1998ஆம் ஆண்டில் கன்னட நாடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக கிரீஷ் கார்னாடுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. அதையொட்டி கர்நாடக அரசு அவரைக் கௌரவித்துப் பாராட்டும் வகையில் விழாவொன்றை ஏற்பாடு செய்ய விரும்பியது. ஆனால் கார்னாடுக்கு விழா நிகழ்ச்சிகளில் விருப்பமில்லை. அதனால் மறுத்துவிட்டார். பிறகு விழா வேறு வகையில் மாற்றியமைக்கப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ச்சியாக மாலை வேளைகளில் கார்னாடின் நாடகங்கள் வெவ்வேறு குழுவினரால் மேடையேற்றப்பட்டன. பார்வையாளர்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர். ஏழாம் நாள் நாடகம் முடிந்ததும் கேள்வி பதில் நிகழ்ச்சியொன்று நடந்தது. பார்வையாளர்கள் கேள்விகளை ஒரு தாளில் எழுதி மேடைக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். ஏறத்தாழ ஒரு மணிநேரம் அனைவருடைய கேள்விகளுக்கும் விரிவான வகையில் கார்னாட் பொறுமையாக விடையளித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் பார்வையாளர்கள் எழுந்து நின்று ஐந்து நிமிடங்கள் இடைவிடாமல் கைதட்டித் தம் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்கள்.

அந்தக் கேள்வி பதில் நிகழ்ச்சியில் அவர் சொன்ன ஒரு பதில் இன்னும் என் நினைவில் பதிந்திருக்கிறது. ‘புராணக்கருக்கள் வழியாக சமகாலத்தை உணர்ந்து கொள்வதற்கான இடைவெளிகளோடும் மௌனங்களோடும் நாடகங்கள் உள்ளதாக உங்கள் நாடகங்களைப்பற்றி எழுதும் விமர்சகர்கள் சொல்கிறார்கள். யயாதி நாடகத்தை நான் இப்போதுதான் முதன்முதலாகப் பார்த்தேன். அது காமவேட்கையால் அலையும் ஒருவனைப்பற்றிய கதையாக மட்டுமே இருப்பதாக நினைக்கிறேன். அதில் சமகாலம் எங்கே இருக்கிறது? விமர்சகர்கள் வழியாகப் பதில் பெறுவதைவிட உங்கள் வழியாகவே பதில் பெறவேண்டும் என விரும்புகிறேன். சொல்வீர்களா?’ என்று ஒரு பார்வையாளர் எழுதி அனுப்பியிருந்த சீட்டை எடுத்துப் பிரித்துப் படித்தார். பிறகு ஒன்றிரண்டு கணங்கள் பார்வையாளர்கள்மீது பார்வையைப் படரவிட்டார்.
மொத்த நாடகக் காட்சிகளையும் தன் கண்முன்னால் கொண்டுவந்து பார்க்க அந்த இடைவெளியை அவர் பயன்படுத்திக்கொண்டார். அப்புறம் ஒரு புன்னகையோடு நெற்றியைத் தேய்த்தபடி பதில் சொல்லத் தொடங்கினார்.

‘என் நாடகத்தைப்பற்றிப் பொதுவாக நானே பேசி விளக்கம் கொடுக்க விரும்புவதில்லை. ஆனால் அந்த எண்ணத்தைமீறி பல இடங்களில் நான் இப்படிப்பட்ட பதில்களைச் சொல்லவேண்டியிருக்கிறது. யயாதி நாடகத்தில் யயாதி மையப்பாத்திரம்தான். ஆனால் நம் கவனம் யயாதியின்மீது மட்டும் குவிந்திருக்கவேண்டிய அவசியமில்லை. மற்ற பாத்திரங்களையும் நாம் அதே கண்ணுடன் பார்க்கவேண்டும். தேவயானியை எடுத்துக்கொள்ளுங்கள். அவளுடைய பொறாமைக்கு எல்லையே இல்லை. அது ஒரு எரிமலைபோல எரிந்துகொண்டே இருக்கிறது. அந்த நெருப்பு யயாதிக்கும் சரிமிஷ்டைக்கும் இடையிலுள்ள உறவைப் பொசுக்குகிறது. புருவுக்கும் சந்திரலேகாவுக்கும் இடையிலுள்ள நெருக்கத்தைச் சாம்பலாக்குகிறது. மானுடப் பொறாமையின் தீ அனைவருடைய வாழ்க்கையையும் பொசுக்கி மண்ணோடு மண்ணாக்குகிறது. இப்போது யோசித்துப் பாருங்கள். இந்த உலகில் நம் கண்ணுக்கெட்டிய அளவில் அல்லது தகவலுக்கெட்டிய அளவில் பொறாமைத்தீ எத்தனைப் பேரை நாசமாக்கியிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். இங்கேதான் சமகாலத்தின் கண்ணோடு நாம் பார்க்கவேண்டும். இப்படிப் பல பாத்திரங்கள் வழியாக பல கோணங்களில் நாம் அசைபோட்டுப் பார்த்தால் கண்டறியமுடியும். கலை என்பதே கண்டறியும் சவால் அல்லவா?’

