இந்தியா தனது பதினேழாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது. 2019 ஜனவரி மாத குளிர்காலக் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு பத்துநாட்களே இருந்தன.அநேகமாக தேர்தல் சூடுபிடிக்கத் துவங்கி விட்டிருந்தது, பெரும்பான்மையான அரசியல் நோக்கர்கள் மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி கடுமையான பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக அவதானித்தனர். பாஜகவும் அதை உணர்ந்து பிரிந்து சென்று கடுமையான விமர்சனம் செய்து கொண்டிருந்த சிவசேனா உள்ளிட்ட பலகட்சிகளுடன் வலிந்து சென்று கூட்டணி அமைத்துக் கொண்டிருந்தது. இந்துத்துவ மதவாத அரசாட்சியின் இறுதி நாடாளுமன்றக் கூட்டமென மகிழ்ந்திருந்தனர் எதிர்தரப்பு. அந்தத் தோல்வியைத் தமதாக்கிக் கொள்ளும் ஆர்வத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பதில் சுணக்கமும், மெத்தனமும், விருப்பின்மையையும் காட்டி வாய்வீச்சு நடத்தியபடி வலம் வந்தனர்.

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒரு அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவைக் கொணர்ந்தது. அந்தத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தின் விதி எண் 15 மற்றும் 16 தொடர்பானது. சமூகநீதித் துறை சார்பாகக் கொண்டுவரப்பட்ட 124வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா அது. விதி எண் 15இன் அடிப்படை, அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னால், எந்தக் குடிநபரும் இன, மத,சாதிய, பாலினம் மற்றும் பிறப்பிடம் சார்ந்தும் வேறுபடுத்தப்படக்கூடாது என்பதே. ஆனால் அதில் அரசு சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் தொகுதியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சிறப்புச் சலுகைகள் அளிக்க இந்த விதியைத் தளர்த்தலாம் என்ற விதிவிலக்கு ஏற்கனவே உள்ளது. அதுதான் ‘சமூகநீதி’க் கொள்கையின் ஆதாரம். புதிதாகக் கொண்டுவரப்பட்ட பாஜக அரசின் 124ஆவது சட்டத் திருத்த மசோதா இந்தச் சட்டத்தை மேலும் திருத்தி கூடுதலாக, ‘பொருளாதார ரீதியாக நலிவுற்றோரை’ மேம்படுத்தவும் இந்த விதியைத் தளர்த்தலாமென்றது. அதாவது ஏற்கனவே இருக்கும் 22.5 சதவீத எஸ்.சி. / எஸ்.டி. ஒதுக்கீடு மற்றும் 27 சதவீத ஓபிசிகளுக்கான ஒதுக்கீடு போக இந்தப் பொருளாதாரரீதியாக நலிவுற்றோருக்காக 10 சதவீத ஒதுக்கீடு வழங்க முன்மொழிந்தது.
கூடுதலாக இந்தச் சட்டத் திருத்தம் விதி எண் 16இல் கண்டுள்ள அரசு வேலைவாய்ப்பில் குடிநபர்களுக்குள் பாரபட்சம் கூடாது என்ற இந்த விதியின்கீழ், ஏற்கனவே எஸ்.சி. / எஸ்.டி. / ஓபிசிகளுக்கான விலக்கு வழங்கியதைப் போல ‘பொருளாதார ரீதியாக நலிவுற்றோருக்கும் ‘விலக்கு வழங்க முனைந்தது. ஆனால் இந்த விதியின் அடிப்படையான அம்சம், ஏற்கனவே அவர்கள் விதிதாச்சார அளவிற்கு அல்லது போதுமான அளவிற்கு வேலைவாய்ப்புப் பெறாத நிலையில்தான் இந்தச் சலுகை வழங்கலாம் என்பதாகும்.இந்த 124வது சட்டத் திருத்தம் மிதித்து துவைத்த இந்த விதியின் விளைவுதான் இன்று ஊரே சிரிப்பாய்ச் சிரிக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இளநிலை உதவியாளர்கள் தேர்வு முடிவுகள். இதுபற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தச் சட்டத் திருத்தம் இந்த 10% இட ஒதுக்கீடு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீடுகளுக்கும் கூடுதலாக வழங்கப்படும் ஒன்று என்றும், பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர் யார் என்பதை