அண்மையில் தி. லஜபதிராய் என்ற மதுரை நகரின் பிரபலமான வழக்கறிஞர் எழுதியுள்ள ‘நாடார் வரலாறு கறுப்பா? காவியா?’ என்ற புத்தகத்தை வாசித்தபோது, சாதி குறித்த சுயவிமர்சனப் பார்வையில் இன்று விவாதிக்க வேண்டியதன் அவசியம் புலப்பட்டது. சாதிய ஏற்றத்தாழ்வு என்பதைக் கடந்து வேறு புதிய உலகிற்குள் பயணித்து விட்டோம் என்ற நம்பிக்கை, கேள்விக்குள்ளானது. சாதி இன்று தமிழர் வாழ்க்கையில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைக் கண்டறிந்திட சாதியத்தை முன்வைத்த செயல்களையும் பேச்சுகளையும் வெளிப்படையாகப் பேச வேண்டிய நேரமிது. கடந்த நூற்றாண்டில் 1939ஆம் ஆண்டில்கூட மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நாடார் சாதியைச் சார்ந்தவர்கள் நுழைந்தால், தீட்டுப்பட்டு விட்டது என்ற நிலையுடன் இன்று தமிழகத்தில் நாடார் சாதியினர், பொருளாதாரரீதியில் அடைந்துள்ள முன்னேற்றத்தை ஒப்பிட வேண்டியுள்ளது. போன நூற்றாண்டில்கூட இழிவான சாதியினராகக் கருதப்பட்ட நாடார் சாதியினர், அதிலிருந்து மீண்ட வரலாறு கவனத்திற்குரியது. நாடார் சாதியினரை முன்வைத்துக் கறுப்பா? காவியா? என்று லஜபதிராய் எழுப்பியுள்ள கேள்விகள், பிராமணர்களைத் தவிர்த்து எல்லா சாதியினருக்கும் பொருந்தும். சாதி பற்றிய பொதுப்புத்தியுடன் இன்றைய தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட, இடைநிலைச் சாதியினரின் சமகால நிலைமை குறித்து ஆராய்ந்திடுவது அவசியமாகும். ‘சாதிகளை ஒழிக்க வேண்டும், எல்லோரும் சமம்’ என்ற பெரியாரின் கருத்தியல் செல்வாக்குடன் கடந்த ஐம்பதாண்டுகளாக வாழ்ந்த தமிழர்களின் நடப்புச்சூழலை மறுபரிசீலனை செய்யவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சாதி என்ற மரபான ஒற்றைச் சொல், இன்று புதிய அர்த்தத்தில் வழங்கப்படுகிறது. வைதீக சநாதனத்தை முன்னிறுத்துகிற ஆர்.எஸ்.எஸ். போன்ற மத அடிப்படைவாத அமைப்புகள் கட்டமைக்கிற அரசியல் கொடூரத்தின் வெளிப்பாடாகச் சாதி என்ற சொல் மாற்றப்பட்டிருக்கிறது. சாதி என்ற சொல்லுக்குப் பின்னர் பொதிந்திருக்கிற சநாதன அரசியல் காத்திரமானது. பருண்மையான கருத்தியல் வடிவம் இல்லாமல், பிறப்பு அடிப்படையில் ஓவ்வொருவரின் சமூக இருப்பையும் தீர்மானிக்கிற சாதி என்ற சொல், வரலாற்றில் வகிக்கிற பாத்திரம் விநோதமானது. இந்தியாவில் சாதி ஏன் இப்படி மனிதர்களைப் பிளவுபடுத்தி, தீராத துயரத்திற்குள் இன்றளவும் மூழ்கடிப்பதற்கான காரணங்கள் ஆய்விற்குரியன.

