குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் வரலாற்றை மத்திய காலத்துக்கு இட்டுச்செல்ல முயன்றது என்றால், அதற்கெதிரான மக்களின் போராட்டம் இந்தியாவை எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்ல முயன்றது என ஒரே வாக்கியத்தில், கடந்த ஒரு மாத கால இந்திய நிகழ்வுகளை சுருக்கமாக வர்ணித்துவிடலாம். யார் வெற்றிபெற்றார்கள், யார் தோல்வியடைந்தார்கள் என்பது இந்த நிமிடத்தில் ஒரு சேதி அல்ல. பாசிச சக்திகளுக்கு வெற்றி அவ்வளவு சுலபமாகக் கிட்டாது என்பதும் ஜனநாயக சக்திகள் அவ்வளவு சுலபமாக தோற்கடிக்கப்படமாட்டார்கள் என்பதும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது, களத்தில்.

அமித் ஷாக்கள் இதை கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. அப்படியிருக்க வாய்ப்பில்லை. இந்த அளவுக்கான தீவிரமான எதிர்ப்பை ஒருவேளை அவர் எதிர்பார்த்திருக்காமல் போயிருக்கலாம். காஷ்மீரை சிதைத்தபோது இந்தியா அமைதி காத்தது. முத்தலாக் விஷயத்தில் முஸ்லிம்கள்கூட அமைதி காத்தார்கள். பாபர் மசூதி தீர்ப்பு வந்தபோது அவர்கள் மௌனமாக இருந்தார்கள். ஆனால் காஷ்மீர் காஷ்மீரிகளைத் தவிர வேறுயாரையும் நேரடியாகப் பாதிக்கப்போவதில்லை. மற்ற விஷயங்கள் வரலாறு, பண்பாடு சார்ந்தவை. எனவே, அரசியல் உணர்வு கொண்டவர்கள்கூட பொருமியதோடு நிறுத்திக்கொண்டார்கள். பொதுவாக வேறெதற்கோ எல்லோரும் காத்துக்கொண்டிருந்தார்கள் என இப்போது தோன்றுகிறது.

ஆனால் குடியுரிமைச் சட்ட விவகாரம் நேரடியாக முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் விவகாரம் என்பதால் அவர்கள் இந்தத் தடவை சும்மா இருக்க இயலவில்லை. இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசாக தொடருமா தொடராதா என்பது குறித்த கேள்வியாக இது ஆகிவிட்டதால் எல்லோரும் எழுந்து நிற்கவேண்டியதாயிற்று. இந்திய அரசியல் சாசனத்தின் அடிமடியிலேயே கைவைக்கும்போது எதிர்ப்புகள் வராது என்று இறுமாந்திருக்க அமித் ஷாக்கள் ஒன்றும் அறிவிலிகள் அல்ல. சொல்லப்போனால் உருவாகும் எதிர்ப்புகளைக் கொண்டு எப்படி பிளவை அதிகப்படுத்துவது என்பது குறித்து ஆராயக்கூடிய மனம் படைத்தவர்கள் அவர்கள். பாசிஸ்ட்களின் தர்க்கத்தை மற்றவர்கள் புரிந்துகொள்வது கடினம்தான்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அமித் ஷா உள்துறை அமைச்சராக ஆனபோதே நாம் இதையெல்லாம் எதிர்பார்த்திருக்கவேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் தொடங்கும்போதே ஒருவிதமான பீதி நாடெங்கும் பரவத் தொடங்கிவிட்டது. உரையாடலுக்குச் சற்றும் பொருந்தாத உடல்மொழியோடும் பொய்களும் சவடால்களும் நிறைந்த வாய்மொழியோடும் அமித் ஷா மக்களவையில் தன்னை முன்னிறுத்திக்கொள்கிறார். அவருக்கு முன்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் உறுப்பினர்களும் ஒன்றும் செய்துவிடமுடியாது என்கிற தோரணை உருவாக்கப்படுகிறது. அமித் ஷாவின் சாகச திரைப்படம்போல அக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளிப்படுகின்றன.

ஆனால் தோல்வி மனப்பான்மையில் துவண்டிருந்த எதிர்க்கட்சிகள் டிசம்பர் இரண்டாம் வாரம் புதிய நம்பிக்கையைப் பெற்றன. மகாராஷ்ட்ராவில் சரத் பவார் கொடுத்த கசப்பு மருந்துக்குப் பிறகு பாரதீய ஜனதா கட்சி சறுக்கல் தொடங்குகிறது என்பதெல்லாம் மேலோட்டமான முடிவு. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு அது ஒரு ஊக்க பானம் என்பதில் சந்தேகமில்லை. நாடாளுமன்றத் தொடர் தொடங்கும்போதே அமித் ஷாவின் அஜெண்டா பற்றிய போராளிகளின் கீச்சுக்குரல்கள் மட்டும் சமூக ஊடகங்களில் தெறித்துக்கொண்டிருந்தன.

இந்து ராஷ்ட்டிர பெருரதம் சாலையில் எதிர்ப்பட்டவர்களையெல்லாம் நசுக்கித்தள்ளி விட்டு ஓடுவதைப் பார்க்கச் சகிக்காமல் ஐனநாயகவாதிகள் ஜன்னல்களைச் சாத்திக்கொண்டார்கள். உலகெங்கும் பரவியுள்ள வலதுசாரி அரசியலின் இந்திய நீட்சி என்று தமக்குத்தாமே சமாதானம் சொல்லிக்கொண்டார்கள். டிசம்பரில் மக்கள் மத்தியில் எழுந்த மிகப்பெரிய எழுச்சிதான் நம் அனைவரின் குமைச்சலையும் கணிசமாகக் குறைத்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும்.

பச்சை விரோதம்

இந்திய அரசியல் சாசனத்தின் 14ஆம் கூறு சட்டத்தின்முன் இந்தியக் குடிமக்கள் அனைவரும் சமம் என்று கூறுகிறது. குடியுரிமைச் சட்டம் 1955 அந்த அடிப்படையிலேயே இயங்குகிறது. அந்த அடிப்படையில் ஒரு மாற்றத்தைச் செய்து, சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம் என்கிற அடித்தளத்தை நொறுக்குகிறது குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 (இனி சிஏஏ). ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகும் இந்து, சீக்கிய, பௌத்த, ஜைன, பார்சி, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் -அவர்கள் டிசம்பர் 31, 2014 அன்றோ, அதற்கு முன்போ இந்தியாவுக்குள் வந்திருந்தால், அவர்கள் இந்தியக் குடியுரிமையைப் பெறுவதற்கு எளிதான வழியை இந்தச் சட்டம் உருவாக்குகிறது. இந்தப் பட்டியலில் மேற்கண்ட மூன்று நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களோ அல்லது இந்தியாவின் பிற அண்டை நாடுகளைச் சேர்ந்த வேறு எந்த மதத்தினருமோ சேர்க்கப்படவில்லை. மேற்சொன்ன மூன்று நாடுகளும் இஸ்லாமிய நாடுகள் என்றும், எனவே அங்கே இஸ்லாமியர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாக நேரிடாது என்றும் அரசு அதற்கு பதில் அளித்தது. இந்த வரையறையின் ஓட்டைகள் ஒருபுறம் இருக்க, இப்போது வந்திருக்கும் எதிர்வினைகள் சிஏஏ உருவாக்கவல்ல எதிர்கால இந்தியாவானது, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் சிறுபான்மை மதத்தவர் சம்பந்தப்பட்ட சிக்கல் அல்ல, மாறாக இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதையே காட்டுகின்றன.

