நம்முடைய காலத்தில் மாபெரும் அவலங்கள்கூட கடைசியில் அபத்த நாடகங்களாக முடிவடைகின்றன. சமீபத்தில் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து நான்கு நாட்கள் மீட்புப் போராட்டத்திற்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் பல தொடர் விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. பயன்படுத்தப்படாத ஆழ்துளைக்கிணறுகள் தொடர்பாகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் ‘ஒவ்வொன்றிலும் யாராவது ஒருவர் உயிரை விட்ட பிறகுதான் நடவடிக்கை எடுப்பீர்களா?’ என உயர்நீதிமன்றம் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் இது ஒரு தொடர்கதை.எந்த அரசியல் கோரிக்கையாக இருந்தாலும் சரி, சமூகக் கோரிக்கையாக இருந்தாலும் சரி அதற்கு அரசின் கவனத்தையோ பொதுமனசாட்சியின் கவனத்தையோ ஈர்க்க வேண்டும் என்றால் யாராவது ஒருவர் உயிரைக்கொடுக்க வேண்டும். தமிழகம் இந்த பலிகளையும் சுய-பலிகளையும் நீண்டகாலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டமா, ஈழத்தமிழர் பிரச்சனையா, பள்ளிப் பேருந்துகளில் அவலநிலையா, நீட் தேர்வா, டாஸ்மாக் கடையை மூட வேண்டுமா, சட்டவிரோத பேனர்களை அகற்ற வேண்டுமா? யாராவது ஒருவர் பலியாக வேண்டும். அப்போதுதான் அப்படி ஒரு பிரச்சினையே இந்த சமூகத்தில் இருப்பதுபோல எல்லோரும் விழித்தெழுந்து நாடகமாடுவார்கள். அது முதல்முறை நடப்பதுபோலப் பதறுவார்கள். ஆனால் இது எதுவுமே முதல்முறை அல்ல. அனுபவங்களில் இருந்து பாடம்பெற்றுக்கொள்வது என்பதைப் பொய்யாக்கிய மாநிலம் தமிழகம்.

கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் ஆழ்துளைக்கிணறு விபத்துகளில் 12-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். ஆனால் சுஜித்தை மீட்கும் பணிகளில் முதல் விபத்தில் மீட்புப் பணியில் ஈடுபடுவது போன்ற பதற்றத்துடனும் குழப்பத்துடனும் அரசு செயல்பட்டது. இதுபோன்ற விபத்துகள் இதற்கு முன் நிகழ்ந்தபோது பயன்படுத்தப்படாத ஆழ்துளைக்கிணறுகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடுமையான நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்தது. ஆனால் அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதன் சாட்சியம்தான் சுஜித் என்ற குழந்தையின் மரணம். உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை இந்த அரசு காலில்போட்டு மிதித்ததுபோல இந்தியாவின் வேறு எந்த அரசும் செய்திருக்குமா என்பது சந்தேகம்.

2004-இல் சுனாமி வந்த பிறகு தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்புகள் நாடெங்கும் உருவாக்கப்பட்டன. ஆனால் அதற்குப் பின் பல பேரிடர்களை இந்த நாடு சந்தித்துவிட்டது. அதிகமான பேரிடர்களைச் சந்தித்த மாநிலம் தமிழகம். ஆனால் இங்கு ஒருமுறையேனும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்புகள் தேவையானதை செய்யக்கூடிய நிலையில் இருந்ததா என்பதே முக்கியக் கேள்வி. சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களுக்கோ, ஓக்கி புயலில் காணாமல் போன மீனவர்களுக்கோ, கஜா புயலில் கைவிடப்பட்டவர்களுக்கோ கிடைக்க வேண்டிய எந்த உதவியும் கிடைக்காமல் போனது என்பதுதான் உண்மை. தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு எந்த அளவுக்குப்போதிய பயிற்சியும் தயார் நிலையும் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை நாம் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய அமைப்புகளில் நாம் ஓரளவுக்கு நம்பக்கூடிய அமைப்புகளில் ஒன்று தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு. ஆனால் சுஜித் விஷயத்தில் அந்த வாய்ப்பு பயன்படுத்தப்பட்டதா என்பது கேள்வி.

