இலங்கையில் சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இலங்கை அரசு அந்நாட்டில் முஸ்லிம் பெண்கள் நிகாப் என்ற கருப்பு முகமூடி அணியத் தடை விதித்திருக்கிறது. இது ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பினாலும் அரசுகள் சாதாரண குடிமக்கள்மீது உடையைத் திணிக்க முடியாது. உடை குறித்த உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது. இது முற்றிலும் தனிநபர் உரிமை சம்பந்தமானது என்ற வாதங்கள் தீவிரமாக முன்வைக்கப்படுகின்றன. இலங்கை அரசின் நோக்கம் வேறாக இருந்தாலும், சவூதியிலும், ஈரானிலும் இன்னமும் பர்தா என்ற கருப்பு உடை அனைத்து மதப் பெண்களுக்கும் கட்டாயம் என்ற சட்டம் அமலில் இருக்கிறது. அதனை மீறினால் அது தண்டனைக்குரிய குற்றம். இது சரியான நோக்கத்திற்குட்பட்டதுதான், இரு நாட்டு அரசுகளின் சட்டம் மிகச்சரியானதே என்று மத அடிப்படைவாதிகள் நியாயப்படுத்தும் நிலையில் இந்த விவகாரத்தை இதனைத் தாண்டிய சாதாரண சூழ்நிலையில் ஆராய்வோம். இந்த இடத்தில் சிறிசேனாவையும் மறந்துவிடுவோம். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பர்தா குறித்து எழுதிய விரிவான கட்டுரை அதனைத் தொடர்ந்து மத அடிப்படைவாதிகள் மற்றும் இலக்கியப் பிழைப்புவாதிகளின் மிக மேலோட்டமான எதிர்வினைகள் ஆகியவற்றையும் உட்கொண்டு இஸ்லாமியப் பெண்களின் முகமூடி குறித்து ஆராய வேண்டியதிருக்கிறது.
மனித உடலுக்கு முகம் என்பதே பிரதானமான ஒன்று. மனிதன் என்ற சொல்லிற்கான அர்த்தமே இந்த முகம்தான். முகமே அடையாளம். மேலும் இயற்கைவெளிக்கும், மனிதனுக்குமான உறவின் மூலமே முகம்தான். இதனை மறைப்பது இயற்கையிலிருந்து துண்டிப்பது மட்டுமல்லாமல் மனித அடையாளத்தையே சிதைப்பதாகும். மனித நடமாட்டம் என்பதே முகம்தான். அடையாளமே முகம்தான். அதனால்தான் அடையாளத்திற்கான மற்றொரு இணை சொல்லாக முகம் இருக்கிறது. மேலும் ஆரோக்கியரீதியாக வைட்டமின் டி கிடைப்பதற்கும் முகம் திறந்து இருக்க வேண்டும். ஆக, இருபாலருக்கும் முகத்தை வெளிக்காட்டும் உரிமையும், சுதந்திரமும் இருக்கிறது. இந்நிலையில் உலக அளவில் முஸ்லிம் பெண்கள்மீது பர்தாவுடன் கூடுதலாக திணிக்கப்படும் முகமூடி குறித்த விவகாரத்தில் ஆரம்பகால இஸ்லாமிலிருந்தே தொடங்க வேண்டியதிருக்கிறது. ஆரம்பகால இஸ்லாமில் முகமூடி இருந்ததா? அனைத்துப் பெண்களும் முகத்தை மூடினார்களா என்பதைக் குறித்துப் பார்க்க வேண்டியதிருக்கிறது.

வரலாற்றின் அடிப்படையிலும், மதப் பிரதிகளின் அடிப்படையிலும் ஆரம்பகால இஸ்லாமில் நபிகளாரின் மனைவிகளைத் தவிர வேறு எந்தப் பெண்களும் நிரந்தரமாக, சதா காலமும் முகத்தை மூடியதாக குறிப்புகள் இல்லை. இஸ்லாமியப் பிரதிகள் குறிப்பிடும் முகமூடி விஷயங்கள், குறிப்புகள் அனைத்துமே முழுக்க முழுக்க நபிகளாரின் மனைவிகளுக்கான ஒன்றே. மேலும் அக்காலத்தில் அந்தப் பிரதேசத்தில் முகத்தை மூடிய மற்ற பெண்கள் கூட சூழல் சார்ந்தும், பாலைவன மணற்புழுதி சார்ந்துமே முகத்தை மூடி இருக்கிறார்கள். அங்கு அது கட்டளையாக இல்லை. கட்டளை என்பது நபியின் மனைவிகளுக்கே இருந்தது. மேலும் அன்றைய அரேபியப் பகுதிகளில் வாழ்ந்த கிறிஸ்தவப் பெண்கள் பாலைவனச் சூழல் சார்ந்து சில தருணங்களில் முகத்தை மூடி இருக்கிறார்கள். இது ஒரு தற்செயலான பண்பாட்டு நிகழ்வுதான். ஒரு பிரதேசத்தின் காலநிலை, மண்தன்மை, இயற்கை அமைப்பு இவற்றைப் பொறுத்து மனித கலாச்சாரம் வேறுபடுகின்றது. மேலும் உலகம் முழுக்க புவியியல் அமைப்பு வேறுபடுவது மாதிரி மனித பண்பாட்டு நடவடிக்கைகள் மாறுபடுகின்றன. இது உலகளாவிய எதார்த்த நிலை. ஆனால் இதற்கு மாறாக ஒரு பிரதேசத்தின் சூழல்சார் வழக்கத்தை உலகம் தழுவியதாகத் திணிப்பது மிக மோசமானது. அதுவும் பெண்களிடம் மட்டுமே திணிப்பது ஆண்மைய செயல்பாட்டின் ஒருமுகக்கூறே. இவற்றின் பின்னணியை ஆழமாகப் பரிசீலித்தால் இது மாதிரியான வழக்கங்கள் எப்போதுமே பெண்களைக் குறிவைத்தே நிகழ்த்தப்படுகின்றன. இதன் தொடர்ச்சியில் இஸ்லாமிய பெண்களின் பர்தாவும் அதனோடு இணைந்த முகமூடியும் முழுக்க முழுக்க ஆண்மைய செயல்பாட்டின் புனிதக் கூறுகளே. இங்கு வெறுமனே கட்டளை என்பதைத் தாண்டி புனித பிம்பமும் இணைந்து கொள்வதால் இதனை எளிதாகக் பெண்களின் மேல் திணிக்க முடிகிறது. பர்தா குறித்த என் முந்தைய கட்டுரையில் நான் குறிப்பிட்டது போன்றே பர்தா மற்றும் முகமூடி குறித்த வரலாற்று எதார்த்தம் நூற்றாண்டு காலமாகப் பல அறிஞர்களால் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பர்தாவும், முகமூடியும் காலத்தொடர்ச்சியில் சவூதி அரேபியா சார்ந்து உலகம் முழுக்கப் பரப்பப்பட்ட ஒன்றே. இதனை சவூதியை விமர்சிக்கும் முல்லாக்கள்கூட ஏற்றுக்கொண்டது பெரும் முரண்நகை.