அத்துடன் இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் ஏற்கனவே எரிந்துகொண்டிருக்கும் இனத் தீயில் இது மத எண்ணெயை வார்த்திருக்கிறது என்பது மற்றுமொரு முக்கிய விளைவாகும். அத்துடன் இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற குடியரசாக நீடிக்கவிடாமல் அதை ஒரு குறிப்பிட்ட மதம்சார்ந்த நாடாக மாற்றுகிற இந்து ராஷ்ட்டிரக் கனவை நனவாக்கும் மிகப்பெரிய அரசியல்சாசன நடவடிக்கையின் தொடக்கம் இது என்றும் தயங்காமல் கூறலாம்.

இந்து ராஷ்ட்டிரக் கனவு என்பது, இந்தியாவிலுள்ள அனைத்து இந்துக்களின் நலன்கள் அடிப்படையில் கட்டமைக்கப்படும் ஒரு தேசியவாதம் அல்ல என்பதும், இது இந்தியாவிலுள்ள இந்துக்களில் எண்ணிக்கையில் மிகச்சிறுபான்மையராக இருக்கும் சில ஆதிக்கச் சாதிகளின் வர்ண ஆதிக்க அரசியல் வெளிப்பாடு என்பதும் வெளிப்படையான ரகசியம். இந்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களினூடாக இது பலருக்குப் புரிபட ஆரம்பித்திருக்கிறது என்பது நல்லதொரு செய்தி. ஏனென்றால், இந்த நடவடிக்கை தனி ஒரு நடவடிக்கை அல்ல. மாறாக, பாஜகவின் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியுடன் வைத்து இதை அடையாளம்காண வேண்டியிருக்கிறது.

டிசம்பர் 4ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை தாக்கல்செய்ய ஒன்றிய அமைச்சரவை முடிவெடுத்த அடுத்த கணமே இந்தியாவின் வடகிழக்கு தீப்பற்றத் தொடங்கியது. அசாம் தலைநகர் திஸ்பூரில் ஆயிரக்கணக்கான மக்கள் பாஜகவின் மாநில அரசுத் தலைமை பீடத்தைத் தாக்க தொடங்கினார்கள். டிசம்பர் 10ஆம் தேதி, அமித் ஷா சட்டமுன்வரைவை மக்களவையில் தாக்கல் செய்தார். மறுநாள் 311-80 கணக்கில் அது வெற்றிபெற்றது. காங்கிரஸ், இடதுகள், திமுக போன்ற எதிர்க்கட்சிகள் எதிர்க்க. பாஜகவின் நேரடி மற்றும் மறைமுகக் கூட்டாளிகளான அஇஅதிமுக, ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் ஆதரித்தன. 11ஆம் தேதி மாநிலங்களவையில் இது நிறைவேறியது. அஇஅதிமுகவின் வாக்குகள் இந்த வெற்றிக்கு உத்தரவாதமாக இருந்தன. திராவிட இயக்கத்துக்கு மிகமோசமான ஒரு துரோகத்தைச் செய்தது அதிமுக. கிட்டத்தட்ட இந்தியாவின் எதிர்க்கட்சியைப் போலவே அவையில் செயல்பட்டு சட்டத்துக்கு எதிராக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினார்கள். பலனில்லை தாக்கல் செய்த மறுநாள் குடியரசுத் தலைவர் அதற்கு இசைவளித்தார்.

வடகிழக்கில் பற்றிய தீ பிறகு நாடெங்கும் பரவியது. தில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராடியதும் அதை தில்லி போலீஸ் கொடூரமாக நசுக்கியதும் உலகெங்கும் கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு நடந்ததை நாம் அறிவோம். போராட்டத்தின் அர்த்தமும் சட்டத்தின் அனர்த்தமும் மெல்ல மெல்ல புரிபடலாயிற்று. ஒரு முஸ்லிம், அவர் இந்தியாவையே பூர்வீகமாகக் கொண்டு வாழ்பவராக இருந்தாலும், அவர் தனது குடியுரிமைக்கான சான்றுகளைக் கொண்டிருக்காவிட்டால், அவர் வெளிநாட்டிலிருந்து வந்த ‘சட்டவிரோத குடியேறியாகக்’ கருதப்படுவார். ஒரு இந்து, அவர் பாகிஸ்தானிலிருந்து வந்த ‘சட்டவிரோத குடியேறியாக’ இருந்தாலும், எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லாதபோதும் அல்லது அவர் மதரீதியில் துன்புறுத்தப்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் காட்டப்படமுடியாத போதும், அவர் இந்தியக் குடிமகனாக ஏற்றுக்கொள்ளப்படுவார். – இதுதான் சிஏஏ, என்சிஆர் மூலமாக உறுதிப்படுத்தப்படுகிற அபாயம். சட்ட நுணுக்கங்களையும் அரசின் விளக்கங்களையும் தாண்டி இப்படிப்பட்ட நிலைதான் உருவாகும் என்கிற அச்சம் முஸ்லிம்களிடம் பரவியது. அடுத்த கவலையும் உருவானது: இந்தச் சட்டம் உண்மையிலேயே சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் தொடர்புடையதா அல்லது நீண்டகாலமாக இந்தியாவிலேயே வாழும் சிறுபான்மையரின் எதிர்காலக் குடியுரிமை தொடர்பானதா?

இந்தியா என்பது இந்துக்களுக்குத்தான் சொந்தம் என்கிற கருத்தைக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்து ராஷ்ட்டிரக் கருத்தியலை இந்தச் சட்டத்திருத்தம் பிரதிபலிக்கிறது. ஒரு இந்து, உலகில் எங்கே பிறந்தாலும் அவர் தன்னளவில் இந்தியாவின் குடிமகன்தான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் முன்பொருமுறை தெரிவித்தார். (இதில் ஈழத்தமிழர்கள் அடங்காது ஏனெனில் ஆர்.எஸ்.எஸ். ஈழத் தமிழர்களின் உரிமைக்காக ஒரு துரும்பையேனும் கிள்ளிப்போட்டதில்லை).

இரண்டாம் உலகப்போருக்குப்பின் உருவான ஜியோனிஸ்ட்கள் உலகெங்கிலுமுள்ள யூதர்களின் இயற்கையான தாயகம் இஸ்ரேல் என்று கூறினார்கள். கொஞ்சம் ஜியோனிசத்திடமிருந்தும் கொஞ்சம் நாஜிசத்திடமிருந்தும் ஒரேநேரத்தில் சித்தாந்தக் கடன் வாங்குவதில் பேர்போன சங் பரிவாரக் கூடாரம், ‘இந்துக்கள் எங்கே போவார்கள், அவர்களுக்கு இருப்பது ஒரே நாடு’ என்று ஆரம்பித்து, இந்தக் கருத்தை வெற்றிகரமாக இந்துக்கள் மத்தியில் விதைத்திருக்கிறார்கள். அதில் ஓரளவுக்குப் பெற்றிருக்கும் வெற்றியின் மிதப்பில்தான் மேற்கண்ட சட்ட விளையாட்டு தொடங்கியிருக்கிறது.

இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறு தேசத்தவர்கள் என்கிற கருத்து, 1947க்கு முன் இரண்டு தரப்பு மதவாதிகளாலும் முன்வைக்கப்பட்ட ஒன்று. ஆனால் அக்கருத்தை இந்துத்துவ அரசியலின் அடிநாதமாக முன்வைத்தவர் சாவர்க்கர். அதன்படி, பாகிஸ்தான் உருவாக உண்மையிலேயே காரணமாக இருந்த சாவர்க்கரிசத்தின் கோட்பாட்டின் நீட்சிதான் பாஜக அரசின் இன்றைய நடவடிக்கை.