மீட்புப் பணி நடந்த நான்கு நாட்களும் களத்தில் ஊடக வெளிச்சத்தில் உட்கார்ந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சரும் தமிழக அரசும் பதிலளிக்க வேண்டிய பல கேள்விகள் இருக்கின்றன. ஏன் உடனடியாக தேசிய பேரிடர் மேலாண்மைப் படையோ ராணுவமோ வரவழைக்கப்படவில்லை? ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்க முறையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு உருவாக்கி வைத்திருக்கிறதா? மண்சரிவு ஏற்படும் வண்ணம் கனரக எந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற அடிப்படை அறிவுகூட மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு இல்லையா? அந்தப் பகுதியில் உள்ள நிலத்தின் தன்மை கடினப் பாறைகள் கொண்டது என்ற தகவல் கூட அரசுக்குத் தெரியாதா? ஏதோ வீட்டுச் சுவரை ட்ரில் மிஷினால் ஓட்டை போடுவதுபோல அவ்வளவு கடினமான பாறைகளை திறன் குறைந்த இயந்திரங்களை வைத்து ஓட்டைபோட்டு நேரவிரயம் செய்த்து ஏன்? குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இருந்த வாய்ப்பே அந்த முதல் 10 மணிநேரம் தான். ஆனால் அந்த 10 மணிநேரத்துக்குள் செய்யப்பட்டதெல்லாம் குளறுபடிகள் முன்யோசனையற்ற செயல்பாடுகள். எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள். எல்லாம் முடிந்த பிறகு வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன்குழந்தையை மீட்க உங்களுக்கு எதாவது வழி தெரிந்தால் சொல்லுங்கள் என பொதுமக்களைப் பார்த்துப் பரிதாபமாகக் கேட்கிறார். இதைவிட அவலநிலை ஒன்று இருக்க முடியுமா?

கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் எடுத்ததாகச் சொல்லப்படும் குழந்தையின் உடல் யார் கண்ணுக்கும் காட்டப்படாமல் மறைக்கப்பட்டுவிட்டது. இதைப்பற்றி பல சந்தேகங்கள் பொதுவெளியில் தொடர்ந்து எழுப்ப்ப்படுகின்றன.இந்த மாநிலத்தில் அதிநவீன மருத்துவமனையில் இந்த மாநிலத்தின் முதலமைச்சரே இறந்துபோனாலும் சரி, ஆழ்துளைக்கிணற்றில் ஒரு குழந்தை விழுந்து இறந்துபோனாலும் சரி அதற்குப் பின்னாலிருக்கும் மர்மங்கள் அறியமுடியாதவையாக மாறிவிடுகின்றன. தேசிய பேரிடர் மேலாண்மைப் படை அதிகாரி ஒருவர் தாங்கள் மிகவும் தாமதமாகத் தான் அழைக்கப்பட்டதாக வாக்குமூலம் தருகிறார். மேலும் அங்கு யாருடைய உத்தரவுக்கு ஏற்ப செயல்படுவதென்று தெரியாமல் ஒரு குழப்பமான சூழல் நிலவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற ஒரு நெருக்கடியான மீட்புப் பணியை எப்படியெல்லாம் செய்யக்கூடாதோ அப்படியெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதுதான் நாம் கண்ட காட்சி.

