ண்ணாவும் இல்லாத திராவிடமும் இல்லாத முன்னேற்றமும் இல்லாத ஓர் அனைத்திந்தியக் கழகமாக மாறிப்போன ஒரு கட்சியினுடைய பழனிச்சாமி, பன்னீர்செல்வம், பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி, செங்கோட்டையன், விஜயகுமார், ஜெயக்குமார் போன்ற பழைய மற்றும் புதிய காவிகளின் கூட்டுத் தலைமையிலான தமிழ்நாட்டு அரசாங்கம், யூதர்களின்மீது பாய்ந்து குதறிய நாஜிக்களின் வன்மத்தோடு தமிழ்நாடு மீதே பாய்ந்து குதறிக்கொண்டிருக்கிறது. ஜனவரி மாதத்தில் மட்டும் இந்த ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டுக்கு இழைத்த தீங்குகளைப் பட்டியலிட்டு விவாதித்தால் ஒவ்வொரு தமிழனுக்கும் ரத்தம் கொதிக்கும். கல்வித்துறையில் நிகழ்ந்த ஒரு சில சமூக அநீதிகளைப் பற்றி மட்டும் பாருங்கள்:

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் 5, 8 வகுப்புத் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று இந்த அரசு அறிவித்தது. அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றுவதற்கும் ஆசிரியர்களை வேலை வாங்குவதற்காகவும்தான் இந்த ஏற்பாடு என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். அதாவது அரசாங்கமும் ஆசிரியர்களும் செய்யும் தவறுகளுக்கான தண்டனையை மாணவர்கள்மீது ஏற்றிவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

ஆனால் 5, 8 வகுப்பு பொதுத்தேர்வுக்குப் பின்னாலுள்ள உண்மையான காரணங்களில் முதன்மையான ஒன்று அரசுப் பள்ளிகளை மொத்தமாக இழுத்து மூடி, அரசுப் பள்ளி மாணவர்களையும் – பிறகு அரசுப் பள்ளி ஆசிரியர்களையும்- வீட்டுக்கு அனுப்புவதுதான். இந்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய தேசியக் கல்விக்கொள்கையின் நோக்கங்களில் ஒன்றாகவே இந்த நடவடிக்கையைத் தமிழ்நாட்டரசு எடுத்திருக்கிறது.

5, 8 பொதுத்தேர்வு என்ற நிலை ஏற்படுமானால், தேர்வில் வெற்றிபெறப் போதுமான பயிற்சி அரசுப் பள்ளிகளில் கிடைக்காது என்று பிரச்சாரம் நடக்கும். ஏற்கனவே அரசுப் பள்ளிகளிலிருந்து பெரும்பான்மையான மாணவர்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறநிலையில் இந்த முடிவு கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக மாணவர்களையும் தனியார் – அதுவும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு – இடம்பெயரச் செய்துவிடும். மீதி நாலைந்து பேர் அரசுப்பள்ளிகளில் இருந்தால், அத்தகைய பள்ளிகளைப் பொருளாதாரச் சாத்தியமில்லை என்று பள்ளிக்கூடங்களை மூடிவிடலாம் பாருங்கள். இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற பிரச்சினைதான். இதனால் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து அந்த வர்க்கத்துக்கு ஒரு துளியும் கவலை இருப்பதாகத் தெரியவில்லை. சம்பள உயர்வுக்காகப் போராடுவதற்கு முன்பு வேலை இருக்கவேண்டுமே என்பது குறித்துகூட ஆசிரியர் சங்கங்களுக்குப் புத்தியில்லை என்றும் தெரியவருகிறது.

குழந்தைகளுக்கு இது எவ்வளவு பெரிய கொடுமை என்று கல்வியாளர்களும் உளவியல் நிபுணர்களும் எச்சரித்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இந்தியாவில் சர்வ வியாபகமாக உருவாகிவரும் கோச்சிங் மாபியா இப்போது தொடக்கக் கல்வியிலேயே தன்னுடைய வேலையை ஆரம்பிக்கும். மூன்றாம் வகுப்புத் தேர்வுக்கே தனிச்சிறப்பான கோச்சிங்கைத் தொடங்கும்.

