அவளை பத்மனாபனுக்குப் பிடித்திருக்கக் காரணம் ஒல்லிப்பிச்சான் போன்றே அவள் இருந்ததுதான். பலமாகக் காற்று வீசினால், அது சுழல் காற்றாகவும் இருந்துவிட்டால் உயரத்தில் பறந்து சுழன்று ஏதாவது மரக்கிளையில் மாட்டிக் கொண்டு அபயக்குரலை அவள் எழுப்ப வேண்டும்.

அவளை முதலாக அலைபேசி வாயிலாக அறிமுகப்படுத்தியவன் செந்தில்தான். செந்தில் கால்கள் ஒரு கெடையில் தங்காது என்று அவன் அம்மாவே எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருப்பாள். செந்தில் திருப்பூருக்குள் வேலை நிமித்தமாக நுழைந்து பதினைந்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. திருமணமாகி ஐந்து வருட காலமாகியும் அவனுடைய கத்திரிக்கா மனைவி அவனுக்கென்று ஒரு மகவை ஈன்று தர முடியாமல் இருந்தாள்.

அவளும் ஊத்துக்குளிக்குப் பேருந்து ஏறிப்போய் கம்பெனியில் சேர்ந்து கொண்டாள். அதுவும்கூட மூன்று வருட காலமாயிற்று. செந்திலைக் கட்டிக்கொண்ட சமயத்தில் கையால் அவள் இடுப்பை நாம்பிப் பிடித்து விடலாமென்ற உடல் வாகைப் பெற்றிருந்தவள் குண்டுக் கத்திரி போன்ற வடிவமைப்புக்கு இரண்டு வருடங்களில் மாறிப் போயிருந்தாள். கள்ளம் கபடமில்லாத சிரிப்பை எந்த நேரத்திலும் முகத்தில் தேக்கி வைத்திருக்கும் அவள், குழந்தை பெறும் பாக்கியம் தனக்கில்லையோ என்ற ஐயப்பாடு எதுவுமில்லாமல் மாதச் சம்பளத்திற்கு சென்று கொண்டிருந்தாள். பத்மனாபன் எப்போதேனும் செந்திலைச் சந்திக்க அவன் இல்லம் செல்லுகையில் புன்னகை வடிவிலேயே காணப்படும் அவளைக் கண்டு ஆச்சரியம் கொள்வான்.

பத்மனாபனுக்கும் திருமணமாகி ஆறு வருட காலமாகி விட்டது. அப்போது செந்தில் அவனுக்கு அறிமுகமில்லை என்பதால் இவன் திருமணத்திற்கு அவன் வரவில்லை. ஆனால் செந்திலின் திருமணத்திற்கு இவன் மனையாள் மஞ்சுளாவைக் கூட்டிக்கொண்டு போய் செந்திலின் திருமண விழாவைச் சிறப்பித்து வந்திருந்தான். அப்போது மஞ்சுளா ஆறு மாதகால கர்ப்பிணி.

மேடையில் மாலையுங் கழுத்துமாக நின்றிருந்த செந்திலோடு புகைப்படமெடுத்துக் கொள்கையில்தான் செந்திலின் மனைவியைப் பார்த்தான். செந்திலுக்கு தோள்பட்டைக்கு நின்றிருந்தாள் மல்லிகா. நனைந்த பனைமர நிறத்தில் இருந்த மல்லிகா சிரிக்கையில் எல்லாம் வெண்பற்கள் பளீரிட்டன. சாப்பிட்டு முடித்து மொய் எழுதுமிடத்தில் ஐநூறு ரூபாய் வைத்துவிட்டு செந்திலிடம் விடைபெறுகையில், ‘உங்க பொண்டாட்டி செவச் செவன்னு லட்டாட்டம் இருக்காங்க!’ என்றான் செந்தில் பத்மனாபனிடம்.

செந்திலுக்குப் பெண்கள் சகவாசம் அதிகம் என்று இவனுக்குத் தெரியும். திருப்பூரில் விடிய விடிய கட்டிங் வெட்டி, சம்பாதிக்கும் காசையெல்லாம் பெண்பிள்ளைகளுக்கு சமர்ப்பித்து விடுவான். “என்னுங்க பத்மனாபன், முந்தா நேத்து பெங்களூர்க்காரி ஒருத்திய கூட்டிட்டு அவினாசி போயிருந்தனுங்க! என்னா கம்பெனிங்கறீங்க! ரெண்டாயிரம் ரூவாய்க்கி கூசாம வாயைக் கொண்டி வச்சாளுங்க!” என்று சந்திக்கும் சமயமெல்லாம் பெண்களைப்பற்றியே பேசுகிறவன், மஞ்சுளாவைப் பார்வையால் அவிழ்த்தே பார்த்து விட்டானோ? என்ற நினைப்பில் மண்டபத்திலிருந்து கிளம்பி விட்டான்.

