திருச்செந்தூர் அருகே ஒரு கல்யாணம். அங்கிருந்து மண்டபம் அஞ்சு கிலோ மீட்டரோ என்னவோ சொன்னார்கள். கண்டிப்பாகப் போயாக வேண்டிய கல்யாணம். கல்யாணம் காலை ஆறு மணிக்கு. அதனால் முந்தினநாளே போய் திருச்செந்தூரில் தங்கி சாமி கும்பிட்டுவிட்டு காலையில் முதல் பஸ்ஸைப் பிடித்துப் போய் விடலாம் என்று தனக்குத்தெரிந்த ஒரு பத்திரிகை நிருபர் மூலமாக தரிசனத்திற்கும் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்துவிட்டுக் கிளம்பினான் கணேசன். முகூர்த்தக் காலம் என்பதால் பஸ்ஸில் ஏகக் கூட்டம். பஸ் பிதுங்கி வழிந்தது. எப்படியோ பஸ்ஸில் திணிந்து கொண்டு ஒரு இடத்தையும் பிடித்துவிட்டான். இப்போதே இந்தக் கூட்டமென்றால் நாளை திரும்பும் போது என்ன சங்கடமோ, மத்தியானச் சாப்பாட்டுக்கெல்லாம் இருக்கக் கூடாது, காலைப் பந்தி முடிந்ததும் கட் அடித்துவிட்டு வந்துவிட வேண்டும். நிருபரிடம் சொல்லி, தெரிந்த ஆட்டோ கிடைத்தால்கூட அதிலேயே போய்விட்டு வந்துவிடலாம் என்று நாளைக்கு நடப்பதை எண்ணி இன்றே பதற்றமடைந்துகொண்டிருந்தான். அவன் எதையாவது நினைத்து நினைத்துப் பதற்றமடையாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.
பொதுவாகவே ஒரு விசேஷ வீட்டிற்குப் போவதென்றாலே சங்கடப்படுவான். தன்னை யாரும் சரியாகக் கவனிக்க மாட்டார்கள் என்று ஒரு நினைப்பு. பந்தியில் ஒரு ஐட்டம் தன் இலையைத் தாண்டிப் போய்விட்டதென்றால் அவமானமாக உணர்வான். சமயத்தில் முனுக்கென்று கோபம் வந்துவிடும். மனைவியுடன் போனால் அவளை ஒட்டிக்கொண்டே போவான். அவளுக்குத் தெரிந்தவர்களுடன் ஐந்து நிமிடம் அவள் நின்று பேசினால், எப்போது கிளம்புவாள் என்று ரகசியப் பரபரப்பாய் நிற்பான். அவனும் யாருடனும் அதிக நேரம் நின்று பேச மாட்டான். சீக்கிரமாய் வீட்டுக்கு வந்து பேண்ட் சட்டையையெல்லாம் கழற்றி லுங்கிக்கு மாறினால்தான் ஆசுவாசமடைவான். இன்றும் உள்ளூரில் ஒரு கல்யாணம், அவள் தான் போய்க்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள். உறவுக்குள் கல்யாணம் என்றால் கணேசனுக்குப் பெரிய திண்டாட்டம். இது சினேகிதன் வீட்டுக் கல்யாணம், அதனால் கொஞ்சம் பாதுகாப்பாய் உணர்ந்தான். ஆனால் பஸ்ஸில் பார்த்த கூட்டம் அவனது அந்த உணர்வைக் குலைத்துவிட்டது. பஸ் ஓடத் துவங்கியதும் பழைய நினைவுகள் எல்லாம் பின் நகரும் மரங்களென மனசுக்குள் விரைந்தன.