எனது பள்ளிப்பருவத்திலே ஒருவரை அடையாளப்படுத்தவும் இழிவுபடுத்தவும் பயன்படுத்தப்பட்ட சாதிப் பெயர்கள் குறித்து யோசித்திருக்கிறேன். எங்கள் ஊரில் வசதியான பின்புலத்தில் வளர்ந்த என்னை ஆதிக்க சாதியினர். ‘சாணாப் பயலே’ என்று சாதியின் பெயரால் கேவலப்படுத்த முயன்றபோது ஏன் இப்படி திட்டுகின்றனர் என வருத்தப்பட்டு இருக்கிறேன். என்னுடைய தந்தையார் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களின் பெயர்களுக்குப் பின்னால் ‘நாடார்’ என்ற சாதிப்பெயர் பின்னொட்டாக இருக்கையில், ஏன் சாணார் என்ற பெயரைச் சொல்லி எப்பொழுதும் கேவலமாகப் பேசுகின்றனர் என்று தோன்றும். காலையில் எழுந்து வைகை ஆற்றில் குளிப்பதற்காக நண்பர்களுடன் செல்லும்போது, எதிரில் குளித்துவிட்டு வருகிற பார்ப்பனத்திகள், “சூத்திரா ஒதுங்கு” என்று பதற்றத்துடன் சொல்வதைக் கேட்டு வெறுப்படைந்திருக்கிறேன். எங்கள் அய்யாப்பாவின் மாவு அரைக்கிற மில்லில் தானியத்தை அரைக்க வருகிற பார்ப்பனப் பெண்கள், அரவைக்கூலியைக் கையைத் தொடாமல் தூக்கிப்போடுவதைப் பார்த்திருக்கிறேன். சலவைக்குத் துணியெடுக்கிற வண்ணார் சாதிப் பெண்கள், இரவுவேளையில் எங்கள் வீட்டில் உணவு வாங்காமல் போவதற்கான காரணத்தை அறிந்தபோது, சாதியின் இன்னொரு முகம் புலனாகியது. சமயநல்லூர் கிராமத்தில் தந்தையார் வைத்திருந்த ஸ்டேஷனரி கடையில் கடன் கேட்டுத் தரமறுத்தபோது, ‘சாணாப் பயலுக்குத் திமிரைப் பாரு’ என்ற ஆதிக்க சாதிக்காரர்களின் ஆணவக்குரலை வெறுத்தேன். ஊருக்குள்ளும் வெளியிலும் எங்கே போனாலும் எனது பிறப்பின் அடிப்படையிலான சாதியின் அடையாளம், என்னைத் துரத்தி வந்தது. ‘சக்கிலியனைத் தொட்டால் தீட்டு, சாணானைப் பார்த்தாலே தீட்டு’ என்ற குரல் கிராமத்து வெளியில் அவ்வப்போது ஒலித்துக்கொண்டேயிருக்கும். நிலம், கடை, அரிசி ஆலை, காரை வீடு என்ற மச்சு வீடு என வசதியாக வாழ்ந்த எனது அய்யாப்பா, தந்தையார், சித்தப்பா, மாமா போன்றவர்கள், திராவிட இயக்கப் பின்புலத்தில் சாதி மறுப்பை நடைமுறையில் செயல்படுத்தினர். தினத்தந்தி, முரசொலி, விடுதலை போன்ற நாளிதழ்கள் எங்கள் வீடுகளில் வாங்கியது, ஒருவகையில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படக் காரணமாக இருந்திருக்கும். எனது தந்தையார் நாற்பதுகளில் சைக்கிள் ஓட்டிச் சென்றதற்காகச் சாதியைச் சொல்லி, அடித்த ஆதிக்க சாதியினரின் அடாவடித்தனத்தை எதிர்கொண்ட நிலையை வாய்மொழியாக அறிந்திருக்கிறேன். ஏழு வயதில் வாசிக்கத் தொடங்கிய நாளிதழ்களும், பத்து வயதில் வாசித்த காந்தியின் ‘சத்திய சோதனை’ புத்தகமும், எங்கள் வீட்டுக்கருகில் நடைபெற்ற தி.க., தி.மு.க. அரசியல் கூட்டங்களில் பேசப்பட்ட பேச்சுகளும் இளவயதிலே என்னைச் சாதி, மத எதிர்ப்பாளானாகவும் நாத்திகனாகவும் மாற்றிவிட்டன. சாதி என்ற சொல், பள்ளி மாணவனாக இருக்கும்போதே எனக்கு வெறுப்பைத் தந்தது. சாதியினால் உருவாக்க முயன்ற இழிவைப் பொருட்படுத்தாமல் கடந்து போனேன். சகமனிதனைச் சாதிரீதியில் அணுகி, வெறுப்பது எப்படி நிகழ்கிறது என்பது இன்றளவும் எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது.

பார்ப்பனர்கள் அக்கிரஹாரத்தில் சௌகரியமாகத் தங்கியிருக்க, ஆதிக்க சாதியினர், சாதியின் பெயரால் யாரையும் திட்டுவதும், அடிப்பதும் சாதாரணமாக நடைபெற்ற சூழல், இன்றைய தலைமுறையினர் அறியாததது. சாதியைச் சொல்லி ஒருவரை இழிவுபடுத்துகிற ஆதிக்க சாதியினரின் கேவலமான செயல்கள், எழுபதுகளில்கூட தமிழகக் கிராமங்களில் நீக்கமறப் பரவியிருந்தன. சாதியை முன்வைத்து ஆதிக்க சாதியினர் செய்த அடாவடிச் செயல்கள், அக்கிரமங்கள் காரணமாக விளிம்புநிலையினர் எப்பொழுதும் அடங்கியொடுங்கி இருந்தனர். அதிலும் பறையர், பள்ளர், சக்கிலியர் போன்ற சாதியினர் எவ்விதமான உரிமையும் இல்லாமல், கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டதுடன், எப்போதும் வன்முறையை எதிர்கொண்டிருந்தனர். சாதி என்பது சிந்துபாத்தின் கடல் கிழவன் போல கிராமத்தில் விளிம்புநிலையினர்மீது ஆதிக்கம் செலுத்திய காலகட்டம், துயரத்தின் உச்சம். ஆதிக்க சாதியைச் சார்ந்த பத்து வயதுச் சிறுவனை ‘அய்யா மகன்’ என்று பணிவுடன் அழைக்கிற ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த அறுபது வயதான பெரியவரை அந்தச் சிறுவன், மரியாதை இல்லாமல் பெயரைச் சொல்வதுடன் ஒருமையில் பேசுவதும், வாடா போடா என்பதும் இயல்பானதாகக் கருதப்பட்ட சூழலை இப்பொழுது நினைத்தாலும் வேதனையாக இருக்கிறது. பார்ப்பனீயம்தான் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம் என்றாலும், ஆதிக்க சாதியினருடன் ஒப்பீடும்போது, பார்ப்பனர்கள் பிறர்மீது வன்முறை செலுத்தவில்லை. கிராமத்தில் ஒடுக்கப்பட்டோருக்கு உடனடியான எதிரியாக ஆதிக்க சாதியினர் விளங்கினர். காலப்போக்கில் பெரியாரின் சமத்துவக் கருத்துகள் பிரச்சாரமும், காமராசர் ஏற்படுத்திய தொடக்கப் பள்ளிகளும், மதிய உணவுத் திட்டமும் ஒடுக்கப்பட்டோர் மத்தியில் விழிப்புணர்வு உருவாகிடக் காரணமாக அமைந்தன.