அரசு தனித்த விளக்க ஆணையின் மூலம் அறிவிக்கும் என்றது. இந்த இடத்திலேயே சமூகநீதிக்கெதிரான அரசின் நயவஞ்சகத்தின் அடிப்படையைக் குறித்துக் கொண்டு முன்னகர்வது சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியாக நலிவுற்றோர் எனும் விதி எண் 15இல் கண்ட திருத்தம், ஏதோ ஒட்டுமொத்த பொருளாதாரரீதியான மக்கள் தொகுப்பிற்கானது என்பது போன்ற பாவனையை பொதிந்துள்ளது. ஆனால் அசலாக அந்த விதித் திருத்தம் செய்த ஏமாற்று என்னவெனில், எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கீடு பெற பொருளாதார கட்டுப்பாட்டு வரையறை கிடையாது என்பதையும், ஓபிசி பிரிவினருக்கு உச்சபட்ச வருவாய் எட்டு லட்சத்திற்கும் மிகக் கூடாது என்பது உள்ளது என்பதை ஒளித்ததே. இதை ஏன் ரகசியமான நயவஞ்சக வேலை எனக் கருத வேண்டியுள்ளது எனில், அந்தத் திருத்தமே பொதுவானது என்ற பொய்மையை உள்ளடக்கியது என்பதுதான். ‘பொருளாதார ரீதியாக பின் தங்கிய உயர்சாதியினருக்கு’ என வெளிப்படையாக கூறப்பட்டிருந்தால் சட்டத் திருத்தம் நீதிமன்றங்களின் பரிசிலனையில் அடிபட்டுப் போக வாய்ப்புள்ளது என்பதுதான். இந்த இரண்டு கூறுகள் குறித்த மோசடி வேலையை பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

அடுத்து இந்த மசோதா ஐந்தே நாட்களில் நாடாளுமன்ற இருஅவைகளையும் வரலாறு காணாத வேகத்தில் கடந்து, குடியரசுத் தலைவர் ஓப்புதலையும் பெற்றது. இந்திய அரசியல் கட்சிகளில் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அஇஅதிமுக தவிர ஒருவர் கூட இதை எதிர்த்து முணுமுணுக்கக்கூட இல்லை. மக்களவையில் எதிர்த்த அஇஅதிமுக வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தது. மேலவையில் திமுக மட்டுமே எதிர்த்து வாக்களித்த ஒரே திராவிடக் கட்சியுமானது. ஆனாலும் என்ன, சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு விட்டதே. அடுத்த பிப்ரவரி முதல் தேதி முதல் அன்றே இந்தத் திருத்தப்பட்ட சட்ட வடிவம் செயல்வடிவம் பெற்றது. பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியான அனைத்து ஒன்றிய அரசு தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் இந்த ‘அரியவகை ஏழைகளுக்கான’ ஒதுக்கீடு இடம் பெற்றது. அதிலும் குறிப்பாக யு.பி.எஸ்.சி. எனப்படும் ஒன்றிய அரசு முதல்நிலைப் பணிகளுக்கான தேர்வாணையக்குழுவின், அதாவது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட மிக முக்கியமான மாநில மற்றும் ஒன்றிய அரசுப் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பில் இந்த ஒதுக்கீடு இடம் பெற்றது.

ஆம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதுவரை 124 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்தத் திருத்தங்களில் ஒன்றுகூட இவ்வளவு அதிவேகத்தில், பத்தே நாட்களில் சட்டவடிவம் கண்டு செயலாக்கமும் கண்டதில்லை. அதிலும் இவ்வளவு மோசமான, சமூகநீதிக் கொள்கைக்கு சாவுமணி அடிக்க முனைந்துவிட்ட பாதகமான சட்டவடிவம் நடைமுறைக்கு வந்திருப்பதுதான் அநீதியின் மூலம். இந்தநிலையில் இந்த சட்டத் திருத்த வரலாற்றின் முதல் சட்டத் திருத்தம்பற்றி பேசுவது மிகப் பொருத்தமாகவும், அத்யாவசியமானதாகவும் இருக்கும். ஏனெனில் அந்த முதலாவது திருத்தம்தான் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதி ஒதுக்கீட்டை இந்திய அரசியல் சாசனத்தின் பகுதியாக்கியது. இந்தத் திருத்தம் உருவான வரலாறு தமிழ் மண்ணின் சமூகநீதி உணர்வாளர்கள் நன்கு அறிந்த ஒன்றுதான். ஆனாலும் ஒரு சிறு சுருக்கவரலாறு.