இப்படி எண்ணற்ற கேள்விகள். எல்லாக் கேள்விகளுக்கும் அவர் அன்று சோர்வின்றிப் பதில் சொன்னார். அது ஒரு மறக்கமுடியாத அனுபவம்.
பொதுவாக கார்னாடின் நாடகங்களில் உரையாடல்கள் வகிக்கும் பங்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு வாக்கியமும் மிகமிக இயல்பாகவும் செறிவாகவும் இருக்கும். அதே சமயத்தில் ஒரு கவித்துவம் கூடிவருவதையும் அறியலாம். யயாதி நாடகத்தில் சர்மிஷ்டை தற்கொலைக்குத் துணியும் தருணத்தில் ‘நம்மைச் சுற்றி கொண்டாட்ட மனநிலையில் உள்ள மக்கள் கூட்டத்தினரிடையே இருப்பதும் ஒன்றுதான், சாவதும் ஒன்றுதான்’ என கசப்போடு சொல்லும் உரையாடலையும் முதுமையின் சாபம் தன்மீது கவியவிருப்பதை அறிந்துகொண்டு புலம்பும் யயாதி ‘உள்ளங்கையில் வைரக்கற்களை மூடி வைத்திருப்பதுபோல நேற்றுவரைக்கும் காலத்தை என் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தேன். இப்போது ஒவ்வொரு கணமும் எரிகல்லாக என்னிடமிருந்து பறந்துபோகும்போது நான் என்ன செய்யமுடியும்?’ என ஆற்றாமையுடன் நிகழ்த்தும் உரையாடலும் தன் முதுமையை தன்னிடமிருந்து பெற்றுக்கொள்ள தன் நாட்டில் யாருமே முன்வரவில்லை என்பதைக் கேட்டுத் திகைத்து கலக்கத்துடன் ‘வெளிச்சமே இல்லாத வழியில்கூட சென்றுவிடலாம் புரு, ஆனால் கனவுகளே இல்லாத வழியில் எப்படிச் செல்வது?’ என்று உரைக்கும் உரையாடலும் மறக்கமுடியாதவை. இப்படி ஒவ்வொரு நாடகத்திலும் எண்ணற்ற உரையாடல்கள். நாடகப் பிரதிகளை வாசிக்கும்போது உரையாடலின் ஆற்றலை நம்மால் உணர்ந்துகொள்ளமுடியும் என்றபோதும், ஒரு நாடகம் நடிக்கப்படும்போது அது வெளிப்படும் தருணத்தில்தான் நாம் முழு அளவில் உணரமுடியும்.
2004ஆம் ஆண்டில் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருதை நான் பெற்றுக்கொள்ளும் சமயத்தில் மகேஷ் சம்பக்லால் என்னும் எழுத்தாளர் குஜராத்தி மொழிக்குரிய விருதைப் பெற்றுக்கொண்டார். நானும் அவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கியிருந்தோம். அவருக்கு மொழிபெயர்ப்புக்கான விருதைப் பெற்றுத்தந்த புத்தகம் கிரீஷ் கார்னாடின் ‘அக்னியும் மழையும்’. பரோடா பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் பணியாற்றுபவர் என தன்னை அவர் அறிமுகப்படுத்திக்கொண்டார். அது மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த நடிகர். நாடக இயக்குநர். நாடகத்துறையில் அவர் ஆற்றிய சேவைக்காக தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்றவர். அவருக்கு முத்துசாமியைப்பற்றியும் கூத்துப்பட்டறையைப்பற்றியும் தெரிந்திருந்தது. ‘நீங்கள் மொழிபெயர்த்த நாடகத்தைத் தமிழில் நான் மொழிபெயர்த்திருக்கிறேன்’ என்று அவரிடம் சொன்னேன். அவர் ‘நீங்கள் நாடகக்காரரா?’ என்று உடனே ஆச்சரியத்துடன் கேட்டார். நான் இல்லை என்று தலையசைத்தேன். ‘நான் புனைகதை எழுத்தாளன். ஏதோ ஆர்வத்தால் உந்தப்பட்டு இதைச் செய்தேன்’ என்றேன். அதுவரை மொழிபெயர்த்த கார்னாடின் நாடகங்களைப்பற்றியும் அவற்றில் எனக்குப் பிடித்த அம்சங்களைப்பற்றியும் பகிர்ந்துகொண்டேன். அவர் புருவங்களை உயர்த்திப் புன்னகைத்தார். பிறகு மெதுவாக அவரிடம் நான் ‘நீங்கள் மொழிபெயர்த்த நாடகம் மேடையில் நடிக்கப்பட்டதுண்டா?’ என கேட்டேன். ‘என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? நடிப்பதற்காகத்தானே மொழிபெயர்க்கிறோம். எனது இயக்கத்திலேயே அந்த நாடகம் பலமுறை மேடையேறியிருக்கிறது. மற்ற இயக்குநர்களும் அந்த நாடகத்தைப் பல ஊர்களில் நடத்தியிருக்கிறார்கள். குஜராத்தில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது’ என்றார்.

சம்பக்லால்போல பல மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கிரீஷ் கார்னாட் நாடகங்களைப்பற்றி மகிழ்ச்சியோடு பேசுவதை ஆர்வத்துடன் கேட்டிருக்கிறேன். நாடகம் ஒரு நிகழ்த்துக்கலை என்பதாலேயே நமக்குப் பிடித்த காட்சிகள் நம் ஆழ்மனத்தில் பசுமையாக எப்போதும் பதிந்திருக்கும். பேசத் தொடங்கியதுமே என்னமோ நேற்று இரவு பார்த்த நாடகக் காட்சியைப்பற்றிப் பேசுவதைப்போல ஒவ்வொருவரும் பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.
என்னிடம் பேசுபவர்கள்போல கார்னாடிடம் சிலாகித்துப் பேசியவர்கள் பலர் இருக்கக்கூடும். ஆனால் அவற்றையெல்லாம் கடந்தவராகவே அவர் எப்போதும் அனைவரிடமும் பழகிவந்தார். நாடகப்பிரதியின் வெற்றிக்கு நாடக இயக்குநர்களின் கற்பனையாற்றலும் நடிகர்களின் திறமையுமே முக்கியமான காரணங்கள் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவதை அவர் ஒரு பழக்கமாகவே கடைப்பிடித்துவந்தார். தன்னைப் பாராட்டுவதை அவர் எந்த இடத்திலும் விரும்பியதில்லை.
கிரீஷ் கார்னாடுக்கான அஞ்சலியை நினைவிலிருந்து பகிர்ந்துகொள்ளும் சில அனுபவங்களோடு நிறுத்திக்கொள்ள விரும்பவில்லை. அவரை இன்னும் நெருக்கமாகப் புரிந்துகொள்ளும் வகையில் அவருடன் கன்னடச் சூழலில் முக்கியமாகக் கருதப்படும் நாடகக் கலைஞரான அருந்ததிநாக் நிகழ்த்திய ஒரு நேர்காணலை இங்கே மொழிபெயர்த்திருக்கிறேன்.

