துரிஞ்சி மரங்கள் கோயிலைச்சுற்றி வரிசைகட்டி வளர்ந்திருந்தன. குட்டை மரங்கள்.மணிமணியாய்க் கூட்டிலைகள். ஆழமான கரும்பச்சை. கிளைகளில் அங்குமிங்குமாக தேன்சிட்டுகளின் கீச்சுக்குரல்கள். உள்ளங்கை அளவே கொண்ட தேன்சிட்டின் கூடுகள் துரிஞ்சிக்கிளைகளில் எங்காவது இருக்கலாம்.

கோதண்டராமர் கோயிலைச் சுற்றிலும் காலையிலேயே வெயில் அடர்ந்து கிடந்தது. தொலைவில் தெரிகின்ற செம்பேடு மலை வரைக்கும் விரிந்திருக்கும் செம்மண் நிலங்களை வெள்ளாமைக்காரர்கள் புழுதி ஓட்டி வைத்திருந்தார்கள். அந்தச் செம்மண் புழுதியில் விழுந்து புரண்ட வெயில் முகத்துக்குச் சிவப்புச் சாயம் கட்டிக்கொண்டு எழுந்தது.

அவ்வளவு காலையிலேயே ஊர் கப்சுப்பென்று அடங்கிக்கிடந்தது. சுற்றிலுமிருக்கும் மேட்டுநிலங்களின் நடுநடுவே எழுந்து நின்ற பனைமரங்களின் முரட்டுச் சலசலப்பு இல்லை. ஆவாரஞ்செடிகளும் உண்ணிப்புதர்களுமாகத் தெரிந்தன. கொஞ்சநேரத்துக்கு ஒருக்காய் ஓய்ந்தாற்போல வந்தது தொலைவிலிருக்கும் கிராமங்களில் எழும்பும் சப்தம்.

மேய்ப்புக்குப்போகும் செம்மறிகளின் தும்மல் கிட்டத்தில் கேட்டது. மந்தையை வழிநடத்தும் கிடாயின் கழுத்தில் பெரிய மணி ஒன்று தொங்கி ஓசை எழுந்தது. அந்தக் கிடாய் ஆண்தினவு தாங்காமல் இருந்திருந்து மந்தை ஆடுகள்மீது தாவி இறங்கியது.அதை குறிப்பாய் பார்த்துக்கொண்டே மந்தையை அதட்டி ஓட்டினான் கிழவன்.

எல்லாரும் தன்னை பைத்தியம் என்று சொல்வதை மெள்ள மெள்ள நம்பத் தொடங்கியிருந்த குமரவேல், கோதண்டராமர் கோவில் பிரகாரத்தில் ஒருக்களித்துப் படுத்தபடியே ஆடோட்டிப்போகும் கிழவனைப் பார்த்தான். அவனைக் கடந்து போகும் செம்மறிக்கூட்டத்திலிருந்து அந்த ஆடுகளுக்கே உரிய முசுறுநாற்றம் எழுந்தது.கருங்கல்பட்டிக்குப் போகும்வழியில் நடக்கின்ற ஆடுகளின் ஒலி தடித்தடியாய் கல்மழைச்சரங்கள் விழுவதுபோல பொடுபொடுவென்று நெருக்கமாகக் கேட்டது. ஆடுகள் நடப்பதனால் வழிப்புழுதி எழும்பி குமரவேலின் மூக்கை நிமிண்டியது. அவனுக்குத் தும்மல் வருவதுபோல் இருந்தது.

குமரவேல் கோயில் பிரகாரத்திலிருந்து எழுந்து நின்று திமிர் விட்டு சோம்பல் முறித்தான். கோயில் சுற்றுவழியின் வேலிமரத்தடியில் கிடக்கும் தட்டப்பாறைக்குப்போய் மல்லாக்காகப் படுத்துக்கொண்டு வானத்தை வெறித்தான். நீர்மை உறைந்து படிகத்துண்டுகளாகியிருக்கும் அவன் கண்களில் நடேசனின் உருவம் வந்து நிழலாடியது.வற்றி உலர்ந்து கிடக்கும் உடல் அந்நினைவால் கொஞ்சம் தெம்பைப் பெற்றது.

நடேசனும் அவனுடைய வாலிபக்கூட்டாளிகளும் என்னேரமும் இருப்பது அங்கேதான். அவர்களில் நடேசன் மட்டுமே ஓரளவு படித்தவன் என்பதால் அவன் பேச்சே அங்கு எடுபடும். பத்திரிகைகளில் படித்ததையும், மற்றவர்களிடம் கேட்டதையும், ஊர் நடப்புகளையும் சொல்வான். அவற்றை யாரும் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்றால் அடிப்பான். முரடன் வேறு. சுற்றுப்பக்க கிராமங்களில் ஏதாவது திருடு போனால் அந்தக் கூட்டத்தின்மீதுதான் பிராது வரும்.

தேங்காய்த் திருட்டோ, மாங்காய்த் திருட்டோ எதுவானாலும் அப்படித்தான். ஆனால் அவர்கள் பசிக்கு மட்டுமே திருடுவார்கள். வாழை, வேர்க்கடலை, மக்காச்சோளக் கதிர்கள், எலுமிச்சை, காய்க்கறிகள், கீரை என்று எதையும் கைவைக்காமல் விடுவதில்லை.

தென்னையின் உச்சியிலிருந்து மரத்துக்கு மரம் தாவும் வல்லமைப் பெற்ற நடேசனின் கூட்டாளிகள் இளநீர்க்குலைகளைத் திருடினால், அவன் முன்னால் பத்திருபது எனக் கொண்டுவந்து குவிப்பார்கள். அவ்வளவையும் அவன் ஒரேமுட்டாய்க் குடித்துவிட்டு ஏப்பம் விடுவான். கரும்புத்தோட்டத்துள் நுழைந்தால் அரை வாய்க்கால் காலியாகும்.

அவர்கள் பெற்ற திருட்டுப் பட்டங்களிலேயே அதிகபட்சமானது, குமரவேல் படுத்திருக்கும் அந்தக் கோதண்ட ராமர் கோயில் கலசத் திருட்டுப் பழிதான். அது மிகவும் பழைய கோயில். நாயக்கர் காலத்தியது என்று நடேசனே ஒருமுறை அவர்களிடத்தில் சொல்லியிருக்கிறான். ஊர் மேட்டுக்குடியினரெல்லாம் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு குடியேற்றம் டி.எஸ்.பி. அலுவலகத்துக்குப்போய் நடேசன் மேலும் அவன் கூட்டாளிகளின் மேலும் புகார் எழுதிக் கொடுத்துவிட்டு வந்தார்கள். அந்தப் பட்டியலில் குமரவேலின் பெயர்கூட இருந்தது.

மாநில எல்லையில் அவர்கள் மாவட்டம் இருப்பதால் மலைகளிலும் காடுகளிலும் ஒதுங்கியிருக்கிற கிராமத்து மேட்டுக்குடி புள்ளிகள் சிலருக்கு பழமையான கோயில் சிலை கடத்தல், கலசங்கள் கடத்தலில் தொடர்பு இருக்கிறது என்று தெரிந்து வைத்திருந்தும் போலீஸ்காரர்கள் ராணிகுட்டை ஊருக்கு வந்து நடேசனையும் அவன் கூட்டாளிகளையும் தேடினார்கள். பிறகு அவர்களில் ஒன்றிரண்டு பேரை பிடித்துக்கொண்டு போனார்கள்.

நடேசனும் அவன் கூட்டாளிகளும் அப்போது பிரிந்ததுதான். அவரவர்கள் ஒரு வேலை தேடிக்கொண்டு போனார்கள். நடேசன் தனக்கிருந்த சொற்ப செல்வாக்கைப் பயன்படுத்தி அந்தப் புகாரை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டு கொஞ்சநாட்களுக்கு பெங்களூர் பக்கமாகப்போய் இருந்து வந்தான்.