திருச்செந்தூருக்கு அப்போது இப்படி அடிபிடியான கூட்டமெல்லாம் இருக்காது. மாதந்தோறும் கணேசன் மத்தியானம் மூன்று மணிக்குக் கிளம்புகிற மயில்வாஹன் எக்ஸ்பிரெஸ் பஸ்ஸில் போவான். பலரும் மாதாந்த வெள்ளி அன்று போவார்கள். அன்று கொஞ்சம் கூட்டம் அதிகம் இருக்கும். அதனால் கணேசன் வெள்ளிக்கிழமை போக மாட்டான். வேறு ஏதாவது நாட்களில் போவான். அவனுக்கு எந்த வேண்டுதலும் கிடையாது. அங்கு போக ஆரம்பித்ததே ஒரு வேடிக்கை. அப்போது கணேசன் அரியர்ஸ் எழுதப் படித்துக்கொண்டிருந்தான். திடீரென்று ஒருநாள் எங்காவது போய் வரலாமே என்று தோன்றியது. பணக்கார சினேகிதன் ஒருவனுக்கு ரெக்கார்டு நோட் வரைந்து கொடுத்ததற்குக் கொஞ்சம் காசு கொடுத்திருந்தான். அதைக் கொஞ்சம் உருப்படியாகச் செலவழிக்கலாம் என்று நினைத்துத் திருச்செந்தூர் கிளம்பினான். அதுவே ஒரு வழக்கமாகத் தொற்றிக்கொண்டது. ஆறேழு மாதங்களாகப் போய் வந்துகொண்டிருந்தான்.
எத்தனையோ அரசு பஸ்கள் எல்லாம் வந்துவிட்டாலும் இந்தத் தனியார் மயில்வாஹன் எக்ஸ்பிரஸ் பஸ்ஸுக்கென்று ஒரு கூட்டம் இருக்கும். அதை ரசிகர் கூட்டமென்றே சொல்லலாம். அது இடையில் எங்கும் நிற்காது. ஒண்ணேகால் மணிநேரத்தில் திருச்செந்தூர் போய்விடும். மத்த பஸ்கள் எல்லாம் இடைவழியில் நிறைய நிறுத்தங்களில் நிறுத்திப் போவார்கள். நிறுத்தங்கள் தவிரவும் எங்காவது காட்டுக்குள் நிறுத்தி இன்வாய்ஸ் எழுதுவார்கள். கண்டக்டர் சொல்லச் சொல்ல டிரைவர் தன்னிடமுள்ள டிரிப் ஷீட்டில் எந்தெந்த ஊருக்கு எத்தனையெத்தனை டிக்கெட் என்று எழுத வேண்டும். செக்கிங் இன்ஸ்பெக்டர் வந்தால் இரண்டையும் ஒத்துப் பார்ப்பார்.
கணேசன் அதிலேயே ரிட்டர்ன் டிக்கெட் எடுத்துவிடுவான். ஸ்ரீவைகுண்டம் தாண்டினதும், யாருக்கெல்லாம் ரிட்டர்ன் டிக்கெட் வேண்டுமென்று கேட்கிற மாதிரி கண்டக்டர், இருக்கை அருகே வருவார். டிக்கெட் கொடுக்கும் போது, கண்டிப்பாக வெயிட் பண்ண மாட்டோம், வண்டி கிளம்பும் முன்னால் வந்து விட வேண்டும் என்று சொல்லியும் விடுவார். தவிரவும் ரிட்டர்ன் டிக்கெட் கொடுப்பதை ரகசியமாக, நன்கு பழக்கமானவர்களுக்கே கொடுப்பார். ஏனென்றால், அதற்கு முந்திய சாதாரண பஸ் கிளம்பின பின்தான் டிக்கெட் கொடுக்க வேண்டும், ரிட்டர்ன் டிக்கெட் எடுத்தவர்கள் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துவிட்டால், நீங்கள் எப்படி அதற்குள் ஆள் ஏற்றலாம் என்று