காமத்துப்பாலுக்கு உரை செய்ய வேண்டும் என்கிற  கனவு  கொஞ்ச நாட்களாகவே இன்புறுத்தி வந்த ஒன்று. நானும்  கவிஞர் சுகுமாரனும் சேர்ந்து செய்வதாகப்  பேசி வைத்தது.  தற்சமயம் அவர் வேறு வேலைகளில் மூழ்கி விட்டதால் அவரது ஆலோசனைகளோடு  இப்பணியைச் செய்ய முற்படுகிறேன். திருக்குறளுக்கு எண்ணற்ற உரைகள் புழக்கத்தில் உள்ளன. இன்னுமொரு உரை தேவையா ? இன்னும் பல உரைகள் தேவை என்பதே என் எண்ணம். குறளுக்கு மட்டுமல்ல,  பழந்தமிழ்ப் பாடல்கள் எல்லாவற்றிற்கும் வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு மனிதர்கள் உரை செய்வது அவசியம் என்றே நினைக்கிறேன். அவ்வுரைகள் அந்த இலக்கியங்களை மேலும் அணுகி அறிய உதவும் வண்ணம் இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரு  நிபந்தனை. எனது முயற்சியும் அவ்வண்ணமே அமைகிறது. வள்ளுவர் பரிமேலழகரோடு  தீர்ந்து விடுபவர் அல்ல.

தமிழ்ச் சூழலில் வள்ளுவர் ஒரு குட்டி தெய்வமாகத் தோற்றமளிக்கிறார் அல்லது ஒரு அரசியல் பாதைக்குத் தலைமை ஏற்கிறார். இந்த இரண்டு பாத்திரங்களையும் விடுத்து அவரைத் தமிழின் ஆகச் சிறந்த கவியாக முன்னிறுத்துபவை காமத்துப்பால் பாடல்கள்.  ஒரு காதல் கவியாக வள்ளுவனின் இடம் தமிழில் அவ்வளவு  வலுவாக நிலைநிறுத்தப் படவில்லை என்றே எண்ணுகிறேன். வெகு சிலரே அது குறித்துப் பேசியிருக்கிறார்கள். அந்த வெகு சிலரில் ஒருவனாக உவகையுடன் இணைந்து கொள்ள விரும்புகிறேன். அவரது துவராடை களைந்து அவரை கபிலரோடும், வெள்ளிவீதியோடும் சரியாசனத்தில் இருத்தும் முயற்சி இது.

நமது கல்விக் கூடங்களில் காமத்துப்பால் பாடல்கள் பெரும்பாலும் பாடமாக வைக்கப்படுவதில்லை. எண்ணற்ற காதல் இதயங்களைத் தாலாட்டும் ஊஞ்சலாகத் திகழும் அரசுப் பேருந்துகளிலும் அவற்றிற்கு இடமில்லை. அறிஞர்களுக்கும், முனிவர்களுக்கும்  ஒரு இடைஞ்சலாகவே எப்போதும் அவை இருந்து வந்திருக்கின்றன. குன்றக்குடி அடிகளார்  தமது உரையில் காமத்துப்பாலுக்குப் பொருள் சொல்லாமல் பாடல்களை மட்டும் தந்துவிட்டு நழுவி விடுகிறார். வீரமாமுனிவர் மற்ற இரண்டு பால்களை மட்டுமே மொழி பெயர்த்திருக்கிறார். முனிகள் காமத்திற்கு அஞ்சுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அறிஞர்களும் அஞ்சவே செய்கிறார்கள். மூதறிஞர் ராஜாஜியும்  இவ்வாறே மொழி பெயர்த்திருக்கிறார்.

