ஆறுவிரல் கணேசனுக்கு எல்லா அம்சங்களும் இருக்கிறது என்றுதான் ஊருக்குள் பேச்சாய் ஒரு காலத்தில் இருந்தது. அவன் அந்தக் குறுநகரில் பேன்சிக்கடை வைப்பதற்கும் முன்னால் திருப்பூர் பனியன் கம்பெனிக்குத்தான் அயர்னிங் மாஸ்டராகச் சென்று வந்து கொண்டிருந்தான். தன் முப்பதாவது வயதில் சொந்தபந்தங்களிடம் கொஞ்சம் கடன்பெற்று பேன்சிக்கடை போட்டதே தனக்கொரு திருமணம் நடக்கவேண்டும் என்பதற்காகவே. பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் செல்பவனுக்கு பொண்ணு கொடுக்க யாரும் தயாரில்லை என்பதை ஒருவருடத்தில் புரிந்து கொண்டவன் தனித்தே இந்த முடிவுக்கு வந்திருந்தான்.

கடை வைத்த இரண்டு வருடங்களில் சொந்தபந்தங்களின் கடனை அடைத்தவன் அடுத்து தன் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டான். பேன்சிக்கடை எஜமானாய் இருந்தும் பொண்ணு கொடுப்பதற்கு அவன் சுற்றத்தில் யாருமில்லை. இதற்கெல்லாம் தன் வலது காலில் இருக்கும் ஆறாவது விரல்தான் காரணமோ என்று தன் அம்மாவிடம் ஒருமுறை பேசிப் பார்த்தான். காரணம் அதுவாக இருந்தால் அருவாமனையைக் கொண்டு அந்த ஆறாவது விரலை நறுக்கும் யோசனையில் இருந்தான். சுத்த ஜாதகத்திற்குச் சொந்தக்காரனான ஆறுவிரல் கணேசனுக்கு திருமணம் தள்ளிப் போவதற்கான காரணத்தை மட்டும் எந்த ஜோதிடர்களும் சொல்லவில்லை.


ஆங்காங்கே முப்பத்தியேழாவது வயதில் நரைமுடிகள் தோன்றவும் பொண்ணே வேண்டாமென்ற முடிவில் கடையே தன் கதியென்று இருந்தவனுக்குத் தன் ஜாதியல்லாமல் வேற்று ஜாதியில் பொண்ணைக் கொடுப்பதற்கு சிலர் இருப்பதாகத் தானாவதி ஒருவர் சொல்ல, அதுமட்டும் முடியாதென்று மண்டையை ஆட்டிவிட்டான்.

கேரளாவிற்குச் சென்று பெண்ணைக் கட்டிக் கொண்டு வந்துவிடலாம் என்று மற்றொரு தானாவதி இவனுக்கு வலையை விரித்தார். ஆனால் அப்படி மணம் முடித்து வந்த இவனுக்குத் தெரிந்தவர் கதியை நினைத்து மண்டையை விரைவாகவே ஆட்டினான். கேரளாவிலிருந்து செக்கச் செவேல் என்று இவன் நண்பர் தன் நாற்பத்தி மூன்றாம் வயதில் திருமணம் முடித்துக் கூட்டி வந்திருந்தார். அந்தப் பெண்ணுக்கு இருந்தால் வயது இருபதுதானிருக்கும். அவருடன் ஒருமாத காலம் வாழ்ந்த அந்தப் பெண் குறுநகரில் வேறொரு நபருடன் காதல் கொண்டு கழுத்து நகையோடு கம்பி நீட்டிச் சென்று விட்டது. நண்பர் வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கச் சென்றவனைத் திண்ணையில் அமரவைத்து, ’என் பொண்டாட்டி ஓடிப் போன விசயத்தை தவிர்த்து என்ன வேண்டுமானாலும் பேசு கணேசா!’ என்று சொல்லிவிட, ‘பெருந்துறைப் பக்கமா இன்னொரு பேன்சிக்கடை போடலாமான்னு யோசனையில் இருக்கேன்’ என்று பேசி ஒப்பேற்றிவிட்டு வந்து சேர்ந்தான்.

