இந்திய அரசியல்களச் சொல்லாடல்களில் இரண்டாம் சுதந்திரப் போர் எனும் பதம் மிக பிரபலமானது. பலமுறை அரசின் நீதியற்ற ஒருசார்பான போக்குகளைக் கண்டிக்கும் குரல்கள் இந்தச் சொற்றோடரைப் பயன்படுத்துவதுண்டு. அந்த சொல்லாடல்களின் நேர்மையைக் குறைத்து மதிப்பிடாமல், அதேவேளை ‘இரண்டாம் சுதந்திரப் போர்’ எனும் பதத்திற்கான அசலான பொருளை விளக்கும்பொருட்டு, இப்போதைய குடியுரிமைச் சட்டத் திருத்தம் மற்றும் தேசியக் குடிமைப் பதிவேட்டிற்கெதிரான மக்களின் தன்னெழுச்சியான போராட்டமே அதன் அத்தனை பொருள்களும் நிறைந்தது என்பதை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். அப்படியென்ன இந்தப் போராட்டம் ஆதாரமானது என்ற கேள்வி எழலாம். இந்தக் கேள்வி யாருக்கு எழுகிறது என்பதைப் பொறுத்தே அதன் கருப்பொருள் வலிமை பெறும். இன்றைய சங்பரிவார ஆட்சியாளர்களின் மக்கள் பிளவு நடவடிக்கைகளை தங்கள் ஆதர்சமாகக் கொண்டாடும் இந்துத்துவர்களுக்கு இது உடனடியாக விளங்கப் போவதில்லை. ஆனால் அவர்களுக்குமானது இந்த எழுத்து முயற்சி.
ஏன் இது இரண்டாம் சுதந்திரப் போர் ?
இந்திய விடுதலையாக கொண்டாடப்படும் 1947ஆம் ஆண்டில் அறிவுத் தெளிவோடு அதனை உள்வாங்கிய தலைமுறை அநேகமாக இன்று இல்லை. ஆனால் அந்த ‘விடுதலை’ குறித்த பதிவுகள் ஏராளமாய் உள்ளன. அவற்றில் பல உற்சாகம் பீறிடும் கொண்டாட்டமாக இருப்பதைக் காணமுடியும். எந்தவகையில் அந்த மகிழ்வை நாம் புரிந்துகொள்வது. ஒரு நாட்டின் விடுதலை ஒரேவிதமாக அந்த மக்கள் திரள் முழுமைக்குமானதாக இருந்திருக்க முடியாது. இந்த திக்குமுக்காடும் கொண்டாட்டப் பதிவிட்டோருக்கும், அவரது சக குடிநபரான (CITIZEN) ஒரு ஏழை விவசாய கூலித் தொழிலாளிக்குமானதாக இருந்திருக்க முடியாது. இந்த விடுதலை என்ற விவகாரம் இந்த நாட்டின் தெற்கையும் வடக்கையும், வடகிழக்கையும், வடமேற்கையும் ஒரே ரீதியில் அதற்கு முகங் கொடுக்கச் செய்யவில்லை. வடமேற்கும், வடகிழக்கும், காஷ்மீரமும் அதனை எதிர்கொண்ட விதத்தை தெற்கு அறியவே இல்லை எனலாம். பல லட்சம் உயிர்ப்பலியோடு பிறந்ததுதான் இந்திய விடுதலை. அதுவரையான விடுதலைக்கான வித்தாக இருந்த காந்தியார், விடுதலை நாளில் கொல்கத்தாவின் இருண்ட அறையொன்றில் துக்கித்துக் கிடந்தார். விடுதலைப் பேருவகையை பகிர்ந்துகொள்ளாதவர்களில் காந்தியார்தான் முதன்மையானவர்.
அவ்வளவு ஏன், அதிரவைக்கும் சிந்தனைகளை வழங்கிய அய்யா பெரியார் அதனை முற்றிலுமாக நிராகரித்தவர் என்பதை அறிவோம். ஆனால் காந்தி அவர்களின் மகிழ்வின்மையும், பெரியாரின் எதிர்ப்பும் எதிரெதிரானவை. காந்தியாரின் சோகம் இந்த நாட்டு ‘விடுதலை’ சுமுகமாகவும், சுபமாகவும், அவரது வார்த்தைகளில், அவரது கருத்துநிலைப்படியான ‘ராமராஜ்யமாக’ இல்லாமல், பிளவுண்டு இந்துக்கள், இஸ்லாமியர் என்ற விரோத தளத்திற்கு நகர்ந்தது தொடர்பிலானது. ஆனால் பெரியாரின் நிராகரிப்பு உருப்பெரும் நாட்டின் இறையாண்மை, குடிமைப் பண்பு தொடர்பிலானது. இந்தியா எனும் பெயரில் உருவாகும் நாடு பார்ப்பனீய இந்துத்துவ மேலாண்மைக்கான பிரதேசம் என்பது. பார்ப்பன இந்து இந்தியாவில் பெரும்பான்மை மக்களுக்கு முறையான குடியுரிமை ஒருபோதும் சாத்தியமில்லை என்பதே பெரியார் சிந்தனை. இந்தக் கருத்துநிலையை ஏதோ, விடுதலை நாளில் எடுத்தவரில்லை. பெருமிதமாகச் சொல்லலாம், நமது அறிவாசன் ஒருவரே அந்த நாளில் ‘தேசம்’, ‘குடியுரிமை’ குறித்து ஆழமாகச் சிந்தித்தவர் இதில் கவனத்திற்குரியது அவரது பத்திரிகைகளின் பெயர்களே. 1925ஆம் ஆண்டில் ‘குடியரசு’ என்ற பெயரில் இதழ் நடத்தியவர், இந்திய விடுதலையை தனது இறுதி நாள் வரை கொண்டாட மறுத்து எழுதிய இதழின் பெயர் ‘விடுதலை’. ‘குடிமை’, ‘இறையாண்மை’ ஆகியவை குறித்து விரித்தால் கட்டுரையின் தளம் திசைமாறி விடும். எல்லைகளற்ற தேசம், குடிமை என்பதான சிந்தனைகள் மிக ஆழமானவை. இந்த இந்துத்துவ மதவெறியர் கூட்டத்திற்கு அதன் அரிச்சுவடிகூடத் தெரியாது. சொன்னாலும் விளங்காது.
