பதினேழாவது மக்களவையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழியை தமிழில் ஏற்றதுடன், தமிழ் வாழ்க என்றும் தமிழ்நாடே என் தாய்நாடு என்றும் திராவிடம் வெல்க, பெரியார் வாழ்க, அம்பேத்கர் வாழ்க, மார்க்சியம் வாழ்க, கலைஞர் வாழ்க என்றெல்லாமும்கூறி முழங்கியபோது, தமிழ்நாடு உற்சாகத்தில் கொந்தளித்தது. அதே சமயம் அதே அவையிலிருந்த வடநாட்டு உறுப்பினர்கள் பதிலுக்கு ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதாகீ ஜே என்றெல்லாம் முழக்கமிட்டார்கள். தமிழ் வாழ்க என்ற முழக்கத்துக்கு பதிலாக, பாரத் மாதாகீ ஜே என்று முழக்கமிட்டதன் மூலமாகத் தங்களுடைய எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவுசெய்தார்கள். தாங்களும் தமிழர்களும் அந்நியர்கள் என்கிற தங்கள் புரிதலையும் வெளிப்படுத்தினார்கள்.
இந்திய நாடாளுமன்றத்தில் இப்படி எத்தனையோ தடவை தமிழக உறுப்பினர்கள் ‘இந்தியப் பொதுப்போக்குக்கு’ மாறாக, தேசிய மையநீரோட்டத்துக்கு எதிராக தங்கள் கருத்துகளை ஒலித்ததுண்டு. அறிஞர் அண்ணா சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய அறுபதுகளின் தொடக்கம் முதல் இது நடந்துவருகிறது. இந்தி எதிர்ப்பு, ஈழம், இட ஒதுக்கீடு என பல முக்கியமான கோரிக்கைகளில் தமிழக உறுப்பினர்கள் தன்னந்தனியாக குரல் கொடுத்திருக்கிறார்கள். ஈ.வெ.கி.சம்பத், இரா.செழியன், வைகோ, திருச்சி சிவா, சமீபத்தில் கனிமொழி (முற்பட்டோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில்) என இந்தப் பட்டியல் நீண்டது. ஆனால் இப்போது அனைவரின் கவனமும் ஈர்க்கப்பட்டிருந்ததற்கு காரணங்கள் இருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் காட்டிய தனித்துவம் ஒரு முக்கியமான காரணம் என்றால். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிகவினர் என அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த தமிழக உறுப்பினர்கள் ஒரே நாளில் ஒரேமாதிரி முழங்கினார்கள் என்பது அதைவிட சிறப்பான காரணம். (ஒரே விதிவிலக்கு ஓ.பி.எஸ்.ஸின் புதல்வர்).

இது ஏன் இப்படி நடக்கிறது? மனுஷ்ய புத்திரனின் பாணியில் சொல்வதென்றால், ‘என்னமாதிரியான இந்தியாவில் நாம் வாழ்கிறோம்?’
*
இந்தியா என்றால் என்ன? தமிழர்களின் இந்தியாவும் ஹிந்தியர்களின் இந்தியாவும் உலகத்தின் இந்தியாவும் ஒன்றே அல்ல என்கிற அளவில் மட்டுமே இந்தியா என்றால் என்ன என்ற கேள்விக்கு விடைதரமுடியும். வரலாற்றினூடாக வரையப்பட்ட இந்தியச் சித்திரம் ஒரேமாதிரியான கோடுகளாலும் வண்ணங்களாலும் தீட்டப்படவில்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் புதிய இந்தியாவின் மீது தமிழர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். காந்தியும் நேருவுமே இங்கே கடவுளர்களாக இருந்தார்கள். திராவிட இயக்கத்தின் திராவிட நாடு கோரிக்கைகூட கால ஓட்டத்தில் கரைந்துபோகிற அளவுக்கு இந்தியம் தமிழகத்தை ஆட்கொண்டது. ‘இந்தியா என் தாய்நாடு, இந்தியர் அனைவரும் என்னுடன் பிறந்தோர்’ என தமிழர்கள் சத்தியமாகவே நினைத்தார்கள்.

திராவிடப் படகில் ஏறியிருந்தாலும் இந்திய மைய நீரோட்டத்தில் பயணித்தார்கள். தொண்ணூறுகளில் கிட்டத்தட்ட அந்த மையச்சுழியில்கூட மாட்டிக்கொண்டு கிறுகிறுத்துப் போனார்கள். மொழியால் தமிழர், இனத்தால் திராவிடர், நாட்டால் இந்தியர் என்கிற வாசகங்கள் இக்கால கட்டத்தில் ஒரு தமிழனின் மூவடையாளங்களையும் வெளிப்படுத்தின அல்லது தமிழனின் அடையாளக் குழப்பத்தை வெளிப்படுத்தின.