நம்மிடம் பேரிடர் மேலாண்மை பணிகளுக்குப் போதுமான தொழில்நுட்பம் இல்லையா என்ற கேள்வி எழுப்ப்ப்படுகிறது. தொழில்நுட்பம் என்பதை இதுபோன்ற விஷயங்களில் நாம் நேரடியாக இறக்குமதி செய்யமுடியாது. ஒவ்வொரு நாடும் இதுபோன்ற விஷயங்களில் தமக்கான தொழில்நுட்பத்தைத் தாமே உருவாக்கி வளர்த்தன. அவற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு நம்முடைய மரபு சார்ந்த தொழில்நுட்பங்களோடு நவீன அறிவியல் முறைமைகளை இணைக்க வேண்டும். உதாரணமாக,  கடலில் காணாமல் போன மீனவர்களை கடற்படையோ தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவோ தேடும்போது உள்ளூர் மீனவர்களின் உதவிகளையும் அறிவையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். ஆழ்துளைக்கிணறு விபத்துகளுக்கும் இது பொருந்தும். ஆனால் இங்கு எதிலும் துறைசார்ந்த எந்த ஒருங்கிணைப்பும் இல்லை என்பதைத்தான் தொடர்ந்து பார்த்து வருகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெருக்கடிக்கால மேலாண்மையில் எவ்வித அடிப்படை அறிவுமற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை இதுபோன்ற பல சந்தர்ப்பங்களில் பார்த்துவிட்டோம். ஒரு பிரச்சினைக்காக நீங்கள் எவ்வளவு கடுமையாக உழைக்கிறீர்கள் என்பதல்ல முக்கியம். உங்கள் உழைப்பு உரிய முறையில் திட்டமிடப்பட்ட ஒன்றா என்பதுதான் முக்கியமானது. அலட்சியம், தன்முனைப்பு, அறியாமை என நம் நிர்வாக இயந்திரத்தில் அனைத்துக் கோளாறுகளுக்கும் இன்னொரு குழந்தையின் உயிர் பலியாகியிருக்கிறது.

இங்கு முன்னெச்சரிக்கை என்கிற விஷயம் பற்றி திரும்பத் திரும்பப் பேசப்படுகிறது. அரசு ஆவேசமாக தமிழகமெங்கும் இருக்கும் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக்கிணறுகளை மூடுகிற பணியில் இறங்கியிருக்கிறது.. இந்த ஆவேசம் எத்தனை நாளைக்கு? மக்களுடைய கோபமும் உணர்ச்சிகளும் மறைந்து சுஜித் மறக்கப்படும்வரைக்கும். பிறகு இதை யாரும் நினைவில் வைத்திருக்கப்போவதில்லை. இவற்றைக் கண்காணிக்கவேண்டிய அமைப்புகள் வழக்கமான உறக்கத்திற்குச் சென்றுவிடும். கோயம்புத்தூரில் பேனர் விழுந்து ஒருவர் இறந்தபோது பேனர் தொடர்பான ஒரு தற்காலிகக் கொந்தளிப்பு உருவாக்கப்பட்டது. அது எதுவுமே சென்னையில் இன்னொரு பேனர் பலி நடந்ததை தடுக்க இயலவில்லை. அப்படியானால் தொடர்ந்து இப்படித் தற்காலிகமாக உருவாக்கப்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் பயன் என்ன? இதுவொரு சுய ஏமாற்று என்றுதான் சொல்ல வேண்டும். பாதுகாப்பான ஆழ்துளைக்கிணறுகளை அமைப்பது, கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளைப் பாதுகாப்பது எல்லாம் என்ன ராக்கெட் தொழில்நுட்பமா? ஏன் ஒரு அமைப்பினால், அவற்றை நிறைவேற்ற முடியவில்லை?

பிரச்சினை இந்த நாட்டில் மக்களின் உயிர்ப் பாதுகாப்பு மற்றும் அதுசார்ந்த பொதுப்பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு அலட்சியமாக்க் கையாளப்படுகின்றன என்பதோடு தொடர்புடையது. இதை ஒரு தனிப்பட்ட நிகழ்வாக சுருக்கிவிட முடியாது. இதுவொரு மிகப்பெரிய சமூக நோய். இந்த்த் தலையங்கத்தை எழுதிக்கொண்டிருக்கிறபோது மூடப்படாத செப்டிக் டேங்கில் ஒரு குழந்தை விழுந்து இறந்துபோனது என்றும் திறந்துகிடந்த மழைநீர் சேமிப்புத் தொட்டியில் ஒரு குழந்தை இறந்து கிடந்தது என்றும் செய்திகள் வருகின்றன. உங்கள்  வாழ்க்கையில் நீங்கள் இதுபோன்ற செய்திகளை எத்தனையாவதுமுறை படிக்கிறீர்கள் என்று நினைத்துப்பாருங்கள். இன்றும் பாதாள சாக்கடைகளுக்குள் இறங்கி கையால் மலம் அள்ளும் தொழிலாளிகள் செத்துக்கொண்டு £ன் இருக்கிறார்கள். நிச்சயமாக மனித உயிர்களின் மீது பொறுப்பும் அக்கறையும் கொண்ட ஒரு சமூகத்தில் இது நடைபெற முடியாது. இதில் நிர்வாக அமைப்புகளையும் அரசையும் மட்டும் குறைசொல்லிப் பயனில்லை. பொதுமக்களுக்கு அடிப்படையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லை என்பதைத் தான் பார்க்கிறோம்.