பெங்களூரில் நாடகங்களுக்காகவே கட்டியெழுப்பப்பட்ட ஓர் அரங்கம் ரங்கஷங்கர. இது 2004ஆம் ஆண்டுமுதல் ஜெயப்பிரகாஷ் நாராயண் நகரில் இயங்கி வருகிறது. ஒரு டிரஸ்டை உருவாக்கி, இதை எழுப்பியவர் நாடகக் கலைஞர் அருந்ததிநாக். மறைந்துபோன தன் கணவரும் நாடகக்கலைஞரும் திரைக்கலைஞருமான சங்கர்நாக் நினைவாக இந்த அரங்கத்தை அவர் உருவாக்கினார். கணவன், மனைவி இருவருக்கும் ஆதர்சமாக விளங்கியவர் கிரீஷ் கார்னாட். கிரீஷ் கார்னாடின் பல நாடகங்களில் முக்கியப் பாத்திரங்களில் நடித்தவர் சங்கர்நாக். ஆண்டுதோறும் ரங்கஷங்கர அரங்கத்தில் நடைபெறும் அனைத்திந்திய நாடக விழாக்களும் கர்நாடக நாடக விழாக்களும் மிகமுக்கியமானவை. ஏற்கனவே பல நாடகங்களை இயக்கிப் பெயர்பெற்ற இயக்குநர்கள் முதல், முதல் முயற்சியைத் தொடங்குகிற இயக்குநர்கள் வரைக்கும் அனைவருக்குமான அரங்கமாக இது திகழ்கிறது. 2013ஆம் ஆண்டில் ஒரு நாடகவிழாவின்போது கிரீஷ் கார்னாடும் அருந்ததிநாக்கும் உரையாடும் வகையில் ஓர் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு, அந்த உரையாடல் மிண்ட் என்னும் இதழில் வெளிவந்தது.

அருந்ததிநாக்: உங்கள் முதல் நாடகத்தை எப்படி எழுதத் தொடங்கினீர்கள்?

கிரீஷ் கார்னாட்: முதன்முதலில் நான் யயாதி நாடகத்தை எழுதும்போது, என்னுடைய கனவு ஒரு கவிஞனாகவேண்டும் என்பதாகத்தான் இருந்தது. ஒரு நாடக ஆசிரியனாக நான் விரும்பவில்லை. எனக்கு அரங்குசார்ந்த ஆர்வம் இருந்தது. ஆனால் ஒரு நாடக ஆசிரியனாக வரவேண்டும் என்னும் நோக்கமெல்லாம் எப்போதும் இருந்ததில்லை. ரோட்ஸ் உதவித்தொகை கிடைத்ததையொட்டி மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்குச் சென்றேன். அந்தக் காலத்தில் இங்கிலாந்துக்குச் செல்ல மூன்று வாரங்கள் பிடித்தது. படிப்புக்காலமான மூன்றாண்டு காலமும் நான் அங்கேதான் தங்கியிருந்தேன். இடையில் நான் இந்தியாவுக்கு வரவேண்டுமென நினைத்தாலும் அதற்குரிய செலவைச் செய்யும் அளவுக்கு என் தந்தையாரின் பொருளியல் சூழல் இல்லை. நான் வெளிநாட்டில் படித்தால், வெளிநாட்டு வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வேன் என்னும் அச்சமும் அவரிடம் இருந்தது. ஒருநாள் திடீரென யயாதியைப்பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது. ராஜாஜி எழுதிய மகாபாரதக்கதையை அப்போது நான் படித்துக்கொண்டிருந்தேன். யயாதி, அக்னியும் மழையும் படைப்புகளுக்கான கருக்களை அதில் நான் கண்டடைந்தேன். யயாதியைப்பற்றிப் படித்து முடித்ததும், ஒரு நாடகம் போல யயாதி தொடர்பான காட்சிகள் ஒவ்வொன்றும் என் மனத்தில் தோன்றி நகரத் தொடங்கியது. அதற்குப் பிறகு முப்பதாண்டுகள் கழித்துத்தான் நான் அக்னியும் மழையும் நாடகத்தை எழுதிமுடித்தேன். அந்த அளவுக்கு இடைவெளி விழுந்துவிட்டது. அது ஒரு மிகச்சிறந்த கதை என்பது எனக்குத் தெரியும். மெல்லமெல்ல அக்கதையை என் மனத்திலேயே வளர்த்தெடுத்தேன். அவசரப்பட்டு அதை எழுதி அக்கருவை வீணாக்க விரும்பவில்லை. ஆனால் யயாதி அப்படி இல்லை. யாரோ எனக்கு முன்னால் உட்கார்ந்து ஒவ்வொரு வரியாகச் சொல்லிக் கொடுத்ததுபோல தானாகவே அது வந்தது.

அருந்ததி நாக்: அவ்வப்போது மனத்தில் தோன்றும் வெவ்வேறு கருக்களைக் குறித்துவைத்திருக்கும் குறிப்பேடு ஏதேனும் உங்களிடம் உள்ளதா?

கிரீஷ் கார்னாட்: அவற்றையெல்லாம் என் மனத்துக்குள்ளேயே குறித்துவைத்திருப்பேன். ஆனால் அக்னியும் மழையும் மாதிரி ஒரு நாடகத்தை எழுதும்போது பல தரவுகள் தேவைப்பட்டன. பல அறிஞர்களைச் சந்தித்துப் பேசி, வேள்விகள் தொடர்பான தகவல்களைத் திரட்டிக் குறித்துவைத்திருந்தேன். துக்ளக் நாடகத்தை எழுதும்போது நூலகங்களில் உட்கார்ந்து குறிப்பெடுத்தேன். கிராமியக் கதைகளைப்பற்றிய நேரடி ஞானமும் கிராமவாழ்க்கை அனுபவமும் நிறைந்த சந்திரசேகர கம்பார் போன்றோரைப் பார்க்கும்போது பொறாமையாகவே உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு நாடகத்துக்கும் ஒவ்வொரு விதத்தில் மெனக்கெட வேண்டியிருக்கிறது.