ஊருக்குள் மீண்டும் வந்து சேர்ந்த நடேசன், ஊர் வம்புகளை பைசல் பண்ணும் வேலையில் தானாகவே இறங்கி தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டான். கூட்டம் குறைந்த ஒரு கட்சியில் சேர்ந்து மாவட்டத் தலைவரானான். பஞ்சாயத்து செய்தான். தன்னைத் தேடி வருகின்ற காதல் ஜோடிகளை சேர்த்து வைத்தான். நியாயமான காரணமெனில் ஜோடிகளை நிர்தாட்சண்யமாய்ப் பிரித்தான்.

நடேசன் அப்படிப் பிரித்த ஒரு பிராது அவனுக்கு தன் ஊருக்குள்ளே புகழையும் நம்பிக்கையையும் தேடிக் கொடுத்துவிட்டது. அந்தச் சம்பவம் குமரவேலுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால் அந்த நடவடிக்கையின்போது அவனும் நடேசனுடன் இருந்தான்.

ஊரின் கடைசித் தெருவிலிருந்த அப்பிராணி ஒருவனின் மனைவி பக்கத்து ஊர்க்காரன் ஒருவனோடு போய்விட்டாள். அவளுக்கு மூன்று பிள்ளைகள். அவர்களில் பெரிய பெண் பூப்பெய்தியிருந்தாள்.

நடேசனின் காதுக்கு அந்த விவகாரம் வந்தபோது அவனுக்கு கோபம் வந்தது. அவன் கூட்டாளிகள் பலவிதமாக அதற்கு விளக்கம் சொன்னார்கள்.

“அவன் பொண்டாட்டிய கவனிக்காம இருந்தா அவ ஓடத்தான் செய்வா”

“சோப்ளாங்கி கூட யாருதான் வாளமுடியும்?”

நடேசன் சத்தம் போட்டான்.

“அவ தம்புள்ளைங்களுக்காகவாச்சும் கட்னவங்கூடவே வாழ்ந்திருக்கணும்டா. அவ போயிட்டா அந்தப் புள்ளைங்களோட கதி?”

கூட்டாளிகள் மறுப்பு பேசவில்லை. அன்று இரவே பக்கத்து ஊருக்குள் நுழைந்தார்கள்.ஊர் அடங்கியிருந்தது. அந்த வீட்டின் முன்னால் நின்று நோட்டம் விட்டார்கள். குமரவேல் மாடித்தண்ணீர் வருவதற்காக வைக்கப்பட்டிருந்த குழாயைப் பிடித்துக்கொண்டு சரசரவென வீட்டுமேலே ஏறினான். உள்வாசலில் குதித்து வெளிவாசல் கதவின் தாழ்ப்பாளைத் திறந்துவிட்டான். நடேசன் தன் கூட்டாளிகளிடத்தில் சொன்னான்.

“அவ என்னா நெலையில இருந்தாலும் சரிடா. அப்பிடியே தூக்கிக்குங்க. அவன செரியா பெரட்டி எடுத்துடுங்க”

அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து அந்தப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.அவளை வெறியுடன் அறைந்தான் நடேசன்.

“மண்ணத்துன்னமா. வாயத்தொடச்சமான்னு இல்லாம இவங்கூடவே வந்துட்டியாடி?  இவன் உன்ன வப்பாட்டியாதான வச்சிருப்பான்? உன்னோட வயசுக்கு வந்தப் பொண்ண நெனச்சிப்பாத்தியா? அதுங்க போற கெதி?”

அந்தப் பெண்ணை, அவள் கணவன் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிட்டார்கள். காலையிலே செய்தி தீயாய்ப் பரவி விட்டது. அந்தப் பெண் கொஞ்ச நாட்களுக்கு வீட்டைவிட்டே வெளியில் வராமல் இருந்து பிறகு தன் வீட்டுக்காரனோடு சகஜமாகிவிட்டாள்.

குமரவேலுக்கு தான் உடுத்தியிருந்த துணியில் மக்கல் வாடை வீசுவதாகத் தோன்றியது. ஆயினும் அந்த எண்ணத்தின் நடுவே நேற்று காலையில் குளித்துவிட்டு மாற்றுத்துணி உடுத்திக்கொண்ட நினைவு இலேசாக வந்து போனது. அவன் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் ஒன்றுக்கொன்று முட்டி மோதின.

முகத்திலடர்ந்திருந்த தாடியில் எதுவோ ஊர்வதைப்போல இருக்கவே எழுந்து உட்கார்ந்து முடியை அளைந்து வண்டு ஒன்றை எடுத்து என்னவென்று கையில் வைத்துப் பார்த்துவிட்டு வீசினான். பசியால் வயிறு தகித்தது.

கலாவதி செத்துப்போனதிலிருந்து காலை வேளைகளில் சாப்பாடு என்பதே கிடையாது.அவனுக்கு அத்தை முறையாகும் நடுத்தெரு ருக்கம்மள் இட்டிலிக்கடை வாசலில் போய் நின்றால் எப்போதாவது சில இட்டிலிகள் கிடைப்பதுண்டு. வியாபாரம் கெடுகிறது என்று அவள் திட்டியபிறகு குமரவேல் அங்கே போவதில்லை.

அம்மா இல்லையென்றான மறுநாள் காலை தொடங்கி பசியைத் தாங்கிக் கொள்வதற்கு முடியாமல் அலைந்தவாறு இருந்தான். தொடர்ந்த ஒருநாள், அவனுடைய தெருவில் தனியாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சிறுவன் அருகில் போய் நின்றான். சிறுவன் சாப்பிடச்சொல்லித் தந்த வெறும் களியை வாயருகில் கொண்டுபோனபோது ஒரு கூச்சல் கேட்டது.

“சின்னப் பையங்கிட்டர்ந்து புடுங்கித் தின்னுது பாரு இந்தப் பைத்தியம்”

களியை கீழே எறிந்துவிட்டு ஓடிய குமரவேல் அன்றிலிருந்து காலை சாப்பாட்டின்மீது பயம் கொண்டவனானான். பகல் சாப்பாட்டு நேரத்துக்கு ஊர் பள்ளிக்கூடம் பக்கமாக போனால் வயிறு முட்ட சத்துணவு சோறு கிடைக்கும். சில நாட்களில் வீட்டிலிருக்கும் பாத்திரம் எதையாவது எடுத்து வந்து இரவுக்கும் கொஞ்சம் வாங்கி வைத்துக்கொள்வான்.

ஊரிலும், சுற்றுப்பக்க கிராமங்களிலும் நடக்கின்ற விசேஷங்களுக்குப் போய் காத்திருந்தால் வேண்டுமென்கிற அளவுக்கு சாப்பாடு போடுவார்கள். சில நேரங்களில் இன்னதென்ற காரணமின்றி உதையும் விழும்.

நேற்றுகூட பக்கத்து ஊரான பெருமாஞ்சோலை ஊர்ப்பிள்ளைகள் கல் எறிந்ததற்காக திட்டினானென்று குமரவேலை அவன் வயதொத்த இளைஞர்கள் சிலர் துரத்தி வந்து ஊர் எல்லையிலேயே அடித்தார்கள். அப்போது அந்தப் பக்கமாகப் போன ஊர்க்காரர்கள் ஒருத்தரும் அதை ஏன் என்று கேட்கவில்லை.

“அடிக்கட்டும் உடு. அப்பதான் பயம் புடிக்கும். அவம் போக்கிலயே உட்டுட்டா நாளைக்கு நம்ம வீட்டுப்புள்ளைங்களையும்கூட அடிப்பான்”

இரவு நேரங்களில் கோகிலாவை நினைத்துக் கொள்ளும் குமரவேலின் உடல் கிளர்ச்சியடையும். அவளின் நினைவுகள் துவம்சம் செய்யும். இரவுகளின் மிச்சக்கனவுகள் தொடரும் வெப்பமான சில பகல் பொழுதுகளில் அவனால் ஒரு நிலையாய் இருக்க முடியாது. பிதற்றுவான். உளறிக் கொட்டுவான். அவளை வாய்விட்டு வர்ணித்தபடி அலைவான். அரிதாக சிலதருணங்களில் ஆடைகளைக் களைந்தபடி ஊர்காட்டில் ஓடுவான்.