அதேபோல், பார்ப்பனர் / பார்ப்பனரல்லாதோர், ஆரியர் / திராவிடர் (தமிழர்) என ‘அடையாள அரசியல்’ களப் பயிற்சி நமக்கு கற்றுத் தந்த அடிப்படைச் சிந்தனை என்ன? இந்த அடையாள முரண்கள் கருத்தியல் சார்ந்த நிலைப்பாடுகள் என்பதும், பார்ப்பனீயமும், பார்ப்பனரும் பிளவே அற்றவை அல்ல. தன்னைப் பார்ப்பனனாக உணராதவர் பார்ப்பனீயத்தின் தளைகளை அவிழ்த்துவிட முடியுமென்பதுதான். அதாவது, மனிதரில் மேல் கீழ் என்பதைப் பிறப்பு ஒருபோதும் தீர்மானிக்காது என்ற சிந்தனையே சுயமரியாதை மற்றும் விடுதலை ஆகியவற்றின் ஆதாரம் என்பதே. அடிப்படையில், அடையாள அரசியல் பண்பாட்டுத் தளம் சார்ந்தது. அது கலாச்சார விழுமியங்களின் சுயாதீனத்தை பேணுவது. ஆனால் இன்னொரு ‘அடையாளத்தின்’ மேலாண்மையை மறுக்கும்போதே, அந்த எதிர்அடையாளத்தின் இருப்பை அங்கீகரிக்க தயங்காதது. மேலாண்மை நோக்கமற்ற அடையாளங்கள் இயல்பான சகவாழ்வு வாழ அனுமதிக்கத் தயங்காதது. நான் சொல்லும் அடையாள அரசியல் அடிப்படைகள் திராவிடப் பள்ளியின் பண்புகள். ஆக, இந்தியத் துணைக் கண்டத்தில் ‘இறையாண்மை’, ‘குடிமை’, ‘தேசம்’ ஆகியவை குறித்து விரிவாகச் சிந்திக்கும் பயிற்சி பெரியார் பள்ளி மாணவர்க்கு ஏற்கனவே உள்ளது.
ஆனால் கலாச்சார, பண்பாட்டு அடையாளம் சார்ந்த அரசியலுக்கு நேரெதிரான தளத்தில் இயங்குவது தேசியவாத அரசியல். நிலப்பரப்பு சார்ந்த ‘இறையாண்மை’ எனும் கோட்பாட்டை முன்னிறுத்தும் தேசியவாதம், தனது முதல் எதிரியாகக் கருதுவது மேற்படி கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களையே. கலாச்சார, பண்பாட்டு அரசியலின் குடிமைப் பண்பு இயல்பானது, அதிகாரமற்ற சமத்துவமானது. ஆனால் நிலப்பரப்பு சார் தேசியவாத இறையாண்மையின் ‘குடிமை’ சிக்கலானது. கலாச்சார அடையாள அரசியலின் (பெரியார் பள்ளி) தனிமனித ‘சுயமரியாதை’யே இறையாண்மையின் ஆதாரமென்றால்,, தேசியவாதம் சுயமரியாதை இழப்பின்மீதான அதிகாரத்தையே இறையாண்மை எனக் கொண்டாடும். அதைத் தீர்மானிக்கும் காரணிகளும், அதன் விளைவான அதிகாரத்துவ மேல் கீழ்களும் அசலாக மநுதர்மவாத பிறப்புசார் மேல்கீழ் குணாம்சம் கொண்டது. தேசியவாத இறையாண்மை வழங்கும் ‘குடிமை’ அதன் கற்பிதமான ‘மற்றமைகளை’ கருத்தில்கொண்டே அமையும். வெற்றிகரமான தேசியம், அதன் குடிகளை ‘அடையாளமற்றவர்களாக்கி’ அவர்களை கற்பிதமான ஒரு புதிய அடையாளத்தில் திணிப்பதையே லட்சியமாகக் கொள்ளும். அதன் பெருவெற்றி ‘ஒற்றை’ அடையாளமே. அதற்கெதிரான ‘அடையாளங்கள்’ அனைத்தும் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு ‘குடிமை’ மறுக்கப்பட்டு இரண்டாம் தரக் குடிகளாக அல்லது ‘நாடற்றவர்களாக’ ஆக்கப்படுவதே தேசியத்தின் ஆகப்பெரிய வெற்றி.
இன்றைய இந்துத்துவ மதவாதப் பேயரசு முன்மாதிரிகள் அற்றவையல்ல. எந்தவித பெரு முயற்சிகளுமில்லாமல், இணையவெளியின் தயவில், அழுத்தம் திருத்தமாக பிரதமர் மோடி, ஹிட்லரின் வார்த்தைகளையே மறு உச்சாடனம் செய்வதைக் காண்கிறோம். அமித் ஷாவின் நடவடிக்கைகள் முழுமையாக ஜெர்மானிய மாதிரியில் இருப்பதே அச்சமூட்டுகிறது. இறுதியாக சர்வாதிகாரமும், சர்வாதிகாரிகளும் வீழ்ந்த வரலாறு ஆறுதலானதுதானென்றாலும், அதை நோக்கிய பாதையின் ரத்த ஆறு நிச்சயமாக தவிர்க்கப்பட/ தடுக்கப்பட வேண்டியதே.