எண்பதுகளில் அம்பேத்கர் பற்றிய பாடல்கள் ஒலிபெருக்கியில் ஒலிக்கத் தொடங்கியதும், வன்கொடுமைச் சட்டம் பற்றிய அறிமுகமும் தலித்துகளைக் கொடுமைப்படுத்தும் போக்கைக் கிராமங்களில் மாற்றியமைத்தன. அரசியல் விழிப்புணர்வு காரணமாக இன்று சாதிய மனோபாவத்தில் மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும், சாதியம், தமிழர்களைப் பிடித்துள்ள தீராத கொடிய நோயாக இருக்கிறது. இன்று சாதியத்தைத் தூக்கியெறிவது தமிழர்களின் முதன்மையான பணியாக இருக்கிறது. அதேவேளையில் வைதீக சநாதன தர்மத்தை மீண்டும் சாதிய அரசியல் வழியாக நிலைநிறுத்திட முயலும் பி.ஜே.பி., சங் பரிவாரம் போன்ற மத அடிப்படைவாதிகளை எல்லா வழிகளிலும் எதிர்ப்பது முக்கியமான சவாலாக இருக்கிறது.

எழுபதுகளின் பிற்பகுதியில் பெரியாரியம், மார்க்சியக் கருத்துகளினால் ஈர்க்கப்பட்டுச் சமூக மாற்றத்திற்காக அமைப்புகளில் செயலாற்றியபோது, சில பத்தாண்டுகளில் சாதி ஒழிந்துவிடும் எனத் தோழர்கள் நம்பினோம். அதிலும் சாதி மறுப்புத் திருமணம் பரவலாகிடும்போது, சாதியத்தின் கோரப்பிடி விலகிடும் என்ற நம்பிக்கை, அன்றைய காலகட்டத்தில் பரவலாக இருந்தது. காதல் திருமணம், சாதிய நிறுவனத்தைச் சிதிலமாக்கிடும் என்று காதலைப் புரட்சிகரமானதாகக் கருதிய போக்கு, நிலவியது. இன்று சாதியக் கருத்தியல், தமிழக அரசியலில் அழுத்தமாக ஊடுருவி, தமிழர்களைச் சாதிரீதியாகப் பிளவுபடுத்துகிற சூழலை அவதானிக்கையில், சாதி வெட்டவெட்டத் துளிர்க்கிற விருட்சமாகத் தோன்றுகிறது. பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட சமூகச் சீர்திருத்தவாதிகளின் குரல்கள், ஐம்பதாண்டுகளுக்கும் கூடுதலாகத் தமிழர் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஏன் சாதியம் இன்றைக்கும் இத்தனை வலுவாக இருக்கிறது? சாதியத்தின் மேல்ஙீகீழ் பாகுபாடு காரணமாகப் பிறப்பின் அடிப்படையில் தமிழர்களை வேறுபடுத்தி, இழிவுக்குள்ளாக்கிடும் அவலநிலை, முழுக்க மாறுவதற்கான சாத்தியமுள்ளதா? யோசிக்க வேண்டியுள்ளது.