பத்மனாபன் பொண்ணுகட்டியது செங்கப்பள்ளியில். வீட்டில் நான்கு தறியைப் போட்டு ஓட்டிக் கொண்டிருக்கும் இவனுக்குத் தன் பொண்ணைக் கொடுத்த மாமனாரும் மாமியாரும் அவளது அண்ணனும் தெய்வங்கள்தான். பதினைந்து பவுன் போட்டுக் கட்டிக் கொடுத்தார்கள். சீர் செனத்திகள் வேறு ஒரு மினி டெம்போவில் இவன் வீடு வந்து சேர்ந்தது. முதலாக தனக்கு இப்படிக் கலராக ஒருத்தி அமைவாள் என்று பத்மனாபன் நினைத்தே பார்க்கவில்லை. ஊருக்குள் மஞ்சுளாவைப் போன்று சிவந்த நிறத்தில் ஒருத்தியுமில்லை. அத்தனை அழகிருந்தும் முன்பற்களில் காறை இருந்தது. சிரிக்கும்போது தனியே அது அசிங்கமாய் இருந்தது. இதனால் மஞ்சுளா விசேச வீடுகளுக்குச் சென்றால் பற்கள் வெளியே தெரியாவண்ணம் உம்மென்று இருப்பாள்.

முதலிரவு இவனுக்கு நடக்க இரண்டு மாதங்களாகிவிட்டதற்குக் காரணம் இவனேதான். சிவந்த நிற மனைவி மஞ்சுளா எங்கே தொட்டால் கோபித்துக் கொண்டு பிறந்த வீடு போய்விடுவாளோ என்றே தொடாமல் இருந்து விட்டான். திரைப்படத்தில் வருவது போல ஒருநாள் மஞ்சுளா தூக்கக் கலக்கத்தில் சேலை கலைந்து பாவாடை உயர்ந்து கெண்டைக்கால் தெரிய படுத்துக் கிடப்பதைப் பார்த்தவன் விளக்கைப் போட்டுக் கொண்டு வந்து அவளருகில் அமர்ந்து சிவந்த நிற கெண்டைக் கால்களை வெறித்துப் பார்த்தபடி இருந்தான்.

பின் மெதுவாகத் தன் வலது கையை அவளின் கால்களில் வைத்து அழுத்தினான். தூக்கக் கலக்கத்தில் இருந்தவள் “லைட்டை எதுக்குப் போட்டுருக்கீங்க?” என்றாள். இவன் மேற்கொண்டு மஞ்சுளாவை தன் வசப்படுத்திக் கொள்ள முயற்சி மேற்கொண்டபோது அவள் தன் முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டாள். அன்றிலிருந்து ஒருநாளும் கைகளை எடுத்து இவன் முகத்தைப் புணர்ச்சியின்போது இன்றுவரை பார்த்ததேயில்லை. பத்மனாபனுக்கு அது அதிசயமாயிருந்தது. தினமும் அவளைக் கட்டிக்கொண்ட போதெல்லாம் அவள் கைகள் இயந்திர கதியில் இயங்கி முகத்தைப் பொத்திக் கொள்ளும். பத்மனாபன் மஞ்சுளாவின் முகம் பற்றியெல்லாம் அந்த சமயத்தில் கவலை கொள்வதேயில்லை. முகத்தைத்தான் பொத்திக் கொள்கிறாளே தவிர மற்ற அங்கங்கள் யாவற்றையும் இவன் பார்வைக்கும் தொடல்களுக்கும் அனுமதி கொடுத்திருந்தாள்.

ஒருவழியாக ஒரு பெண் மகளை மஞ்சுளா ஈன்றெடுத்தாள். அடுத்த வருடத்திலேயே ஒரு ஆண்பிள்ளையையும் பெற்றெடுத்த மஞ்சுளா மேலும் பிள்ளைகள் வேண்டாமென ஆப்ரேசனும் செய்து கொண்டாள்: இரண்டு பிள்ளைகள் பெற்ற மஞ்சுளா மேலும் கவர்ச்சிகரமாய் மாறிப் போனாள். திருமண விசேசங்களுக்கோ, கோவில் விசேசங்களுக்கோ மஞ்சுளா சென்றால் ஆண்களின் பார்வை அவளிடமே நின்றது. பத்மனாபன் பொறாமையால் புழுங்கினான். சீக்கிரம் விசேச வீடுகளில் இருந்து அவளைக் கிளப்பிக் கொண்டு செல்வதில் கவனமாயிருந்தான். “இன்னஞ்சித்த நேரம் இருந்துட்டு போலாமுங்க!” என்று மஞ்சுளா சொல்வாள். “ஊட்டுல கொழந்தைங்களை வச்சுட்டு எங்கம்மா ஒன்னு என்ன பண்டும்? நட!” என்று சொல்லிக் கிளப்பி விடுவான்.