தொண்ணூறுகளுக்குப் பிறகு தமிழர்களின் இந்திய தேசபக்தி கரைபுரண்டோடியது. முன்பு தமிழர்கள் தங்களுடைய தேசபக்தியை சீனப் போரின்போது காட்டியதுண்டு. பிறகு ராணுவத்துக்கு கொடிநாள் வசூல் உண்டியல் குலுக்கும்போதும் குஜராத்தில் பூகம்பம் வெடிக்கும்போதும் டெஸ்ட் மேட்ச்சில் இந்தியா ஜெயிக்கும்போதும் அர்ஜுன், – விஜயகாந்த் படங்களைப் பார்க்கும்போதும் அதை அவர்கள் வெளிப்படுத்த தவறியதில்லை. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழர்களுக்கு இந்திய அடையாளம் என்றெல்லாம் ஏதும் பெரிதாக இல்லை. ஆனால் இப்போது அவர்கள் அக்மார்க் இந்தியர்களாக ஆகியிருந்தார்கள். இடைக்காலத்தில் பேசப்பட்ட வடக்கு தெற்கு பேதம் தொண்ணூறுகளில் காணாமல் போயிருந்தது. அதுதான் தெற்கு ஜொலித்துக்கொண்டிருந்ததே!

ஆனால், இந்தி வட்டாரம் என்று இப்போது அழைக்கப்படும் இந்துஸ்தானத்து இந்தியர்களைப் பொறுத்தவரை, தெற்கைப் பற்றிய அவர்களது பார்வையில் ஒரு துளியும் மாறியதாகத் தெரியவில்லை. தமிழர்கள் இந்தி படிக்காமல்போனது குறித்து நூறாண்டுகளுக்கு முன்பு காந்தி கடிந்துகொண்டார். இன்றும் அந்த கடிந்துகொள்ளுதல் தொடர்கிறது. முதல் மக்களவை தொடங்கி பதினேழாவது மக்களவை வரை ஒரு உத்தரப்பிரதேச உறுப்பினரின் போக்கு மட்டும் மாறவே இல்லை. இடையில் முழு இந்தியர்களாக மாறியிருந்த தமிழர்கள்தான் திடீரென்று இப்போது அடையாளச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

தன்னை நாடிவந்த தமிழ்க்குழந்தைகளை தமது குழந்தைகளாக ஏற்றுக்கொள்வதில் பாரத் மாதாவுக்கு என்ன தயக்கமோ, தமிழ்க் குழந்தைகள் தனியாகவே விடப்பட்டுவிட்டன. ஆனால் அதன் காரணமாக இந்திய தேசியம்தான் தமிழ்நாட்டில் படுதோல்வி அடைந்துவருகிறதே தவிர, தமிழ்க் குழந்தைகள் அனாதை ஆகவில்லை. அதனால்தான் திமுக, விசிகவினர் மட்டுமல்ல அனைத்திந்தியவாதிகளான காங்கிரஸ்காரர்களும் கம்யூனிஸ்ட்டுகளும்கூட தமிழ் முகத்தையே நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டியதாயிற்று.

தமிழ் வாழ்க என்கிற முழக்கத்துக்கு எதிராக பாரத் மாதாகீ ஜே என்று குரலெழுப்பியவர்களை நீங்கள் இந்துத்துவாதிகள் என்று முத்திரை குத்திவிடலாம். ஆனால் சங் பரிவாரத்தினர் மட்டுமல்ல, வடக்கு, மத்திய இந்தியாவைச் சேர்ந்த பெரும்பாலானோரின் மத்தியில் இந்தியாவைப் பற்றிய சித்திரம் ஒரு சங்கியின் சித்திரத்திலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கிறது என்று கூறமுடியாது.

இடது, வலது மற்றும் நடுவாந்தர லிபரல்கள் மட்டுமே இந்தியாவை ஒரு பன்மைத்துவம் வாய்ந்த நாடு என்றெல்லாம் கூறுகிறார்கள், ஐடியா ஆஃப் இந்தியா என்றெல்லாம் அளக்கிறார்கள். ஆனால் சாதாரண வட இந்திய அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை – அவர்கள் இடது, வலது மற்றும் நடுவாந்திரப் பிரிவுகளில் எதைச் சார்ந்திருந்தாலும் – இந்தியா என்பது இந்தி பேசும் பிரதேசங்களும் சற்றே மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் போன்ற அவர்களுடைய எல்லைப்புற மாநிலங்கள் மட்டும்தான். தென் மாநிலங்களோ வட கிழக்கு மாநிலங்களோ இந்தியா அல்ல. மத்திய மாநிலங்களில் உள்ள கோண்டிகள் போன்ற திராவிடப் பழங்குடிகளின் பகுதிகள்கூட அவர்கள் அறியாத ஒன்றுதான். பிறகு, காஷ்மீரைக் கேட்பானேன்!நேரு காலத்தில் அவரது அமைச்சரவையிலேயே இருந்த ஒருவர் இந்துஸ்தானப் பகுதியின் ஆதிக்கம் குறித்து கடுப்பாகி இவ்வாறு கூறியிருந்தார்: India, that is Bharat, that is Uttar Pradesh. கூறியவர் யார் என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்: இன்றைய பாஜகவின் தாய் அமைப்பான பாரதிய ஜனசங்கத்தை நிறுவியவரான சியாமா பிரசாத் முகர்ஜி!