‘இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இவனுக்கு நானே வடிச்சுக் கொட்டீட்டு இருக்கணுமோ!’ என்று அம்மா தன்னப் போல பேசத் துவங்கியதும் சமீப காலமாகத்தான். இவனுக்கென்று ஒருத்தி இனி புதுசாவா இந்த உலகத்தில் பிறக்கப் போறா? தேடினா கிடைக்காம எங்க போயிடும்? என்று இவனை உசுப்பேற்றுவதற்கென்றே தானாவதிகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருந்தார்கள்.

ஒருவழியாக குன்னத்தூரில் பணி ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரின் பெண் இருப்பதாக புது தானாவதி ஒருவர் பேன்சிக் கடைக்குள் நுழைந்தார். அவர் பேச்சு, திருமணம் முடிந்து கையில் குழந்தையுடன் இவன் நின்றிருப்பதாகவே படு வேகமாய் இருந்தது. கடைசியாக அவர் சொன்னதுதான் இவனுக்கு உறைத்தாலும் இனியும் போய் தன் ஜாதியிலேயேதான் பொண்ணு வேணுமென பிடிவாதமாய் இருப்பது தவறென உணர்ந்தான். பெண்ணுக்கு வயது என்னவாயிற்று? என்ற இவன் விசாரிப்புக்கு தானாவதி, ’இருபத்தைந்து’ என்றார்.
நாற்பது மைனஸ் இருபத்தைந்து.. பதினைந்து வருடம் இடையில்! என்று கணக்குப் போட்டவன் ஒத்து வருமா? என்று யோசிப்பதற்குள் தானாவதி முந்திக் கொண்டார். “ரெண்டாந்தார மாப்பிள்ளைதான் அந்தப் பொண்ணுக்கு அமையறதால மாற்று ஜாதியா இருந்தாலும் பரவாயில்லன்னு என்கிட்ட வாத்தியாரு சொல்லி ஒரு மாசம் ஆயிப் போச்சுங்க கணேசன். கையில எனக்கு மாப்பிள்ளைங்க இருக்காங்க இப்பவும். கடையைப் பூட்டீட்டு கிளம்புங்க. இப்பவே ஒரு எட்டு போயிப் பார்த்துட்டு வந்துடலாம்” என்று தானாவதி நிற்கவும் கடை ஷட்டரை மதியமே இழுத்துச் சாத்தினான் கணேசன்.

காரியங்கள் துரிதமாக நடந்தேறின. இருதரப்புமே சிக்கனமாய் திருமணத்தை முடித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவே ஊத்துக்குளி கைத்தமலையில் ஆறுவிரல் கணேசன்-சிவகாமியின் திருமணம் நடந்து முடிந்தது. ஆறுவிரல் கணேசனின் நீண்டகால விருப்பப்படியே சிவகாமி சிவந்த நிறத்தில் இருந்தாள். சிவகாமி இவனை விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டாளா என்று மட்டும் இவனால் கண்டறிய முடியவில்லை. இந்தக் காலத்திலும் அப்பா சொன்னாரென்று கட்டிக் கொள்ளும் பெண் இவனுக்கு அதிசயமாகப் பட்டாள்.

சிவகாமியின் அப்பா ‘மாப்பிள்ளை மாப்பிள்ளை’ என்று பயங்கர மரியாதை கொடுத்தார். இவனுக்கு கூச்சத்தில் கரைந்து போய் விடுவோமோ என்று அச்சமாய் இருந்தது. ‘நம்மூட்டுலதானுங்க மாப்ளெ நீங்க மொத ராத்திரியைக் கொண்டாடோணும்!’ என்றார். ஒரு நாள் முழுக்க புன்னகைத்துக் கொண்டே இருந்தான். குன்னத்தூரில் அவர்கள் மாலையும் கழுத்துமாக இறங்கி பிள்ளையார் கோவிலுக்குக் கும்பிடச் செல்கையில் ‘பைத்தியகாரிக்கி கலியாணம் முடிஞ்சுதாட்ட!’ என்றொருவர் ஜாடை பேசிச் சென்றார். காதில் வாங்கிக் கொண்டவனுக்கு பயமாய் இருந்தது. ‘ஏண்டா கொளுப்பா உனக்கு? என்ன தைரியமிருந்தா எம் புள்ளைய பைத்தியகாரின்னுட்டு போவே ராஸ்கோல்!’ என்று சிவகாமியின் அம்மா ஜாடைபேசினவனைப் பார்த்து சத்தம் போட்டது. ஜாடை பேசியவன் எப்போதோ வேறு சந்தில் சென்றிருந்தான்.