இவற்றுடன், மற்றுமொரு அபாயமும் காத்திருக்கிறது. பள்ளிக்கல்வியைத் தம்வசப்படுத்தியிருக்கும் சங் பரிவாரம் தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பள்ளிகளில் தன் வேலையைக் காட்டத் தொடங்கியுள்ளது. புதிய தேசியக் கல்விக்கொள்கை ஆசிரியர்களுக்கு அப்பாற்பட்ட நபர்களையும் கல்வியகங்களில் பயிற்சிக்குப் பயன்படுத்திக்கொள்வதற்காக வழிசெய்திருக்கும் நிலையில், நாம் இதுநாள்வரை பார்த்துவந்த அரசுக் கல்வி மற்றும் இதுநாள்வரை பார்த்துவந்த தனியார் கல்வியின் நிறமும் மாறும்.

தமிழ்நாட்டின் கல்விவுரிமைகளில் மத்திய அரசு கைவத்தால் என்ன ஆகும் என நாம் எச்சரித்துவந்தவை உண்மையானவைதான் என்பதைத் தொடர்ச்சியாகப் பல்வேறு புதிய தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய தேர்வுச்சோதனை முகவாண்மை (ழிணீtவீஷீஸீணீறீ ஜிமீstவீஸீரீ கிரீமீஸீநீஹ்) புள்ளிவிவரங்களின்படி, 2020இல் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்களின் எண்ணிக்கையில், இந்திய அளவில் தமிழ்நாட்டின் பங்கு 17 சதவீதம் குறைந்திருக்கிறது என்கிற அதிர்ச்சியான தகவலை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டிருக்கிறது. 1.4 லட்சம் பேர் கலந்துகொள்ளவுள்ள இந்த நுழைவுத்தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து கலந்துகொள்வோரின் எண்ணிக்கை குறைவதற்கு என்ன காரணம்? கட்ஆஃப் அதிகரித்திருப்பதும் அதன் காரணமாக அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டதும் முக்கியமான காரணம்.

கட்ஆஃப் அதிகரிக்கிறது என்றால் போட்டி அதிகரித்திருக்கிறது, தரம் உயர்ந்திருக்கிறது என்றுதானே சொல்லமுடியும் என்று நினைக்கவேண்டாம். தேர்வு எழுதும் பெரும்பாலான மாணவர்கள் பிளஸ் டூ முடித்து இரண்டு மூன்று ஆண்டு காலமாக கோச்சிங் மையங்களில் படித்து, ஏற்கனவே தேர்வெழுதி அனுபவப்பட்டு தொடர்ந்து தேர்வெழுதி வெற்றிபெறுவதால் அவர்களுக்கு மதிப்பெண் அதிகரித்து, மருத்துவ இடம் அவர்களுக்கே சென்றுவிடுகிறது. புதிதாக முடித்துவிட்டு வருகிற மாணவர்கள் நீட்டில் தேர்ச்சி அடையமுடியாதநிலை உருவாகிறது. பிறகு அவர்கள் தேர்வுக்குப் போகாமலேயே தவிர்க்கும் முடிவை எடுக்கிறார்கள் என்பதுதான் இந்தச் செய்திக்குப் பின்னுள்ள உண்மை. அப்படி முடிவெடுப்பவர்களில் எவ்வளவு பேர் தொடர்ந்து கோச்சிங் செல்லமுடியும் என்பதும் இடையில் மருத்துவக் கல்வி கனவையே தூக்கியெறிந்துவிட்டு வேறொன்றுக்குத் திசைமாறமாட்டார்களா என்பதும் பில்லியன் டாலர் கேள்விகள். இது நடக்கவேண்டும் என்றுதான் பார்ப்பனீய மற்றும் கோச்சிங் கார்ப்பரேட் கும்பல்கள் விரும்புகின்றன. கீழ்சாதிக்காரனுக்கு எதற்கு மருத்துக்கல்வி, ஏழைக்கு ஏன் டாக்டர் கனவு? இது ராமராஜ்யம் சமீபித்துவிட்டது!