இந்தியாவிற்கு சமூகநீதிக் கொள்கையை அறிமுகம் செய்தது மராட்டியமும், தமிழ்நாடும் என்றால், அதனை அரசு வடிவாக்கியது திராவிட / நீதிக்கட்சி அரசே. 1928ஆம் உருவான இந்த சமூகநீதி வடிவம், பல படிநிலைகளைத் தாண்டித் தொடர்ந்தது மதராஸ் மாகாணம் எனப்பட்ட திராவிட பூமியில்தான். இந்திய சுதந்திரம் வெள்ளையர் ஆட்சியை ஒழித்து பார்ப்பன ஆட்சிக்கு மட்டுமே வழிவகுக்குமென்ற பெரியாரின் எச்சரிக்கை உறுதியானது அதன் ஆரம்ப நாட்களிலேயே. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களோடு இணைந்து உருவாக்கிய குழுவில் இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் செண்பகம் துரைராஜன் என்ற மாணவருக்கு இந்த இடஒதுக்கீடு கொள்கையால் மருத்துவக் கல்லூரி அனுமதி கிடைக்கவில்லை என, அவர் சார்பாக வழக்கொன்றைத் தொடுத்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்த இடஒதுக்கீட்டிற்கு இடமில்லை என ஆணை பெற்றார். அதாவது அரசியல் சாசனத்தை உருவாக்கிய குழுவில் இருந்தவரின் முதல் கடமை சமூகநீதிக் கொள்கையை அழிப்பதானது. இந்த செண்பகம் துரைராஜன் வழக்கே பொய்வழக்கு என்பது வேறு கதை. ஏனெனில் அந்த நபர் மருத்துவக் கல்லூரி அனுமதிக்கு விண்ணப்பிக்கவே இல்லை. ஆனாலும் இந்திய அரசியலமைப்புச் சட்டமும், நீதியும் தமது கடமையைச் செய்து முடித்தது. அதாவது 1928 முதல் 1950 வரை இருந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஒழித்தது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயமென்னவெனில் அந்த நாளைய ஒதுக்கீட்டில் பார்ப்பனர்களுக்கு ஒதுக்கீடு இருந்தது என்பதுதான். அதாவது 14 பேரில் இருவர் பார்ப்பனர்களாக இருக்கலாம் என்ற ஒதுக்கீடு இருந்தது. இதைச் சதவீதமாக மாற்றிப் பார்த்தால் நூற்றுக்கு பதினான்கு சதவீதம் வரும். என்ன ஒரு பேராசை! அவர்களின் பதற்றம் காரணமில்லாமல் இல்லை. நீதிக்கட்சி ஒதுக்கீடு வரும்வரை நூற்றுக்கு ஐம்பது சதவீதமாக இருந்த அவர்கள் இடம் பதினான்காக குறைக்கப்பட்டதை சரிசெய்யவே அவர்கள் முயன்றனர்.

கொதித்தெழுந்தது தமிழ்நாடு, பெரியாரும், அண்ணாவும் களம் கண்டனர். ஏற்கனவே அண்ணலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் குற்றப் பரம்பரைச் சட்டத்தால் ஓடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி அரசிலிருந்து விலகியிருந்தார். காமராஜரும் நேருவிடம் விளக்கிச் சொல்ல உருவானதுதான் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தொடர்பான முதல் சட்டத் திருத்தம்.ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அதிமுக்கியமான ஒன்று இந்த முதல் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய இடஒதுக்கீடு சலுகை மாநில அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மட்டும்தான் என்பது. ஒன்றிய அரசின் கல்வி அமைப்புகளிலோ, வேலைவாய்ப்புகளிலோ இந்த ஒதுக்கீடு இல்லை. அந்த அரிய சலுகை உருவான போராட்ட வரலாற்றையும் அறிந்து கொள்வது இன்றைய அவலநிலையைப் புரிந்து கொள்ள உதவும்.

இந்திய ஒன்றியத்தின் முதல் காங்கிரசல்லாத ஜனதா கட்சி ஆட்சியில்தான், ஒன்றிய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்குவதைப் பரிசீலிக்க மண்டல் குழு, 1979 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. ஆனால் இது இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு தொடர்பான ஆணையம்தான். முதல் ஆணையமான காகா கேல்லாஹர் ஆணையம் 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் தனது நேர்மறையான பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்து தனது அறிக்கையை 1955 ஆம் ஆண்டு அரசிற்குக் கொடுத்தது. அன்றைய காங்கிரஸ் அரசு அதனைப் பரிசீலனைக்குக்கூட எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்து விட்டது.