இந்திய விடுதலையும், குடியுரிமையும்
இந்திய ‘விடுதலை’, ‘இறையாண்மை’, ‘குடியுரிமை’ என்ற அன்றைய சிக்கல்களுக்கான தீர்வு காணப்பட்ட முறைகள் ஏராளம். அந்த நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்களை வாசிக்க இந்திய வரலாற்றையே மறுவாசிப்புச் செய்வதுதான். வடக்கே காஷ்மீரும், மேற்கே பாகிஸ்தானை ஒட்டிய பகுதிகளும், கிழக்கே வங்காளமும் எதிர்கொண்ட பயங்கரங்களை வரலாறுகுறித்த அக்கறை கொண்டவர்கள் அறிவார்கள். வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சினை முற்றிலும் மாறானது. அநேகமாக, காஷ்மீர் போன்ற நிலைதான் அங்கே ஆனால் அது இஸ்லாமியர் இல்லாமல், பழங்குடி இனக்குழு சமூகங்கள் என்பதால் அதுபற்றிய வரலாற்றறிவு இந்தியர்களுக்கு மிக மிகக் குறைவு என்றே சொல்லலாம். அதைவிட மிக கவனமாக மனதில் இருத்திக்கொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால், வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சினை முடிவுறாத தொடரும் சிக்கல் என்பதுதான். ஏன் காஷ்மீரை சிதைத்த மோடி அரசு நாகாலாந்திற்கு ஏறத்தாழ ஒரு தனிநாட்டிற்கான உரிமைகளை வழங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது என்பதில் இருக்கிறது சூட்சுமம். இந்துத்துவ அரசியலின் உயிர்நாடியே இஸ்லாம், இஸ்லாமியர், பாகிஸ்தான் என்பது உலகறிந்த செய்தி. வடகிழக்கு அப்படியில்லை. அதன் மக்கள் பழங்குடி இனக்குழு சமூகங்கள். அவர்களிடையிலேயே கடுமையான வேறுபாடுகளைக் கொண்டுள்ள சமூகக் குழுக்கள். அதைவிட அவர்களை ஒடுக்குவதோ, நசுக்குவதோ இந்து இந்தியர்களுக்கு மகிழ்வளிக்காது. அப்படி ஏதாவது முயன்றால் சீனா என்ற அசல் வல்லரசின் கோபத்திற்கு ஆளாக நேருமென்ற பயம். ஒரு மாதிரிக்கு இரண்டு குறுமாநிலங்களின் கதையைப் பார்க்கலாம். அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து. அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் பகுதியாக சீனா ஒருபோதும் ஏற்கவில்லை. சீன ராணுவம், தலைநகரில் இந்திய அரசு அலுவலகங்களின்முன் நின்றிருப்பது சாதாரணம். எனவே அதுதான் இந்தியாவின் 29 இல்லை இப்போது (காஷ்மீர் யூனியன் பிரதேசமான பின்பு) 28ஆவது மாநிலம். நாகாலாந்து அதற்கென்று தனிக் கொடி மற்றும் கடவுச் சீட்டு (ஒரு பகுதி மட்டும்) கொண்ட மாநிலம். அசலாக நாகாலாந்து, பூடான் போன்ற தன்னாட்சி, இறையாண்மை கொண்ட தனிநாடு. அதனோடு இந்தியா கொண்டிருக்கும் கூட்டு வெளியுறவுக் கொள்கை ஒப்பந்தம் ஒன்றுதான் இப்போதைக்கு அதனை இந்தியாவின் பகுதியாகக் காட்டுகிறது.
தற்போதைக்கு வடகிழக்கு எரியாமல் இருக்க உதவும் காரணி உள்நாட்டு எல்லை அனுமதிச் சீட்டு ( INNER LINE PERMIT ). நேபாளத்திற்கும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர் போக இந்தியர்கள் ‘அனுமதிச் சீட்டு’ பெற்றுதான் நுழைய முடியும். இதில் பெருமை மிகு இந்து இந்தியர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால், இந்த அனுமதிச் சீட்டு, 1873 ஆம் ஆண்டின் Bengal East Frontiers Regulations 3, என்ற சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படை நோக்கம் பழங்குடியினரின் பகுதிகளுக்குள் வெள்ளையர் ( Britishers) அனுமதியின்றி நுழையக்கூடாது என்பதே. இந்தியா விடுதலை பெற்றவுடன் ‘வெள்ளையர்’ என்ற பதத்தை ‘இந்தியர்’ என திருத்திவிட்டனர். மணிப்பூரை பொறுத்தவரை அங்கே வெகுநாளாக இந்தக் கோரிக்கை இருந்தபோதும் அது ஏற்கப்படவில்லை ஆனால் இப்போது உள்ள பாஜக அரசு காணாமல் போய்விடும் என்ற அச்சத்தில் அமித் ஷா உருவாக்கம் செய்திருக்கும் நடைமுறை. அதாவது, அசாமின் சிறுபான்மை மற்றும் பூர்வகுடிகளை நசுக்கி விரட்ட வடகிழக்கு மாநில அரசுகளை கூட்டாளியாக்கி இருக்கும் சதித் திட்டம். வடகிழக்கு மாநிலங்களின் பன்மையான கலாச்சார மூலங்களை அறிந்தவர்கள், இதை நெருப்புடன் விளையாடும் வேலை என்றே கருதுவார்கள். நாகாலாந்து பகுதிகளில் ஆயுதக் குழுக்கள் இயல்பாக நடமாடுவதையும், விடுதலை நாள் கொண்டாட்டங்கள் வெளிப்படையாக நடைபெறுவதையும் அறிவோம்
இங்கே ஒன்றைத் தெளிவுபடுத்திவிட எண்ணுகிறேன். திராவிட சுயநிர்ணய அரசியல் பயிற்சி பெற்றவர்களான நமக்கு நாகாலாந்து மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சுயநிர்ணய உரிமைக்கான நடவடிக்கைகள் குறித்த ஆதரவு நிலைதான் தவிர வேறில்லை. இந்தியக் குடிநபராகவும் அவர்கள் குரலெழுப்புவதோடு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் உள்நாட்டில் மத அடிப்படைவாத முரண்களை வளர்த்தெடுக்க, உள்துறை அமைச்சர் இந்தரீதியிலான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது நிச்சயமாக ஆட்சேபகரமானதுதான்… வடகிழக்கின் முன்னுரிமைகளை இங்கே சுட்டுவது இந்த சங்பரிவார அரசின் அயோக்கியத்தனத்தை, இஸ்லாமிய சிறுபான்மையினருக்கெதிரான பயங்கரவாதத்தை வெளிப்படுத்தவே. அதைவிட ஒன்றை வலியுறுத்திச் சொல்ல வேண்டும். அந்த ஜெர்மானிய கவிஞனின் வரிகளை நினைவில் கொள்வோம். முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள். பின்னர் கத்தோலிக்கர்களுக்காக, பின்னர் இன்னொரு தரப்பிற்காக என்பதுதான் பாசிசத்தின் வழி. பாசிசத்தின் போக்கில் வடகிழக்கின் பழங்குடிகள், ஜெர்மானிய ஜிப்சிகளின் நிலைக்குத் தள்ளப்படுவதே சாத்தியம். பாசிசத்தின் ரத்தப் பசி எல்லைகளற்றது.
