச்சத்தில் துவங்கி அனிச்சத்தில் முடிகிறது. இடையில் வருகிற இன்னொரு அனிச்சத்தையும் சேர்த்தால் இந்த அதிகாரத்திலேயே அனிச்ச மலர் மூன்று முறை பாடப்பட்டுள்ளது. ஆனால் அனிச்சத்தை ‘பாடல் பெற்ற ஸ்தலம்’ போன்ற பெருமைக்கு உயர்த்திய குறள் ஒன்றுண்டு. அது ‘விருந்தோம்பல்’ அதிகாரத்தில் வருகிறது..

 “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”

உலகத்து மலர்களுள் மென்மையானது என்று குறிப்பிடப்படுவது அனிச்சம். இம்மலர் குறித்துக் குழப்பமான செய்திகளே நிலவுகின்றன. தற்போது இது முற்றாக அழிந்து விட்டது என்று சொல்கின்றனர் சிலர். வேறு சிலர் எங்கேனும் ஒளிந்திருக்கும், நம்மால்தான் கண்டுபிடிக்க முடியவில்லை என்கின்றனர். இதன் நிறம் குறித்த குறிப்புகள் ஏதும் இலக்கியங்களில் இல்லை. ஆனால் கேட்டதும் கொடுக்கும் கூகுளில் தேடினால், ஊதா, செம்மஞ்சள் என்று விதவிதமான வண்ணங்களில் ‘அனிச்சத்தை’ காண முடிகிறது. தேடி வந்தோரை வெறுங்கையோடு அனுப்பும் பழக்கம் கூகுளுக்கு எப்போதும் கிடையாது.