1979 ஆம் ஆண்டின் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தலைமையேற்ற இந்த மாமனிதர் பி.பி.மண்டல் குறித்து அறிந்து கொள்ளுங்கள். இவர் பிகாரின் பிற்படுத்தப்பட்ட யாதவர் சமூகத்தில் பிறந்தவர். நானே தவறாக வெகுநாட்கள் கருதிவந்தது போல் இவர் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி அல்ல. இயல்பாக இது போன்ற குழுக்கள்(COMMISSIONS) நீதிபதிகள் தலைமையில் அமைவதால் அப்படியான புரிதல் என்னிடம் இருந்தது. இவர் அசலாக ஒரு அரசியல்வாதி, இரண்டுமுறை பாராளுமன்ற உறுப்பினராகவும், 1968 ஆம் ஆண்டில் முப்பது நாட்கள் மட்டும் பிகார் மாநில முதல்வராகவும் இருந்தவர். இந்தக் குறிப்பை இங்கு எழுதுவதற்கு காரணம் இரண்டு. முதலில் இவர்பற்றி அறிமுகம். இரண்டாவது இந்த மண்டல் அறிக்கை உருவாக்கத்திலும், அதன் நடைமுறைப்படுத்தலில் பங்காற்றிய உச்சநீதிமன்ற நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் பற்றிய விபரங்களை இணைத்து மண்டல் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு வரலாற்றின் புள்ளிகளின் அபூர்வத்தைக் குறிப்பிடவுமே. மண்டல் குழு தனது அறிக்கையை 1980 ஆம் ஆண்டில் சமர்ப்பித்தது. மண்டல் குழுவின் ஒரே தாழ்த்தப்பட்ட உறுப்பினரான எல்.பி.நாயக் அவர்கள் அதன் பரிந்துரை அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டார். இட ஒதுக்கீடு விவகாரத்தில் தாழ்த்தப்பட்டவர் / பிற்படுத்தப்பட்டோர் முரண் வெகுநீண்ட வரலாறு கொண்டது. சென்னை ராஜதானி மற்றும் இந்திய மெட்ராஸ் ஸ்டேட் மற்றும் தமிழ்நாடு அரசியல் களத்திலும் இந்த முரண் தொடரும் ஒன்றுதான். ஒவ்வொரு புள்ளியிலும் இருதரப்பின் நியாயங்கள் அந்தச் சூழலை வைத்தே தீர்மானிக்கப்படுவது என்ற வகையில் இந்த விவாதத்தை இங்கு தொடரவில்லை. அதற்குள் ஜனதா ஆட்சி கவிழ்ந்துவிட, மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா அம்மையார் அறிக்கையைக் கிடப்பில் போட்டார்.

மண்டல் அறிக்கையை ஏற்ற நாயகன் வி.பி .சிங் எப்போதும் நம் போற்றுதலுக்குரியவர். அவரை அந்த முடிவெடுக்க ஆலோசனை வழங்கித் துணைநின்ற கலைஞர் நம் காலத்தின் மாபெரும் நாயகர். வி.பி.சிங் அரசு 1990இல் இதை ஏற்றதே அதன் வீழ்ச்சிக்கான காரணமானது. இந்திய வெங்கும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து தேசியவாதக் கட்சிகளும் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். நாடெங்கும் உயர்சாதியினர் என்போரால் கலவரங்களும், போராட்டங்களும் அரங்கேறியது. அசலாக நாடுப்பற்றி எரிந்தது. மாணவர்களும் தீக்குளித்து மாண்டனர். இதற்கிடையே நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் சிறுபான்மை அரசு, பாரதிய ஜனதாக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி ‘பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு’ அரசு ஆணையையும் கூடுதலாக மண்டல் அறிக்கை பரிந்துரைகளின்படியான பிற்படுத்தப்பட்டோருக்கான 27% ஒதுக்கீட்டோடு இணைத்தது. ஏற்கனவே உச்சநீதி மன்றத்தின் ஐவர் அமர்வு மண்டல் குழு பரிந்துரைகள் ஏற்பு வி.பி.சிங் அரசின் ஆணைக்குத் தடை விதித்திருந்த நிலையில், நரசிம்மராவ் அரசின் 10% உயர்சாதி ஏழைகளுக்கான ஒதுக்கீடு கூடுதல் சிக்கலை உருவாக்கியது. எனவே உச்சநீதிமன்றம் இரண்டு ஆணைகளையும் இணைத்து ஒன்றாக விசாரணை செய்ய ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வுக்கு மாற்றிக் கொண்டது.