மனதை கட்டுப்படுத்தமுடியாத நிலையில் அவன் எல்லார் முன்னிலையிலும் என்னென்னவோ செய்கிறான் எனச்சொல்லி, சிலசமயங்களில் நையப்புடைப்பதற்குத் துரத்தினார்கள். அவன் உற்றுப் பார்ப்பதாக தத்தமது கணவர்களிடத்தில் ஊர்ப்பெண்கள் சொல்லும் புகாரை தினந்தோறும் சுமந்தது காற்று.

கோகிலாவின் நினைவுப் பித்தம் தலைக்கேறிய ஒரு நாள், ஊரிலிருந்து இரண்டு மூன்று மைல்கள் தள்ளி காட்டுப்பதையில் இருக்கும் டாஸ்மாக் கடைப்பக்கம் போனான் குமரவேல். அவன் ஊருக்குத் திரும்பி வரும்போது அவன் முகம் வீங்கி உதட்டோரத்தில் இரத்தம் கட்டியிருந்தது.

“குடிக்கிறதுக்கு காசு வேணுமின்டு எங்கியோ திருடியிருக்கிறான். அதான் நல்லா குடுத்திருக்கிறாங்க செலவுக்கு…”

ஊரின் புரணிக்கு தீனியிடும் வகையில் அவனைச் சுட்டிக்காட்டி ஊர்க்காரர் ஒருவர் காரணம் சொல்லிக்கொண்டிருந்தார். அவன் நடுநிசிகளில் கிராமச் சாலைகளின் வழியே தனித்து அலைவதாக பார்த்தவர்கள் சொன்னார்கள்.

நடேசன் ஊருக்கு எப்போது வருவான் என்று மீண்டும் நினைத்தான் குமரவேல். காலையில்கூட அவன் நடேசனின் வீட்டெதிரில் போய் கொஞ்சநேரம் நின்றுவிட்டே வந்திருந்தான். வானத்தைப் பார்க்காமல் அப்படியே ஒருக்களித்து சுருண்டுகொண்டு மனதைக் குடைந்தான் குமரவேல்.

*

குளக்கரை உழவர் சந்தைக்கு பக்கத்தில் பூக்கட்டிக்கொண்டிருந்தவரிடம் கலாவதி மூன்று முழம் மல்லிகைப்பூவை வாங்கினாள். ஏற்கனவே கொஞ்சம் பழங்களும், இனிப்பும் வாங்கிவைக்கப்பட்ட பையின் வயிறு கொஞ்சம் வீங்கியிருந்தது.

அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்த முனிசாமி அனேகமாக, இப்போது இதுதான் கலாவதி வாங்குகின்ற கடைசிப் பொருளாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டான். அவளை உரசியபடி நின்றிருந்த அவன் அந்தப் பூக்காரனிடத்தில் ஒரு காத்தம் போட்டான்.

“என்னா கொற அளவா அளக்கிற? ஒரு மொழம்னா முக்கா மொழம்னு அர்த்தமா?”

ஒரு பக்கத்துத் தலையை நன்றாகச் செதுக்கிவிட்டுக்கொண்டும், மறுபக்கத்துத் தலையில் கோரைகோரையாய் முடியை விட்டுக்கொண்டும், கீழ்த்தாடை முழுவதையும் மறைத்து கூராக அந்தக் காலத்து நாவாப் தாடியை வைத்துக்கொண்டும் அவர்களோடு இருந்த குமரவேல் கத்தினான்.

“இதா எப்பா நீ உங்வாய வெச்சிக்கிணு கொஞ்சம் சும்மாகீறயா? அதான் அம்மா வாங்குதில்ல? நீ வாங்குயா”

அவன் அப்படிச் சொன்னதும் முனிசாமிக்கு கோபத்தில் கண்கள் உருண்டன.

“ஆடு ஆடு வாக்கிலேயே கீது. எப்பா புடுக்குன்னானாம் ஒருத்தன். உன்னும் பொண்ணே பாக்கப்போல. அதுக்குள்ள என்னை தூர கடாசிறயாடா? பொண்ணு பாக்க வர்ற லட்சணத்தப்பாரு. அந்த மூஞ்சியும் மயிரும்”

“இதா சும்மா பேசிணு இருக்காத. ஒரு இதுக்குதான் உன்ன கூப்டுணு போறேன்.இல்லன்னா நானே நேரா போயி அவள ஊட்டுக்கு கூட்டியாந்துடுவேன்”

முனிசாமி, குமரவேலுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தபோதே கலாவதி அவர்கள் இருவரிடத்திலும் கத்தினாள்.

“கொஞ்சம் இத்தையும் அத்தையும் மூடிக்கிணு அப்பனும் புள்ளயும் சும்மா வர்றீங்களா?”

அவள் எழுப்பிய சத்தத்தில் கடைத்தெருவிலிருந்த சிலர் அவர்கள் மூவரையும் திரும்பிப் பார்த்தார்கள். அதற்குப் பிறகு பொன்னப்பன் கொட்டாய்க்கு நகரப்பேருந்து ஒன்றில் ஏறுகிறவரை அவர்கள் யாருமே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை.பொன்னப்பன் கொட்டாய் வேலூருக்குப் போகும் மார்க்கத்திலிருந்தது.

ஒரு புளியமரத்து நிழற்கூடத்தில் பேருந்து அவர்கள் மூவரையும் இறக்கிவிட்டுப்போனதும் அங்கு காத்துக்கொண்டிருந்த தன் மகளையும் மருமகனையும் பார்த்துச் சிரித்தாள் கலாவதி. குமரவேலைப் பார்த்த மாத்திரத்தில் முகத்தை சிடுசிடுப்பாக்கிக்கொண்டு அஞ்சனாதேவி திட்டினாள்.

“பொண்ணு பாக்கப் போற கோலமாடா இது? அந்தத் தாடிய எடுத்துட்டுதான் வர்றது?”

“நீ அப்பா மாதிரியே… எல்லாம் நல்லாதான் கீது. கம்முனு வா”

எருக்கஞ்செடிகளும், வேலிமுள் புதர்களும் அடர்ந்திருந்த கரம்புக்கு நடுவே போகும் தார்ச் சாலையில் அவர்கள் நடந்தார்கள். கோடைக்குப் பிந்திய மழை கொஞ்சம் புண்ணியம் கட்டிக்கொண்டதால் வழியோரங்களில் நாயுறுவிப் புதர்களையும், நாதர்சங்கீரை குத்துகளையும் அவர்களால் பார்க்க முடிந்தது.

அந்த நிலங்களில் யாரும் அவ்வளவாய் வெள்ளாமை செய்திருக்கவில்லை. மண் கெட்டித்தட்டிப் போயிருந்தது. சில நிலங்களில் அநாதரவாய் நின்ற தென்னந்தோப்புகள் காய்ப்புக்கு வந்திருந்தன. நிலங்களை வகிர்ந்தபடி சென்ற மின்கம்பிகளில் சில பனங்காடைகள் உட்கார்ந்திருந்தன.

“உன்னும் எவ்ளோ தொலவுடா எப்பா?”

“இதா எம்மா, இப்பதான டவுன்பஸ்ஸ வுட்டு கீள எறங்கன? அதுக்குள்ள உன்னும் எவ்ளோ தொலவுன்ற? நடுய்யா”

மகனின் பதிலுக்கு சிரித்துக்கொண்டாள் கலாவதி.

“எவ்ளோ தொலவுன்னாலும் நீ நடந்துதான் ஆவனும் எம்மா. ஜாக்கிட்டு பிட்டு வாங்கன இல்ல? நட!”

சிரித்தபடியே சொன்னாள் அஞ்சனா தேவி. அவள் அதைச் சொல்லும்போது குமர வேலுக்கு வெட்கம் பொத்துக்கொண்டு வந்தது.

“நா என்னா அந்த பொண்ணுகிட்டர்ந்தா வாங்கனேன்? குமரவேலு வாங்கித் தந்ததைத்தானே வாங்கினேன்?”

சமாளித்தாள் கலாவதி. அம்மாவை முந்திக்கொண்டு அக்காவுக்கு பதில் சொல்ல விரும்பினான் குமரவேல்.

