ந்தியாவில் சிவில் சமூக இயக்கம் என்று ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியை அடிக்கடி சமூக அரசியல் ஆய்வாளர்கள் எழுப்புவது உண்டு. ஆனால் அப்படி ஒரு இயக்கத்தின் இருப்பையும் எழுச்சியையும் நாம் கடந்த டிசம்பர் மாதம் இந்தியா முழுக்கக் கண்டோம். இதை டிசம்பர் புரட்சி என்று அழைப்பது சற்று விரைவாக நாம் முன்வைக்கக்கூடிய கூற்றாக இருக்கலாம். ஆனால் சாதிமத வர்க்க வேறுபாடுகளற்று ஜனநாயகத்திற்கும் நீதிக்காகவும் இந்தியா முழுக்க லட்சோப லட்சம் மக்கள் தெருவுக்கு வந்த அற்புதக் காட்சியை இந்த தேசம் கண்டது. இது குறிப்பிட்ட ஏதேனும் ஒரு சமூகப் பிரிவு நடத்தும் போராட்டம் அல்ல. மாறாக, இந்தியர்கள் தங்கள் குடியுரிமைக்காக நடத்திய, நடத்திக்கொண்டிருக்கிற போராட்டம். இளைஞர்கள் இதில் பெருமளவில் பங்கேற்று இருக்கிறார்கள்.

2014 மோடியின் எழுச்சி தொடங்கிய பிறகு மோடியும் அமித் ஷாவும் எதிர்கொள்ளும் முதலாவது மக்கள் திரள் சவால் இது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற கடுமையான தாக்குதல்கள் மோடியின் அரசால் இந்தியர்கள் மேல் மேற்கொள்ளப்பட்டபோதும் கூட இந்திய சமூகம் அந்தக் கொடுமைகளையும் வகைகளையும் ஏதோ ஒருவிதத்தில் சகித்துக்கொண்டு அவற்றைக் கடந்துசெல்ல முற்பட்டது. ஆனால் இந்தக் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்கள் தேசியப் பதிவு ஒன்றுபட்ட இந்தியா என்பதன் ஆணிவேரையே அசைத்து விட்டது. நெருக்கடி நிலையின் போதுகூட மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் ரத்து செய்யப்பட்டதே ஒழிய, மக்களில் ஒரு பகுதியினரின் குடியுரிமையை ரத்து செய்யப்படக்கூடிய பயங்கரங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை ஆனால் ஆர்எஸ்எஸ் முன்னெடுத்து வரும் நீண்டகாலத் திட்டம் என்பது ஒட்டுமொத்தமாக மதசார்பற்ற இந்தியாவின் அடித்தளங்களைத் தகர்த்து மறுவரையறை செய்வது. மோடியின் இரண்டாம் ஆட்சிக்காலத்தில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவற்றை நிறைவேற்றி முடித்துவிட அவர்கள் விரும்புகிறார்கள். முத்தலாக் தடை சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, தேசியப் புலனாய்வு முகமை என அடுக்கடுக்காக அவர்கள் கொண்டுவந்த சட்டங்கள் இந்திய சிறுபான்மை மக்களின்மீது குறிப்பாக, இஸ்லாமியர்களின்மீது நேரடியாகத் தாக்குதலைத் தொடுத்தன. பாபர் மசூதி விவகாரத்தில் இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய ஒருதலைப்பட்சமான தீர்ப்பு இந்துத்துவ சக்திகளைப் பெரும் உற்சாகம் அடைய வைத்தது. அதேசமயம் இஸ்லாமியர்கள் மிகுந்த தனிமை உணர்ச்சி அடைந்தார்கள். எனினும் அப்போதுகூட சிறுபான்மையினரிடமிருந்து கொந்தளிப்பான எதிர்வினைகள் எதுவும் உருவாகி விடவில்லை. இந்திய முஸ்லிம்கள் ஏதோ ஒரு விதத்தில் இந்திய மைய நீரோட்டத்தில் சமரசம் செய்துகொண்டு செல்லவே விரும்பினார்கள். அந்த நீரோட்டம் எவ்வளவுதான் காவிமயமானபோதும் இந்தத் தேசத்தின் அரசியல் சாசனமும் நீதி அமைப்புகளும் தம்மை முற்றாகக் கைவிட்டுவிடாது என்று இன்னும் நம்புகிறார்கள் .