இந்தியா என்பது அடிப்படையில் ஒரு புவியியற் சொல். அதை தேசத்தின் பெயராக ஆக்கவேண்டும் என்று நூறாண்டுகாலமாக முயற்சி செய்துவருகிறார்கள். ஆனால் அப்படி மாற்ற நினைப்பவர்களின் சுயநலமே அதற்கு எதிராக இருக்கிறது. இந்தியா என்பது ஐரோப்பா, ஐபீரியா, அமெரிக்காபோல ஒரு நிலத்துண்டின் பெயர். ஆனால் நிலப்பெயர் தேசப்பெயராக மாறுவது எளிதல்ல. ஒரு ஜெர்மானியர் ஒரே சமயத்தில் ஜெர்மானியராகவும் ஐரோப்பியராகவும் இருக்கமுடியும். அதைப் போலவே ஒரு வங்காளி ஒரே சமயத்தில் வங்காளியாகவும் இந்தியராகவும் இருக்கமுடியும். அதாவது இந்தியா என்பது நிலப்பெயராக மட்டுமே இருக்கும்போது இது சாத்தியமாகிறது. ஆனால் அந்த வங்காளி வங்காள தேசத்தில் இருந்தால் அவருக்கு இந்தியா என்கிற புவிசார்ந்த சொல் அர்த்தமற்றதாகிவிடுகிறது. ஏனென்றால் நீங்கள் நிலப்பெயரையும் தேசப்பெயரையும் போட்டுக் குழப்பிவிட்டீர்கள்! அவர் ஒரு வேளை தன்னை தெற்காசியர் என்று அழைத்துக்கொள்ளக்கூடும்.
தெற்காசியாவை இந்தியா என்றழைக்கும் ஐரோப்பிய பார்வையினால் எழுந்த விபத்துதான் தெற்காசியத் துணைக் கண்டத்திலிருக்கும் எல்லோரையும் இந்தியர்கள் என்று கூறத்தொடங்கியது. ஒரு காலத்தில் சிந்து நிதிக்கு இப்பாலிருந்த பகுதிகள் அனைத்தும் இந்தியாவாக கருதப்பட்டது. பிரிட்டிஷாரின் தொடக்க காலத்தில் பர்மாவும் இலங்கையும்கூட இந்தியாவின் பகுதிகளாக இருந்தன.

இந்தியா என்பது புவிப்பகுதியாக மட்டுமே கருதப்பட்ட அக்காலத்தில் இந்தியாவை ஒட்டிய மாகடல் இந்தியப் பெருங்கடலாக அழைக்கப்பட்டது.சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆசிய பெருங்கண்டத்தில் மேற்காசியா, கிழக்காசியா, மத்திய ஆசியா தவிர்த்த தெற்கு மற்றும் தென்கிழக்காசியப் பகுதியின் மேற்குப் பகுதி ஆகியவை இந்தியப் பகுதியாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தன. தெற்காசியா ‘ப்ராப்பர் இந்தியாவாக‘ அறியப்பட்டது. தென்கிழக்காசியாவின் சாவக, சுமத்ரா தீவுகளை அடங்கிய ஒரு பெருந்தீவுக்கூட்டம் ‘இந்தோனேஷியா’வாகவும் தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், லாவோஸ் அடங்கிய பகுதி ‘இந்தோ’ சீனாவாகவும் (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட பகுதி) அறியப்பட்டது.

ஆனால் மேற்குலகத்தால் இந்தியா என்றழைக்கப்பட்ட ஒரு துணைக்கண்டத்தின் முழு பரிமாணங்களையும் அசல் இந்துஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் அறிந்திருக்கவில்லை. குப்த, ஹர்ஷ, சுல்தானிய, முகலாய அரசுகளின் மையப்பகுதியாக இருந்துவந்த ஆரிய வர்த்தம் என்கிற இந்துஸ்தானத்தைப் பொறுத்தவரை இந்தியா என்பது தங்களுடைய கங்கைச் சமவெளிப் பகுதியையும் அதைச்சுற்றியுள்ள சில பிரதேசங்களையும்தான் குறிக்கிறது. தில்லி சுல்தான்களின் ஆட்சிக்காலத்திலிருந்து இந்துஸ்தான் என்ற சொல் சில சமயம் இன்றைய இந்தி வட்டாரத்தையும் சில சமயம் ஒட்டுமொத்த இந்தியத் துணைக்கண்டத்தையும் குறிக்கிற சொல்லாக இருந்தாலும், கங்கைவெளி மனிதனைப் பொறுத்தவரை அவனது இந்துஸ்தான் என்பது இன்றைய இந்தி வட்டாரமே.
எனவே இந்துஸ்தானிகளின் ஐடியா ஆஃப் இந்தியாவும் மெகஸ்தனிஸ் தொடங்கி மேலைநாட்டவர் கற்பித்துவந்த ஐடியா ஆஃப் இந்தியாவும் இன்று தில்லி-பாம்பே லிபரல்கள் ஓயாமல் அரற்றும் ஐடியா ஆஃப் இந்தியாவும் ஒன்று அல்ல.

எது எப்படி இருந்தாலும் இந்துஸ்தானம்தான் இந்தியாவின் மையம் என்கிற மையவாதக் கோட்பாடு மாறியதில்லை. எது எப்படி இருந்தாலும் தமிழ்நாடும் காஷ்மீரும் மணிப்பூரும் அதன் ஓரத்தில்தான் இருந்தாகவேண்டும். இன்றும் இந்திய ஊடகங்களைப் பொறுத்தவரை இந்தி வட்டாரம்தான் ஹார்ட் ஆஃப் இந்தியா அல்லது ஹிந்தி ஹார்ட்லேண்ட். தமிழ்நாடுdown southஇல் இருக்கிறது!

