உலகம் அனர்த்தமாக அல்லது அபத்தமாக மாறும் சமயங்களில் அத்துடன் ஒத்துழையாமையை கடைப்பிடிப்பதை தவிர வேறுவழியில்லை – சட்டங்கள் பெரிதும் மதிக்கப்படும், அரசாங்கம் ஓரளவிற்கு நேர்மையாகச் செயல்படும் ஸ்வீடனும் இதற்கு விதிவிலக்கல்ல. 2018 ஆகஸ்ட் மாதம் தொடங்கி வாரம் மூன்று முறை பள்ளி நேரத்துக்குப் பின், ஸ்வீடன் நாட்டு பாராளுமன்றத்துக்கு வெளியே ஒரு 16 வயதுப் பெண், பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லாமல், தனியாக மாதக்கணக்காக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் அந்தப் பெண். அவள் பெயர் கிரேட்டா தன்பர்க். முதலில் யாரும் இந்தப் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. ஆனால் நாட்கள் ஆக ஆக சிறிது சிறிதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் அவர் பக்கம் திரும்பியது. பத்திரிகைகள் அவரை கவனிக்கத் தொடங்கின. அவரிடம் பேசிய ஒவ்வொருவரிடமும் அவர் சொன்னது. பருவநிலை மாற்றம் குறித்து உடனடியாக நாம் ஏதாவது செய்யவேண்டும் என்பதே. பாராளுமன்ற உறுப்பினர் பலரும் கிரேட்டா சொன்னதை ஆதரித்தாலும், அவர்கள் அவளிடம் சொன்னது “நீ இப்போது பள்ளிக்குச் செல்ல வேண்டியதே முக்கியம்” என்பதுதான். கிரேட்டாவின் பெற்றோரும், இந்தப் போராட்டம் நியாயமானதுதான் என்று ஒப்புக்கொண்டாலும், மற்றவர்கள் சொன்னதையேதான் அவர்களும் சொன்னார்கள். ஆனால் யார் சொன்னதையும் கேட்க மறுத்த கிரேட்டா தன் போராட்டத்தை தொடர்ந்தார். ‘வளர்ச்சி’ அதாவது ‘பொருளாதார வளர்ச்சி’ என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் உலகில், நொடிக்கு நொடி மணிக்கு மணி நாளுக்கு நாள் புவி வெப்பமடைந்து வருகிறது. பசுமைக்குடில் வாயுக்களின் நிலை அதிகரிக்கும்போது பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் அளவுகடந்த தட்பவெப்பநிலை மாற்றங்கள் மானுட அழிவிற்கு இட்டுச் செல்லும். இங்கே கவனத்தில் கொள்ளவேன்டியது என்னவென்றால் சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களில், பூமியில் மட்டுமே உயிர்கள் வாழக்கூடிய ஆதாரம் உள்ளது. பூமியின் தனித்துவமான இச்சூழல் காரணமாக படிப்படியான பரிணாம முன்னேற்றங்களைக் கண்டு உயிர்கோளம் உருவாகக் காரணமானது. நீர், வாயு மண்டலத்தில் பிராணவாயு மற்றும் பூமி மேற்பரப்பில் சரியான வெப்பநிலை ஆகியவை பூமியில் உயிர்கள் தோன்றக் காரணமாயின.