ஒருவழியாய் வீடு வந்த மணமக்களை ஆரத்தியெடுக்க நான்கைந்து பெண்கள் இருந்தனர். வீட்டினுள் வந்ததும் சிவகாமி இவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள். இவனது கழுத்தில் இருந்த மாலையை வாங்கிக் கொண்டு, ‘உக்கோந்துட்டு இருங்க! நான் போயி பலகாரமும் காபியும் எடுத்துட்டு வர்றேன்!’ என்று போய் விட்டாள். ஆறுவிரல் கணேசன் சேரில் அமர்ந்து அறையை நோட்டமிட்டான். கிழக்குப்புறத்தில் தூக்கில் பெண்களுக்கான உடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. வடக்குப்புற ஜன்னல் சாத்தப்பட்டிருக்க இவன் எழுந்து போய் அதை நீக்கி விட்டான். கட்டில் தெற்குப்புறமாய் இருந்தது. படுக்கை மீது புதுத்துணி கிடத்தப்பட்டிருந்தது. சிவகாமியின் அம்மா தட்டில் மிக்சர், லட்டு எனப் போட்டு எடுத்துக் கொண்டு வந்தவள் டேபிளில் தட்டை வைத்து விட்டு ‘எடுத்துக்கோங்க மாப்பிள்ளை!’ என்றாள். இவன் சேரைத் தூக்கிப் போய் டேபிள் அருகில் போட்டு அமர்ந்தான்.

“அந்தாளு சொன்னான்னு நீங்க எதையும் மனசுல வச்சிக்காதீங்க மாப்பிள்ளை!” என்றவளைப் பார்த்து மலங்க மலங்க விழித்தான். ‘ஊருக்குள்ள ஆகாதவீங்கன்னு நாலு பேரு இருக்கத்தானே செய்வாங்க! எதையோ ஒன்னைச் சொல்லி காரியத்தையே கெடுத்துப் போடுவானுங்க! நல்லவேளை, காதும் காதும் வச்ச மாதிரி சிம்பிளா எம் பொண்ணு கல்யாணம் முடிஞ்சுட்டுது. பத்திரிகை அடிக்கிறது, மண்டபம் பாக்குறதுன்னு போயிருந்தோம்னு வச்சிக்கங்க மாப்பிள்ளை.. இன்னும் கண்டதீம் கடிதீம் சொல்லி காரியத்தை நிப்பாட்டவே பாப்பானுங்க! காரியம் நின்னு போச்சுன்னு வச்சிக்கங்க, போயி ஊட்டுல உக்கோந்துட்டு சிரிச்சுக்குவானுங்க! நீங்க சாப்பிடுங்க மாப்பிள்ளை. சிவகாமி கிட்ட காபி குடுத்து அனுப்புறேன்!’ என்று சொல்லி விட்டுச் சென்றாள்.


இவன் லட்டு எடுத்துக் கொண்டு டேபிள் மீது கிடந்த புத்தகங்களைப் பார்த்தான். எல்லாமும் குண்டு குண்டு புத்தகங்களாய் இருந்தன. வாத்தியார் படிக்க வாங்கி வைத்த புத்தகங்களாய் இருக்கலாமென நினைத்தான் கணேசன். விஷ்ணுபுரம், சஞ்சாரம் என்று இவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா என்று இவன் கேள்விப்படாத ஆட்கள் எழுதிய புத்தகங்களாகவே டேபிளில் இருந்தன. இவன் ராஜேஷ்குமார் நாவல்களைத்தான் பதினைந்து வருடங்களுக்கும் முன்பாக படித்திருந்தான். இருக்கும் அலைச்சலில் பின்பாகப் புத்தகம் தொடுவதற்கெல்லாம் இவனுக்குக் கொடுப்பினை இருந்ததேயில்லை. காபி கொண்டு வந்த சிவகாமியிடம் முதலாக அந்தக் கேள்வியைத்தான் கேட்டான்.