தமிழ்நாட்டின் இஸ்லாமிய வரலாறு நீண்ட நெடியது. கி.பி. எட்டாம் நூற்றாண்டு காலத்திலேயே இஸ்லாம் இங்கு பரவத்தொடங்கிவிட்டது. கடலோர மீனவர்களாக, கடல் வணிகர்களாக இருந்தவர்கள் அனைவரும் மரைக்காயர்கள் ஆனார்கள். மேலும் லெப்பை, ராவுத்தர் போன்ற பிரிவுகளும் ஏற்பட்டன. இதில் கடலோர மாவட்டங்கள்தான் பெண்களை அதிக அளவில் ஒடுக்கும் தன்மை கொண்டதாக இருக்கின்றன. சென்னையின் கடற்கரை கிராமங்கள் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் வரை இது நீள்கிறது. இந்தக் கடலோரப் பகுதிகளில்தான் முதன் முதலாக இஸ்லாமியப் பெண்கள் முகமூடிக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதே காலத்தில் அல்லது அதற்குப் பிந்தைய கட்டத்தில் ஆற்காடு பகுதிகளில் வாழ்ந்த உருது முஸ்லிம் பெண்களில் ஒரு பகுதியினரும் முகத்தை மூடினார்கள். வீட்டிற்குள் யாராவது வந்தால் சமையலறைக்குள் வேகமாகச் சென்று விடவேண்டும். மிக நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே விதிவிலக்கு. அதிலும் சில கட்டுப்பாடுகள் உண்டு.

இதன் நதிமூலம் என்பது மரைக்காயர் சமூகத்தின் ஆரம்பகால வாழ்க்கை முறையியலில் இருந்து தொடங்குகிறது. அந்த சமூக ஆண்கள் குறிப்பிட்ட காலம் தொழில் சார்ந்து கடலுக்குச் செல்வார்கள். அந்த தருணத்தில் அந்நிய ஆண்களை பாதுகாப்பு கருதி வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என்று தங்கள் மனைவிகளிடம் சொல்லி விட்டுச் சென்றார்கள். அதுவே காலப்போக்கில், மத அடிப்படைவாதம் கலந்து அந்தப் பெண்களை அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பதாக மாற்றியது. இதுதான் நவீன முகமூடியும், தலைதெறிக்க ஓடுதலும் கலந்த ஒன்றாக இன்றைக்கு புதிய வடிவம் எடுத்திருக்கிறது. கடலோரப் பகுதிகளில் தொடங்கிய இந்த வழக்கம் காலத்தொடர்ச்சியில் பல உள்மாவட்டங்களிலும் பரவியது. விதிவிலக்காக ஒரு சில மாவட்டங்களைத் தவிர தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இந்த ஒடுக்குமுறை பண்பாடு தொடர்கிறது. இதனை ஆண்கள் பிடிவாதமாக நியாயப்படுத்துகின்றனர். சிலர் இன்னும் அகலமாகச் சென்று கை, கால் ஆகியவற்றிற்கு உறை இடுகின்றனர். தீவிர மதப்பற்றாளர்களின் மனைவிகளிடத்தில் இந்தக் கையுறை, காலுறை (Socks) அணியும் வழக்கம் இருக்கிறது. இதற்கும் சுய நியாயங்களைக் கற்பிக்கின்றார்கள். மேலும் மனைவியின் அழகு கணவனுக்கு மட்டுமே என்கின்றனர். மனைவியின் அழகு கணவனுக்கு மட்டுமே என்றால் அவள் வீட்டில்தான் இருக்க வேண்டும். அதுவும் கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் இருக்கக்கூடாது. (கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் ஒரே வீட்டில் அண்ணன், தம்பி மனைவிகளை பரஸ்பரம் அண்ணன், தம்பிகள் பார்க்கக்கூடாது. அவர்கள் ஒரே வீட்டிற்குள்ளேயே தனிக்குடித்தனம் நடத்துகிறார்கள்.) மேலும் பெண்ணின் அழகு கணவனுக்கு மட்டும்தான் என்றால் இங்கு ஆண்களின் அழகையும் மற்ற பெண்கள் பார்க்கக் கூடாது. இது மட்டும் ஏன் ஒருவழிப்பாதையாக இருக்கிறது என்பது புரியவில்லை.