சாதியத்தின் ஏற்றத்தாழ்வு ஒருபுறம் எனில், இன்னொருபுறம் இந்து என்ற பெயரில் இந்துத்துவ சக்திகள் கட்டமைத்திடும் அரசியலில் பார்ப்பனீயத்தின் மேலாதிக்கம் வலுவாக இருக்கிறது. நவீன வாழ்வில் மனு தர்மம் வலியுறுத்திய சநாதனக் கருத்துகள், நுணுக்கமான முறையில் பொதுப்புத்தியாக வடிவெடுத்து வெவ்வேறு வழிகளில் ஆளுகை செலுத்துகின்றன. நாத்திகக் கருத்தியல் மட்டுமின்றி, புத்தரையும் உள்வாங்கிக்கொண்ட வைதிக இந்து சமயம், நாட்டார் தெய்வங்களையும் விட்டு வைக்கவில்லை. பிறப்பின் அடிப்படையில்தான் ஒரு மனிதனின் இருப்பு, தகுதியைத் தீர்மானிக்க முடியுமென்ற பார்ப்பனீயச் சிந்தனையின் வெளிப்பாடுதான், ஆகமம் என்ற பெயரில் இந்துக் கோவில் கருவறையில் நுழையும் உரிமையைப் பார்ப்பனர்களுக்கு மட்டும் வழங்கி இருக்கிறது. இந்திய உச்சநீதிமன்றம், இந்து மத அடிப்படைவாதிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் சார்பாகத்தான் தீர்ப்புகளை வழங்குகிறது. சுத்தம்ஙீஅசுத்தம், புனிதம்ஙீதீட்டு போன்ற கருத்துகளை மக்கள்மீது திணித்து, குறிப்பிட்ட பிரிவினரைத் தீண்டத்தகாதவர் என இழிவாக ஒதுக்குகிற சநாதனச் செயல்பாடு, இன்றளவும் வலுவாகத் தொடர்வது வேதனையளிக்கிறது. ஆகமம், வேதம் கற்ற இந்துக்கள் எவரும் கோவில் அர்ச்சரகராகலாம் என்ற கலைஞரின் சட்டரீதியான முயற்சி, இன்றளவும் நடைமுறையில் சாத்தியப்படாமல் இருப்பதற்குப் பார்ப்பனர்கள்தான் முதன்மையான தடையாக உள்ளனர். அரசியலமைப்புச் சட்டம் எல்லோரும் சமம் என்று சொன்னாலும், வைதிக சமயத்தின் ஆகம விதிகள், பார்ப்பனீயத்தின் முன்னர் தலைவணங்கி, பிறப்பின் அடிப்படையில் மனு வகுத்த விதிகளை மீண்டும் வழிமொழிகிறது.

கல்வி என்பது பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதினருக்கு மட்டும் என்றிருந்த நிலையானது, ஆங்கிலேயரின் காலனியாதிக்க ஆட்சியில் மெல்ல மாறியது. குலத்தொழிலைச் செய்வதுதான் தர்மம் என்ற நிலையைப் புறக்கணித்து, வியாபாரம் செய்யத் தொடங்கிய நாடார் போன்ற விளிம்புநிலையினரின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. தொடக்கத்தில் சந்தை வியாபாரியாக பிற ஊர்களுக்குச் சென்றவர்கள், நாளடைவில் பெரிய ஊர்களில் பேட்டைகள் நிறுவி, பொருளியலில் வளமடைந்தனர். என்றாலும் சமூக மதிப்பீட்டில் சாதியரீதியில் இழிந்தவர்களாக ஒதுக்கிடும் சூழல் நிலவியது. சிவகாசி, விருதுநகர் போன்ற ஊர்களில் வாழ்ந்த நாடார் சாதியினர், தொழில் அடிப்படையில் முன்னேறினாலும், சாதியரீதியில் இழிந்தவர்களாகக் கருதப்பட்டதால். கோவிலுக்குள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பொருளாதாரரீதியில் கோவிலுக்குள் நுழைய முயன்றபோது, சிவகாசிக் கலவரம் ஏற்பட்டு, சொத்துகள் அழிக்கப்பட்டு, பலர் கொல்லப்பட்டனர். கமுதி சிவன் கோவிலில் நுழைந்த நாடார்கள், அதற்கான உரிமையை முன்வைத்து, இந்திய நீதிமன்றங்கள் மட்டுமில்லாமல், லண்டன் ப்ரிவி கவுன்சில்வரை சட்டரீதியான போராட்டங்களை நடத்தினர். அவை சநாதன தர்மப் பின்புலத்தில் மறுக்கப்பட்டன. சநாதனக் கொடுமையை எதிர்த்து செங்கோட்டை, தென்காசி ஊர்களில் வாழ்ந்த நாடார்கள் இஸ்லாமியர்களாக மாறியதும் நடைபெற்றது. இத்தகைய போராட்ட வரலாற்றை மறந்த இளைய தலைமுறையினர், இன்று மீண்டும் பார்ப்பனீயத்தின் பிடிக்குள் சிக்கியுள்ளனர். நாடார்களின் இறை நம்பிக்கை என்பது, குடும்பத்தில் முன்னர் இறந்தவரை வழிபடும் குலதெய்வ வழிபாடு ஆகும். இத்தகைய கோவில்களில் நாடார் சாதியினர்தான் பூசாரிகள். குலதெய்வக் கோவில்களில் பிள்ளையாருக்கு எனத் தனியாகச் சந்நிதியை ஏற்படுத்திய ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், காலப்போக்கில் பிராமணரைப் பூசாரியாக்கியதில் இருந்து பிரச்சினைகள் தோன்றின என்று பொன்னீலனின் மறுபக்கம் நாவலும், குமார செல்வாவின் குன்னிமுத்து நாவலும் பதிவாக்கியுள்ளன. அதுவரை கிறிஸ்தவ நாடார்களுடன் இயல்பாகப் பழகிய இந்து நாடார்கள் முரண்பட்டு, மண்டைக்காடு கலவரத்தில் போய் முடிந்தது. சக மனிதர்களை எதிரியாகப் பாவிக்கிற அரசியலைப் போதிக்கிற ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் கருத்துகள் கண்டனத்திற்குரியன.