புவியின் வாயு மண்டலத்தில் 78 சதவிகிதம் நைட்ரஜனும், 21 சதவிகிதம் பிராணவாயுவும் மற்றும் 0.036 சதவிகிதம் கரியமில வாயுவும் உள்ளது. இவ்வாயு மண்டலம் உயிர் வாழவும் தொடரவும் முக்கியமானது. பிராண வாயு சுவாசிப்பதற்குப் பயன்படுகிறது. கரியமில வாயு தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்குப் பயன்படுத்துவது மட்டுமல்லாது பூமியின் வெதுவெதுப்பான சூழலை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சூரியனில் இருந்து வரும் சக்தியில் 30 சதவிகிதம் மீண்டும் வானை நோக்கி பிரதிபலிக்கப்பட்டு எஞ்சியது பூமியை அடைந்து காற்றை, கடலை, நிலத்தை மற்றும் பூமியின் மேற்பரப்பை வெதுவெதுப்பாக்கி சராசரி வெப்பநிலையை 15 டிகிரியாக இருக்க உதவுகிறது. அதேபோல் கரியமில வாயு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை புவிப் பரப்பில் வெப்பத்தை மறு உமிழ்வு செய்து வெப்பநிலை உயரக் காரணமாகிறது. வெப்பம் உயர உயர, பூமியின் தட்பவெட்ப நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு நாம் கடந்த சில ஆண்டுகளில் சென்னையில், கேரளத்தில், மகாராஷ்ட்ரத்தில் கண்ட வெள்ளப்பெருக்கு, மற்ற சில இடங்களில் நிலவும் கடும் வறட்சி இவ்வாண்டு பஹாமா தீவைத் தாக்கிய பெரும் புயல், மற்றும் மோசமான தட்பவெப்ப நிலை இன்றைய உலகம் முழுவதும் காணப்படுகிறது. இதை மனதிற்கொண்டுதான் தன்பர்க், கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டம் தொடங்கி நாலு மாதத்திற்குள் தன்பர்க், போலந்து நாட்டில் நடந்த ஐ.நா. சபையின், தட்பவெப்ப மாற்ற மாநாட்டிற்கு அழைக்கப்பட்டார். அந்த மாநாட்டில் பேசிய தன்பெர்க், பங்கேற்ற நாடுகளை கடுமையாக சாடி “எங்கே மக்கள் ஆதரவை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் நீங்கள் எல்லையில்லா, பசுமை சார்ந்த, முடிவில்லா வளர்ச்சி என்று பேசுகிறீர்கள். எத்தகைய கொள்கைகள் நம்மை, மானுடத்தை இந்த நிலைக்கு இட்டு வந்தனவோ அவைகளையேதான் முன்னெடுத்துச் செல்கிறீர்கள். நாமிருக்கும் நிலையில் நமது வழக்கமான செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துவதற்கான வழியை தேடுவதுதான் ஒரே வழி. உள்ளதை உள்ளபடியே சொல்லும் முதிர்ச்சி உங்களிடம் இல்லை, அதையும் குழந்தைகளாகிய நாங்கள் செய்யவேண்டிய வேலை என்று நினைக்கிறீர்கள். பிரபலமாக இருக்கிறோமா என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனது கவலையெல்லாம் தட்பவெட்ப நீதி பற்றியும் (Climate justice) வாழும் உலகைப் பற்றியும்தான் (The living Planet). ஒரு சிறு குழு, அளவில்லா செல்வம் ஈட்ட நம் உலகையே பலியிட்டுக்கொண்டிருக்கிறோம்.”