மேலும் முகமூடி அணிந்தால் அந்நிய ஆண்கள் அந்தப் பெண்களை பார்க்க முடியாத நிலையில் அவர்கள் அந்நிய ஆண்களை பார்க்க முடியும். மேலும் கட்டுப்பாட்டை விதிக்கும் ஆண்களின் உடல் இயற்கை வெளியில் அதீத சுதந்திரத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது. மேலும் இஸ்லாத்தில் மனைவியின் அழகு கணவனுக்கு மட்டுமே என்று சொல்லப்பட்டதாக ஒரு பிரச்சாரம் கிளப்பப்படுகிறது. இது பெரும் வரலாற்று திரிபே. அதே நேரத்தில் இவ்வாறான பிரச்சாரத்தின் நோக்கமே ஒடுக்குமுறை தான். குறிப்பாக பெண்களின் நடை, உடை, பாவனையை மதம்சார் பிரச்சினையாக திசை திருப்பி அவர்களின் ஒவ்வொரு அங்க அசைவையும் கண்காணிப்புக்கு உடபடுத்துகின்றனர். மேலும் வட இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவனப் பெண்கள் முகத்தை மூடிக்கொள்வதை உதாரணமாக மேற்கோள் காட்டுகின்றனர். மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில் இளம்பெண்கள் தூசிகளுக்காக, வெயிலுக்காக, இன்னும் பிற காரணங்களுக்காக வாகனத்தில் செல்லும்போதும், சில சமயங்களில் நடந்து செல்லும்போதும் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொள்கின்றனர். இதனை மேற்கோள் காட்டி இஸ்லாமியப் பெண்கள் முகத்தை மூடுவதில் என்ன தவறு என்று கேட்கின்றனர். குறைந்தபட்ச அடிப்படை புரிதலோ, அவதான சக்தியோ, காரண காரிய அறிவோ அற்றவர்களாக இவர்கள் உள்ளனர். சென்னையில் மழைக்காலத்தில் பெரும்பாலான பெண்கள் முகத்தை மூடுவதில்லை. இங்கே இந்தப் பெண்களின் முகமூடி என்பது காலநிலை சார்ந்த ஒன்றே. புறவய சூழலின் பிரதிபலிப்புதான் அது. ஆக, அந்தப் பெண்களின் மூடும் பழக்கத்தை ஒருபோதும் முன்னுதாரணமாகவோ, போலச்செய்தலாகவோ முன்வைக்க முடியாது.

வட இந்தியாவில் பஞ்சாபி பெண்களின் ஒருபகுதியினர், மார்வாடிப் பெண்கள் போன்றவர்கள் முகத்தை மூடிக்கொள்கின்றனர். அதிலும் மார்வாடிகளிடம் தற்போது அந்த வழக்கம் அருகி வருகிறது. அது பாலைவன வாழ்க்கை சார்ந்தும், ரஜபுத்திர, ஹுன மன்னர்கள் சார்ந்தும் இந்த வழக்கம் அவர்களிடம் தொற்றிக்கொண்டது. ஆனால் அந்தப் பெண்கள் எல்லாம் படிப்படியாக அதிலிருந்து வெளியேறி வருகின்றனர். இன்றைய இந்தியப் பெண்கள் தங்களின் உரிமை சார்ந்த விஷயங்களில் முந்தைய காலங்களை விட அதிக பிரக்ஞைபூர்வமாக இருக்கின்றனர். ஒரு பக்கம் அவர்களுக்கு எதிராகப் பல்வேறுவிதமான ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்பட்டாலும் குறைந்தபட்சம் தங்களைப் பெண்ணாக உணர்ந்து கொள்ளவும், அதன் இருப்பின் மீதான கேள்விகளும், ஆண்களால் தாங்கள் பாதிக்கப்படுவது பற்றியும் தெளிவான புரிதலோடு இருக்கின்றனர். ஆனால் இன்றளவும் இந்திய அல்லது தெற்காசிய இஸ்லாமியப் பெண்கள் விளிம்பு நிலையிலேயே இருக்கின்றனர். விளிம்பு நிலையே தங்களின் இயல்பான உரிமை என்ற நிர்ப்பந்த உணர்வுக்கு சமூகத்தால் தள்ளப்படுகின்றனர். சுருக்கமாக சொன்னால் ஆணாதிக்கத்தையே இவர்கள் பெண்ணுரிமை என்பதாகப் பாவிக்கின்றனர்.

தமிழ்நாட்டு இஸ்லாமியப் பெண்கள் மத்தியில் இந்த முகமூடி பர்தாவின் வரவை ஒட்டித்தான் மிக அதிக அளவில் பரவியது. தமிழ்நாட்டில் முந்தைய காலங்களில் இஸ்லாமியப் பெண்கள் உடம்பில் சுற்றிக்கொள்ளும் வெள்ளைத்துப்பட்டி கடலோர மாவட்டங்களிலும், சில உள்மாவட்டங்களிலும் வழக்கில் இருந்தது. இது ஒருவகையில் பர்தாவை விட கொடுமையாக இருந்தது. இந்த வழக்கமும் மேற்குறிப்பிட்ட மரைக்காயர் சமூக வாழ்க்கையின் பிரதிபலிப்பே.