அந்த ஒன்பது நீதிபதிகள் அமர்வு 1992 ஆம் ஆண்டு 6-3 என்ற பெரும்பான்மை நீதிபதிகளின் ஆதரவோடு மண்டல் பரிந்துரைகள் ஆணைக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதேவேளையில் நரசிம்மராவ் அரசு ஆணைவழியாக உருவாக்கப்பட்ட 10% ஒதுக்கீட்டை சட்ட அதிகார வரம்பிற்கு மீறியது என நிராகரித்தது. அதாவது இடஒதுக்கீடு வழங்க பொருளாதார அளவுகோலை அடிப்படையாகக் கொள்ள முடியாது என்பதே அந்த ஆணை. அதாவது விதி எண் 15(1) மற்றும் 16(1) குடிநபர்களிடையே பாரபட்சமின்மை என்ற விதியைத் தளர்த்த சமூக, கல்வி பிற்படுத்தப்பட்ட தன்மை என்பதையே அளவுகோலாகக் கொள்ள முடியும், பொருளாதார ரீதியான நலிவு என்பது இந்தத் தளர்விற்கான காரணியாக இருக்க முடியாது என்பதே அது. அந்த ஒன்பது நீதிபதிகள் அரசியலமைப்புச் சட்ட அமர்வின் தலைமை ஏற்று ஆணை வழங்கிய தலைமை நீதிபதி (பொறுப்பு) ரத்தினவேல் பாண்டியன் ஆவார். இவர் பற்றிய செய்தி இங்கு அவசியம். இவர் நெல்லை திமுக மாவட்டச் செயலாளராக 1971ஆம் ஆண்டுவரை இருந்தவர். 1967ஆம் ஆண்டு திமுக சட்டமன்ற உறுப்பினரும் கூட. 1971ஆம் ஆண்டுத் தேர்தலில் 183 எம்.எல்.ஏ.க்கள் வென்ற தேர்தலில் இவர் தோற்றார். வென்றிருந்தால் அமைச்சராகியிருக்கும் வாய்ப்புக் கொண்டவர். தோல்வியால் மாநில அரசின் தலைமை வழக்கறிஞராகி, உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்றங்களின் நீதிபதியாகி, இந்திய அரசின் சமுகநீதிக் கொள்கையின் மைல்கல்லான மண்டல் அறிக்கையை ஏற்கும் அசைக்க முடியாத ஆணையை வழங்கினார். பெரியாரிய / திராவிட அரசியலின் மாபெரும் மைல்கல்லாகவே கருதவேண்டிய நிகழ்வு இது. திராவிட சமூகநீதி அரசியலையும், அதன் இயங்குதள களநியாயங்களையும் நேர்முகமாக அறிய வாய்ப்புப் பெற்ற அரசியல்வாதி / நீதிபதியால் இந்த மண்டல் ஆணை உறுதி செய்யப்பட்டு, இன்றும் இடஒதுக்கீடுக் கொள்கை குறித்த அடிப்படைகள் கொண்ட தீர்ப்பாக, இந்திய குடிமையியல் அடிப்படை உரிமைகள் குறித்த ஆவணமாக விளங்குகிறது இந்தத் தீர்ப்பாணை. ஆம், இந்தமுறை நாடாளுமன்ற மக்களவையில் அ.ராசா அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டது போல் இந்தியாவிற்கு ‘சமூகநீதி’ கற்றுக் கொடுத்தது இந்தப் பெரியார் மண் என்பது எவ்வளவு பொருத்தமானது என்பது தெளிவு.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி எண் 14,15 மற்றும் 16 ஆகியவற்றில் குடிநபர்களின் அடிப்படை உரிமைகள்பற்றிப் பேசப்படுகிறது. விதி எண் 14 பொதுவானது. அதாவது இந்த நாட்டின் குடிநபர்களனைவரும் எல்லா வகையிலும் சமமானவர்கள் என்பது. இன்னும் நேரடியாக சட்டத்தின் முன் அனைவரும் சமம். விதி எண் 15 ஏற்கனவே கண்டது போல இன,மொழி,மத,சாதி மற்றும் இருப்பிடம் சார்ந்து எந்தக் குடிநபரும் வேறுபடுத்தப்படக்கூடாது. விதி எண் 16 வேலைவாய்ப்பு உள்ளிட்ட இதர வாய்ப்புகள் அனைத்தும் சமமாக இருத்தல். இந்த விதிகளின் உட்பிரிவு 15(4), 16(4) தாம் இங்கு நமது கவனத்திற்குரியவை. இந்த உட்பிரிவுகள்தான் விதிவிலக்குகள் பற்றிய விவரணைகள் கொண்டவை. அதாவது 15(1) மற்றும் 16(1) ஆகியவற்றில் கண்டுள்ள ‘பாரபட்சமின்மையை’ மீறுவதற்கான வரன்முறைகளை அல்லது காரணிகளை வரையறுப்பவை. 15(1) மற்றும் 16(1)ல் கண்டுள்ள இன,மொழி,மத,சாதிய வித்தியாசமின்மை மற்றும் வேலைவாய்ப்புகளில் சமத்துவம் என்ற கூற்றை மீற “சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட சாதிகள்” என்ற காரணம் ஏற்புடையதாகிறது. இந்த “பிற்படுத்தப்பட்டோர்” (Backward Classes) என்ற சொல் எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி எனும் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கியது என்பது கவனத்திற்குரியது. இந்த வகையில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கீடு சதவீதம்தான் 18+4.5=22.5% மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% எனப் பகுக்கப்பட்டுள்ளதேயன்றி மீறுவதற்கான பொதுக் காரணியான ‘பிற்படுத்தப்பட்ட தன்மை’ (Backwardness) என்பது பொதுக் காரணிதான்.