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விஷயத்தில் ஸ்வீடனின் சட்டதிட்டங்கள் உலகிலேயே முற்போக்கானவை என்று சொல்வோருண்டு. கடந்த சில ஆண்டுகளில் ஸ்வீடன்  ‘உலகிலேயே தொல்லுயிர் எச்சஎரிபொருள் பயன்படுத்தாத முதல் மக்கள் நலன் அரசு’ என்ற இலக்கு நோக்கி நகர கொள்கைகளை வகுத்துள்ளதாக ஸ்வீடன் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் 2018 ஜூலை மாதத்தில் அந்நாடு கண்ட வரலாறு காணாத வெப்பம் முதன்முறையாக தட்பவெட்ப மாற்றத்திற்கு அனைவரது கவனத்தை ஈர்த்தது. வலதுசாரி ‘ஸ்வீடன் ஜனநாயக கட்சி’யைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுக்காக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி ஒருமித்த கருத்தையே கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த மாற்றங்களை கண்துடைப்பு என்று புறந்தள்ளுகிறார் தன்பர்க். ஸ்வீடனின் முற்போக்கான சுற்றுப்புறச் சூழல் சட்டதிட்டங்கள், அமெரிக்கப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த தன்பர்க், “வளர்ந்த நாடுகள் ஆண்டு ஒன்றுக்கு தொல்லுயிர் எச்சஎரிபொருட்கள் வெளியேற்றத்தை ஆண்டொன்றுக்கு 15% குறைத்தாலொழிய ஆகப்போவது ஒன்றுமில்லை” என்று கூறினார். மிக முற்போக்கான திட்டங்கள்கூட 2050 வரைதான் திட்டமிடப்படுகின்றன, அப்போது நான் என் வாழ்நாளில் பாதியைத்தான் கழித்திருப்பேன், அதற்குப்பின் நான் என்ன செய்வது?” என்று கேள்வி எழுப்பும் தன்பர்க் தொடர்ந்து “2078ஆம் வருடம் நான் என் 75வது பிறந்த நாளை கொண்டாடுவேன். ஒருவேளை எனக்குக் குழந்தைகள் இருந்தால், அந்நாளை அவர்கள் என்னுடன் கழிக்கக்கூடும். அப்படி நிகழ்ந்தால் ஒருவேளை அவர்கள் உங்களைப் பற்றி கேட்கக்கூடும். செய்யவேண்டியதை சரியான காலத்தில், செய்ய அவகாசமிருந்தும் நீங்கள் ஏன் செய்யவில்லை என்று கேட்கக்கூடும். உலகில் வேறெதைவிடவும் உங்கள் குழந்தைகளை நேசிப்பதாகச் சொல்கிறீர்கள், ஆனால் அவர்கள் கண்முன்னே அவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறீர்கள்” என்று தட்பவெப்ப மாற்ற மாநாட்டில் பேசினார்.

போலந்து மாநாடு முடிந்து ஒரு மாதம் கழித்து சுவிட்சர்லாந்து டேவாஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார உச்சி மாநாட்டில் பேசிய தன்பர்க் “நம் வீடுபற்றி எரிகிறது, ஆம். நான் சொல்லவந்தது இதுதான், நம் வீடுபற்றி எரிகிறது! பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச அமைப்பு, புவி 1.5 டிகிரி வெப்பமடைவதை தடுக்க நமக்கு 12 வருடங்களே உள்ளன என்று கூறியிருக்கிறது இதைத் தவறவிட்டால் அதன் பின் நாம் நினைத்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. இந்த 12 வருடத்தில், இதுவரை நடந்துள்ள அழிவின் பாதிப்பால் துருவங்களில் ஏற்படும் மீத்தேன் வாயுக் கசிவு போன்ற ஆபத்துகளை கணக்கிலெடுக்காமல் சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும், கரியமில வாயு வெளியேற்றம் 50% குறைப்பு உட்பட, இதுவரை எண்ணியே பார்க்காத அளவு மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பெரியவர்கள், இளைஞர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையையூட்டுவது நமது கடமை” என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்குத் தேவை உங்கள் நம்பிக்கை அல்ல. எனக்குத் தேவை உங்கள் பீதி. நான் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கும் பதட்டத்தையும், பீதியையும் நீங்கள் உணரவேண்டும். உணர்ந்து பின்பு செயல்படுங்கள். ஒரு தீவிர நெருக்கடி நிலையில் செயல்படுவதைப்போல செயல்படுங்கள். உங்கள் வீடு பற்றியெரிவதுபோல செயல்படுங்கள் ஏனென்றால் உங்கள் வீடு பற்றி எரிந்துகொண்டிருக்கிறது” என்று பேசினார்.