ஆனால் துர்தேவதைகளுக்கு ஒருபோதும் பசி தீரவதில்லை. அவர்கள் விரும்புகிற இலக்கை அடையும்வரை அவர்கள் தங்கள் பலிகளை ஒருபோதும் நிறுத்த மாட்டார்கள். இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்கள் தேசியப் பதிவு ஆகியவை சொந்த நாட்டிலேயே எந்த நேரமும் எவரையும் அகதிகளாக்ககூடிய கொடூரமான சட்டங்கள் மட்டுமல்ல, மதத்தால் மக்களைப் பாகுபடுத்தி இந்த தேசத்தை இன்னொரு பிரிவினைக் காலத்திற்கு இட்டுச் செல்வதே இந்த சதியின் மிக முக்கியமான நோக்கம். இதை அவர்கள் எப்போதோ திட்டமிட்டு விட்டார்கள். அதற்கான அதிகாரமும் சூழலும் அவர்களுக்கு இப்போதுதான் கிடைத்திருக்கிறது. பாகிஸ்தான் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானிலிருந்து மதம் சார்ந்த இன்னல்களால் அகதியாக வருவோரில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை மட்டும் அகதிகளாக ஏற்போம் என்பதும், இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பதற்காக இங்குள்ளவர்கள் தங்கள் முன்னோர்கள் குறித்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதும், மிகத் திட்டவட்டமாக இந்திய மக்களில் ஒரு பகுதியினரை அந்நியர்கள் ஆக்கும் திட்டம். இதனுடைய முதன்மையான நோக்கம் இஸ்லாமியர்களிடையே பெரும் பாதுகாப்பின்மையை உருவாக்கி அதன் வழியாக சமூக மோதல்களை உருவாக்குவது. அப்படி உருவாக்கினால் இந்துக்கள் முஸ்லிம்கள் என்கிற அடிப்படையில் ஆழமான இந்துத்துவா பெரும்பான்மைவாதத்தைக் கட்டமைக்கலாம். ஏற்கனவே இந்தியாவில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள் விரும்பிய விதத்தில் விரும்பிய வேகத்தில் இந்த இந்துத்துவா பெரும்பன்மைவாதத்தை இந்தியா முழுமைக்கும் அவர்களால் அரசியல் ரீதியாகக் கொண்டு செல்ல முடியவில்லை வட மாநிலங்களுக்கு அப்பால் இந்தியா வேறுவிதமான இன, மொழி, சமூகநீதி சார்ந்த மதிப்பீடுகளால் ஆளப்படுகிறது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி என்றால் அங்கு இந்துத்துவா திட்டங்களை எடுத்துச்செல்ல புதிய வழிமுறைகள் தேவைப்படுகின்றன. அதற்காகக் கொண்டு வரப்படுவதுதான் இந்த தேசியக் குடியுரிமை திருத்த மசோதா போன்றவை.

இன்னொருபுறம் இந்தியர்களில் பாஜகவை எதிர்க்கக்கூடிய, இந்துத்துவாவை ஏற்காத கணிசமான பகுதியினரை முக்கியமாக இஸ்லாமியர்களை வாக்குரிமை அற்றவர்களாக மாற்றுவது. இதையெல்லாம் நிறைவேற்றுவதன் மூலமாக அரசும் பாஜகவும் ஒரு நிரந்தரமான அதிகார மையமாக மாறவும் விரும்புகின்றனர். ஏற்கனவே ஜனநாயக அமைப்புகள், சட்ட அமைப்புகள் வீழ்த்தப்பட்டுவிட்டன. தேர்தல்கள் ஒரு சடங்காக மாறிவருகின்றன. வாக்குப்பதிவு எந்திர மோசடிகள் குறித்த கேள்விகளுக்குப் பதில் இல்லை. தேர்தல் ஆணையம் பாஜகவின் கைக்கூலியாக எப்போதோ மாறிவிட்டது. தேர்தல் நடைமுறைகளிலும் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் இந்துத்துவா வாக்கு வங்கி ஒன்றை உறுதியாக உருவாக்கிவிட்டால் பிறகு தங்கள் அதிகாரத்தை அசைத்துப் பார்க்கக் கூடியவர்கள் யாரும் இல்லை என்று பாஜக நம்புகிறது. இதை ஒட்டுமொத்த இந்திய ஜனநாயகத்திற்கும் நிரந்தரமாக நேரக்கூடிய பெரும் அழிவு என்றே நாம் கருத வேண்டும் .