“இதா எக்கா, கரண்டு ரீடிங்கு எடுக்க வந்து அப்பிடியே உன்ன கட்டிக்கினாரில்ல மாமன்? எல்லாம் இதுவும் அப்பிடிதான்”

அதை அவன் சொன்னதும் அஞ்சனாவதி வெட்கத்தில் தவித்தாள். குமரவேலைத் திட்டினாள். அருகில் நடந்துவரும் தன் வீட்டுக்காரனை குறைபார்வை பார்த்துக்கொண்டாள். அவனோ, கீழே குனிந்து நமட்டுச் சிரிப்போடு வந்துகொண்டிருந்தான்.

“போடா நாயே. நாயே… நாயே! எனுக்கு மட்டும் மொதல்ல பொண்ணு பொறந்திருந்துச்சின்னு வெச்சிக்கோ, அத உனுக்கு கட்டிவெச்சி, சோறே ஆக்கிப் போடாதம்மான்னு சொல்லி, உந்திமிர அடக்கச் சொல்லியிருப்பேன். என்னா செய்யிறது? மொதல்ல பையனா போச்சி. இப்பப் பக்கப் போறோம்ல. அவகிட்ட சொல்றேன் இரு”

“ம்… சொல்லு சொல்லு. அதையுந்தான் பாக்கலாம்”

அவர்களின் பேச்சில் கலந்துகொள்ளாத முனிசாமி ஆம்பூர் பீடியை ஆழமாக இழுத்தபடி நடந்தான். அவர்கள் பொன்னப்பன் கொட்டாய்க்குப் போய்ச் சேர்ந்ததும் ஊருக்கு மேற்கு முலையில் வாசலில் ஆட்டுப்பட்டியுடன் இருந்த நாட்டு ஓடு வேய்ந்த அந்த வீட்டின் நடையில் அமர்ந்தபடி கோகிலா தந்த தண்ணீரை வாங்கிக்குடித்தார்கள்.செம்புத்தண்ணீரை கலாவதியிடத்தில் கொடுக்கும்போது கோகிலாவுக்கு நெஞ்சை முட்டிக்கொண்டு சிரிப்பு பொங்கியது. அதை அவள் மிகுந்த பிரயாசப்பட்டு அடக்கிக்கொண்டாள். ஆனாலும் அது எப்படியோ கலாவதியால் கண்டறியப்பட்டு சிரிப்பாக மாறி அவர்களின் எல்லா முகங்களுக்கும் பரவியது.

*

ஸ்வட்ச் பாரத் திட்ட தனிநபர் கழிப்பறைகளுக்கு மலக்குழி தோண்டத்தான் முதன்முதலில் குமரவேல் பொன்னப்பன் கொட்டாய்க்குச் சென்றான். இரண்டுக்கு மூன்றடியில் சிமெண்டு உறைகளை மண்ணில் இறக்குவதற்கு தோதாய் குழிகளை வெட்டவேண்டும். பொன்னப்பன் கொட்டாயில் பதினைந்து வீடுகள் அத்திட்டப் பயனாளிகள். பேர்பெற்ற கொத்தனாராய் இருந்த குமரவேலின் தாய்மாமன் ஒருவன் நான்கைந்து பஞ்சாயத்துகளைச் சேர்ந்த கிராமங்களுக்கு கழிப்பறைகளைக் கட்டிக்கொடுக்கும் வேலையை ஒப்பந்தம் எடுத்திருந்தான்.

குமரவேல் அதற்கு முன்னால் பொன்னப்பன் கொட்டாய் போன்றதொரு கிராமத்தைப் பார்த்ததேயில்லை. அதுவரையில் அப்படியானதொரு ஊர் பூமியின்மேல் இருப்பதற்கே வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவன் அதிகபட்சமாக வேலூரைத் தாண்டிப் போனதில்லை.

கட்டுவேலைக்காரர்களோடு காதில் பிளாஸ்டிக் கடுக்கணும், ஜீன்சுமாக பொன்னப்பன் கொட்டாயில் குமரவேல் முதன்முதலில் கால்வைத்தபோது அங்கிருந்த நாய்கள் அவனைப் பார்த்து குறைக்கலாமா வேண்டாமாவென குழம்பி நின்றன.

“அது என்னாடா பையா காதுல கடுக்கன்மாதிரி என்னாத்தையோ செருகி வெச்சிணு?”

“அது ஃபேஷன்”

“என்னா ஃபேஷனோ, மோஷனோ போ!”

குழி தோண்டும்போது அவனிடம் கேட்டு மேஸ்திரிகள் சிரித்துக்கொண்டார்கள்.அவன் அடிக்கடி உரக்கப்பேசி சிரிப்பதை அவர்களில் சிலர் தடுத்து அடக்கினார்கள்.

“மக்க மனுசருங்க யாருன்னு தெரியாத எடம். கொஞ்சம் வாய அடக்குடா பையா”

ஆனாலும் குமரவேல்தான் ஆர்ப்பாட்டமாய்ப் பேசுவதை நிறுத்துவது குறித்து சற்றும் யோசிக்கவில்லை. பொன்னப்பன் கொட்டாயின் நடுத்தெருவில் தொடர்ந்தாற்ப் போலிருந்த மூன்று வீடுகளுக்கு குழி எடுத்தபடி, அந்த வாரம் வெளியான சிவகார்த்திகேயனின் புதுப்படம் ஒன்றின் கதை வசனத்தை சொல்லிகொண்டிருந்த ஒருநாளில், அவன் சொல்வதை அங்கு தண்ணீர் பிடிக்க வருகின்ற ஒருத்தியும் நின்று கேட்பதை அசந்தர்ப்பமாகப் பார்த்து அறிந்துகொண்டான் குமரவேல்.

கதை கேட்பதை அவன் கவனித்துவிட்டான் என்று தெரிந்த மாத்திரத்தில், ஒன்றையும் கவனிக்காதவள்மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு தண்ணீர்க்குடத்தைத் தூக்கிப்போன அவள் தெருவின் திருப்பத்திலே அவனைப் பார்த்து ஒருதடவை சிரித்தாள். அடுத்த நாளில் அவளுக்குத் தலையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாக நீர் நிரம்பிய குடத்தைத் தூக்கி வைத்திடும் அளவுக்கு குமரவேலின் நிலைமைகள் ஆகின.

பொன்னப்பன் கொட்டாயின் கடைசித்தெருவில் அவள் வீட்டுக்கே குழி வெட்டிக்கொண்டிருந்தபோது இருவரும் மாறி மாறி சிரித்துக்கொண்டதுடன், கைபேசி எண்களையும் பரிமாறிக்கொண்டார்கள்.

தொடர்ந்த சில மாதங்களுக்குள்ளாகவே கோகிலாவும் குமரவேலும் குடியேற்றத்தில் சந்தித்துக்கொள்ளும்படிக்கு நெருங்கினார்கள். ஏடிஎம்மில் பணம் எடுக்கப்போவதாகவோ, சட்டைத்துணி எடுக்கப்போவதாகவோ, வயிற்றுவலிக்கு வைத்தியம் பார்க்க அரசாங்க மருத்துவமனைக்குப் போவதாகவோ ஆடு மேய்க்கப்போகும் தன்னுடைய அண்ணனிடத்தில் சொல்லிவிட்டு வந்து தன் தோழியின் துணையோடு கோகிலாவால் குமரவேலை சந்திக்க முடிந்தது.

குடியேற்றத்தில் திறக்கப்பட இருக்கின்ற மிகப்பெரிய துணிக்கடை ஒன்றைப்பற்றிய பேச்சாக அப்போது இருந்தது, கட்டு வேலைக்குப் போய்விட்டு வரும்போதெல்லாம் அந்தக் கடைத்திறப்பைப் பற்றி தன் அம்மாவிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தான் குமரவேல்.