மக்களுக்கு அபாயத்தை விளைவிக்கக்கூடிய ஒரு பெரிய பள்ளம் சாலையில் இருந்தால் அதை ஒரு நாளைக்கு எத்தனைபேர் கடந்துபோகிறார்கள் என்பதை நினைத்துப்பாருங்கள். ஏன் நாமும்கூடத்தான். இதை யாரிடம் சொல்வது என்று யாருக்கும் தெரியாது. அப்படியே தெரிந்து புகார் செய்தாலும் அதற்கு எந்த நடவடிக்கையும் இருக்காது. தினமும் யாராவது நான்கு வாகன ஓட்டிகள் அதில் தலைகுப்புற சரிவார்கள்.இது ஒரு எளிய உதாரணம். ஒரு ஆலையில் இருந்து வரும் நச்சுக் கழிவுகள் ஊர் முழுக்க கேன்சரை ஏற்படுத்துகிறது என்று மக்கள் போராடினால் அரசாங்கம் அவர்களை தயவு தாட்சண்யமின்றிச் சுட்டுக்கொல்கிறது. போபால் விஷவாயுக் கசிவு நடந்து 35 வருடங்கள் கடந்துவிட்டன. இன்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இதெல்லாம் நம்முடைய அரசமைப்புகளும் நீதியமைப்புகளும் மனித உயிர் சார்ந்த நீதியையும் மக்களின் அடிப்படை பாதுகாப்பையும் எப்படி அணுகுகின்றன என்பதற்கு உதாரணம். இந்த அணுகுமுறைதான் மேலிருந்து கீழ்வரை பாதுகாப்பற்ற ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறது. இந்த மனோபாவம் மனிதர்களைப் பாதுகாப்பது தொடர்பான அறிவியல் தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதிலோ சட்டங்களைச் செயல்படுத்துவதிலோ நிர்வாகம் என்பதை மாற்றியமைப்பதிலோ பெரிதும் தடையாக இருக்கின்றன.

உண்மையில் அடிப்படை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்ச்சி என்பது ஒரு கூட்டு சமூக உணர்வு. இந்த சமூக உணர்வு தொழில் சார்ந்த பாதுகாப்புகளிலும் இல்லை. பொது அமைப்புகளிலோ தனிப்பட்ட இடங்களிலோ இல்லை என்பது தான் உண்மை. ஒரு மின்னிணைப்பில் கசிவிருந்தாலோ ஒரு வாகனம் சரியாக ப்ரேக் பிடிக்கவில்லை என்றாலோகூட நாம் எவ்வளவுதூரம் அவற்றில் சமரசம் செய்துகொள்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

சுஜித்தின் மரணம் ஒரு தனித்த நிகழ்வல்ல. சங்கிலித் தொடராக இங்கு நடந்து கொண்டிருக்கும் அழிவின் தொடர்ச்சியே. உண்மையில் ஒட்டுமொத்த சமூகமுமே ஒரு ஆழ்துளைக்கிணற்றுக்குள் விழுந்த குழந்தையைப் போலத்தான் கையறுநிலையில் இருக்கிறது. இந்தக் கையறு நிலையைக் கடக்க வேண்டும் என்றால் குடிமை சமூகம் சார்ந்த ஒரு பெரும் விழிப்புணர்ச்சி தேவை.