இனிவரும் பதினெட்டு அதிகாரங்களும் கற்பியலின்கீழ் வருகிறது. அதாவது, காதல் கொண்டு மணம்புரிந்தபின் நிகழும் நிகழ்ச்சிகளைப் பேசுவது. கற்புகால புணர்ச்சியை ‘நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சி’ என்கிறது தொல்காப்பியம். நெஞ்சம் அச்சத்தின் தளையிலிருந்து விடுபட்டு நிகழும் நிம்மதியான புணர்ச்சி என்று இதை விளக்கலாம். ஆனால் ‘திருட்டு மாங்காய்க்குத் தித்திப்பு கூட’ என்கிறது நம் பழமொழி. திருட்டில் ஒரு சாகஸமுண்டு. அந்த சாகஸமும் அதுதரும் பரவசமுமே தித்திப்பைக் கூட்டிவிடுகின்றன என்பது களவில் வல்லோர் கூற்று. காதல் பருவத்துப் புணர்ச்சி உற்சாகமிக்கதெனினும் கூடவே அகப்பட்டுவிடுவதற்கான அச்சமும் நடுக்கமும் கொண்டதுதான். மணமேடை ஏறியபின்தான் ‘நிதானமாக நின்று விளையாட முடியும்’ என்கிறார் தொல்காப்பியர்.

‘நிதானமான ஆட்டத்தில்’ சமயங்களில் சலிப்பேறிவிடுகிறது. ‘காதல் ஒரே சோப்பில் குளிக்கும். இல்லறம்தான் ஆளுக்கு ஒரு சோப்பு கேட்கும்’ என்பது பாதசாரியார் பொன்மொழி. திருமணத்திற்குப் பிறகு காதல் போய்விட்டதென்று தம்பதியர் சிலர் புலம்பக் கேட்டிருக்கிறோம். அது போனவழி ஆய்வுக்குரியது. சரி… நாம் குறளுக்குத் திரும்புவோம்.

கற்பியலின் முதல் அதிகாரம் ‘பிரிவாற்றாமை’. தலைவி, தலைவனின் பிரிவை ஆற்றமாட்டாது வருந்தும் அதிகாரம். கல்வி கற்கப் பிரிவது, தூதுவனாகப் பிரிவது, வேந்தனின் வினைமுடிக்கப் பிரிவது, பரத்தையர் பிரிவு எனப் பல பிரிவுகள் பேசப்படுகின்றன சங்கத்தில். ‘பொருட்வயின் பிரிவு’ நாம் நன்கறிந்தது. இன்றுவரை நம்மை விடாது வதைத்துத் கொண்டிருப்பது. ‘பொருள்வயின் பிரிவு’ என்கிற தலைப்பிலேயே விக்கிரமாதித்யன் எழுதிய கவிதையொன்று இங்கு நினைக்கத்தக்கது.

பிரிவாற்றாமை

            செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

                வல்வரவு வாழ்வார்க் குரை. (1151)

‘செல்லமாட்டேன்’ என்பதை மட்டும் எம்மிடம் சொல். மற்றதனைத்தையும் நீ திரும்புகையில் யார் உயிர்தரித்திருக்கப் போகிறார்களோ அவர்களிடமே சொல்லிக்கொள். எம்மிடம் சொல்லிப் பயனில்லை.

தலைவன் சொல்லச் சொல்லவே அது மூர்க்கமாக மறுக்கப்படும் சித்திரத்தை இக்கவிதையில் காணலாம். பிரிவு எனும் சொல்லுக்கே காதைப் பொத்தித் தரையில் அமர்ந்துவிடும் பெண் இவள். இந்த இரண்டடிக்குள் ஒரு பிணம் கால் நீட்டிப் படுத்திருக்கிறது. ‘வல்வரவு’ என்பது நல்வரவிற்கெதிரான நல்லதொரு சொல்லாக்கம்.

தலைவன் பிரியும் எண்ணத்தைப் பக்குவமாக முதலில் தோழியிடம்தான் சொல்வான் என்பதால் இது தலைவனது பிரிவை எதிர்த்துத் தோழி உரைத்தது என்கிறார் அழகர். தலைவி கூற்றாகக் கொண்டாலும் எதுவும் குறைவதில்லை மாறாக சூடு கூடுகிறது.

இவ்வதிகாரத்தில் வரும் பிற குறள்கள் யாவும் தலைவி தோழிக்குரைத்தது.

   இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

                புன்கண் உடைத்தால் புணர்வு (1152)

முன்பெல்லாம் எனக்கு அவர் பார்வையேகூட இன்பம் தருவதாய் இருந்திருக்கிறது. இன்றோ அவர் புணர்ச்சியும் கூட பிரிவிற்கான குறிப்பாய் அமைந்து வாட்டுகிறது.