அதாவது, பிரிவினை 1947இல் முடிந்துவிடவில்லை! இந்தியாவில் கடைசி முஸ்லிம் இருக்கும்வரை பிரிவினை முடியாது என்பதுதான் நாக்பூரின் எண்ணம். 1947க்கு முன்பு இந்துத்துவாதிகளுக்கு சில ‘பிரச்சினைகள்’ இருந்தன. இந்திய ஒன்றியத்தில், ‘சேதமில்லாத இந்துஸ்தானத்தில்’, கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இருந்தால், முஸ்லிம் பெரும்பான்மை மாகாணங்கள் நிலவினால், முழுமையான இந்து ராஷ்ட்டிரத்தை அமைக்க முடியாமல் போய்விடும் என்பதற்காக இந்திய – பாகிஸ்தான் பிரிவினையை அவர்கள் விரும்பினார்கள். அதனால் வங்காளமும் பஞ்சாபும் மதரீதியில் துண்டாடப்பட்டன. ஆனால் இந்தியாவின் ஆரிய வர்த்தத்தின் மையத்திலிருக்கும் உத்தரப்பிரதேசத்திலும் அருகமை மாநிலங்களிலும் உள்ள முஸ்லிம்கள் எண்ணிக்கை பல கோடி. இந்தியா முழுக்க உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை சாதாரண எண்ணிக்கை அல்ல. இன்று உலகில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடான இந்தோனேஷியாவுக்கு (23 கோடி பேர்) அடுத்து அதிகம் முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தியாதான். 2011 கணக்கின்படி, இந்தியாவில் 20.1 கோடி முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். பாகிஸ்தான்கூட மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. உலக முஸ்லிம் மக்கள்தொகையில் 11 சதவீதம் இந்தியாவில் இருக்கிறது. இது உலகின் மிகப்பெரிய முஸ்லிம் சிறுபான்மைச் சமூகம் இங்கேதான் வாழ்கிறது! ஆனால் 20 கோடி பேரை உறுப்பினர்களாகக் கொண்ட, இந்திய மக்கள் தொகையில் 15 சதவீதம்பேரைக் கொண்ட ஒரு சமூகத்தை, சிறுபான்மைச் சமூகம் என்று விளிப்பதைவிட அபத்தம் வேறொன்று இருக்கமுடியாது! ஒரு ஒப்பீட்டைப் பாருங்கள். ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் மக்கள்தொகை 25 கோடிதான். ரஷ்யாவின் 15 கோடி மக்கள்தொகையைவிட இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 கோடி அதிகம். அமெரிக்காவின் மக்கள்தொகையான 33 கோடியில் சற்றேறக்குறைய இது மூன்றில் இரண்டு பங்கு. சிறுபான்மை என்ற சொல் ஒப்பீட்டளவிலானதுதான். தனிமுழுமையானதல்ல.

ஆனால் இந்த 20 கோடி முஸ்லிம்களை இங்கேயிருந்து துடைத்தெறிந்துவிடவேண்டும் என்று சங்கிகள் நினைக்கிறார்கள். அவர்களை பாகிஸ்தானுக்குப் போ என்று சொல்லும்போதோ அல்லது அத்தனைபேருக்கும் தடுப்புமுகாம்களை அமைத்துவிடவேண்டும் என்று கணக்கிடும்போதோ அல்லது அத்தனைபேரையும் கொன்றுகுவித்துவிட வேண்டும் என்று கனவுகாணும்போதோ இந்த உலகில் இந்துத்துவ வெறியர்களைவிட முட்டாள்கள் வேறு யாருமில்லை என்பது ஊர்ஜிதமாகிறது. ஆனால் இப்போது ஒரே ஒரு ஆசை அவர்களுக்கு இருக்கிறது: ஒரே அடியில் 20 கோடிப்பேரின் இருப்பையே கேள்வி கேட்டுப்பார்த்துவிட விரும்புகிறாகள். ஒரு சமூகத்தையே சித்ரவதைக்குள்ளாக்கிப் பார்க்கிறது அந்தப் பாசிச மனது.

அதனால்தான் இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள், 1947க்குப் பிறகு இரண்டாம் முறையாக வேரற்றுப்போவதைப்போல உணர்கிறார்கள். இந்தியாதான் தங்கள் தாய்நாடு என்று கருதி, இந்தியக் குடிமக்களாகவே வாழ்கிற கோடிக்கணக்கான முஸ்லிம்களிம் இன்று ஏற்பட்டிருக்கிற பதற்றம் பாபர் மசூதி இடிப்புக்குப் பின் ஏற்பட்ட பிரச்சினையைவிட மிக ஆழமானது. அப்போது அவர்கள் பாதுகாப்பு குறித்து அதிகம் அஞ்சினார்கள். இப்போது இந்தியாவில் அவர்களது இருப்பே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. தடுப்பு முகாம்களின் புகைப்படங்கள் வாட்சப்களின் வழி அவர்களை பீதிக்குள்ளாக்குகிறது.

இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராக மட்டுமின்றி, சிஏஏவும் என்ஆர்சியும் இந்தியா கைச்சாத்திட்டுள்ள மனித உரிமைகளுக்கான பன்னாட்டுப் பறைசாற்றத்தின் நெறிமுறைகளுக்கும் உலகளவில் ஏற்கப்பட்டுள்ள அகதிகள் சட்டங்களுக்கும் புறம்பானது என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்தச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மறுபடியும் சரிசெய்யமுடியாத அளவுக்கு நாடு பிளவுபட்டுவிடும் என்று கொல்கத்தாவிலுள்ள நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் ஜூரிடிக்கல் சயன்ஸஸ் நிறுவனத்தின் முன்னாள் மாணவர்களும் இந்நாளில் பல நாடுகளில் சட்டத்துறை வல்லுநர்களாகவும் இருக்கும் 500 மேற்பட்ட சட்டநிபுணர்கள் எச்சரித்தார்கள்.

பாகிஸ்தானிலுள்ள அகமதியாக்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள், இலங்கையிலிருந்து வரக்கூடிய இந்துக்களை ஏன் சேர்க்கவில்லை என்கிற எதிர்க்கேள்விகள் சட்டத்தின் பாரபட்சத்தைக் காட்டக்கூடிய கேள்விகள்தான் என்பதில் ஐயமில்லை. ஆனால் கேட்கப்படவேண்டிய கேள்விகளிலேயே மிகப்பெரிய கேள்வி, இந்தச் சட்டம் இந்தியாவிலுள்ள முஸ்லிம்களை எப்படி குறிவைக்கிறது என்பது தொடர்பானதுதான். இந்த தர்க்கமும் சட்டமும் நீட்டிக்கப்பட்டு, எதிர்காலத்தில் இந்தியாவிலுள்ள இந்து அல்லாத மக்கள், இந்தி பேசாத மக்கள், அல்லது மாற்று கருத்துகளை உடையவர்களை அது எப்படி பாதிக்கும் என்கிற மிகப்பெரிய கேள்வியையும் அடுத்ததாகக் கேட்டாக வேண்டும். சட்டம் மட்டுமல்ல, அதன் நோக்கம், அதன்மீதான வியாக்கியானம் போன்றவைதான் எப்போதும் முக்கியம்,

இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுக்கு இதனால் எந்தவிதத்திலும் பாதிப்பில்லை என்று நரேந்திர மோடி உத்தரவாதம் அளிக்கிற அதே நாட்களில்தான் உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான போலீஸ் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இரண்டே ஆண்டுகளில் முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து துடைத்தெறிந்துவிடுவோம் என்று பாஜகவின் நான்காம்தர தலைவர்கள் வெளிப்படையாகப் பேசினார்கள். முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பில்லை என்று காங்கிரசும் ‘அர்பன் நக்சல்களும்’ பேசுவதாகக் கூறிய மோடி, தடுப்புக்காவல் முகாம்கள் எல்லாம் இல்லையென்று முழு மலையையே சோற்றில் மறைக்கப் பார்த்தார். அசாமிலிருந்து வந்த புகைப்படங்கள் அதைப் பொய்ப்பித்தன. அடுத்தடுத்த நாட்களில் மோடியும் அமித் ஷாவும் பொய்களாக அவிழ்த்துவிட்டார்கள். உலகமே காறி உமிழ்ந்தாலும் அதற்குக் கவலைப்படக்கூடியவர்களாக அவர்கள் இல்லை.