பாப்பா பிறந்தபோது மேலும் இரண்டு புதிய தறிகளை வாங்கிப் போட்டவன் இத்தனை காலமில்லாமல் தறியோட்ட இரண்டு ஆட்களையும் நூல் போடவென்று இரண்டு பெண்களையும் சேர்த்தினான். முன்பாக மஞ்சுளா நூல் போட இவன் மட்டுமே தறியோட்டினான். இவனுக்குத் திடீரென உடம்பு பெருத்தது. வெளியில் கிளம்புகையில் அணியும் பேண்ட்டை கால்களுக்குள் நுழைக்க முடியவில்லை. சோப்புப் போட்டு குளிக்கையில் வயிறு பெரிதாவதை சன்னமாய் உணர ஆரம்பித்தான். இருந்தும் அதுபற்றியெல்லாம் கவலைகொள்ளாத பத்மனாபன் வேட்டி சட்டைக்கு மாறிவிட்டான்.

ஓட்டிக் கொண்டிருந்த டி.வி.யெஸ். பைக்கை ஓரம் கட்டிவிட்டு யமஹா வாங்கிக் கொண்டான். ஊருக்குள்ளும் வெளியிலும் மரியாதைக்குரியவனாய் மாறிக் கொண்டிருந்த பத்மனாபன் மீது ஊரே கண்ணு போட்டது. அந்த சமயத்தில் பாப்பாவை எல்.கே. ஜி.யில் சேர்த்திருந்தான். பள்ளி வாகனம் ஊர் ஊராய்ச் சுற்றி இவன் ஊருக்கும் வந்தது. இவன் ஊரிலும் நான்கைந்து குழந்தைகள் வேனில் ஏறிச் சென்றன.

பத்மநாபனுக்கும் மஞ்சுளாவுக்கும் அந்தத் துக்கம் வந்திருக்கக்கூடாதுதான். இருந்தும் சில நேரங்களில் எதிர்பாராத சம்பவங்கள் வாழ்க்கையில் திடீரென நடந்துவிடத்தானே செய்கின்றன. பத்மனாபன் வீடு ரயில்வே பாதைக்கும் அருகில் இருந்தது. ரயில்வேக்கு மேற்குப்புறமாக காடு தோட்டம் வைத்திருப்பவர்கள் சாதாரணமாக ரயில்வே லைனைத் தாண்டித்தான் அந்தப்புறம் சென்று கொண்டிருந்தார்கள். ஆடுகளும் மாடுகளும் கூட! எப்போதேனும் ஆடோ, எருமையோ தண்டவாளத்தில் செல்கையில் ரயிலில் அடிபட்டு இறந்துவிடுவதும் நடந்து கொண்டுதான் இருந்தது.

ஐந்தாறு வருடங்களுக்கும் ஒருமுறை தண்டவாளங்கள் காவு கேட்டுப் பெற்றுக் கொள்வதுபோல நடந்துவிடும். பத்மனாபனின் பாப்பா ஒருநாள் மாலையில் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்துபோய்விட, ஊரே சோகத்தில் அழ ஆரம்பித்து விட்டது. இருவருமே தங்களின் மண்டையைச் சுவற்றில் ‘டொம்டொம்’மென அடித்துக் கொண்டு அழுதார்கள். ஊரே இவன் வீட்டு வாசலில் திரண்டு நின்றிருந்த சமயம் திடீரென பத்மனாபன் மஞ்சுளாவை வீட்டினுள் சென்று முடியைக் கொத்தாகப் பற்றி இழுத்துக் கொண்டு வந்து வாசலில் கிடத்தி மிதித்தான். சனம் ஒன்றுகூடி அவனைப் பிடித்து இழுத்துச் சென்று அமர வைத்தது. “புள்ளையப் பாக்காம ஊட்டுல இவ யாரை செஞ்சுட்டு இருந்தாளாமா கண்டாரோலி! அப்பிடிக்கூட கவனமில்லாம போயிருமா  புள்ளமேல இவளுக்கு! போச்சுல்ல… என் தங்கம் பாருங்கய்யா… பொட்டணமா கெடக்குது! சாமீஈஈஈ! எந்திரி சாமீஈஈ!” என்று திடீர் திடீரென எழுந்து வீட்டுக்குள் ஓடினான் பத்மனாபன். வந்திருந்த சனம் பிதிரு கெட்டது போன்றே நின்றது. “நடந்தது நடந்து போச்சு, என் தங்கச்சிய இப்பிடியா கெட்ட வார்த்தை சொல்லி வாசல்ல போட்டு மிதிப்பான்? கேக்குறதுக்கு ஆள் இல்லீன்னு நெனச்சானா? இவனும் இங்கதான இருந்தான். ஊருக்குள்ள யாரப் போட்டு ஏறப் போனானாமா?” கேப்பாரே இல்லாமல் தனியே இருளை வெறித்துப் பார்த்தபடி சத்தமிட்டுக் கொண்டிருந்தான் மஞ்சுளாவின் அண்ணன்.