தலைவன் வழக்கத்திற்கு மாறாய் அதீதமாய் அன்பைப் பொழிதல், கூடுதலாய் புணர்ச்சியை விரும்புதல் போன்றவை அவன் பிரிந்து செல்லப் போவதற்கான குறிப்பாய் அமைந்துவிடுகின்றன. எனவே புணர்ச்சியும் கசந்துவிடுகிறது. ஒரு சங்கப் பாடல் இதை ‘கழிபெருநல்கல்’ என்கிறது. அதாவது ‘மிகுதியான அன்பை நல்குவது’’

ஒரு ஆண் நெருங்கி அருகமர்ந்து, மெல்லத் தலைவருடி  “மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!”  என்று துவங்கும்போது, பெண் உள்ளம் உருகி கண்கள் சொக்குவதற்குப் பதிலாக அதிகமாக விழித்துக்கொள்ள வேண்டும் என்பது நம் முன்னோர் முடிபு.

பார்வல் – பார்வை, புன்கண் – துன்பம், இன்கண் – இன்பம்

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

                பிரிவோ ரிடத்துண்மை யான். (1153)

பிரிவுத்துயரை நன்கறிந்த தலைவனும் ஒருநாள் பிரிந்துதான் போவானெனில்  ‘பிரியேன்’ என்று அவன் உரைத்த உறுதிக்கு என்னதான் பொருள்?

‘அறிவுடையார்’ என்பது இங்கு பிரிவின் துயரங்களை அறிந்தவர் என்றாகிறது. இவன் கொஞ்சம் விசாலமான அறிவுடையவன். அவனுக்குத் தெரிந்துவிட்டது நாள் முழுக்கக் கிடந்தால் சப்பரமஞ்சம் சலித்துவிடுமென்று. தவிர காதலின் பரவசத்திற்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல கடமை நிறைவளிக்கும் களிப்பு. ‘செயலாற்றி முடித்தபின் / அறிக / முடிந்த செயலது நன்மையென மலர்ந்த முகம்’ என்கிறது தம்மபதம்.

தேற்றம் – தெளிவு, உறுதி

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

                தேறியார்க்கு உண்டோ தவறு. (1154)

‘அஞ்சாதே… பிரியேன்…’ என்று வாக்களித்திருந்தவர் அவ்வாக்கில் பிறழ்ந்து பிரிந்து செல்வாராயின், பிழை அவரிடமேயன்றி அவர் சொல்லை நம்பிய என்னிடமில்லை.

‘அளித்தஞ்சல்’ என்பது அன்பை அருளி அஞ்சாதே என்றது.

     ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

                நீங்கின் அரிதால் புணர்வு. (1155)

என்னை அழியாது காக்கவேண்டுமாயின் தலைவனைப் பிரியாது காக்கவேண்டும். மீறிப் பிரிந்துவிட்டால் பின் சேர்வது கடினம்.

தலைவன் பிரிந்துவிட்டால் தலைவியின் உயிரும் பிரிந்துவிடுமாம். பிறகெப்படி புணர்வது? என்பது அழகர் தரும் விளக்கம்.

ஓம்புதல் – காத்தல், அமைந்தார் – காதலுக்கு அமைந்தார் தலைவர்.

   பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

                நல்குவர் என்னும் நசை (1156)

‘பிரிகிறேன்’ என்று வாயெடுத்துச் சொல்லுமளவு துணிந்துவிட்ட பிறகு, அக்கொடியோன் திரும்பி வந்து நம்மை அன்பு செய்வான் என்று ஆசையோடு காத்திருப்பது வீண்.

பிரிந்து செல்லும்போதல்ல, ‘பிரியப் போகிறேன்’ என்று சொல்லும்போதே தலைவன் கொடியவனாகிவிடுகிறான். தலைவனின் கல்மனம் தலைவியின் தலைமேல் விழுந்து அழுத்துகிறது.

வன்கண்ணார் – கொடியவர், நசை- – ஆசை, விருப்பம்.

  துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

                இறைஇறவா நின்ற வளை. (1157)

தலைவன் நம்மைத் துறந்து சென்றதைத் தூற்றாமல்விடுமோ மணிக்கட்டிலிருந்து கழன்று விழும் என் வளைகள்?

தலைவனின் பிரிவை அறிவித்த தோழிக்கு தலைவியின் பதில் இது என்கிறார் அழகர். நீ வந்து சொல்லும் முன்பே நெகிழ்ந்து விழுந்த என் வளைகள் சொல்லிவிட்டன என்கிறாள் தலைவி. எனில், இது வள்ளுவரின் மாந்த்ரீக எழுத்து… பிரிவைக் கண்டு வளை நெகிழவில்லை வளை நெகிழ்ந்ததைத் கண்டு தலைவன் பிரிந்துவிட்டான் என்பதை அறிந்துகொள்கிறாள்.