எடுத்துக்காட்டாக, சிஏஏ, என்பிஆர். என்சிஆர் இதற்கெல்லாம் தொடர்பே இல்லையென்று மோடியும் ஷாவும் கூறிக்கொண்டிருந்தார்கள். தொடர்பு இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் வாதாடின. நிபுணர்கள் சுட்டிக்காட்டினார்கள். டிசம்பர் 27இல். சிஏஏவுக்கும் என்பிஆருக்கும் இடையில் தொடர்பே இல்லை என்றார் அமித் ஷா. ஆனால் அதே நாளில்தான், என்பிஆருக்காக ரூ 3941.35 கோடியை ஒதுக்கியிருந்தார் உள்துறை அமைச்சர்!

உண்மை என்ன? இந்திய அரசு நேஷனல் பாபுலேஷன் ரெஜிஸ்டர் (என்பிஆர்) தொடர்பான பூர்வாங்கப் பணியை இந்தச் சட்டத்தைத் தாக்கல் செய்வதற்குமுன்பே அரசுத் தொடங்கிவிட்டது. குடியுரிமைச் சட்டம் 1955 இன் கீழ், குடியுரிமை (குடிமக்களைப் பதிவுசெய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வழங்குதல்) விதிகள் 2003 – சிவீtவீக்ஷ்மீஸீsலீவீஜீ (ஸிமீரீவீstக்ஷீணீtவீஷீஸீ ஷீயீ சிவீtவீக்ஷ்மீஸீs ணீஸீபீ மிssuமீ ஷீயீ ழிணீtவீஷீஸீணீறீ மிபீமீஸீtவீtஹ் சிணீக்ஷீபீs) ஸிuறீமீs, 2003 என்கிற தலைப்பில் உருவாக்கப்பட்ட விதிகளின்கீழ் என்பிஆர் செயல்படுகிறது. அதன் விதி 2 (1) கூறுவது என்ன? “மக்கள் தொகைப் பதிவேடு என்றால், ஒரு கிராமம் அல்லது ஊரகப் பகுதி அல்லது நகரம் அல்லது வார்டு அல்லது ஒரு நகரம் அல்லது நகர்ப்புறப் பகுதிக்குள் உள்ள ஒரு வார்டுக்குள் இருக்கும் வரையறுக்கப்பட்ட பகுதியில் வழமையாக வசித்துவரும் நபர்களின் விவரங்களைக் கொண்ட ஒரு பதிவேடு என்று பொருள். இந்த என்பிஆர் ஒருவர் ஓரிடத்தில் வழமையாகத்தான் வசித்துவருகிறார் என்பதை எப்படி அறிந்துகொள்ளும்? இந்த என்பிஆர் பணிகளுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

அது ஜூலை மாதமே தொடங்கிவிட்டது. மேற்கண்ட குடியுரிமை (குடிமக்களைப் பதிவுசெய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வழங்குதல்) விதிகள் 2003 இன் கீழ். விதி 3இன் உள்விதி 4இன் கீழ், அசாம் தவிர இந்தியா முழுமையிலும் வீடுவீடாகச் சென்று கணக்கெடுத்து குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படவேண்டும் என்று ஜூலை 31இல் அரசு ஆணை பிறப்பித்தது! ஏப்ரல் 2020இல் தொடங்கப்படவேண்டிய இந்தப் பதிவு நடவடிக்கை, செப்டம்பர் 2020இல் முடித்தாகப்படவேண்டும்.

இந்த அரசாணை அசாம் தவிர என்று கூறுகிறது. அதாவது, அசாமுக்கு ஏற்கனவே அசாம் ஒப்பந்தம் மற்றும் உச்சநீதிமன்ற ஆணைகளின்படி ஒப்புக்கொள்ளப்பட்ட என்ஆர்சி பொருந்தும். இந்தியா முழுமைக்கும் அதை அப்படியே நீட்டிப்பதில் சட்டச்சிக்கல் இருந்ததால் இந்திய அரசு மற்றுமொரு ஏமாற்றுவேலையைச் செய்தது. அனைத்திந்திய என்ஆர்சிக்கு ஒரு புதிய பெயரை அது சூட்டியது. அதாவது, அதை ழிணீtவீஷீஸீணீறீ ஸிமீரீவீstமீக்ஷீ ஷீயீ சிவீtவீக்ஷ்மீஸீs என்று அழைப்பதைத் தவிர்த்து ழிணீtவீஷீஸீணீறீ ஸிமீரீவீstமீக்ஷீ ஷீயீ மிஸீபீவீணீஸீ சிவீtவீக்ஷ்மீஸீs என்று அதற்கு புதிதாக பெயர்சூட்டியது. அந்த என்ஆர்ஐசிதான் இப்போது இந்தியா முழுமைக்கும் வருமாம். அரசின் ஆணைப்படி, என்பிஆரின் வழியாக முழுமையான சரிபார்ப்பு செய்யப்பட்டு, அதன்பிறகு என்ஆர்ஐசி நடைமுறைப்படுத்தப்படும்.

ஆக, இந்தியாவில் ஒரு முஸ்லிம் இருக்கிறார். அவர் அந்த இடத்தில்தான் நீண்டகாலமாக இருக்கிறாரா என்பதை முதலில் என்பிஆர் சரிபார்க்கும். நீண்டகாலமாக இருந்தால் பிறகு அவரை என்சிஐஆர் பதிவுசெய்ய வரும். ஆனால் பதிவு செய்யப்படலாம் அல்லது செய்யப்படாமலும் போகலாம். அதாவது, அப்போது அந்த முஸ்லிம் இந்த நாட்டில்தான் காலம்காலமாக இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்த சான்றுகளை அளிக்கவேண்டும். அப்படி அளிக்கமுடியாவிட்டால், அவரை சட்டவிரோத குடியேறி என்று அந்த அதிகாரி பதிவுசெய்யமுடியும். அப்படி சந்தேகம் எழுப்பப்பட்டால், சிஏஏ மூலம் அவர் குடியுரிமையை இழப்பார். அவர் ஒன்று பாகிஸ்தானுக்குச் செல்லவேண்டும் அல்லது தடுப்பு முகாமுக்குச் செல்லவேண்டும்.

ஒருவேளை, அந்த முஸ்லிமிடம் சான்றுகள் இருந்தாலும், அந்தச் சான்றுகளை அந்த அதிகாரி கிழித்தெறிந்துவிட்டு, மறுபடியும் சான்றாதாரங்களைக் காட்டுங்கள் என்று கேட்கமுடியும். இது சட்டமல்ல, ஆனால் அரசியல். போலீஸ் உடையில் சங் பரிவார குண்டர்கள் மாணவர்களைத் தாக்கமுடியுமென்றால் இதுவும் முடியும். ஒருவேளை அந்த முஸ்லிமிடம் சான்றுகள் இருந்தால் அவர் வீட்டைக் கொளுத்தி சான்றுகளை அழிக்கமுடியும். ஒருவேளை அந்த முஸ்லிமிடம் சான்றுகள் இருந்தால் அரசு அலுவலகத்தில் அவர் அதன் நகல்களைப் பெறமுடியாமல் போகலாம். நாஜிகளின் ஆட்சியில் எதுவும் நடக்கலாம். ஒரு சாதாரண லோக்கல் அரசியல்வாதி தனக்கு வாக்களிக்காத வார்டுகளைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்தே நீக்கமுடியும் என்கிற அளவுக்கு நிலைமை மோசமாக உள்ள நாடு இது.