“டவுனு முழுசும் எங்க பாரு அந்தக்கடை பேனரு, போஸ்டரு தான் எம்மா.கடையத்தொறந்து வெக்கிறதுக்கு யாரு வர்றது? நடிகை சினேகா! மொத நாளு மட்டும் ஒரு ரூபாய்க்கு ஒரு ஜாக்கிட்டு பிட்டாம், அஞ்சு ரூபாய்க்கி சர்ட்டு பேண்டு பிட்டுங்களாம், பத்து ரூபாய்க்கி பொடவையாம். ஒரே ராவுடியாகீது போ”

“டே எப்பா, அன்னிக்கி எப்பிடியாச்சும் என்னை கூப்டுகிணு போயிட்றா சாமி.நூறு ரூபாயில நாலஞ்சி பொடவ ஜாக்கிட்டுங்கள எடுத்துக்கிறேன்.இல்லேன்னா உங்கப்பங்காரன் வருசத்துக்கு ஒன்னு எடுத்துக்குடுக்கிறதுக்கு காத்துணு கடுக்கணும்”

“போலாம் உடும்மா”

துணிக்கடை திறப்பு விழாவன்று நகரம் பரபரப்பாக இருந்தது. அந்தக்கடை வாசல் தொடங்கி நகரின் எல்லை வரை சுமார் இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு துணி வாங்குகிறவர்களின் வரிசை நின்றது. தன்னை அந்த வரிசையில் நிற்கவைத்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாகப் போன மகனை இன்னும் காணவில்லையே என்று தவித்துக்கொண்டிருந்தாள் கலாவதி. வெயில் கொளுத்தியது. வியர்வையில் உடல் முழுக்க நனைந்து சேலை ஒட்டிக்கொண்டு கசகசத்தது. தாகமாயிருந்தது. எங்காவது சென்று தண்ணீரைக் கேட்டுக் குடித்துவிட்டு வரலாமா என்று யோசித்தாள். வரிசையில் இப்போது இருக்கும் இடம் போய்விட்டால் என்ன செய்வது என்று பயந்தாள்.

இன்றைக்கு இப்படி வந்திருக்கக்கூடாதோ என்று கலாவதி தன்னையே நொந்து கொள்ளத் தொடங்கியிருந்த சமயத்தில், கையில் ஒரு பழச்சாறு பொட்டலத்தோடும் பக்கத்தில் ஒரு பெண்ணோடும் அவள் முன்னால் வந்து நின்றான் குமரவேல்.

“எம்மா இந்த கியூவில நிகாத வா.மொதல்ல இந்த ஜூசக்குடி”

“ஏன்டா?”

“மொதல் ஆளா இத நிக்கவெச்சி கொஞ்சம் துணிங்கள வாங்கிட்டேன்.செம கூட்டம்.நம்மால எதையும் பாத்து எடுக்க முடியாது.கெடச்சத வாங்கிக்கவேண்டியது தான்.இது எங்கூட கட்டுவேலைக்கு வர்ற எனுக்குத் தெரிஞ்ச பொண்ணு”

குமரவேல் தந்த பழசாற்றை குடித்துக்கொண்டே,  தன் எதிரில் ஜவுளிக்கடை பையோடு தன்னை நேர்கொண்டு பார்ப்பதற்குத் தயங்கியபடி நிற்கின்ற கோகிலாவை ஆழமாகப் பார்த்தாள் கலாவதி.

*

ஊருக்கு ஓரமாக தெற்கைப் பார்த்தது போலிருக்கும் பனங்குட்டையின் கரையில் நின்று கொண்டிருந்தான் குமரவேல். குட்டையின் கரை நெடுகிலும் நின்ற பனைமரங்கள் காற்றுக்குச் சலசலத்தன. மழைக்காலம் தொடங்கிவிட்டதால் ஊரைச் சுற்றியிருக்கும் மேட்டு நிலங்களில் பலவிதமான செடிகொடிகள் முளைத்து ரம்மியமாக பச்சைகட்டித் தெரிந்தன. பரந்த அம்மேட்டு நிலங்களுக்கு நடுவே ஒரு தீவைப்போல இருக்கின்ற தன் கிராமத்தை வெறித்துப் பார்த்தான் குமரவேல்.

அங்குமிங்குமாக அலைபாய்ந்து கொண்டிருந்த குமரவேலின் கண்களுக்கு கருங்கல்பட்டியைப் பார்த்து போய்க்கொண்டிருக்கும் ஆள் நடேசனைப் போலவே தெரிந்தது. அவனுள்ளே திடீரென்று எதுவோ உடைப்பெடுத்துக்கொண்டு ஒரு சிலிர்ப்பு உருவானது. அவன் நடேசனைக் கூப்பிட்டபடியே ஓடினான். குமரவேலின் கூப்பாடுக்கு திரும்பிய நடேசன் தனது நடையில் மேலும் கொஞ்சம் வேகத்தைக் கூட்டி நடந்தான்.

குமரவேல் முச்சிரைக்கப்போய் நடேசன் முன்னால் நின்றபோது அவன் கோதண்டராமர் கோயிலை நெருங்கிவிட்டிருந்தான். அவர்கள் சந்தித்துக்கொண்ட இடத்தில் ஆலமரம் ஒன்று களகளவென்று நின்றிருந்தது. குமரவேலை வெகு அருகில் பார்க்க நேர்ந்த நடேசனுக்கு அங்கு நிலவிய குளுமை காந்தியது. ஊரில் எல்லாரும் அவனை பைத்தியம் என்று சொல்வதை அறிந்திருந்த நடேசன் உள்ளூற குழம்பினான். குமரவேலை தயக்கத்தோடு ஏறிட்டுப் பார்த்தான்.

அவன் கொஞ்சமும் எதிர்பார்க்காதபடி கைகளைப் பிடித்துக்கொண்டு அழத் தொடங்கினான் குமரவேல். நீண்ட கேவல்களுக்கு நடுவே தடுமாறி தடுமாறி வந்தன சொற்கள்.

“ஊருல எல்லாரும் சொல்றத நீயும் நம்பினா, அப்புறம் நா என்னா கெதி ஆகறதுண்ணா? நீ எனுக்கு எவ்ளோ குளோசு? மறந்துட்டியா?”

குமரவேலின் கண்ணீர் நடேசனை நெருக்கியது. கொஞ்சம் தெளிவுகொண்டவனாக அவனைப் பார்த்தான் நடேசன்.

“அழாதடா. அப்பிடி ஒக்கார்லாம் வா”

அவன் கேவல்கள் அடங்கட்டும் என்று காத்திருந்த நடேசன், குமரவேலின் வாயைக் கிளறுவதற்காகக் கேட்டான்.

“ஊருல உன்னப்பத்தி அப்பிடி என்னா சொல்லிக்கிறாங்க?”

“நோவ் என்னாண்ணா தெரியாதமாரி கேக்கற. எல்லாரும் என்ன லூசு, மெண்டல், கிராக்கு, பைத்தியம்னு தானேணா சொல்றாங்க. ஒரே ஒருத்தர் கூட எங்கிட்ட நல்லாவே பேசற்தில்லணா”

குமரவேலுக்கு மறுபடியும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவனை பரிதாபமாகப் பார்த்தான் நடேசன்.

“தெனத்திக்கும் நா ஊங்ஊட்டாண்ட வர்றது. நீதான் எங்கியோ வெளியூருக்கு போயி போயி வர்றயாமே?”

“அது ஒரு வேலடா. இன்னிக்கி வந்துட்டேன். இனிமேல்டுக்கு எப்ப போவன்னு தெரியாது. செரி நீ தெளிவாகீறன்றத நான் எப்பிடி நம்பறது?”

“நீ எங்கிட்ட என்னாவானா கேளு. நா சொல்றேன்”

“நீயும், ஊர் வாலிப பசங்க சிலபேரும் முன்னாடி எங்கூட சுத்துவீங்கல்ல? அப்போ, நாம செஞ்ச வேலயிலயே அடிக்கடி சிரிச்சி சிரிச்சி பேசிக்கிறது எது?”