இந்த இந்துஸ்தானத்து பார்வையை இந்துஸ்தானத்துக்கு வெளியேயுள்ள துணைக்கண்ட இனங்கள் ஏற்றுக்கொண்டன என்று சொல்வதற்கில்லை. துல்லியமாகச் சொல்லப்போனால் தீபகர்ப்பத் தெற்காசியா (Peninsular South Asia) பகுதியைச் சேர்ந்த, மொழி ரீதியில் அடையாளப்படுத்தப்படுவதானால் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த தேசிய இனங்களைக் கொண்ட ‘தென்னாட்டைப்’ (தென்னிந்தியா அல்ல!) பொறுத்தவரை இந்தியா என்பது சற்றே வித்தியாசமானது. அது இந்தியத் துணைக்கண்டத்தைத்தான் குறிக்கிறது என்றாலும் அதற்கென ஒரு தனிச்சிறப்பான தெற்கத்திய நோக்கு நிலை இருக்கிறது. வடக்கு தெற்கை முழுமையாக ஏற்காமலிருப்பதைப் போலவே தெற்கும் வடக்கை முழுமையாக ஏற்றதில்லை.

தமிழர்களிடத்தில் இந்தியா முன்பு நாவலந்தீவு, ஜம்புத்தீவு போன்ற பெயர்களால் அறியப்பட்டிருந்தது. “பெருநாவைத் தீவினிலே இருநாடுண்டு அவைகளிலே திருநாடாம் தமிழ்நாடு என் தாய்நாடு” என்று பாரதிதாசன் வரையறுத்தபோது நாவலந்தீவு, நாவலம் தண்பொழில் என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்தியத் துணைக்கண்ட நிலப்பரப்பில் தமிழ்நாடு வேறு, நாவைத் தீவிலுள்ள பிறநாடுகள் வேறு என்று ஒரு புரிதல் வெளிப்பட்டது. இந்தப் புரிதல், “திகழ் பரதக் கண்டமதில் தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல்திருநாடும்” என மனோன்மணியனார் பாடிய புரிதலிலிருந்து வேறுபட்டது. தங்களது ஜம்புத்தீவு பிரகடனத்தில் மருது பாண்டியர்கள் குறிப்பிட்ட அந்த ஜம்புத்தீவும் இந்தியத் துணைக்கண்டத்தைத்தான் குறிக்கிறது. நாவலந்தீவும் பரத கண்டமும் ஜம்புத்தீவும் ஒருபோதும் இந்தியா என்றொரு தேசத்தைக் குறிக்கவில்லை, நிலப்பரப்பைக் குறித்தன.

‘வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்’ என்ற புறநானூற்றுவரிகள் சங்க காலத்திலிருந்தே இத்துணைக்கண்டம் குறித்த ஓர்மையைத் தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கிறது. ஆனால் அந்த அறிதலுக்கு அப்பாற்பட்டு அவர்களுடைய நாடு என்பது தமிழ்நாடாகத்தான் இருந்தது. ‘வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகமாக, ‘அது இருந்தது. இமயத்துக்கும் குமரிக்கும் இடையிலான நிலப்பரப்பின் தன்மை வேறு, வேங்கடத்துக்கும் குமரிக்கும் இடையிலான நிலப்பரப்பின் தன்மை வேறு. முன்னது புவியியலைச் சார்ந்தது, பின்னது வரலாற்றைச் சார்ந்தது. முன்னதன் வரலாற்றோடு பின்னதன் வரலாறு அவ்வப்போது மோதியதுண்டு.
பண்டைய புரிதல் அப்படி இருந்தாலும், நவீன தமிழ் மனத்துக்கு இந்தியா என்கிற அரசியல் வடிவம் ஐரோப்பியர் காலத்தில் உருவானதும் உண்மைதான். நவீன இந்தியா என்பது தெற்கு அல்லது கடலோரப் பகுதி மக்களின் மூலமாக காலனியம் உருவாக்கிய ஒரு கருத்தாக்கம்தான். நவீன இந்தியா முதலில் மெட்ராஸ் பாம்பே கொல்கட்டாவில்தான் உருவானது. டெல்லி லக்னோ லாகூரில் அது இந்துஸ்தானாகவும் பாகிஸ்தானாகவும் உருமாறியது.பிரிட்டிஷ் காலத்திலேயே, இந்தியர் என்கிற அடையாளத்தில் நுழைய மறுத்த காஷ்மீரிகள், நாகாக்கள் போன்ற ஒரு சில இனத்தவர்கள் தவிர, மற்றவர்கள் இந்தியர் என்கிற அடையாளத்தைப் பெரிதும் தவிர்க்காமல் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் நவீன இந்தியாவில் தங்களுக்கு கிடைக்கும் இடம் ஓரத்தில் என்பதைப் புரிந்துகொண்டார்களா என்பது பெரிய கேள்விதான்.