மேலும் கொங்கு பகுதிகள் மற்றும் தென்பகுதிகள், கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இது என்றைக்குமே வழக்கில் இருந்தது இல்லை. அந்தப் பெண்கள் பெரும்பாலும் சேலையுடன்தான் வெளியில் வலம் வந்தனர். தமிழ்நாட்டில் அரபு நாட்டு பெண்களின் (சவூதி அரேபியா & ஈரான்) உடையான பர்தா ஜாக் (JAQH) என்ற வஹ்ஹாபிய அமைப்பின் வரவு மூலம் பரவத்தொடங்கியது. 80களில் முதன் முதலாக அந்த அமைப்பைச் சார்ந்த பெண்கள்தான் பர்தா அமைப்பிற்கு மாறினார்கள். அதனை அந்த வஹ்ஹாபிய பாதிரியார்கள் தங்களின் தாய்நாடான சவூதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்தனர். இதன் காரணமாக வெள்ளைத்துப்பட்டி அணிந்த பெண்களும் தங்களின் சுற்றல் சிரமம் கருதி அதற்கு மாறினார்கள். இதனைக் கண்ட முல்லாக்கள் அதன் விளம்பர தூதர்களாக மாறி கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்கம் இப்படியான உளவியல் அச்சுறுத்தலைப் பெண்கள்மீது ஏற்படுத்தி படிப்படியாக பர்தா முறைக்கு மாறிக்கொள்ள நிர்ப்பந்தித்தார்கள். இங்கே விருப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பொதுவெளியில் விமர்சனங்கள் எழும்போது சில ஆண்களும், சமூக முக்கிய பிரமுகர்களும் அது பெண்களின் விருப்பம் என்று குறிப்பிட்டு தப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால் இங்கே பெண்களுக்கு, ஆண்வர்க்கம் விருப்பம் என்ற ஒன்றையே அளித்திருக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஏன் இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஆண்களுக்கே தனிநபர் விருப்பம் (Free will) என்ற ஒன்று கிடையாது. எப்படி தாடிவைப்பது தனிநபர் விருப்பம் இல்லையோ, அதை போன்றே பர்தாவையும் நிச்சயமாக தனிநபர் விருப்பத்தோடு இணைக்க முடியாது. இதெல்லாம் பர்தா குறித்து மேற்படி விமர்சனங்கள் தொடரக்கூடாது என்பதற்காக முன்வைக்கப்படும் சொத்தையான வாதங்களே.

இன்றைய கட்டத்தில் அதை அணியாதவர்களைக் கண்ணியமற்றவர்கள், ஒழுக்கக்கேடானவர்கள் என்ற நேரடியான, மறைமுகமான வசைகள் மூலம் குறிப்பிட்ட பெண்களை உளவியல் ரீதியாக அச்சமடையச் செய்வது இவர்களின் நோக்கமாக இருக்கிறது. இது இயக்கவாதிகள், முல்லாக்கள், முல்லாயிஸ்டுகள் என்ற மூவர் கூட்டணி மூலம் திட்டமிட்டு, மிக லாவகமாகப் பரப்பப்படுகிறது. இதற்காக மேடைகளில் அலறுகிறார்கள். அந்த அலறலில் இவர்களின் ஆதிக்க வெறி அப்பட்டமாகத் தெரிகிறது. 80களில் ஜாக் என்ற மூல வஹ்ஹாபிய அமைப்பின் பெண்கள் இதனை அணியத்தொடங்கிய காலத்தில் இது படிப்படியாக சவூதி அரேபியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதியாகத் தொடங்கியது. பின்னர் படிப்படியாக அது சிறந்த வர்த்தகமாகத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியில் 1995இல் பி.ஜெய்னுலாப்தீன் தலைமையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் அந்த இயக்கத்தவர்கள் தங்களின் வீட்டு பெண்களுக்கு இதனைக் கட்டாயமாக்கினார். அதன் பிறகு இது பரவலாக பொதுப்புத்தியாக மாறத்தொடங்கியது. ஒரு காலத்தில் வெறும் 25 ரூபாய் தொப்பியைக் கிண்டலடித்தவர்கள், மத பிழைப்பு வியாபாரம் என்று சொன்னவர்கள் இன்று ஆயிரங்கள் விலை உள்ள பர்தாவின் சிறந்த இறக்குமதியாளர்களாக, அறமற்ற வணிகர்களாக இருக்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஊர்களில் பர்தா கடைகளின் எண்ணிக்கைகள் அதிகமாகி இருக்கின்றன. இதன் வர்த்தக மதிப்பு பலகோடிகள். பர்தாவாக இருந்தாலும் சரி, முகமூடியாக இருந்தாலும் சரி இங்கே ஒரு விஷயம் அவதானத்திற்குரியது. அதாவது விருப்பம் என்ற பெயரிலும், வேறு ஏதோ ஒரு காரணத்திற்காகவும் தனிப்பட்ட நபர்கள் அல்லது குழுக்களால் தொடங்கி வைக்கப்படும் இந்த வழக்கம் காலப்போக்கில் வைரலாகப் பரவி விடுகிறது. பின்னர் அதுவே பெண்கள் சார்ந்த பொது வழக்கமாக மாறி விடுகிறது.