நாடார் வீட்டுத் திருமணங்களில், பெரியவர் ஒருவர் தாலியை எடுத்துத் தர, திருமணம் எளிமையாக நடைபெறுவது இன்றுவரை நடைமுறையில் உள்ளது. இன்று சிவகாசி, சாத்தூர் போன்ற ஊர்களில் பிராமண புரோகிதர்களை அழைத்து, வேள்வித் தீ வளர்த்துச் சநாதன முறையில் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தங்களுடைய முன்னோர் எப்படியெல்லாம் வைதிக சநாதன நெறியை எதிர்த்துப் போராடி, சுயமரியாதையுடன் விளங்கினர் என்ற வரலாற்றை மறந்துவிட்டதால், இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. புரோகிதரைத் திருமணத்திற்கு அனுமதிப்பது என்பது, பார்ப்பனீய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டதாகும் என்ற புரிதல், பலருக்கும் இல்லை. இழிவுபடுத்தப்பட்ட சாதியினர் சுயமாக முன்னேறிய சூழலில், மீண்டும் சநாதனத்தின் பிடியில் சிக்கியிருப்பது, வைதீக அரசியலுடன் தொடர்புடையதாகும்.

முன்னொரு காலத்தில் கல்வியறிவு, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முழுக்க ஒதுக்கப்பட்டிருந்த விளிம்புநிலையினர், இன்று பொருளியல்ரீதியில் வளமடைந்தவுடன், தங்களை உயர்சாதியினராகக் கருதிக்கொண்டு, பார்ப்பனர்களை வைத்து வேள்வி வளர்த்து சநாதனத்திற்குத் துணை போகின்றனர். எனக்குத் தெரிந்த தலித்து நண்பர்களில் சிலர், தங்கள் வீட்டு விசேஷங்களுக்குப் புரோகிதப் பார்ப்பனர்களை அழைத்துப் புரோகிதச் சடங்குகள் செய்கின்றனர். இதனால் வைதிகப் புரோகித தொழிலை முன்வைத்துப் பார்ப்பனர்கள் தங்களைச் சமூக அடுக்கில் உயர்ந்தவர்களாக மீண்டும்மீண்டும் நிறுவுகின்றனர். இன்று ஓரளவு வசதியான தலித்துகள் வீட்டுத் திருமணம், புது வீடு குடிபோகுதல் தொடங்கி எல்லா விழாக்களிலும் பார்ப்பனர்களின் வேள்வித் தீ வளர்த்து யாகம் வளர்த்தல் நடைபெறுகிறது. புரோகிதம் பண்ணுகிற பார்ப்பனர்கள், வித்தியாசமான வேட்டிக் கட்டு, குடுமி, மேலுடம்பில் துண்டு எனக் குளிர்காலம் உள்ளிட்டு 24ஙீ7 காட்சியளிப்பது, பார்ப்பனீயத்தின் மேலாதிக்கத்தைக் காட்டுகிறது. ஏதோ வெறுமனே தீயை வளர்த்து மந்திரம் சொல்வது என்று விளிம்புநிலையினர் அப்பாவித்தனமாக நம்புவது, சநாதனத்தை முன்னிறுத்திய மனுவின் கருத்துகளை ஏற்றுக்கொள்வதாகும். இந்து என்ற சொல்லின் பின்னர் பொதிந்திருக்கிற சநாதன அரசியல் குறித்து அரசியல்ரீதியில் பெரியார், அம்பேத்கர் போன்ற சித்தாந்தவாதிகள் அழுத்தமான கருத்துகளை முன்வைத்த பின்னரும், இன்று விளிம்புநிலையினர் தங்களை இந்துக்கள் என்று கருதிக்கொண்டு, பார்ப்பனீயத்தின் அடிவருடியாக மாறிக்கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது ஆயிரமாயிரமாண்டுகளாகப் பிறப்பின் அடிப்படையில் இழிந்தவர்களாக ஒதுக்கி, மனிதர்களாக மதிக்காத வைதிக சநாதனத்திற்குப் போற்றிப் பாடுகிறவர்களாக ஒடுக்கப்பட்ட சாதியினரில் ஒரு பிரிவினரை மாற்றுவது நடந்தேறியுள்ளது. இத்தகைய போக்கு, ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரம், விஸ்வ ஹிந்து பரிட்சத், இந்து மகா சபை, பி.ஜே.பி., போன்ற இந்து மத அடிப்படைவாதிகளுக்கு கொண்டாட்டமாகி விட்டது. ஆயிரமாண்டுகளாக சநாதன தர்மத்தின் பெயரால் காலங்காலமாக ஒடுக்கப்பட்டிருந்த மக்கள், கடந்த காலத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்களை மறந்துவிட்டு, பார்ப்பனீயத்தின் வாலாக மாற்றப்பட்டிருக்கிருக்கிற நிலைமையைக் கடுமையாக விமர்சிக்க வேண்டியுள்ளது.
