கன்னட மூலம்:

பொளுவார் மகம்மது குன்ஹி

தமிழில்:
நஞ்சுண்டன்

உங்களில் யாராவது மனைவியைவிட்டு மரணமடைந்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் பொறுத்திருக்கட்டும். அவ்வாறு இத்தத்தின் காலகட்டத்தை முடித்தபிறகு திருமணம் செய்துகொண்டால் (வாடிக்கைபோல நடந்தால்) உங்கள்மேல் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை. நீங்கள் செய்வதைப் பற்றி அல்லா நுட்பமாகத் தெரிந்திருப்பான்.

குரான்: அல் பகர: 234

மெஹருன்னிஸா சரியாகவே கணக்கிட்டிருந்தாள். இந்த ஒரு இரவு கழிந்து பகலானால் இத்தத் காலம் முடிவடையும். அப்பாடா! அதெவ்வளவு வேகமாகக் கழிந்தது! எல்லாம் நேற்று, முந்தாநாள் நடந்ததைப்போல.

தன் முகம் இப்போது எப்படியிருக்கும்? இத்தத் காலகட்டத்தில் கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாதாம் – சித்தி சொன்னது. ஆனாலும் குளிக்கும்போது ஒருமுறை அண்டாவில் எட்டிப் பார்த்தவள் பயந்துபோனாள். அலிகத் இல்லாத மூளிக் காதுகள். நகைகள் எல்லாம் பெட்டகத்தில் இருக்கின்றன. யாரும் கவனித்திருக்க சாத்தியமில்லாவிட்டாலும், சர்வவல்லமை படைத்த அல்லாவுக்குத் தெரியாதா? எல்லாவற்றின் சூத்திரதாரி அவன். பொறுமை காத்தவர்களுக்கு அவர்களின் நன்னடத்தைக்காக மறுமையில் வெகுமதிகளைத் தரவிருக்கிறான். அண்டாத் தண்ணீரில் ஒரு கணம், – ஒரே ஒரு கணம் – முகத்தின் பிம்பத்தைப் பார்த்தது தவறானாலும், உடனே ‘தௌபா’ சொல்லிப் பச்சாதாபப்பட்டது அல்லாவுக்குத் தெரிந்திருக்கும். ¢தன் குற்றம் மன்னிக்கப்பட்டிருக்கும்.

‘அல்லாவே என் குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்கு! கடந்த சில நாட்களாக நான் தினந்தோறும் படிக்கும் புனித குரானின் புண்ணியத்தால் எனக்குத் தயவுகாட்டு! ஓ அல்லாவே, குரானின் பாகங்களில் நான் மறந்துவிட்டவற்றை மீண்டும் என் நினைவுக்கு வருமாறு அனுக்கிரகம் செய். இந்த ஒட்டுமொத்த உலகத்தின் பிரபுவே, இந்தப் புத்தகத்தையே என் வாழ்வின் ஆதாரமாக்கு. ஆமீன்.’

வழிபாட்டை முடித்துக் குரானை முத்தமிட்டு மடித்துப் பக்கத்து மேஜைமீது விரித்த பச்சைத் துணியின்மீது வைத்த அவள் இரண்டு கைகளையும் கண்ணில் ஒற்றிக்கொண்டாள்.

இன்னும் ஒரே இரவு. நாளைய தினம் வெயில் காயும்போது கிணற்றுச் சுவரின் பக்கமிருக்கும் துணி துவைக்கும் கல்லின்மேல் உட்கார சுதந்திரம் பெற்றவள். தாழ்வாரத் திண்ணையில் சாய்வுநாற்காலியில் சாய்ந்து வானொலியில் பாடல் கேட்பது நாளையிலிருந்து பாவமல்ல. சமத் படுக்கும் கண்ணாடி அலமாரி உள்ள அறையில் கண்ணாடியில் பார்த்தபடியே தலைவாரிக்கொண்டால் கைஜம்மா ஆட்சேபிக்க முடியாது.

சமத் இப்போது எப்படியிருப்பான்? ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமல் எத்தனையோ வருடங்கள் ஆனதுபோல இருக்கிறது. அவன் முற்றத்தில் கைஜம்மாவோடு பேசிக்கொண்டிருக்கும் போதெல் லாம் வேண்டாம் வேண்டாமென்றாலும் அவன் சிரிப்பு மெஹருன்னிஸாவுக்குள்ளே நுழைந்துவிடுகிறது. பேச்சுக்குப் பேச்சு ‘அந்த விஷயத்தை விடுங்க. நான் இருக்கேனுல்ல…’ என்று சேர்த்துச் சொல்வதை எவ்வளவு கேலிசெய்தாலும் அவன் நிறுத்தவே இல்லை. இந்த இரண்டு வருடங்களில் என்னவெல்லாம் நடந்துவிட்டன! எல்லாம் மாயம்போல. அல்லா விருப்பப்பட்டால் அவனால் முடியாதது என்ன? அவன் மகாமாயக்காரன்.

இவ்வளவு பெரிய வீட்டுக்கு எஜமானியாக வருவாள் என அவள் கனவுகூடக் கண்டவளல்ல. மெஹருன்னிஸாவின் ஏழைக் கனவுகளில் இவ்வளவு பெரிய வீட்டின் படத்தை ¢¢¢வரைவது சாத்தியமல்ல. அவள் எவ்வளவு பெரிய அரண்மனையின் படத்தைக் கற்பனை செய்தாலும் -அற்குக் கல்சுவர் இருந்தாலும் -ஓலைக் கூரைதான்.

மெஹருன்னிஸாவுக்கு அப்போது வயது பதினைந்தோ பதினாறோ இருக்கும். நிச்சயமாகச் சொல்ல அவள் பிறந்த தேதி எந்தப் பள்ளிக்கூடத்திலும் பதிவாகவில்லை. அவள் திருமணத்துக்கு முன்பு இரண்டு மழைக்காலங்களுக்கு முன்னால் ஒரு நாள் இருமியபடியே அரசு மருத்துவமனைக்குப் போயிருந்த அவள் தந்தையை மய்யத் வண்டியில்தான் கொண்டுவந்தார்கள். அன்று ஊர் முழுவதும் கரையுமளவுக்கு அவள் கண்ணீர் விட்டிருந்தாள். மெஹருன்னிஸாவுக்கு இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. அப்பாவின¢ சடலத்தைத் தாழ்வாரத்தில் பெஞ்சுகளின்மேல் கிடத்திக் குடிதண்ணீரால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது -அங்கே போவது தவறானாலும் -பைத்தியம் பிடித்தவள்போல அங்கே ஓடியது, சேற்று நீரில் விழுந்து அழுது புரண்டது, அது யாரோ இரண்டு ஆண்கள் அவளைக் குருவியைப்போல அமுக்கித் தூக்கிக்கொண்டுவந்து உள்ளே தள்ளியது என எல்லாம்.

தான் அன்று அவ்வளவு அழுது ஆர்ப்பாட்டம் செய்தது எதனாலாயிருக்கும்? தந்தை இறந்துவிட்டார் என்றா அல்லது தனக்கு இனி யார் ஆதரவு என்ற கேள்வியாலா? தன் தாயாவது வாழ்ந்திருந்தால் மெஹருன்னிஸா அவ்வளவு துக்கப்பட்டிருப்பாளா அல்லது தன் எல்லா வலிக்கும் அழுகைக்கும் காரணம் சித்தியின் கொடுமையாயிருக்கலாமோ? ஆனால் தன்னை இவ்வளவு பெரிய வீட்டுக்கு எஜமானியாக்கியது அதே சித்திதானே? இப்படிப்பட்ட கடை முதலாளிக்கு யார்தான் கூப்பிட்டுப் பெண் கொடுக்கமாட்டார்கள்?

முதலிரவிலிருந்தே புத்தப்பா முதலாளி தம் புதிய மனைவியைக் கட்டிலில் உட்காரவைத்துக்கொண்டு விவரித்தார், ‘இந்த வீட்டுக்கு நீதான் எஜமானி. உனக்கு இங்கே எதற்கும் குறைவிருக்காது. அல்லா எனக்குத் தேவையான அளவு கொடுத்திருக்கிறான். நீ எதற்கும் மற்றவர்களிடம் கையேந்த வேண்டியதில்லை.’

கையேந்த வேண்டியிருந்தாலும் அந்த வீட்டில் இன்னொருவரும் இருந்தாரல்லவா? இல்லவே இல்லை என்றல்ல, இரண்டு பேர் இருந்தார்கள். இவளிடமே யாசிப்பவர்கள்.

எங்கிருந்தோ மீன் கூடையைத் தலையில் சுமந்துகொண்டே முத்துப்பாட்டில் கால்வைத்த இளைஞன் புத்தப்பா. படிப்படியாகத் தலைச்சுமையாகக் கருவாட்டு வியாபாரத்திலிருந்து சைக்கிளில் மீன் வியாபாரத்துக்கு மாறி, இருந்திருந்தாற்போல மீன் வியாபாரத்தையும் கைவிட்டுப் பஞ்சாயத்து அலுவலகத்துக்குப் பக்கத்தில் மளிகைக் கடை ஆரம்பித்து, சில வருடங்களிலேயே புழக்கடையோடு வீடு வாங்கிக்கொண்டு புத்தப்பா முதலாளியாக வளர்ந்த பின்னணியில் முப்பது வருட உழைப்பின் கதை உள்ளது.