கடந்த மார்ச் மாதத்தில், கிரேட்டாவின் போராட்டத்தினால் ஈர்க்கப்பட்டு உலகின் பல நாடுகளிலும் பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெர்மனியில் 3 லட்சம் மாணவர்கள், இத்தாலியில் 2 லட்சம், கனடாவின் க்யூபெக் மாநிலத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் பள்ளியைப் புறக்கணித்து போராட்டத்தில் இறங்கினர். தில்லி, சியோல், லண்டன், சான்பிரான்சிஸ்கோ, வாஷிங்டன், மெல்போர்ன், லிஸ்பன், மணிலா, நமிபியா, கானா, எடின்பரோ, சிட்னி, டோக்யோ என்று இப்போராட்டத்தின் தாக்கம் நீண்டுகொண்டேபோனது. ஆனால் இந்த போராட்டங்கள் கிரேட்டாவின் சாதனைகளில் மிகச் சின்னதே ஆகும் ஏனெனில், கிரேட்டாவின் சொற்பொழிவுகளும், போராட்டங்களும் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் கிரேட்டாவை சந்தித்ததைத் தொடர்ந்து பட்ஜெட்டில் 25% சதவிகிதத்தை (ஏழு வருடங்களில்) பருவநிலை மாற்ற பாதிப்புகளை நிவர்த்திசெய்ய ஒதுக்கினார். இதன்பின்னர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு கிரேட்டா சென்றபோது, வலதுசாரி உறுப்பினர்கள் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் புதிய செயல்திட்டம் ஒண்றை அமல்படுத்தினர். அதன்படி, பருவநிலை மாற்றம் ஒரு நெருக்கடி நிலைமை என்று பிரகடனப்படுத்தியது மட்டுமன்றி 2050க்குள் பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு போன்ற கற்படி எரிசக்தி மூலாதாரங்களை நிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கிரேட்டாவுக்கு அளிக்கப்பட்ட இந்த உறுதிமொழிகள், அரசாங்கங்கள் இவ்விஷயத்தில் இதுவரை அளித்த மற்ற உறுதிமொழிகளைப் போல், வெறும் கானல்நீராக மாறலாம். ஆனால், கிரேட்டாவின் கவன ஈர்ப்பால், கடந்த ஒரு வருடத்தில் இவர்களனைவரும் முன்பு எப்பொதையும்விட பருவநிலை மாற்றத்தை ஆழமாக பரிசீலிக்கத் தொடங்கி விட்டனர் என்பதை மறுக்கமுடியாது. முன்பு நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு இப்பிரச்சனை இப்பொது அரசாங்கங்களால் கவனிக்கப்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது.

கடந்த ஆகஸ்ட் மாதம், ஐநா சபையின் ஐ.நா காலநிலை மாநாட்டில் பேச, எரிசக்தி பயன்படுத்தாத, பாய்மரப் படகில், ஐரோப்பாவிலிருந்து நியூயார்க் சென்ற கிரேட்டாவை நூற்றுக்கணக்கானோர் நியுயார்க் துறைமுகத்தில் வரவேற்றனர். இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று விமானத்தில் பறப்பதையே அறம்சார்ந்த விஷயமாக மாற்றியதில் கிரேட்டாவுக்கு ஒரு முக்கியப் பங்கு உள்ளது. அதாவது, விமானங்கள் அதிகளவில் பசுமைக்குடில் வாயுவை வெளிப்படுத்துவதால் விமானப் பயணங்களை இயன்ற வரை தவிர்க்க வேண்டும் என்று ‘பறத்தல் அவமானம்’ எனப் பிரசாரம் செய்து வருகிறார். ஐ.நா.