பர்தாவும், முகமூடியும் வழக்கத்தில் இல்லாத பகுதிகளில் இவை இரண்டும் வேகமாகப் பரவியதன் அடிப்படை இதுதான். ஒரு பகுதியில் குறிப்பிட்ட குழுக்களால் முன்வைக்கப்படும் பழக்கம் காலப்போக்கில் பெரும்பான்மை ஆகி அதனைக் கடைப்பிடிக்காத பெண்களை மதத்திற்கு அப்பாற்பட்டவர்களாக அடையாளப்படுத்தும் நிலைக்குக் கொண்டு செல்கிறது. இதன் காரணமாக அதில் விருப்பம் இல்லாத பெண்களும் இதற்கு மாறும் கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். மேலும் தற்காலத்தில் Trending என்பதும் இங்கு முக்கிய விஷயமாக இருக்கிறது. குறிப்பாக இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதியாகும் மப்தா, ஸ்கார்ப், கிம்மார் போன்ற தலைத்துண்டுகள் இன்று அந்த நாட்டுப் பெண்களின் வழக்கம் போலவே இங்குள்ள பெண்களிடத்திலும் தாடையை சுற்றிக்கட்டும் துணியாகப் பரவி இருக்கிறது. (இந்த வழக்கம் இரு சக்கர வாகன ஓட்டும் பெண்களையும் விட்டு வைக்கவில்லை. தாடையை சுற்றி துணியைக் கட்டி அதன்மேல் ஹெல்மெட் அணிந்து செல்லும் பெண்களைப் பல தருணங்களில் அவதானிக்க முடிகிறது.) அதுவே காலப்போக்கில் பரவலாக்கமாக நிகழ்ந்து மத அடிப்படையாக மாறி விடுகிறது. இதன் நீட்சியில் முகமூடியும் இதனோடு இணைந்து கொண்டது. முந்தைய காலத்தில் கருப்பு முகமூடியாக இருந்த நிலையில் இன்று இந்தோனேசிய முகமூடிகள் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. ஆக, ஆழமாகப் பரிசீலித்தால் இவை அனைத்தும் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் அறமற்ற வணிகமே. ஒருவகையில் பெண்களை குறிவைத்து நிகழ்த்தப்படும் பொருளாதாரச் சுரண்டலும்கூட.

பர்தா மற்றும் முகமூடி கட்டுப்பாடுகளின் உச்சம் என்பது வீட்டிற்குள்ளும் அதை கடைபிடிக்க வலியுறுத்துவதில் கொண்டு போய் நிற்கிறது. அதாவது கணவனின் நெருங்கிய நண்பர்கள் வந்தாலோ அல்லது நெருங்கிய உறவுக்கார ஆண்கள் வந்தாலோ சமையலறைக்குள் அவர்கள் குதிரையை விட வேகமாக ஓடும் நிலைக்கு இது தள்ளுகிறது. இது நபர்களை பொறுத்தும், வட்டாரங்களைப் பொறுத்தும் மாறுபடுகிறது. இதன் தொடர்ச்சியில் இந்த நிர்ப்பந்தம் மதரீதியாக நியாயப்படுத்தல்களோடு உளவியல் ரீதியாக மாறுதல் செய்யப்படுவதால் பெண்கள் அதனை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்குச் செல்கிறது. பெண்களின் இயல்பான அடிமை மனோபாவம் இதனோடு இணைந்து இதனை வெகு இயல்பாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்குச் செல்கிறது. இதன் தொடர்ச்சியில் முப்பதுகளில் பெண்களுக்குக் கல்வி கூடாது என்று முல்லாக்களால் பத்வா அளிக்கப்பட்ட தருணத்தில் அதனைத் தமிழ்நாட்டு இஸ்லாமிய பெண்கள் இயல்பாக ஏற்றுக்கொண்டார்கள். தங்களின் பெண் பிள்ளைகளை அவ்வாறு படிக்க விடாமல் பார்த்துக்கொண்டார்கள். இவளுகளுக்கு, பெட்டச்சிகளுக்கு படிப்பு எதற்கு? என்று பெண் பிள்ளைகள் பருவமடைந்த உடன் அந்தப் பெண்களே அவர்களின் கல்வியைத் தடை செய்தார்கள். இதன் தாக்கம் இன்றளவும் நீள்கிறது. இன்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வழக்கில் இருக்கும் முஸ்லிம் பெண்களின் இளவயது திருமணங்களின் அடிப்படைக் காரணம் இதுதான்.