தில்லி மையமாகவும் சென்னையும் கொல்கத்தாவும் திமாபூரும் ஸ்ரீநகரும் ஓரங்களாகவும் ஆன உண்மை வரலாறு இப்போதுதான் முன்போதையும் விட அதிகம் வெளிப்படுகிறது. இந்த வரலாற்றைப் பாடமாக படிக்கும் கோடிக்கணக்கான துணைக்கண்ட மாணவர்கள் தங்களுடைய இடம் மையத்திலிருக்கிறதா ஓரத்திலிருக்கிறதா என்பதை அறிந்துகொள்வது சுலபம்தான். மையத்திலிருந்து வருகிற இளைஞர்கள்தான் Quora சமூக இணையதளத்தில் இவ்வாறெல்லாம் கேள்வி கேட்கமுடியும்: What are 5 facts that can prove Hindi is better than the Tamil language? Why aren’t Tamil people interested in Hindi? What will happen if someone speaks Hindi to a Tamilian in Tamilnadu? What do people who speak Hindi feel being in TamilNadu? Is it scary out there? Why do Chennai people hate Hindi? அதற்கு பதில் சொல்ல வருபவர்கள் ஓரத்திலிருந்து வருவார்கள்.

ஒரு இந்துஸ்தானிக்கு தமிழர்கள் இந்தியை ஏற்கமாட்டார்கள் என்கிற எண்ணமே ஆச்சரியமாகவும் புரிந்துகொள்ளமுடியாத ஒன்றாகவும் எரிச்சலானதாகவும் கோபத்தை உருவாக்குவதாகவும் முட்டாள்தனமாகவும் தேசத்துரோகமாகவும் தெரிகிறது. இந்த நினைப்பு எங்கிருந்து வருகிறது?

இது பெரும்பான்மைவாதம், மேலாதிக்கவாதம் மட்டுமல்ல, இது சாம்ராஜ்யவாதம், மையவாதம். இதுதான் இந்தி பேசாத மக்களையும் இந்தி பேசும் மக்களையும் இப்போது இரு கூறாகப் பிளந்திருக்கிறது. முதலில் மதப்பிளவை நம்பியிருந்த சங்கிகள் இப்போது இந்த மொழிப்பிளவையும் கூடுதலாக நம்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் இந்துஸ்தானை இந்திஸ்தானாகவும் ஆக்குவதில் உள்ள பலனை அறிவார்கள். இந்திப் பேரினவாதம் என்ற ஒன்று உருவாக்கப்படுகிறது என்றே தோன்றுகிறது.

ரஷ்யர்கள், துருக்கியர்கள், சீனர்கள் போல சாம்ராஜ்யவாதத்திலிருந்து தேசியவாதத்தை உருவாக்க நினைக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை எந்த ஒரு தேசிய இனத்தின் நிலத்தையும் தன் தாயகமாக பார்க்கமுடியாத நிலையிலுள்ள பார்ப்பனர்களும் எல்லாத் தேசிய இனங்களின் நிலத்தையும் தன் சந்தையாக பார்க்கும் வர்ணாசிரம அதிகாரமுள்ள பனியாக்களும் இணைந்தே இந்திய தேசியத்தை உருவாக்கினார்கள். இதன் விசித்திரமான விளைவாக, குஜராத்திகள், ராஜஸ்தானிகள் போன்ற இந்தி அல்லாத இனங்களைச் சேர்ந்த பனியாக்கள் மிகமோசமான இந்தி வெறியர்களாக ஆகிறார்கள். சாராம்சத்தில் முழுக்க ஆங்கிலத்தை நாடிச்சென்றுவிட்ட வட இந்திய பார்ப்பன, பனியா சமூகத்தவர்கள் அரசியலில் இந்தியை மிகப்பெரிய ஆயுதமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால் இந்தியை இரண்டாம் மொழியாக பேசும் போஜ்புரிகளும் பகேலிகளும் தங்கள் மொழிகளுக்கு உயிர்கொடுக்க முயல்கிறார்கள். இந்தியை அயல் மொழியாகப் பேசும் குஜராத்திகள் மிகப்பெரிய இந்தி வெறி ஆட்டத்தை ஆடுகிறார்கள்.
*
இந்திய கலாச்சாரம், இந்திய சமூகம், இந்தியவியல், இந்தியக் கலை, இந்திய இலக்கியம், இந்திய சினிமா, இந்திய நாடகம், இந்தியக் கவிதையியல், இந்திய நுண்கலைகள், இந்திய மதங்கள், இந்தியத் தத்துவம், இந்திய அழகியல் என தில்லி முன்வைக்கிற அனைத்துமே பெரும்பாலும் இந்துஸ்தானத்து அம்சங்களையே பிரதானப்படுத்துகின்றன. அதற்கு வெளியே என்றால் பார்ப்பனீய மரபுகளை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்றன. தமிழ் / திராவிட அடையாளங்களும் முண்டா அடையாளங்களும் வட கிழக்கு மக்களின அடையாளங்களும் இந்த ‘இந்தியப் பட்டியல்களில்’ வருவதில்லை. (சில சமயம், தங்களுடைய இந்திய ஐடியாவை சிலாகிக்கும் பன்மைத்துவ அறிவுஜீவிகள் விதிவிலக்காக இவற்றைச் சேர்த்துக்கொள்வார்கள்).

உண்மையில் ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் இந்துஸ்தானத்துப் பகுதியைச் சேர்ந்த ஒருவராக அவர் இருக்கிற பட்சத்தில் அவருக்கு தமிழ் என்பது அந்நியமானது. நேருவை எடுத்துக்கொள்ளுங்கள். கண்டறிந்த இந்தியா என்கிற அவரது புகழ்பெற்ற நூல் இந்திய வரலாறு என்று கூறி 90 சதவீதம் இந்துஸ்தானத்தின் வரலாற்றையே விவரிக்கிறது. பண்டைய தமிழகத்தின் அல்ல, பண்டைய தென்னிந்தியாவின் வரலாறே அவருக்கு ஒரு சில பத்திகளில் முடிந்துவிடக்கூடிய விவகாரமாக இருந்திருக்கிறது.