எல்லாமும் நடந்து முடிந்து இரண்டு வருட காலம் போய்விட்டது. பத்மனாபனின் பையன் ராஜா இப்போது வேன் ஏறி யு.கே.ஜி. படிப்புக்குச் சென்று கொண்டிருந்தான். பத்மனாபனிடம் பழைய சுறுசுறுப்பு எதுவுமில்லை. திடீர்திடீரென முந்தா நேத்துதான் பாப்பா செத்துவிட்டதுபோல வீட்டில் அழத் துவங்கிவிடுவான். மஞ்சுளா விரக்தி மேலிட்டவளாய் வீட்டிலேயே தறிக்கு நூல் போட்டுக் கொண்டிருந்தாள். எந்த விசேசங்களுக்கும் செல்வதை அறவே நிறுத்தியிருந்தாள். தறி ஓடாத நாட்களில் மாமியார் மேய்த்துக் கொண்டிருக்கும் பத்து உருப்படி ஆடுகளை இவளே காட்டுக்கு ஓட்டிப் போய் மேய்த்து வந்தாள். இருவருக்குள்ளும் தாம்பத்திய உறவே இரண்டு வருட காலமாக இல்லாமல் போயிருந்தது.

வீட்டினுள் இவள் பத்மனாபனோடு ஒன்றிரண்டு வார்த்தைகள் தேவை கருதி மட்டுமே பேசி வந்தாள். பத்மனாபன்மீது இவளுக்குப் பாவமாயும் இருந்தது. பாப்பா போனது விதியாகவும் கூட இருக்கலாம். இருந்தும் அவன் வாசலில் இழுத்துப் போட்டு மிதித்து விட்டுச் சொன்ன வார்த்தைகள்தான் இவளை நோகடித்துக் கொண்டே இருந்தது. கோபத்திலோ, பிள்ளையை இழந்த பரிதவிப்பிலோ பேசிய வார்த்தைகளாக இவளுக்கு அது தெரியவில்லை. பையனுக்காக வாழும் வாழ்க்கையைப் பழகிக் கொண்டாள். பத்மனாபனுக்கு மஞ்சுளாவிடம் எந்த ஈடுபாடுமில்லாமல் போய்விட்டது ஏனென்றும் தெரியவில்லை. முன்பைவிட இருவருமே இளைத்துப் போய் விட்டதாய் இவனது மாமியார்தான் சொல்கிறாள். பசிக்காக நான்கு வாய் சாப்பிடுவது என்பது இருவருக்குமே பழக்கமாகி விட்டது.

செந்தில் இவனுக்குப் புதிதாக குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தான். குடி இவனது வருத்தங்களை மறக்கச் செய்யும் வேலையைச் செவ்வனே செய்வதாய் இவனே நம்பத் துவங்கினான். இருந்தும் மாலையில் மட்டும் ஒரு கோட்டர் என்று பழக்கப்படுத்திக் கொண்டான்.

சென்னிமலையில் பன்றிக்கறி வீட்டுத்தயாரிப்பு போலவே செய்து அரைக்கிலோ நூற்றி நாற்பதுக்கு தருகிறார்கள் என்பதைச் சொல்லி செந்தில் இவனை விடுமுறை நாளின் ஒரு மதிய நேரத்தில் இழுத்துப் போனான். இந்த வெயிலுக்கு இதை சாப்பிட்டா உடம்பு நல்லா கூலிங் ஆகுமென்று சிறந்த வைத்தியன் போன்றே பேசினவனை ஆச்சரியமாய்ப் பார்த்தான் பத்மனாபன். ஆளுக்கு அரைக்கிலோ கட்டிக் கொண்டு, சரக்கையும் வாங்கிக் கொண்டு குடிப்பதற்கு வாகான இடம் தேடி ஏழு கிலோ மீட்டர் சுற்றினார்கள் இருவரும்.

இறுதியாக சாலையோரத்தில் பைக்கை ஊஞ்சமரம் அடியில் நிப்பாட்டி விட்டு காட்டினுள் சென்றார்கள். காடு முழுக்கவும் ஊஞ்சமரங்கள் கூடாரமிட்டு ஆங்காங்கே நின்றிருந்தன. கருமையான நிழல் படர்ந்திருந்த மரத்தினடியில் அமர்ந்து சரக்கை ஊற்றிக் கொண்டே கறி மென்றார்கள்.

“எசவான எடமில்லாம நேத்து நைட்டு ஒரு சூப்பர் பிகரை ஓட்டிட்டு வர முடியாமப் போயிடுச்சுங்க பத்மனாபன்!” என்று அரை போதையில் ஆரம்பித்தான் செந்தில். எப்போதும் ஏனோதானோவென அவன் பேசுகையிலெல்லாம் கவனிக்கும் பத்மனாபன்  “அப்படியா? சூப்பர் ஃபிகரா?” என்றான். “இத்தாச்சோடு இத்தாச்சோடு இருந்துதுங்க ரெண்டும்!” என்று கைகளை உருண்டை பிடித்துக் காட்டினான் செந்தில். “மூலம் இருக்குறவங்க பன்னிக்கறி வார்ப் பீசா சாப்ட்டா நல்லதுங்க! பத்மனாபன் உங்களுக்கு மூலம் இருக்கா?” என்று கேட்டவனுக்கு, இல்லை என்று தலையை ஆட்டினான் பத்மனாபன்.