“மூல ஊட்டு அக்கா ஊட்டுக்காரனையும், மூனு புள்ளைங்களையும் உட்டுட்டு உன்னொர்தங்கூட ஓடிபோச்சில்ல? நாம தான தேடிணு போயி புடிச்சிணு வந்தோம்? நடு ராத்திரியில அங்க போனப்ப நீதானே என்ன ஊட்டுமேல ஏறச்சொன்ன? அப்பறமா நா உள்பக்கமா எறங்கி வெளிக்கதவத் தொறந்ததும் நீங்கல்லாம் திபுதிபுன்னு அந்த ஊட்டுக்குள்ள தூந்திங்க! நாம உள்ள போனப்ப, அவங்க இருந்த நெலம..! சொல்லிச் சொல்லிச் சிரிப்போமில்ல?”

“உனுக்கு எப்ப கல்யாணமாச்சி?”

“போன தையில ஆச்சி. இந்த அக்டோபர் முடிஞ்சா பத்துமாசம் ஆகுது. எம்பொண்டாட்டி பேரு கோகிலா. ஊரு பொன்னப்பன் கொட்டாய்”

“ஆமா உங்கம்மாவையும் அப்பாவையும் எங்கடா காணும்?”

“எனுக்கு கல்யாணமானபின்டு மூனு நாலு மாசத்திலயே எங்கம்மா எதோ மார்ல கட்டின்னு செத்துட்சேண்ணா. உனுக்குத் தெரியாதா? அது போன பின்டு எங்கப்பங்காரன் பெங்குளூரல கீற கூத்தியா ஊட்டுக்கே போயி சேந்துட்டான். தம்பி ஒருத்திய இளுத்துணு பக்கத்தூருக்குப் போயிட்டான். அக்கா கீதுபாரு, அது என்ன செத்தயாடா பொளச்சியாடான்னு எதையும் கேக்கறதில்ல. இப்ப அந்த வெறும் ஊட்டுல நாமட்டும் தான்ணா கீறன்”

அதற்குமேல் எதையும் அவனிடத்தில் நடேசனுக்குக் கேட்கத் தோன்றவில்லை.பாறையைப்போல் மௌனம் அழுத்தியது, அவன் அவனைப் பார்த்தபோது குமரவேல் எதிர்மலையை வெறித்தபடி இருந்தான். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு நடேசன் கேட்டான்.

“இவ்ளோ தெளிவா கீறியேடா குமரா. நாகூட என்னவோ நெனச்சன்டா. மனுச…சொல்லுக்கு எவ்ளோ சக்திகீது பாறேன்! யாரோ ஒருத்தன் உன்ன பைத்தியம்னு சும்மா சொல்லியிருப்பான். அது அப்பிடியே வழங்கிடுச்சி…. செரிடா, என்ன எதுக்குடா இப்ப ஓடியாந்து நிறுத்துன?”

மீண்டும் சடாரென குமரவேல், நடேசனின் கைகளைப் பிடித்துக்கொண்டான். அவன் கண்கள் நீர்மை கொண்டன.

“நாலு மாசத்துக்கு முன்னாடி கட்டு வேலைக்கி போயிட்டு வரும்போது பிரண்ட்சுங்க தண்ணி அடிக்கக் கூப்டானுங்க. நானும் எதோ நெனப்புல போயிட்டேன். சரக்கடிச்சிட்டு பிரண்டோட பெரிவண்டில டிரிபிள்ஸ் வர்றப்போ, நின்னுணிர்ந்த லாரி மேல மோதி உளுந்துட்டோம். கூட வந்த ரெண்டு பேருக்கும் ஒரு அடி இல்ல. நான் மல்லாக்கா உளுந்ததுனால பின் மண்டையில அடிபட்டு ஒரு வாரத்துக்கு மயக்கத்துலயே இருந்துட்டேன். சோத்துக்கையி வேற ஒடஞ்சி போச்சி. குடியாத்தம் பெரியாஸ்பத்திரியிலதான் இருந்தேன்.”

“இவ்ளோ நடந்துடுச்சாடா?”

“ஆமாண்ணா. நா மயக்கமா கெடந்தப்போ ஆஸ்பத்திரியிலயே எங்கக்கா, கோகிலாகிட்ட சண்ட போட்டுக்கீது.” நீ வந்து எங்கம்மாவ முளுங்கிட்ட. இப்ப எந்தம்பியையும் முளுங்கப்போற. நீ காட்டேரி, பேயி”, அது இதுன்னு சொல்லிக்கீது. கோகிலா அப்பிடியே கோவிச்சிக்கிணு அம்மா ஊட்டுக்குப் போயிட்டுக்கீது. ஆக்சிடெண்டு ஆகறதுக்கு முந்தாநாளு குளிகுளிச்சிக்கிறதா எங்கிட்ட வெக்கப்பட்டுனே சொல்லிச்சி. கணக்குக்கு இப்ப நாலுமாசம் கர்ப்பமா இருக்கும். அது நெனப்பாவே கீதுண்ணா. அங்க நானு போயி, என்ன பைத்தியம்னு தொறத்திட்டாங்கன்னு வெய்யி, அப்பாற்திக்கா அத என்னால தாங்க முடியாது. அதனாலயே உன்னும் பொன்னப்பன் கொட்டாயிக்கு போகாமக்கீறன். எப்பிடியாவது அதுங்கூட என்ன சேத்து வெச்சிடுண்ணா. இந்த ஊர்லயே இது உன்னாலதாண்ணா முடியும்”

பிரவாகமாகப் பொங்கி வழியும் காதலைத் தன்னிடத்தில் கெஞ்சிக்கொண்டிருக்கும் குமரவேலுடைய முகத்தில் பார்த்தான் நடேசன்.

“சரி, பொன்னப்பன் கொட்டாய்க்குப் போலான்டா”

அந்தப் பிரவாகத்தை மேலும் அதிகரித்தான் நடேசன். அன்று பிற்பகலிலேயே குளக்கரை உழவர் சந்தைக்கு அருகில் பூக்கட்டிக்கொண்டிருப்பவரிடம் இரண்டு முழம் மல்லிகையையும், கொஞ்சம் பழங்களையும், இனிப்பையும் வாங்கிகொண்டு இருவரும் புறப்பட்டார்கள். பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கையில் நடேசனின் முகத்தையே பார்த்தபடி இருந்தான் குமரவேல். மழுங்கச் சிரைத்திருந்த முகத்தோடு நடேசன் தந்த துணியை உடுத்திக்கொண்டிருந்த அவன் கையில் தின்பண்டப்பை தொங்கியது.

நடேசனின் வண்டி மெதுவாகச் சென்றது. அது மட்டக்குதிரையைப்போல புதுசாக வந்திருக்கும் ஹோண்டா ஆக்டிவா. இருவரும் அவ்வளவாக பேசிக்கொள்ளவில்லை. புளியமரத்து நிறுத்தத்தைத் தாண்டி வண்டி கிழக்குப் பார்த்து திரும்பியதும் குமரவேலின் மனதில் பெண் பார்க்கப்போன பயணம் நிழலாடியது. அம்மாவை நினைத்து அழுகை முட்டியது. பக்கக் கண்ணாடிவழியே நடேசன் பார்த்துவிடுவான் என்று முகத்தை அப்படியும் இப்படியுமாகத் திருப்பிக்கொண்டான்.

பாதையின் இருபக்கங்களிலும் இருந்த நிலங்களில் வெள்ளாமையைத் தொடங்கியிருந்தார்கள். கரும்பும் நெல்லும் செழித்திருந்தன. ரம்மியமான வாசனையைப் பரப்பிடும் இளங்கரும்புப்பயிர் மண்டிய தோட்டத்துக்கு மேலே செல்லும் மின்கம்பியில் பனங்காடை ஒன்று உட்கார்ந்திருந்தது. கோகிலாவை பெண் கேட்கவந்தபோது கூட இதைப் பார்த்தோமே. இன்னுமா இந்தப் பறவை இங்கேயே காத்திருக்கிறது?’ என்று நினைத்த குமரவேல், அப்போது அந்தப் பறவையை தானென உணர்ந்தான். அவ்வெண்ணம் அவன் மனதை அறுத்தது,

பொன்னப்பன் கொட்டாயின் கடைசித் தெருவில் மேற்கைப் பார்த்த மாதிரியிருந்த கடைசி வீட்டுவாசலில் டிவிஎஸ்.50 போய் நின்றதும் அதன் சத்தத்துக்கு வெளியே வந்த கோகிலா, ஒரு விநாடி குமரவேலைப் பார்த்து அதிர்ந்து சடாரென உள்ளே போனாள். நடேசன், குமரவேலின் முகத்தைப் பார்த்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன. நடேசன் அவனுடைய தோளை அழுத்தி, வேண்டாம் என்று கண்சாடை செய்தான்.

