இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தேர்தலை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் எதிர்காலமும் அதன் அடிப்படை ஜனநாயக விழுமியங்களும் காப்பாற்றப்படுமா என நிர்ணயிக்கும் தேர்தல். இந்தத் தேர்தல் இந்திய ஜனநாயகத்தின் வாழ்வா சாவா போராட்டத்தினுடைய ஒரு களம். இந்தத் தேர்தல் மூலமாக இந்தியர்கள் ஐந்து ஆண்டுகால மோடியின் ஆட்சியை மதிப்பிடுவது மட்டுமல்ல; எதிர்காலத்தில் அதிகாரத்தை நிர்ணயிக்கும் உரிமை தங்களுக்கு இருக்கிறதா இல்லையா என நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டிய தேர்தல் இது. ஆம், சில பாஜக தலைவர்கள் சொல்வது போல 2019 தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் இனி இந்தியாவில் தேர்தலுக்கு அவசியம் இருக்காது. அதுதான் அவர்களின் கனவு. அது பாசிசத்தின் கனவு. இந்தக் கனவிற்கு இந்தியா எப்படி எதிர்வினையாற்றப் போகிறது என்பதுதான் இன்று நம் முன்னால் இருக்கக்கூடிய கேள்வி.
இந்தத் தேர்தலில் மோடி ஒரு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அது பாகிஸ்தானுடனான யுத்தமல்ல, பயங்கரவாதத்துடனான யுத்தம் அல்ல. தேசியம், தேசப்பற்று, நாட்டுப் பாதுகாப்பு என்கிற பெயரில் இந்தியர்களின் உளவியல்மீது அவர் இந்த யுத்தத்தை நிகழ்த்தி வருகிறார். மோடி சொல்ல வருவது என்ன? நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது பற்றிக் கவலைப்படாதீர்கள்; கருப்பு பண மீட்பு பற்றிக் கவலைப்படாதீர்கள்; சிறு குறு தொழில்கள் அழிந்தது பற்றி கவலைப்படாதீர்கள்; கோடிக்கணக்கானோர் வேலை இழந்தது பற்றி கவலைப்படாதீர்கள்; சிறுபான்மை மக்கள் தாக்கப்பட்டது பற்றிக் கவலைப்படாதீர்கள்; மாநில உரிமைகள் பறிக்கப்பட்டதே அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். மாறாக, இந்த நாட்டினுடைய பாதுகாப்பு பற்றிக் கவலைப்படுங்கள் என்பதுதான் மோடியின் பிரகடனம்.
கடந்த தேர்தலின்போது அவர் இந்த நாட்டு மக்களுக்கு அளித்த எல்லா வாக்குறுதிகளிலும் தோல்வி அடைந்து விட்டார். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, வெளிப்படையான நிர்வாகம், ஊழலை ஒழிப்பது என அவர் கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாதது மட்டுமல்ல, நாடு வரலாறு காணாத சமூகப் பொருளாதார நெருக்கடிகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடிகளுக்கு முழுப் பொறுப்பு மோடி எடுத்த தன்னிச்சையான முடிவுகள்தான். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஊழியம் செய்வதற்காக இந்த நாட்டின் 120 கோடி மக்களின் நலன்களையும் அவர் காட்டிக் கொடுத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றின் மூலமாக கோடிக்கணக்கான இந்தியர்கள் தெருவுக்கு வந்தார்கள். ஆனால் இந்த நாட்டில் பெருமுதலாளிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மிகப்பெரிய ஆதாயங்களை அடைந்தார்கள். வங்கி மோசடியாளர்கள் சுலபமாக அயல் நாடுகளுக்குத் தப்பிச் சென்றார்கள்.
சௌக்கிதார் என தன்னை அழைத்துக்கொள்ளும் மோடியின் ஆட்சிக் காலத்தில் தேசமாவது பாதுகாப்பாக இருந்ததா என்றால் அதுவுமில்லை. பதான்கோட் விமானப்படைத் தாக்குதல், புல்வாமா தாக்குதல் உள்பட பல பயங்கரவாத தாக்குதல்களை மோடி ஆட்சிக் காலத்தில்தான் இந்தியா சந்தித்தது. பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் உள்ளூர் இந்துத்துவ பயங்கரவாதிகள், தலித்துகளையும் இஸ்லாமியர்களையும் தாக்கினார்கள். மோடி பாகிஸ்தானில் நடத்தியதாகச் சொல்லப்படும் பயங்கரவாத முகாம் மீதான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பொய்யானது என்பதை சர்வதேச ஊடகங்கள் அம்பலப்படுத்தின. அங்கு 300 பேர் இறந்ததற்கு அல்லது வேறு இழப்புகள் ஏற்பட்டதற்கு சாட்சியங்கள் இல்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். மோடி உண்மையில் இந்த நாட்டைப் பாதுகாக்கவும், இல்லை பாதுகாப்பதற்காக அவர் செய்ததாகச் சொல்லப்படும் தாக்குதலிலும் உண்மை இல்லை.