“மாட்டுக்கறி சாப்பிட்டிருக்கீங்களா நீங்க?” என்று செந்தில் இவனிடம் கேட்க “சாப்பிட்டதேயில்லை!” என்றான். “சரக்கெல்லாம் சாப்புடறீங்க.. இப்ப வர்ற சரக்குக சீக்கிரமா கொடலை அரிச்சு ஓட்டை பண்டிப் போடுமுங்க! திருப்பூர்ல வாரத்துல மூணுவாட்டி மாட்டுக் கொடலை ப்ரை பண்டித்தரச் சொல்லி சாப்பிடுவேன். இல்லீன்னா இந்தக் குடிக்கு எனக்குக் கொடலு குந்தாமணியெல்லாம் எப்பவோ நாசமாப் போயிருக்குமுங்க! வெளிய போனீங்கன்னா கொடல் சாப்பிடுங்க! அப்புறம் மேட்டரெல்லாம் எப்படிங்க வாரத்துல ஏழு நாளுமேவா?” என்று அங்க சுத்தி இங்க சுத்தி மேட்டரில் வந்து நின்ற போது பத்மனாபன் வார் பீஸை மென்று கொண்டிருந்தான்.

“ரெண்டு வருசம் ஆயிப்போச்சு செந்திலு! பாப்பா போனதுல இருந்து எல்லாமே வெறுத்துப் போயி…” கறியை விழுங்கிவிட்டு கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க உதடுகளைப் பிதுக்கினான் பத்மனாபன். “ஏனுங்க இன்னுமா அதை நினைச்சுட்டு அழுதுட்டே இருக்கீங்க நீங்க! அதுக்காக வீட்டுலயும் காயப் போட்டுட்டீங்களா? உங்களுக்கு அந்த நெனப்பே வர்றதில்லீங்களா? என்ன போங்க! மனுசனாப் பொறந்துட்டு அதுகூட இல்லீன்னா எப்பிடிங்க? இந்தப் போனு வேற முக்கியமா பேசுறப்பதான் வந்துட்டே இருக்கும்!” என்றான் செந்தில்.

“யாராச்சிம் முக்கியமான விசயம் சொல்ல கூப்பிடப் போறாங்க செந்திலு. எடுத்துப் பேசு!”

“என்னான்னு பேச? எங்கூர்க்காரி ஒருத்திதான் கூப்புட்டே இருக்கா! காத்தால பார்த்து ‘பொழப்பு இன்னிக்கி இல்லியா?ன்னு கேட்டா! ஆமாம்னேன்! மத்தியானமா வீட்டுப் பக்கமா வா! கஞ்சி காச்சலாம் அப்படின்னா! அதான் கூப்புட்டே இருக்கா! போனாப் போவுது பொழுதோட! அதவுடுங்க, உங்களுக்கு ரெண்டு வருசமா அந்த நெனப்பே இல்லிங்களா?”

“இருக்குது. ஆனா அவளே பாவம் கொழந்தை போனதுல ஏனோ தானோன்னு அவ பாட்டுக்கு வீட்டுல இருக்கா. அவளைப் போயி வான்னு தொந்தரவு பண்டுனா நான் மனுசனா? சொல்லு!”

“அதுக்காவ காலம் பூராவும் இப்பிடியே இருந்துக்குவீங்களா ரெண்டு பேரும்? என்ன போங்க! பெருமாநல்லூர்ல ஒருத்தி இருக்கா… போயிப் பாக்கறீங்களா? இதென்ன, செல் போன்ல அவ போட்டோ வச்சிருக்கேன் பாருங்க!” செந்தில் தன் அலைபேசியில் இருந்து போட்டோவை எடுத்து இவனிடம் பார்க்கக் கொடுத்தான். “அப்பிடியே நெகுத்தி நெகுத்திப் பாருங்க! அவ வீட்டுலதான் போட்டா புடுச்சேன்! ஒத்தநாடி ஒடம்பு பாருங்க!” பத்மனாபன் ஒல்லிப்பிச்சான் போன்ற ஒருத்தியை அலைபேசியில் பார்த்தான். அவள் கண்களில் என்னவோ காந்தமிருப்பதாய் நம்பினான். போட்டோக்களை நகர்த்திப் பார்த்தான். காது ஜிவ்வென அடைத்துக் கொண்டது இவனுக்கு! கட்டிலில் உடம்பில் பொட்டுத் துணியில்லாமல் பல வடிவங்களில் படுத்து போஸ் கொடுத்திருந்தாள். “என்ன இப்பிடியெல்லாம் போட்டா புடிக்க அவளே செரியின்னு சொன்னாளா?” என்றான் பத்மனாபன்.