அதாவது பணக்கார, நகர்ப்புற நடுத்தரவர்க்க, சமூகங்களில் ஏற்கனவே உயர்நிலையில் இருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், அவர்களுக்குப் போதுமான அளவுக்கு அறிவு இருக்கிறதோ இல்லையோ, கோச்சிங் சென்டரில் ‘பயிற்சி பெற்று’ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிடுகிறார்கள். ஏழை, கிராமப்புற அல்லது அரசுக் கல்லூரி மாணவர்கள் அவர்கள் நல்ல மதிப்பெண் பெறக்கூடியவர்களாக இருந்தாலும் போட்டி போடமுடியாமல் தோற்கிறார்கள். இப்போது தேர்வுக்கே அஞ்சி நீட் பக்கம் போகாமல் இருந்துவிடலாம் என்று முடிவெடுக்கிறார்கள். கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு மாணவர் இப்படி முடிவெடுப்பதால்தான் இந்த 17 சதவீத வீழ்ச்சி!

குடிமுழுகிப்போச்சு என்பதுதான் உண்மை. எது நடக்கும் என அஞ்சினோமோ அது நடக்கத்தொடங்கிவிட்டது. இப்படிச் சொல்வதற்கு என்ன ஆதாரம்? டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி இந்தப் புள்ளிவிவரங்களைச் சொல்கிறது: 2019இல் எம்பிபிஎஸ் சேர்ந்த 4202 மாணவர்களில் 2919 பேர் – அதாவது 70 சதவீதம் பேர் – பழைய மாணவர்கள் என்று அது கூறுகிறது. இந்த ஆண்டும் பல மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செல்லாமல் கோச்சிங் சென்ட்டருக்குச் சென்று பயிற்சி எடுத்து அடுத்த ஆண்டு தேர்வெழுதலாம். ஆனால் இது எத்தனை பேருக்குச் சாத்தியம்?

இனி முதல் தலைமுறையாக ஒருவர் மருத்துவப் பட்டதாரியாக ஆவது என்பது தமிழ்நாட்டில் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. அரசியல்வாதிகள்-கல்வி கார்ப்பரேட் கூட்டுவியூகத்தில் இந்தியாவின் சுகாதாரத் துறையே பாதிக்கப்படப்போகிறது என்பதையும் நாம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது.

இது மட்டும் பிரச்சினையில்லை. எந்தெந்த மாநிலங்களில் நீட் தேர்வில் எவ்வளவு பேர் பங்கேற்கிறார்கள் என்கிற புள்ளிவிவரத்தையும் பாருங்கள்.

2020இல் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் முதல் ஐந்து மாநிலங்களின் பட்டியலையும் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கையையும் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 15.93 லட்சம் பேரில், முதலிடம் மகாராஷ்ட்ராவுக்கு (2.29 லட்சம்). ஐந்தாம் இடம் தமிழ்நாட்டுக்கு (1.17 லட்சம்). ஆனால் உத்தரப் பிரதேசத்தில் 1.54 லட்சம், ராஜஸ்தான் 1.38 லட்சம். கர்நாடகமும் இந்தப் பட்டியலில் இருக்கிறது.

மகாராஷ்ட்ரா வளர்ந்த மாநிலம், புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் உத்தரப் பிரதேசமும் ராஜஸ்தானும் அடிப்படியிலேயே கல்வி வளர்ச்சி குன்றிய மாநிலங்கள். தமிழ்நாடோ பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி, மருத்துவக் கல்லூரியில் இந்தியாவிலேயே முதலிடங்களில் வரக்கூடிய மாநிலங்களில் ஒன்று. அப்படிப்பட்ட தமிழ்நாட்டை எப்படி உபியும் ராஜஸ்தானும் இப்போது முந்திச்செல்லமுடிகிறது? இந்திக்கார மாநிலங்களில் ஏதேனும் கல்விப் புரட்சி நடந்துகொண்டிருக்கிறதா? யோகி மாஜிக் செய்கிறாரா? இல்லை.

