உடைமை

 

நீ போன போகாத

இந்நகரத்தின்

பெண்கள் யாவருக்கும்

உன்னைத் தெரிந்திருக்கிறது

ஒரே பூச்சரத்தைக் கிள்ளிப்

பகிர்ந்துகொள்ளும் பெண்கள்

கலகலவென சிரிக்கிறார்கள்

எனக்குக் கிடைத்த சரத்தில் மட்டும்

என்னைத் தேக்கும்

இரு விழிகள்

தலையில் வைக்காமல்

உள்ளங்கைக்குள் வைப்பேன்.

 

இடைவெளி

 

என்னவாக இருக்கிறாய் நான் இல்லாதபோது உன் கண்ணோரம் எத்தனை விதவைச் சிலந்திகள் கூடுகட்டின இது தண்காலை எந்தப் பழைய புதிய கோபங்களும் பெருந்தன்மை மிக்க டிசம்பரின் கொள்ளளவுக்கு முன் ஒன்றுமேயில்லை இப்போது நான் வசிக்கும் தெருவில் யாமத்தில் யட்சிகள் ஊர்வலம் வருகின்றனர் அவர்கள் இசைக்கும்போது உன்னிடம் பேச ஐந்தடுக்கு வார்த்தைகள் உருவாகின்றன அடுத்தமுறை உன்னைப் பார்க்கும்போது என் குதூகலத்தை எங்கே ஒளித்து வைத்தாய் என்று கேட்கவே மாட்டேன் இங்கே நானும் ஈரல்களும் நலம் நீ விசாரிக்காவிட்டாலும் என் காலைக்குப் பின் மதியம் பின் இரவு எல்லாம் தவறாமல் வந்துபோகின்றன என் மனம் இப்போதெல்லாம் பதறுவதே இல்லை ஒரு ரத்தத்துளிக்கும் இன்னொன்றுக்கும் இடையே சிறுபொழுது பெரும்பொழுதாக நீண்டு விட்டிருக்கிறது ஆரோக்கிய முன்னேற்றம் உன் வீட்டின்முன் நின்றுகொண்டிருந்த அந்த நட்சத்திரங்களை எல்லாம் என்ன செய்தாய் சாந்தோம் கடற்கரை உன்னைப் பற்றி வருவோர் போவோரிடம் வம்பளக்கிறது கொல்லைப்புறக் கடலை என்ன செய்யலாம் சொல் அந்தப் பனி பாலைவனத்துக்கு மறுபடியும் போய்ச்சேர்ந்து துருவக் கரடிகளோடு நான் தன்னந்தனியாக நடனமாடும்முன்

இது சொற்ப ஒளிக்கணம்

 

 

“சீக்கிரம் பார்ப்போம்”

 

இலையுதிர் காலத்தில் இதை நான் கேட்கும்போது

பழுத்த இலைகளை நிதானித்து உதிர்க்கிறேன்

வசந்தத்தில் இதைக் கேட்கும்போது

குயில்களோடு குயிலாய் ஒரு சுற்று பறக்கிறேன்

இந்தக் குளிர் காலத்திலோ இதைக் கேட்க

என் உடலெங்கும் கண்கள் முகிழ்கின்றன

கன்றுக்குட்டிகளாகிப் பரபரக்கின்றன

புகை அடர்ந்த பனியில்

நகரச் சந்தடியில்

ஒரு தாடையைத் தொட்டு வருடி வரும்

காற்றின் மடியில்

அவை முட்டி மோதுகின்றன

சீக்கிரம் சீக்கிரம்

 

நேரம் அதிகமில்லை

 

நேரம் அதிகமில்லை

இருட்கடல் சூழ்வதற்கு முன்பாக

நான் ஒரு சின்னப்படகைத் தயார் செய்யவேண்டும்

அதில் சில புத்தகங்கள் போதும்

அக்கரை என்று ஏதுமில்லாத கடலைக்

கடக்கும்போது

ஒரு நீண்ட வார்த்தையின் மீது துயில்வேன்

ஒரு கடின வார்த்தையைப் பற்றிக்கொள்வேன்

அக்கரை என்று ஏதுமில்லாத கடலில்

ஏதோ ஓர் இடத்தில்

என் பாலுறுப்பில்

நிற்காத பூகம்பத்தைக் கிளர்த்தும்

ஒரு வார்த்தையோடு

சாவின் நாற்காலியில் அமர்வேன்