நேரு இந்தியாவின் பன்மைத்துவம் குறித்து பெருமை பேசுபவர். ஒருபக்கம் ஆப்கானிஸ்தானத்து பத்தானையும் மறுபக்கம் தமிழனையும் நிறுத்தி, இந்த இரு கடைக்கோடி மனிதர்களுக்கு நடுவே இந்தியாவின் எல்லா இனங்களையும் சேர்ந்தவர்கள் இருப்பதாக அவர் பெருமிதம் கொள்கிறார். எந்தப் புள்ளியிலிருந்து நின்று பார்த்தால் தமிழர்களோ பத்தானியர்களோ கடைகோடியில் நிற்பதாகத் தெரிகிறதோ அந்தப் புள்ளிதான் இந்துஸ்தானம். நேருவியத்தின் நங்கூரம். அவரால் பத்தானியர்களை இந்தியாவுக்குள் வைத்திருக்க இயலவில்லை என்பது வேறு விஷயம். தமிழர்கள் மட்டும் தங்கள் பிள்ளைகளுக்கு நேரு என்றும் இந்திரா என்றும் ஆயிரக்கணக்கில் பெயர் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஜவஹர்லால் நேரு மட்டுமல்ல, இந்தியாவின் – அதாவது இந்துஸ்தானத்தின் – எந்த ஒரு அறிவுஜீவிக்கும் தமிழ்நாடு ஒரு கடைகோடிப் பிரதேசம். நவீன இந்தியாவின் சிற்பிகள் என்று கருதப்படுகிற ராஜா ராம்மோகன்ராய், கோபாலகிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோரின் அறிவுப்பரப்பில் தமிழ்ச் சிந்தனைகள் என்பவற்றின் தாக்கங்கள் ஏதேனும் உண்டா? இருந்திருக்க வாய்ப்பில்லை. அதைக் குற்றமாகவும் கூறவில்லை. அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருக்காது என்பதைப் பரிபூரணமாக ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் தமிழ் அல்லது முண்டாவின் மனப்பான்மைகளை அறியாமல் அவர்கள் எப்படி ஒரு நவீன இந்திய மனநிலையை உருவாக்கிவிடமுடியும்? அப்படியென்றால் அவர்கள் உருவாக்கியது நவீன இந்துஸ்தானத்து மனநிலையைத்தான். கோகலே ஒரு மராத்தியர் என்பதும் தாகூர் ஒரு வங்காளி என்பதும் அதை மாற்றிவிடாது. இந்தியப் பன்மைத்துவத்தைப் பற்றிக் கூறும் லிபரல்கள் இந்தக் கண்ணோட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், அம்பேத்கர் என விரியும் இந்திய தேசியவாத மரபில் தமிழ் அபிப்பிராயத்துக்கு என்ன இடம் இருந்தது என்பதைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார்களா?

காந்தி ஒரு விதிவிலக்கில்லையா என்று கேட்கலாம். இல்லை. தென்னாப்பிரிக்காவில் சாமி நாகப்பன் படையாச்சிகளையும் தில்லையாடி வள்ளியம்மைகளையும் கொண்டு சத்தியாகிரகம் நடத்தியவரான அவர் தமிழிலேயே தன் கையெழுத்தைப் போடக்கூடிய அளவுக்கு தமிழ் படித்தவர். அது மட்டுமல்ல,அவரது அகிம்சா கண்ணோட்டத்தை உருவாக்கியதில் மிகப்பெரிய பங்கு வகித்த லியோ டால்ஸ்டாயின் இந்துவுக்கு கடிதங்கள் என்கிற படைப்பினூடாக அவர் திருக்குறளையும் அதிலும் குறிப்பாக ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிற குறளையும் கண்டறிந்தவர். அவரது உலகப்பார்வையை உருவாக்கியதில் அந்த குறள்களுக்கு பங்கிருந்தது. இந்திய தேசிய இயக்கத் தலைவர்களில் பிறரைவிட அவர் மட்டுமே சிறிதேனும் தமிழ்நாட்டைப் பற்றி கூடுதலாக அறிந்தவர். ஆனால் அவரால் ஒருபோதும் வைதிக மரபுக்கு அப்பாற்பட்டதாக அந்தத் திருக்குறளை தரிசிக்கமுடிந்ததில்லை.இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்துஸ்தானி இருக்கவேண்டும் என்று அவர் கூறியபோது அவருக்கு தமிழ் என்கிற மொழி நினைவுக்கே வந்திருக்காது. அவர் மதங்களின் விஷயத்தில் மட்டுமே சார்பற்றவர். நேருவைப் போல.

இந்துஸ்தானத்தின் வரலாற்றாசிரியர்கள் பார்வையில் தெற்கு எப்போதுமே சிக்கலான, சவாலான எல்லாவற்றையும்விட சந்தேகத்துக்கிடமான, அதைவிட அதிகமாக போட்டிக்குரிய ஒன்றாக இருந்துவருகிறது. தொல்லியல் துறையிலிருந்து இதற்கொரு சான்று.