பஸ்ஸ்டாண்டில் மற்ற பஸ்ஸின் ஏஜெண்டுகள் தகராறு செய்வார்கள். திரும்புகையில் அது மீண்டும் ஆறு மணி வாக்கில் கிளம்பும். இந்த பஸ்ஸிற்கு முன்னதாகவும் பின்னதாகவும் இரண்டு பஸ்கள் கிளம்பும் ஆனாலும் இதற்கென்று ஒரு கூட்டம் இருக்கும், டிக்கெட் நிறைந்துவிடும். நாலே காலுக்கு இறங்கினால் கோயிலுக்குப் போய் சாவகாசமாக சாமி கும்பிட்டு உள்ப்பிரகாரம், வெளிப் பிரகாரம் வள்ளி குகை எல்லாம் சுற்றி விட்டு கொஞ்ச நேரம் கடலில் கால் நனைத்துவிட்டு வரலாம். ஒரு டீயோ காப்பியோ குடிக்கவும் நேரம் இருக்கும். சமயத்தில் ரிட்டர்ன் டிக்கெட் எடுக்கவில்லையென்றால் கண்டக்டர் அண்ணாச்சி ஏன் என்று பார்வையிலேயே கேட்பார், “நம்ம வண்டிதானே, டிக்கெட் தராமலா போய்ருவீங்க” என்பான். அவர் அப்பாவுக்கு வேண்டியவர். இவன் தலையைப் பார்த்துவிட்டால் ஒரு டிக்கெட்டை மடித்து வைத்துவிடுவார். அப்போதெல்லாம் ஓவர் டிக்கெட் ஏற்ற முடியாது. ஸ்டாண்டிங் எல்லாம் கிடையாது. அப்படி ரிட்டர்ன் டிக்கெட் எடுக்காவிட்டால் கடலில் ஒரு குளியல் போடுவான். அதற்காக ஒரு ஜட்டி, துண்டு செட் மட்டும் கொண்டு போவான். கடலில் குளித்தால் தலை பிசுபிசுவென்று இருக்கும், சரியாய் சீவக்கூட முடியாது. முடியைக் கையாலேயே ஒதுக்கி விட்டுக்கொள்வான். அப்படிக் குளித்தாலும் அதே பஸ்ஸுக்குப் பெரும்பாலும் வந்துவிடுவான்.
இன்றோ சரியாய்க்கூட உட்கார முடியவில்லை. நிற்பவர்களில் ஒருவர் மாற்றி ஒருவர் தோளில் சாய்ந்துகொண்டிருந்தார்கள். ஒருவழியாக திருச்செந்தூர் வந்து சேர்ந்ததும், பஸ்ஸ்டாண்டில் நிருபர் தயாராக நின்றார். அவர் பைக்கிலேயே கோயில் விடுதிக்குக் கூட்டிப் போய் அறைச் சாவியை வாங்கிக் கொடுத்தார். கோயில் சன்னதி வரைக்கும் அழைத்துப் போய் சாமியை நன்றாகக் கும்பிட வைத்தார். வெளியே வந்ததும் காலையில் பேப்பர் வேன் கல்யாண மண்டபம் வழியாகத்தான் செல்லும், அதில் போய்விடலாம், வரும் போதும் அது நாலு ஊர்களுக்குப் போய் விட்டு எட்டு மணிக்கு மண்டப வாசலில் உங்களை ஏற்றிக்கொண்டு வந்துவிடும் என்று சொன்னார். கணேசனுக்கு அப்பாடா என்றிருந்தது. தனக்கு ஒரு சின்ன வேலை இருக்கிறது, உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் வரை போய் நியூஸ் சேகரிக்க வேண்டும், காலையில் நாலு மணிக்கே பேப்பர் வேனுடன் வந்துவிடுகிறேன் என்று கோயில் வாசலில் விடை பெற்றுக்கொண்டார் நிருபர்.