இப்படிக் கூறுவதை மிகைப்படுத்தல் என்றும் அரசியல் என்றும் சிலர் கூறலாம். இல்லை. 2003 விதியில் என்ன கூறப்பட்டிருக்கிறது எனப் பாருங்கள்? என்பிஆர் வழியில் முதலில் சரிபார்ப்பு நடக்கிறது என்பதைப் பார்த்தோம். அப்படி சரிபார்க்கும்போது என்ன நடக்கும்? 2003இல் நடைமுறைக்கு வந்த குடிமக்களைப் பதிவுசெய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வழங்குதல் விதிகள் ஆவணத்தின் விதி 4 உள்விதி 4 இவ்வாறு கூறுகிறது:  ‘இந்தச் சரிபார்ப்பு நடைமுறையின்போது, குடியுரிமை சந்தேகத்துக்கிடமாகவுள்ளது என்று கருதப்படும் தனிபர்களின் விவரங்கள், உள்ளூர் பதிவேட்டில், பதிவுசெய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக மக்கள்தொகை பதிவேட்டிலும் உரிய குறிப்புடன் (க்ஷீமீனீணீக்ஷீளீ) பதிவுசெய்யப்படவேண்டும். குடியுரிமை சந்தேகத்துக்கிடமானதாக இருந்தால், சரிபார்ப்பு நடைமுறை முடிந்தவுடனேயே உடனடியாக அந்த நபர் அல்லது குடும்பத்திடம் வரையறுக்கப்பட்ட ப்ரோ-பார்மா வழியாக தெரிவித்துவிடவேண்டும்.’

இந்த விதிமுறைகள் ஆவணம் 2003இல் உருவாக்கப்பட்டது. குடியுரிமைச் சட்டத்தின் இயல்பான விதிகளை எதிர்கால சித்தாந்த நோக்கங்களுக்காக முன்கூட்டிய திருத்தம் செய்யக்கூடிய இப்பணியைச் செய்தவர்கள் யாரென்று இன்னமும் உங்களுக்கு கேள்வி எழவில்லையா? 2003இல் இந்தியாவில் ஆட்சியில் இருந்தவர்கள் வாஜ்பாயி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சிதான் என்பதும் மறந்துவிட்டதா?

பச்சைத் துரோகம்

சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தின் மற்றுமொரு களத்துக்குச் செல்வோம். சிஏஏ வந்தவுடன் முதல் எதிர்ப்புக் கிளம்பியது அசாமிலும் வடகிழக்கு மாநிலங்களிலும்தான். குடியுரிமைச் சட்டம் தொடர்பான போராட்டங்களில் இருவிதமான அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று, அது முஸ்லிம்களுக்கு எதிராக என்ன செய்கிறது என்பது தொடர்பானது. மற்றொன்று, அது வடகிழக்கு மாநிலத்தவர்களை எப்படி நம்பவைத்து கழுத்தறுத்தது என்பது. இதில் முரண்பாடு என்னவென்றால், இவ்விரு போராட்டக் களங்கள் அடிப்படையில் ஒன்றுக்கொன்று முரணான அல்லது எதிரான கோரிக்கைகளை வெளிப்படுத்தின என்பதுதான். இந்தியாவின் பன்மையத்தை வெளிக்காட்டிய ஒரு நிகழ்வாகவே இதைப் பார்க்கமுடியும். அது அவலமானதும்கூட.

அசாமிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் நிலவும் ஒரு நெடுங்காலச் சிக்கல் பங்களாதேஷிலிருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் குடியேறும் வங்காள, இந்தி மக்களின் எண்ணிக்கை தொடர்பானது. பெரும்பாலும் பழங்குடியினர் வாழ்வியலில் இன்றும் நீடிக்கும் அந்தச் சமூகங்கள், தங்குதடையற்ற வெளியார் குடியேற்றம் தங்களுடைய சமூகங்களின் இருப்புக்கே பாதகமாக இருப்பதாக கருதுகின்றன. இந்து மையநீரோட்ட வெளிக்கு மிகத்தொலைவில் இருக்கும் இந்த மாநிலங்களைப் பொறுத்தவரை அப்படிக் குடியேறுபவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல. தங்களுடைய நிலமோ, வேலைவாய்ப்போ ஒரு பங்களாதேஷ் முஸ்லிமிடம் கைமாறினாலும் சரி, பிகார் இந்துவிடம் கைமாறினாலும் சரி அவர்களை பூர்வகுடி மக்கள் எதிர்க்கிறார்கள். அசாம் மக்கள் பெரும்பான்மையோர் இந்துக்கள்தான். இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிதான் அசாமிய மொழி. ஆனால் அவர்களே, சக இந்து வங்காளி அல்லது இந்து பிகாரியைப் பொறுத்துக்கொண்டதில்லை. மற்றபடி, ஆஸ்த்ரோ ஆசியாடிக் அல்லது திபெத்தோ பர்மிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த நாகாக்களையோ, மணிப்புரிகளையோ மிசோக்களையோ பற்றி பேசவே வேண்டாம்.

பிரிட்டிஷ் காலனிய காலத்தில், காலனியாதிக்கவாதிகள் வலுக்கட்டாயமாக இப்பகுதிகளை அவர்கள் உருவாக்கிய இந்தியப் பேரரசோடு இணைத்துக்கொண்டார்கள். 1947க்குப் பிறகு இப்பகுதிகளில் உள்ள தேசிய இனங்கள் பல தனித்து இயங்கவே விரும்பின. ஆனால் நேருவும் பட்டேலும் வன்முறையான வழிமுறைகளைப் பின்பற்றியும் பொய்யான வாக்குறுதிகளை இரைத்தும் குண்டுமாரி பொழிந்தும் இந்தியாவோடு இணைத்துக்கொண்டார்கள்.

இந்து முஸ்லிம் பிளவு அரசியலின் நீட்சியாக, கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இந்துக்களும் முஸ்லிம்களும் வட கிழக்கு முழுவதும் பரவலாகக் குடியேறியதன் விளைவாக மிகச்சிறிய எண்ணிக்கையைக் கொண்ட, அரசியல் சுதந்திரம் இல்லாத சிறிய இனங்கள் பதறிப்போயின. பழஙகுடி சமூகத்துக்கே உரிய அதீத இடவுரிமை காரணமாக, தங்களுக்குள்ளாகவே ஒன்றுசேர முடியாத அசாமியரும் போடோக்களும் நாகாக்களும் மெய்த்திகளும் மிசோக்களும் இந்திய அல்லது பங்களாதேஷ் பகுதிகளிருந்து குடியேறுபவர்களுக்கு எதிராக அணிதிரண்டார்கள். இதன் காரணமாகத்தான் வடகிழக்கில் மட்டும் சில பதிற்றாண்டுகளுக்கு முன்பு நூற்றக்கும் குறையாத எண்ணிக்கையில் ஆயுதப் போராட்டக் குழுக்கள் தோன்றின. நாகாலாந்தும் அசாமும் மணிப்பூரும் மிசோரமும் விடுதலைக்காகப் போராடின.