வடக்கின் தொன்மை குறித்த முடிவுகளுக்கு எந்த நேரத்திலும் தெற்கிலிருந்து ஒரு சவால் வருவதை அவர்களால் ஏற்கமுடிவதே இல்லை. இதை வேறெந்த இடங்களிலும்விட அகழ்வாராய்ச்சி நடக்குமிடங்களில் பார்க்கலாம். வேதங்களுக்கும் ஆரிய தொன்மைக் கோருதல்களுக்கும் காட்டப்படுகிற நேசமிகு நெகிழ்வான பார்வை தமிழுக்கும் தமிழ்த் தொன்மை குறித்த கோருதல்களுக்கும் காட்டப்படுவதே கிடையாது. சிந்துவெளி நாகரிகம் குறித்த தமிழறிஞர்களின் கோருதல்கள் எவ்வாறு பார்க்கப்பட்டன என்பது ஆய்வுக்குரிய ஒரு விஷயம்.

நீண்ட காலமாகவே சிந்துவெளி நாகரீகம் தமிழர் நாகரீகம் என்றொரு கருத்து தமிழ்நாட்டில் நிலவி வந்திருக்கிறது. முழுமையான சான்றுகள் இல்லாமல் இவ்வாறு சொல்கிறார்கள் என்கிற ஒரு குற்றச்சாட்டின்கீழ் இந்தக் கோருதல்கள் அனைத்துமே அதிகாரபூர்வ இந்திய வரலாற்றாய்வாளர்களால் நிராகரிக்கப்பட்டுவந்துள்ளன. தமிழறிஞர்கள் முன்வைத்த பல கருத்துகள் முழுமையான சான்றுகள் அற்றவை என்பது உண்மைதான். என்றாலும் அவற்றினூடாக முன்வைக்கப்பட்ட சில கூறுகளில் உண்மையைக் கண்டறிய உதவும் சமிக்ஞைகளும் இருந்தன. ஐராவதம் மகாதேவன் அல்லது அஸ்கோ பர்போலாவின் முன்மொழிவுகள்கூட சந்தேகக் கண்கொண்டே பார்க்கப்பட்டன. சங் பரிவார சரித்திர நிபுணர்களால் மட்டுமல்ல, நடுநிலை மிக்க கறார்த்தன்மை மிக்க வரலாற்றாசிரியர்கள்கூட இவற்றைக் கண்டுகொண்டதில்லை.

ஆனால் அண்மையில், ஹரியானாவில், ராகிகடி என்ற ஹரப்பா நாகரீகம் சார்ந்த அகழ்விடத்திலிருந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடு ஒன்றின் டிஎன்ஏ சாம்பிளை ஆராய்ந்தபோது அது 4500 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும் மரபணுப் பகுப்பாய்வின்படி மூதாதைத் தென்னிந்திய மரபுக் கூறினைக் கொண்டது(Ancestral South Indian -ASI) என்றும்தெரியவருகிறது. ஹரப்பா நாகரீகம் தொடர்பான இதுவரையிலான ஆய்வுகளிலேயே மிகவும் தீர்மானகரமான ஆய்வு என்று கருதப்படும் இந்த ஆய்வின் முடிவு நம்மூர் தனித்தமிழ்வாதிகளின் கனவை நனவாக்குகிறது என்று புளகாங்கிதம் அடைவதற்காக இங்கே நான் குறிப்பிடவில்லை. ஆனால் தென்னிந்திய வரலாற்றாசிரியர்கள் அல்லது ஆர்வலர்கள் கூறும் ஒரு கருத்து இந்துஸ்தானத்து நிபுணர்களின் நம்பிக்கைகளுக்கு சவால் விடுக்குமானால், அக்கருத்து அவ்வளவு சுலபமாக ஏற்கப்படுவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. ஆனால் வேத காலம் அல்லது ஆரிய தொல்காலம் குறித்த பல கருத்துகள் இதே அளவுக்கு அக்கினிப்பரீட்சைகளை கடந்துதான் வரலாற்று நூல்களுக்குள் நுழைந்திருக்கின்றனவா?
கீழடியும் பொருந்தலும் மற்றும் மேலும் இரு எடுத்துக்காட்டுகள்.

இந்தியச் சூழலில்(!) தெற்கு விரிவாகப் பேசப்பட்டதெல்லாம் அண்மைக் காலத்தில் மட்டுமே. அதுவும் தொண்ணூறுகளுக்குப் பிறகு தொழிற்துறையில் தெற்கு வளர்ந்தபோது, பல பொருளாதார நிபுணர்கள் கேரள அல்லது தமிழ்நாடு மாதிரிகளைப் பற்றி சிலாகித்து எழுதினார்கள். ஆனால் இந்த மாதிரிகள் திடீரென தோன்றிவிடவில்லை என்பதும் அதற்கு தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் சில வரலாற்றுப் பின்புலங்கள் உண்டு என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். அறிந்திருந்தால் தமிழ்நாட்டில் வந்து குஜராத் மாதிரியை விற்க முனைந்திருக்கமாட்டார்கள். கிட்டத்தட்ட மாவட்டத்துக்கொரு அரசு மருத்துவக் கல்லூரி உள்ள தமிழ்நாட்டுக்கு வந்த மோடி, கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, மூன்று மாவட்டங்களுக்கு ஒரு அரசு மருத்துவமனையைக் கொண்டுவருவதே எங்களுடைய இலக்கு என்று முழங்கியபோது, அம்பலமானது அவரது பேச்சை எழுதிய எழுத்தாளரின் பொது அறிவு மட்டுமல்ல, இந்துஸ்தானத்து அறியாமை.