அருந்ததிநாக்: உங்களுடைய நாடகப்பிரதிகள் மொழிபெயர்க்கப்படும்போது நீங்கள் எந்த அளவுக்கு அதில் ஆர்வம் காட்டுவீர்கள்?

கிரீஷ் கார்னாட்: நான் முழு அளவில் ஆர்வம் காட்டுவேன். பெரும்பாலும் எனக்கு நண்பர்களாக இருப்பவர்களே என் நாடகங்களை மொழிபெயர்ப்பது முக்கியமான ஒரு விஷயம். மொழிபெயர்க்கும்போது அவர்களோடு நானும் அமர்ந்துகொள்வேன். ராம் கோபால், பத்மாவதி ராவ், பி.வி.காரந்த் என யாராக இருந்தாலும் அவர்களோடு சேர்ந்துகொள்வேன். ஆனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது என் நாடகங்களை நானே மொழிபெயர்த்துவிடுவேன். அசாமி போன்ற மொழியில் மொழிபெயர்க்க விரும்பும் ஒருவருக்கு தடையின்றிப் புரிந்துகொள்ளும் வகையில் இரு பிரதிகள் கிடைக்கும்.

அருந்ததிநாக்: கன்னடத்திலும் இந்தியிலும் உங்களுடைய சிதைந்த பிம்பம் நாடகத்தில் நான் நடித்திருக்கிறேன். அதன் ஆங்கிலப் பிரதியையும் நான் படித்திருக்கிறேன். அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி காட்சிகளை நகர்த்திச் செல்லும் வகையில் எளிதான ஒன்றாகவே ஆங்கில மொழி தோன்றினாலும், ஆங்கில பிரதியைப் படிக்கும்போது ஏதோ ஒன்று இல்லாததைப்போல இருந்தது. ஆனால் கன்னடப் பிரதியும் இந்திப் பிரதியும் மனத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தன.

கிரீஷ் கார்னாட்: நீங்கள் பேசும் கன்னடத்தைவிட உங்களுடைய இந்தி நன்றாகவே இருந்தது. உள்முகமான காட்சிகளுக்குத் துணையாகும் வகையில் உங்கள் இந்தி மொழி சிறப்பாக இருந்தது. பயிற்சிகளின் வழியாக அதை இன்னும் உங்களால் மேம்படுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது. ஆனால், உங்களைப் பொறுத்தவரை கன்னடம் இரண்டாவது மொழி அல்லவா? நீங்கள் நடித்த முதல் கன்னட நாடகம் அஞ்சும் மல்லிகை. அப்போதுதான் கன்னடத்தைப் படித்துவிட்டு பேசப் பழகிக்கொண்டிருந்தீர்கள். அந்த நாடகத்தில் உங்கள் நடிப்புத்திறமையை மிகவும் ஆற்றலோடு வெளிப்படுத்தினீர்கள். சிதைந்த பிம்பம் நாடகத்தைப் பார்த்தபோது அந்தப் பழைய நினைவு அகன்றுவிட்டது.

அருந்ததிநாக்: துக்ளக், ஹயவதனன், நாகமண்டலம் ஆகிய உங்களுடைய நாடகங்கள் மீண்டும் மீண்டும் நடத்தப்படுகின்றன அல்லவா?

கிரீஷ் கார்னாட்: உண்மைதான். ஹயவதனன் இப்போதும் கூட டெக்ஸாஸ், டக்ஸன் போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்டுவருகின்றன. ஹயவதனன் நாடகமும் நாகமண்டலம் நாடகமும் ஏதோ ஒரு இடத்தில் யாரோ ஒருவரால் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

அருந்ததிநாக்: அந்த நாடகங்களில் அமைந்துள்ள நாட்டாரியல் அம்சங்களால் அப்படி நிகழ்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

கிரீஷ் கார்னாட்: அது மட்டுமல்ல, அந்த நாடகங்கள் மிகவும் ஈர்ப்புத்தன்மை உள்ளவை. இயக்குநருக்கான இடைவெளிகள் அந்த நாடகங்களில் மிகுதி.

அருந்ததிநாக்: அவை பெண்களை மையமாகக் கொண்டவை என்பதும் ஒரு காரணம்.

கிரீஷ் கார்னாட்: அதெல்லாம் சேர்ந்துதான் அவற்றை ஈர்ப்பு மிக்கவையாக மாற்றின. என்னுடைய நாடகங்களில் பலி மட்டுமே மிகக்குறைவான முறையில் நிகழ்த்தப்பட்ட நாடகம். என்னுடைய அனலில் வேகும் நகரம் நாடகம் மராத்திய மொழியில் இந்த விழாவில் நிகழ்த்தப்பட்டது. அதன் இயக்குநர் மோகித் தகால்கரும் மொழிபெயர்ப்பாளரும் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். அது இரண்டு மணிநேரம் இருபது நிமிடம் நிகழக்கூடிய அளவுக்கு நீண்டிருந்தது. நான் சில காட்சிகளை நீக்கிவிடும்படி சொன்னேன். அவர்களுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. பிறகு நானே அதை ஒன்றரை மணிநேர அளவுக்கானதாகவும் அதே நேரத்தில் செறிவானதாகவும் மாற்றி எழுதிக் கொடுத்தேன். இந்த வடிவத்தில்தான் அனலில் வேகும் நகரம் நாடகத்தின் ஆங்கிலப் பிரதி வெளிவந்திருக்கிறது.

அருந்ததிநாக்: அதை நீங்களே அல்லவா மொழிபெயர்த்தீர்கள்?

கிரீஷ் கார்னாட்: என்னுடைய நாடகங்களை ஆங்கில மொழியில் நானே மொழிபெயர்க்கிறேன். ஒரு நாடகத்தை மொழிபெயர்ப்பது என்பது ஒரு நாவலை மொழிபெயர்ப்பதுபோன்ற வேலையல்ல. ஒரு நாவலை நீங்கள் வரிவரியாக மொழிபெயர்த்துவிடலாம். ஆனால் ஆங்கிலத்தில் ஒரு நாடகத்தை மொழிபெயர்க்கும் ஒருவர் மேடையில் அது எப்படிப் பேசப்படும் என்பது தெரிந்தவராக இருக்கவேண்டும்.