நான்கு மாதங்கள் பத்து நாட்களுக்கு முன்னால் இறந்த முதலாளிக்கு சாகும் வயதொன்றும் ஆகியிருக்கவில்லை. நாற்பது – நாற்பத்தைந்து அல்லது ஐம்பது ஆகியிருக்கட்டும். – சாவைக் கொண்டுவரும்படியான பெரிய வியாதி எதுவும் ¢அவரைப் பீடித்திருக்கவில்லை. அல்லாவின் விளையாட்டில் எதையும் கறாராக இது இப்படித்தான் இருக்க வேண்டும் எனச் சொல்வது சாத்தியமா? தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்குப் புத்தப்பா கல்லுருண்டை போன்ற ஆள். தலைப்பாகை கட்டிக்கொண்டு தன் மளிகைக் கடையில் உட்கார்ந்தால் வாடிக்கையாளர்கள் தங்களை அறியாமலே ‘முதலாளி’ என்றே அழைக்க வேண்டும். பேசினால் நூறடிக்குக் கேட்கும். அப்படிப்பட்ட குரல்வளை. இருபது தலை முடிகள் வெளுத்திருந்தாலும் அவருக்குக் கருப்பு மை போன்ற புருவங்கள். திருமணத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்னால் புதிதாக ஆறு பற்களைக் கட்டிக்கொண்டதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. பரிச்சயம் அற்றவர்களுக்கு எதிரில் இருபது வருடங்களையே மறைக்கக்கூடிய மிடுக்கான நடை. வயிறு மட்டும் அளவுக்கு மீறி வளராதிருந்தால் முப்பது வயது இளைஞர்களையும் வெட்கம்கொள்ள வைக்கும் திடத்தனம் அவரிடம் துலக்கமாகக் காணப்பட்டது.

இவ்வளவெல்லாம் இருந்தும் பத்துப் பேருக்கு நடுவில் மேலெழுந்து தெரியும்படியான முதலாளி நூறு பேருக்கு முன்னால் நிக்கா செய்துகொண்டு அழைத்துவந்திருந்த முதல் மனைவி ஸகீனா மூன்று மாதங்கள்கூட அவருடன் குடும்பம் நடத்தவில்லை. நடு இரவில் கட்டிலிலிருந்து எழுந்து ஓடியவள் புத்தப்பா ‘வேண்டாம்… வேண்டாம்’ என்று அங்கலாய்த்தாலும் கேட்காமல் புழக்கடைக் கிணற்றில் குதித்தாள். நான்கு நாட்கள் புத்தப்பாவுக்கு மிகுந்த காய்ச்சல். கடை வேலைக்கென்று வீட்டிலேயே தங்கவைத்திருந்த குண்டான பையன் சமத்தைக் கட்டிக்கொண்டு ஒரு வாரம் முழுவதும் கண்ணீர் சொறிந்துகொண்டிருந்ததைக் கண்டு நிறைய பேர் இரக்கத்தைத் தெரியப்படுத்தினார்கள். முதலாளியின் நடவடிக்கை குறித்துப் பதினைந்தின் தொடக்கத்திலிருந்த சமத்துக்குப் பயமாகவே இருந்தது.

இன்னொரு பெண்ணை வீட்டுக்கு அழைத்துவருவதே இல்லை என்னும் பிடிவாதத்தில் தன் தூரத்துச் சொந்தமான அக்கா கைஜம்மாவைக் கூட்டிக்கொண்டுவந்து, அடுத்த பத்துப் பன்னிரண்டு வருட வாழ்க்கையைக் கழித்த புத்தப்பா முதலாளி கடந்த மழைக்காலத்துக்கு ஒரு மாதம் இருந்தபோதே, மனத்தை மாற்றிக்கொண்டு தம்மைவிட சுமார் இருபத்தைந்து வருடம் சிறியவளான மெஹருன்னிஸாவை நிக்காசெய்து அழைத்துவந்தபோது சமத் தன் பென்சில் மீசைக்குக் கீழே சிரிப்பை மலர்த்தினான்.

‘இவன் முன்னால் நீ முகத்தை மூடத் தேவையில்ல. சமத் பல காலமா என்னோட இருக்கறான். தாய் தந்தை யாரும் இல்லாத அனாதைப் பையன். இந்த வீட்டுல நானும் அவனும் வேறுவேறல்ல’ எனச் சொல்லியபடி முதலாளி மெஹருன்னிஸாவுக்கு சமத்தை அறிமுகப்படுத்தியபோது, தெரிக்கும் மௌனத்தையே உடம்பெல்லாம் மறைத்திருந்த இளைஞன் அன்பு மரியாதை இரண்டும் கலந்த புன்னகையின் பூங்கொத்தையே மெஹருன்னிஸாவுக்கு வெளிப்படுத்தினான்.

பதினெட்டு வயதான சிவந்த பெண் அப்படிப்பட்ட சிரித்த முகத்தைக் கண்டது அதுவே முதல்முறை. மெஹருன்னிஸாவுக்கு உடம்பெல்லாம் வியர்த்தது!

புத்தப்பா முதலாளி மத்தியானம் சாப்பிட வீட்டுக்கு வரும் வழக்கமில்லை. வீட்டிலிருந்து சாப்பாட்டுக் கேரியர் அனுப்ப வேண்டும். மத்தியானத் தொழுகைக்கான பாங்கு கேட்கத் தொடங்கியதென்றால் சமத் வந்துவிட்டான் என்றே அர்த்தம். கேரியரில் சாப்பாட்டை நிரப்பிவிட்டுத் தாழ்வாரத்தின் ஜன்னல் கம்பிகளுக்கிடையே கன்னத்தைப் பதித்து சமத்துடைய சைக்கிளின் கிணி கிணிக்குக் காது கொடுத்துக் கண்களை விரித்து நிற்பது மெஹருன்னிஸாவுக்கு வெறெங்கும் கிடைக்காத மகிழ்ச்சி.

தன்னை ராஜகுமாரியைப் போலவே கவனித்துக்கொள்ளும் கணவன் முதல் இரவின்போதே விளக்கி விளக்கிச் சொன்னது பொய்யாகவில்லை. மெஹருன்னிஸாவுக்கு எதிலும் குறையில்லை. வாரத்துக்கு இரண்டுமுறை கோழிக் குழம்புச் சாப்பாடு உட்கொள்ளும் பாக்கியம் ராஜகுமாரிக்கு அல்லாமல் வேறு யாருக்குக் கிடைக்கும்? கைஜம்மாவுக்கு ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும், தாழ்வாரத் திண்ணையில் ரேடியோவைத் திருப்பிக்கொண்டே உட்கார்ந்திருந்தால் காலடியில் சுட்ட கோழித் தொடையைக் கொண்டுவந்து வைப்பார். சொந்த அம்மா வாழ்ந்திருந்தாலும் இவ்வளவு அன்பு செலுத்துவாரோ இல்லையோ.

அம்மாவைப் பார்த்த நினைவே மெஹருன்னிஸாவுக்கு இல்லை. அவள் ஒரு வயதுக் குழந்தையாயிருந்தபோதே இறந்துபோனாளாம். வீட்டிலிருக்கும் தாய் தன் அம்மாவல்ல என்று மிகச் சீக்கிரத்தில் மெஹருன்னிஸாவுக்குப் புரிந்தது. ஒருத்தியைத் தொடர்ந்து இன்னொருத்தியென மூன்று தங்கைகள், மற்றொரு தம்பி வீடு நிறைய கத்தத் தொடங்கியபோது, அவளுக்கு மூத்த அக்காவுக்கான எல்லாப் பொறுப்புகளும் ஒட்டிக்கொண்டன.

பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயதுப் பெண்ணொருத்தி நாளொன்றுக்கு ஓராயிரம் பீடி சுருட்டியது முத்துப்பாடியின் பீடி சுற்றும் கிளைகளின் வரலாற்றில் இன்றைக்கும் சாதனையே. சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து புழக்கடையில் மண் அண்டாவில் நீர் நிரப்புவதிலிருந்து ஆரம்பமாகும் மெஹருன்னிஸாவின் தினசரி வேலைகளில் பீடி சுற்றுவதோடு தம்பி தங்கைகளின் உணவு, உடை, சளி சிந்தவைப்பது, குளியல் போன்ற பொறுப்புகளும் இருந்தன. சித்திக்கு ஒருவிதமான இடுப்பு வலி விடியற்காலையில் தீவிரமடையும். ஆவி பறக்கும் சுடுநீர் பட்டால் சற்று ஆசுவாசம் கிடைக்கும். சற்று நேரம் அது இது என்று ஓடியாடும்போது, மெஹருன்னிஸா மத்தியானத்துக்கான சமையலையும் முடித்திருப்பாள். சாப்பிட்டவுடனே சித்தியைத் தூக்கம் கவ்வும். மாலை நான்கு மணிக்கு எழுந்து மெஹருன்னிஸாவிடம் அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை, இது இன்னும் அப்படியே இருக்கிறது முதலான புகார்களைச் சொல்லிவிட்டுப் பக்கத்துக் கல்யாணியக்காவின் வீட்டுக்கு அரட்டை அடிக்கப் போனால் மீண்டும் வீட்டின் நினைவு வருவது பொழுது சாய்ந்து நீண்ட நேரமான பிறகுதான். காலையிலேயே எழுந்து பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்திலுள்ள குடோனுக்குக் கூலி வேலைக்குச் செல்லும் அப்பா திரும்புவது இரவு ஒன்பதுக்குத்தான். ஆனாலும் வீட்டில் நடந்துகொண்டிருந்த பதர் யுத்தம் அவருக்குத் தெரியாதது அல்ல. ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் தந்தை தன் அன்புக்குரிய மனைவியோடு சண்டையிட்டதும் உண்டு. ஆனால் அப்படிப்பட்ட நாட்களில் சித்தியின் இடுப்பு வலி இரவிலும் வந்ததால் அவள் இடுப்பை நீவுவதிலேயே இரவு முழுக்கத் தூங்காமலிருக்கும் கட்டாயம் மெஹருன்னிஸாவுக்கு இருந்தது. மெஹருன்னிஸாவை ரகசியமாக உற்றுப்பார்த்துப் பெருமூச்சு விடுவதைத் தவிர்த்து வேறெதுவும் செய்ய சமர்த்தற்றவராகத் தந்தை இருந்தார். மெஹருன்னிஸாவுக்கும் கேட்கும்படி அவளுக்காகத் தந்தை தன் மனைவியிடம் பேசியது ஒரே ஒருமுறைதான். மருத்துவமனையில் சேர்ந்ததற்கு முந்தின நாள், ‘மெஹருன்னிஸாவுக்கு அநியாயம் பண்ணாதே. அல்லா அதை மெச்சமாட்டான். புரிஞ்சுதா?’ என்று சொல்லியிருந்தார்.