“ஏனுங்க ரெண்டாயிரம் ரூவா குடுக்குறேன், போட்டா கூட எடுக்க படுத்துக்க மாட்டாளா? ஏன்தான் நீங்க இன்னும் இப்பிடி இருக்கீங்களோ? பக்கத்துல பனியன் கம்பெனிக்கி வேலைக்கிப் போயிட்டு வந்துட்டு இருக்காளுங்க! புருசன் திருநெல்வேலியில இருக்கானாம். பையனை அவன் அங்க வளத்துறானாம். இவ சம்பாதிக்க வந்திருக்கா! இங்க பெருமாநல்லூர்ல வீடு வாடகைக்கி எடுத்துட்டுத் தங்கியிருக்கா! இவ தங்கியிருக்குற வீடு லைன் வீடுக. எல்லாரும் வெளியூர்ல இருந்து வந்து குடும்பத்தோட அங்க தங்கியிருக்காங்க! சொல்லுங்க! உங்களுக்கு வேணும்னா இப்பவே போனு போட்டுச் சொல்றேன்” என்றான்.

பத்மனாபனுக்கு அவளை ரொம்பவும் பிடித்திருந்தது. “சரி கூப்பிடு, அவகிட்ட பேசலாம்” என்றான். செந்தில் அவளுக்கு கூப்பிட்டான். போனை எடுத்தவள் முதலில் யாரென இவனைக் கேட்டாள். “செல்வராசு சொல்லி ஒரு மாசத்திக்கிம் மின்ன ஒருநாளு புது பஸ்ஸ்டேண்டுல இருந்து உங்கூட்டுக்கு மத்தியானம் போனமே, ஞாவகம் இல்லியா சுமதி?” என்றான் இவன். “செரியா ஞாவகத்துக்கு வரமாட்டீங்குதுங்களே!” என்றாள் அவளும். “அட போட்டா புடிச்சிக்கறேன்னு சொன்னதும் புதுசா வயசுக்கு வந்துட்டவளாட்டம் வாயைக் கோணச்சியே! இன்னுமா ஞாவகம் வரல உனக்கு?” என்றதும், “அட ஆமாங்க! நீங்களா… இப்ப ஞாவகம் வந்துருச்சு!”

“அப்புறம் வேலையெல்லாம் எப்பிடி போயிட்டு இருக்குது?”

“ஒரு வாரமா எங்க கம்பெனில வேலையே இல்லீங்க! இருக்குதுன்னு போனம்னா நாலு மணி நேரத்துல முடிஞ்சுருது. அப்புறம் சினிமாக்குப் போயிட்டு பொழுதோட ஊடு வரவேண்டியதா இருக்குது! பாருங்க, வீட்டு வாடகை குடுக்கக்கூட கையில பணமில்லாம ரெண்டு நாளா வீட்டு ஓனரை ஏமாத்திட்டு ஓடிட்டு இருக்கேன்!”

“ஏன் அவரையும் ஊட்டுக்குள்ள கூப்புட்டு ரெண்டு மணி நேரம் கழிச்சு தாட்டியுட்டீனா வாடகையைக் கழிச்சுக்கலாம்ல?”

“அவருக்கு வயசு அறுவதுக்கும் மேல இருக்குமுங்க! பணத்தை எடு பணத்தை எடுன்னுட்டேதான் வருவாரு! சரி வர்றீங்களா? சினிமாக்கு போலாம்னுட்டு தியேட்டர் முன்னால நின்னுட்டு இருக்கேன். தென்னமோ கொலைகாரன்னு போஸ்டர் ஒட்டியிருக்காங்க!”

“அட தியேட்டருக்குள்ள ஓடிப்போயிடாதே! இங்க என்னோட நண்பருக்கு ஒன்னோட போட்டோவெல்லாம் காட்டினேனா, இப்பவே பாத்தாகணும்னு சொல்லிட்டு உக்கோந்திருக்காரு!”

“நானே எங்காச்சிம் வரணுமா?”

“இல்ல, அவரே பெருமாநல்லூரு வருவாரு. அவருக்கு உன்னோட நெம்பரை தந்துடறேன். பைக்கில வருவாப்ல!”

“போட்டோவை நீங்க மட்டும்தான் பாத்துக்கறதுக்குனு எடுத்தீங்க? இன்னுமா வெச்சுட்டு இருக்கீங்க அதை? சரி, அப்ப நான் பஸ் ஏறி பெருமாநல்லூரே வந்துடறேன்” என்றவள் போனை கட் செய்து கொள்ள பத்மனாபன் திருதிருவென பார்த்தான் செந்திலை.

“என்ன இப்பவே நான் போகணுமா பெருமாநல்லூரு? இந்த வெயில்ல! அட குச்சானுங்க யாராச்சிம் ரோட்டுல நின்னு கையைக் காட்டி வாயை ஊதச் சொன்னா கேசாவிப் போவுமே!”

“மத்தியானத்துல எந்தக் குச்சான்… நீங்க வருவீங்கனுட்டு ரோட்டுல நின்னுட்டு இருக்கான்? போயிச் சேர்ந்துட்டு என்ன குடித்தனமா பண்டப்போறீங்க அவகூட? ரெண்டு மணிநேரம் இருந்துட்டு அஞ்சு மணிக்கி ஊடு வந்துருவீங்க! சரி கிளம்புங்க! அவ நெம்பரை மெசேஜ் பண்ணிட்டேன் உங்க செல்லுக்கு!” செந்தில் எழ இவனும் தடுமாறி எழுந்து நின்றான். வெயில் கண்ணைக் கூசிற்று. இருவரும் ஒரே பைக்கில்தான் வந்திருந்தார்கள் சென்னிமலைக்கு. செந்திலின் வண்டி இவன் வீட்டில் நிற்கிறது.