அசாம் கதையும், தேசிய குடிமைப் பதிவேடும்
இந்தக் கட்டுரையின் வலிமிகுந்த பகுதி இதுதான். இன்றைய அசாமின் வலி நாளை ஒட்டுமொத்த இந்தியாவின் வலியாகி விடக்கூடாது என்பதே நம் கவலை. இந்தத் தரவுகள், மற்றும் குடிமைப் பதிவேடு உருவாக்கும் கடுமையான முரண்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்த கருத்தமைவுகளை, அசாமின் குடிமைப் பதிவேடு குறித்த திரு.சஞ்சய் பார்போரா அவர்களின் ஆய்வுத் தரவுகளின்வழியாகவே அடைந்தேன் என்பதை முதலில் பதிவு செய்கிறேன். ஒருநாள் தி இந்து பத்திரிகையின் வாசக ஆசிரியர் நண்பர் ஏ.எஸ்.பன்னீர் செல்வன், அழைப்பின்பேரில், சென்னை ஆசியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிஸ்மில் சஞ்சய் பார்போரா அவர்களின் உரையைக் கேட்க வாய்த்தது. அதுவரை அசாமின் பிரச்னைகளை மேலோட்டமாகப் புரிந்துகொண்டிருந்த எனக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது உரையின் சாராம்சமாக என் நினைவில் நின்றவை இவை.
அசாமின் குடிமைப் பதிவேடு நடவடிக்கையை அநேகமாக பெரும்பான்மையானவர்கள் வரவேற்கவே செய்தனர். தீராத தலைவலியாக எழுபதுகளின் இறுதியில் துவங்கி என்பதுகளின் நடுப்பகுதி வரை நீண்டன அசாம் போராட்டங்கள், தனிநாடு கோரிக்கை வரை நீண்ட போராட்டங்களுக்கும், உள் முரணாக பழங்குடி போடாக்கள் நடத்திய ஆயுதப் போராட்டங்களுக்குமான தீர்வாக அமையுமென்றே அவர்கள் நினைத்தார்கள். இதில் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் முற்போக்காளர்களும் இருந்தனர். ஆனால் அரசு தன் முழு அரசு அதிகாரிகளையும் பயன்படுத்தி பல நூறு கோடி செலவில் நடத்திய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கைகள், இறுதியாக மக்களை சொத்து, பாரம்பர்யம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்பதான வகையில் பிரித்துப் போடுவதில் துவங்கியது சிக்கல். ஆவணங்கள், அதிலும் மூதாதையர் ஆவணங்கள் என்ற அடிப்படையில் நிறுவப்பட வேண்டியதான குடியுரிமை கடுமையான பதற்றத்தை உருவாக்கியது. வெகுமுன்னரே உச்சநீதி மன்றம் தீர்வாக வைத்த தேசிய குடிமைப் பதிவேடு பணி 2015ஆம் ஆண்டில்தான் துவங்கியது. 2016ஆம் ஆண்டளவில் தயாரான முதல் பதிவேட்டின்படி ஏறத்தாழ ஐம்பது லட்சம் பேர் விடுபட்டுப் போயிருந்தனர். அப்போதுதான் விபரீதம் புரியத் துவங்கியது.
தேசிய குடிமைப் பதிவேட்டில் விடுபட்டவர்களில் பெரும்பகுதியினர் பூர்வகுடிகள் மற்றும் காலனிய காலத்தில் தேயிலைத் தோட்டம் மற்றும் பிற பகுதிகளில் கூலிகளாக குடியேற்றம் செய்யப்பட்டவர்கள். அவர்களில் பெரும்பான்மையினர் 1951ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயரோ அல்லது அவர்களது அப்பாவின் பெயரோ இருந்ததாக நிரூபிக்க முடியவில்லை. சுருக்கமாகச் சொல்வதானால், ஆவணங்கள் என ஏதுமற்றவர்கள் தவித்துப் போனார்கள்.அதிலும் பெண்கள் நிலை மிக மோசமானது. முதலில் சொத்துரிமை வெகுகாலம் மறுக்கப்பட்டவர்கள் ஆவணங்களை எங்கே தேடுவது. அதைவிட பிறந்த வீட்டிலிருந்து மணமாகிக் குடிபுகுந்த வீட்டிற்கு வரும்போது அவர்களது ஆவணங்களின் அடையாளங்கள் மாறிவிடுவதே இந்தியப் பெண்கள் நிலை. அவர்களது பிறப்பு ஆவணங்கள் தவிர்த்தவை அநேகமாக, வேறு ஒன்றும் இருக்க வாய்ப்பிராது என்பதே அபத்தம். அசாமின் தடுப்பு முகாமொன்றில் இரண்டு ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தனது தாய் பற்றிய மகனது பேட்டியை பலர் கண்டிருக்கலாம். என்ன விபரீதம் பாருங்கள். மகன் இந்திய குடிநபர், அவனைப் பெற்ற தாய் அந்நியர். இந்த ஒரு தரவு சொல்லும் அசாமின் அவலக் கதையை. இத்தனைக்கும் அவர் ஒரு இந்துத் தாய். இந்தப் புள்ளியில் அசாமின் மக்கள் தொகுப்புச் சிக்கல் குறித்த சில விடயங்களைத் தொகுத்துக் கொள்வது நல்லது. 1971ஆம் ஆண்டுவரையான தொகுப்பே கொஞ்சம் குழப்பமானது. ஒரு நாளில் அசாமின் அலுவல் மொழியாக வங்காளம் இருந்தது என்பதே அதற்கான அடையாளம். அணுக்கப் பகுதிகளான கிழக்கு வங்காளத்திலிருந்து பல்வேறு காலகட்டங்களில் வங்காளிகளும், இஸ்லாமியரும் குடியேறியபடி இருந்தனர். அவர்கள் பிரம்மபுத்திரா பகுதி பள்ளத்தாக்குகளில் குடியேறி விவசாயிகளானர்கள். இதெல்லாம் நடந்தது பிரிட்டிஷ் இந்திய நாட்களில். அப்போதைய அசாம், இன்றைய மேகாலயா, மணிப்பூர் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருந்தது. ஏற்கனவே கண்டது போல் 1873ஆம் ஆண்டின் தடைச் சட்டம், பழங்குடி இனத்தவரைக் காத்தது. ஆனால் நிலப்பகுதியில் வாழ்ந்த அசாமியர் இந்த வெளியாட்கள் வருகையிலிருந்து தப்ப முடியவில்லை. போதாக்குறைக்கு 1971ஆம் ஆண்டின் பங்களாதேஷ் போர் மிகப் பெரும் திரளான அகதிகள் வருகையை கொணர்ந்தது. அசாமின் 98% சுற்றளவு, பங்களாதேஷோடு ஒட்டியிருப்பது. அநேகமாக எந்தப் பகுதியிலிருந்தும் உள்ளே வந்துவிட முடியும். இந்த அகதிகள் வருகை அசாமின் பூர்வகுடிகளையும், பழங்குடிகளையும்கூட பாதித்தது. அதன் விளைவே அனைத்து அசாம் மாணவர் போராட்டம், மலைவாழ் பழங்குடி போடோ ஆயுதப் போராட்டம் என வெடித்தது. இந்திய வரலாற்றில் மாணவர் அமைப்பு கட்சியாகி ஆட்சியையும் பிடித்தது. பிரபுல் குமார் மகந்தா முதல்வரானார். மாணவர் அமைப்புகளின் தோல்வி, போடோ ஆயுதப் போராட்டம் ஆகியவை மீண்டும் தேசியவாதக் கட்சிகளுக்கு வழிவிட்டது.
