சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ஃபாத்திமா என்ற மானுடவியல் மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலை என்பது கிட்டத்தட்ட ஒரு தொடர்கதை ஆகிவிட்டது. இதுபோன்ற தற்கொலைகள் இந்த சமூகத்தின் கூட்டு மனசாட்சியை ஒவ்வொருமுறை தட்டியெழுப்பும்போதும் அது நிமித்தமாக சில உரையாடல்கள், விவாதங்கள் நடக்கின்றன; சில நாட்களிலேயே இவற்றின்வழி பெறப்பட்ட முடிவுகளும் உயிரற்றுப் போகின்றன. மனிதர்கள் தொடர்ச்சியாகத் தங்களை மாய்த்துக் கொள்வதை ஒரு பண்பட்ட குடிமை சமூகத்தால் எந்தவித குற்றவுணர்ச்சியுமின்றி அத்தனை சுலபமாக கடந்து போக முடியாது. தற்கொலைகளின் நிமித்தம் முந்தைய காலத்தில் தொகுக்கப்பட்ட ஏராளமான தத்துவங்கள் சொல்வது ஒன்றுதான், ‘தற்கொலைகளை நாம் ஒரு தனிநபர் சார்ந்த பிரச்சினையாகப் பார்க்க முடியாது, ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் குறியீடாக நாம் தற்கொலைகளின் எண்ணிக்கையைக் கொள்ள வேண்டும். ஒரு சமூகம் அது கொண்டிருக்கும் தத்துவங்கள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் வழியாகவே மக்களின் வாழ்வியலை நிர்ணயிக்கும். மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இந்தச் சமூகத்தின் கோட்பாடுகள் நேரடித் தொடர்புடையவை. அதனால் அந்தக் கோட்பாடுகளை மக்களின் நலன்சார்ந்து பரிசீலிப்பது சமூகத்தின் கடமையாகும்.

ஒரு சமூகம் தன்னளவில் அதன் உறுப்பினர்களின் நலனை முதன்மையானதாக கொண்டிருக்க வேண்டும், மனிதம் மட்டுமே அதற்குப் பிரதானம். இதைப் புறந்தள்ளி புனையப்படும் எந்தக் கோட்பாடுகளும் மனிதத்திற்கும், மானுடத்திற்கும் எதிரானதாகவே இருக்கும். சமூகத்தின் வாழ்வியல் கூறுகளும், அறநெறிகளும், கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களும் அதன் மானுடப் பண்புகளில் இருந்து விலகிச்செல்லும்போது அது மனிதர்களின் மனநிலையின்மீது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அது அந்த மனிதர்களைத் தற்கொலையை நோக்கி இழுத்துச் செல்லும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் நாம் தற்கொலைகளை ஒரு சமூக அவலமாகக் கருதுவதில்லை. மாறாக, அதை ஒரு தனிநபர் பிரச்சினையாக இன்னும் குறிப்பாக அதை ஒரு தனிநபர் மனநலப் பிரச்சனையாக மாற்றவே முயல்கிறோம். சூழ்ந்துகொள்ளும் அவநம்பிக்கையும், சிதைந்த ஒரு மனமுமே தற்கொலையின் இறுதிப் படியாக இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதுவே முழு முதல் காரணம் என்று சொல்வது சுயநலமானது. ஒரு மோசமான மனநிலையில்தான் ஒருவர் தற்கொலையை நாடிச் செல்ல முடியும் என்பது வெளிப்படை,  அந்த மோசமான மனநிலையை ஒருவன் வந்து அடைந்ததற்கு யார் காரணம்? என்பதே நமது கேள்வியாக இருக்க வேண்டும்.

மனம் என்பது இந்தச் சமூகத்தோடு ஒன்றிணைந்தது. தனிப்பட்ட ஒருவரின் நலன் இந்தச் சமூகத்தின் நலத்தோடு பின்னிப்பிணைந்தது. ஒரு சமூகம் நலமாக இல்லாமல் ஒரு தனிப்பட்ட மனிதரின் மனம் நலமாக இருக்காது. இது மன நலத்திற்கு மட்டும் பொருந்துவதல்ல; பொதுவாக நலம் என்றாலே அதில் தனிநபருக்கான பொறுப்பைவிட சமூகத்திற்கான பொறுப்பு மிக அதிகம். குடிமக்களின் நலனைப் பேணிப் பாதுகாப்பது ஒரு சமூகத்தின் இன்றியமையாத கடமை என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. ஒருவர் நலமற்றுப் போகும்போது ஏதோ ஒருவகையில் இந்தச் சமூகம் தனது கடமையில் இருந்து விலகி இருக்கிறது என்று சொல்லலாம். அதேபோலவே ஒருவரின் மனநலம் சிதைந்து போவதற்கும் இந்தச் சமூகம் ஏதோ ஒருவகையில் காரணமாயிருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால் பொதுவாகவே இப்படி உணர்வதைத் தவிர்த்துவிட்டுத் தற்கொலைகளைத் தனிப்பட்ட நபரின் பலவீனங்களாகவே பாவிக்கும் மனப்போக்கு நம்மிடம் இருக்கிறது.