மாலை நேரக் கடல் வா வாவென்று அழைத்தது. கடலிலிருந்து குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. கோயிலில் இருந்த புழுக்கத்திற்கும் வியர்வைக்கும் கடல் காற்று இதமாய் இருந்தது. கணேசன் கடலை நோக்கி இறங்கினான். மணலில் ரொம்ப நேரம் உட்கார முடியாது. ஒரு வகை ஒட்டுண்ணி இருப்பதாக விளம்பர போர்டே வைத்திருப்பார்கள். கடலில் காலை நனைத்துக் கொண்டு நின்றான். பழைய காலங்களில் தனியாகவோ நண்பர்களுடனோ வந்து குளித்ததெல்லாம் நினைவு வந்தது. அப்போதெல்லாம் ஒரு அரை மணிநேரமாவது கடலில் குளிப்பான். இப்போதும்கூட கையும் காலும் குளிப்பதற்குப் பரபரத்தது. கடற்கரையில் நிற்கும் கூட்டம் எல்லாம் காலை நனைக்கிற கூட்டமாகவே தெரிந்தது.
ஒரு பையன், பையன் என்று சொல்ல முடியாது கல்லூரி மாணவன் போல இருந்தான். அவன் காலை நனைத்துக்கொண்டிருந்தவன், “அண்ணாச்சி, ஆழம் ரொம்ப இருக்குமா” என்றான். அவ்வளவு ஆழமெல்லாம் இருக்காது” ஒரு திசையைக் கண்பித்து , “இந்த இலக்கில் போனால் கொஞ்சம் பாறைகள் இருக்கும் , ஜோராகக் குளிக்கலாம், உங்களுக்கு நீச்சல் நன்றாகத் தெரியுமா” கணேசன் கேட்டான். “நீச்சல் நன்றாகத் தெரியும், ஆனால் கடலில் குளித்துப் பழக்கமில்லை, ஆசையாய் இருக்கு.” “பிறகென்ன தம்பி, ஒரு விஷயம் தெரிஞ்சுக்க, அலை வரும்போது, மூச்சை அடக்கிக்கிட்டு நல்லா முங்கிக்க, அலை உன்னைத் தலைக்கு மேலாகக் கடந்து போயிரும், அது கடக்கறது தெரிஞ்சதும் தலையைத் தூக்கிரு, அடுத்த அலை வரும் வரை கடல் அழகா உன்னத் தாலாட்டும், இப்படி நாலு தடவை அலை வரும் போது முங்கவும் எந்திரிக்கவும் பழகிட்டா கடல் குளியல் ஈசி தம்பி. அப்படியே அலை வரும்போது மிதந்துட்டா அதுவே உன்னைக் கரைக்குக் கொண்டு வந்திரும், அலை கிட்ட பணிஞ்சிரணும், எதித்து மோதுகிற மாதிரி முண்டக் கூடாது” என்று தானே குளிப்பது போல அனுபவித்துச் சொன்னான் கணேசன்.
அந்தப் பையன் சிரித்தபடியே கேட்டுக்கொண்டான். அவனது சிறிய மீசை கணேசனுக்கு யாரையோ நினைவுறுத்தியது. அந்தப் பையன் சட்டென்று சட்டை வேட்டியைக் களைந்தான். “ஏது, நம்மைக் காவல் வைத்துவிடுவான் போலயே” என்று நினைக்கும் போது அவன், “அம்மா, இந்தா இதைப் பார்த்துக்க, நான் குளிக்கப் போறேன்” என்று கரையில், கணேசனுக்குப் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணிடம் துணிகளை எறியாத குறையாகக் கொடுத்துவிட்டுக் கடலுக்குள் இறங்கினான். அந்தப் பெண் “டேய் செல்வம், வேண்டாண்டா” என்று பதற்றமானாள். கணேசன் அப்போதுதான் அந்தப் பெண்ணை நன்றாகக் கவனித்தான். அவளது நெற்றியில் இரண்டு புறமும் சுருட்டி விடப்பட்ட முடியைப் பார்த்ததுமே பட்டென்று நினைவு வந்தது, “இது சிவா மனைவி வசந்தியில்லா” என்று. சிவா, கணேசனைவிட