தமிழ்நாட்டு இஸ்லாமிய ஆண்களின் உலகம் பெண்கள் விவகாரத்தில் இன்றளவும் மிக மோசமாக இருக்கிறது. அதற்கு சமூக வலைத்தளங்களே சாட்சி. குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள் சமூக வலைத்தளங்களில் முகத்தைக் காட்டினால் அவர்களை கேவலமாகத் திட்டுவது, வசைபாடுவது இயல்பாக இருக்கிறது. இதன் காரணமாக இஸ்லாமியப் பெண்களின் பேஸ்புக் பக்கங்களின் முகப்பு படங்கள் எல்லாம் பெரும்பாலும் முகமூடி குறியீடாகவே இருக்கின்றன. அவர்களை நட்பு பட்டியலில் இணைத்துக்கொள்வது மட்டும் எப்படி மதரீதியாக ஆகுமானதாகும் என்பதை இந்த ஆதிக்கவாதிகள் உணர்வதே இல்லை. மேலும் சமீபத்தில் டிக்டாக் விளையாடிய பாண்டிச்சேரியைச் சார்ந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணை சமூகவலைத்தளங்களில் வன்மத்தோடு வசைபாடி, அவளை உளவியல் சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள் இந்த வெறியர்கள். இந்த வெறியாட்டத்தில் கடலோர மாவட்டத்து இஸ்லாமிய ஆண்கள்தான் அதிகம். டிக்டாக்கில் இஸ்லாமிய ஆண்களாகிய தாங்கள் இருப்பது மட்டும் எப்படி ஆகுமானதாகும் என்பதை யோசிக்கத் தவறுகிறார்கள். இன்னும் சிலர் டிக்டாக்கில் பர்தாவுடன் ஒரு இஸ்லாமிய பெண் விளையாடினால் பர்தா என்ற உயிர் மூச்சு உடையுடன் விளையாடி அதனைக் கேவலப்படுத்துகிறாயா? என்று மிக மோசமாக பதிவிடுகின்றனர். ஒரு இஸ்லாமிய பெண்ணைத் தவறான முறையில், கேவலமாகத் திட்டி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டால் அதற்கு ஆதரவாக ஆயிரம் லைக்குகளும், பகிரல்களும், பின்னூட்டங்களும் வருகின்றன. இது வெறுமனே ஆயிரம் பேரின் எல்லை அல்ல. மாறாக, தமிழ்நாட்டுப் பெரும்பான்மை முஸ்லிம் ஆண்களின் பொதுப்புத்தியே இது. அதுதான் இப்படியான அச்சுறுத்தலுக்கு பெண்களை உள்ளாக்கிறது. இதன் தொடர்ச்சியில் பல்துறை சார்ந்த ஆர்வமும், திறமையும், இயல்பூக்கமும் கொண்ட பல பெண்கள் இன்று அரங்கத்திற்கு வர முடியவில்லை. அதனை மீறி வருபவர்கள் கேவலமானவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். சமீபத்தில் விஜய் டிவியில் பாடல் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ஓர் இஸ்லாமிய பெண் சமூக வலைத்தளங்களில் கேவலமாக வசைபாடப்பட்டாள். இத்தனைக்கும் அவள் பர்தாவுடன்தான் வந்து பாடினாள். ஆக இங்கு பிரச்சினை பர்தாவோ, டிக்டாக்கோ அல்ல. மாறாக, ஓர் இஸ்லாமியப் பெண்ணின் வெளிப்பாடே. அவளின் இருப்பே இங்கு கேள்விக்குட்படுத்தப்படுகிறது.