இந்தப் பிற்படுத்தப்பட்ட தன்மை என்ற காரணியை வலியுறுத்திச் சொல்வது ஏதோ தலித்துகளுக்கும் இதர பிற்படுத்தப்பட்டோருக்குமான சமூகநிலை வேறுபாடு சட்டரீதியாக இல்லை என்பதைச் சுட்ட அல்ல. ஏனெனில் அந்த வேறுபாடு இட ஒதுக்கீட்டின் இதர தளங்களில் காணப்படும் ஒன்றுதான். அது சமூகநிலை ரீதியான நியாயங்கள் கொண்டதும் கூட. இந்த சங்பரிவார அரசு கொண்டுவந்துள்ள அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 15(4),16(4) ல் தான் “பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்கள் என்ற காரணியைப் பொதிந்துள்ளது. இதுதான் சமூகநீதி எனும் கோட்பாட்டு அடிப்படையைத் தகர்க்கும் “பொதிவு” (Entry) என்கிறோம். நேர்பொருளிலேயே இட ஒதுக்கீடுக் கொள்கையை சமூகநீதி (social justice) என்கிறோம். அது நிச்சயமாகப் “பொருளாதார நீதி” (economic justice )அல்ல. அதாவது சமூகத்தில் நிலவிய சாதிரீதியான ஏற்றத்தாழ்வினால் உருப்பெற்ற சமனற்ற சமூகநிலையை நேர் செய்யும் நேர்மறை நடவடிக்கை (affirmative action) இது உறுதியாக பொருளாதார ஏற்றத்தாழ்வை சமன்செய்யும் ஏற்பாடு அல்ல. இது வறுமை ஒழிப்பு ஏற்பாடும் அல்ல (not a poverty alleviation programme). எனவே இதில் பொருளாதாரக் காரணியை நுழைக்கும் ஏற்பாடு சமூகநீதிக் கொள்கையின் அடிப்படைகளை மாற்றியமைக்கும் ஏற்பாடு.

இந்த 124ஆவது சட்டத்திருத்தம் ஒரு மோசமான சதியை அரங்கேற்றியுள்ளது. இட ஒதுக்கீடு கொள்கையில் “முற்படுத்தப்பட்ட சாதிகளின் வறியவர்கள்” என்ற தொகுப்பிற்கும் “இதர பிற்படுத்தப்பட்டோர்” என்ற பிரிவிற்குமான எந்த வேறுபாடுகளும் இல்லாமல் ஆக்கிவிட்டிருக்கிறது. எப்படியெனில் ஏற்கனவே உள்ள இதர பிற்படுத்தப்பட்டோரை வகைமைபடுத்தப் பட்டியலொன்று உள்ளது. அது ஒன்றிய அரசு அங்கீகரித்த சாதிகள் மட்டுமே அங்கு பிற்படுத்தப்பட்டோர். அந்தப் பட்டியலில் மாநிலப் பட்டியலிலுள்ள அனைத்துப் பிற்படுத்தப்பட்ட சாதிகளும் இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் காணப்படும் சிறுபான்மை இஸ்லாமிய, கிறித்தவ சாதிப் பிரிவுகள் அநேகமாகப் பல இல்லை என்பதே நிலை. ஆனால் அந்தப் பிற்படுத்தப்பட்டோரை “வளமான பிரிவினர்” என்ற வடிகட்டியை வைத்து வடித்து விடுகிறது ஒன்றிய அரசு. அந்த வடிகட்டும் வரையறை 8 லட்சம் ரூபாய் வருட வருவாய் என்பதே. அதே 8 லட்ச ரூபாய் வரையறைதான் “அரிய வகை மாதம் 65 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் கொண்ட உயர்சாதி ஏழைகளை” 10% ஒதுக்கீட்டிற்கு பாத்தியமானவர்கள் ஆக்கியிருக்கிறது. இதன் பொருள் என்ன? எட்டு லட்ச ரூபாய் வருவாய் மட்டுமே அடிப்படை. அதற்கு மேல் வருவாயுள்ள பட்டியலில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 27% ஒதுக்கீடு, பட்டியலே இல்லாத உயர்சாதி ஏழைகளுக்கு 10% ஒதுக்கீடு. அவ்வளவுதான். சமூக ரீதியான, கல்விரீதியான என்பதும் ‘பொருளாதார ரீதியாக’ என்பதும் ஒன்றுதான். இனி ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகள் அல்லாதோருக்கான ஒதுக்கீடு ஒரே அடிப்படையில். எட்டு லட்ச ரூபாய்க்கு மிகாத வருவாய். என்ன தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடும் 27% தான். ஆனால் மக்கள் தொகுப்பு 75%. அதாவது 75% பேருக்கு 27%,, மூன்றிலிருந்து ஆறு சதவீதம் பேருக்கு 10% ஒதுக்கீடு.