சொந்த சாதியின் வரலாறு கறுப்பா? காவியா? என்ற கேள்வியை ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட சாதியினரும் கேள்வியாகக் கேட்க வேண்டிய தருணமிது. முன்னர் எப்பொழுதோ தங்கள் முன்னோர்மீது சுமத்தப்பட்ட இழிவையும் கொடுமையையும் அவற்றுக்கான காரணங்களையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் வரலாற்று அடிப்படையில் நினைவுபடுத்திட வேண்டியுள்ளது. ஏதோ சாதிய இழிவு மட்டுமல்ல, இன்று சங்பரிவாரம் நடத்துகிற சாதியை முன்வைத்து நடத்துகிற அரசியலை அம்பலப்படுத்திட வரலாறு மிகவும் அவசியம். குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு கலவரத்தை உருவாக்கியதுடன், இந்து நாடார்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்களாக மாற்றி, எப்பொழுதும் கொதிநிலையில் பிறர் மீது வெறுப்பைக் கக்குகிற பி.ஜே.பி. கட்சியினர், நாளைக்குத் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு அதே அரசியலைக் கொண்டு சென்றிட வாய்ப்புண்டு. அதுதான் அவர்களுடைய செயல்தந்திரம்; தொலைநோக்குத் திட்டம். இந்நிலைமை தமிழகத்தின் பிற பகுதிகளில் ஏற்படாமல் தடுத்திட.ஒடுக்கப்பட்ட, இடைநிலை சாதியினர் கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது.

தமிழகத்தில் எங்கும் செல்வாக்குப் பெறாத பி.ஜே.பி. கட்சியானது, நாடார் சாதியினர் வாக்குகளைப் பெற்று, பொன். ராதாகிருஷ்ணனை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயலுவதன் அரசியல் பின்புலம் ஆய்விற்குரியது. பொன்னீலன் எழுதிய மறுபக்கம் நாவல், எப்படியெல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, நாடார்களின் குலதெய்வங்களின் கோவிலுக்குள் நுழைந்து நாடார்களிடம் செல்வாக்குப் பெற்ற கதையை விரிவாகப் பேசியுள்ளது. தமிழக நிலப்பரப்பில் குமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்தது முதலாகத் தனிப்பட்ட அரசியல் அங்கே நிலவுகிறது. 19ஆம் நூற்றாண்டில் நாடார், புலையர் பெண்கள் உடம்பின் மேல் பகுதியில் துணி அணியக்கூடாது என்ற தடைக்கு எதிராக நடைபெற்ற தோள் சீலைக் கலவரம், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகும். அய்யா வைகுண்டர், வைதீக சநாதன நெறிக்கு எதிராகக் கட்டமைத்த போராட்ட முறை, கவனத்திற்குரியது. சாதியரீதியில் ஒடுக்கப்பட்டிருந்த நாடார்கள், கிறிஸ்தவ பாதிரியார்களின் வழிகாட்டுதலினால் கிறிஸ்தவர்களானது தனிக்கதை. நாடார்கள், வைதீகக் கோவில்களுக்குள் நுழையக்கூடாது என வைதீக சநாதனம் விதித்திருந்த தடையை எதிர்த்துப் போராடிய போராட்டம், தன்மான வரலாறு. விளிம்புநிலையில் இழிவாக ஒதுக்கப்பட்டிருந்த நாடார் சாதியினர் பொருளாதாரரீதியில் முன்னேறியிருந்தாலும், சமூக மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்டதற்கு எதிராகப் பெரியாருடன் இணைந்து செயலாற்றினர். பட்டிவீரன் பட்டி ஊ.பு.அ. சௌந்திரபாண்டியன், விருதுநகர் ப.ப.ராமசாமி போன்ற தலைவர்களின் சுயமரியாதை இயக்கச் செயற்பாடுகள், ஒருவகையில் சாதிய இழிவு மனநிலையில் இருந்து விலகிட வழிவகுத்தன.
இன்று குமரி மாவட்டத்தில் நாடார்கள் நிலையைப் பற்றிய லஜபதிராயின் பதிவுகள் கவனத்திற்குரியன. “அன்று அவர்களை ஒடுக்கிய நாயர், நம்பூதிரி, வேளாளர் ஆகியோர் பெருமளவில் பங்கெடுக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்துகொண்டு, குமரி மாவட்ட இந்து நாடார்கள், ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுவதும், கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டவிடாமல் தடுப்பதும், இஸ்லாமிய இளைஞர்களுடன் முரண்படுவதும் சரியான வரலாற்றுப் புரிதல் இல்லாமல் தங்களை இந்துக்கள் என்று கற்பனை செய்துகொள்வதால்தான் ஏற்படுகிறது.” அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு காரணமாக முன்னேறியதை மறந்துவிட்டு, இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பேசுவதும், கோவில் வழிபாட்டில் சமஸ்கிருதம் திணிக்கப்படுவதைப் பெருமையாகக் கருதுவதும் இந்து நாடார்களிடம் காணப்படுகிறது. திருவிழாக்களில் தீண்டாமையைப் போதிக்கிற சநாதன தர்மத்தின் மேன்மை பற்றியும், கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் வெறுப்பை உமிழும் உரைகளும் நிகழ்த்தப்படுகின்றன. முன்னர் உயர்த்திய கறுப்புக் கொடிக்குப் பதிலாக இன்று சநாதனத்தின் பிடியில் சிக்கியுள்ள இந்து நாடார்கள், காவிக் கொடியை உயர்த்துவது அபாயகரமானதாகும். கடந்த காலத்தில் தங்களுடைய முன்னோர்கள் உயர்சாதியினரால் எவ்வாறு கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பதை மறந்திட்ட இளைய தலைமுறையினரில் ஒருபிரிவினர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பின்னர் அணி திரண்டிருப்பது, வரலாற்றில் மாபெரும் பிழையாகும். வைதீக சநாதனத்தை முன்வைத்துத் தங்களுடைய முன்னோர்களை இழிவுபடுத்திய பார்ப்பனீயத்தின் கோரமுகத்தை இன்றைய இளைஞர்களுக்கு நினைவூட்டும்வகையில் லஜபதிராய் பதிவாக்கியுள்ள வரலாற்றுச் சம்பவங்கள், எல்லாச் சமூகத்தினருக்கும் பொருந்தக்கூடியன.