இரண்டு வயது மூத்தவன். வயது வித்தியாசம் பாராமல் நன்கு பழகக் கூடியவன். அவன் அப்பா சின்னதாக ஓட்டல் வைத்திருந்தார். கொஞ்ச நாட்கள் கவுன்சிலராகக்கூட இருந்தார். அந்தக் கடையில் அப்பா இல்லாத நேரத்தில் சிவா கல்லாவில் இருப்பான். அவன் இருந்தால் கணேசனுக்கு இலவச டிபன் கிடைக்கும். சினிமா ரசனையில் சிவாவுக்கும் கணேசனுக்கும் ரொம்பவும் ஒத்துப்போகும். குறிப்பாகப் பழைய படங்களும் பழைய பாடல்களும் பார்ப்பதும் கேட்பதும் இருவருக்கும் ரொம்பப் பிடிக்கும். நடிகர் நடிகைகளில் இருவரின் ரசனையும் ஒன்றுபோல இருக்கும். பழைய சினிமா ஓடும் தியேட்டர்களுக்கு சிவா தவறாமல் கணேசனை அழைத்துப் போவான். அப்படியே சினிமா பார்த்துவிட்டு முக்கால் வாசிப் படத்திலேயே கிளம்பி பக்கத்தில் ஒரு பிரபல ஓட்டலில் பிரியாணியோ, ரொட்டி சால்னாவோ சாப்பிட்டுவிட்டு வருவார்கள்.
தேரோட்டமோ பொருட்காட்சியோ போனால் அங்கு வருகிற பெண்களில் அழகானவர்கள் கண்ணில் பட்டால் இருவரும் சரியாக ஒருவருக்கொருவர் சட்டென்று விளக்குப் போட்டாற் போல திரும்பி ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வார்கள். இருவர் மதிப்பீடும் ஒரே போல இருக்கும். சமயத்தில் சிவா அதில் கில்லாடியாக இருப்பான். “கணேசா, சட்டுன்னு திரும்பாத, மெதுவா உனக்கு வலது பக்கம் பாரு ஒரு புறா சூப்பரா நிக்கிது” என்பான். மெதுவாக ஏதோ வேலை இருப்பது போலத் திரும்பி, “எது, அந்த மஞ்சள் சேலையா” என்றால், “அது ஆம்பிளை மாதிரி இருக்குப்பா, அதுகூட ஒரு நீலக் கலர் சேலை நிக்கிது பாரு, `அம்மு’ மாதிரி இருக்கு” என்பான். சில பெண்களைப் பார்த்து சிவா, இப்ப அது என்னை ஓரக்கண்ணால் பார்க்கும் பார்” என்பான். அடுத்த நொடி அது அவனைக் கள்ளப் பார்வை பார்க்கும். கணேசன், “உனக்குக் கன்னி ராசி” என்பான். “போப்பா, எனக்கு மிதுன ராசி” என்பான்.
சிவாவின் அம்மா அவனது அப்பாவிற்கு சட்டபூர்வமான மனைவியில்லை. அதனால் அவனுக்குப் பெண் பார்க்கும் போது அதே போல ஒரு குடும்பத்திலிருந்து பெண் எடுத்தார்கள். சிவாவின் சித்தியோடு, அவன் சொல்லி, பெண் பார்க்கக் கணேசனும் போயிருந்தான். பெண் முன் நெற்றியின் இரண்டு புறமும் தலையைச் சுருட்டி விட்டிருந்தது, துலக்கமாக மனதில் பதிந்தது. சிவா கணேசனிடம், “நீ சொன்னால்தான் நான் கல்யாணத்திற்குச் சம்மதிப்பேன். பொண்ணு நல்லாருக்கா, நீ கேட்டியா அவ யாரு ரசிகைன்னு” என்றெல்லாம் கேட்டான். “அதெல்லாம் எப்படிப்பா கேக்க முடியும், உங்க சித்தி என்னவோ கேட்டுக்கிட்டு இருந்தாங்க, பொண்ணு லட்சணமா, நல்லாருக்கு. சின்னப் பொண்ணா, உனக்குத் தரமா இருக்கு, கெட்டலாம், கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம ரசனைக்கு மாத்திர வேண்டியதுதானே” என்றான்.