“யாரு என்னா பேசனாலும், எப்பிடி நடந்துக்கிணாலும் தைரியத்தை உடக்கூடாது.நா பாத்துக்கிறேன்”

“செரிணா. உங்கிட்ட உண்ணொன்னு சொல்லணும். நா கோகிலாவ லவ் பண்ணிணு இருந்தப்பவே எம்பிரண்டு சுப்ரமணிக்கு அதுமேல ஒரு கண்ணு. இப்பக்கூட என்ன பைத்தியம்னு அவந்தான் இங்க ஊடு தேடிவந்து சொல்லியிருக்கிறான். எங்க மச்சாங்காரன் கோகிலாவ அவனுக்கு கட்டிவெக்கப்போறதா நம்ம ஊருல சொல்லிணு திரியிறான்”

“ஓ இப்பிடியும் ஒரு கத கீதா? அதையும்தான் பாக்கலாம். கம்முனு இரு.”

கோகிலா உள்ளேபோன அடுத்த சில விநாடிகளிலேயே அவளின் அண்ணன் மூர்க்கமாய்த் திட்டியபடியே வெளியே வந்து அவர்களின் எதிரில் நின்றான்.

“யார்றா அவன் வந்துக்கீறது? எந்த மூஞ்சியோட இங்க வந்த? இங்க வர்ற வேலையெல்லாம் இனிமேல்டுக்கு வேணா. பஞ்சாயத்தக்கூட்டி களிச்சி உட்றதுக்கு சொல்லிட்சி. எல்லாத்தையும் பஞ்சாயத்துல பேசிக்கிலாம் கௌம்பு”

“கோவப்படாதிங்க. கொஞ்சம் இருங்க”

“என்னா இருக்கிறது? இந்தப் பைத்தியத்த இங்கக்கூட்டிணு வர்றதுக்கு நீ யாரு? எந்தங்கச்சிதான் பேயி, காட்டேரியாச்சே. இவன் எதுக்கு அதோட குடும்பம் நடத்தணும்? அறுத்து உட்டுட்டா நாங்க எங்க வளிய பாத்துக்கிறோம். தூத்தேறி பஞ்சோத்! கல்யாணம் முடிச்சி உன்னும் ஒருவருசம்கூட ஆகலயே, ஒன்னும் தெரியாத பொண்ணாச்சே. குளீயாதகீதேன்னு இவனுக்கு எதானா எண்ணம் இருதுச்சா? இவங்கூட்டுல இருக்கிறவங்களுக்கு இருந்துச்சா? ஒரே ஒரு நாதி, என்னா ஏதுன்னு கேட்டுணு இங்க வர்ல? இவனுக்கெல்லாம் எதுக்குப் பொண்டாட்டி? எதுக்குப் பொளப்பு?”

அவர்கள் இருவரும் நெடுநேரமாக கோகிலாவின் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தார்கள். யாரும் அவர்களை உட்காரச்சொல்லவில்லை. கோகிலா வெளியிலேயே வரவில்லை. அவர்கள் நின்றிருந்த இடத்துக்குப் பக்கத்தில் திறந்திருக்கும் ஒற்றைச் சன்னல் கதவின் பின்னால் அவள் இருப்பதாக உள்ளுக்குள் உணர்ந்துகொண்டிருந்தான் குமரவேல். அந்த வீட்டுப் பெண்களும் சில ஊர்ப் பெண்களும் அவர்களை திட்டித் தீர்த்தார்கள்.

எதிர்பாராதவகையில் அந்தப் பக்கமாக வந்த ஊர்ப்பெரியவர் ஒருவர் கோகிலாவின் அண்ணனைத் திட்டி அவர்களைத் திண்ணையில் உட்காரவைத்தார்.

“வீடு தேடி வந்தவங்கள இப்பிடி நடத்தக்கூடாது. என்னா இருந்தாலும் உன்னும் அவன் உங்கூட்டு மருகந்தானே? எதாருந்தாலும் ஒக்காரவெச்சி பேசுங்க”

“எல்லாமே முடியப்போது. இதுல ஒக்காரவெச்சி வேற பேசணும்! நாளைக்கே நாங்க கல்யாணத்துக்கு சீதனமா குடுத்த டிவிஎஸ் கொணாந்து நிக்க வெக்கச் சொல்லுங்க.அப்பறமா பேசலாம்!”

திரும்பும்போது குமரவேலின் மனம் கனத்திருந்தது. எதையெதையோ யோசித்தவண்னம் அமைதியாக வந்தான். ‘எதற்கு இங்கு வந்தோம்? பைத்தியப் பட்டத்தோடு இப்படியே நாட்களைக் கழித்துவிடலாமே? எல்லாரும் சொல்லிவிட்டார்கள். இன்னும் கோகிலாவின் வாயிலிருந்து மட்டும்தான் அந்தச் சொல் வரவில்லை’ என்று நினைத்தான். அவன் நினைத்துக் கொண்டிருந்தபோதே நடேசன் அவனை உலுப்பிச் சொன்னான்.

“மனச உட்றாதடா”

“என்ன உடுண்ணா. நீ ரொம்பக் கோவக்காரனாச்சே? எப்பிடி பொறுமையா இருந்த?”

“எல்லா நேரத்திலயும் கோவம் ஒதவாதுடா”

நடேசனின் சொற்கள் அவன் ஆழ்மனதை ஒற்றுவதுபோலிருந்தன. அவனை திடுக்கிட்டுப் பார்த்துவிட்டு வீட்டுக்குள் ஓடிய கோகிலாவே மீண்டும் மீண்டும் அவனுள்ளே தோன்றியபடி இருந்தாள். அக்காட்சியோடு அவளின் சொற்களும் ஒலித்தன. அந்த வீட்டுவாசலில் நின்றுகொண்டிருக்கையில், யார் யாரோ அவர்களைத் திட்டிக்கொண்டிருந்தபோது குமரவேலின் காதுகள் மட்டும் சன்னலுக்கு உள்ளிருந்தது. யாரோ கோகிலாவைக் கேட்டார்கள்.

“யேய், போயி ஒரு வார்த்த பேசுடி”

“இது அதுயில்ல. சொய நெனைவு இருந்திருந்தா எப்பவோ என்ன தேடிணு வந்திருக்கும்”

காற்றைக் கிழித்துக்கொண்டு விரையும் வண்டியிலிருந்து குதித்து, ’இல்லை கோகிலா.இது நான்தான்’ என்று வெறிக்கூச்சலெடுத்துக் கத்தவேண்டுமென நினைத்தான் குமரவேல்.

ஊருக்குள் நுழையும்போது நடேசன் அவனிடத்தில் கேட்டான்.

“உன்னோட டிவிஎஸ் எங்கடா?”

“அத எங்கத்தம்பி எடுத்துணு போய்டாண்ணா”

*

மறுநாள் காலையிலேயே குமரவேலைக் கூட்டிக்கொண்டு சுப்பிரமணியின் வீட்டுக்குப் போனான் நடேசன். வீட்டுவாசலில் நின்றபடி அவனை வெளியில் வரும்படி கூப்பிட்டான். சுப்பிரமணி வெளியில் வந்து நின்றதும் எதையும் விசாரிக்காமல் பளாரென அவன் முகத்தில் அறைந்தான் நடேசன்.

“இவன் விசயத்துல தலயிட்டயானா தொலச்சிடுவேன்”

அவன் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருக்கும்போதே குமரவேலைக் கூப்பிட்டுக்கொண்டு போனான் நடேசன். இருவரும் குமரவேலின் தம்பி வீட்டு வாசலில் போய் நின்றார்கள். அவர்களைக் குழப்பத்தோடு பார்த்தான் குமரவேலின் தம்பி.

“இந்தப் பைத்தியக்காரன இங்க எதுக்குணா கூட்டிணு வந்த?”

