குதிரைகள்

 

வீட்டின் முன்னால்

புல்மேயும் குதிரைகள்

கடலற்ற என் ஊருக்கு

கடல் கொணர்கின்றன

 

சோழப்படையினரும்

சேரரும் பாண்டியரும்

என் வாசலில் வந்து நிற்கும்

பெருங்கலங்களினின்று

இக் குதிரைகளை

இறக்குகின்றனர்

 

வீட்டின் முன்னால்

குதிரைகள்

மழை நனைத்திருக்கும் வாசலில்

பாலையை விரிக்கின்றன

 

உடல் திமிர்த்த

யவனர்கள்

இக் குதிரைகளை

விரட்டிப் பழக்குகின்றனர்

 

வீட்டின் முன்னால்

குதிரைகள்

முருங்கையும் பூவரசும்

வளர்ந்து நிற்கும்

ஸ்தெப்பி புல்வெளியைக்

கொண்டு வருகின்றன

 

அப் புல்வெளியினூடாக

போர்க்காலத்தில்

ஜமீலா

தன் காதல் கணவன்

ஸாதிக்குக்கு

கோதுமை மணிகளைக்

கொண்டு செல்கிறாள்

 

வீட்டின் முன்னால்

குதிரைகள்

கைவிடப்பட்ட துயரில்

கணைத்தபடி

குப்பையை

மேய்கின்றன.

 

 

முறியும் இறகு

 

புலரி இல் துயின்றெழுந்து

மின்விசிறியின் சுழல் தடுத்த மௌனா

ஸ்லீப்வெல் தலையணைக் கருகில்

இறக்கை யடிபட்டு வீழ்ந்திருக்கும்

சிட்டுக்குருவியைப் பார்த்தாள்

 

உண்மை இறக்கைகளை

உலோகத்தின் போலி இறக்கைகள்

முறித்துவிட்டனவே என்று

துக்கித்தவளாய் மனங்கசிய

கென்ட் ஆர்ஓ யுவி வடிகட்டியிலிருந்து

சில துளி நீர் கொணர ஓடினாள்

 

உலோ கத்தாது புதைந் திருந்த

மலைச் சரிவை அடர்கானால் போர்த்திய குருவிகள் துரத்தியடிக்கப்பட்ட பின்

மரம் கிடைக்காமல்

அறைகளில் குடியேறும் பொருட்டு

ஈங்கு வந்ததொரு சந்ததிக் குருவியதன் தலை

அவள் வரும் முன்னரே சாய்ந்தது

 

அச்சின்னஞ்சிறு வெதுவெதுப்பை

உள்ளம் கை யுணர்ந்தபடி

கண்ணீரால் வைகறையை

ஈரப்படுத்திக் கொண்டே

கொடியம் வரைகாட்டமெனும்

குரோட்டனின் வேரில் புதைத்து

நிமிர்ந்தவள்

உடல் கிழிபட்டு குருதிச்சகதியில்

கிடக்கும்

அடி வானம் கண்டதிர்ந்தாள்.