இதன் விளைவுதான் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் எழுத்தர் தேர்வில் தகுதி பெற உயர்சாதியினருக்கான தகுதி மதிப்பெண் 28.5 ஆகவும், எஸ்டி பிரிவினருக்கு 53.5 ஆகவும் ஓபிசி மற்றும் பொதுத் தொகுதிக்கும் 61.5 மதிப்பெண்ணாகவும் உள்ள அவலம். ஏன் இந்த நிலை. ஏற்கனவே எண்ணிக்கை குறைவான உயர்சாதியினர் அவர்கள் எண்ணிக்கை அளவிற்கும் மேலாக பொதுத் தொகுப்பு ( general category ) வழியாகப் பெற்றுவிட அவர்களில் மிச்சம் மீதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டி “தோற்றவர்களையும்” தேர்வு செய்ய வேண்டியதாகிறது. இதன் விளைவு என்னவாக இருக்கும். 1900மாவது ஆண்டுகளில் உயர்சாதியினர் ஐம்பது சதவீத இடங்களைப் பிடித்ததுபோல, இப்போதும் 6 % பேர் 15% இடத்தை நிரப்புவர். இது இங்கு மட்டுமில்லை. உயர் அதிகார தலைமைப் பதவிகளிலும் நடக்கும். யோசித்துப் பாருங்கள். இப்போதே ஒன்றிய அரசின் தலைமை அதிகாரப் பதவிகளில் 60% பேர் பார்ப்பனர்கள் என்கிறது தரவு. இதையும் சேர்த்தால் அநேகமாக தலித் அல்லாதோர் தொகுப்பை முற்றாக அவர்களே நிறைத்து விடுவர். அதனால் என்ன என்போருக்கு, அந்த உயர்பதவியிலுள்ளோர்தான் இந்திய ஒன்றியத்தின் சமூகப் பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் அதிகார மையங்கள். ஏற்கனவே உச்சநீதி மன்றத்தை அவர்கள் 70% நிறைத்து உள்ளனர். அதிகார மையங்களை 75% நிறைத்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்ல இன்னொருமுறை பெரியாரைச் சொல்லி உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 28 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் 12% பேர் கூட பிற்படுத்தப்பட்டோர் அந்த தொகுப்பில் இடம் பெறவில்லை. இந்த தடையை விளக்க தகுதியானவர்கள் இல்லை என்பதுதான் காரணம். ஆனால் ஸ்டேட் பேங்க், மற்றும் ஏற்கனவே தேர்வு நடத்தப்பட்டிருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ‘தகுதி’ எப்படித் தீர்மானிக்கப்படுகின்றது எனப் பார்க்கிறோம். மேற்கு வங்க ஸ்டேட் பேங்க் தேர்வின் குறைந்தபட்ச மதிப்பெண் ‘சைபர்’ ‘முட்டை’ மதிப்பெண். இதுதான் கொள்கை முடிவு (policy decision).. உயர்சாதிப் பிரிவினருக்கான காலியிடங்களை முற்றாக நிரப்ப உயர்சாதி அதிகாரிகள் ‘கொள்கை முடிவு’ எடுப்பார்கள். நிச்சயமாக 27% போலல்லாமல் 10% எப்பாடுபட்டாவது நிரப்பப்படும். அதற்குதான் குறைந்தபட்ச மதிப்பெண் பூஜ்யம். 200க்கு 200 வாங்கிய அனிதாக்களை தடுக்க / கொல்ல ‘நீட்’ தேர்வு, இவர்களுக்கு இப்படி. இந்தத் தளத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விடயம் என்னவெனில் விதி எண் 16(1) ல் கண்டுள்ள வேலைவாய்ப்பு முன்னுரிமை, எப்போது செயல்படுத்தப்பட வேண்டுமென தெளிவாக வரையறுத்துள்ளது. அதாவது முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் வேலைவாய்ப்பைப் பெறும் பிரிவினர், அந்தப் பதவிகளில் போதுமான அளவில் இல்லையென்றால் மட்டுமே இந்த விலக்கு அளிக்கப்படலாமென்கிறது. தலைமைப் பதவிகளில் 60% பேர் இருக்கும் உயர்சாதிப் பிரிவினருக்கு மேலும் 10% பிரத்யேக ஒதுக்கீடு வழங்கும் ஏற்பாடு அந்த விதியை மீறுவது மட்டுமல்ல; ஒழிக்கும் நடவடிக்கையும் கூடத்தான். எனவேதான் இந்த “அரிய வகை உயர்சாதியினருக்கான 10% ஒதுக்கீடு” சமுக அநீதி என்கின்றோம்.