உயர்கல்வி நிலையங்களில் நடக்கும் தற்கொலைகளைப்பற்றி நாம் தொடர்ச்சியாகப் பேசி வந்துகொண்டே இருக்கிறோம். இதுதொடர்பான பல விவாதங்களில் என்னிடம் நிறைய பேர் கேட்பது ‘இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தால் ஒருவேளை இந்தத் தற்கொலைகளைத் தடுத்திருக்கலாம்தானே?’ என்பதுதான். ஒரு தனிநபரை ஆற்றுப்படுத்துதல் வழியாக தற்கொலைகளைத் தடுக்கலாம் என்பது ஒரு மூட நம்பிக்கையே, மனநல மூடநம்பிக்கை. ‘ஒரே பிரச்சனையை எதிர்கொள்ளும் எல்லோரும் தற்கொலைகளை நாடிச் செல்வதில்லை சிலபேர் மட்டும்தான் தற்கொலை செய்கிறார்கள். அப்படியென்றால் அந்த சில பேரின் மனநிலைதானே பிரச்சனை? எப்படி நாம் இந்தச் சமூகத்தை அதற்குக் காரணமாக சொல்ல முடியும்?’ என்று கேட்பவர்கள், ஒரு விஷயத்தை நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும். ஏன் இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மாணவர்கள் மட்டுமே தற்கொலை செய்துகொள்கிறார்கள்? ஏதோ ஒருவகையில், இந்தக் கல்வி நிறுவனங்களின் அமைப்பும், அதன் கல்விமுறையும் இந்த மாணவர்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்பதைத்தான் நாம் அதற்குப் பதிலாகக் கொள்ள முடியும். ஜாதிரீதியான, மதரீதியான ஒடுக்குமுறைகள் அதிகமாக இருக்கும் இடங்களில் இதுபோன்ற தற்கொலைகள் தொடர்ச்சியாக நிகழ்கின்றன என்பதை நாம் கடந்த காலங்களில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மாணவர்களைப் பொறுத்தவரையில் கல்வி என்பது அவர்களுக்கு வெறும் அறிவு என்றவகையில் நாம் சுருக்கிப் பார்க்க முடியாது. அது அவர்களுக்கு எதிர்காலம். கல்வி மட்டுமே அவர்களின் அத்தனைத் துயரங்களில் இருந்தும் அவர்களை மீட்கக்கூடியது. ஒரு மேற்மட்டத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கிடைப்பதுபோல இவர்களுக்குக் கல்வி அத்தனை சாதாரணமாக கிடைத்துவிடுவதில்லை, அவர்களின் சமூக, பொருளாதாரச் சூழலில் கல்வியைத் தொடர வேண்டும் என்றாலே அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும், எத்தகைய கல்விப் பின்புலமும் இல்லாத, எத்தகைய வசதிகளும் இல்லாத, கல்வியின் வாசனையே நுகராத ஒரு விளிம்புநிலை குடும்பத்திலிருந்து வெறும் கல்வி என்ற ஏணியை மட்டுமே பிடித்து மேலே வரும் ஒருவனுக்கு வாழ்க்கை சார்ந்த ஏராளமான கனவுகள் இருக்கும், எதிர்பார்ப்புகள் இருக்கும். அப்போது கல்வியைத்தான் அவர்கள் அத்தனையும் வழங்கும் அட்சயப் பாத்திரமாக அவர்கள் நம்பி வருவார்கள். அந்தக் கல்வி அவனது ஜாதியை வைத்து, மதத்தை வைத்து, மொழியை வைத்து மறுக்கப்படுமானால், வாழ்க்கை சார்ந்து அவன் கொண்டிருக்கும் அத்தனை நம்பிக்கைகளும் தகர்ந்து போகும். இத்தனை கடினமான பாதைகளைக் கடந்து, வெறும் கல்வியையும் அறிவையும் மட்டுமே கை நிறைய சுமந்து கொண்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு வரும் ஒரு மாணவனை அவனது கல்வியை வைத்து மதிப்பிடாமல், அவனின் பெயரை வைத்தும், ஜாதியை வைத்தும், மதத்தை வைத்தும் மதிப்பீடு செய்யும்போது உண்மையில் அவன் இந்த அமைப்பின்மீது நம்பிகையற்றவனாய் போகிறான். அவனுக்கு நியாயமாகக் கிடைக்கக்கூடிய அங்கீகாரங்களும் வாய்ப்புகளும் மறுக்கப்படும்போது, ஏற்றத்தாழ்வுகளுடனும், பாரபட்சங்களுடனும் அவன் நடத்தப்படும்போதும், மற்றவர்களுக்கு முன் அவனது திறமைகள் நிராகரிக்கப்படும்போதும், அவமானப்படுத்தப்படும்போதும் அவன் பற்றிக்கொள்ள நாம் எத்தகைய பிடிமானத்தை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்? ஒரு சமூகமாக நாம் தோற்கும் இடம் இதுதான்.