சொற்களை முடிப்பதற்குள்ளாகவே ஓங்கி அவன் முகத்தில் அறைந்தான் நடேசன்.

“அவன் எனுமோ நல்லாத்தான்டா கீறான். நீங்கதான்டா பாசம் இல்லாத பைத்தியங்க.இவன் டிவிஎஸ். எங்க?”

“அத வித்துத்தான் இவனுக்கு வைத்தியம் பாத்தேன்”

நடேசன் மறுபடியும் அடிப்பதற்கு கை ஓங்கியதும் அவன் அவசரமாகச் சொன்னான்.

“இருண்ணா இருண்ணா. அத ஒரு வாத்தியார்கிட்ட அடமானம் வெச்சிக்கீறண்ணா”

“சரி. அந்த வாத்தியார்க்கிட்ட நட”

குமரவேலின் தம்பி கூட்டிக்கொண்டு போய்க் காட்டிய வாத்தியாரின் வீட்டுக்குள் சடாரென நுழைந்து அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிவிஎஸ்ஸை வெளியில் தள்ளிக்கொண்டு வந்தான் நடேசன். பின்னாலேயே கத்திக்கொண்டு வந்த வாத்தியாரிடத்தில் அவன் சொன்னான்.

“சும்மா கத்தாத. திருட்டுப் பொருள நீ அடமானம் போட்டுக்கீற. இது இவனோட வண்டி. இதக் காணம்னு போலீஸ்ல புகார் குடுத்துக்கீது. உன்ன விசாரிக்கிறதுக்கு போலீஸ் இப்ப வரும்”

“அய்யோ வாணா சார். வண்டிய நீ எடுத்துணு போயிடு. கடன் வாங்கினவங்கிட்ட நானு பேசிக்கிறேன்”

காலில் விழாத குறையாக நடேசனிடத்தில் சொன்னான் வாத்தியார்.பொன்னப்பன் கொட்டாய் நோக்கி குமரவேலும் நடேசனும் தனித்தனி வண்டிகளில் போய்க்கொண்டிருந்தபோது இருவருக்கும் உற்சாகம் கூடியிருந்தது. காலையிலிருந்து நடேசன் நடந்துகொள்ளும்விதத்தை நினைத்து குமரவேலுக்கு சிரிப்பாய் வந்தது.

கோகிலாவின் வீட்டு வாசலில் வண்டியைப்போய் நிறுத்தியதும் வெளியே வந்து பார்த்தான் கோகிலாவின் அண்ணன்.

“இதோ உங்க வண்டி. இப்ப வேண்ணா பேசலாமா?”

“வண்டிய கொணாந்து தந்தாச்சி. மிச்ச சீர்சாமானங்கள பஞ்சாயத்துல பேசி வாங்கிக்கிறோம். பெறப்புடுங்க”

அதைக்கேட்ட மாத்திரத்தில் கோபத்தில் கத்தினான் நடேசன்.

“நீ பேசறதே சரியில்ல. நான் கொஞ்சம் மொறடன். குமரவேலுக்காக பொறுமையாகீறன். இல்லன்னா விசயம் வேறமாறி போயிடும். நேத்து பேசன ஊர்ப்பெரியவரைக் கூப்டு.நான் அவருகிட்டப் பேசறேன்”

சிறிது நேரக் காத்திருப்புக்குப் பின் வந்த பெரியவரிடத்தில் பேசத் தொடங்கினான் நடேசன்.

“நாலு மாசமா வந்து பாக்காதது குமரவேலுடைய தப்புன்னா, இவங்க பக்கமும் தப்பு கீதுதானே? அடிபட்டு மயக்கமா ஆஸ்பத்திரியில இருந்த ஒருத்தனுக்குத் தெரியாம வந்துட்டீங்க. அப்பறம் அவன் என்ன ஆனான்னு நீங்க யாரும் வந்து பாக்கல? அட பொண்ண உடுங்க. தங்கச்சி வாழ்க்கைய சேத்து வெக்கிற பொறுப்பு அண்ணனுக்கு கீதுல்ல? அவரு அப்பிடியா பேசறாரு?”

அங்கு கனத்த அமைதி நிலவியது.

“இவன் பைத்தியம்னு யாரு சொன்னாங்க? டாஸ்மாக்குக்கு கூட்டிணு போயி சரக்கு வாங்கிக்குடுத்து எவனோ ஒருத்தன் சொன்னா, அத அப்பிடியே நம்பிட்றதா? நா அப்பிடி தூரமா போயிட்றேன். நீங்க இவன ஒக்காரவெச்சி எனுமாணா கேளுங்க. அவன் செரியா சொல்லலனா நா அவனக்கூப்டுணு போயிட்றேன். எல்லாத்தியும் சரியா சொன்னா இங்கியே உட்டுட்டு போயிட்றேன். இவன் இங்கியே கூட பொளச்சிக்கிட்டும். ஏன்னா இவனுக்குன்னு இப்ப யாருமே இல்ல!”

நடேசனின் பேச்சை பெரியவர் ஆமோதித்தார். நடேசன் எழுந்து கொஞ்சத் தொலைவு நடந்தான். எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினான் குமரவேல். அவன் பேச்சுக்குப் பின்பு அங்கு யாரும் நிற்கவில்லை. கோகிலாவின் அண்ணன் தலையைக் கவிழ்ந்தபடி எங்கோ வெளியில் கிளம்பிப் போனான்.

நடேசன் திரும்பி வாசலுக்கு வந்தபோது குமரவேலின் கண்கள் கலங்கியிருந்தன.அவனைப் பார்த்து நடேசன் லேசாகச் சிரித்துக்கொண்டான்.

‘இனிமேல்டாவது பத்துரமா இருந்துக்கடா!’

நடேசனை காபி குடித்துவிட்டுப் போகும்படி யாரோ சொன்னார்கள். அவர்கள் வீட்டுக்குள்ளே போய் நடையில் விரித்திருந்த பாயில் உட்கார்ந்தார்கள். அவர்களுக்கு காபி எடுத்து வந்து குவளையை முன்னால் வைத்துவிட்டு தயங்கியபடியே கொஞ்சம் தள்ளி நின்றாள் கோகிலா. அவளை நன்றாக ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு வேறுபக்கம் திரும்பிக்கொண்டான் நடேசன். குமரவேலின் கண்கள் கலங்கியிருந்தன.

காபியைக் குடித்தபிறகு நடேசனை வழியனுப்பிவிட்டு வருவதாக கோகிலாவிடத்தில் சொல்லிவிட்டு வெளியே வந்தான் குமரவேல். புளியமர நிறுத்தம் வரும்வரைக்கும் அவர்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அந்த வழி நெடுஞ்சாலையில் கலக்கின்ற இடத்துக்கு வந்ததும் குமரவேல் தன்னுடைய டிவிஎஸ்-ஸை ஓரங்கட்டினான். வண்டியின்மீதே உட்கார்ந்திருக்கும் நடேசனிடத்தில் வந்தான். அவன் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டான். அவன் கண்கள் கலங்கின.

“டேய், நீ எதுவும் சொல்லாத உடு. அப்பறம் இப்பிடி சும்மா சும்மா கலங்கறத மொதுல்ல நிறுத்து”

குமரவேல், தன் கண்களைத் துடைத்துக்கொண்டான். தன்னை சுதாரித்துக்கொண்டு வேறு எதையாவது நடேசனிடத்தில் கேட்க நினைத்தான்.

“செரிண்ணா. ஆமாணா, எவ்ளோ நாளுக்கு நீ பெங்களூர்ல கீற அண்ணியாண்டயே போயி இருப்ப? இங்க ஊர்ல கீற அண்ணியையும் கொஞ்சம் பாருண்ணா”

குமரவேல் சொல்வதைத் காதில் கேட்காதமாதிரியிருந்த நடேசன் வண்டியை முடுக்கிக்கொண்டே சொன்னான்.

“தப்பா நெனைக்காதடா குமரா. உம்பொண்டாட்டி ரொம்ப அழகுடா”

நெடுஞ்சாலையில் போகின்ற நடேசனைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தான் குமரவேல்.