அருந்ததிநாக்: எனக்குத் தெரிந்தவகையில், நமது நாட்டில் நடிப்பு அனுபவம் உள்ள ஒரே நாடக ஆசிரியர் நீங்கள் மட்டுமே. எனக்கு வெளிநாடுகளைப்பற்றி எதுவும் தெரியாது.

கிரீஷ் கார்னாட்: அது உண்மைதான். கன்னடத்தைவிட ஆங்கிலத்தில் அதைச் சிறப்பாகச் செய்யும் அளவுக்கு எனக்கு அனுபவம் உண்டு. எனவே, என் நாடகங்களை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது எனக்கு அது எளிதாக இருக்கிறது. அதே சமயத்தில், விஜய் தெண்டுல்கருடைய நாடகங்களையோ மகேஷ் எல்க்குஞ்சவாருடைய நாடகங்களையோ கன்னடத்தில் மொழிபெயர்க்கும்போது மைசூர் கன்னட வழக்கில் மொழிபெயர்க்கமுடியாது.

அருந்ததிநாக்: எல்குஞ்சவாருடைய நாடகங்களைக் கூடவா?

கிரீஷ் கார்னாட்: ஆமாம், முடியாது. முதலில் அவருடைய நாடகங்களில் அவர் விட்டுச் செல்லும் இடைவெளிகளைப் புரிந்துகொள்ளவேண்டும். மேலும் அவற்றில் மொழிபெயர்க்கமுடியாத சில வரிகள் இருக்கும். மராத்தி மொழிக்கு மிகவும் நெருக்கமானதாக இருப்பதால் வடகன்னட வட்டாரமொழியில் மொழிபெயர்ப்பது எளிதாக இருக்கும்.

அருந்ததிநாக்: நீங்கள் இயக்கிய முதல் நாடகம் எது?

கிரீஷ் கார்னாட்: 2005இல் சிதைந்த பிம்பம் நாடகத்தைத்தான் நான் முதலில் இயக்கினேன். மேடையில் நிகழ்த்தப்படவேண்டிய பல விஷயங்களை மற்றவர்கள் புரிந்துகொள்வதில் சிரமமிருக்கும் என்பதால் அதை நானே முதலில் இயக்கினேன். பிறகு மெல்ல மெல்ல அதை நாங்கள் மெருகேற்றிக்கொண்டோம். வேறு யாரிடமாவது, அந்த நாடகத்தை இயக்கும் பொறுப்பைக் கொடுத்திருந்தால், பிம்பத்துக்கும் மேடையில் பேசுபவருக்கும் இடையில் உள்ள இணைப்பை அவரால் உருவாக்கியிருக்க முடியாது. சில சமயங்களில் ஒவ்வொரு காட்சியிலும் நிகழும் நுட்பமான மாற்றங்களைப் பார்வையாளர்கள் எப்படிக் கவனிப்பார்கள் என்பதையெல்லாம் நான் எடுத்துச் சொன்னேன். கையிலிருக்கும் தாள்களை இப்போது கீழே வீசு, கவனத்தைத் திசைதிருப்பு என்றெல்லாம் நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். அது ஒரு மாயவித்தை போல இருந்தது.

அருந்ததிநாக்: நீங்கள் திரைப்பட இயக்குநராகவும் இருந்ததால் அப்படிச் செய்யமுடிந்தது அல்லவா?

கிரீஷ் கார்னாட்: அது மட்டுமல்ல. மாய வித்தைகளில் எனக்கு ஆர்வமிருந்தது. ஒரு மந்திரவாதியாக இருக்கவேண்டும் என நான் ஆசைப்பட்டதுண்டு. தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் மாயாஜாலம் பற்றி ஒரு தொடர் வெளியிடுவார்கள். நான் அதைத் தவறாமல் பார்ப்பதுண்டு. அது எப்படி நிகழ்த்தப்படுகிறது என்பதைப்பற்றி உங்களுக்கு அதிக அளவில் தெரிந்திருந்தால், அது உங்கள் கண்களை எவ்விதத்திலும் மயக்காது. மாறாக, ஓர் அருமையான, வண்ணமயமான உலகத்தை உருவாக்க முடியும் என நினைத்துக்கொள்ளத் தூண்டும். மாயாஜாலத் தந்திரங்களை என்னால் எந்த நாடகத்திலும் சரியான அளவில் பயன்படுத்திக்கொள்ள முடிந்ததில்லை. சிறுவர்களுக்காக ஒரு நாடகம் எழுதவேண்டும் என நான் பலமுறை நினைத்துக்கொண்டதுண்டு. ஓர் ஊரில் பொம்மைக்காரன் ஒருவன் இருக்கிறான். ஒருமுறை எதுவுமே அவனுக்குச் சரியாக அமையவில்லை. அனைத்திலும் அவன் தோல்வியடைகிறான். ஆனால் அவன் உறங்கும்போது பொம்மைகள் அனைத்தும் கூடி அவன் செய்ய வேண்டிய பொம்மைகளை விதவிதமாகச் செய்துவைத்துவிடுகின்றன. அவன் மீண்டும் வெற்றிபெற்ற பொம்மைக்காரனாக மாறுகிறான். தான் வெற்றி பெற்றது எப்படி என்பது அவனுக்குத் தெரியவே தெரியாது. மிக அருமையான நாடகம்.

அருந்ததிநாக்: உங்கள் நாடகங்களில் நான் மூன்று பெண் பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். பெண் மன ஆழத்துக்குள் உங்களால் எப்படிச் செல்ல முடிந்தது என ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஒருவேளை உங்களுடைய மூத்த சகோதரிகளுக்கிடையில் நீங்கள் வளர்ந்ததாலும் ஏராளமான பெண்கள் உங்களைச் சுற்றி எப்போதும் நிறைந்திருப்பதாலும் அது எளிதாக இருந்திருக்குமோ என்னமோ? குறிப்பாக சிதைந்த பிம்பம் நாடகத்தில் அமைந்திருக்கும் உள்தளங்கள் ஏராளமானவை.

