ஏழு நிலவுகள்
இன்று கடற்கரையில்
ஏழு நிலவுகளைக் கண்டேன்
ஒரு நிலவு
யாரோ ஒருவனின் தோளில்
தலை சாய்ந்து
ஏதோ கிசுகித்துக்கொண்டிருந்தது
ஒரு நிலவு தனித்தமர்ந்து
செல்போனில் யாருடனோ
பேசிக்கொண்டிருந்தது
ஒரு நிலவு
மணலில் தன் விரலால்
கோலமிட்டுக்கொண்டிருந்தது
இரண்டு நிலவுகள்
கடல் அலைகளை
தங்கள் பொன்னிற கால்களால்
உதைத்து உதைத்து
விளையாடிக்கொண்டிருந்தன
இன்னொரு நிலவு
தன் குழந்தைதையை
தோளில் சாய்த்து
தூங்கவைத்துக்கொண்டிருந்தது
இவை அல்லாமல்
உபரியாய் ஆகாயத்தில்
ஒரு நிலவு இருந்தது
தற்செயலாய்
அதையும் கண்டேன்
பிரிவுப் பாடல்
உன் அலைபேசி எண்ணை
நீ மாற்றுவதற்குள்
இரண்டு நிமிடங்கள்
நான் சொல்வதைக் கேள்
நமக்கிடையே
மெய்யான சில சொற்கள் இருந்தன
விருப்பத்துடன் கூடிய
சில ஸ்பரிசங்கள் இருந்தன
மறக்கமுடியாத சில தருணங்கள் இருந்தன
சில மழைக்காலங்கள் இருந்தன
சில வாக்குறுதிகள் இருந்தன
உனக்கு நீயே
அவற்றை எவ்வளவு மறுத்துக்கொண்டாலும்
அவை இருந்தன
நாம் நிலவுக்கு கீழ்
நின்றிருந்த காலங்கள் இருந்தன
ஒருவரை நாம்
குப்பைக்கூடைக்கு அனுப்பும்போது
ஒரு நாப்கினை அனுப்புவதுபோல
அனுப்பக்கூடாது
எவ்வளவு கசந்துவிட்ட உறவுக்கும்
ஒரு குறைந்த பட்ச கண்ணியம் இருக்கிறது
ஒரு வாடிய ரோஜாவை
கூந்தலிலிருந்து அகற்றுவதுபோல
அவரை அகற்றவேண்டும்
நினைவுகளை
சலவை செய்யும் இயந்திரங்கள் எதையும்
மனிதர்கள் கண்டுபிடிக்கவே இல்லை
அன்பின் விளிம்புகளில் நிற்பது
பாதாளங்களின் விளிம்பில் நிற்பதுபோல;
சட்டென பின் வாங்க இயலாது
பற்றிய கரத்தை சட்டென உதறுகையில்
நீ கொஞ்சம் நான் நிற்கும்
அபாயத்தை யோசித்திருக்கலாம்
எல்லோருமே
எல்லோருக்குமே
சீக்கிரம் தீர்ந்துபோவோம்
ஆனாலும் தூக்கி எறிய மனமின்றி
சில அழகான காலி மதுப்பாட்டில்களில்
மணிப்ளாண்ட் செடிகளை வளர்ப்பதில்லையா?
நீயும் கூட என்னை
ஒரு மாற்று ஏற்பாடாக தக்கவைத்திருக்கலாம்
உன்மீது நான் கொண்டிருந்த காதல்
இப்போது இருக்கிறதா என
எனக்குத் தெரியவில்லை
சில மோசமான பழக்கங்களை
நம்மால்விடமுடியாததுபோல
உன்னையும் என்னால் விடமுடியவில்லை
அவை நம் மனதின்
ஒரு பகுதியாகிவிடுகின்றன
யாரிடமோ சமரசம் செய்துகொள்வதற்காக
என்னை ஒரு சூதாட்டப் பணயமாக
பயன்படுத்தினாய்
என்பதுதான் சங்கடமாக இருக்கிறது
மூன்றாம்தர மனிதர்களைபோல
ஒரு முறை துயரத்தின் உச்சத்தில்
உன்னை பழிவாங்க நினைத்தேன்
பிறகு அதற்கு எந்த வாய்ப்பும் இல்லாமல்
அவமான உணர்ச்சியோடு
நம் உறவின்
எல்லாத் தடயங்களையும் அழித்தேன்
ஒரு அன்பை
அவ்வளவு எளிதில் உதறுவது
நம்மை அன்பிற்கு தகுதியற்றவர்களாக்குகிறது
பதற்றத்தில் நாம் அதைச் செய்கிறோம்
ஒருவருக்காக இன்னொருவரை
இழக்கத்துணியும்
இந்த அபத்தத்தை மட்டும்
என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை
நாம் அவ்வளவு விரும்பிய ஒருவர் இல்லாமல்
நம்மால் எப்படி வாழமுடியும்?
வாழ்வென்பது எல்லோரும் சேர்ந்தது இல்லையா?
உன்னைப் பற்றிய
எல்லா அற்புதங்களும் மறைந்து
உன் சுயநலம் மட்டுமே
உன்னைப்பற்றிய ஞாபகமாக மிஞ்சுவது
மிகவும் துக்கமாக இருக்கிறது
இரண்டு நிமிடங்கள்
முடிந்துவிட்டன
இனி உன் அலைபேசி எண்ணை
நீ மாற்றிக்கொள்ளலாம்
அல்லது என்னை ப்ளாக் செய்யலாம்
ஒரு முத்தம்
ஒரு முத்தம்
அது மிக நேரடியானது
நிபந்தனைகளற்றது
முன்னுரைகளோ
பின்னுரைகளோ அற்றது
பத்துவிநாடிகளே நிகழ்ந்தபோதும்
வெகுநேரம்போல பிரமை தருவது
காதலின் கலப்படமற்று
தூய காமத்தாலானது
கண்ணீர் இல்லாதது
பேரங்கள் இல்லாதது
பயம் இல்லாதது
இன்னும் இன்னும் என பரிதவிப்பது
உதடுகளில் வனநெருப்பை மூட்டுவது
குற்ற உணர்வற்றது
வேறு எந்த முத்தத்தையும் நினைவூட்டாதது
துர்வாசனைகள் இல்லாதது
தூய நீர்போன்றது
விடுபடும்போது ஒரு வெட்டவெளில்
கைவிடப்பட்டதுபோல தனிமை உணர்வது
அதைப்பற்றி அதன்பின்
ஒருபோதும் பேசவிரும்பாதது
எப்போதவது அப்படி ஒரு முத்தம் நிகழும்
அப்போது நாம்
அங்கே இருக்கவேண்டும்
அதற்கு தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும்
அது நமக்கு நிகழவேண்டும்
அன்பே
அந்த முத்தம்
நமது முத்தமாக இருக்கவேண்டும்
மழைக்காலத்தில் முன்னேறுதல்
நம் மனங்கள்போலத்தான்
இம்மழைக்கால வானங்கள்
நல்ல வெளிச்சம் இருக்கும்போதே
சட்டென இருண்டுவிடுகின்றன
கடலுக்கு மேலே
அடிவானில் பெரும் மேகக்கூட்டங்கள்
திரண்டுவருவதைக் காண
நான் மிகவும் அச்சமடைகிறேன்
அவை வரப்போகும்
ஒரு மோசமான காலத்தின்
தோற்றம்போல இருக்கிறது
கொஞ்சம் முன்னர்கூட
நல்ல வெய்யில் இருந்தது
திடீரென நூறு நூறு குடைகள் விரிந்து
மக்கள் மழையோடு
சாலைகளில் நடந்துபோகிறார்கள்
இவ்வளவு பேர்
எப்படி மழைவரும் எனத் தெரிந்து
ஆயத்தமாக குடையோடு வந்தார்கள்?
பெண்கள் அவ்வளவு மகிழ்ச்சியோடும்
கூச்சத்தோடும்
மழையில் செல்கிறார்கள்
மழை அவர்கள் மனங்களை
விடுதலை செய்கிறதுபோலும்
மேலும் பெண்களே
மழைக்கு பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள்
ஆண்கள் எப்போதும்
மழைக்கு வெளியே இருக்கிறார்கள்
மைதானத்திற்கு
கிரிக்கெட் ஆடவந்த பையன்கள்
ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே
வெளியேறுகிறார்கள்
ரோஜா செடிகளை விற்பவனின் தொட்டிகளில்
ரோஜா இலைகள் மழையில் நனைகின்றன
திடீரென சாலைகளில்
வாகன நெரிசல்
வாகனங்களின் சிவப்பு விளக்குகள்மேல்
மழை சிதறிப்பெய்கிறது
வாகன ஓட்டிகள்
சலிப்புடன் மழையைப் பார்க்கிறார்கள்
விஸ்கியின் அடர்ந்த வாசனையும்
சிகரெட்டின் நிகோட்டின் கதகதப்பும்
ஒரு பெண்ணுடல் குறித்த மங்கலான நினைவும்
மழைச்சத்ததினூடே
மூளையை சீண்டுகிறது
இல்லை,
நம் மனங்களை
இந்த மழையில்
நாம் சிதறவிடக்கூடாது
மழையோடு மழையாக
நம் இலட்சியப் பாதைகளில்
செல்லவேண்டும்
மழை தரும் கனவுகளுக்கு அப்பால்
மழை உண்டாக்கும் பலவீனங்களுக்கு அப்பால்
நாம் இயந்திரமனிதர்கள்போல
முன்னேறிச் செல்லவேண்டும்
சாம்பலிலிருந்து நீலத்திற்கு
அன்பு மொழியொன்றை
கையிலிருந்து வண்ணத்துபூச்சியை
விடுவிப்பதுபோல விடுவித்தான்
அது பறந்து பறந்து
இன்பாக்ஸில் ‘ க்ரே டிக்’ எனும்
ஒரு பூவில் அமர்வதை
வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்
அந்த ‘ க்ரே டிக்’ எப்போது
‘ ப்ளூ டிக்’ காக மாறுகிறதோ
அப்போதுதான்
அந்த மலர் மலரும்
எவ்வளவு நேரமாக
‘க்ரே டிக்’கைப் பார்த்துக்கொண்டிருந்தான்
என்று தெரியவில்லை
மிகவும் சலிப்பாக உணர்ந்தான்
தான் ஏன் இப்படி
ஒரு ‘ க்ரே டிக்’ வேதாளம்போல
தொங்கிக்கொண்டிருக்கிறோம்
என்று துயரமடைந்தான்
‘ பாப் அப்’ பில் பார்த்துவிட்டு
வேண்டுமென்றே தனது செய்தியை
பாராதிருக்கிறாளா என்றுகூட சந்தேகித்தான்
அந்த அன்பின் வாக்கியத்தை
திரும்பப்பெற்று
அழித்துவிடலாமா என்றுகூட
அவனுக்கு ஒரு கணம் தோன்றியது
ஒன்றை கண்மூடித்தனமாக நம்புகிறவர்கள்
அப்படிச் செய்வதில்லை
அவன் கண் இமைக்காமல்
பார்த்துக்கொண்டேயிருந்தான்
ஒரு மின்னல் கணத்தில்
அற்புதம் நிகழ்தது
அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே
‘ க்ரே டிக்’ விநாடிக்கும் குறைவான நேரத்தில்
அது ‘ ப்ளூ டிக்’க்காக மாறியது
அப்போது ஒரு கதவு திறக்கும்
ஓசையைக் கேட்டான்
அங்கேயே இருந்தான்
ஒன்றும் நிகழவில்லை
‘ ப்ளூ டிக்’ கிற்கு மேல்
எதுவும் இல்லாத பேரமைதி கவிந்தது
எவ்வளவோ நேரமாகியும்
அதன் மேல் எந்த மறுமொழியும் இல்லை
ஒரு ‘ஸ்மைலி’ கூட இல்லை
அந்த வண்ணத்துப்பூச்சி நிறமிழக்கத் தொடங்கியது
அந்த மலர் வாடத் தொடங்கியது
கைவிடப்பட்ட அந்த ‘ ப்ளூ டிக் ‘
அவன் இதயத்தில்
இரத்தச் சிவப்பாக மாறத் தொடங்கியது
அவமானமாக உணர்ந்தான்
அதனால் எதையும் மாற்ற முடியாது
வழக்கம்போல
குடிக்கப் போகலாமா என
யோசித்தபடி நடக்கத் தொடங்கினான்