சித்தி தன் கணவனின் பேச்சை அட்சரம் பிசகாமல் பின்பற்றினாள். தான் விதவையான இரண்டே இரண்டு வருடங்களுக்குள் மெஹருன்னிஸாவை மளிகைக் கடை முதலாளிக்குத் திருமணம் செய்து கொடுத்தது அல்லா மெச்சும்படியான காரியமாகவே இருந்தது. மெஹருன்னிஸாவுக்குத் தங்க நிறமிருக்கலாம். நிமிண்டினால் ரத்தம் பீறிடுவது போன்ற யௌவனம் இருக்கலாம். ஆனால் திருமணம் என்றால் விளையாட்டா? குறைந்தது பத்துப் பவுன், மூவாயிரம் ரூபாய் எங்கிருந்து கொண்டுவருவது? அல்லா வானத்திலிருந்து பண மழையைப் பொழியவைப்பதில்லையே?

புத்தப்பா முதலாளியிடம் பவுனும் இருந்தது, பணமும் இருந்தது. அவரிடம் இல்லாத எல்லாமும் மெஹருன்னிஸாவிடம் இருந்தன. அவளைப் பார்த்த கணமே கப்சிப்பென்று ஒப்புதலளித்தார். இவ்வளவு அழகான பெண்ணைத் தனக்காக ஒதுக்கீடுசெய்த அல்லாவை முதலாளி நன்றியோடு நினைத்துக்கொண்டார்.

‘உங்கள் பெண்கள் உங்களுக்கு வயலாயிருப்பார்கள். உங்கள் வயலில் உங்களுக்கு விருப்பமானபடி பிரவேசியுங்கள்.’

ஆனாலும் ஏனோ நிக்காவுக்கு உட்கார்ந்து கை நீட்டியபோது முதலாளியின் விரல்கள் நடுங்கின. தானே கண்ணாரக் கண்டிருந்த சமத் இந்த விஷயத்தைத் தமாஷாகச் சொல்லி எவ்வளவோமுறை சிரிக்கவைத்திருந்தான்.

முதலாளி புத்தப்பாவின் வீட்டுக்கு ஜீப்பில் புறப்பட்டு நின்ற மணமகளைக் கட்டிக்கொண்ட சித்தி பொலபொலவென அழுதுவிட்டாள். மெஹருன்னிஸாவுக்கு அந்தச் சமயத்திலும் ஆச்சரியமாயிருந்தது. உண்மையில் அழ வேண்டியவள் தான்தானே? சித்தி ஏன் அழுகிறாள்? தந்தையின் சவத்தை வீட்டுக்கு வெளியில் வைத்திருந்தபோதும் இவ்வளவு அழவில்லை. ‘பெரிய வீட்டுக்குப் போற உன்னிஸா. ஒன் சித்தியோட பிள்ளைங்களை மறந்துடாத… ஹூம்.’ சித்தி விக்கி விக்கி அழுதாள்.

மறந்துவிட வேண்டுமென்றாலும் அதற்கு வாய்ப்பு தந்தவளல்ல இந்தச் சித்தி. இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மெஹருன்னிஸாவின் சுக துக்கத்தை விசாரிக்கக் காலிக்  கோணிப்பையோடு ஆஜராகிக்கொண்டிருந்தாள். மெஹருன்னிஸா சொல்லட்டும் அல்லது விடட்டும், கைஜம்மாவே கோணிப்பை கொள்ளுமளவுக்கு அரிசி, தேங்காய் நிரப்பிக் கொடுத்துக்கொண்டிருந்தார். தன் தம்பி பணம் சேர்த்துவைத்தாலும் யாருக்காக? சித்தியின் பிள்ளைகள் மிகுந்த தூரத்தவர்களொன்றும் அல்லவே?

மெஹருன்னிஸாவுக்குக் கைஜம்மாவுடைய மனத்தின் ஆழமே புரியவில்லை. ஒரு நாளும் தனக்கு எதிராகப் பேசியதில்லை. தானே சில சமயம் கோபத்தில் சகித்துக்கொள்ள முடியாமல் நடந்துகொண்டால், ‘உனக்குப் புரியாது பைத்தியக்காரப் பொண்ணு. நானு குடிச்சளவு தண்ணியில நீ குளிச்சிருக்கக்கூட முடியாது’ என்று சிரித்துவிடுவாள்.

கட்டிலிலிருந்து எழுந்து சமையலறை வழியாகப் புழக்கடைக் கதவைத் திறந்து குளியலறையில் காலெடுத்து வைத்தவளுக்குத் தன் முதலிரவு நினைவுக்கு வந்தது. பக்கத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிய காய்ந்த குச்சிகள். வெளியிலிருந்து நெருப்பு மூட்டுவதால் புகை உள்ளே வராது. தனியாக அழ வேண்டும் எனத் தோன்றும் போதெல்லாம் குளியலறைக்குள் நுழைந்து பூட்டிக்கொள்வாள். மற்றவர்களுக்கு விவரித்துச் சொல்லக்கூடிய துக்கமாக இருந்திருந்தால் கொஞ்சமாவது சமாதானம் கிடைத்திருக்குமோ என்னவோ. அப்படி ஏதேனும் நடக்குமா யிருந்தால், பரணில் வரிசையாக அடுக்கியிருந்த அரிசி மூட்டைகளெல்லாம் உருண்டு விழுமளவுக்குப் பலமாக அழுது சமாதானம் செய்துகொண்டிருக்கலாம்¢. தன் தந்தை வயதான -அல்லது பத்து வயது கூடவே இருந்தது-. கடவுளைப் போன்ற கணவனே காலில் விழுந்து பெண்களைப் போலக் கண்ணீர் விடுவதை யாரிடம் சொல்ல? சொன்னாலும் என்ன பயன்? தௌபா…! தௌபா…! தான் இப்படியெல்லாம் யோசிப்பதும் பாவமாகும்.

‘பரம கருணாநிதியான அல்லாவே,

எங்கள் இதயங்களில் இருப்பவற்றை

நாங்கள் மறைத்தாலோ பகிரங்கப்படுத்தினாலோ

அவை எல்லாவற்றையும் நீ முன்னமே அறிவாய்.

பூமி ஆகாயங்களில் இருக்கும் எல்லாமும் உனக்குத் தெரியும்.

என் மனத்தில் கெட்ட சிந்தனைகளே பிறக்காதவாறு அனுக்கிரம்செய்.’

உடுத்தியிருந்த புடவையெல்லாம் ஈரமாகும்படி தலைக்கு மேல் தவலைத் தவலையாக நீரை ஊற்றிக்கொள்ளும்போது, மறக்க வேண்டும் என்றாலும் கிணற்றுச் சுவரின் பக்கம் சமத் குளிக்கும் காட்சி கண் முன்னால் குதியாட்டம் போடும். பெரிய தாமிரக் குடம் நிறையத் தண்ணீரை ஒரேயடியாகத் தலையில் சரித்துக்கொண்டவாறு நடுங்கும் சமத்தின் நிறைந்த தேகத்தை சமையலறை ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மெஹருன்னிஸா தௌபா சொல்வாள்.

‘தயவுசெய்து எனக்குப் பிரம்படிகளிலிருந்து மன்னிப்பு கிடைக்கட்டும்.’

2

இனி அதிக நேரம் இல்லை. தாழ்வாரத்தின் சுவர்க் கடிகாரம் பன்னிரண்டு அடித்து வெகு நெரமாயிற்று. முதலாளி உயிரோடிருந்தபோதும் வாரத்துக்கு ஒருமுறை கடிகாரத்துக்கு சாவிகொடுத்தவன் சமத். இப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கலாம். கவிழ்ந்து படுத்த மொந்தடித் தவளையைப்போல.

நான்கைந்து மணிநேரம் கழிந்தால் புழக்கடையின் கோழிக் கூடுகளிலிருந்து ‘கொக்கரக்கோ… கொக்கோ…’ ஆரம்பமாகும். இப்போது கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். புத்தப்பா உயிரோடிருந்தபோது கூட்டில் பத்து பன்னிரண்டு கோழிகள் இருந்தே தீர வேண்டும். வாரத்தில் இரண்டுமுறை கோழிக் குழம்பும் அரிசி ரொட்டியும் வேண்டும். பக்கத்து மசூதிக்கு (பள்ளிவாசலுக்குச்) சென்று கோழியின் கழுத்தை அறுத்துக்கொண்டு – அது சாஸ்திரப்படியே நடக்க வேண்டும் – வரும் பொறுப்பு சமத்தினுடையது. அப்படியே கடையில் முதலாளி வாங்கும் புதிய கோழிகளின் கால்களைக் கயிற்றால் சுற்றிக் கட்டி சைக்கிளில் தலைகீழாகத் தொங்கவிட்டுக்கொண்டு வந்து கூடுகளில் சேர்க்கும் பொறுப்பும் அவனுடையதே. இதுவரைக்கும் ஒரு கோழிகூட சமத்தின் பிடியிலிருந்து தப்பித்ததை மெஹருன்னிஸ்ஸா கண்டதில்லை.