உத்தரப் பிரதேசத்தின் நோய்டா, ஹரியானாவின் குருகிராம் – அதாவது தில்லி வட்டாரமும் ராஜஸ்தானும் இதில் முன்னிலை வகிக்கக் காரணம் கோச்சிங் மாபியா. அரசியல்வாதிகள்-கல்வி கார்ப்பரேட்கள்-கோச்சிங் மாபியா கூட்டுதான் இந்த மாநிலங்களிலிருந்து இவ்வளவு பேர் மருத்துவ இருக்கைகளைப் பெற உண்மையான காரணம். மருத்துவப் படிப்பு, ஐஐடி போன்ற தொழில்நுட்பக் கல்வி, மத்திய அரசு வேலைவாய்ப்பு என எல்லாவற்றிலும் இந்த கோச்சிங் மாபியாவும் கல்வி முதலாளிகளும் தங்கள் கைவரிசையைக் காட்டிவருகிறார்கள். (ஆந்திராவின் கோச்சிங் மாபியாதான் சென்னை ஐஐடியை நீண்டகாலமாக பிடித்துவைத்திருக்கிறது).

இந்தக் கும்பல் வெகுசீக்கிரத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளையும் (தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட) பிடிக்கும். அனைத்துப் பெரிய தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் ஆக்கிரமிக்கும். அவர்கள் ‘படித்து’ முடித்துவிட்டு வெளியே வரும்போது அரசு மருத்துவமனைகளில் பணியாற்றமாட்டார்கள். அப்போலோ போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகளில் வேலை செய்வார்கள். நீங்கள் தலைவலிக்கு வைத்தியம் பார்க்க அந்த கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்குச் சென்று வெளியே வரும்போது இரண்டு லட்ச ரூபாய் செலவுசெய்துவிட்டு வரப்போகிறீர்கள். இந்த அநியாயம் அமெரிக்காவில்கூட இல்லை. ஆனால் இங்கே இதெல்லாம் நடக்கத்தான் போகின்றன. நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

மற்றொரு உயர்கல்வி நிலையமான அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு கல்வியகமாக (நீமீஸீtமீக்ஷீ ஷீயீ மீஜ்நீமீறீறீமீஸீநீமீ) மாற்றுகிறோம் பேர்வழி என்று சொல்லி அந்த நிறுவனத்தை நயவஞ்சகமாக கைப்பற்றிக்கொள்ள தில்லி ஏகாதிபத்தியம் முயல்கிறது. எந்த ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அண்ணா முழங்கினாரோ அந்த ஏகாதிபத்தியம் அவரின் பெயரால் அமைந்த தமிழ்நாட்டுச் சமூகநீதி இயக்கத்தின் மாபெரும் குறியீடாக இருக்கிற, உலகளவில் நடந்துவரும் தகவல் நுட்பப் புரட்சிக்கு மாபெரும் மனிதவளப் பங்களிப்பைச் செய்துவருகிற ஒரு நிறுவனத்தை அந்த ஏகாதிபத்தியம் கைவசப்படுத்துகிறது.

அதன்பொருட்டே தன்னுடைய ஏஜென்ட்டான சூரப்பாவை மோடி அரசு சில ஆண்டுகளுக்கு முன்பே துணைவேந்தராக நியமித்தது. உங்களுக்கு அது நினைவிருக்கலாம். எங்களைப் போன்றவர்கள் அப்போது கத்தியதும் நினைவிருக்கலாம். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க தமிழக அரசுக்கு இருந்த உரிமைகள் நசுக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் இது அப்போது நடந்தது. இப்போது அண்ணா பல்கலைக்கழகமே பிளவுண்டும் சிதைவுண்டும் நம்மிடமிருந்து கைமாறவும்போகிறது.

இன்னும் என்னென்னவோ நமக்குக் காத்திருக்கிறது. புதிய நிழல் பிரதமர் அமித் ஷாவின் ஆட்சி உருவாகி இரண்டு நாடாளுமன்றத் தொடர்கள்தானே முடிந்திருக்கின்றன. காத்திருந்து பாருங்கள். கையில் ஒரு பாப்கார்ன் பாக்கெட்டை வைத்துக்கொண்டு திகில் படங்களைப் பார்க்கும் ரசிகர்களைப்போல நாம் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்போமாக.