குடியுரிமை, அந்நியர் என்ற பதங்களின் விபரீதங்களை அனுபவமாக அல்லது அசலான திடவடிவில் காண நேரும்போதே அதிர்ச்சி உண்டாகிறது. அசாமின் கதையும் அதுவேதான். சொத்துரிமை, பாரம்பர்யம் என்ற அடிப்படைகள் தீர்மானிப்பதானபோது, அதிகாரத்தை கையகப்படுத்தி வெகுகாலம் ஆண்ட அந்நியராகக் கருதப்பட்ட வங்காளிகள் பெருமளவில் 1951ஆம் ஆண்டிற்கு முன்னரான ஆவணங்கள் கொண்டவர்களாக இருந்தனர். எனவே அவர்கள் பாதிக்கப்படவில்லை. மாறாக, எல்லைப் பகுதிகளில் வாழ்ந்த இஸ்லாமிய சிறுபான்மையினரும், நிலமற்ற கூலிகளுமே சிக்கலுக்குள்ளானார்கள். இதில் சோகமென்னவெனில், கிழக்கு வங்காளத்தில் வாழ்ந்து அது கிழக்கு பாகிஸ்தானான போது இங்கேயே இருந்து விடத் தீர்மானித்த தினக்கூலிகள் பலரே இப்போது ஆவணமற்ற இஸ்லாமியர். இது தவிர கிழக்கு வங்காளத்திலிருந்து கிழக்கு பாகிஸ்தான் (1947 ) உருவான போது, சில இஸ்லாமியப் பெரும்பான்மை மாவட்டங்களில், அவர்கள் எந்த நாட்டைத் தேர்வு செய்கிறார்கள் என்பது தொடர்பான ஓட்டெடுப்பு நடந்தபோது, இந்தியாவோடு இருக்க ஓரிரு பகுதிகள் முடிவெடுத்தன. அவர்கள் ஓரளவில் நிலமுடையவர்களாக இருந்ததும் அவர்கள் முடிவிற்கான காரணம். அவர்களும் இந்தக் குடியுரிமை பரீட்சையை எளிதாகக் கடந்துவிட்டார்கள். எனவேதான் இறுதியாக எஞ்சியவர்களில் 75% பேர் இந்துக்களாகிப் போனார்கள். அதாவது, நிலவுடைமை மற்றும் பாரம்பர்யமற்ற ஏழைகள்.
இதைவிட படுமோசமான விடயம், அசாமின் மக்கள் தொகுப்பில் இணைந்து கலந்து, அநேகமாக அசாமியராகவே ஆகிவிட்டவர்கள் பலரை இந்தக் கணக்கெடுப்பு மீண்டும் அவர்களது பூர்வ அடையாளத்திற்குள் தள்ளி அடைத்துவிட்டது என்பதுதான். இந்த பட்டியலில் விடுபட்டவர்கள் அனைவரும் பங்களாதேஷ் அகதிகள்தானா என்பதற்கான ஆதாரங்கூட இல்லை. இந்த இடத்தில் வலி மிகுந்த ஒன்றைப் பேசி விடுவோம். உடைமையோ, ஆவணமோ இல்லாதவர்கள் இந்த நாட்டில் இல்லை, எந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் நிலை என்ன? இவர்கள் நூறு சதம் தினக்கூலிகள் அல்லது வாழ்வாதாரமற்றவர்கள். அதாவது வேறு தேர்வேதுமில்லாததால் அங்கே இருப்பவர்கள். இந்தப் பாரம்பர்யமற்றவர்களிடம் /ஆவணமற்றவர்களிடம் இறுதியாக 1971 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதிக்கு (பங்களாதேஷ் விடுதலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள்) முன்னர் வழங்கப்பட்ட கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனுமிருந்தாலும் போதுமென அறிவிக்கப்பட்டது. அவை 1) நிலக் குத்தகைப் பத்திரம் 2) குடியுரிமை ஆவணம் 3) நிரந்தரக் குடியிருப்பு ஆவணம் 4) அகதியாக பதிவான ஆவணம் 5) பாஸ்போர்ட் 6) எல்.ஐ.சி. பாலிசி 7) அரசு உரிமச் சான்றிதழ் (டிரைவிங் லைசென்ஸ்போல) 8) அரசு ஊழியர் என்பதற்கான சான்றிதழ் 9) வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கு 10) பிறப்புச் சான்றிதழ் 11) பள்ளி அல்லது பல்கலைக்கழகச் சான்றிதழ் 12) கோர்ட் வழக்கு தொடர்பான ஆவணங்கள் .