தேசிய ஊடகங்கள் எனப்படுபனவற்றின் பார்வை அதிவிசேடமானது. அவர்கள் எப்போதுமே தமிழ்நாட்டை மேலிருந்து கீழ்நோக்கியே பார்ப்பார்கள். ஏனென்றால்UP COUNTRY MAGAZINEக்கு அது ஒரு DOWN SOUTH STORY. தமிழ்நாட்டின் அரசியல் என்பது சினிமாக்காரர்கள் அல்லது குடும்ப அரசியலின் கதை மட்டுமே. பத்து நெகட்டிவ் கட்டுரைகள் வந்தால், ஒரே ஒரு பாசிட்டிவ் கட்டுரை வரும். அது கர்நாடக சங்கீதம் அல்லது மணிரத்னங்கள் பற்றியதாக இருக்கும். சாம்ராஜ்யவாதம் என்பது மோடி, அமித்ஷாவின் மனங்களில் மட்டுமே இல்லை. தில்லியில் உள்ள ஒவ்வொரு மீடியா காரரின் மனத்திலும் அறிவுஜீவியின் மனத்திலும் ஒவ்வொரு வலதுசாரியிடமும் ஒவ்வொரு இடதுசாரியிடமும் இருக்கிறது.

ஜல்லிக்கட்டும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டமும் அவர்களைப் பொறுத்தவரை தமிழ் கௌரவம் (Tamil Pride) தொடர்பான பிரச்சினை மட்டுமே. அதற்குப் பின்னாலுள்ள அரசியல் பொருளாதார நுணுக்கத்தையும் முடிவெடுக்கும் உரிமை குறித்த பிரச்சினையையும் அவர்கள் அறியமாட்டார்கள் அல்லது அறிய விரும்பமாட்டார்கள். வடக்கு மற்றும் மேற்கிந்திய நகர்ப்புற சாவர்ண மனநிலைதான் இன்றைய இந்தியாவின் மனநிலை. அது ஒருபோதும் நமது நாடாளுமன்ற உறுப்பினரின் தமிழ் வாழ்க என்கிற முழக்கத்தை உணர்ந்துகொள்ளாது. தமிழர்களின் குறுகிய மனப்பான்மையை அவர்கள் வசைபாடுவார்கள் அல்லது தமிழர்களுக்கு எப்படிப்பட்ட மொழிப்பற்று பார்த்தீர்களா என்று புகழவும் செய்வார்கள். ஆனால் அந்த முழக்கத்துக்குப் பின்னாலுள்ள அரசியலைப் புரிந்துகொள்ளும் சக்தி அவர்களுக்கு கிடையவே கிடையாது.

பிரிட்டிஷ் இந்தியாவின் அதிகாரம் தில்லிக்கு கைமாறியபோது, அது நவீன ஜனநாயக இந்தியாவின் கையில் அல்லாமல், பழைய சாம்ராஜ்ய இந்தியாவின் புதிய அவதாரத்தின் கைக்கு மாறியது. அப்படி மாற்றியவர்கள் அன்றைய சாவர்ணர்கள். எல்லாத் தேசிய இனங்களிலும் வாழும் பிராமண வர்ணத்துக்கு இந்தியா ஒற்றை அதிகார அலகாக இருப்பது தேவைப்பட்டது. உள்ளூர் முதலாளிகளை ஒழித்துக்கட்டிவிட்டு அனைத்திந்திய. முதலாளித்துவத்தை வளர்க்க விரும்பிய பனியா வர்ணத்தவர்க்கும் இந்த வியூகமே உகந்ததாக இருந்தது. இந்த பார்ப்பன – பனியா கூட்டு என்பது தில்லி- பாம்பே கூட்டணியாகவும் வடக்கு – மேற்கு கூட்டணியாகவும் ஆனது. அந்த கூட்டணியின் விஸ்வரூபம்தான் இன்றைய மோடியின் ஆட்சி.

எனவே பல்வேறு மாகாணங்களிலும் சமஸ்தானங்களிரும் முகிழ்த்துவந்த தேசிய இன ஓர்மைகளுக்கு மாறாக ஒற்றை இந்தியா கற்பிதம் செய்யப்படுவது என்பது ஆச்சரியமல்ல. எல்லா இசங்களையும் சேர்ந்த சாவர்ணர்கள் இணைந்து ஒன்றுசேர்ந்து அந்த கற்பித்தை செய்தார்கள். ஆனால் அந்த இந்தியச் சட்டகத்துக்குள் அடங்காத சில தேசங்களும் இருந்தன.

சாவர்ண கற்பிதத்துக்கு வெளியே ஒரு சுதந்திரமான தேசக்கனவை தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் தமிழ்நாட்டில் உருவாக்கியிருந்தார்கள். அக்கனவு தமிழ்நாட்டை உலக நாடுகளின் வரிசையில் வைத்தெண்ணக்கூடிய கனவாக இருந்தது. இந்துஸ்தானோ தமிழ்நாட்டை காலனியாக பார்க்கவிரும்புகிறது. அந்த கொடுங்கனவை தமிழ்நாடு கலைக்கிறது. அதனால்தான் தமிழ் வாழ்க என்கிற முழக்கம் அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது.