எட்வர்ட் செய்த் பின்நவீனத்துவவியலாளர்களின் தொடர்ச்சியில் அறியப்படுபவர். எனினும் அவரது பாலஸ்தீனம் மற்றும் அரபு நாடுகள் குறித்த கரிசனம் அவரது அரசியல் கோட்பாட்டை நிறுவ அடிப்படையிலானது. பிறப்பு இஸ்ரேலில் பாலஸ்தீனப் பகுதியில் இருந்தாலும் ஒரு கிறிஸ்துவராகவும் பின்னாட்களில் எகிப்திற்கு புலம் பெயர்ந்து அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றவர் என்பதால் அவரிடம் கீழ், மேல், கிழக்கு மேற்கு என்ற உளவியல்களின் சரிவிகித பரிமாணத்தை உணர முடியும். ஆங்கில இலக்கியம், மொழியியல் ஆகியவற்றிலும் அவர் பெற்ற கல்வி இவரை பின்நவீனத்துவ அழகியல் மற்றும் அரசியல் தளங்களில் செலுத்தியிருக்கக்கூடும். எட்வர்ட் செய்த்தின் ஆய்வு அணுகுமுறைகள் பின்காலனியம், பின்நவீனத்துவம் மதங்கள் மற்றும் இசுலாமியம் ஆகியவற்றின் வரலாறும், சமூகமும் இணைந்த சாராம்சம் குறித்த பார்வை, நவீன அழகியல் என்ற பல் அடுக்குகளாக பகுத்துணரலாம். ஐரோப்பிய ஆதிக்கம் 19 ஆம் நூற்றாண்டின் துவக்க நிலையில் உலகு தழுவியதாக ஆகிய நிலையில் ஐரோப்பியமே உலகம் என்ற கருத்து பரவலாக்கம் செய்யப்பட்டது. ஆங்கிலம் உலகின் மையப்பொதுமொழியாக ஆனது. இருப்பினும் ஆங்கிலக்கல்வி கீழை நாடுகளிலும் தழைத்ததன் காரணமாக ஐரோப்பிய பகுத்தறிவுவாதம், விடுதலையியல் ஆகியவற்றை உள்வாங்கிக் கொண்ட படித்த வர்க்கம் கீழைத்தேயங்களின் உரிமைகளும் பற்றி உரையாடல் நிகழ்த்தியது. ஐரோப்பிய சமூகம் வளர்ச்சியடைந்ததற்கு அங்கு தோன்றிய விடுதலை அரசியலும் அதனால் ஏற்பட்ட சமூக மாறுதல்களும், விஞ்ஞானம் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்று நிலைமைகளுமே காரணம். அதனை உணர்ந்து கொண்ட இதனைப்போன்ற சிந்தனைகள் பல்கிப் பெருகிய போது தேசியப் போராட்டங்கள் உருவகிக்கப்பட்டன. காலனிய நாடுகள் தத்தமது பண்பாடுகள் உட்பட தம்மைச்சார்ந்தன யாவற்றையும் மேலைநாடுகளின் பிடியிலிருந்து விடுவிப்பது தமக்கான சுயசார்பை அரசியல், பொருளாதாரம் உட்பட சகலவற்றிலும் கட்டமைப்பது என்பது மைய நீரோட்டத்தில் உருவகமானது. மேலைநாட்டினர் கீழைநாடுகள் தம்மிடமிருந்தே அறிவியல், நிர்வாகம், சட்டம், உயர்கல்வி ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் மிதப்பு நிறைந்த மேலாதிக்க குணத்தை ஓரியண்டலிசம் எனும் ஒற்றைச் சொல்லாக வடிவமைத்தனர். ஓரியண்டலிசத்தில் மேற்கண்டவை தெளிவாகவோ, முழுமையாகவோ இல்லாதவை என்பது அத்தகைய கருத்து. மேலும் ஓரியண்டலிசம் எனப்படுவது கீழைத்தேய நாடுகள் தமது பண்பாடு, மருத்துவம், தத்துவம் ஆகியவற்றிலும் நாகரீகத்திலும் தரம் தாழ்ந்தவை எனச் சித்தரிக்கப்படுவதற்காகவே உருவாக்கப்பட்டது. அச்சொல்லாடல் மேலைத் தேயம் எதனைத் தனது அறிவு மற்றும் அணுகுமுறைகளுக்காக மேன்மைப்பட்டதாகக் காட்டிக் கொண்டதோ அத்தகைய மொழி, குறிப்பாக ஆங்கிலம், சட்டம் குறித்த விழிப்புணர்வு பகுத்தறிவியல், மதங்கள் சமூக நிறுவனங்களாக வகைமைப்படுத்தல் என இவ்வாறான நிறுவனவியல் அறிவு கீழைத் தேயத்தினரால் உள்வாங்கப்பட்ட போது கீழைத்தேயம் என்ற கருத்து பெருமிதம் வாய்ந்த ஒன்றுதான் என்பதை அவர்கள் உருவாக்க முனைந்தனர். காந்தியத்தையே அதற்கு உதாரணமாக கூறலாம். அம்பேத்காரியம் இரண்டாவது. மேலைநாட்டுச்சட்டங்களை உள்வாங்கிக்கொண்டு இந்தியச் சமூக வரைபடத்திற்குத் தகுந்தவாறு அதனை வடிவமைத்ததில் அவரது மேதமை விளங்கும். உரையாடலின் போது எட்வர்ட் செய்த் குறித்த நூலை எழுதிய எச்.பீர்முஹம்மது “எவ்வாறு வங்காளத்தில் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட ஆய்வியல்கள் கார்ல் மார்க்ஸ் இந்தியா பற்றி அறிவதற்கான தரவுகளை வழங்கியது’’ என்று குறிப்பிடுகிறார். அவற்றில் ஒன்று அமெரிக்கர் டேவிட் கோப் எழுதிய British Orientalism and the Bengal Renaissance : The Dyamics of Indian Modernisation 1773-1885 குறிப்பிடத்தகுந்த நூலாகும். ஆகவே ஓரியண்டலிசம் என மலிவாக வழங்கப்பட்ட ஒன்று சார்ந்த தேடல் கொண்டவர்களாலும் மக்களாலும் மேற்கத்திய கல்வியின் அடிப்படையில் சுய சார்புடையதாகக் கட்டமைக்கப்படும் போது பெருமிதம் மிகுந்த கருத்தாக்கமாகவும் ஆகிப் போகின்றது. மாவோ நமக்கான ஆயுதத்தை நமது பகைவனே தீர்மானிக்கிறான் என்பார். மட்டுமல்ல, ஆயுதத்தைக் கூர்மைப்படுத்துவதற்கும், அவனே காரணம் என்று நாம் அடுக்கிக் கொள்ளலாம். இந்திய கீழைத்தேய அறிவுகளில் மேலைநாட்டினரின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்தது. கிறிஸ்துவம் ஒரு போதனை சார்ந்த மதமாக இருந்ததனால் அது கால்பட்ட இடங்களில் சீர்திருத்தம், சுயமரியாதை ஆகியவற்றையும் அது முன்னெடுத்துச் சென்றது. இந்தியாவில் அது சாதிய தணிப்பையும் மேற்கொண்டது எனலாம். காலனிய நாடுகளில் இலக்கியம், அழகியல், தத்துவார்த்தம் மற்றும் பண்பாடுகளைக் காலனியம் புரிந்து கொள்வது தேவையானதாகவும் இருந்தது. மேற்கில் இருந்தும் பயணிகளாயிருந்த அறிஞர்கள் மேற்கண்ட துறைகளில் ஆய்வு செய்ததும், கீழைத்தேய இயலின் ஒரு பகுதியாக நாம் விளங்கிக்கொள்ளலாம். அவ்வகையில் கிரியர்சனின் ஆவணம் முக்கியமானது. Griersn’s Linguistic Survey of India அத்தகைய ஒரு தொகுப்பு. மேலும் கால்டுவெல்லின் திராவிடம் மொழிகளின் ஒப்பிலக்கணம் உள்ளிட்ட நூல்களையும் எவ்வாறு மொழி, சமூகம் சார்ந்த ஆய்வுகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக இருந்தன என்றும் புரிந்தும் கொள்ளலாம்.‘மாரிஸ்’ எனும் ஓரினக்கலவி குறித்த நாவல் படைத்தவரான ஈ.எம். பார்ஸ்டர் Passage to India நவீனத்தை கொல்கத்தாவாழ் வெள்ளை மருத்துவர் ஒருவரை கதாபாத்திரமாகக் கொண்டு படைக்கிறார். இந்திய சமூகங்கள் காதல், பாலுறவு போன்றவற்றை விலக்கு சார்ந்தவையாகப் பார்க்கின்றன. அவை ஏன் மேற்கைப் போன்ற இயல்பான உணர்வுகளாகப் பார்க்கப்படுவதில்லை எனும் தேடலில் பிறந்ததே இப்படைப்பு.
“கீழைத்தேயக் கருத்தாக்கம் ‘ஓரியண்ட்’ என்பது மேற்கிற்கு மாறானது.19 ஆம் நூற்றாண்டு மேற்கத்திய கலைஞர்களால் குறிக்கப்பட்டது. இச்சொல் ஜூலியஸ் அனதோன் என்பவரால் அதிகம் பயன்படுத்தப்பட்டது.’’ (எச்.பீர்முஹம்மது பக் 46) “கீழைத்தேயம் என்பது செய்த்தை பொறுத்தவரை வெறும் அரசியல் பொருளோ அல்லது கலாச்சார பிரதியோ, பரவலாக்கம் செய்யப்பட்ட பொருளோ அல்ல. மாறாக புவி சார்ந்த அழகியல், பொருளியல், சமூகவியலின் பகிர்தலே. மேலும் நாம் என்ன செய்கிறோம் என்பதிலிருந்து’’ அவர்கள் என்ன செய்ய முடியாது அல்லது நாம் என்ன செய்கிறோம் என அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். என்பதன் முரண்பாடு இது. (பீர்முஹம்மது பக் 47) “ கீழைத்தேயம் குறித்த கருத்தாக்கத்தை புரிந்து கொள்ள மூளை உழைப்பின் தூரத்தை செய்த் விளக்குகிறார். அதற்கு புகலி என்ற சொல்லைக் கையாண்டார். புகலி பற்றிய செய்த்தின் கலாச்சாரத்திற்கு உள்ளும், புறமும் அரசியல், சமூக சிந்தனை என எல்லா மட்டங்களிலும் மேற்குலகை நோக்கி எழுப்பும் கேள்விகளே. மேலும் கீழைத்தேயத்தை வடிவமைத்தவர்கள் எத்தகு பார்வை கொண்டவராக இருப்பினும் செய்த் அதனை முன்னெடுத்த நிலையில் அது மத்திய கிழக்கின் பார்வையாக இருந்து இப்போது பரிணாமமடைந்து தூரக்கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளையும் குறிப்பதாக உள்ளது.( பக் 47) கீழைத்தேயம் என்பதன் கருத்தாக்கம் துவக்கத்தில் நெப்போலியன் என்னும் லூயி போனபார்டின் எகிப்து ஆக்கிரமிப்பின் உருவகம் ஆகும். லூயி போனபார்ட் எகிப்தின் மம்லூக் அரசுகளை விரட்டியடித்து அங்கு நிலையான அரசை நிறுவ விரும்பினார்.
உலகமயமாக்கல் எனும் பொருளாதார தாராளமயமாக்கல் சந்தைகளைத் திறந்து விட்டதோடு உலகு தழுவிய பொருளாதார கூட்டிணைவையும் உட்பிணைப்பையும் உருவாக்கியது. திறந்து விடப்பட்ட சந்தை, சுற்றுலா மையத்தில் நிலை பெறும் மூலதனம் எனினும் உற்பத்தி உறவுகளின் நிரந்தரமின்மை பெருத்த சந்தைகள், புதுமைப்பொருட்கள் எனினும் தற்காலிக குணங்கள் நிறைந்த உலகமயமாக்கல் மனிதனின் மூளை உட்பட அனைத்தையும் பயன்படு பொருளாகவே பாவித்தது. விளைவு உலகின் பல்வேறு பண்பாடுகள் தத்தமக்குள் நிறைவானவையாக (அவை பிற்போக்காக இருப்பினும்) இருந்தவை நொறுங்கலாயின. “மேற்கின் பகுத்தறிவு தாக்கத்தினால் உருவான தொழில்துறை, நகரமயமாக்கல் மேற்கத்திய மயமாக்கல் மற்றும் நவீன மயமாக்கல் போன்ற கருத்தாக்கங்கள், கீழை நாடுகளின் கலாச்சார, நிறுவன மற்றும் கட்டமைப்பு வித்தியாசங்களைப் பெருமளவில் தகர்த்தது. (பக் 95) ஆங்கிலம் உலக சொல்லாடலாக ஆனது. துரித வகை நுகர்வு எங்கும் வியாபித்தது. உலகம் ஒருமுனைக்குவியமாக நிறைந்து வழிந்தது. அமெரிக்கா போன்ற புள்ளியையும் நவீன ஐரோப்பிய, அமெரிக்க குடிவாழ் உரிமை கோருதலையும் குவியமென உருவாக்கிய இந்நிலை ஒரு விதத்தில் வாழ்முறையை இவ்வாறு மையப்படுத்தவும் செய்தது. ஆனால் கீழைத்தேய அறிவுவாதிகள், சீரான உலகம் என்ற தாராளமயமாக்கல் பிரகடனத்திற்கு எதிரான கருத்துகளை முன்வைத்தனர். தாராளமயமாக்கலும் நவீன முதலாளியமும் தமக்குள்ளே இருந்து விமர்சனங்களை முன்வைத்த சிந்தனையாளர்களை உருவாக்கின. சார்த்தர் போன்ற இருத்தலியல்வாதிகள், பூக்கோ போன்ற பின் அமைப்பியல்வாதிகள் பண்பாடுகளின் மேல் கட்டப்பட்ட மனிதனின் நம்பிக்கைத் தகர்வு எவ்வாறு ஆயத்த நிலைக்கு அவனைக் கொண்டு செல்லும் என்று பாகுபடுத்தினார். மனிதனின் சாராம்சம் அவனுடைய இருத்தலே என்ற வகை விளக்கத்தையும் சார்த்தர் முன்மொழிந்தார். பூக்கோ, நிறுவனங்கள் அனைத்தும் அந்நியப்பட ஒழுங்குகளால் விரிவாக்கப்பட்ட கட்டமைப்புகள் என நிறுவினார். வரலாறு நெடுகிலும் அறிவுஜீவிகளின் பங்களிப்பு என்பது காணக்கிடைக்கின்ற ஒன்று. அறிவுஜீவிகளே ஒரு சமூகம் பழுதில்லாமல் இயங்குவதற்கான செயல்திறம் வாய்த்தவர்கள். மரபு சார்ந்த அறிவுஜீவிகள் தொழில்சார் நிபுணத்துவம் வாய்க்கப் பெற்ற மருத்துவர்கள், சட்ட மேதைகள் போன்றோர். இவர்கள் அதிகாரத்தின் சார்பாக நின்று அத்தகைய இயந்திரம் மக்களைக் கட்டுப்படுத்திட அவர்கள் நன்கு செயலாற்றல் பணிந்திட துணை நிற்பவர்கள். உதாரணமாக, எய்ட்ஸ் தொற்று நோய் அதிகம் பரவத் துவங்கிய 90 களில் உலகின் அனைத்து அரசுகள் மற்றும் கார்ப்பரேட்டுகள் தமது நிதியில் அதிகம் எய்ட்ஸ் நீக்கம் மற்றும் சிகிச்சை ஆகியவற்றிற்காக ஒதுக்கினர். சமூகம் எய்ட்ஸ் நோயாளிகளைத் தீண்டத்தகாதவர்களாக ஆக்கியது. எய்ட்ஸ் மருத்துவ நிறுவனங்களின் முழுமையான தொற்றுநோய் தடுப்பு இயந்திரவியலை முடுக்கியது. அதன் சுவர்களை உயர்த்தியது மற்றும் பணியாளர்களை உள்ளடைத்து கதவுகளை மூடியது. எதிர்காலம் அந்நியமாக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களின் தொகுப்புகள் ராணுவக் குடியிருப்பு வளாகங்களாக மாறும் என்பதை ஆல்வின் டப்ளர் தனது றிஷீஷ்மீக்ஷீ ஷிலீவீயீt நூலில் கணித்துக் கூறியுள்ளார். பூக்கோ மருத்துவமனைகள் உருவானபோதே நோய் தீர்ப்பியல் என்பது சமூகத்தின் அந்நியமாதல் குறியீடுகளின் முதன்மை பங்காற்றும் என்பதைக் கருத்துரைத்தார். ஆகவே நகர்மயமாதல் மற்றும் நவீனமயமாதல் மக்களை இரு பிளவாக்கில் பிரித்து சமூகம் ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய பெரு இயக்க இயந்திரமாக மாற்றிட உருவகித்தது. அறிவுஜீவிகள் அல்லது அறிவுவாதிகளின் பணி இங்கே இத்தகைய நீரோட்டங்கள் தொடர்ந்து வேறுபாடுகளுடன் இணைந்து குழப்பாமல் தொடர்ந்து ஒழுகி வருவதைக் கவனிப்பதாகும். ஆனால் கிராம்சி வடிமைத்த ‘அங்கக அறிவுவாதிகள்’ சமூகத்தில் அனைத்து மாந்தரின் அடையாளங்கள் உரிமைகள் மற்றும் நலன்கள் உறுதி செய்யக்கூடியவர்கள். கிராம்சியின் பார்வையில் அவர்கள் பாட்டாளி வர்க்கத்திலிருந்தே உதயமாகின்றார்கள். அறிவுவாதிகள் கீழைத்தேயத்தில் தாங்கள் சார்ந்த நிலங்கள், பண்பாடுகள் மாறுபட்ட போது அது தாராளமயமாதல் போன்ற எத்தகு இயக்கத்தாலும் நிலைகுலைந்தபோது நிலவும் அந்நியமாதலுக்கு எதிரான பதில்களைத் தயாரித்தனர். கத்தோலிக்க திருச்சபை அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட்டபோது, 16 ஆம் நூற்றாண்டில் புரொட்டஸ் டண்ட் அறவியல் சீர்திருத்தக் குரலாக ஒலித்தது. எனினும் அது முதலாளியம் சார்ந்த உற்பத்தி உறவுகளை சீரமைத்தது. (இதன் ஒரு பரிமாணத்தை வெபரிடமிருந்து மாற்றுப்பார்வையில் செய்த் முன்வைக்கிறார்.)
எட்வர்ட் செய்த் பாலஸ்தீன நெருக்கடியில் எகிப்து மற்றும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். நெப்போலியன், அல்ஜீரியா, மொராக்கோவைக் கைப்பற்றத் தொடங்கிய நாளில் இருந்து மேற்கின் ஆதிக்கம் கிழக்கின் மீது குவிகிறது. “ கலாச்சாரம் அசலானவர்களால் உருவாக்கப்பட வேண்டும்” என்ற பிரகடனத்தின் வாயிலாக அது தொடர்ந்து கீழைக் கலாச்சாரத்தை எள்ளல் செய்து வந்தது. கீழைத்தேயம் யதார்த்தத்தை தனது நம்பிக்கைகள் மற்றும் படிநிலை வர்க்கங்களால் கட்டமைக்கப்பட்ட சமூகங்களாக கொண்டிருந்தது இதற்குத் தோதாக அமைந்தது. நவீன காலங்களில் மேற்கின் ஆதிக்கம் பொருளாதார ரீதியாக எண்ணெய் வளம் மிக்க அராபிய நாடுகளைக் குறிவைத்தும், நிலவளமும், நீர்வளமும் நிரம்பிய ஆசிய நாடுகளில் நுகர்வு இவற்றின் மீதுமாக, வணிகம், நுகர்வு திணிப்பு ஆகியவற்றின் பொருளில் நிகழ்ந்து வந்தது. செய்த் இவற்றை மற்ற அறிஞர்களைப் போன்றே நன்கு உணர்ந்தவராக இருந்ததோடு, ஊழிக் காலத்திற்குப் பின் இஸ்ரேல், பாலஸ்தீன் சுயாதீன உரிமைகளை வலியுறுத்துபவர்களில் ஒருவராகவும் விளங்கினார். காலனியம் என்பது இனவாதக் கோடுகளாக காலனிய நாடுகளில் முன்னிறுத்தப்பட்டதாக நூலாசிரியர் எச்.பீர்முகம்மது குறிப்பிடுகிறார். ஆகவே காலனியம் மதங்களையும், இனங்களையும் எதிரானதாக வடிவமைத்தது.
ஐரோப்பிய காலனிகள் வர்த்தகத்தை ஒரு மூலமாகக் கையிலெடுத்தன. தொடர்ச்சியாக நிகழ்ந்த புலப்பெயர்வுகளாக அல்ஜீரியர்களின் பிரெஞ்சு குடியேற்றம், யூத இத்தாலியர் அமெரிக்க குடியேற்றம், 1947இல் இந்திய- பாகிஸ்தானியர் எதிர் குடியேற்றம் போன்றவை குறிப்பிடத்தகுந்தன. டயஸ்போரா என்று மேற்கினால் வடிவமைக்கப்பட்ட, கட்டாய இடப்பெயர்வை குறிக்கும் சொல் யூத ஆக்கிரமிப்பாளர்களின் பாலஸ்தீன ஒடுக்குமுறையைக் குறிக்கின்ற சொல்லாக இருந்ததை உணர்ந்த செய்த், “ஒடுக்குமுறை, கட்டாய இடப்பெயர்வு ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் எல்லா சூழலிலும் அதிகார வர்க்கத்திற்கு உடைமையானதாக இருக்கக்கூடாது.’’ (பீர்முகம்மது பக் 19) என விளித்து எதிரிடையான சொற்களால் பிரதிகளைக் கட்டமைக்க வேண்டியதன் தேவையை சொல்கிறார். எட்வர்ட் செய்த்தை பொறுத்தவரை கீழைத்தேயத்திற்கான தேர்வு என்பது நீண்டகாலத்தை சார்ந்தது. இந்த சொல்லாடல் சாசர், மாண்டிவெல்லி, ஷேக்ஸ்பியர், டிரைடன் மற்றும் பைரன் ஆகியோரால் பயன்படுத்தப்பட்டது. இது ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஆகியவற்றின் அற, கலாச்சார உள்ளடக்கத்தைக் கொண்டது. (பீர்முகம்மது பக் 20).
செய்த் ஓரியண்டலிசம் என்பதை நடு மைய அடையாளமாக வைக்கும் நிலையிலேயே அதன் பன்முகத் தன்மையை உணர்ந்து கொண்டுள்ளார். கல்வித்துறை சார்ந்த எல்லா சொல்லாடல்களும் அத்தகு நோக்கமுடையன அல்ல. மேலும் எல்லா கலாச்சாரங்களும் குறிப்பிட்ட எல்லைவரை மற்றவற்றை அந்நியமானவைகளாகவே கருதும். ஷேக்ஸ்பியர். பைரன் போன்றவர்கள் கீழைத்தேயக் கலாச்சாரத்தைத் தாழ்ந்ததாகவே எண்ணினர். (பீர்முஹம்மது பக் 21) இத்தகைய மாறுபட்ட பிரதிகளின் ஒப்புமையிலிருந்து துவங்கியதே செய்த்தின் ஓரியண்டலிச ஆய்வுகளின் அடிப்படை. விளைவாக செய்த் கலாச்சாரங்களின் அந்நியமாதல், அவற்றின் தகவமைப்பில் மதங்கள் மற்றும் நாகரீகங்களின் பங்கு என்ன என்பது குறித்து விரிவாக ஆராய்ந்தார். மேலும் புரட்சிகர சொல்லாடல் அரபுலகில் பன்மீய அர்த்தங்களை உற்பத்தி செய்வதாக செய்த் கண்டிருந்தார். (பீர்முஹம்மது பக் 20) பிரதி மற்றும் இலக்கியம் என்பது செய்த்தை பொறுத்தவரை அரசியல் சார்ந்தது. வரலாறு முழுக்க சுரண்டலும், விரட்டி அடித்தலும் நிகழ்ந்து வரும் நிலையில் நவீன அழகியல் அரசியல் சாராததாக இருக்க இயலாது. இஸ்லாத்தில் உள்ள குறைபாடுகளையும் அவர் அதனை ஒரு கிறிஸ்துவராக இருந்து ஆதரித்த போதும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியவர். பரந்த மனப்பான்மையை உடையவர். விமர்சனம் என்பது மார்க்சியம், பெண்ணியம், தாராளவாதம் இவற்றைத் தாண்டி உலகோடு தனிமனித விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். (பீர்முகம்மது பக்.33) வரலாறு நாகரீகங்களின் மோதல்களாகப் பின்னிப் பிணைந்தது என்னும் அளவில் வலிய கலாச்சாரங்கள் எளியவற்றை விழுங்குகின்றன. எனவே சாத்தியமற்ற, பொருந்தா இணைவுகள், பண்பு பேணும் நிலங்கள் யாவிலும் நேர்கின்றன. இலியட் “சாத்தியமற்ற சேர்க்கை’’ எனும் குறிப்பிட்ட கவிதையின் வரிகள் இவற்றை உரைக்கும்.
செய்த் மதங்களின் வரலாறு ஊடாக அவற்றின் எழுச்சி சீர்திருத்தம், போதனைகளின் வாயிலாக சமூகங்களின் மாறுதல் குறித்த இணையான பிரதிகளை உருவகிக்க முடியும் என்பவர். மத நம்பிக்கைகளையும், அறத்தையும் வலியுறுத்துவது. எனினும் முற்றாகத் தன்னை அரசு மற்றும் உற்பத்தி உறவுகளுடன் (சக்திகளுடன்) விலக்கிக்கொண்டதாக அது இல்லை. நீதியாளர்கள் இல்லாமல் நவீன மதம் செயல்படுவது கிடையாது. எனவே அரசுகள், மதம், தேசியத்திற்கு நடுவிலுள்ள இணைவுகளை செய்த் உற்று நோக்குவார். மதம் வலியுறுத்தும் நம்பிக்கைகள் ஆய்வாளனுக்கு முக்கியமானது அல்ல.
நூல் விரிவாகப் பல தளங்களில் செய்த்தின் பங்களிப்புகள் குறித்த ஆழ்ந்த, தெளிவான விளக்கங்களை அளிக்கிறது. எனினும் செய்த் தெரிதாவுடனான முரண் மற்றும் நவீன இணையத் தொழில்நுட்பம் பாவிக்கும் ஒரு சமூகத்தில் ‘கீழைத்தேயம் குறித்த ஒற்றைச் சொல்லாடல் எப்படி சாத்தியம்’ என்பதையும் ஆசிரியர் பீர்முஹம்மது விளக்க வேண்டும். மாணவர்களும், இலக்கியத் தேடலுள்ளவர்களும் யாவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.
எட்வர்ட் செய்த்தும் கீழைத்தேய இயலும்
ஆசிரியர்: எச்.பீர்முஹம்மது
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
எண்: 7 இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை & 18
தொலைபேசி: 044 & 24332424