இங்கே கவனிக்க வேண்டியது, மேலேகண்ட ஆவணங்களில், இந்தியாவின் பிற பகுதிகளில் நம்மில் எத்தனை பேர் 1955ஆம் ஆண்டிற்கு முந்தையது வைத்திருக்கிறோம் என்பதுதான். அசாமின் சிக்கல் பங்களாதேஷ் என்பதால் 1971, இந்தியாவின் பிற பகுதிகளின் குடியுரிமைச் சட்டம் அமலானது 1955ஆம் ஆண்டில்தான். எனவே குடியுரிமையை நிறுவ அதற்கு முந்தைய மூதாதையர் சொத்துரிமை ஆவணம் அல்லது மேற்கண்ட ஆவணங்கள் எதையாவது காட்ட வேண்டும். அநேகரிடமும் எதுவும் இருக்காது என்பது கசப்பான உண்மை. இதைவிட கசப்பான தகவல் இந்த ஆவணங்கள் (12 வகை ஆவணங்கள்) தற்போதையதாக இருந்தால் ‘இந்தியாவில்’ குடியுரிமையை நிறுவச் செல்லாது என்ற இப்போதைய ஒன்றிய அரசின் அறிவிப்புதான். இதைவிடக் கூடுதலாக தற்போதைய ஆணித்தரமானது என்பதாகவும் ‘தனித்துவமான அடையாளம்’ (ஹிஸீவீஹீuமீ மிபீமீஸீtவீtஹ் ) எனவும் வழங்கப்பட்ட ஆதார் அட்டையும் நிரூபணமில்லை என்றானதுதான். எழுபதிற்கும் சற்றுக் கூட குறைவான கால அளவிலான இந்தியா எனும் நாட்டின் குடிமகனாக நிறுவிக் கொள்ள, அதற்கு முந்தைய காலத்திலான ஆவணங்களே அதிகாரம் பெற்றவை என்பதை என்னவென்பது. ஒரு கேள்வியாக பார்ப்போம்.இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாளில் யாரெல்லாம் இந்த நாட்டின் குடிமக்கள் என்பது தீர்மானகரமானதாக இருந்ததா ? அப்படியொரு தொகுப்பு தொடர்ந்து இங்கு பலவழிகளிலும் தொகுக்கப்பட்டது என்பதுதானே வரலாறு. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் அவர்களின் தீரமான (?) / தீர்மானகரமான நடவடிக்கைகளால் இணைக்கப்பட்ட சுதந்திர ஜமீன்களின் குடிமக்கள், ஹைதராபாத் நிஜாமின் குடிமக்கள், காஷ்மீர் மற்றும் வடகிழக்குப் பகுதிகளின் மக்கள், பிரெஞ்ச் காலனிகள் என ஒவ்வொன்றாக பல்வேறு காலங்களில், பல்வேறு வழிகளில் இணைக்கப்பட்டவையும், இணைந்தவையும்தானே. அவர்களெல்லாம் அரசமைப்புச் சட்டத்தை “தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொண்டவர்கள்’ பட்டியலில் வரமாட்டார்களே. அவர்கள் ஏற்கும்படிக்கு வற்புறுத்தப்பட்டவர்கள்தானே. முதலில் உருவான அரசமைப்புச் சட்டத்தை ஏற்க மறுத்த அரசியலின் வழி வந்தவர்கள் தாமே நாம்… எனவேதான் கலாச்சார, பண்பாட்டு அடையாள அரசியலின் தளமும், நிலப்பகுதி சார் இறையாண்மைசார் குடியுரிமையும் எதிரெதிரானவை அல்லது வேறு வேறு என்கிறோம். அதனால்தான் அடையாள அரசியல் சார்ந்த சுயாட்சி கோரிக்கையும், சமூக நீதியும் ஒரு இணக்கமற்ற முரணோடு தொடர்பவை. சுயாட்சி எல்லைக்குட்பட்ட நிலத்தின் மீதான பிடி ஆதாரத்துடன் கூடியதான அதிகாரத்தை கோருவது என்றால், சமூக நீதி நிலப்பகுதியில் வாழும் அனைவருக்கும் சட்டப்படியான சமவுரிமையுடனான குடியுரிமையை உறுதிப்படுத்துவது. பெரியார் சிந்தனைகளின் ஆதாரம் அதுதான். பார்ப்பன / பார்ப்பனீய மேலாண்மையும் மற்றும் அனைத்து வகை சாதிய மேலாண்மையும் அழித்தொழிப்பது என்பது ஒருபோதும் அவர்களுக்கான அடிப்படையுரிமைகளை மறுப்பதோ அல்லது அவர்கள்மீதான நேரடியான வன்முறையை பிரயோகிப்பதோ அல்ல என்பதே. திராவிட நாட்டில் பார்ப்பனர்க்கு குடியுரிமை இல்லையென்ற பேச்சுகூட ஒருபோதும் இல்லை.திராவிடர் கழகத்தில் இடமில்லை என்றவர், இந்த நாட்டின் குடியுரிமையை பற்றிய விவாதங்களில் இறங்கியதில்லை. எங்களை நசுக்காமல், உங்கள் சனாதன அதிகாரத்தை எங்கள்மீது செலுத்தாமல் இருக்க வேண்டுமென்பது நிலைப்பாடு. யாரும் யாருக்கும் தாழ்ந்தவரும் இல்லை, மேலானவர்களும் இல்லை என்ற கருதுகோள் அவர்களையும் உள்ளடக்கியதுதான். இன்னும் சொல்வதானால் பார்ப்பனீய மேலாண்மையான பிறப்பால் மேல் கீழ் என்பதை மறுக்கும் நிலப்பகுதியே திராவிட நாடு. அதற்கான புவியியல் எல்லைகளைக்கூட பெரியார் நிர்ணயித்தவரில்லை.
அமித் ஷா செய்திருப்பதென்ன?
அசாமில் குடியுரிமைப் பட்டியலில் விடுபட்டோருக்கு நிவாரணம் தேடவேண்டிய ஒன்றிய உள்துறை அமைச்சகம் செய்திருப்பதென்ன? அசாமில் பாதிக்கப்பட்டோரை இன்னும் சிக்கலில் தள்ளி, அதே சிக்கலை இந்திய அளவிலானதாக ஆக்கியிருப்பதுதான். இதை ஒரு பொறுப்புள்ள அரசு செய்யுமா? இதுதான் சங்பரிவாரின் நாசகர வேலை. உள்துறை அமைச்சரே பயங்கரவாதியான நிலை. இதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 2019இல் அசாமின் தேசிய குடியுரிமை பதிவேடு இறுதியாக வருவதற்குமுன்னரே, இந்த இஸ்லாமியர் தவிர்த்த அயலவர்களுக்கு இங்கே குடியுரிமை என்ற சட்டத் திருத்தம் சென்ற நாடாளுமன்றத்திலேயே கொண்டு வரப்பட்டு, மாநிலங்களவை எண்ணிக்கைச் சிக்கலால் கைவிடப்பட்டது. அதன்பிறகு இறுதிப் பட்டியலில் 19 லட்சம் பேர் விடுபட்டனர். அவர்களில் 75% பேர் ‘இந்து’ என்ற அடையாளத்தினர். ஆனால் பாஜகவின் அக்கறை அவர்களின் நிராதரவான நிலைக்கு உதவுவது அல்ல, ஏற்கனவே தங்களது இந்துத்துவ மதவாதச் செயல் திட்டங்களான பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் அயோத்தி ராமன் கோவில், காஷ்மீருக்கான சிறப்பு சட்ட வடிவான 370ஐ நீக்குதல், இஸ்லாமியரின் முத்தலாக் முறையை சட்ட விரோதமாக்குவது ஆகியவை நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையில், கை வசம் இஸ்லாமியரைக் குறிவைத்து, அவர்களுக்கெதிரான அரசியலை கட்டமைக்க பெரிய திட்டங்கள் ஏதுமில்லை. பொது சிவில் சட்டம் ஒன்றுதான் உள்ளது. ஆனால் முத்தலாக் ஒழிப்புச் சட்டத்திற்குப் பிறகு பொது சிவில் சட்டம் வழியாக இஸ்லாமியரை பதற்றப்படுத்தும் சட்டவரையறைகள் அதில் இல்லை. எனவேதான் தேசிய குடியுரிமைப் பதிவேடு.
கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற இடியாப்பச் சிக்கல் தேசம், இறையாண்மை ஆகியவற்றிற்கும் பொருந்தும். தேசத்தை மக்கள்தான் உருவாக்கிக் கொண்டார்கள் எனும் போது தேசம் தன் ‘இறையாண்மையை’ மக்களிடமிருந்துதான் பெறுகிறது. எனவே மக்களே ‘இறையாண்மை’யின் மூலம். அதாவது மக்களின் ‘இறையாண்மையே’ தேசத்திற்கு பாய்கிறது என்பதுதான் பெரியார் சிந்தனைகளின் அடிப்படை. அதையே அவர் ‘சுயமரியாதை’ என்றார். ஆனால் இறையாண்மையை ஸ்வீகரித்துக்கொண்ட தேசம், அதன்வழியாகப் பெற்ற அதிகாரத்தின்மூலம் மீண்டும் மக்களுக்கு ‘குடியுரிமை’ எனும் தகுதிப்பாட்டை வழங்கி தனது இறையாண்மையை நிறுவிக் கொள்கிறது. இந்திய குடிமைச் சட்டம், 1955, ஐந்து வகையான குடியுரிமையை கொண்டுள்ளது. 1) இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான நாளில் இந்த நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்ந்தவர்களானாலும்.( நவம்பர், 26, 1946 ) இயல்பாக (ணீutஷீனீணீtவீநீ) குடிநபர் ஆனார்கள். இதன் பகுதியாக பாகிஸ்தானிலிருந்து குடிபெயர்ந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது. (அதில் மதம் பற்றிய குறிப்பு இல்லை) 2) பிறப்பால் இந்தியர். 1,) 1950 முதல் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை இந்தியாவில் பிறந்தவர்கள் எல்லாம் பிறப்பால் இந்தியர். 2) 1.1.1987 முதல் 3.12.2004 வரை யாராவது ஒரு பெற்றோர் இந்தியராக இருந்தால் பிறப்பால் இந்தியர் 3) 3.12.2004க்குப் பிறகு பிறப்பால் இந்தியராவதற்கு இரு பெற்றோரும் இந்தியர்களாக இருக்க வேண்டும் அல்லது ஒருவர் இந்தியராக இருந்தாலும் மற்றவர் அகதியாக சட்டத்திற்கு புறம்பாக வந்தவராக இருக்கக் கூடாது (இலங்கை அகதிகள் இந்த வகையில் வருவர். இந்தியப் பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்து குழந்தைகள் பெற்றால், குழந்தைகள் நாடற்றவர்களே. இதுபோல நாடற்றோர் பட்டியலில் சில நூறு பேர் இருப்பதாகத் தெரிகிறது). 2013 செப்டம்பரில் பம்பாய் நீதிமன்றம், பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், ஆதார் எண் ஆகியவை இருந்தாலும் இரு பெற்றோரும் இந்தியர்களாக இருந்தாக வேண்டுமென தீர்ப்பு வழங்கியுள்ளது. 4) பரம்பரை வழியான குடியுரிமை.. 26 ஜனவரி 1950 ற்கு பின் 10.12.1992 வரை இந்தியாவிற்கு வெளியே பிறந்தவர்களின் தந்தை இந்தியராக இருந்திருந்தால் அவர் பிறப்பால் இந்தியர். அதற்குப் பிறகு 3.12.2004 வரை பிறந்தவர்களின் பெற்றோர் அவர்களது பிறப்பின் போது இந்தியர்களாக இருந்தால் அவர்கள் பிறப்பால் இந்தியர். ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் பிறந்த நாட்டிலுள்ள இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்துகொண்டிருக்க வேண்டும். 5) பதிவினடிப்படையில் குடியுரிமை. . இதில் பலவிதமான விதிகள் உள்ளன. 6) குடிநபர் ஆக்கப்படுதல் (ஸீணீtuக்ஷீணீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ) இதில்தான், 2019 சட்டத் திருத்தம், வழியாக, 12 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருந்திருக்க வேண்டுமென்ற விதி தளர்த்தப்பட்டு, ஐந்து ஆண்டுகள் என்று குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த ஐந்து ஆண்டுகள் 2014 துவக்கம் என்பதுதான் மோடி வேலை. அதுபோக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷில் இருந்து ஒடுக்குதலுக்கு உள்ளாகிவரும் இஸ்லாமியர் அல்லாதவர்க்கு குடியுரிமை என்ற விபரீத விதி சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வளவு விரிவாக இந்தச் சட்ட விதிகளை எழுதியதற்குக் காரணம், இந்தியக் குடியுரிமைப் பதிவேடு நடைமுறைக்கு வந்தால் ஒவ்வொரு காலத்திலும் பிறந்தவர்களுக்கான விதிகள் எவ்வளவு சிடுக்கானவையாய் இருக்கிறது என்பதை உணர்த்தவே. அதிலும் பம்பாய் நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையிலான ஒன்றிய அரசின் அறிவிப்பு கவனத்திற்குரியது. அதாவது உங்கள் ஆதார், வருமான வரி அட்டை, ஓட்டுநர் உரிமம், குடும்ப பொது விநியோகத் திட்ட அட்டை என