அசாம் இயக்கங்களும் இதில் விதிவிலக்கில்லை. சொல்லப்போனால், அசாம் இயக்கம் இந்துக்களின் இயக்கம். பெரும்பாலும் பிராமணர்களால் தலைமை தாங்கப்பட்ட இயக்கமும்கூட. அசாமின் மிகப்பெரிய ஆயுதக்குழுவாக இருந்த உல்ஃபாகூட அடிப்படையில் பிராமணத் தலைமை கொண்ட ஒன்று என்பது இந்தியாவின் பிற பகுதியில் உள்ளவர்களுக்கு புரிந்துகொள்ளப்படமுடியாத ஒரு விவகாரம்.

1979-85 ஆண்டுகளில் அசாமில் நடந்த மிகப்பெரிய மாணவர் இயக்கத்தின் கோரிக்கைகளில் பிரதானமானவை அசாமுக்குள் குடிபெயரும் பிற இனத்தவரை வெளியேற்றவேண்டும் என்பதும் புதிதாக குடிபெயர்வதைத் தடுக்கவேண்டும் என்பதும்தான். இது குறிப்பாக, பங்களாதேஷிலிருந்து குடியேறுபவர்களுக்கு எதிரானது என்றாலும் வரலாற்றுரீதியில் வங்காளிகளுக்கும் அசாமியர்களுக்கும் இடையிலான முரண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டது. அதைப் போலவே பிகாரிலிருந்து குடியேறும் ‘இந்தியர்களுக்கு’ எதிரானதும்கூட. சுமார் ஆயிரம் அசாமியரை பலிவாங்கிய அசாம் மாணவர் இயக்கத்தின் கரும்புள்ளியான 1983இல் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பங்களாதேஷ் முஸ்லிம்களை பலிகொண்ட நெல்லி படுகொலை நிகழ்வை நாம் மறந்திருக்கமாட்டோம்.

அசாம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், 1985இல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவாக்கப்பட்ட அசாம் ஒப்பந்தத்தின்போது, 1966 ஜனவரி 1க்கு முன்பு அசாமில் குடியேறிய அனைவரையும் தாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றும் அதற்குப்பிறகு குடியேறியவர்களை திருப்பி அனுப்பவேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தார்கள். ஆனால் இறுதியில், பங்களாதேஷ் உருவான 1971 மார்ச் 26க்கு முந்தைய நாள்வரை அசாமில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை அளிப்பது என மத்திய அரசு முன்மொழிந்ததை அனைவரும் ஏற்றனர். பங்களாதேஷிலிருந்து புதிதாக யாரும் குடிபெயர்வதைத் தடுக்கும்விதமாக எல்லையில் பாதுகாப்பைப் பலப்படுத்தி தடுப்பரண்களை அமைப்பது என்றும்கூட ஒப்புக்கொள்ளப்பட்டது.

அசாம் ஒப்பந்தத்துக்குப் பிறகு அசாம் போராட்டத்தை வழிநடத்திய மாணவர்கள்தான் அசாம் கண பரிஷத் என்கிற கட்சியினூடாக ஆட்சியைப் பிடித்தார்கள். ஆனால் ஒப்பந்தத்தில் உள்ளபடி, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படவில்லை என்றும் காங்கிரஸ் இதில் இரட்டைவேடம் போடுகிறது என்றும் கூறி பிரச்சினைகள் தொடர்ந்தன. இதேபோன்ற பிரச்சினைகள் பல வடகிழக்கு மாநிலங்களிலும் இருந்தன. 1947க்குப் பின்பும் 1971க்குப் பின்பும் பெருமளவில் வங்கதேச இந்துக்கள் குடியேறியதால் திரிபுரா என்கிற பழங்குடியினர் மாநிலம் வங்காளிகளின் மாநிலமாகவே மாறியது என்கிற கண்கூடான நிரூபணத்தை ஒரு மெய்தியோ, நாகாவோ பார்க்காமலிருக்க இயலுமா?

தொண்ணூறுகளுக்குப் பிறகு, குழப்பக்குட்டையாக இருந்த வடகிழக்கில், ஆயுதக்குழுக்களின் செயல்பாடுகளை முடக்கியபிறகு, புதிய சூழலொன்றும் அங்கே உருவானது. இந்தமுறை வடகிழக்கைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைதேடி இந்தியாவின் பெருநகரங்களுக்கெல்லாம் புலம்பெயர்ந்த வினோதமும் நடந்தது. இந்தக் காலத்தில்தான், பாரதீய ஜனதாக் கட்சி வடகிழக்கில் தன் பார்வையைப் பதித்தது. அசாமியர்களும் இன்னபிற வடகிழக்கு இனத்தவரும் பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக குடிபெயர்கிற மக்களை எதிர்ப்பதை தாங்கள் வரவேற்பதாக வடகிழக்கில் பாஜகவினர் உள்ளூர் இன மக்களிடம் கூறினார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலை பங்களாதேஷிலிருந்து குடிபெயரும் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடாக பாஜகவினர் முன்வைத்தபோது, வடகிழக்கின் இனக்குழுக்களுக்கு அது இனிப்பாகத்தான் இருந்தது. புனிதமற்ற கூட்டணி ஒன்றும் உருவானது. கடந்த பத்தாண்டுகளில் அசாமிலும் பிற மாநிலங்களிலும் பாஜக அரசு அல்லது ஆதரவு அரசுகள் உருவாவதற்கு இதெல்லாம் காரணமாக இருந்தன. வடகிழக்கு வெளியே இருந்து வருபவர்களை இந்தியர்கள் என்று கூறிவந்த மக்கள் மத்தியில், பாஜக இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற்றது எப்படி என்று மற்றவர்கள் வியப்பாகப் பார்த்தார்கள். ஆனால் வடகிழக்கு இனங்களின் காவலனாக தன்னை முன்னிறுத்திக்கொண்ட சங்கிகளின் உள்நோக்கத்தை புரிந்துகொண்டோ, புரிந்துகொள்ளாமலோ சந்தர்ப்பவாதமாக அதைப் பயன்படுத்திக்கொள்ள முயன்ற வடகிழக்கினரின் பரிதாபகரமான நிலையைத்தான் இப்போது நாம் பார்க்கமுடிகிறது.

குடியுரிமைச் சட்டத் திருத்தம் 2019 எங்கிருந்து வந்தது? அசாம் ஒப்பந்தப்படி என்ஆர்சியை நடைமுறைப்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் அதில் தடங்கல்கள் ஏற்பட்டன. 2013இல் அசாம் பொதுப்பணித்துறையும் அசாம் சன்மிலித மகா சங்கமும் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், என்ஆர்சியை அசாமில் உடனே நடைமுறைப்படுத்தும்படி பணித்தது. அதன்விளைவாக உடனடியாக என்ஆர்சி பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அசாமிலுள்ள லட்சக்கணக்கான பங்களாதேஷ் முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கான வாய்ப்பு என நினைத்து இதை மும்முரமாக நடைமுறைப்படுத்தியது 2014இல் ஆட்சியேறிய பாஜக அரசும். உச்சநீதிமன்றமும் இதை கண்காணித்துவந்தது. என்ஆர்சி இறுதிப்பட்டியல் 2019 ஆகஸ்ட் 31இல் வெளியானது. அதன்படி, சுமார் 3,30,27,661 பேர் தங்களைப் பதிவு செய்து கொள்ள விண்ணப்பித்திருந்தார்கள் என்றும் அதில் 3,11,21,004 பேர் குடியுரிமைக்கு தகுதிவாய்ந்தவர்களாக கண்டறியப்பட்டார்கள் என்றும் அரசு கூறியது. அதாவது, 19,06,657 பேர் குடியுரிமைப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்றும், அவர்கள் அதுகுறித்து வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தில் முறையிட்டுக்கொள்ளலாம் என்றும் அரசு கூறியது.