“நீயும் கூட வரலாம்ல செந்திலு. எனக்கு இந்தமாதிரி போயி பழக்கமே இல்ல!”

“பழகிக்க வேண்டிதுதானுங்க! வேணும்னா அங்க போயி இன்னொரு கோட்டரு வாங்கிக்குங்க! அவளும் குடிப்பா!”

“அவபேரு என்ன சொன்னே… ஆங், சுமதி!” பத்மனாபன் வெயிலில் வண்டியை ஓட்டிக்கொண்டு வர, தார்சாலையிலிருந்து அனல் அவன் முகத்துக்கே அடித்தது. எப்போதுமில்லாமல் இந்த முறை வெயில் மிக அதிகமென நினைத்தான். வீட்டுக்கும் அருகாமை வருகையில் வண்டியை நிப்பாட்டிக் கொண்ட பத்மனாபன், “செந்திலு, நான் வீட்டுக்கு வரலை. நேரா பெருமாநல்லூரு போயிடறேன். நீ போய் உன் வண்டியை எடுத்துட்டு ஊட்டுக்குக் கிளம்பு. போயிட்டு எதாச்சிம்னா கூப்புடறேன்.” என்ற பத்மனாபன் அந்த வெயிலிலும் வேகமாய் வண்டியை முறுக்கினான்.

சுமதியை பத்மனாபன் பெருமாநல்லூர் பஸ் நிறுத்தத்திலேயே அடையாளம் கண்டு அவளுக்கருகாமை சென்று வண்டியை நிப்பாட்டினான். “சுமதி, அதான் செந்திலு சொன்னான்ல!” என்றதுமே சுமதி இவன் பைக்கிற்கு வந்தாள். “போனு பண்டுவீங்கன்னு போனையே பார்த்துட்டு இருந்தேன். நீங்க என்னடான்னா அடையாளம் கண்டுபுடிச்சே வந்து கிட்டக்க நிக்கறீங்க! இப்பிடியே வடக்க வண்டியை ஓட்டுங்க! பக்கம்தான் என்னோட வீடு!” என்றவள் வண்டியில் அமர்ந்து கொண்டாள். பத்மனாபன் வண்டியைக் கிளப்பினான். போதை வெயிலுக்கு சுத்தமாய் விடை பெற்றிருந்தது. வீடு செல்கையில் ஒரு கோட்டர் வாங்கிப் போனால் இரவுக்குப் போதுமென நினைத்தான். வண்டியில் அமர்ந்திருந்த சுமதி இவனை ஒட்டினாற்போல அமர்ந்து இவன் முதுகில் இரண்டையும் வைத்து அழுத்தினாற்போல செய்தாள். மஞ்சுளா ஒருநாள் கூட இவனோடு இப்படி முட்ட வைத்தபடி அமர்ந்து வராதது பற்றி நினைத்தான்.

சுமதியின் வீடு வரிசை வீடுகளில் கடைசியில் இருந்தது. வண்டியை சற்றுத் தள்ளி நின்றிருந்த வேப்பை மரத்தினடியில் கொண்டு போய் விடுமாறு சுமதி சொல்ல, இவன் வண்டியை அங்கே நிறுத்திவிட்டு அவள் வீட்டின் வாசலில் போய் நின்றான்.  “உள்ளார வாங்க, அங்கியே நின்னுட்டு என்ன பண்டப் போறீங்க வெயில்ல?” என்று வீட்டினுள்ளிருந்து குரல் கேட்டதும் தலையைக் குனிந்து கொண்டு உள்ளே சென்றவன்,  “பாத்ரூம் எங்கிருக்கு?” என்றான். “இப்பிடியே நேர் கடைசில இருக்கும் போங்க!” என்று கைகாட்ட, வீட்டினுள் இரண்டு அறைகளைத் தாண்டி கடைசிக்கு வந்தான்.

முதலாக நிரம்பியிருந்த தொட்டித் தண்ணீரில் போசி எடுத்து மோர்ந்து முகம், கை, கால் என கழுவினான். பல்லிடுக்கில் சிக்கியிருந்த பன்னிக்கறிப் பீசை சிரமப்பட்டு விரல் நகம் வைத்து நோண்டி எடுத்து சுண்டினான். வாயைக் கொப்பளித்து துப்பினான். இருந்தும் தொட்டி மீதிருந்த பேஸ்ட்டை எடுத்து விரலில் பிதுக்கி மதியத்தில் பல் துலக்கினான். பாத்ரூமிற்குள் சென்று உச்சா அடித்துவிட்டு திருப்தியாய் வெளியேறி திரும்பவும் வீட்டினுள் வந்தவனுக்கு முன்கதவு சாத்தப்பட்டிருந்தது விளக்கொளியில் தெரிந்தது.