“இந்தப் புத்தகங்களையெல்லாம் உங்கப்பா படிக்கிறதுக்காக வாங்கியிருக்காரா?”

“அவரும் படிப்பாரு, நானும் படிப்பேன். நீங்களும் படிப்பீங்களா?” என்றவளின் கேள்விக்கு இவன் பதிலேதும் சொல்லவில்லை.

சிவகாமி வீட்டிலிருந்து கணேசனின் வீட்டுக்கு மினி ஆட்டோவில் ஜாமான் செட்டுகள் வந்து இறங்குகையில் புத்தக மூட்டையொன்றும் வந்து இறங்கி விட்டது. கணேசனுக்கு அவளிடம் புத்தகப் படிப்பெல்லாம் எதுக்கு என்று கேட்க நினைத்தும் கேட்க முடியவில்லை. காலையில் சமைப்பதிலிருந்து வீட்டு வேலைகளை கவனிப்பவள் டிவி முன்னால் கூட அமருவதேயில்லை என்று கணேசனின் அம்மா சொல்கிறது. எந்த நேரமும் கட்டிலில் குப்புற விழுந்து கொண்டு படிப்புதானாம்.
சரி, கடைக்கு கூட்டி வந்து அமர்த்தி விடலாமென யோசித்த கணேசன் மிக மெதுவாய் அவளிடம் விசயத்தைச் சொன்னான். “ஆமாங்க, இங்கியே வீட்டுல கிடக்குறதுக்கு நானும் கடைக்கி வந்துடறேன்” என்று சொல்லி விட்டாள். பேன்சிக்கடைக்கு கிளம்புகையில் கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டே இவன் பைக்கின் பின்னிருக்கையில் அமர்ந்தாள். கடையிலும் எந்த நேரமும் கூட்டம் நிரம்பி வழிவதில்லையே! காலை நேரத்திலும் மாலையிலும்தான் கடை நிரம்பக் கூட்டமிருந்தது. மற்ற நேரத்தில் சிவகாமி புத்தகமும் கையுமாக அமர்ந்திருந்தாள் கடையினுள்.

இப்படியிருக்கத்தான் சிவக்குமார் கடைக்கு ஒருமுறை வந்தான். எப்போதேனும் வந்தால் ரீசார்ஜ் செய்து விட்டு கணேசனிடம் ஓரிரு வார்த்தை பேசி முடித்துக் கிளம்புபவன் அசோகமித்திரன் குறுநாவல்கள் வாசித்துக் கொண்டிருந்த சிவகாமியை அன்றுதான் கண்டான். ‘செமையா எழுதுவாருங்க இவரு! தண்ணீர் படிச்சுட்டீங்களா இவரோட நாவல்?’ என்று ஆரம்பித்தான். ‘தண்ணீரு நான் படிக்கலையே!’ என்றாள் சிவகாமி. ‘என்கிட்ட இருக்குதுங்க, நாளைக்கி வர்றப்ப எடுத்துட்டு வந்து குடுக்குறேன்!’ என்றான். ‘இதென்னடா புது வம்பு?’ என்றே கணேசன் நினைத்தான்.