கல்யாணத்திற்குப் பிறகு சிவாவுடன் சற்று நெருக்கம் குறைந்துபோனது. பார்க்கையில் பேசிக் கொள்வார்கள். கணேசனும் வேலை நிமித்தமாக வேறு வேறு ஊர்களுக்கு மாறுதலாகிப் போய் விட்டான். சிவா அப்பாவின் ஓட்டலைப் பார்த்துக்கொண்டான். ஆனால் கொஞ்ச நாளில் அவர் இறந்து போக, தம்பிகளுடன் ஏதோ மனஸ்தாபம் வந்து சொத்துக்களைப் பிரித்துக்கொண்டார்கள். ஒரு தம்பி ஓட்டலை எடுத்துக்கொள்ள, சிவா வேறு ஒரு ஓட்டல் ஆரம்பித்திருக்கிறான் என்றார்கள். திடீரென்று அலுவலக ட்ரெய்னிங் சம்பந்தமாக ஊருக்கு வந்த போது ஒரு சக அலுவலக நண்பர்தான் சொன்னார், “சார் உங்க தோஸ்த் சிவா இறந்துபோய்ட்டார் தெரியுமா” என்று. அவருக்கும் சிவா நல்ல நண்பர்தான். கணேசனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் அவன் புதிய ஓட்டலில் போய் நிற்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தால் அவனே சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவான் என்று தெரியாமல் போய்விட்டதே என்று அதிர்ச்சியாக இருந்தது.
அவர் அடுத்துச் சொன்னது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. “அவர் மருந்து குடிச்சி செத்துப் போய்ட்டாரு சார்” என்றார். “ஐயோ, அவன் ஸ்ட்ராங்கான ஆளாச்சே அப்படியெல்லாம் செய்ய மாட்டானே” என்றான். “நானும் அப்படித்தான் நினைச்சிருந்தேன். ஆனா சூழல் அப்படி அமைஞ்சிட்டு” என்றார். அவரே தொடர்ந்து, “நீங்க கிட்ட முட்ட ஊருக்கே வரலைல்லா, அதுதான் தெரியலை. அவரு புதுசா, கடை ஆரம்பிச்சு, ஒரு வீடு ஒத்தி புடிச்சி நல்ல போர்ஸாத்தான் இருந்தாரு” அந்த நண்பருக்கு அடிக்கடி தும்மல் வரும். கர்ச்சீப்பும் கையுமாத்தான் அலைவார். ஒரு தும்மல் போட்டுவிட்டுத் தொடர்ந்தார்.