சாதியத்தின் இழிவிலிருந்து தப்பிக்க நாடார் சாதியினர் செய்த செயல்களில் இருந்து பிற ஒடுக்கப்பட்ட சாதியினர் கற்றுக்கொள்வதற்கு விஷயங்கள் உள்ளன. வைதீக சநாதனம், வரலாற்றில் இழிந்தவர்கள் எனப் புனைவாகக் கற்பித்ததை இன்று ஒடுக்கப்பட்ட சாதியினர் கடுமையாக மறுதலித்திட வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் எனத் தனியான அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு, சாதிய மனப்பான்மையில் இருந்து வெளியே வர வேண்டியது அவசியம். கடந்த காலத்தில் தமிழ்ச் சமூகம், தமிழர்கள் எல்லோரையும் மட்டமாக நடத்தியதை அறிந்திட வேண்டியது அவசியம். மக்களுக்குச் சேவை செய்யும்வகையில் பனை மரத்தில் ஏறி பதநீர் இறக்கி, கருப்பட்டியை உற்பத்திசெய்தவர்களைப் பனையேறி என்றும், மண் பாத்திரங்களைச் செய்தவர்களைக் குசவர் என்றும், நிலத்தில் உழுது தானியம் விளைவித்தவர்களைப் பள்ளர் என்றும், தலைமுடியை அலங்கரித்தவர்களை அம்பட்டையன் என்றும், துணியை வெளுத்துத் தந்தவர்களை வண்ணார் என்றும், இறந்த மாடுகளை அப்புறப்படுத்தியதுடன், இறந்தவர்களைத் தகனம் செய்தவர்களைப் பறையன் என்றும், மரம், இரும்புக் கருவிகள் செய்தவர்களை ஆசாரி என்றும் இழிவாகப் பேசிய சமூக அமைப்பு நிலவியதை ஒருபோதும் மறக்க இயலாது. ‘எல்லாச் சேவை சாதிகளுக்கும் மேலாக உச்சியில் பார்ப்பனர்’ என்ற சமூக மதிப்பீடுதான், சாதிய ஏற்றத்தாழ்வு தொடர்ந்திட வழிவகுக்கிறது. சேவை செய்கிறவர்களை இழிவாகக் கருதியதன் பின்புலத்தில் இருக்கிற பார்ப்பனீயத்தைச் சிதிலமாக்கிட வேண்டியது, உடனடி அரசியல் செயல்பாடாகும். சாதியக் கட்டுமானத்தைத் தகர்த்திட முயலும்போது, சநாதனம் வெவ்வேறு வழிகளில் அதற்கெதிரான செயல்களில் ஈடுபடுவதைக் கண்டறிய முடியும்.

நிலத்தில் உழுது தானியங்களை உற்பத்திசெய்கிற பள்ளர் சாதியினர், பெருமையுடன் வாழவேண்டிய காலகட்டமிது. இன்னும் சொன்னால் மக்களுக்குச் சேவை செய்த சாதியினரை இழிவாக நடத்திய சநாதன தர்மத்தைத் தூக்கி எறிந்துவிட்டுப் பெருமிதத்துடன் விளிம்புநிலையினர் வாழ வேண்டும். கடந்த காலகட்டத்தில் தங்களுடைய முன்னோர்களைக் கேவலமாக நடத்திய சமூக அமைப்பைப் புறக்கணித்து, சுயமான அடையாளத்துடன், தன்னிச்சையான பொருளாதாரத்துடன் ஒடுக்கப்பட்ட சாதியினர் தங்களுடைய இருப்பினைத் தீர்மானிப்பது, எதிர்காலத்தில் மாற்றங்களை உருவாக்கிடும். அரசின் பொருளாதார உதவிகளையும், வேலை வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்டு முன்னேறுவது ஒருபுறம் எனில், ஒடுக்கப்பட்ட சாதியினர் தங்களுக்கான தொழில்களை உருவாக்குவதுடன், சுயமான பொருளாதார வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வது இன்னொருபுறம் தீவிரமாக நடைபெறுதல் அவசியம். தலித்துகள் எனத் தனிப்பட்ட அரசியல் சித்தாந்தத்தை மட்டும் எப்போதும் முன்னெடுப்பது, அரசியலடிப்படையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.