சிவக்குமார் குறுநகரில் ஒரு காம்ப்ளெக்ஸ் ஓனரின் ஒரே மகன். பனிரெண்டு கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார் அவன் அப்பா. அதும் போக திருமண மண்டபம் ஒன்றிருந்தது அவருக்கு. என்ன வேலை செய்கிறான் என்றெல்லாம் கணேசனுக்குத் தெரியாது. வயது இருந்தால் முப்பது இருக்கலாம். கடைக்கு வரப் போக இருப்பதினால் ஒரு பழக்கமிருந்தது. அவனது காம்ப்ளெக்ஸில் பேன்சிக்கடையோ ரீசார்ஜ் கடையோ இல்லை. இருந்திருந்தால் கணேசனின் கடைக்கு ரீசார்ஜ் செய்ய அவன் வந்திருக்கவே மாட்டான். ஒருமுறை காம்ப்ளெக்ஸில் ஒரு டெய்லர் காலி செய்து விட்டுப் போகையில் இவனிடம் ‘அங்கு நம்ம காம்ப்ளெக்சுக்கு வந்துவிடுகிறீர்களா?’ என்று கேட்டிருந்தான். ஆனால் வாடகை அதிகம் என்று இவன் கடையின் இடத்தை மாற்றிக் கொள்ள விருப்பப்படவில்லை.
ஞாயிறு கடை விடுமுறை என்பதால் புத்தகம் பரிமாற்றம் செய்து கொள்ள சிவக்குமார் கணேசனின் வீடு வரை வந்து விடுவது நடந்தது. சிவக்குமார் வந்து விட்டால் கணேசனை மறந்து விட்டு சிவகாமி வாய்கிழியப் பேசுவது கணேசனுக்கு கடுப்பாய் இருந்தது. ‘ஓநாய் குலச் சின்னம்னு ஒரு புத்தகம் மொழிபெயர்ப்புல வந்திருக்குது சிவகாமி.. என்னா புத்தகம் தெரியுமா அது? படிக்க ஆரம்பிச்சா கீழவே வைக்க முடியாது!’ நேரம் போவது தெரியாமல் இருவரும் பேசப் பேச கணேசன் குட்டி போட்ட பூனையாய் வீட்டினுள் சுற்றினான்.
‘எந்திரிச்சுப் போடா!’ என்று சிவக்குமாரிடம் இவனால் சொல்ல முடியவில்லை. அப்படிச் சொல்லாவிட்டாலும் இவனுக்கு மண்டை வெடித்து விடும் போலிருந்தது. பெரிய இடத்துப் பையனிடம் அப்படிச் சொல்ல வாய் வரமாட்டேன் என்கிறது. சிவகாமியிடம் இரண்டுமுறை இதுபற்றி இரவில் சொல்லிப் பார்த்து விட்டான் கணேசன். இவன் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல், ‘நெறையப் புத்தகங்கள் அவரு வீட்டுல இருக்குதுங்களாமா! என்னைய வீட்டுக்கு ஒரு நாள் வரச் சொல்றாரு. போயிப் பார்த்து நல்ல புத்தகங்களா எடுத்துட்டு வரணும்!” என்றே பேசினாள். வேறுமாதிரி பேசினால் எங்கே கோபித்துக் கொள்வாளோ என்ற பயமும் இருந்தது.
இப்படியிருக்க சிவகாமி கர்ப்பிணியாகிவிட்டாள். இவனுக்கு சந்தேகம் என்கிற பிசாசு மனதில் வந்து உட்கார்ந்து கொண்டது. ஒருவேளை சிவக்குமார்தான் இதுக்குக் காரணமோ? வந்த நாலு மாசமா இல்லாம இப்ப சிவக்குமார் வந்த பிறகு இப்படி நடந்திருக்கிறதே! எல்லா விசயமும் ஒரு நாள் வெடிக்கத்தானே செய்யும்?

ஞாயிறு அன்று புத்தகத்தை தூக்கிக் கொண்டு தன் பைக்கில் வந்திறங்கிய சிவக்குமாரை வாசலிலேயே நிறுத்தினான் ஆறுவிரல் கணேசன். “இதெல்லாம் நல்லதுக்கில்ல சிவக்குமாரு! ஏதோ கடையில பார்த்தே, ரெண்டு புத்தகம் கொடுத்தே சரி. வாரமானா வீடு வரைக்கிம் தூக்கீட்டு வந்து உக்கோந்துட்டு மணிக்கணக்குல என் பொண்டாட்டிகிட்ட பேசிட்டே இருந்தா.. என்னை என்ன இளிச்சவாயன்னு நினைச்சுட்டியா சிவக்குமாரு!” சத்தம் கேட்கவே சிவகாமி வீட்டின் கதவுக்கருகாமை வந்து நின்று கொண்டு பார்த்தாள்.
கணேசன் கையை நீட்டிக் கொண்டு பேசுவது அவளுக்கு சிரிப்பாய் இருந்தது. சிவக்குமாரின் முகம் தொங்கிப் போனது கண்டு மேலும் சிரிப்பாய் இருக்கவே வீட்டினுள் ஓடிப்போய் அமர்ந்து சிரிக்கத் துவங்கினாள். சிவக்குமார் மறு பேச்சு பேசாமல் வண்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டான். ஆறுவிரல் கணேசன் பெரும் சச்சரவு இல்லாமல் விசயம் முடிந்ததற்காய் திருப்தியடைந்தான். கறி ஒரு கிலோ வெட்டி வர பேசியை எடுத்துப் பைக்குள் போட்டுக் கொண்டு கணேசனும் கிளம்பினான்.
கறியை வாங்கிக் கொண்டு கணேசன் வீடு வருகையில் சிவக்குமாரின் பைக் இவன் வீட்டு வாசலில் நின்றிருந்தது. வீட்டினுள் சேரில் அமர்ந்து கொண்டு சிவக்குமார் பேசிக் கொண்டிருந்தான் சிவகாமியிடம். கணேசனுக்குக் கோபம் மிதமிஞ்சி வந்து விட்டது. இப்பத்தானே சொல்லிப் போனோம்! ஆள் போனதீம் வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறானே!