வின் பருவநிலை மாநாட்டில் உரையாற்றிய அவர் பேசியது வெறும் 495 வார்த்தைகள் மட்டுமே. “என் பெயர் கிரேட்டா தன்பர்க். எனக்கு வயது 16. எதிர்கால சந்ததியினர் சார்பாக பேச நான் இங்கு வந்துள்ளேன். உங்களில் பெரும்பாலானோர் நாங்கள் இங்கே சொல்வதை கேட்கமாட்டீர்கள் என்பதையறிவோம். எங்களை குழந்தைகள் என்று கூறி ஒதுக்கிவிடுவீர்கள். ஆனால் ஒருங்கிணைந்த பருவநிலை விஞ்ஞானத்தின் செய்திகளையே நாங்கள் சொல்லிவருகிறோம். பள்ளியில் பயிலாமல் காலத்தை விரயம் செய்கிறோம் என்று உங்களில் பலர் சொல்லக்கூடும். நீங்கள் விஞ்ஞானம் சொல்வதையும், நாங்கள் சொல்வதையும் செவிமடுத்துக் கேட்டால் நாங்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் என்று உறுதியளிக்கிறோம். இது ஒன்றும் அதீத எதிர்பார்ப்பு இல்லையே! முந்தைய தலைமுறையினருக்கு இல்லாத வசதிகளும் வாய்ப்புகளும், எங்களுக்கு இருப்பதாகச் சொன்னீர்கள். எங்கள் பாட்டன் பாட்டி கனவிலும் நினைக்க முடியாதவை எங்களுக்காக காத்திருப்பதாகச் சொன்னீர்கள். நாங்கள் எண்ணுவதெல்லாம் கைகூடும் என்று சொன்னீர்கள். ஆனால் இன்றோ எதுவுமே கைகூடாது போலிருக்கிறது. உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தைக் களவாடிவிட்டீர்கள்” என்று தொடங்கி, “இது முற்றிலும் தவறு. நான் இங்கு இருக்கக்கூடாது. அட்லாண்டிக் பெருங்கடலின் மறுபக்கத்தில் இருக்கும் என் ஊரில் அமைந்துள்ள பள்ளியில் நான் இருந்திருக்க வேண்டும். ஆனால், என்னால் அதைச் செய்ய முடியவில்லை. இதில், இளைஞர்களை நம்பி எதிர்காலம் உள்ளதாகக் கூறுகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” என்று கேள்வி எழுப்பிய கிரேட்டா, மேலும் 2030இல் அதாவது, இன்னும் 10 ஆண்டுகள், 252 நாட்கள், 10 மணி நேரத்தில் நாம் நம்மை மீறிய அழிவை தொடங்கி வைத்து விடுவோம், அநேகமாக மானுட அழிவின் தொடக்கமாக அது அமையும்” என்று கூறினார்.

இறுதியாக கிரேட்டா தன்பர்க், இன்று உலகம் முழுவதும் பேசப்பட்டாலும், அவரும், அவர் போன்ற சுற்றுப்புறச் சூழல் பற்றி பேசும் மற்ற இளைஞர்கள் பேசுவதும் யார் காதிலும் விழுந்தபாடில்லை. கிரேட்டா பேசிய ஐ.நா. மாநாட்டில் இன்றைய பெரும் தொழில்துறை உள்ள நாடுகளான அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு இதுகுறித்த அக்கறையும் இருப்பதாகவும் தெரியவில்லை. கிரேட்டா சொல்வதுபோல் அரசாங்கங்கள் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை குறைப்போம் என்று கூறுகின்றன. ஆனால் குறைப்பது பத்தாது. அறவே நிறுத்தவேண்டும். இது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்? இதைச் செய்வது கடினம்தான், குறைப்பு என்பது மிகச் சில ஆண்டுகளில் நிறுத்தத்தை நோக்கி நகரவேண்டும். இதற்கு செலவு செய்வதே நமது தலையாய செலவாக இருக்கவேண்டும்.” இல்லையேல் மானுடத்தின் இறுதி ஊர்வலத்தை தொடங்கி வைத்துவிட்டோம் என்றாவது உணர வேண்டும்.