“புது வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு பொண்ணு, அவளும் கல்யாணம் ஆகி புள்ளை குட்டியோடத்தான் இருந்திருக்கா, ஆளு அழகா இருப்பாளாம், ஒரு பெரிய ஆபீஸ்ல வேலை வேற பார்த்திருக்கா, எப்படியோ உங்க சேக்காளிக்கும் அவளுக்கும் பழக்கமாகிப்போச்சு, அது வீட்டம்மாவுக்குத் தெரிஞ்சு கண்டிச்சிருக்கு, இவரு நிறுத்தற பாடா இல்லை, நமக்குத்தான் தெரியுமே உங்க சினேகிதரோட பெண் பலவீனமும் முரண்டுக் குணமும். கொஞ்சம் சண்டை சச்சரவு பெருசா ஆனதும், இவரு வீட்டம்மா, நீங்க இந்தக் காரியத்தை நிப்பாட்டாட்டா அவ ஆபீஸ்ல போயி, நேராவே அவ கிட்டக் கேட்டு, அவளோட மானத்தை வாங்கிருவேன்னு சண்டை போட்டிருக்கு. இவரு, நீ அப்படில்லாம் போனா நான் மருந்தைக் குடிச்சுருவேன்னு சொல்லிருக்காரு. அவங்க கேக்கலை, ஒருநாளு திடீர்னு கிளம்பி, ஆபீஸுக்கே போயி ஒரு ஆட்டம் ஆடியிருக்காங்க, திரும்பி வந்தா இவரு மருந்தக் குடிச்சிட்டு மலந்துட்டாரு.” “ஒரு சின்னப் பையன் இருக்கான் அவருக்கு. கடனும் ஏகப்பட்ட கடன் வாங்கித்தான் கடையை ஆரம்பிச்சாரு. கெட்ட நேரத்திலையும் ஒரு நல்ல நேரத்துக்கு தம்பிமார்கள் வந்து ஆக வேண்டிய காரியத்தைப் பார்த்து, புதுக் கடையைக் காலி பண்ணி அதில் வந்த பகடித் தொகையை வச்சு, கடனை அடைச்சு அவரு வீட்டம்மாவையும் பையனையும் ஒரு தம்பி தன்கூடக் கூட்டிட்டுப் போய்ட்டார். கடை நல்ல செண்டரான இடம்ங்கிறதால காலி பண்ணறதுக்கு `நிந்தம்’ நல்லதொகையாக் கிடைச்சிருக்கு. உள்ளூர்லதான் இருக்காங்க, நீங்க வேணும்னா போய்ப் பாருங்க” என்றார். எந்த முகத்தோடு யாரைப் போய்ப் பார்ப்பது என்று போகவில்லை. அன்றோடு சிவா பற்றிய நினைவுகள் எல்லாம் கடந்து போய்விட்டன.
கடலுக்குள் நீந்தப் போன பையன் கொஞ்ச தூரம் அதிகமாகவே போய்விட்டான். அங்கிருந்து கையை உற்சாகமாகக் காட்டிக்கொண்டிருந்தான். அன்று அலைகள் அவ்வளவு மூர்க்கமாயில்லை. கணேசன் வா வா என்று கையைக் காண்பித்தான். அதை அவன் எப்படிப் புரிந்துகொண்டானோ உற்சாகமாய் கையை அசைத்துக்கொண்டிருந்தான். அவனது அம்மா, வசந்தி, பின்னாலிருந்து கூப்பிட்டாள், “அண்ணாச்சி அவனை இங்கே வரச் சொல்லுங்க, கல்யாணம் உறுதியாகி நாளைக்கி அவன் பால்க்குடம் எடுக்கணும்ன்னு நேர்ந்திருக்கு, ரொம்ப காலத்து நேர்த்திக் கடன், பாக்கி வச்சுக்கிட்டு கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு சொன்னாங்க, அவனைக் கெஞ்சிக் கூத்தாடி சம்மதிக்க வச்சிருக்கேன், உங்க கிட்ட பேசிக்கிட்டிருந்தவன் சடக்குன்னு கடலுக்குள்ள இறங்கிட்டான். அவனைக் கூப்பிடுங்க, அவன் சித்தப்பாவுக்குத் தெரிஞ்சா என்னை உண்டு இல்லைன்னு பண்ணிருவாங்க, அவங்க வர்ற நேரம்தான்” என்றாள். அவளிடமிருந்த குற்றாலம் சிகப்புத் துண்டு ஒன்றை வாங்கி அசைத்து, கரைக்கு