ஆரம்பகால இஸ்லாமிய நடைமுறைகள் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் முல்லாக்களால் முன்மொழியப்படும் பர்தாவையும், முகமூடியையும் அறிவியல்ரீதியாக நியாயப்படுத்த ஒரு கும்பல் தொடர்ந்து முயன்று வருகிறது. மேலும் முகமூடியைக் கால் இல்லாதவர்கள் நடப்பது மாதிரி, கை இல்லாதவர்கள் தென்னை மரம் ஏறுவது மாதிரி நியாயப்படுத்துகிறார்கள். இதோ பாருங்கள், அந்தப் பெண் முகமூடி அணிந்து பைக் ஓட்டுகிறார். அதோ பாருங்கள், அந்த பெண் முகமூடி அணிந்து கார் ஓட்டுகிறார். இதோ பாருங்கள், அந்தப் பெண் முகமூடி அணிந்து கயிற்றின் மேல் நடக்கிறாள். இப்படியான அலப்பறைகளை சமூக வலைத்தளங்களில், குறிப்பாக வாட்ஸ் அப்பில் அதிகம் பரவி வருகின்றன. ஊனம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு தடையே இல்லை. ஆகவே எல்லோரும் கால்களை வெட்டிக்கொள்ளுங்கள் என்பது மாதிரி தான் இவர்களின் பர்தா & முகமூடி பிரச்சாரமும் அதனைத் தொடர்ந்த நியாயங்களும். பிறவியால் மாற்றுத்திறனாளியான ஒருவருக்கும், இடைக்காலத்தில் விபத்து காரணமாக மாற்றுத்திறனாளியான ஒருவருக்கும் இடையே உளவியல் ரீதியாகவும், சமூக நடத்தை ரீதியாகவும் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்நிலையில் இங்கு அசௌகரியங்களையும், ஒவ்வாமைகளையும் சௌகரியங்களாக, உவப்பான ஒன்றாக ஆக்கிக்கொள்ளுமாறு பெண்கள் வலியுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் இங்கு அசௌகரியங்களே சௌகரியங்களின் உளவியலாக மாறி இருக்கிறது. பர்தா & முகமூடி வணிகத்தின் உச்சகட்ட வெறித்தனம் இது. ஆண்கள் உடை சார்ந்தும், பிற நடவடிக்கைகள் சார்ந்தும் மிக சுதந்திரமாக உலவும் நிலையில் இங்கு பெண்களின் மேல் அவற்றை மதத்தின் பெயரால் திணிக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் சரி, பிற பகுதிகளிலும் சரி இஸ்லாமிய ஆண்களின் உடை குறித்து எவ்வித விமர்சனங்களோ அல்லது கருத்து மோதல்களோ இல்லை. இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மேலும் பர்தா குறித்தும், முகமூடி குறித்தும் சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் அதிகமும் வாட்ஸ் அப்பில் வலம் வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பர்தாவிற்கான விளம்பர வீடியோக்களே. இந்தக் காட்சிகளைக் காணும் அப்பாவி பெண்கள் மத்தியில் இதனைக் குறித்த இனம்புரியாத அச்ச உணர்வும், தங்களை பற்றிய கீழான மதிப்பீடும் உருவாகின்றன. இதன் காரணமாக பர்தா அல்லது முகமூடி அணியாதவர்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள், கண்ணியமற்றவர்கள் என்ற முடிவிற்கு வருகிறார்கள். மேலும் இது சார்ந்த தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தி தொடர்ந்த நியாயங்களை முன்வைக்கிறார்கள். இதன் காரணமாக முஸ்லிம் அல்லாத பெண்கள்மீதும் நனவிலி நிலையில் உடை சார்ந்த மதிப்பீடு உருவாகிறது. ஏன் பல தருணங்களில் வெளிப்படையாகவே இது நிகழ்கிறது. அவர்களை ஒழுக்கமற்றவர்கள் என்று உட்படையாக கருதும் நிலைக்குச் செல்கிறது. அது மட்டுமல்ல, இரண்டையும் அணியாத முஸ்லிம் பெண்களைக்கூட மற்ற பெண்களுடன் இணைத்து அடையாளப்படுத்தும் சூழலுக்குக் கொண்டு செல்கிறது. இதன் தொடர்ச்சியில் பர்தா குறித்தோ, முகமூடி குறித்தோ விமர்சனங்களை முன்வைத்தால் வெற்று அலறலும், கைகால் நடுக்கமும், ரத்தக் கொதிப்புமே இந்த ஆண்கள் மத்தியில் ஏற்படுகிறது. ஏன் “ப” என்ற வார்த்தையைக் கேட்டாலே அலறுகிறார்கள். இதனை சமூக வலைத்தளங்களிலும், நேரடியாகவும் பல ஆண்டுகளாக நான் அவதானித்து வருகிறேன். பல தருணங்களில் நானே எதிர்கொண்டிருக்கிறேன். நேரடியாக சாதாரண முஸ்லிம் ஆண்களிடம் இதனைக் குறித்து உரையாடும் நிலையில் அவர்களின் முகமும், உடலும் அசாதாரண நிலைக்குச் செல்வதை நான் கவனித்திருக்கிறேன். ஆணாதிக்கம் சார்ந்த நனவிலி மற்றும் அடிநிலை மனக் கிடக்கைகளின் வெளிப்பாடு இது. இதன் தொடர்ச்சியில் சமீபத்தில் பஞ்சாப் பல்கலைக்கழகம் ஒன்றில் மருத்துவம் படித்த முஸ்லிம் மாணவிகள் முகமூடி அணிந்துகொண்டு பட்டம் வாங்கினார்கள். இதை உதாரணமாக முன்வைத்து திட்டமிட்ட முகமூடி ஆதரவுப் பிரச்சாரம் வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்டது. முகத்தை மூடிக்கொண்டு ஒரு மருத்துவர் எப்படி சிகிச்சை அளிக்க முடியும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் இவர்களின் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சவூதி அரேபியாவில் தொடங்கிய இந்த வழக்கம் ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ந்தது. கடந்த 25 ஆண்டுகளாக அரபு நாடுகளில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக அந்நாட்டு மக்கள் ஐரோப்பிய நாடுகளில் குடியேறி இருக்கிறார்கள். இந்த நாட்டுப் பெண்களில் ஒரு பிரிவினர் முகமூடி அணியத்தொடங்கினார்கள். இது காலத்தொடர்ச்சியில் அந்நாடுகளில் புதிய போக்காக மாறத்தொடங்கியது. மேலும் தொடர்ந்த நிலையில் ஐரோப்பிய முஸ்லிம்கள் மத்தியிலும் பரவத்தொடங்கியது. இது ஏற்படுத்திய எதிர்மறை விளைவுகள், சமூக தாக்கங்கள் சில ஐரோப்பிய நாடுகளில் அந்நாட்டு அரசுகள் பொதுவெளியில் முகமூடியைத் தடை செய்யும் நிலைக்கு சென்றது. முதன் முதலாக பிரான்ஸ் இந்தத் தடையை அமல்படுத்தியது. இதனைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளும் இதனை தடை செய்தன.

இலங்கையில் இந்த முகமூடி வழக்கம் பரவிய கால அளவு வெறும் 15 ஆண்டுகள் மட்டுமே. அங்கே ஏற்கனவே இருக்கும் பழமை சார்ந்த முல்லாயிசம் இதற்குத் தொடக்கமிட்டது. மேலும் பிந்தைய காலங்களில் தோன்றிய வஹ்ஹாபிய இயக்கங்கள் தமிழ்நாட்டைப் போலவே அங்கேயும் பர்தாவை அறிமுகப்படுத்தின. இதன் தொடர்ச்சியில் முகமூடியும் இணைந்து கொண்டது. ஒரு கட்டத்தில் முல்லாக்களால் முகமூடி பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக அங்கு பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் பர்தாவிற்கும், கணிசமானவர்கள் கூடுதலாக முகமூடிக்கும் மாறினார்கள். தற்போது குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் அதனைத் தடை செய்ததை ஒட்டி முல்லாக்கள் நாட்டு பாதுகாப்பு கருதி இப்போது அது தேவை இல்லை என்கிறார்கள். ஆக, இஸ்லாமிய பெண்களின் உடலும், முகமும் முல்லாக்களை பொறுத்தவரை கால்பந்தாட்ட மைதானம்தான். முல்லாக்களால் முன்மொழியப்படும் பெண்களுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும், முல்லாயிஸ்டுகளால் தீவிரமாக வழிமொழியப்படுகின்றன. இங்கு பெண்களின் உடையே அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. முன் வைக்கப்படுகிறது. திணிக்கப்படுகிறது. ஆனால் இது ஆண்களுக்கு இல்லை. ஆக, உடையை எப்போதுமே பொது அடையாளமாக மாற்ற முடியாது. அவ்வாறு மாற்ற முயன்றது தோல்வியடைந்திருக்கிறது என்பதே வரலாறு.