“ஏப்பா உனக்கு ஒருக்காச் சொன்னா புரியாதா? சோத்தத் தான் திங்கறியா இல்ல வேற எதையாச்சிம் திங்கறியா? நாங்கெல்லாம் ஊருக்குள்ளார பொண்டாட்டி கட்டீட்டு வாழுறதா வேண்டாமா? இப்படி நாக்கைத் தொங்கப் போட்டுட்டு திரிஞ்சா என்ன அர்த்தம்?” என்றான் கணேசன்.

“இங்க என்ன நடந்து போச்சு இப்ப? வீட்டுக்கு வரவேண்டாம்னு சொல்லியாச்சு சரி. சிவகாமி புத்தகம் சிலது எங்கூட்டுல கெடந்துச்சில்ல! அதைய திருப்பிக் குடுத்துடறது தானே மருகாதி! அதுக்காக வீட்டுல போயி எடுத்துட்டு வந்து குடுத்தேன். அப்புறம் எம்பட புத்தகங்களும் கிடக்கு இங்கே. நான் வாங்கீட்டு போக வேண்டாமா?”

“சீக்கிரம் எடத்தக் காலி பண்டு மொதல்ல நீயி!” கணேசன் கறிப் போசியோடு சமையலறைக்குச் சென்றான். சிவகாமி சிரித்துக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்தாள். அவளுக்கு வேடிக்கையாய் இருந்தது இந்தச் சம்பவம். நேற்றிரவு படித்துக் கொண்டிருந்த ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ புத்தகத்தை எடுத்துப் பையில் திணித்தாள். படிக்காமலிருந்த சில புத்தகங்களைப் பையில் திணித்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினாள் சிவகாமி.
ஒரு மாதமாயிற்று. ஆறுவிரல் கணேசனிடம் பலர் சென்று பலமுறை சொல்லி விட்டார்கள். ‘கோவிச்சுட்டு போன பொண்டாட்டிய போயி கூட்டி வந்து வாழுற வழியப் பாரு கணேசா! இப்பிடியே இருந்துட்டு இருக்கவா கலியாணம் கட்டுனே!” ‘எல்லாம் சரிதானுங்க நீங்க சொல்றது. ஆனா அவங்க வீட்டுல இருந்து அவ அப்பாவோ இல்ல அம்மாவோ அவகிட்ட சொல்லி சமாதானம் பண்டி கூட்டிட்டு வந்து விட்டுட்டுப் போலாம்ல? புள்ளைய வீட்டுல வச்சிக்கவா எனக்குக் கட்டிக் குடுத்தாங்க?” என்றே பேசினான்.
இந்த நேரத்தில் சிவக்குமார் நேராக குன்னத்தூர் சென்று சிவகாமியை அவள் வீட்டிலேயே சந்தித்துப் பேச ஆரம்பித்து விட்டான். சிவகாமியின் அம்மா அவனுக்கும் பலகாரம் கொடுத்து காபி கொடுத்தது. வாத்தியாரும் இவர்கள் விவாதத்தில் அமர்ந்து உலக இலக்கியம் பேசினார். ஒரு மாதம் கழித்து சிவகாமியின் அம்மா பேன்சிக்கடை படியேறி வந்து மாப்பிள்ளையிடம் பேசினாள். கணேசன் பிடி கொடுக்காமல் பேசிக்கொண்டே சிவக்குமாரைப் பற்றியும், சிவகாமியைப் பற்றியும் இணைத்துப் பேசவே கடுப்பில் அந்த அம்மாளும் கிளம்பி விட்டாள். ‘மாப்பிள்ளையாமா நல்ல மாப்பிள்ளை! எம் புள்ளையப் பத்தி தப்பா பேசுறவனெல்லாம் ஒரு மாப்பிள்ளையா?’