 

 

‘‘காமத்துப்பால்’’ என்கிற பெயரைக் கருதி “காம சூத்திரம்’’ போல மிகவும் சுவாரஸ்யமான ஒன்று என ஒரு இளம்வாசகன் எண்ணிவிடக்கூடாது. சுவாரஸ்யமானதுதான், ஆனால் “hottest”  அல்ல. “போஸ்டர்களால்’’ வஞ்சிக்கப்பட்ட  தலைமுறையைச்  சேர்ந்தவன் என்பதால் அந்த வலியும் ஏமாற்றமும் எனக்குப் புரியும்.

காமத்துப்பால் அதிகமும் பிரிவையே பேசுகிறது. பிரிவன்றோ காதலின் இன்பத்தை இரட்டிப்பாக்குவது. “பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?’’ என்பான் கம்பன். இப்பிரிவு குறித்து வ.சுப.மாணிக்கம் அவர்களின் கூற்றொன்று நினைவில் நிற்கிறது. இரண்டு முறை படித்தால் ஈஸியாக விளங்கிவிடும்.

“பிரிவு புணர்ச்சியின் பொதுவடிப் படை. இடையீடு இல்லா நாட்புணர்ச்சி கோழிப்புணர்ச்சி போன்றது. நாட்காமம் எடுத்ததற் கெல்லாம் வெகுளும் முன்சினம் போல வலுவற்றது; உள்ளத்திற்கும் உடலுக்கும் குடும்பத்துக்கும் கேடு பயப்பது. பிரிவால் அகமும் மெய்யும் அறிவும் திண்ணியவாம். பிரிவின் அகற்சிக்கு ஏற்ப புணர்ச்சித் தழுவலும், பிரிந்த வேட்கைக்கு ஒப்ப புணர்ச்சியின் பலமும் பெருகும். கூட்டுப்பேரின்பம் பிரிவுப் பெருந்துன்பத்தால் முகிழ்க்கும் என்பது காம வள்ளுவம். ஆதலின், காமத்துப்பாலின் இருபத்தைந்து அதிகாரங்களுள் பதினைந்து அதிகாரங்களைப் பிரிவுப் பொருளாக ஆசிரியர் அமைத்தார்.”

தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரம் காமத்துப்பாலை “இன்ப அன்பை’’ பேசும் பாடல்கள் என்கிறார். அந்த இன்ப அன்பைத்தான் நாம் இத்தொடரில் பார்க்கப் போகிறோம்.

உரைகளில் நிறைய வேறுபாடுகள் காணக்கிடைக்கின்றன. சில குறளுக்கு எந்த உரையையும் முழுதாக ஒப்ப மனம் வருவதில்லை. அது போன்ற தருணங்களில் வள்ளுவன் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்து வைக்கிறான். வேறுபாடுகளோடு இன்னொரு வேறுபாடாக என் உரையும் இருக்கட்டும்.

நமது உரைகள் பலவும் பொருள் சொல்பவை. அது அவசியம்தான். ஆனால் கவிதை வெறும் ஒற்றை அர்த்தத்தில் அடங்கி விடுவதில்லை. அதன் மயக்கமே அதன் அழகு.  வெறுமனே பொருள் சொல்லப் புகும்போது ஒரு அர்த்தத்தை தெளிவாக வலியுறுத்த வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு முன் உரை செய்தவர்களுள் கவிதையை அறிந்தவர்கள் உண்டுதான். அவர்கள், அவர்கள் அளவில் முயன்றுதான் பார்த்திருக்கிறார்கள். நானும் என்னால் இயன்றவரை கவிதையின் கவித்துவத்தையும் அதன் மயக்கத்தையும் என் உரைகளில் கடத்த முயல்கிறேன். ஒரு சில இடங்களிலாவது வள்ளுவனின் கவிதையையொட்டி இன்னொரு கவிதையை எழுதிக் காட்டி விட வேண்டும் என்பதே பேராசை. சவாலான பணிதான்.  மாதம் பத்துப் பாடல்கள் என்பது திட்டம். உலகியற்றியான் “அங்ஙனமே ஆகுக!” என்று அருளட்டும்!