கிரீஷ் கார்னாட்: எனக்குப் பதினான்கு வயதிருக்கும்போது எங்கள் குடும்பத்தினர் தார்வாட் நகருக்குக் குடிபெயர்ந்துவிட்டார்கள். எங்கள் வீட்டில் என்னுடைய இரு சகோதரிகளும் சகோதரியின் மகளும் இருந்தார்கள். எங்கள் எதிர்வீட்டில் இருந்த மூன்று மாமாக்களுக்கு நான்கு மகள்கள் இருந்தார்கள். என்னைச் சுற்றி ஏழு பெண்கள் நடமாடிக்கொண்டிருந்தார்கள். மாமன் மகள் என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியும். அவளை நீங்கள் மணந்துகொண்டால் அவள் உங்களுக்கு மனைவி. மணக்கவில்லை என்றால் ஒரு சகோதரிபோல நடத்தலாம். அனைவரோடும் சேர்ந்து நீங்கள் வளரும்போது, உங்களுக்குப் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும். பாலியல் ஈர்ப்பும் ஒரு காரணம். இந்த ஏழு பெண்களோடு சேர்ந்து நான் வளர்ந்தபோது, தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் தெரிந்துகொண்டதாகவே நினைத்தேன். ஒருவர் மீது ஒருவருக்கு ஏற்படும் பொறாமை, ஒருவர் முன்னால் ஒருவர் வந்து நிற்கமுடியாத அளவுக்கு உருவாகும் வெறுப்பு, அன்பு அனைத்தையுமே புரிந்துகொண்டேன். ஷ்யாம் பெனகலுக்கு ஆறு சகோதரிகள். அந்தக் காரணத்தால்தான் உங்களால் பூமிகா படத்தைச் சிறப்பாகச் செய்யமுடிந்தது என அவரிடம் சொல்வதுண்டு. இந்தியச் சமூகத்தில் ஆண்குழந்தையும் சரி, பெண்குழந்தையும் சரி, பத்து அல்லது பதினொன்று வயதைத் தொடும் நேரத்தில் அவர்களை முற்றிலுமாகப் பிரித்துவிடுகிறார்கள். அந்தப் பெண் பருவமடைகிற சமயத்தில் முற்றிலும் புதிய தோழிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறாள். ஆனால் சாரஸ்வத சமூகத்தில் அப்படி நிகழ்வதில்லை.

அருந்ததிநாக்: ஒரு நாடக நிகழ்வு எப்போது வெற்றிபெற்ற நாடகமாகிறது?

கிரீஷ் கார்னாட்: பாடுபட்டு ஒரு குழுவினரால் மேடையேற்றப்படுகிற ஒரு நாடகம் சிறப்பாக அமைந்துவிடும். ஆனால் மிகமிகச் சிறப்பான ஒன்றாக எப்போதாவது ஒருமுறைதான் அமையும். ஒரு நாடகத்தை உருவாக்கும்போது அந்த இயக்குநருக்கு ஒரு தரிசனம் இருக்கவேண்டும். நாடகத்தை அப்போதுதான் சிறப்பாக வடிவமைக்கமுடியும். பிறகு, திருகாணிகளைப் பூட்டி ஒரு சட்டகத்தை எழுப்புவதுபோல அவற்றை ஒருங்கிணைக்கமுடியும். ஒரு நாடகத்தில் ஓர் உச்சத்தருணம் அல்லது மனத்தில் பதியக்கூடிய தருணம் என்பது மிகவும் அபூர்வமானது. ஒருவருடைய மன ஆழத்திலிருந்து அது பொங்கி எழுகிறது. அது திட்டமிட்டு அடையக்கூடிய ஒன்றல்ல. உங்களைச் சுற்றி ஏராளமான பேர் இருக்கும்போது அந்த ஆழத்துக்குள் உங்களால் செல்லமுடியாது.

அருந்ததிநாக்: துக்ளக் போன்ற நாடகங்களைப் பார்த்தபடியே நாங்கள் வளர்ந்தோம். தில்லியில் காரந்த் இயக்கிய மேக்பெத் நாடகத்தையும் உங்களுடைய துக்ளக் நாடகத்தையும்தான் நான் முதன்முதலில் பார்த்தேன். ஐந்து தலைமுறைகளாக உங்களுடைய நாடகங்களை நாங்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ரங்கஷங்கராவின் இயக்குநரான சுரேந்திரநாத் பல புதிய நாடகங்களைப் பார்க்கவைப்பதன் வழியாகப் புதிய தலைமுறையைச் சேர்ந்த பார்வையாளர்களை நாடகங்களை நோக்கிக் கவர வழி செய்திருக்கிறார்.

கிரீஷ் கார்னாட்: நான் உங்களிடம் ஒரு கதையைச் சொல்லவேண்டும். தேசிய நாடகப்பள்ளியைச் சேர்ந்த மிட்டா வசிஷ்ட என்னும் நாடக நடிகரைப்பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர் ஒரு இந்தித்தொடரில் எனக்கு மனைவியாக நடித்தார். அப்போது அவர் ஒருநாள் என்னிடம் “தேசிய நாடகப்பள்ளியில் இருக்கும்போது நாங்கள் துக்ளக் நாடகத்தை நடித்தோம். பிறகு ஒவ்வொரு காட்சியையும் முன்வைத்து அலசி ஆராய்ந்து அதைப்பற்றிக் கட்டுரைகள் எழுதினோம். உங்களிடம் உண்மையைச் சொல்லவேண்டுமானால், நீங்கள் இறந்துவிட்டீர்கள் என நான் நினைத்தேன்” என்று சொன்னார். ஒரு பழைய ஆளாக மாறிவிட்டதுபோல எனக்குத் தோன்றியது. இன்னும் எழுதிக்கொண்டிருக்கிற நாடக ஆசிரியர்களில் நானும் ஒருவன்.