அவன் வேலைகளெல்லாம் அப்படித்தான். எல்லாவற்றிலும் கச்சிதம். உற்சாகமின்மை என்பதே இல்லை. எந்த வேலை சொன்னாலும், ‘அந்த சமாச்சாரத்தை விடுங்க. நா இருக்கேனுல்ல…’ எனச் சொல்லியபடியே செய்துகொடுப்பான். கடையிலிருந்து தலைக்கூந்தலுக்கான க்ளிப், மை டப்பி, வாசனைத் தைலம் -என்ன வேண்டுமோ அது- சொன்ன அன்றே மாலையில் கொண்டுவந்து கொடுப்பான். ஹேர்பின் வேண்டும், ப்ளாஸ்டிக் வளையல் வேண்டும் என்று கடை கடையாக அலைய புத்தப்பா முதலாளிக்கு சங்கோஜமாயிருந்தது. வீட்டிலும் கடையிலும் அவருக்கிருந்த அளவே சமத்துக்கும் பொறுப்பு இருந்தது. கடையின் பணப்பெட்டியில் தொடங்கி சமையலறை ஊறுகாய் ஜாடிவரை கைவைக்கும் சுதந்திரம் அவனுக்கு இருந்தது.

ஆனால் கடையின் முன்வாசல் பூட்டின் சாவிக்கொத்து மட்டும் புத்தப்பாவின் இடுப்பிலேயே தொங்கிக்கொண்டிருக்க வேண்டும். அது விபரீதம் என எண்ணத்தக்க மோகம். கடையின் கதவை அவரே திறக்க வேண்டும். அவரே மூடிப் பூட்டுப்போட வேண்டும். சாவிக்கொத்தை வைப்பதற்கு என்றே தடித்த தோலாலான இடுப்புப் பட்டியொன்றைச் செய்து வைத்திருந்தார். சமத் ஒருமுறைகூடச் சாவிக்கொத்தைத் தொட்டதில்லை. அதைத் தொட வேண்டும் என அவனுக்குத் தோன்றியதும் இல்லை. அவன் குறும்புச் சிரிப்பின் பிரவேசத்துக்குக் கதவுகளும் வேண்டியிருக்கவில்லை.

சமத்தின் குண்டு முகத்திலும் தீவிரத்துக்கும் கவலைக்கும் இடமிருக்கிறது என்பதை மெஹருன்னிஸா கவனித்தது வெறும் எட்டு நாட்கள் மட்டுமே. அந்த எட்டு நாட்களிலும் புத்தப்பா முதலாளியின் மளிகைக் கடை மரக் கதவுக்கு நடுவே பெரிய பித்தளைப் பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது.

ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடி ஒரு மாதமும் ஆகியிருக்கவில்லை. ஒரு நாள் இரவு என்றைக்கும்விடச் சற்று முன்னதாகவே கடையை மூடி வீட்டுக்கு வந்த புத்தப்பா, ‘கொஞ்சம் நெஞ்சு வலிக்குது’ என்றபடி சாப்பாடு வேண்டாமென்றபோது மெஹருன்னிஸாவுக்குத் தன் தந்தையின் நினைவு வந்தது. இரவு முழுவதும் விழித்திருந்து கணவனின் நெஞ்சை நீவிக்கொண்டே உட்கார்ந்திருந்தவளுக்கு நடு இரவுவரைக்கும் கண்ணாடி அலமாரியிருக்கும் அறையில் கைஜம்மாவுடன் பேசிக்கொண்டிருந்த சமத்தின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. ஒன்றிரண்டுமுறை படுக்கையறைக்குப் பக்கத்தில் தென்பட்ட சமத், ‘டாக்டரை கூட்டிட்டு வரட்டுமா?’ எனக் கேட்டபோது புத்தப்பா வேண்டாமென்று கையசைத்திருந்தார்.

ஆனால் ¢மறுநாள் விடியற்காலையிலும் புத்தப்பா எழும் அறிகுறியைக் காட்டாதபோது சமத் தீவிரமாக -மெஹருன்னிஸாவுக்கு அது எதிர்பாராததாக இருந்தது -‘அந்தச் சமாச்சாரத்தை விடுங்க. நான் இருக்கேனுல்ல. டாக்டர் வரணுமா வரக்கூடாதான்னு தீர்மானிக்கிறவர் கட்டில்ல விழுந்திருக்கறதில்லை. நானிருக்கேனுல்ல, டாக்டரைக் கூட்டிட்டு வர்றவன்’ எனச் சொன்னவன் சூறைக்காற்றுபோலப் புறப்பட்டுப்போனான். மெஹருன்னிஸாவால் நம்பவே முடியவில்லை. சமத்தின் முகத்தில் ஒவ்வொரு கணமும் துள்ளிக்கொண்டிருந்த குறும்புச் சிரிப்புக்கு அந்தக் கம்பீரம் எதையும் சிறப்பாகப் பெற்றிருக்கவில்லை. புத்தப்பாவிடம் அந்த இரண்டும் இருக்கவில்லை. தேன் மெழுகு போன்ற மனம். சற்று வலியுடன் பேசினாலும் புத்தப்பா அழுமூஞ்சிக்காரர். சமத்திடம் மெச்சுதலான பார்வையைச் செலுத்திய மெஹருன்னிஸாவின் ஆசையைப் புரிந்துகொள்ளாத அளவுக்கு புத்தப்பா அசடர் அல்ல.

புத்தப்பாவின் படுக்கை வெளியே தாழ்வாரத்தை ஒட்டிய கண்ணாடி பதித்த அலமாரி உள்ள அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. டாக்டரும் சமத்தும் தினத்துக்கு எட்டுமுறை தன் படுக்கையறையில் நுழைவது அவருக்கு வேண்டாமென்றிருந்தது. சமத் வீட்டுக்குள்ளிருந்தால் கண்ணாடி அலமாரி உள்ள அறைக்குள் மெஹருன்னிஸா – மிகவும் அவசியமான வேலையில்லாவிட்டால் ஒழிய -பொதுவாகக் காலெடுத்து வைக்கவில்லை.

காலை டீ குடித்துவிட்டுப் புத்தப்பாவோடு கடைக்குப் போகும் சமத் திரும்பி வரும்போது மத்தியானத்துக்கான பாங்கு கேட்கும். முதலாளிக்கு சாப்பாட்டுக் கேரியர் வாங்கிக்கொண்ட பிறகு இருவரும் வயிற்றுப் பசியாற்றிக்கொள்ள அவன் திரும்புவது வழக்கம். பகல் முழுவதும் வீடு முழுக்க மெஹருன்னிஸாவுடையதே நாட்டாமை. ஆள் உயர அலமாரிக் கண்ணாடியில் தன்னை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொள்வதே அவள் வேலை. மஞ்சள் பட்டைப் போன்ற மென்மையான தன் வயிற்றை உற்றுப்பார்த்தவாறு பெருமூச்சுவிடக் கண்ணாடி அலமாரி உள்ள அறையே பொருத்தம்.

சமத்தின் கட்டிலில் புத்தப்பா தம் படுக்கையை விரித்துப் படுத்து சங்கடப்பட்டது நான்கே நாட்கள். வியாழக்கிழமை இரவில் சற்றுத் தெம்புடன் பேசிய முதலாளி வெள்ளிகிழமைக் காலை கண் திறக்கவே இல்லை.

‘ஓ அமைதியான ஆத்மாவே,

உன் பிரபுவிடம் திரும்பிச் செல்.

நீ அவனால் மகிழ்ச்சியடைவாய்

அவன் உன்னாலும் மகிழ்ச்சியடைவான்.

இப்போது சேர்ந்துகொள் என் தொண்டர்களுடன்

அதோடு என் சொர்க்கத்துக்குள் பிரவேசி.’

இரவு முழுவதும் தூக்கம் கெட்டு விடியற்காலையின் குளிரில் சற்றுத் தூங்கிவிழுந்த சமத்துக்கு விழிப்பு வந்தபோது வீட்டுக்கு முன்னால் காக்கைகள் பறந்துகொண்டிருந்தன.

இரவுப் பொழுதில் கண்ணாடி அலமாரியில் தெரிந்த மெஹருன்னிஸாவின் சாரைப்பாம்பு போன்ற நீண்ட கருங்கூந்தலை உற்றுப்பார்த்தபடி புத்தப்பா கொஞ்சம் துக்கத்துடனே சொன்னார், ‘உனக்கு நான் ரொம்ப அநியாயம் பண்ணிட்டேன். உனக்கு இனி யாரு ஆறுதல்.’

‘அந்த சமாச்சாரத்தை விடுங்க. நான் இருக்கேனுல்ல…’ எனச் சொல்லியபடியே நுழைந்திருந்தான் சமத். ‘நான் அவ்வளவு சுலபத்துல கைவிட்டுடறவனல்ல. ராத்திரி நேரத்துல வர்றதேயில்லன்னு ஒக்காந்துட்டாரு. ஆனா நான் இருக்கேனுல்ல, அவரோட பெட்டியத் தூக்கிட்டே வந்துட்டேன். நீங்க கொஞ்சம் உள்ள போங்க. அவரு பார்க்கட்டும்’ என்று மெஹருன்னிஸாவை அறையிலிருந்து வெளியே அனுப்பி டாக்டரை அழைத்திருந்தான். கணவனின் கடைசிப் பேச்சு ஆரம்பமானபோதே பலவீனமடைந்தது.

தாழ்வாரத்தில் பேச்சு… காலடி… தேறுதல்… அழுகை அதிகரித்துக்கொண்டே இருந்தது. படுக்கையறையில் முழங்கால்களுக்கு இடையே முகம் புதைத்து உட்கார்ந்த மெஹருன்னிஸா தனியள். ‘அவளோடு யாரும் பேச வேண்டாம். சின்னப் பொண்ணு. அவ ஒருத்தியே அழுது தீரட்டும்.’ கைஜம்மா யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். பக்கத்து வீட்டுப் போபம்மா, அவர் மகள் சாரம்மா, பின் வீட்டு ராதாக்கா எல்லோரும் வந்துவிட்டிருந்தார்கள். செய்தி எப்படிச் சென்றடைந்ததோ… சித்தி தன் குட்டிப் பிள்ளைகள் இருவரை இழுத்துக்கொண்டே வந்து அழுதுகொண்டிருந்தவர்களின் தலைவியாக அடம்பிடித்துக் கொண்டிருந்தாள். ‘ஒனக்கு இனி யாரு ஆறுதல் உன்னிஸா…’ என்று ராகத்தோடு கத்திக்கொண்டிருந்ததைக் கைஜம்மாவாலும் சகித்துக்கொள்ள முடியவில்லை.

மரக் கட்டைபோலிருந்த கணவனின் நெஞ்சின் மேல் விழுந்துவிட்டிருந்த மெஹருன்னிஸாவைக் கட்டிக்கொண்டு அவளது அறைக்கு இழுத்துக்கொண்டு வந்தபோது கைஜம்மா சொன்னார், ‘நீ இங்கருந்து வெளிய வர வேண்டாம் மகளே. துக்கப்பட்டு ஒரு பிரயோஜனமில்ல. வந்ததை வந்ததுபோலவே எதிர்கொள்ளணும். இப்ப என்ன நடந்திருக்கு? பேசிக்கிட்டிருக்க ஒரு ஆளு குறைஞ்சதைப் போலாச்சு. அவ்வளவுதான் இல்லியா?’

ஹும்! கைஜம்மா எல்லாவற்றையும் எப்படிப் புரிந்துகொள்கிறார்! இந்த வீட்டுக்கு எஜமானியாக வந்த நான்கு மாதங்களிலேயே இந்தக் கைஜம்மாவின் கண்களுக்குத் தப்பி எந்த ரகசியத்தையும் காப்பாற்றுவது சாத்தியமல்ல என்பது மெஹருன்னிஸாவுக்குத் தெரிந்துவிட்டது.

ஒரு நாள் மத்தியானம் சமத் சாப்பாட்டுக் கேரியரோடு சைக்கிளில் ஏறிப் போன உடனே கைஜம்மா மெஹருன்னிஸாவின் தோள்களைப் பிடித்து அவளது பயமும் பீதியும் தெரிந்த கண்களிலேயே கண்ணை நட்டு நேரடியாகவே சொன்னாள், ‘மகளே, நானும்கூட ஒன்னைப் போலவே இளமையைத் தாண்டி வந்தவதான். இந்தப் புத்தப்பாவுக்குக் குழந்தையைப் போல மனசு. அவனால ஒரு எறும்பைக்கூடக் கொல்ல முடியாது. அவன் எப்படிப்பட்டவங்கறது ஒனக்குத் தெரியாததல்ல. அவனைப் பால்ல போடறதும் தண்ணியில போடறதும் ஒன்னோட கையில.’ மெஹருன்னிஸா கைஜம்மாவின் கால்களில் சரிந்து விழுந்து விக்கி விக்கி அழ ஆரம்பித்தபோது கைஜம்மாவின் கண்களில் தானாகவே நிறைய நீர். அன்றைக்குப் பிறகு கைஜம்மா அப்படிப் பேசவில்லை. மெஹருன்னிஸா அப்படிப்பட்ட குற்றங்கள் எதையும் செய்யவும் இல்லை.

சமத்துக்கு நூற்றுக்கணக்கான கதைகள் தெரியும். மற்றவர்களிடமிருந்து கற்றதோ அவனே தயாரித்துச் சொல்லிக்கொண்டிருந்தானோ தெரியாது. மொத்தத்தில் மெஹருன்னிஸா கிணற்றுச் சுவரின் பக்கம் கோழி இறகுகளைப் பிடுங்கக் கைஜம்மாவுக்கு உதவும்போதெல்லாம் சமத் கிணற்றுச் சுவரின் மேல் உட்கார்ந்துகொண்டு புதிய கதையைத் தொடங்குவான். கைஜம்மாவுக்கும் சமத் சொன்ன கதைகள் மிகவும் பிடித்திருந்தன. எல்லாக் கதைகளும் வீராதி வீரர்களான அழகிய ராஜகுமாரர்களுக்கும் உலகிலேயே மிக அழகிகளான ராஜகுமாரிகளுக்கும் இடையே வளர்ந்தன. அரண்மனையின் காவல்காரன் வேடத்தில் வரும் ராஜகுமாரன் ஏழு சுற்றுக் கோட்டையைத் தாண்டி வரும்போது வெள்ளை அரபிக் குதிரையிலேறி ஆகாயத்திலேயே பறப்பது; ராஜகுமாரிக்கு விருப்பமான முத்துச் சங்கிலியைத் தர மாயக் குதிரையிலேறி ஏழு கடல்களுக்கு அப்பால் இருக்கும் ராட்சதர்களின் குகைக்குள் நுழைவது; பன்றி வடிவத்தில் எதிரில் வரும் ராட்சதனோடு யுத்தம் செய்ய அருவருப்பு கொண்டு பறந்து செல்வது இப்படிக் குறும்பு தமாசுகளைச் சேர்த்தே கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது, கோழி இறகுகளைப் பிடுங்குவதைக்கூட மறந்து இருவரும் கதையில் மூழ்கிவிடுவார்கள். சமத் கதையை முடித்துக் கைதட்டிச் சிரிக்கும்போது திடுக்கிட்டு வெட்கப்படும் கைஜம்மா ஒவ்வொருமுறையும், ‘நீ இங்கிருந்து போறியா, இல்லன்னா புத்தப்பாகிட்டச் சொல்லி ஒன் வாயைத் தைக்கட்டுமா?’ என்று பொய்க் கோபத்தை வெளிப்படுத்துவார்.

கதையை முடித்துவிட்டு சமத் கடைக்குப் புறப்பட்டுப் போன உடனே ராஜகுமாரர்களின் ஏழு சுற்றுக் கோட்டைக்குள்ளேயே வழி தவறியவளைப் போலக் கலவரப்படும் மெஹருன்னிஸாவை இரக்கப் பார்வையுடன் கைஜம்மா எச்சரிப்பார். மெஹருன்னிஸா ஒவ்வொருமுறையும் உதட்டைக் கடித்துத் தவறை ஒத்துக்கொள்வாள். ஆனால் கணவன் இறந்த தினம் ஏழு சுற்றுக் கோட்டைக்குள் நுழைந்த ராஜகுமாரன் நேராக சிம்மாசனத்தை நோக்கிக் கைநீட்டியபோது மட்டும் மெஹருன்னிஸா பயந்துபோனாள்! மய்யத்துக்குக் குளிப்பாட்டல் முடிந்த பிறகு தாழ்வாரத்திலிருந்து பிரார்த்தனைக் குரல் கேட்கத் தொடங்கியது. சற்று நேரத்தில் மய்யத்தை எடுத்துச் செல்வார்கள். அதன் பிறகு இந்தப் பெரிய வீட்டுக்கு ஆண்கள் என்று யாரும் இருக்கப்போவதில்லை. மெஹருன்னிஸா பயப்படத் தொடங்கினாள். அதற்குள் கதவுக்கு அருகில் காலடிச் சத்தம். மெஹருன்னிஸா தலை தூக்கிப் பார்த்தபோது, திறந்த கதவில் சாய்ந்து சமத் நின்றிருந்தான். அவசரமாக எழுந்து நின்ற மெஹருன்னிஸா சுவரில் சாய்ந்து தலையைக் குனிந்தாள். அவள் இதயத்தின் தடதட சத்தம் சமத்துக்கும் கேட்டிருக்கலாம்.

‘கடைச் சாவி வேண்டு¢¢ம்.’

மெஹருன்னிஸாவின் ரத்தமெல்லாம் குளிர்ந்தது. உதடுகள் அதிரத் தொடங்கின. நாக்கு முழுவதுமாக உலர்ந்தது.

‘ஊதுவத்தி எடுத்துட்டு வரணும். அப்படியே கொஞ்சம் பணமும் வேணும்.’

மெஹருன்னிஸாவின் கால்கள் நடுங்கத் தொடங்கின. விழுந்தேவிடுவாள் என்பதற்குள் சுதாரித்துக்கொண்டவள் கட்டிலின் மூலையில் சரிந்து உட்கார்ந்தாள். அவளது வலது கை தலையணையைப் பலமாக அழுத்திப் பிடித்திருந்தது. தலையணைக்கு அடியில் சாவிக் கொத்து. அதை அங்கே வைப்பது வாடிக்கை.

தூங்கும்போதும் புத்தப்பா முதலாளி தம் பிரியத்துக்குரிய சாவிக் கொத்தைத் தலையணைக்கு அடியிலேயே வைத்துக்கொள்வார். ஒருமுறை வாய்விட்டும் சொல்லியிருந்தார்,. ‘இந்தச் சாவிக் கொத்தைப் பாரு. இது எனக்குச் சொந்தமானது. இது மேல எனக்கு மட்டுந்தான் அதிகாரம். பெரியவங்க எனக்கு விட்டுட்டுப் போனது எதுவும் இல்ல. எல்லாமே என்னோட சொந்த உழைப்புல சம்பாதிச்சது. மத்தவங்கள ஏமாத்திக் கொண்டாந்ததும் இல்ல. வீட்டுக்குள்ள இந்தச் சாவிக் கொத்தை ஜாக்கிரதையா வாங்கி வக்கிற பொறுப்பு ஒன்னோடது.’

மெஹருன்னிஸா தன் பொறுப்பை சரியாகவே நிர்வகித்தாள். புத்தப்பா முதலாளி இரவில் கடையை மூடிய பிறகு சாவிக் கொத்தைத் தம் தோலாலான இடுப்புப் பட்டியில் சொருகிக்கொண்டுவந்து அதை மனைவியின் கையில் கொடுத்தால், அவள் அதை அவரது தலையணைக்கடியில் வைக்கவேண்டும். மறுநாள் விடியற்காலை முதலாளி கடைக்குச் செல்லப் புறப்பட்டு நிற்கும்போது அவளே அதை தலையணைக்கு அடியிலிருந்து எடுத்துவந்து அவரிடம் ஒப்படைக்க வேண்டும். கடந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு நாளும் நடந்துவந்த முறை இது. கைஜம்மாகூட இந்தச் சாவிக்கொத்தைத் தொட்டதில்லை. கணவனின் படுக்கை வெளியே உள்ள கண்ணாடி அலமாரி அறைக்கு மாறியபோது மட்டும் சாவிக் கொத்து படுக்கை அறையிலேயே தலையணைக்கு அடியில் தங்கிவிட்டது.

நேரமாவுது. சாவிக் கொத்து எங்க இருக்குது?’ இந்தமுறை சமத்தின் கேள்வியில் வேண்டுதல் இல்லை. அதிகாரம் இருந்தது.

‘எல்லாப் பகுதிகளுக்கும் எஜமானான அல்லாவே,

நீ விரும்பினால் அதிகாரத்தைத் தருவாய்

நீ விரும்பினால் அதிகாரத்தைப் பறித்துக்கொள்வாய்

நீ விரும்பியவர்களுக்குப் பரிசுகளைக் கருணைசெய்கிறாய்

நீ எல்லாக் காரியங்களிலும் சமர்த்தனாயிருக்கிறாய்

என் சிந்தனைகள் தவறாயிருந்தால் தயவுசெய்து மன்னித்துவிடு.’

உட்கார்ந்த இடத்திலிருந்து உதட்டைக் கடித்துகொண்டு எழுந்து நின்று மெஹருன்னிஸா தலையணையைச் சரித்து சாவிக் கொத்தை எடுத்து சமத்திடம் நீட்டினாள்.

3

சூரியன் மலரும் முன்பே காகங்கள் கூவத் தொடங்குவது மெஹருன்னிஸாவுக்குச் சிறியவளாக இருந்தபோதே தெரிந்துவிட்டிருந்தது. இன்னொரு மணிநேரத்தில் அறைக்குள் வெளிச்சம் நுழையவிருக்கிறது. விடியற்காலை நமாஸுக்கு எழும் பழக்கம் சிறியவளாயிருந்தபோதே அவளுக்கு இருந்தது. சித்தியின் கட்டாயத்தால் கற்றது. மழையாகட்டும் குளிராகட்டும், மெஹருன்னிஸாவுக்கு சூரியோதயத்துக்கு முன்பே விழிப்பு வந்துவிடும். தாமதமானால் உள்ளே படுத்திருக்கும் சித்தியிடமிருந்து வசவுகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். அண்டாவில் நீர் நிரப்பி அடுப்பில் நெருப்பு மூட்டிப் பாத்திரங்களை எல்லாம் கழுவிக் கஞ்சிக்குத் தண்ணீர் ஊற்றித் துணிகளைத் துவைத்துப் போடுவதற்குள் தந்தை எழுந்துவிடுவார். அவருக்கு டீக்காகத் தண்ணீர் வைத்துத் தம்பி தங்கைகளுக்கு முகம் கழுவும்போது முழுவதும் விடிந்திருக்கும். கஞ்சி குடித்துவிட்டுப் பீடி சுற்றும் வேலையைத் தொடங்கினால் மீண்டும் காலை நீட்டுவது மத்தியானச் சாப்பாட்டின் தயாரிப்புக்காக எழும்போதுதான். சோறு வடிக்கும் வேலை ஒன்றை மட்டும் சித்தி தானே செய்துகொண்டிருந்தாள்.

புத்தப்பா முதலாளியின் பெரிய வீட்டில் மெஹருன்னிஸா பத்து மணிவரை தூங்கினாலும் கேட்பவர்கள் யாருமில்லை. கைஜம்மாவே எல்லா வேலைகளையும் செய்யத் தயாராயிருந்தார். ஆனால் பழக்கதோசத்தால் மசூதியிலிருந்து நமாஸுக்கான பாங்கு கேட்டதுமே முழிப்பு வந்துவிடும். நமாஸ் முடித்த உடனே சமையலறைக்குப் போகும் மெஹருன்னிஸாவிடம் கைஜம்மா ‘வேண்டாம். வேண்டாம்’ என்னும்போதே எல்லா வேலைகளையும் செய்து முடிப்பாள்.

மெஹருன்னிஸா இத்தத்தில் அமர்ந்த பிறகு எல்லா வேலைகளும் கைஜம்மாவின் தலையில் விழுந்தன. மெஹருன்னிஸா அறையிலிருந்து வெளியே தென்படக் கூடாது. எந்த ஆணின் கண்ணிலும் விழக் கூடாது. பிள்ளைகளிருந்தால் அது வேறு விஷயம். குளியலறைக்குச் செல்வதாயிருந்தால் மட்டும் மெஹருன்னிஸா அறையின் வாசற்படியைத் தாண்டுவாள்.

ஆச்சரியமென்றால், இந்தப் புதிய தினசரி நடைமுறைக்குத் தன்னைப் பொருந்திக்கொள்ள அவளுக்கு விசேஷமான கஷ்டமெதுவும் ஆகவில்லை. அவள் தன் சித்தியோடு வசித்துக் கொண்டிருந்தபோதான அனுபவத்திலிருந்து இது மிகவும் வேறுபடவில்லை. காய்ச்சலில் விழுந்தபோது அரசு மருத்துவமனைக்கு மற்றும் வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் முத்துப்பாடி உரூஸுக்குப் போனதையும் கணக்கில் சேர்க்காதிருந்தால், மெஹருன்னிஸா ஒருமுறைகூட சாலையில் நடந்தவளல்ல. தம்பி தங்கைகளுக்கான சேவை மற்றும் பீடி சுற்றும் வேலையிலிருந்த கெடுபிடியால் வேற்று ஆண்களைப் பார்க்க வேண்டும் என்னும் எண்ணமே தோன்றியதில்லை. சித்தி தன் திருமணத்துக்கு முயல்வது தெரிந்த ஒரு வருடத்தில் அதைப் பற்றி ஒன்றிரண்டு தெளிவற்ற கனவுகளைக் கண்டிருக்கலாம் என்றாலும், தன்னைத் திருமணம் செய்துகொள்பவன் தொடர்பாகக் கச்சிதமான சித்திரங்களை அவள் கற்பனை செய்துகொள்ளவில்லை. புத்தப்பா முதலாளியின் பெண்டாட்டியாகவிருக்கும் செய்தியை மெஹருன்னிஸா ஏறக்குறைய மகிழ்ச்சியோடுதான் ஏற்றுக்கொண்டாள். பீடி சுற்றும் வேலை செய்யாமலே மூன்று வேளை கமகமவென்ற சாப்பாடு கிடைக்குமென்றால் யார்தான் வேண்டாம் என்பார்கள்? தாழ்வாரத்திலும் கண்ணாடி அலமாரி அறையிலும் காலடி எடுத்துவைப்பதை நிறுத்தியது ஒன்றுதான் இந்த இத்தத் காலகட்டத்தில் தினசரி நடைமுறையில் உண்டான மிக முக்கிய மாற்றம். அருகாமை வீடென்றால் அது மைமூனுடையது. புழக்கடைக் கிணற்றின் வேலியைத் தாண்டினால் அவள் வீடு. மெஹருன்னிஸா அங்கு சென்றதும் அபூர்வமே. சில சமயம் மிகுந்த சலிப்பேற்படும்போது மைமூனின் குழந்தையைக் கொஞ்சிப் பேசப் போனதுண்டு. இத்தத் காலகட்டத்தில் அந்தக் குழந்தையின் நினைவெதுவும் அதிகமாகத் தொல்லைப்படுத்தவில்லை. மைமூனின் குழந்தையோடு விளையாடியபோது மகிழ்ச்சியைவிட அவமானமே அதிகமாக வந்தடைந்தது.

புத்தப்பா முதலாளி இறந்த பிறகு பதின்மூன்றாம் நாள் – பாத்திஹா முடிந்த மறுநாள் கைஜம்மா சந்தேகத்துடனே பிரஸ்தாபித்தார். ‘கடையைத் தொறந்து மாசமாகப் போவுது. வீட்டில் கொண்டுவந்து போட்ட சாமான் எத்தனை நாளைக்கி வரும்? என்ன செய்யலான்னு இருக்கற?’ முடிவெடுப்பதன் பொறுப்பு முழுவதையும் மெஹருன்னிஸாவின் மேல் போட்டார் கைஜம்மா.

மெஹருன்னிஸாவுக்கு இது எதிர்பாராத சிக்கலாகவும் இருக்கவில்லை. கடை முதலாளியின் மனைவியாக வந்த இரண்டு வருடங்களில் கொஞ்சநஞ்சம் வியாபார அறிவும் அவளை ஒட்டிக்கொண்டது. புத்தப்பாவே அதற்குக் காரணம். பெண்டாட்டியிடம் அவருக்கு எந்த ஒளிவு மறைவும் இல்லை. ஒவ்வொரு நாள் இரவும் அன்று இப்படியாயிற்று, இவ்வளவு லாபம் கிடைத்தது. மறுநாள் தேங்காய் விலை இறங்கினால் கோணிப்பையில் கட்டிவைத்திருப் பதைச் சட்னி செய்து தலைக்குத் தடவிக்கொள்ள வேண்டியதுதான் – இப்படி எல்லாவற்றையும் விளக்கிச் சொல்வார். அவர் விவரிக்கும்போதே தூங்கிவிடுவார். மெஹருன்னிஸா கூரையை உற்றுப்பார்த்தபடி தூக்கத்துக்காக ஏங்குவாள்.

மெஹருன்னிஸாவின் மௌனமும் கைஜம்மா எதிர்பார்க்காதது அல்ல. தன் கேள்வி தீர்மானித்து ஒரே வார்த்தையில் பதிலளிக்கத் தக்கதுமல்ல என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது.