இந்த 19 லட்சம் பேரில் ஆகப் பெரும்பான்மையோர் முஸ்லிம்களாக இருப்பார்கள் என்பதுதான் தொடக்கத்தில் பாஜகவின் எதிர்பார்ப்பாக இருந்தது. அவர்கள் அனைவரையும் பங்களாதேஷுக்கே திருப்பி அனுப்பப்போகிறோம் என்று அவர்கள் இடிமுழக்கம் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களில் கணிசமானோர் இந்துக்கள் – வங்கதேச இந்துக்கள் – என்பது பிறகுதான் தெரியவந்தது. அத்துடன் அசாமிய முஸ்லிம்கள், மேற்கு வங்கத்திலிருந்து குடிபெயர்ந்த இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்பட பலரும் சான்றாதாரங்கள் இல்லாத காரணத்தால் இந்தப் பட்டியலில் இடம்பெற்றதைக் கண்டு எல்லாத் தரப்பினருமே அதிர்ந்தார்கள். அசாமியர்களைத் தவிர.

முஸ்லிம்களை வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு சட்டத்தால் இந்துக்கள் பாதிக்கப்படுகிறாகள் என்பதை பாஜகவால் ஜீரணித்துக்கொள்ள இயலவில்லை. அத்துடன் இது மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய பூகம்பத்தை உருவாக்கியது. எந்த வங்காளியையும் வெளியேற்ற அனுமதிக்கமுடியாது என்ற மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதிபடக் கூறினார். குறிப்பாக, வங்க மொழி பேசுவோரின் பூர்வீகப் பகுதி என்று கூறப்படும் பராக் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து ஒரு வங்கத்தவரையும் வெளியேற்ற அனுமதிக்கமுடியாது என்று முழங்கினார்கள் மம்தா ஆதரவாளர்கள்..

அசாமில் என்ஆர்சி தோல்வி அடைந்துவிட்டது! இந்த நிலையில்தான், குடிபெயர்ந்து வருபவர்களில் இந்துக்களை மட்டும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டத் திருத்தம் பாஜகவினருக்குத் தேவைப்பட்டது. அதுதான் சிஏஏ 2019.

ஆனால் இது குளவிக்கூண்டில் கல்லெறிந்த கதையாக ஆகிவிட்டது. பங்களாதேஷிலிருந்து குடிபெயர்ந்து வருகிற அத்தனைபேரையுமே நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறுகிற அசாமியரும் பிற வடகிழக்கினரும், முஸ்லிம்கள் மட்டும் வரவேண்டாம், இந்துக்கள் மட்டும் வரலாம் என்று சொல்கிற பாஜகவின் வாதத்தை ஏற்கமுடியாது என்று சொல்கிறார்கள்.

அசாமிலும் வடகிழக்கிலும் பல பத்தாண்டு காலமாக கஷ்டப்பட்டு பாஜக உருவாக்கிய ஆதரவுத்தளங்கள் ஓரே நாளில் நொறுக்கப்பட்டுவிட்டன. ஒரு இனப் பிரச்சினையை சுமூகமாக தீர்த்துவைப்பதற்குப் பதிலாக அதை மதச் சிக்கலாக மாற்றிய பாஜகவுக்கு எதிராக அசாமின் இந்துக்களே போர்க்கொடி தூக்கினார்கள். சில மாதங்களுக்குமுன்பு வங்காளத்து இந்துக்கள் போர்க்கொடி தூக்கினார்கள். இப்போது அசாமிய இந்துக்கள்.

அசாமை ஆளும் பாஜக அரசுக்கு எதிரான போராட்டம் மிகவும் தீவிரமாக இருந்தது. சங் பரிவாரத்தின் வெட்கங்கெட்ட ஊதுகுழலான அர்ணாப் கோஸ்வாமி போன்றவர்களே சிஏஏ தவறானது என்று காட்டமாகக் கூறியது, இந்த புதிய போக்குக்கு சப்தமான ஓர் எடுத்துக்காட்டு. வடகிழக்கில் உருவாகியிருந்த அந்தப் புனிதமற்ற கூட்டணி முடிவுக்கு வந்தது மட்டுமல்ல. இடைக்காலத்தில் காணாமல்போயிருந்த ஆயுதக் குழுக்களுக்கும் இப்போது உயிர் கிடைத்துவிட்டன. ஆசாதி முழக்கம் காஷ்மீரிலிருந்து மீண்டும் வடகிழக்குக்குப் பரவிவிட்டது. பிறகு அது அங்கிருந்து பிகாருக்கும் பரவியிருக்கிறது என்பதை செய்திகள் உறுதிசெய்கின்றன.

விசித்திரம்தான்! சிஏஏ 2019ஐ அசாமிய இந்துக்களும் எதிர்க்கிறார்கள். அசாமிய முஸ்லிம்களும் எதிர்க்கிறார்கள். வங்காள இந்துக்களும் எதிர்க்கிறார்கள், வங்காள முஸ்லிம்களும் எதிர்க்கிறார்கள். இந்தியா முழுக்க முதலில் முஸ்லிம்கள் எதிர்த்தார்கள். இப்போது இந்துக்களும் எதிர்க்கிறார்கள்! அசாமில் பாஜக கூடாரம் காலியாகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு முப்பதாண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது. வங்காளம் அதற்குமுன்னர் 1905க்கும் முன்னர் சென்றுவிட்டது. இந்து முஸ்லிம் பிளவைத் தாண்டி வங்காளிகள் கைகோர்க்கிறார்கள். வடக்கு மற்றும் மத்திய இந்தியா மத்திய காலத்துக்குச் சென்றுவிட்டது. தென்னிந்தியா, திராவிட நாட்டுப் போராட்டக்காலத்துக்குச் சென்றுவிட்டது.

அமித் ஷா எப்படி அரசியல் அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்று நமது சேனல்கள் ஏன் இப்போது விவாதத்தை நிகழ்த்தக்கூடாது? இப்போது அவர் வரலாற்று அற்புதங்களையும் நிகழ்த்தத் தொடங்கிவிட்டார்.

உலகின் பார்வையில்

‘இந்து தேசத்துக்கான தரிசனத்தை காட்டுகிறார் மோடி. இந்தியாவோ, போராட்டத்தால் வெடித்தெழுகிறது’ என்று நியூயார்க் டைம்ஸ் டிசம்பர், 17 ஆம் தேதி எழுதியது. பிரான்சின் மக்கள் தொகை அளவுக்கு எண்ணிக்கையிலான மக்களுக்கு இணைய வசதி துண்டிக்கப்பட்டது என்றும் அது எழுதியது. அமெரிக்காவின் இரண்டு பிரதான நாளிதழ்களான நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் போஸ்ட் இரண்டுமே முதல் பக்கத்தில் முக்கியத்துவம் கொடுத்து மக்களின் போராட்டத்தைப் பற்றி எழுதியிருந்தன. ‘வியாழக்கிழமை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைநகரிலேயே இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. ஏதேச்சாதிகார நாடுகளில், உத்தி என்கிற பெயரில், இப்போது அதிகரித்துவரும் அதே பழக்கமான தரவு சேவைகள், தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றை தடைசெய்யும் அபசகுனங்கள் இப்போது தில்லியின் பகுதிகளுக்கும் வந்துவிட்டன. ஆனால் இந்த நடவடிக்கையை அடிக்கடி இந்தியா எடுக்கிறது:’ என்று காட்டமாக விளாசியது லண்டனிலிருந்து வெளிவரும் த கார்டியன்.