குன்னத்தூர் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள் சிவகாமி. ஒரு வாரம் போல பக்கத்திலேயே இருந்தான் சிவக்குமார். பின்பாக அவளைக் கூட்டிக் கொண்டு கோபியில் வீடெடுத்துத் தங்கினான்.

“ஏப்பா நீ சொன்னாப்லையே உம் பொண்டாட்டிய தட்டீட்டு போயிட்டானப்பா அந்த சிவக்குமாரு! ஆமா பையன் பொறந்திருக்கானாம்ல உம் பொண்டாட்டிக்கி! போயித்தான் ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம்ல!” சனம் கணேசனுக்கு அறிவுரை வழங்க, ‘என் பையனா இருந்தா நான் ஓடிப்போயிப் பாப்பேன்! அவம் பையனை அவம் பாத்துக்கறான்! நானு யாரு இதுல?” என்றவன் ஆனது ஆகட்டுமென கோபிக்கு ஒரு ஞாயிறு அன்று தன் டூவீலரை முறுக்கிக் கொண்டு சென்றான்.

முன்பாகவே இவனுக்கு அவர்கள் தங்கியிருக்கும் வீதியிலிருந்து வீட்டின் கதவு எண் வரை சொல்லியிருந்தார்கள். இவன் சென்ற சமயம் வீடு சாத்தியிருந்தது. சிவகாமி என்று கூப்பிடலாமா? என்று நினைத்தவன் கதவில் ரெண்டு தட்டு தட்டினான்.

கதவைத் திறந்து எட்டிப் பார்த்தவள், ‘அதுக்குள்ள போயிட்டு வந்துட்டீங்களா?’ என்று சொல்லி விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டே ’வாங்க’ என்றாள் கணேசனைப் பார்த்து. கணேசன் வீட்டினுள் சென்றான். ஹாலில் டிவி சப்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. டீவி முன்பாக இரண்டு சோபா கிடந்தது. ’பையன் இப்பத்தான் தூங்கினான். வாங்க!’ என்று ஒரு அறைக்கதவைத் திறந்து சென்றவள் பின் சென்றான். அந்த அறை அவர்களது படுக்கையறை போல் இருந்தது. நடு மத்தியில் தொட்டிலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. கணேசன் கிட்டத்தில் சென்று குனிந்து குழந்தையைப் பார்த்தான். குழந்தை சிவகாமியின் நிறத்தில் இருந்தது. குழந்தையின் வலது காலில் ஆறு விரல் இருப்பதையும் கவனித்தான். “தூங்கட்டும்” என்று சொல்லி விட்டு ஹாலுக்கே திரும்பினான் கணேசன். ஹாலிலோ, அவளது அறையிலோ எங்குமே இவன் கண்களுக்குப் புத்தகங்கள் தட்டுப்படவேயில்லை. எங்காவது பீரோவில் ஒளித்து வைத்துக் கொண்டு படிக்கிறார்களா? அப்போது வெளியில் பைக் சப்தம் கேட்டது. கையில் பையோடு வீட்டினுள் நுழைந்த சிவக்குமார் இவனைப் பார்த்ததும் கோப முகம் காட்டினான்.

“இதெல்லாம் நல்லதுக்கில்ல கணேசா! நானில்லாத நேரத்துல எம் பொண்டாட்டிய நீ வந்து பாக்குறதும் பேசுறதும்!” என்று கையை நீட்டிக் கொண்டு சிவக்குமார் பேச, வாயைப் பொத்திக் கொண்டே ஹாலிலிருந்து படுக்கையறைக்குள் ஓடிய சிவகாமி கதவைச் சாத்தி விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.