‘நான் சாயங்காலம் தெரியப்படுத்தறதா சமத்துகிட்ட சொல்லியிருக்கறேன். அவன் இது பத்தி விசாரிச்சதுல எனக்குத் தப்பா எதுவும் தெரியல. என்னானாலும் அவன் ஆம்பிளை, அவனுக்குன்னு ஏதாவது ஒன்னு ஆகணுமில்ல. அவனை நீ போயிடுன்னு சொல்றது சுலபம். ஆனா இந்த வீட்டுக்கும் ஆம்பிள்ளைன்னு வேற யாரு இருக்காங்க? சாயங்காலம்வரைக்கும் ஆலோசனை பண்ணிச் சொல்லு.’ கைஜம்மா மிகுந்த ஞானத்தோடு பதிலை சூட்சுமமாக அறிவுறுத்திப் போயிருந்தார்.

சாவிக் கொத்து தலையணைக்கு அடியிலேயே கிடந்தது. கணவன் இறந்த அன்று அதை ஒருமுறை எடுத்துச் சென்றிருந்த சமத் அதே நாள் மாலையில் கைஜம்மாவின் மூலம் திருப்பி அனுப்பியிருந்தான்.

தொடைகளின் மேல் குரான் புத்தகத்தை விரித்து வைத்துப் படித்துக்கொண்டிருந்தபோதே தலைக்குள் நூற்றுக்கணக்கான யோசனைகள். இந்த வீட்டுக்கு ஆண்பிள்ளை என்று வேறு யார் இருக்கிறார்கள்? கைஜம்மாவின் பேச்சுக்குப் பின்னால் வேறு ஏதேனும் அறிவுறுத்தல்கள் இருக்கின்றனவோ? ‘நீ இனிப் போய்விடு’ என்று சொன்னவுடனே அவன் போய்விடுவானா? ரத்த சம்பந்தமில்லாமல் இருக்கலாம். ஆனால் தனக்கும் முன்பே இந்த வீட்டுக்கு வந்தவன். இந்த வீட்டின் மொத்த சொத்தில் அவனுடைய பங்கும் இருக்கிறது. என்னவானாலும் அவன் ஆண்பிள்ளை. மனது வைத்தால் தன்னையும் கைஜம்மாவையும் வெளியே போகச் சொல்லி அவன் ஒருவனே இந்த வீட்டின் எஜமானனாக அறிவித்துக்கொள்ளும் திராணி உள்ளவன். மெஹருன்னிஸா லேசாக நடுங்கினாள். சமத் தன்னை வெளியேற்றுவானா? சே! கண்டிப்பாக அவன் அப்படிப்பட்டவன் அல்ல. இந்த வீட்டின் எஜமானியாக நானே தொடர்வேன்.

கைஜம்மாவின் நோக்கம் என்னவாக இருக்கலாம்? தௌபா…! தௌபா…! கண்ணைத் தேய்த்துக்கொண்டு குரானின் வரிகளில் பார்வையைச் செலுத்தினாள்.

இத்தத் காலகட்டத்தில் விதவைகளோடு

திருமணத்தைப் பற்றி விவாதிப்பதோ

மனத்துக்குள்ளேயே மூடிவைத்துக்கொள்வதோ

உங்கள் குற்றமல்ல.

அது அல்லாவுக்குத் தெரிந்தே இருக்கும்.

ஆனால் இத்தத் காலம் முடியும் வரைக்கும்

திருமண உறவு குறித்து முடிவெடுக்கக் கூடாது. தெரிந்துகொள்ளுங்கள்.

நிச்சயமாக உங்கள் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை

அல்லா தெரிந்திருப்பான். அதனால் அவனைப் பற்றிய பயமிருக்கட்டும்.

அவன் அதீதமாக மன்னிக்கிறவனாகவும் கருணையுள்ளவனாகவும் இருக்கிறான்.

அன்றைய தினம் கைஜம்மா மத்தியானச் சாப்பாட்டை அறைக்குள் கொண்டுவந்து வைத்தபோதே மெஹருன்னிஸா சாவிக் கொத்தை அவரிடம் நீட்டினாள். இது தொடர்பாக எந்தப் பேச்சுக்கும் வாய்ப்பளிக்காமல் கைஜம்மா அதை வாங்கிக்கொண்டார். இத்தத்துக்கு உட்கார்ந்தவளோடு அதிகம் பேசுவதில் அவருக்கும் விருப்பமில்லை. வேளா வேளைக்கு சாப்பாடு, சிற்றுண்டி கொண்டுவந்து வைக்கும் கைஜம்மாவுக்கு ஒரு வேலை அதிகரித்ததைப் போலாயிற்று. ஒவ்வொரு நாள் விடியற்காலை சாவிக் கொத்தை வாங்கிச் சென்று மீண்டும் இரவில் வாங்கிவந்து கொடுப்பது. கடையின் நிர்வாகம் பற்றியாகட்டும் – குறைந்தபட்சம் சமத்தைப் பற்றியாகட்டும், – கைஜம்மா ஒரு வார்த்தையும் பேசமாட்டார். மெஹருன்னிஸாகூட அதைப் பற்றிய ஈடுபாட்டை வெளிப்படுத்தவில்லை. பகல் முழுக்கக் குரான் படிப்பு. இரவு முழுவதும் அரைத் தூக்கம். நான்கு மாதங்களும் பத்து நாட்களும் ஏகாந்தமான தினசரி நடைமுறை. கைஜம்மா சாவிக் கொத்தை வாங்கிச் செல்ல விடியற்காலை வரும்போது ஒருமுறை மற்றும் இரவு கொண்டுவந்து கொடுக்கும்போது இன்னொருமுறை – இந்த இரண்டு சமயங்களில் மட்டும் மெஹருன்னிஸாவின் மனம் பைத்தியக்காரக் குதிரையைப் போலாகும். சமத் மத்தியானம் சாப்பிட வீட்டுக்கு வருவதில்லை. சின்னப் பையன் ஒருவன் வந்து சாப்பாட்டை வாங்கிச் செல்கிறான் என்று கைஜம்மா ஒருமுறை பேச்சுக்கு நடுவே சொல்லியிருந்தாலும் மெஹருன்னிஸா அது குறித்து ஆர்வம் காட்டவில்லை.

நமாஸ் முடித்துக் குரானை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தவளுக்கு உடம்பெல்லாம் ரோமாஞ்சனம். ஜன்னலுக்கு வெளியே வெளிச்சம் எட்டிப் பார்த்தது. இன்னும் சில நிமிடங்களில் எல்லாமே வெளிச்சம் பெறும்.

சூரிய சந்திரர்களை வரையறுக்கப்பட்ட கதியில் நடத்தும் அல்லாவே,

என்னை நரகத்தின் வேதனையிலிருந்து காப்பாற்று.

சொர்க்கத்தின் கதவை எனக்காகத் திறந்துவை.

அல்லாவின் மீது பயம் கொண்டவர்களுக்கு

இரண்டு சொர்க்க நந்தவனங்கள் திறந்திருக்கட்டும்.

பசுமை படர்ந்த கிளைகளைக் கொண்ட நந்தவனங்கள்.

ஒவ்வொன்றும் இரண்டிரண்டு வகையான பழங்களைச் சுமந்த மரங்கள்.

பழங்கள் கைக்கெட்டுமளவுக்கு அருகில்

மெல்லிசான பட்டுப் பீடத்தில்

சாய்ந்திருக்கும் சாத்வீகப் பெண்கள்.

அவர்கள் அழகு தேவதைகள் மட்டுமல்லர்

அதுவரைக்கும் எந்த மனிதனாகட்டும் சைத்தானாகட்டும்

தொட்டிராத சாத்வீக அழகியர்.

அவர்கள் முழுக்கக் குணவதிகள்.

அல்லாவின் மீதான பயத்தைக்

கொண்டிருப்பவர்களுக்கு மிகப் பெரிய அழகான

கண்களைக் கொண்ட ரூபவதிகளான பெண்களைத்

திருமணம் செய்யத் தக்கது.

படித்துக்கொண்டே மெஹருன்னிஸா ரோமாஞ்சனம் கொண்டாள். தன் கணவனுக்கு இந்த எல்லா சுகங்களும்¢ கிடைக்கட்டும் என வேண்டிக்கொண்டாள். ஆனால் தனக்கு? பெண்ணாகப் பிறந்தவர்கள் மகா பாவிகள். அவர்களுக்கு அப்படிப்பட்ட சுகம் எங்கிருந்து வரும்?

சமையலறையிலிருந்து சத்தம் கேட்கத் தொடங்கியது. கைஜம்மாவாக இருக்கலாம். சமத் எழுவது எப்போதும் தாமதமாகத்தான்.

கண்ணாடி அலமாரி உள்ள அறையில் ஜன்னலுக்குப் பக்கத்தில் கட்டிலில் படுக்கும் அவன் முதுகில் சூரிய வெளிச்சம் வட்டச் சந்திரனைத் தோற்றுவிப்பதை மெஹருன்னிஸா தானே சிலமுறை கண்டதும் உண்டு. தாழ்வாரத்தின் வழியாக முற்றத்துக்குப் போவதாயிருந்தால் பக்கத்துக் கண்ணாடி அலமாரி உள்ள அறையின் திறந்த கதவு வழியாக உள்ளே இருக்கும் எல்லாவற்றையும் பார்க்கலாம். தவளையைப் போலக் கால்களை விரித்துக் கவிழ்ந்து விழுந்திருப்பவனைப் பார்க்கும்போதே வெட்கம் உண்டாகும். இன்றுகூட அப்படியே விழுந்திருப்பானோ? முகத்தைப் பார்த்தே நான்கு மாதங்கள் பத்து நாட்கள் ஆயிற்றே!

கைஜம்மா சமையலைறையிலிருந்தே கேட்டார், ‘எழுந்துட்டியா மகளே?’