கல்வி என்ற நூலை மட்டுமே பற்றிக்கொண்டு மேலெழுந்த வந்த ஒருவனை, அந்த நூலைக் கொண்டே அவனது கழுத்தை நெறிக்கும் வேலையைத்தான் நமது உயர் கல்வி அமைப்புகள் செய்கின்றன. இந்த அமைப்பில் சிக்கிக்கொள்ளும் ஒருவன் வாழ்தல் தொடர்பான அத்தனை நம்பிக்கைகளையும் தொலைத்த அந்த மனநிலையில்தான் தற்கொலையை நாடிச் செல்கிறான். அந்த ஒரு குறிப்பிட்ட கணநேர மனநிலையை மட்டுமே வைத்துக்கொண்டு நாம் தற்கொலைகளைத் தனிப்பட்ட நபர்களின் பிரச்சினைகளாக உருவகம் செய்து கொண்டிருக்கிறோம்.

கடந்த காலங்களில் இந்த நிறுவனங்களில் நடந்த மாணவர்களின் தற்கொலைகளில் இருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. இன்னமும் தனிநபர் கவுன்சிலிங் செய்தால் தற்கொலைகளைத் தடுத்துவிடலாம் என நம்பிக்கொண்டிருக்கிறோம். தனிநபர் காரணங்களே தற்கொலைகளுக்கு இல்லை எனச் சொல்ல வரவில்லை. ஆனால், எல்லாத் தற்கொலைகளிலும் நாம் அதையே தேடிக்கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. சமூக அவலங்கள் (sஷீநீவீணீறீ ணீபீஸ்மீக்ஷீsவீtஹ்) தற்கொலைகளுக்கு மிக முக்கியமான காரணங்கள் என்று பல உளவியல் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஆனாலும் நாம் அதுசார்ந்து எதுவும் சிந்திப்பதில்லை. உயர்கல்வி நிறுவனங்கள் ஏழை -எளிய, பின்தங்கிய தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மாணவர்களுக்கு ஆபத்தானதாக இருக்கிறது என்பதைத்தான் அங்கே நிகழும் இதுபோன்ற தொடர் தற்கொலைகள் நமக்குச் சொல்கின்றன, வலியவை நிலைக்கும்(survival of the fittest) என்பதை வைத்துக்கொண்டு உறுதியான மனநிலை இருந்தால் யாரும் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் என்று நமக்கு நாமே கற்பித்துக் கொண்டிருப்பது ஒரு ஏமாற்று வேலை.

ஒரு குடிமை சமூகத்தின் தத்துவம் survival of the fittest என்ற தத்துவத்திற்கு நேர் எதிரானது. சமூகத்தின் விளிம்புநிலையில் இருப்பவர்களை, கடைநிலையில் இருப்பவர்களைப் பாதுகாப்பதையே ஒரு குடிமை சமூகம் முன்னிலைப்படுத்த வேண்டும். சமநிலையற்ற ஒரு சமூகத்தில் அத்தனைப்பேரையும் சமமாகப் பாவிக்க முடியாது. ஒரு வசதி வாய்ப்பற்ற, எளிய, தாழ்த்தப்பட்ட, கல்வியின் வாசனையே நுகராத குடும்பத்தில் சேர்ந்த ஒரு மாணவனையும், பல தலைமுறைகளாக கல்வியை அனுபவித்து, சமூகத்தின் அத்தனை வசதிகளையும் கொண்டிருக்கும் குடும்பத்திலிருந்து வரும் ஒரு மாணவனையும் ஒன்றாக மதிப்பிட முடியாது. ஒரு பொறுப்புள்ள சமூகம் முந்தைய நிலையிலிருக்கும் ஒரு மாணவனையே, அவனது கல்வியையே, அவனது உரிமையையே, அவனது பாதுகாப்பையே பிரதானமாகக் கொள்ள வேண்டும். சாதிய வன்மமும், மொழி வன்மமும், மதரீதியான வன்மமும் அதிகரித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் இந்த அடிப்படைவாத அடையாளங்கள் பெரும்பான்மையான உயர்கல்வி நிறுவன ஆசிரியர்களின் மனதில் படிந்துள்ளது, அதுமட்டுமில்லாமல் இத்தகைய உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு சரியாகப் பின்பற்றாத காரணத்தினால் அங்கு பெரும்பாலும் உயர் சாதியினரே ஆசிரியராக இருக்கும் நிலைமையையும் நாம் பார்த்து வருகிறோம். யாரிடம் இருந்து நமது மாணவர்களைப் பாதுகாக்க வேண்டுமோ, அவர்களிடமே பாதுகாக்கும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறோம், அவர்களை வைத்தே நமது மாணவர்களை மதிப்பீடும் செய்கிறோம். இந்த அமைப்பில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த தற்கொலைகள் நமக்கு உணர்த்துகின்றன.

சாதியம் படிந்த சமூகம், சாதிய பெருமிதங்களைப் பண்பாடுகளாய் உள்ளிழுத்துக்கொண்ட கலாச்சாரம், பிரிவினைகளும், பாரபட்சங்களும் நிரம்பிய கல்விமுறை, ஆசிரியர்களின் மனதில் படிந்துகிடக்கும் சாதிய துவேஷங்கள், அதைக் களைவதற்கான எந்த செயல்திட்டங்களும் இல்லாத அரசு, எந்தவித குற்றவுணர்ச்சியுமின்றி இந்தத் தற்கொலைகளை அன்றைய பரபரப்பாக கடந்துசெல்லும் நாம் என இந்தத் தற்கொலைகளின் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் நாம் அத்தனையையும் புறந்தள்ளிவிட்டுத் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் மனநிலையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அந்த மாணவனையே அதற்குக் காரணமாக கூண்டில் நிறுத்துகிறோம்.

உண்மையில் இந்தத் தற்கொலைகளை தடுக்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்? மாணவர்களின் தற்கொலைகளைத் தடுப்பதற்கான சில தெளிவான வழிகாட்டுதல்களை மானுட ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், மனநல மருத்துவர்கள், மாணவர்களின்மீது அக்கறைகொண்ட ஆசிரியர்கள் போன்றவர்களைக் கொண்டு ஏற்படுத்த வேண்டும், அந்த வழிகாட்டுதல்களின் வழியாக உயர்கல்வி நிறுவனங்களின் அமைப்பை மாற்ற வேண்டும். மேலும் இடஒதுக்கீடு முழுமையாக இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். பல முற்போக்கு உரையாடல் தளங்களை கல்வி நிறுவனங்களில் ஏற்படுத்த வேண்டும், வெறும் கல்வி என்பதைத் தாண்டி சமூக, அரசியல், பொருளாதாரங்கள்மீதான அறிவையும், விழிப்புணர்வையும் மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மாணவர்களுக்கான தேசிய அளவில் ஒரு வெளிப்படையான விசாரணை அமைப்பு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்களை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தேசிய அளவில் மாணவர்களுக்கிடையேயான ஒரு வலுவான அமைப்பை உருவாக்குவதன் வழியாக தனிப்பட்ட மாணவனின் பிரச்சினைக்குத் தேவையான கவனத்தை ஈர்க்க முடியும். விளிம்புநிலை மாணவர்கள் தனியாக இல்லாமல் ஒரு அமைப்பாக இந்த ஒடுக்குமுறைகளை அணுகும்போது இந்த ஒடுக்குமுறைகளை நம்பிக்கையின்மையின் வழி அணுகாமல் ஒரு சவாலாக அணுகத் தொடங்குவார்கள், இத்தகைய ஒருங்கிணைப்பை அவர்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியமானது. இன்றைய சமூக ஊடக காலத்தில் இது ஒன்றும் கடினமானதல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தற்கொலைகளை நாம் தனிப்பட்ட நபர்களின் பிரச்சினையாக மதிப்பீடு செய்துகொள்ளாமல் நிறைய பொறுப்புணர்வோடு, நேர்மையாகவும் நாம் வாழும் இந்தச் சமூகத்தைச் சுயபரிசோதனை செய்து பார்த்துக்கொண்டால் அதில் எந்த அளவிற்கு நமது பங்கும் இருக்கிறது என தெரிந்துகொள்ள முடியும். சமூக அவலங்களால் நிகழும் தற்கொலை என்பது தனிப்பட்ட மனிதரின் தோல்வி அல்ல; ஒட்டுமொத்த சமூகமாக நம் ஒவ்வொருவரின் தோல்வி என்பதை உணர்ந்தால்தான் நம்மால் இந்தத் தற்கொலைகளைத் தடுக்க முடியும்.