பர்தா மற்றும் முகமூடி சார்ந்த விமர்சனங்களை முன்வைக்கும் நிலையில் தமிழ்நாட்டு இலக்கியப் பிழைப்புவாதிகள் குறித்தும் குறிப்பிட வேண்டியதிருக்கிறது. தமிழ்நாட்டில் இலக்கிய வெளியில் இயங்குபவர்களில் பலர் சுயசாதிமறுப்பாளர்களாக, அதனைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும் எழுத்தில் அறம் சார்ந்து, சமரசமற்று இயங்குபவர்களும் உண்டு. இந்நிலையில் இதற்கு மாறாக சாதிவெறியை இயல்பாகக் கொண்டவர்கள், சாதிய ஆதிக்கவாதிகள், சுயசாதி பெருமை கொண்டவர்களும் தமிழ் இலக்கிய உலகில் இருக்கிறார்கள். பல தருணங்களில் இவர்கள் இயல்பாகவே அம்பலப்படுகிறார்கள். அது மாதிரியே இஸ்லாமிய மத அடையாளங்களோடு தமிழ் இலக்கிய உலகில் இயங்கும் எழுத்தாளர்களில் பலர் இஸ்லாமிய பெண்களின் விவகாரங்கள் சார்ந்து பல தருணங்களில் கள்ள மௌனங்களையே கடைபிடிக்கிறார்கள். இன்னும் சிலர் வெளிப்படையாகவே ஆணாதிக்க தன்மையோடு நடந்து விடுகிறார்கள். பொதுவாக பெண்கள் சார்ந்த விவகாரங்களில் உரிய எதிர்வினைகள் ஏற்படுகின்ற நிலையில் இஸ்லாமியப் பெண்கள் சார்ந்த விஷயங்களில் எந்த எதிரொலிகளும் காணப்படாத நிலைக்கு இந்த எழுத்தாளர்களின் நிலைபாடுகள்தான் காரணம். இஸ்லாமியப் பெயர்களில் அல்லது மத அடிப்படைவாதத் தன்மையோடு பொது வெளியில் இயங்கும் பலர் பெண்கள் சார்ந்த விவகாரங்களில் சராசரி ஆணாதிக்க அடிப்படைவாதிகளின் நிலைபாட்டில் தான் இருக்கின்றனர். இது சராசரி மத அடிப்படைவாத ஆண்களே மேல் என்ற முடிவிற்குக் கொண்டு செல்கிறது. இதில் முற்போக்கு அமைப்புகளில் இயங்குபவர்களும் அடக்கம். மேலும் விநோதமாக சில மார்க்சிய / பின்நவீனத்துவ அறிவுஜீவிகளும் மதம் மாறவில்லை என்பதைத் தவிர மற்றபடி இம்மாதிரியான விஷயங்களில் கள்ள மௌனங்களையே சாதிக்கின்றனர். மேலும் சிலர் அடிப்படைவாதிகளுக்கு முட்டுக் கொடுக்கும் வேலையிலும் ஈடுபடுகின்றனர். சில தருணங்களில் நீங்களுமா? என்று இவர்களின் நிலைபாடு நம்மைக் கேள்வி கேட்க வைக்கிறது.

இலக்கிய பிழைப்புவாதிகளைப் பொறுத்தவரை அறமற்ற சமரசவாதிகள். இவர்கள் காந்தியும் வாழ்க என்பார்கள். கோட்சேயும் வாழ்க என்பார்கள். மேலும் ராகுலும் வாழ்க, மோடியும் வாழ்க என்பார்கள், அப்படியானவர்கள் சராசரி மத ஆணாதிக்கவாதிகளை போன்று இயங்குவதில் ஆச்சரியமில்லை. ஆனால் சில தருணங்களில் அது தவறான முன்னுதாரணம் ஆகி விடுகிறது என்பதால்தான் அதனை இங்கு குறிப்பிட வேண்டியதிருக்கிறது. மேலும் பெண்கள் சார்ந்த ஒடுக்குமுறை விவகாரங்களில் கொந்தளிக்கும் பெண்ணியவாதிகள், பெண் எழுத்தாளர்கள் ஆகியோர் இஸ்லாமியப் பெண்கள் சார்ந்த விவகாரங்களில் தீவிர மௌனத்தையே சாதிக்கின்றனர். பல தருணங்களில் நான் மிகுந்த கவலையுடன் அவதானித்த விஷயம் இது. அதற்கு ஆண்களின் எதிர்வினைகளை காரணமாக முன்வைக்கின்றனர். முஸ்லிம் அல்லாத பெண்களின் விஷயத்திற்காகக் குரல் கொடுக்கும் தருணத்தில் ஏற்படும் எதிர்வினையை விட இது ஒன்றும் பெரிதல்ல. ஆக, இவர்கள் தைரியமாக இந்தப் பக்கம் கவனத்தைச் செலுத்தலாம். அதுதான் உண்மையான பெண்ணுரிமை சார்ந்த உணர்வு. இதன் மூலம் மட்டுமே தமிழ்நாட்டு முஸ்லிம் பெண்கள் மத்தியில் மாற்றம் ஏற்படும். இது தொடர்பான திறந்த, வெளிப்படையான உரையாடல்கள் தொடர வேண்டும்.