மெஹருன்னிஸா பதில் சொல்ல வேண்டியிருக்கவில்லை. இத்தத்துக்கு உட்கார்ந்த பிறகு ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் அவர் கேட்ட கேள்வி அது. ஆனால் இன்றென்னவோ பதில் சொல்ல வேண்டும் என மெஹருன்னிஸாவுக்குத் தோன்றியது. தான் இன்று இந்த அறையிலிருந்து வெளியே போனால் அது பாவமல்ல. ஆனால் வெளியே போவதென்றால் எங்கே? நேராகச் சமையலறைக்குப் போய்விடலாமா? கைஜம்மா என்ன நினைப்பார்? அவரே வந்து கூப்பிடட்டும். பிறகு போனாலாயிற்று. இன்னும் அதிகமென்றால் அரை மணிநேரம். இவ்வளவு நாட்கள் சகித்துக்கொண்டவளுக்கு எதுவும் கடினமாயிருக்க முடியாது. குரானை மூடி முத்தமிட்டு மேஜைமேல் வைத்து உள்ளங்கைகள் இரண்டையும் கண்களில் ஒற்றிக்கொண்டு மெஹருன்னிஸா படுக்கையில் மல்லாந்து விழுந்தாள்.

வெளியே – தாழ்வாரத்திலிருந்து இருக்க வேண்டும். -சமத்தோடு கைஜம்மா பேசிக்கொண்டிருந்தது  கேட்டது போலிருந்தது. கடைக்குப் புறப்படும் நேரமாகியிருக்கவில்லை. ஆனாலும் ஆசையோடு, சாவிக் கொத்தை வாங்கிச் செல்ல கைஜம்மா வரும் காலடிச் சத்தத்துக்காகக் காதுகொடுத்து உட்கார்ந்தாள். கைஜம்மா வரவில்லை. முன் வாசல் கதவு திறந்து முடப்பட்ட ஓசை கேட்டபோது மெஹருன்னிஸாவுக்கு ஆச்சரியம். சமத் எங்கே புறப்பட்டிருக்கிறான்?

சிற்றுண்டித் தட்டம் மற்றும் டீ தம்ளர்களோடு கைஜம்மா அறைக்கு வந்தபோது மெஹருன்னிஸாவுக்குக் குழப்பம். தன் கணக்கு தப்பாக இருக்கலாமோ? குரான் புத்தகத்தின் பக்கங்களுக்கு நாள்தோறும் அடையாளமிட்டு வைத்துக்கொண்டிருந்தாள். பீடி சுற்றக் கற்றபோது அந்த வித்தை மெஹருன்னிஸாவுக்குக் கணக்கு சொல்லிக்கொடுத்திருந்தது. தன் எண்ணிக்கை தவறாயிருக்க வாய்ப்பே இல்லை. கைஜம்மாவுக்கும் தெரிந்திருக்க வேண்டுமே? இரண்டு நாட்களுக்கு முன்பு அவரே எண்ணி நினைவூட்டியிருந்தார். அப்படியென்றால் டீ குடிக்கத் தன்னை ஏன் சமையலறைக்கு அழைக்கவில்லை? தொண்டைவரைக்கும் வந்திருந்த கேள்வியை உதட்டைக் கடித்து மென்று சிற்றுண்டித் தட்டத்தில் கைவைத்தாள்.

‘வெந்தய தோசை புத்தப்பாவுக்கு ஆகவே ஆகாது.’ கைஜம்மா பேச்சைத் தொடங்கினார். ‘சமத்துக்கோ வெந்தய தோசைன்னா உயிர். நேத்து கொண்டுவந்து குடுத்து செய்யச் சொல்லியிருந்தான். எப்படியிருக்குது தோசை?’ அங்கே இருந்த மேஜையில் சாய்ந்து உட்கார்ந்து கேட்டார்.

மெஹருன்னிஸாவுக்கு அவர் பேச்சைத் தொடங்கியபோதே சந்தேகமிருந்தது. அவர் பிரஸ்தாபிக்க வேண்டிய தீவிரமான விஷயம் வேறென்னவோ இருக்கும். தலைதூக்கிக் கைஜம்மாவின் முகத்தை உற்றுப்பார்த்த மெஹருன்னிஸாவுக்கு அவர் கண்களில் கபடமெதுவும் தெரியவில்லை. ஆனாலும் மெஹருன்னிஸாவுக்கு ஆர்வம்.

‘சமத் இன்னக்கிக் கடைக்குப் போறதில்லையாம். காசர்கோடு வரைக்கும் போயிட்டு வர்றானாம்.’ கைஜம்மா அது ஏனோ விசேஷமானதல்ல என்பதுபோல இயல்பான குரலில் சொன்னார்.

‘காசர்கோடுக்கு! எதுக்காம்?’ மெஹருன்னிஸா ஆச்சரியத்தோடு சகிப்பின்மையைக் கலந்து கேட்டாள்.

காலித் தட்டம் மற்றும் தம்ளர்களை எடுத்துக்கொண்டே கைஜம்மா சொன்னார், ‘இத்தத் காலத்துக்கு முன்னால ஒனக்குச் சொல்லவே கூடாதுன்னு எங்கிட்ட சத்தியம் வாங்கிட்டான். காசர்கோடு பார்ட்டி ஒன்னு ஒரு மாசமா அவனுக்கு மாட்டியிருக்காங்க. நீயே காசர்கோடுக்குப் போயி பொண்ணப் பாத்துட்டுப் பாஸ் போட்ட பிறகே அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைன்னு எங்கிட்ட கண்டிப்பா சொல்லியிருந்தான். அடுத்த வியாழக்கிழமை முடியலன்னா வெள்ளிக்கிழமை பொண்ணு பாக்குற சடங்க முடிச்சுடலான்னு சொல்றதுக்காகப் போயிருக்கறான். என்னோடது இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்குது. உன் மருமகளா இந்த வீட்டுக்கு வர்றவள மொதல்ல நீ ஏத்துக்கணும். அவன்கூட அதைத்தான் சொன்னான். நீ ஊம்ன்னு சொன்னா போதும். பொண்ணு எப்படி வேணா இருக்கட்டும் – நொண்டியோ குருடியோ எப்படி இருந்தாலும் சரிதான்,- கண்ணை மூடிக்கிட்டு நிக்கா பண்ணிக்கிறதா சொல்லியிருக்கறான். என்னவோ இருக்கட்டும். இந்தக் காலத்துல சமத் மாதிரி பையன் கிடைக்கப் புண்ணியம் செஞ்சிருக்கணும் இல்லியா?

மெஹருன்னிஸாவுக்கு ஏனோ நினைவு தவறவில்லை. ஒருவகையான விழிப்புடனேயே அல்லாவிடம் பிரார்த்தித்தாள்.

ஓ… அல்லாவே!

காய்ந்து சிவந்த தோலைப் போலான ஆகாயத்தைப்

பாவியான என்மேல் வீழ்த்து.

குடிதண்ணீரில் என்னை நடு.

சுடும் கரைந்த தாமிரத்தை என்மேல்

கொட்டிவிடு…

பொளுவார் மகம்மது குன்ஹி

1951இல் கர்நாடகாவின் தென்கன்னட மாவட்டத்தின் புத்தூரில் பிறந்த மகம்மது குன்ஹி மைசூர் பல்கலைக்கழகத்தில் கன்னட இலக்கியத்தில் பொற்பதக்கத்துடன் முதுகலைப்பட்டம் பெற்று சிண்டிகேட் வங்கிப் பணியில் சேர்ந்து அதன் தலைமை மேலாளராக ஓய்வுபெற்றுத் தற்போது பெங்களூரில் வசிக்கிறார். சிறுகதை, நாவல்கள், நாடகங்கள் எழுதியுள்ளார். கர்நாடக – குறிப்பாகத் தென்கர்நாடக – முஸ்லிம் மக்களின் பண்பாட்டுக் கூறுகளைக் கன்னட இலக்கியத்தில் அறிமுகப்படுத்திய முன்னோடி. இரண்டுமுறை மைய சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் இந்தியர் (2010, 2016). கர்நாடகத்தின் முதல் பால சாகித்திய புரஸ்கார் விருதாளர். கதா விருது உள்ளிட்ட இருபத்து நான்கு கீர்த்திகளைப் பெற்றுள்ளார். மேல்விபரங்களுக்கு விக்கிபீடியாவில் இவர் பற்றிய பதிவைக் காண்க.

மினி கிருஷ்ணன் எடிட்டிங்கில் இந்தியாவின் பன்னிரண்டு மொழிகளிலிருந்து தலா ஒரு நீண்ட சிறுகதையைத் தேர்ந்து ஆங்கில மொழிபெயர்ப்பில் Tell Me A Long Story எனத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. மகாஸ்வேதாதேவி, நிர்மல் வர்மா, கமலகாந்தா மொஹாபத்ரா, கே.ஆர்.மீரா முதலான இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் அடங்கிய இத்தொகுப்பில் பொளுவாரின் இக்கதையும் ஒன்று. தெலுங்கு மொழிக்கு இதில் இடமில்லை. தமிழிலிருந்து கோபிகிருஷ்ணனின் ஒரு கதை A Place to Live (தமிழாக்கம்: வசந்த சூர்யா) என இந்நூலில் இடம்பெற்றுள்ளது தமிழுக்குப் பெருமை.

குறிப்புகள்

இத்தத்: முஸ்லிம் விதவை கணவன் இறந்ததிலிருந்து நான்கு மாதங்கள் பத்து நாட்கள் தனித்திருக்க வேண்டும். இக்காலகட்டத்தில் குடும்பத்துக்கு வெளியிலுள்ள ஆண்களோடு பேசக் கூடாது. குரான் ஓதுதலும் தொழுகையுமே அவள் கடமை. மறுமணம் தொடர்பாக யோசிக்கலாம். ஆனால் பிரஸ்தாபிக்கக் கூடாது. இக்கதையைப் படித்தால் ‘இத்தத்’ நன்கு விளங்கும்.

தௌபா: பாவமன்னிப்பு

அலிகத்: காதணி

பதர் யுத்தம்: இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் நடைபெற்ற யுத்தம். குறைந்த எண்ணிக்கைலான இஸ்லாமியர்கள் பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளை நோன்பிருந்து வென்றது இதன் சிறப்பு.

பாத்திஹா: இறை வேண்டல் திறப்பு.