உலகளவில் ராஜதந்திர வட்டாரத்தில் மிக முக்கியமான இதழாகப் பார்க்கப்படும் ஃபாரின் பாலிசி இதழின் முன்னாள் ஆசிரியர் டேவிட் ராத்காஃப் எழுதிய ஒரு ட்வீட் முக்கியமானது, ‘இன்றைய உலகில் மிகவும் அபாயகரமான மனிதர் மோடிதான். அவர் தன்னுடைய சொந்த மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்’ என்று மோடியை விமர்சித்த அவரது ட்வீட் பலராலும் பகிரப்பட்டது.

இந்தியா ஒரு வல்லரசாக எப்படி உருவாகிறது என்பது குறித்து ஸிவீsவீஸீரீ மிஸீபீவீணீ: ஷிtணீtus ணீஸீபீ றிஷீஷ்மீக்ஷீ என்கிற ஒரு நூலை, ராஜேஸ் பஸ்ரூருடன் இணைந்து எழுதியவரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக இணைப்பேராசியருமான கேட் சல்லிவன் தெ எஸ்ட்ரேடா, கடந்த ஐந்தாண்டுகளில் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு தொடர்ச்சியாக குறைந்துவருகிறது என்று கூறியிருக்கிறார். மோடியின் ஆட்சிக்காலத்தில் மிக அடிப்படையான அம்சங்களில் இந்தியாவின் உலக மதிப்பு சரிந்திருக்கிறது என்றும் சிஏஏக்கு எதிரான மக்கள் போராட்டங்கள்தான் இப்போது உலகளவில் இந்தியாவுக்கு நன்மதிப்பை மீண்டும் பெற உதவுகின்றன என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

தொடர்ச்சியாக ஆறு காலாண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரம் சரிந்திருக்கிறது என்பதை அவரும் பல பொருளாதார நிபுணர்களும் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்திய ஆட்சியாளர்கள் ராமராஜ்யத்தை அமைக்கப் போராடிக்கொண்டிருக்கிறாக்கள்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, அனைத்துலகமும் விரும்பும் சந்தைப் பொருளாதாரம் போன்ற மதிப்புமிக்க பெயர்கள் எல்லாம் மோடியின் ஆட்சிக்காலத்தில், குறிப்பாக சிஏஏக்குப் பிறகு சுத்தமாக அடிபட்டுப் போய்விட்டன. சிலிக்கன் வேலியிலிருக்கும் வென்ச்சர் கேபிடலிஸ்ட்கள் இனி இந்தியாவின் பக்கம் தலைவைப்பதுகூட கஷ்டம்தான். மேற்குலகின் ஜனநாயகமும் இந்தியாவின் ஜனநாயகமும் எந்த அளவுக்கு

முழுமையற்ற வஸ்துகள் என்பது நமக்குத் தெரியும் என்றாலும், இந்தியா என்னும் மதச்சார்பற்ற, ஜனநாயக நாட்டின் இடத்தில் ஒரு இந்திய பாகிஸ்தானை அல்லது இந்து தாலிபான்களின் ஆட்சியை உலகம் கற்பிதம்கூட செய்துபார்க்க முடியாது. ‘அவசரநிலைக் காலத்துக்குப் பிறகு மோடியின்கீழ்தான் இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மை மிகப்பெரிய அளவுக்கு சவாலைச் சந்திக்கின்றன’ என்று குறிப்பிடும் கேட், எந்த நாடுகள் எல்லாம் இந்தியாவின் லிபரல் எழுச்சியைக் கொண்டாடினவோ அந்த நாடுகளின் செய்தித்தாள்கள் எல்லாம் மாணவர்கள்மீது இந்திய போலீஸ் நடத்திய தாக்குதல்கள் குறித்து விரிவாக செய்தி வெளியிட்டன என்று சுட்டிக்காட்டுகிறார்.

அண்டார்டிக்காவையும் கைலாசாவையும் தவிர உலகின் அத்தனை நாடுகளையும் சுற்றிவந்த மோடியின் ஆட்சிக்காலம்தான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிக மோசமான காலமாக இருக்கப்போகிறது என்பதில் ஐயமில்லை,

மீண்டெழும் நம்பிக்கை

இணைய வெட்டு காஷ்மீரிலிருந்து பிறகு பல மாநிலங்களுக்கு பயணித்ததைப் போல, ஆசாதி என்கிற முழக்கமும் இப்போது இந்தியாவின் பல இடங்களில் கேட்கிறது. போராடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று முதல்வர்கள் பேசுவது பழைய பாணி. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், போராடுகிறவர்களை ‘பழிவாங்குவேன்’ என்று பயமுறுத்தினார். பழிவாங்கவும் செய்தார். சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் பல மாநிலங்களில் நடந்தாலும் இன்று அதிக வன்முறையும் போலீஸ் தாக்குதலும் நடந்துவரும் மாநிலம் உத்தரப்பிரதேசம்தான். சிஏஏ-, என்ஆர்சிக்கு பிந்தைய காலத்தில் முஸ்லிம்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதை அறிந்துகொள்ளவேண்டுமானால் இன்றைய உத்தரப் பிரதேசத்துக்குச் சென்றால் நாம் பார்க்க இயலும். ஆனால் மக்கள் சப்தம் போடாமல் அடங்கிவிடவில்லை. திருப்பி அடிக்கத்தொடங்கியிருக்கிறார்கள். எனவேதான் யோகி அவர்களை பழிவாங்கத் தொடங்கியிருக்கிறார்.

த கார்டியன், பிபிசி, நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற சர்வதேச ஊடகங்கள் மோடியை வறுத்தெடுக்கத் தொடங்கியபிறகு, டிசம்பர் மூன்றாம் வாரத்திலிருந்து மோடி பேச்சில் தடுமாறத் தொடங்கினார். என்ஆர்சியை நாங்கள் உடனே தொடங்குகிறோம் என்று சொல்லவில்லையே என்றார். குறிப்பாக, அசாமில் இந்தியா கட்டிவரும் தடுப்பு முகாம்கள் குறித்த செய்தி மேற்குலகத்தைத் திகைக்கவைத்தது. நிலைமை இவ்வளவு மோசமாகவா இருக்கிறது என்று இந்தியாவிலுள்ள லிபரல்கள்கூட யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தப் போராட்டங்கள் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல; பெரும்பான்மை இந்துக்களுக்குமான சுதந்திரத்தை உறுதி செய்திருக்கிறது. நாடாளுமன்ற பெரும்பான்மையை வைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு எந்தச் சட்டத்தை வேண்டுமானால் நிறைவேற்றிவிடலாம் என்கிற மோடி – ஷா கனவை சற்றேனும் கலைத்திருக்கிறது. குறிப்பாக, மாநகரங்களில், நடுத்தர வர்க்கங்களில் பாஜகவுக்கு இருந்த பிடிப்பு தளரத் தொடங்கியிருக்கிறது.

சிக்குலரிசம் என்று வலதுசாரிகளால் வர்ணிக்கப்பட்ட செக்குலரிசம், மீண்டும் நேசமான குரலில் உச்சரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல முஸ்லிம் சமூகத்தில் இருந்த தீவிரவாத இயக்கங்களைப் புறந்தள்ளி மிதவாத அமைப்புகள் களத்தில் பிற சமூக இயக்கங்களோடு கைகோர்த்து நின்றபோது, மதச்சார்பின்மை செத்துப்போய்விடவில்லை என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. இந்த நம்பிக்கை நாளையேகூட குலைந்துபோகலாம். ஆனால் வரலாற்று பாடநூல்களில் முற்றுப்புள்ளியே கிடையாது

 

(கட்டுரையாளர்: தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர். அவரை தொடர்புகொள்வதற்கான முகவரி zsenthil@gmail.com)