‘துறந்தமை’ என்கிற சொல்லைக் கொஞ்சமாக இறந்த காலத்திற்கு நகர்த்துவதன் மூலம் இந்தக் குறளையே ஒரு மாயாஜாலக் காட்சிபோல் மாற்றிவிடுகிறார் அழகர். அய்யனின் குறளும் அதற்கு ஏதுவாகவே உள்ளது. அய்யனுக்கு அழகர் ஒரு வரம்.

இறை – மணிக்கட்டு

   இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்

                இன்னாது இனியார்ப் பிரிவு. (1158)

பிரிந்து சென்ற தலைவனையும், அச்செய்தியைக் கொண்டுவரும் தோழியையும் ஒருசேரக் கடிந்து தலைவி உரைத்தது இது. ஆனால் பொதுவாகச் சொல்வதுபோல சொல்கிறாள்.

நமது துயரத்தைப் போக்கவல்ல உறவுகள் இல்லாத ஊரில் வாழ்வது கொடிது, அதனினும் கொடிது நமக்கு இனியர் நம்மைப் பிரிந்து செல்வது.

இரண்டாவது பகுதி தலைவரைக் கடிந்தது என்பது தெளிவு. முதற்பகுதி தோழிக்கானது. அவள் தலைவனின் பிரிவைத் தடுத்து நிறுத்தவில்லையல்லவா? எனவே, “நீ தோழியே இல்லை..” என்று சொல்லிவிடுகிறாள் தலைவி.

கெட்ட செய்திகளுக்கும், அதைக் கொண்டுவருபவர்களுக்கும் சமயங்களில் யாதொரு தொடர்பும் இருப்பதில்லை. ஆனால் ஒரு துர்நினைவின் முகமாக அவரது முகம் காலத்திற்கும் நம்முள் படிந்துவிடுகிறது.

இனன் – இனம், உறவு இல்ஊர் – இல்லாத ஊர்

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

                விடிற்சுடல் ஆற்றுமோ தீ. (1159)

தொட்டால் சுடுவதன்றி, காமம்போல் விட்டால் சுடுமளவு கொடியதல்ல தீ.

தீ தன்னை நெருங்கியவரைத்தான் சுடுகிறது. காமமோ, தன்னைவிட்டுப் பிரிவோரை வருத்தும் விநோதமானது. பிரியப் பிரிய வருத்தம் கூடுகிறது. தீ சடசடக்கிறது. ‘குறுகுங்கால் தண்ணென்னும் தீ’ என்று முன்பும் சொல்லியிருக்கிறார் அய்யன்.

காமத்திற்கும் அக்கினிக்கும் அவ்வளவு பொருத்தம் ‘செம்புலப் பெயல்நீர் போல’. ‘காமாக்னி’ என்கிற சொல்லாக்கத்தை முதன்முதலில் வாசித்தபோது அடைந்த கிளர்ச்சியை மறைக்க விரும்பவில்லை. அந்தப் பெயர் தாங்கி நின்ற சினிமா போஸ்டருக்கு அந்தப் பெயரே போதுமானதாக இருந்தது. படங்கள் ஏதும் அவசியப்படவில்லை. எங்கள் ஊர் நி.ஙி.டீலக்ஸில் இரண்டு வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

காமத்தை தீயொடு ஒப்பிடுவது பொது வழக்கம். அய்யனோ, காமம் தீயினும் தீயது என்கிறார்.

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

                பின்இருந்து வாழ்வார் பலர். (1160)

பிரிவின் அல்லல்களைப் பொறுத்துக்கொண்டு உயிர் வாழும் மகளிர் பலரும் இவ்வுலகில் இருக்கவே செய்கிறார்கள்.

நான் அவர்களுள் ஒருத்தியல்ல என்பது குறிப்பு. அது கவிதைக்குள் ஒளிந்திருக்கிறது.

இடைநில்லா இசைக்குறிப்பு போல் வழுக்கிச் செல்கிறது இக்கவிதை. அதன் ஆக்ரோஷம் நம்மை அச்சுறுத்துகிறது.

அழகர் முதல்வரியை பிரியும் போது நேரும் கொடுந்துயர் என்றும், இரண்டாம் வரியை பிரிவை ஆற்றமாட்டாது வருந்தும் துயர் என்றும் இரண்டாகப் பிரித்து விடுகிறார். அவரைப் பின்பற்றி வேறுபல உரையாசிரியர்களும் அப்படியே சொல்லியிருக்கிறார்கள்.

அதிகாரத்தின் முதல்பாடலில் காதுகளைப் பொத்திக்கொண்ட தலைவி இன்னமும் எடுக்கவில்லை. அப்போது சொன்னதைத்தான் அவள் இப்போதும் சொல்கிறாள். ஊஞ்சலொன்று ஆடுகிறது மரணத்திலிருந்து மரணத்திற்கு.