வா என்று சைகை செய்தான் கணேசன். அவனுக்கு என்ன புரிந்ததோ, இல்லை கை கால் வலித்துவிட்டதோ, கரைக்குத் திரும்பினான். சொன்னது போலவே அலையில் மிதந்துகொண்டே வந்தான். கரைக்கு வந்ததும் வசந்தியின் முகத்தில் பயம் நீங்கின தெளிச்சி தெரிந்தது. சின்ன வயதில் பார்த்தது போலவே இருந்தாள். கொஞ்சம் சதை போட்டிருந்தது. அவள் பையனோ உற்சாகமாக “சார், நீங்க சொன்ன மாதிரித்தான் நீந்தினேன். அலை வரும் போது அமிழ்ந்துகொண்டேன், அழகாக் குளிக்க குடிஞ்சது, மிதந்துக்கிட்டே ஜோரா கரைக்கு வந்துட்டேன், எல்லாம் நீங்க சொன்ன மாதிரித்தான்” என்றான். “நானும் பார்த்தேன்” என்றான் கணேசன். வசந்தி தன் மகனிடம், “யாரோ சொன்னாங்கன்னு நீ பாட்டு கடலுக்குள்ள இறங்கிட்டே, என்னமாவது ஆச்சுன்னா என் கதி என்ன ஆகும் யோசிச்சியா” என்று அவன் மேல் ஒட்டி மினுங்கிக்கொண்டிருந்த ஈர மணலையெல்லாம் பாசத்தோடு, துண்டை வைத்துத் தட்டினாள். அவன் விடும்மா நான் துவட்டிக்கிறேன் என்று சற்றே வெட்கப்பட்டு நகர்ந்தான். கணேசனுக்குச் சட்டென்று மனதுக்குள் `உங்க அம்மா எத்தனை அலைகளில் அமிழ்ந்து நிமிர்ந்து எழுந்தாளோ’ என்று தோன்றியது. ஒன்றும் பேசவில்லை. ஏதாவது பேசி அவளுக்கு ஒரு இக்கட்டை உண்டு பண்ண வேண்டாமே என்று நினைத்தான். அதற்குள் சிவாவின் கடைசித் தம்பி வந்தான். அவனை கணேசனுக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. அதே சுருட்டைமுடி உருண்டை முகம். சிவாவைப் போலவே உதட்டை ஒட்டி மெலிதாக ஒதுக்கப்பட்ட மீசை. அவனுக்கு கணேசனை அடையாளம் தெரியவில்லை. இருக்குமே, சிவாவையெல்லாம் பார்த்து இருபது வருடங்களுக்குக் கூடவே இருக்குமே. இந்தப் பையனுக்கும் அவ்வளவுதான் இருபது, இருபத்திரண்டு வயது இருக்கும். சீக்கிரமே கல்யாணம் பண்ணி வைக்கிறார்கள் போலிருக்கிறது. சிவாவுக்கும் சீக்கிரமே கல்யாணம் பண்ணி வைத்துவிட்டார்கள். கணேசனின் செட்டிலேயே சிவாவுக்குத்தான் சீக்கிரம் கல்யாணம் ஆனது. ஒரு வேளை மற்றவர்களைப் போலத் தாமதமாகக் கல்யாணம் பண்ணியிருந்தால் சிவா செத்துப்போயிருக்க மாட்டானோ என்று நினைத்தபோது, சிவாவின் தம்பி, “கடலில் குளிச்சா நாழிக் கிணத்தில குளிக்கணும், வா வா” என்று அவசரப்படுத்தினான். வசந்தி, “ரூமில நல்ல தண்ணியில போய்க் குளிச்சிக்கிடலாமே” என்றாள். “கடல்ல குளிச்சா நாழிக் கிணத்தில குளிக்கணும் அது ஒரு ஐதீகம், பேசாம வா, வாடா என் பின்னால” என்று கோபமாய்ச் சொன்னான், சிவாவின் தம்பி. அவன் பின்னால் ஆட்டுக்குட்டி போல அவர்கள் இருவரும் நாழிக்கிணறு நோக்கி நடந்தார்கள். கணேசனை யாரும் கண்டுகொள்ளவில்லை. எதுவும் சொல்லிக்கொள்ளவும் இல்லை. அதுவும் நல்லதுதான் என்று நினைத்துக்கொண்டே கணேசன் விடுதியைப் பார்க்க நடந்தான்.

கலாப்ரியா
kalapria@gmail.com