இப்போதைய தேர்தல் முறையும் ஜனநாயகமும் பாஜகவிற்கு மிகவும் தொந்தரவாக இருக்கிறது. அது கடந்த ஓராண்டில் 5 மாநிலங்களில் ஆட்சியை இழந்து இருக்கிறது. இந்த நிலை எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நின்றதால் மட்டுமே மட்டுமே சாத்தியப்பட்டது.

பாஜகவிற்கு இப்போது இருக்கும் சவால், இந்துத்துவா வாக்குவங்கியை வலிமைப்படுத்துவதும் தேர்தல் நடைமுறைகளில் தனக்கு எதிராக இருக்கும் விஷயங்களை ஒழித்துக் கட்டுவதும்தான். இதை பாஜக படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகள் இந்தியப் பொருளாதாரத்தின் அஸ்திவாரங்களை அழித்துவிட்டன. இதிலிருந்து இந்தியா மீள்வதற்கான எந்த வழியும் அவர்களிடம் இல்லை. நிச்சயமாக, பெரும் சமூகக்கொந்தளிப்புகள் உருவாவதற்கான எல்லா சூழலும் இப்போது நிலவுகிறது. சிறு விவசாயிகள், சிறு தொழில் செய்வோர், மனிதர்கள், உற்பத்தியாளர்கள் என அனைவருமே தெருவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் கடைசிப் பிடிமானங்களையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மதரீதியான துவேஷங்கள் மற்றும் மோதல்களின் வழியாக பாஜக கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது. அடிப்படைப் பிரச்சினைகளுக்கு பதிலாக இவர்கள் புதிதாக உருவாக்கும் பிரச்சினைகளின்பால் மக்கள் கவனத்தை திசை திருப்புகிறார்கள். ஒருபுறம் தம் நீண்டகால திட்டங்களை நோக்கி நகர்வது, இன்னொருபுறம் உடனடி பிரச்சினைகளிலிருந்து கவனத்தை மாற்றுவது.

ஆனால் ஒன்றை இவர்கள் மறந்துவிட்டார்கள். எதேச்சதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என்பது ஏதோ ஒரு பிரச்சினையில் இருந்து, புள்ளியில் இருந்துதான் எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் தொடங்கியிருக்கிறது. அதைக் கையாள முடியாமல் அதிகார வர்க்கம் தடுமாறும்போது எதிர்ப்பின் பூதங்கள் ஒவ்வொன்றாக வரிசையில் வர ஆரம்பிக்கும். பிரச்சினைகளின் நெருப்பு ஒவ்வொரு இடமாகப் பற்றி எரியும். வன்முறையின் மூலமாகவும் அடக்குமுறைகலின் மூலமாகவும் இந்தப் போராட்டங்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என இந்த அரசு நினைக்கிறது. தமிழகத்தில் கோலத்தின்மூலம், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்கள் தேசியப் பதிவு திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டனர்.

ஆனால் இந்த ஒடுக்குமுறைகள் மக்களுக்கு மேலும் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும்தான் அளிக்கின்றன. மக்கள் எதிரியை அடையாளம் கண்டுவிட்ட முதல் கணத்திலிருந்து அவர்களின் எந்தப் பொய்யையும் நம்பமாட்டார்கள். எந்த வாக்குறுதியையும் ஏற்கமாட்டார்கள். எந்த சமாதான உடன்படிக்கைக்கும் வரமாட்டார்கள். இதுதான் வரலாறு.