இப்போது எதிரிநாட்டு ஏவுகணையைத் தாக்கி அழிக்கும் வல்லமையை இந்தியா பெற்றிருப்பதாக தேர்தல் விதிமுறைகளை மீறி மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். 2010லேயே இந்தியா செயற்கைக் கோள்களைத் தாக்கி அழிக்கக்கூடிய வல்லமை பெற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு அபிநந்தன் ராணுவ உடையை அணிந்துகொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் என்ற மோடி, இப்போது ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆடையை அணிந்துகொண்டு மேடையில் தோன்றுகிறார். தேர்தல் முடிவதற்குள் இன்னும் அவர் என்னென்ன வேடங்களை அணிய இருக்கிறார் என்பதைக் காண நாடு காத்திருக்கிறது.
உலகம் முழுக்க பயங்கரவாதத் தாக்குதல் அபாயம் இல்லாத நாடு என்று எதுவும் இல்லை. ஆனால் எந்த நாடும் இதுதான் இந்த தேசத்தின் பிரச்சினை என்பதாக முன்வைத்து நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் மூடி மறைக்க முயற்சிப்பது இல்லை. ஆனால் மோடி நாட்டின் பாதுகாப்பு என்கிற விஷயத்தை இடையறாது உச்சரிக்கிறார். எந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கு ஆபத்து? பாகிஸ்தானிடமிருந்தா? அந்த நாட்டின் பிரதமர் நாங்கள் போர் செய்ய மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டார். சீனாவிடம் இருந்தா? இன்று இந்தியா சீனாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கிறது. பிறகு நேபாள் இந்தியாவைத் தாக்கப் போகிறதா? இலங்கை தாக்கப்போகிறதா? வங்கதேசம் தாக்கப் போகிறதா? இந்தியாவிற்கு இப்போது போர் அபாயம் எதுவும் இல்லை என்பதை உலக அரசியல் அறிந்த எவரும் அறிவார்கள். எந்த நாடும் போரை விரும்பவும் இல்லை. போரினால் இழப்பு ஏற்படக்கூடிய பொருளாதார இலக்கிற்கு யாரும் தயாராகவும் இல்லை. இவ்வளவு ஏன் மோடியும் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. அது மட்டுமல்ல; மோடிக்கும் யுத்தம் செய்வதற்கு எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் அத்தகைய ஒரு உளவியல் சூழலை இந்தியர்களுக்கு ஏற்படுத்த முயற்சிக்கிறார். முற்றிலுமாக ராணுவ வலிமை மட்டுமே நாட்டிற்குப் பாதுகாப்பானது என்பது கேலிக்கூத்தானது என்பதை உலக அரசியல் அறிந்த எவரும் அறிவார்கள். எல்லைப் பிரச்சினைகளும் உலகம் முழுக்க இருக்கின்றன. அந்தந்த நாடுகள் அவற்றை சமாதானத்தின் மூலம் தீர்த்துக்கொள்ளப் போராடுகின்றன. இன்னொருபுறம், பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முயல்கின்றன. ஆனால் மோடி மட்டும்தான் எப்போதும் யாருக்கு எதிராகவும் யுத்தம் செய்வது பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். யுத்தத்திற்கான விருப்பம் என்பது ஒரு பாமர உளவியலில் ஆழமான தாக்கத்தைச் செலுத்தக் கூடியது. நீங்கள் பாதுகாப்பற்று இருக்கிறீர்கள், ஆகவே எதிரியுடன் யுத்தம் செய்யுங்கள் என்பது ஒரு புராதனமான மனநிலை. இந்த மனநிலை அரசியல் பார்வையற்றது, கற்பிதங்களால் ஆனது. இந்த மனநிலையைத்தான் மோடி ஊக்குவிக்கிறார், பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். ஹிட்லர் இப்படித்தான் எதிரிகளைப் பற்றிய அச்சத்தை ஜெர்மனியில் மக்கள் மனதில் விதைத்து மிகப்பெரிய இனப்படுகொலை நடத்தியது மட்டும் அல்ல, இரண்டாம் உலகப்போரை நோக்கி உலகத்தையே செலுத்தினார். தங்களைப் பாதுகாக்கக்கூடிய ஒரு வலிமையான தலைவன் என்ற பிம்பத்தை ஹிட்லர் எப்படி கட்டமைத்தாரோ, அதேபோல மோடியும் கட்டமைக்க முயற்சிக்கிறார்.
இந்தியக் கல்வி அமைப்பின் மீது மோடி நடத்திய தாக்குதல்கள் கடுமையானது. உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் பெருமளவு குறைக்கப்பட்டன. நவோதயா பள்ளிகளைப் பரவலாக்குதல் மூலமாக ஹிந்தி திணிப்பு ஊக்குவிக்கப்பட்டது. ஐந்தாம், எட்டாம் வகுப்பு வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது என்ற முடிவின் காரணமாக கிராமப்புற மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்லாமல் இடை நிற்பதற்கான சூழல் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் கல்வித் தரத்தை உயர்த்த மோடி எதுவுமே செய்யவில்லை. மாறாக, தங்கள் கருத்திற்கு ஏற்ப ஒரு கல்விச் சூழலை உருவாக்க ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருக்கும் முயற்சிகள் இந்த ஆட்சிக் காலத்தில்தான் செயல் வடிவம் பெற்றன.
பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளத்தையே முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டன. பண மதிப்பு இயக்கத்தால் இந்தியாவிற்குக் கிடைக்கும் என்று சொல்லப்பட்ட எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த கருப்புப் பணமும் வங்கிகளுக்குத் திரும்பி விட்டது. கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட கருப்பு பணம் ஒட்டுமொத்த பணப்புழக்கத்தில் சுண்டைக்காய் அளவுகூட இல்லை. கள்ளநோட்டு நிலையும் அப்படித்தான். ஆனால் இதற்காக 140 பேர் உயிரிழந்தார்கள், கோடிக்கணக்கானோர் வேலை இழந்தார்கள். பல லட்சம் தொழில்கள் மூடப்பட்டன. இந்தியப் பொருளாதாரத்தின் மீது மோடி நடத்திய இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கின் அடுத்த அத்தியாயம்தான் ஜி.எஸ்.டி. ஒரு நாடு ஒரு வரி என்று சொல்லிக்கொண்டே பல அடுக்கு வரிகளையும் வரலாறு காணாத வரிச்சுமையையும் இந்தியர்கள் மேல் மோடி சுமத்தினார். இந்திய வர்த்தகத்தின்மீது மோடி நடத்திய பயங்கரவாத தாக்குதல் இது என்பது மட்டுமல்ல, மாநிலங்களில் வரி வருவாய் உரிமையின்மீதும் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல். ஆனால் பெட்ரோலியப் பொருள்கள் ஜி.எஸ்.டி.யில் சேர்க்கப்படவில்லை. சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை அதலபாதாளத்திற்குச் சென்றபோதும் இந்தியாவில் மட்டும் கடும் விலையேற்றம். காரணம், அரசு பெட்ரோலியப் பொருள்களின்மீதான வரியை உயர்த்தி மக்களை நேரடியாகக் கொள்ளையடித்தது.
அடுத்ததாக ஜனநாயக அமைப்புகளை அவர் எப்படித் தாக்கி அழித்தார் என்பதுதான் மிக முக்கியமானது. சிபிஐ மோடியின் ஒரு அரசியல் கருவியாக முற்றிலுமாக மாறிப் போனது. ரிசர்வ் வங்கியைச் செயலிழக்கச் செய்து அதன் தன்னாட்சி அதிகாரங்களை நிர்மூலமாக்கினார். திட்டக் கமிஷனைக் கலைத்துவிட்டு மத்திய அரசின் ஏவலாள் போல செயல்படும் நிதி ஆயோக் என்ற டம்மி அமைப்பை உருவாக்கினார். நீதிமன்றங்கள் ரிமோட் கன்ட்ரோலில் இயக்கப்படுகின்றன என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளே ஊடகங்களில் முறையிடும் அளவு நீதிமன்றங்களின் மேல் தலையீடுகள் உருவாக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் மோடி ஆட்சியில் அவருடைய அடியாளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கவர்னர்களின் மூலமாக பாஜக அல்லாத மாநிலங்களின் மீது பெரும் நெருக்கடிகளை மோடி ஏற்படுத்தி வருகிறார். இப்படி மோடி தாக்கி அழிக்காத ஜனநாயக அமைப்புகள் இல்லை. அதனுடைய உச்சகட்டமாக ஊடகங்களில் மோடி ஆட்சியின் ஆதிக்கம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நெருக்கடி நிலை காலத்தின்போது செய்திகள் தணிக்கை செய்யப்பட்டன. ஆனால் இப்போது பெரும்பாலான ஊடகங்கள் மோடியின் பாசிசத்தை நியாயப்படுத்துகின்றன. அதற்கு ஊழியம் செய்கிற பணியில் ஈடுபட்டு இருக்கின்றன.
மோடி அணிந்திருந்த ஊழல் எதிர்ப்பு முகமூடியும் ரஃபேல் விவகாரத்தில் கலைந்து விழுந்துவிட்டது. ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் செய்யப்பட்டிருக்கும் தில்லுமுல்லுகள் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதற்கான முகாந்திரங்கள் தெரிவிக்கின்றன. இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் தேசவிரோதிகள் என்றோ அர்பன் நக்ஸல் என்றோ முத்திரை குத்தப்படுகிறார்கள்.
மோடியின் முறைகேடுகளுக்குத் துணை போவதுதான் தேசபக்தி என்றால் ஒவ்வொருவரும் தேச விரோதியாக இருந்து இந்தத் தேர்தலில் வாக்களிப்பது தவிர வேறு வழியில்லை. இது பாசிச தேச பக்தர்களுக்கும், ஜனநாயக தேச பக்தர்களுக்குமான இறுதி யுத்தம்.