இரண்டாவது அறையில் கட்டிலில் உடையேதுமின்றி சுமதி படுத்திருந்தாள். “நீங்களும் என்னை போட்டா புடிக்கிறீங்களா?” என்று கேட்டவளைப் பார்த்து நிதானமாய்ச் சிரித்த பத்மனாபன் கட்டிலில் சென்று அமர்ந்தான். “புதுசா?” என்றாள் சுமதி. இவன் அதற்கும் புன்னகைக்கலாமா என்று நினைத்து மண்டையை ஆட்டினான். “வீட்டுல பொண்டாட்டிக்கி ஒடம்புக்கு முடியலியா? எத்தனை நாளா?” என்று சுமதி கேட்டபோது இவனுக்கு உதடுகள் பிதுங்கியது. இவன் கண்களில் கண்ணீரைக் கண்டவள் உடனே இவனை இழுத்து கட்டிக் கொண்டாள். பத்மனாபனின் முகத்தை தன் மார்பகங்களில் வைத்து அழுத்திக் கொண்டாள்.

(வாசகர்கள் மேலே சுழலும் மின்விசிறியை இரண்டு நிமிடம் கண்கொட்டாமல் பார்க்கிறீர்கள்.)

பின்பாக விடைபெற்றுக் கிளம்புகையில் சுமதி நைட்டியை உடுத்தியிருந்தாள். அவள் கையில் இரண்டாயிரத்தை கொடுத்துவிட்டு வெளியில் வந்தான். “மறுபடி எப்போ கூப்புடுவீங்க? எப்போக் கூப்பிட்டாலும் காலையில எட்டு மணிக்குள்ள கூப்பிட்டு சொல்லிடுங்க! அப்போத்தான் வேலைக்காட்டுக்குப் போகாம வீட்டுலயே இருப்பேன்.” என்றவளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு வண்டியைக் கிளப்பினான்.

பத்மனாபன் வீடு வருகையில் மாலை மணி ஐந்தாகியிருந்தது. தறிச்சத்தம் ‘கடக்முடக்’கென கேட்க வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு டேங்க் கவரிலிருந்து கோட்டர் பாட்டிலை நைசாக எடுத்து அண்டர்வேர் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு குடோனுக்குள் சென்றான். குடோனில் இவன் வந்ததுகூட தெரியாமல் பெண்கள் இருவரும் நூல் போட்டுக் கொண்டிருந்தார்கள். மஞ்சுளாவைக் குடோனுக்குள் காணவில்லை. இவன் வெளியேறி கிழக்கு வாசலுக்கு வந்தான். ஒந்திரித்து சாத்தியிருந்த கதவைத் திறந்துவிட்டு உள்ளே சென்றான். உள்ளே மஞ்சுளாவின் பேச்சு சப்தம் கேட்டது இவனுக்கு. போனில் யாரிடமோ பேசுவாள் போலிருக்கிறது என்று இவன் திண்ணையில் மடித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த போர்வை அடுக்கைப் பார்த்தான். தெற்குத் திண்ணையில் கூடையில் அடைக்கு வைத்திருந்த கோழி இவனின் நடமாட்டத்தைக் கண்டு கொர்ர்ர்ர்ர்ர், என்றது. அண்டர்வேர் பாக்கெட்டிலிருந்து கோட்டர் பாட்டிலை எடுத்து மூலையில் குவிந்து கிடந்த தறி வேஸ்டுகளுக்குள் நுழைத்து விட்டு திண்ணையிலே தண்ணீர் குடிப்பதற்காக சமையலறை பக்கமாக வந்தான்.

“ஐயே, என்னுங்க செந்திலு நானு பண்டுவேன்? எப்பவுமே நானு அப்பிடித்தான். அவரே என்னை செஞ்சாலும் மூஞ்சியை கையில வச்சு மூடிக்குவேன்! நீங்க என்னடான்னா கையை இழுத்து இழுத்து உடறீங்க! ஒரே வெக்கமாப் போச்சுங்க எனக்கு! அடுத்த விசுக்கா வந்தா குடிச்சுப்போட்டு வராதீங்க செந்திலு. அந்த நாத்தம் எனக்குப் புடிக்கல!” சமையலறைக் கதவு ஒந்திரித்து சாத்தியிருக்க, தண்ணீர் குடிக்கலாமென வந்தவன், செந்தில் பெயரைக் கேட்டு அப்படியே நின்றான். பின்பாக அப்படியே படியில் இறங்கி வெளி வாசலுக்கு வந்து நின்று கிழக்கே பார்த்துப் பெருமூச்சு ஒன்றை விட்டான்.

கிழக்கு வானம் இப்ப மழை வரப் போகிறது என்பது மாதிரி இருண்டு கொண்டே வந்தது. வண்டியை எடுத்து வந்து ஆசாரத்தில் நிறுத்தலாமென வண்டியை நோக்கிச் சென்றவன் முதுகில் முதல் மழைத்துளி விழுந்தது.