அருந்ததிநாக்: இன்னும் தொடர்ச்சியாக ஊக்கமுடன் இயங்கும் ஒரு நாடக ஆசிரியர் இந்த நாட்டில் வாழ்கிறார் என்பதே இந்தியாவுக்குப் பெருமை. இன்றும் நீங்கள் அதிகாலயில் எழுந்து நடைப்பயிற்சிக்குச் செல்கிறீர்கள். படிக்கிறீர்கள். இளைஞர்களுடன் இரண்டறக் கலந்து பழகுகிறீர்கள். உங்கள் மகனுடன் தொடர்ந்து நல்ல உறவில் இருக்கிறீர்கள். அவையெல்லாமே முக்கியமான விஷயங்கள்.

கிரீஷ் கார்னாட்: வெற்றிகரமான ஒரு திரைப்பட நடிகனாகவும் திரைப்பட இயக்குநராகவும் இயங்கும் அளவுக்கு எனக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் நான் மும்பையைவிட்டு பெங்களூருக்கே திரும்பி வந்துவிட்டேன். இந்திப்படங்களில் நடித்தது போதும் என்று என் மனைவி சொன்னதுதான் காரணம். இன்றும் கூட என்னைத் தேடி வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் என் மனம் நாடகங்களில் மட்டுமே ஆர்வம் கொண்டுள்ளது. ஒரு நாடக ஆசிரியனாகவே நான் இருக்க விரும்புகிறேன். திரைப்படங்கள் வழியாகப் போதுமான அளவில் சம்பாதித்துவிட்டேன்.

அருந்ததிநாக்: பொதுமக்கள் அடையாளம் கண்டுபிடிக்கக்கூடிய அளவுக்கு இருக்கும் ஒரே நாடக ஆசிரியர் நீங்கள் மட்டுமே. நாடக ஆசிரியர் விஜய் தெண்டுல்கர் எப்படி இருப்பார் என்பது கூட யாருக்கும் தெரியாது.

கிரீஷ் கார்னாட்: நீங்கள் எந்த மொழியோடும் பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்திருக்கிறீர்களோ, அதே மொழியோடும் பண்பாட்டோடும் நானும் பின்னிப் பிணைந்திருக்கிறேன் என்பதில் நான் ஓர் அதிர்ஷ்டக்காரன் என்றே சொல்லவேண்டும். என்னால் இந்தி மொழியை நன்றாகப் பேசமுடியும். ஆனால் உச்சரிப்பு சரியாக இருக்கும் என்று சொல்லமுடியாது. காரந்த் சரியான உச்சரிப்போடு கன்னட மொழியைப் பேசக்கூடியவர். நீங்களும் உங்களுடைய சகோதரியான பத்மாவதிராவும் இந்தி மொழியைப் பேசுவதில் வல்லவராக இருக்கிறீர்கள்.

அருந்ததிநாக்: இந்தி மொழியின் ஆற்றலைக் கண்டு நான் வியந்ததுண்டு. ஒருமுறை சிதைந்த பிம்பம் நாடகத்தை இந்தி மொழியில் நாங்கள் நிகழ்த்திய பிறகு, நாடு முழுக்க பல இடங்களுக்குச் சென்று அதை நடிக்கும் வாய்ப்புகள் எங்களுக்குக் கிடைத்தன.

கிரீஷ் கார்னாட்: என்னுடைய எல்லா நாடகங்களும் இந்தி மொழியில் மொழிபெயர்க்கவைத்ததற்கு இதுவும் ஒரு காரணம். எதிலும் அவ்வளவு எளிதாக நான் நிறைவடைவதில்லை என்பது இன்னொரு காரணம்.

அருந்ததிநாக்: திரைப்படங்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தீர்கள். திரும்பி வந்த பிறகு இனிமேல் திரைப்படத்தின் பக்கம் செல்வதில்லை என்று சொன்னீர்கள் அல்லவா?

கிரீஷ் கார்னாட்: எல்லாம் பணத்துக்காகத்தான். ‘ஏக் தா டைகர்’ பட்த்தில் நடிக்கும்படி ஏன் என்னை அழைத்தார்கள் என்று தெரியவில்லை. அதற்குப் பிறகும் எவ்வளவு வாய்ப்புகள் வந்தன தெரியுமா? இப்போது நினைத்தாலும் நான் அங்கே சென்று என் நடிப்பைத் தொடரமுடியும். ஆனால் நான் நினைக்கிற வாழ்க்கையை வாழமுடியாது. எழுது எழுது என்று என் மனைவி ஓயாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

அருந்ததிநாக்: நீங்கள் ஒரு நாடகத்தை எழுதும்போது, எல்லோரையும் விட்டு விலகி தனிமையை நாடிச் செல்வீர்களா?

கிரீஷ் கார்னாட்: உங்களுக்கே தெரியும். சிதைந்த பிம்பம் நாடகத்தை உங்களையும் வைத்துக்கொண்டே உங்களுக்கு முன்னாலேயே உட்கார்ந்து எழுதினேன். அதே சமயத்தில் அக்னியும் மழையும் நாடகத்தை எழுதி முடிக்கப் பல ஆண்டுகளை எடுத்துக்கொண்டேன். இன்று நான் ஒரு நாடகம் எழுதுகிறேன் என்றால், குறைந்தபட்சம் இருநூறு ஆண்டு காலம் அது நிலைத்திருக்கவேண்டும் என விரும்புவேன். தொடர்ந்து நான் படிக்கப்படுவேனா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் அப்போது இருக்கமாட்டேன். அதனால் என்னுடைய கவனம், உறுதியான உழைப்பு, நடிப்பு, கருத்துகள் என என்னிடம் உள்ள எல்லாவற்றையும் சேர்த்து முன்வைக்கிறேன்.

அருந்ததிநாக்: உங்கள் நாடகத்தை யார் முதலில் வாசிப்பார்கள், உங்கள் மனைவியா?

கிரீஷ் கார்னாட்: பல நேரங்களில் அவர்தான் கடைசியாக வாசிப்பவர். திப்பு சுல்தானைத்தவிர என்னுடைய நாடகங்கள் அனைத்துமே கன்னட மொழியில் உள்ளன. ஆனால் அவருக்கு கன்னட மொழியைப் படிக்க முடியாது. என்னுடைய தன்வரலாற்றை நான் ஏன் கன்னடத்தில் எழுதினேன் என்று பலர் கேட்பதுண்டு. பொதுவாக, அப்போதுதான் என் மனைவி அதைப் படிக்காமல் இருப்பார் என்று பதில் சொல்வதுண்டு (சிரிக்கிறார்).