புதிய இந்தியாவைப் படைக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்த ஒருவர் தடுப்பு முகாம்களைக் கட்டிக்கொண்டிருக்கும் கொடூரத்தைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். இந்தத் தேசத்தையே ஒரு சிறைச்சாலை ஆக்கும் வக்கிரத்தை கண்டு கொதிக்கிறார்கள். இது அவர்கள்மேல், அவர்கள் சொந்த சகோதரர்கள் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல். இந்த சூழ்நிலையில்தான் ஒன்றுபட்ட இந்தியா என்பதன் புதிய அர்த்தத்தை இந்தப் போராட்டங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரே நாடு என்ற மோடியின் முழக்கத்திற்கு இப்போது புதிய பொருள் கிடைத்திருக்கிறது. மோடி எதிர்ப்பில் இந்த தேசம் இப்போது ஒரே நாடாக இருக்கிறது. ஒரே குரலாக இருக்கிறது. இந்த எதிர்ப்பின் கனலை வழிநடத்தக்கூடிய தேசியத் தலைவர்கள் யாரும் இருக்கிறார்களா என்ற கேள்வி எழாமல் இல்லை. அப்படி ஒரு தலைவர் இல்லாவிட்டால் வரலாறு அந்த தலைவனைக் கண்டுபிடித்துக்கொள்ளும். காலகாலமாக அப்படித்தான் நடந்திருக்கிறது.

ஒரு காலத்தில் வளர்ச்சியின் அடையாளமாக குஜராத் மாடல் முன்னிறுத்தப்பட்டது. அது கட்டுக்கதை என்பது வேறு விஷயம். ஆனால் குஜராத் இந்தியாவிற்கான ஒரு முன்னோடி மாநிலமாகக் காட்டப்பட்டது. இப்போது அரச பயங்கரவாதத்தின் மாடலாக யோகி ஆதித்யநாத் ஆளூம் உத்தரப்பிரதேசம் உருமாறியிருக்கிறது. அது போலீஸ் ராஜ்யம் என்றால் என்னவென்பதை ஒட்டுமொத்த இந்தியாவிற்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. எந்த சட்டத்திற்கும் வேலையில்லை, எந்த நீதிக்கும் இடமில்லை. நாளை ஒட்டுமொத்த இந்தியாவுமே ஒரு உத்தரப்பிரதேசமாக மாற்றப்படலாம். அதற்கான எல்லா அடித்தளங்களும் உருவாக்கப்பட்டுவிட்டன.

இந்தியர்களுக்கு இப்போது இருப்பதுதான் கடைசி வாய்ப்பு. இந்தப் போராட்டங்கள்தான் கடைசி நம்பிக்கை. இந்தப் போராட்டங்களை நீர்த்துப் போகச்செய்யவும் அழிக்கவும் அரசு எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தும். எல்லா வழிமுறைகளையும் பின்பற்றும்.

மக்களிடம் இருப்பது, தங்களுடைய குரல் என்னும் தங்களுடைய உடல் என்னும் ஒரே ஆயுதம். 2020 ஆம் ஆண்டு பிறந்து விட்டது. நிம்மதியாக சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதைத் தவிர மக்களுக்கு வேறு எந்தக் கனவும் இல்லை. கொடுங்கனவுகள் அவர்கள் மனதை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன. விடுதலை என்ற சொல்லின் அர்த்தம் புதுப்புது பரிமாணங்களைப் பெற்று வருகிறது. நீதிக்கான இருப்பிற்கான ஒரு நீண்ட போராட்டத்தில் இந்தியர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இந்த நாடு காலம் காலமாகப் பின்பற்றி வந்திருக்கும் அமைதியையும் சகிப்புத்தன்மையையும் அதிகார வெறிபிடித்த சூதாடிகள் அழிப்பதற்கு இந்தியர்கள் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள். அவர்களின் பதாகைகளின் வாசகங்களில் பற்றி எரியும் நெருப்பு இந்தியர்களின் இதயங்களின் நெருப்பு.