இனி. மோடியின் இரண்டாவது பொற்கால ஆட்சியில் சமூகநீதி கொல்லப்படுவதற்கான முகாந்திரங்கள் முன்மொழியப்பட்டுவிட்டன. ஏறத்தாழ 80% மக்கள் தொகையின் இட ஒதுக்கீட்டிற்கான தகுதிப்பாடு பொருளாதார ரீதியாக ஒரே தளத்தில் நிறுத்தப்பட்டு விட்டது ( எட்டு லட்சம் வருட வருவாய் எனும் கட் ஆப்) மிச்சமிருக்கும் தொகுப்பிற்கும் இதை நகர்த்த வெகுகாலம் ஆகப் போவதில்லை. மொத்த ஒதுக்கீடு 50% கடந்துவிட்டது, எனவே இனி இதை உயர்த்துவதில் பெரும் தடையேதும் இல்லை. எட்டு லட்ச ரூபாய்க்கும் கீழான வருவாயுள்ளோருக்கு 60% ஒதுக்கீடு என இட ஒதுக்கீட்டை பொதுவாக்கி விட்டால் சமூகநீதிப் பேச்சு ஒழிந்து போகும். சரியாக ஒரு நூற்றாண்டுப் போரை வென்றெடுக்க சனாதனம் முனைந்து நிற்கிறது. யாருக்கோ வந்தது என இன்றிருப்போர் நாளை பதறும் நாளில் அவர்கள் தனித்து விடப்பட்டிருக்கலாம்.

மிச்சமிருப்பது உச்சநீதிமன்றத்தின் இடையீடு மட்டுமே. அங்கு நிறைந்திருக்கும் கூட்டத்தினரின் மனப்பாங்கு நம்பிக்கையளிப்பதாக இல்லை. அதிலும் அரசியல் சட்டத்திருத்தம் என்ற ஆயுதம் அவர்களை மிரட்டலாம். ஒரு மோசமான சட்ட விளக்கத்தை அல்லது தீர்ப்பை வழங்காமல் இருக்க காலதாமதம் என்ற வழிமுறை ஏற்கனவே நூறு முறை கையாளப்பட்ட ஒன்றுதான், ஜெயலலிதா மரணத்துக்குக் காத்திருந்த நீதி நாம் அறியாததல்ல. தமிழ்நாட்டின் இன்றைய அவல ஆட்சியைத்தக்க வைத்திருக்கும் சக்தி சங்பரிவார அரசு மட்டுமல்ல, உயர், உச்சநீதிமன்றங்களும்தான். ஏற்கனவே மண்டல் பரிந்துரை ஏற்கப்பட்டபோது பாய்ந்து வந்து தடையாணை வழங்கிய உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் கனத்த மௌனம் காப்பது பொருள் நிறைந்தது. இயல்பாக பத்திருபது ஆண்டுகள் வழக்குகள் நிலுவையில் கிடப்பது ஏற்கனவே நடப்பில் உள்ள ஒன்றுதான். அதிலும் இந்த விவகாரத்தில் ஒட்டு மொத்த இந்திய அரசியல் கட்சிகளும், திமுக தவிர, எதிர்க்காத, வலுவாக ஆதரிக்கும் ஒரு சட்ட வரைவு அமோகமாக ஏற்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே தனித்த குரலானாலும் நம் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். கல்வி தொடர்பான ஒன்றியக் கட்டுப்பாட்டிலான தேர்வுகள், இது போன்ற வங்கிகள் மற்றும் பொதுத்துறை தேர்வுகள் மெதுவாகப் பலரை மெள்ள அவர்களது துயிலிலிருந்து தட்டி எழுப்பும் நாள் வெகுதூரத்தில் இல்லை. சமூகநீதிக் கொள்கையை மட்டுமல்ல, அதனை மீண்டும் உயிர்பெறச் செய்யும் கடமையையும் திராவிடமே, தமிழ் மண்ணே முன்னெடுக்கட்டும். அவர்கள் வழக்கம் போல் பின் தொடர்வார்கள். சனாதன இந்துத்துவ பாசிசத்தை வேரறுக்க சமூகநீதியோடு, நமது பலமான ஆயுதமான ‘மாநில சுயாட்சி’ யையும் இணைத்து உயர்த்துவோம். பாசிசம் எவ்வளவு விரைவாகவும், சடுதியாகவும் தனது கோரத்தை வெளிப்படுத்துகிறதோ, அதே வேகத்தில் தனது அழிவையும் தேடிக்கொள்ளும் என்பதுதான் வரலாறு.