அருந்ததிநாக்: உங்கள் நாடகங்களைச் சத்தம் போட்டுப் படிப்பீர்களா?

கிரீஷ் கார்னாட்: ஆமாம். ஆனால் தலெதண்ட போன்ற நாடகங்களை நான் கப்பண்ணாவின் வீட்டில் வைத்துப் படித்தேன். அப்போதுதான் நான் பெங்களூருக்கு வந்திருந்தேன். எனக்குக் கன்னடம் எழுத வராது என்றும் ஆங்கிலத்தில் எழுதுபவன் என்றும் ஒரு நம்பிக்கை எல்லோரிடமும் அப்போது இருந்தது. அந்த நாடகம் பசவண்ணனைப்பற்றியது. அதுவும் வடகன்னட பேச்சுவழக்குச் சொற்களைப் பயன்படுத்தி எழுதப்பட்டது. லிங்காயத்துகளின் வரலாறு அதில் பேசப்படுகிறது. எனக்குக் கன்னடம் எழுதப் படிக்கத் தெரியாதென்று எண்ணிக்கொண்டிருந்தார்கள். என்னால் எதையும் செய்யமுடியும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தேன். உங்கள் வரலாற்றையும் மொழியையுமே நான் எழுதுவேன் என்று சொல்லி வந்திருக்கிறேன். இந்த நாடகத்தை எழுதிய பிறகு கிரீஷ் கார்னாடுக்கு கன்னடம் எழுதத் தெரியாது என்னும் புகாருக்கே இடமில்லாமல் போய்விட்டது. ஒரு நாடக ஆசிரியனாக இத்தகு சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடிக்கக் கிடைத்த வாய்ப்புகள் என் வாழ்க்கையை நடத்துவதற்கு உதவின.

அருந்ததிநாக்: ஒரு கலைஞன் ஒரு கருவியாக மாறும்போது இப்படியெல்லாம் நிகழ்கிறது.

கிரீஷ் கார்னாட்: நீங்கள் ஓர் அசலான நடிகர். நசீருத்தீன் ஷா, ஓம்பூரி போன்றோரெல்லாரும் அசலான நடிகர்கள். அப்படிப்பட்ட நடிப்புத் திறமையுள்ளவனல்ல நான். எப்படியோ என் நடிப்பை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அவ்வளவுதான்.

அருந்ததிநாக்: உங்கள் பிள்ளைகள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்? என்னுடைய மகள் ஒரு நடிப்புக்கலைஞராக மாறிவிட்டால் என்ன செய்வீர்கள் என என்னிடம் கேட்பவர்கள் மிகுதி.

கிரீஷ் கார்னாட்: நீங்கள் என்னுடைய வீட்டைப் பார்த்திருப்பீர்கள். ஒரு புகைப்படம் கூட கிடையாது. ஒரு சான்றிதழோ, ஒரு நினைவுச்சின்னமோ எதுவுமே கிடையாது. என்னைப் பொறுத்தவரையில் திரைப்படத்துக்கு நடிக்கச் செல்வது என்பது ஓர் அலுவலகத்துக்குச் செல்வதுபோல. அவ்வளவுதான். ஒருமுறை நான் கன்னட நடிகரான விஷ்ணுவர்தனுடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அதைப்பற்றி என்னுடைய தன்வரலாற்றில் கூட எழுதியுள்ளேன். கோப்பைகளாலும் நினைவுச்சின்னங்களாலும் அது நிறைந்திருந்தது. மாடிக்குச் செல்ல வீட்டுக்கு நடுவிலிருந்தே வளைந்துவளைந்து எழும் படிக்கட்டுகள். படிக்கட்டில் தங்கத்தால் ஆன கைப்பிடிக்கம்பி. எல்லாவற்றுக்கும் மேலாக வீடியோவில் அவர் நடித்த படமொன்று ஓடிக்கொண்டிருந்தது. அவர் என்னிடம் “கிரீஷ், என்னிடம் எல்லாமே இருக்கிறது. நிம்மதி மட்டும் இல்லை” என்றார். “அதை எப்படி அடைவது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஜன்னலைத் திறங்கள். இந்தக் கோப்பைகள் அனைத்தையும் முதலில் வெளியே வீசி எறியுங்கள்” என்று சொன்னேன். சரஸ்வதி எனக்கு மனைவியாக வாய்த்தது என்னுடைய மிகப்பெரிய அதிர்ஷ்டம். “புகழுக்குரிய ஒரு மனிதராக நீங்கள் வாழவேண்டிய அவசியமில்லை” என்று அவர்தான் எனக்குச் சொன்னார். “அமிதாப் பச்சனாக நீங்கள் இருக்கவேண்டிய அவசியமில்லை. உங்களால் எதை நன்றாகச் செய்யமுடியுமோ, அதைச் செய்யுங்கள்” என்று சொன்னார். அமெரிக்காவில் வேலை செய்தபோது போதிய செல்வத்தை அவர் ஈட்டி வைத்துள்ளார். பிள்ளைகள் கல்விச் செலவைச் சமாளிக்க அது போதும். பதினைந்து ஆண்டு காலம் நாங்கள் ஒன்றாகப் பழகி வந்தோம். பதினைந்து ஆண்டு காலத்துக்குப் பிறகு அவர் “நீங்கள் ஒரு நட்சத்திரமாக ஆகப் போகிறீர்கள். நான் உங்களைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. எனக்கு அமைதியான நல்ல திருமண வாழ்க்கையே வேண்டும் ” என்று சொன்னார். அவரே அதுவரை நியூயார்க்கில் செய்துவந்த மருத்துவத் தொழிலை கைவிட்டு இந்தியாவுக்கு வந்தார். பிள்ளைகளுக்கு அருகிலேயே இருந்து பத்தாண்டுக் காலம் பார்த்துக்கொண்டார். தகுதியான நல்ல வாழ்க்கையே மிகமிக முக்கியம் என்பதில் நாங்கள் ஒத்த கருத்துடையவர்களாக இருந்தோம்.