சாணார் எனக் கேவலமாகக் கருதப்பட்ட காலத்தில் அதைப் பொருட்படுத்தாமல், வணிகத்தில் ஈடுபட்டு, நாடார் என்று தங்களுடைய அடையாளத்தை நிறுவிப் பொருளாதாரரீதியில் முன்னேறிய வரலாற்றை மறுஆய்வு செய்யவேண்டியுள்ளது. நாடார் சாதியினரின் வீட்டுத் திருமணத்தில் சாப்பிடுவது தீட்டு என்று புறக்கணித்த சூழல் நிலவிய தமிழகத்தில், இன்று ராஜகோபால் அண்ணாச்சியின் சரவண பவன் ஹோட்டல்கள், திருத்தங்கல் நாடாரின் அருண் ஐஸ்கிரீம் கடைகள் போன்றவற்றில் உயர்சாதியினர் விருப்பத்துடன் சாப்பிடுவது தற்செயலானது அல்ல. வைதீக சநாதன தருமத்தின் பெயரால் யாரோ சிலர், சாதியரீதியில் இழிவுபடுத்தினால், அதை எப்படி ஏற்றுக்கொள்வது என்று எதிர்த்துக் கலகம் செய்திட்ட வரலாறு, கவனத்திற்குரியது. ஒருபுறம் சமூகரீதியில் ஏற்படுகிற இழிவைக் கேள்விக்குள்ளாக்கும் வேளையில், தனிப்பட்ட நிலையில், நான் யாருக்கும் குறைந்தவன் இல்லை, என்னை யாராலும் இழிவுபடுத்த முடியாது என்று ஒவ்வொருவரும் அழுத்தமாக நம்பினால்தான், தனித்துச் சுயமாக விளங்கிட இயலும். அம்பேத்கர் சொல்லிய கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்பதுடன் வணிகம் செய், தொழில் செய் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டால், அடுத்த தலைமுறை வளமடையும். வரலாற்றில் எங்கள் முன்னோர்களை இழிவுபடுத்தினர் என்று தங்களைத் தலித்துகளாக ஒதுக்கிக்கொண்டு, பிறரை ஒதுக்கிடும் அரசியல் சரிதானா? வைதீக சநாதனம், எல்லாச் சாதியினரையும் வெவ்வேறு அளவுகளில் இழிவுபடுத்திய சம்பவங்கள், வரலாற்றில் பதிவாகியுள்ளன. தமிழ் அடையாளத்துடன் தமிழர் என்ற பெருமிதத்துடன் எல்லோரும் ஒருங்கிணைந்து வாழ்ந்திடும்போது, சமத்துவம் உருவாகிடும் என்ற கனவு, எதிர்காலத்தில் நிஜமாகிடும்.

மனு வலியுறுத்திய வைதீக சமய நெறியை முன்னிறுத்தி, சங்கிகள், ஒவ்வொரு சாதிக்குள்ளும் ஊடுருவி, மீண்டும் சாதிய அமைப்பைப் புதிய வழிகளில் நிறுவிட முயலும்போது, அதன் கொடிய விளைவுகள் அபாயகரமானவை. இன்றைய சூழலில் கறுப்பா? காவியா? என்ற கேள்வியை ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும்போது, மோடி தலைமையில் உருவாகிக் கொண்டிருக்கிற பாசிசத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஜெர்மனியில் மக்களின் ஆதரவுடன்தான் ஹிட்லர் முதன்முதலாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அவருடைய எதேச்சதிகாரச் செயல்களைக் கண்டறிந்திடாமல், ஜெர்மானியர்கள் மீண்டும் ஒருதடவை வாக்குகள் அளித்து, அவரை நாட்டின் அதிபராக்கினர். அப்புறம் அவர்கள் மீண்டும் வாக்கு அளிப்பதற்கு இருபது வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. உலக வரலாற்றில் ஹிட்லரின் பாசிசம் நிகழ்த்திய கொடூரத்தை இந்தியர்கள் சந்திக்கப் போகிறார்களா என்பது, இரண்டாம் தடவையாக மோடியை முன்னிறுத்தும் பி.ஜே.பி.க்கு வாக்களிப்பதைப் பொறுத்து இருக்கிறது. மீண்டும் ஒருதடவை மக்கள் மோடிக்கு வாக்களித்தால், அப்புறம் இந்தியாவில் எப்பொழுது மீண்டும் தேர்தல் நடைபெறும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. பாசிஸ்டுகளுக்கு ஜனநாயகம் என்ற சொல் ஒருபோதும் பிடிக்காது. பாசிசத்தின் செல்லக் குழந்தையான வைதீக சநாதனத்தை எதிர்த்திட வேண்டியதன் அவசியத்தை லஜபதிராய், நாடார் சாதியை முன்வைத்து அழுத்தமாகச் சொல்லியிருப்பது, காலத்தின் தேவையாகும்.

(உதவிய நூல்: தி. லஜபதிராய். நாடார் வரலாறு கறுப்பா? காவியா? பக்கம்:140; விலை:ரூ.100/– தொடர்புக்கு: 9843251788)