எதுவும் அதிகாரபூர்வமாக உங்களது குடியுரிமையை நிறுவும் ஆவணம் இல்லை. அதுவே அப்படியானால், இந்த விதிகளின் எந்த வலையில் ஒருவர் சிக்குவார் என்பதை யார் சொல்ல முடியும். இதில் நீதிமன்றங்களின் அதிரடிகளை குறைத்து மதிப்பிட முடியாது. குடியுரிமை குறித்த இத்தனை சிடுக்குகளை ஓரளவில் உருவாக்கியதில் அவர்கள் பங்கு பெரிது. இறுதியாக 2003 லேயே குடியுரிமைப் பதிவேட்டிற்கு அச்சாரம் போட்டதும், 2013இல் அசாம் குடியுரிமை பதிவேட்டிற்கு ஆணையிட்டதும் நீதிமன்றங்களே. இந்த நீதிமன்றங்கள் தங்கள் அதிகாரத்தை நிறுவுவதான போக்கில் காணத் தவறுவது இந்திய அரசின் ஆவணப்படுத்தல் முறைகளை. பிறப்புச் சான்றிதழ் மீது இவ்வளவு அழுத்தம் கொடுக்கும் நீதிமன்றமும் அரசும் அப்படியொரு பதிவேடு 1950 முதல் 1990 கள் வரை எந்த அளவிலிருந்தது எனப் பார்க்க வேண்டாமா ? பிறப்பு பதிவேடு இருந்ததாகச் சொல்லப்படும் காலத்திலேயே, இன்று அறுபது வயதையொட்டியவர்கள் பலரின் பிறப்பு பதிவாகாமல் போனதுதான் யதார்த்தம். பிறந்த தேதிகளே தெரியாதவர்கள் அதிகம். இடியாப்பச் சிக்கல் இங்கு மட்டுமில்லை, இவர்களின் பெற்றோர் / பாட்டன்/ பாட்டி பற்றிய தகவல்கள் கேட்டால் எங்கே போவது. அவற்றைப் பதிவுசெய்த ஆவணங்கள் இங்கே இருந்ததா? இருந்திருந்தாலும் அவை இப்போது தேடிக் காணும்வகையில் இருக்குமா?
சொத்தும் பாரம்பர்யமும்
ஒருவர் தனது குடியுரிமையை நிறுவ மூதாதையரின் சொத்து ஆவணங்களை கொடுக்க வேண்டுமென்பது எவ்வளவு பெரிய அராஜகம். இந்த நாட்டில் இன்றைய தேதியில் எந்தவிதமான சொத்துரிமையும் அற்றவர்கள் நூறு கோடிப் பேருக்கு மேல் இருக்கும் நாட்டில் மூதாதையர் சொத்து ஆவணத்திற்கு எங்கே போவது. பாரம்பர்யம் (லிணிநிகிசிசீ) என்பதே ஒருவகையில் வெகுமக்கள் திரளுக்கெதிரான சனாதனக் குரல்தானே.இந்தியாவின் லிமீரீணீநீஹ் ஐ வேத ஆரிய பார்ப்பனீயமாக்கிய இந்துத்துவம், பாரம்பர்யம் என்பதை குடியுரிமையை நிறுவும் கூறாகக் கொண்டதே அயோக்கியத்தனம். பிறந்த நாளிலிருந்து எழுபது ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கும் குடிநபர், ஆதாரங்கள் கொண்டு தன்னை நிறுவ வேண்டுமெனச் சொல்வதற்கு அவமானமாய் இல்லை. இந்துத்துவப் பெருமைமிகு நாட்டில் எந்தவிதமான ஆதாரங்களுமின்றி அந்த நாட்டின் மூத்த குடிமக்கள் இருக்கிறார்கள் என்பதற்காக யார் வெட்கப்பட வேண்டும். இந்த நாட்டை கலைத்துவிட்டு ஓடுங்கள். உங்கள் நாட்டின் பூர்வக் குடிமகன் / மகள் முறையான ஆவணமின்மையால் ‘நாடற்றவர்களாக’ சிறையிலடைக்கப்படும் நாளில், இந்தியாவும் கலைக்கப்படத்தானே வேண்டும். எந்தப் பெருமைமிகுநாடு தன் எளிய முதிய வயதினரை ‘அந்நியராக்கி’ பார்க்கத் துணியும். அவனிடமில்லாத ஆவணத்திற்கு அரசு பொறுப்பாளி இல்லையா ? தன் எழுபது வயது குடிநபரை, இந்தக் குடிமைச் சட்டமும், அதன்மூலமான அரசியலமைப்புச் சட்டமும் ஏற்றுக் கொண்ட நாளுக்கு முன்னரே இங்கே பிறந்து இருந்தவரை அநாதரவாக்கும் நாடு யாருக்கானது. அதிலும் குறி வைத்து, உங்கள் கேவலமான மதவாத அரசியல் வெறிக்காக ஒரு சிறுபான்மை இஸ்லாமியரை ‘நாடற்றவர்களாக்கி’, ‘உரிமையற்றவர்களாக்கும்’ தந்திரம்தான் நீங்கள் போற்றும் இந்துத்துவ தர்மமோ? இது ஆட்சியாளர்கள் செய்யத் தகுந்த செயல் இல்லை.
இன்னும் ஒன்று. இந்தியாவில் ஊடுருவியுள்ள அந்நியரை, இந்திய பாதுகாப்பிற்கு ஆபத்தானவர்களை அடையாளங்காண்பதுதான் நோக்கமென்றால், அதற்கு ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் போதாதா? இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் அத்தனை விதிகள், அவற்றின் அடிப்படையிலான நீதிமன்றத் தீர்ப்புகள், கடவுச் சீட்டு சட்டம் ( மிழிஞிமிகிழி றிகிஷிஷிறிளிஜி கிசிஜி ) போதாதா? இதுவரை அந்தச் சட்டங்களை வைத்து நடவடிக்கைகள் எடுக்கவில்லையா? இறுதியாக ழிகிஜிஹிஸிகிலிமிஷிகிஜிமிளிழி எனும் அகதிகளுக்கான குடியுரிமை வழங்கும் விதிகள் அவ்வளவு தெளிவாக இருக்க எதற்காகப் புதிய விதிகள்? காலவரையறையை ஐந்து ஆண்டுகள் என்று குறைக்கும் விதியை நாடு ஏற்கத்தானே செய்யும். மோடி அரசின் கயமை இப்போதுதான் வெளிவருகிறது. ஏற்கனவே இந்த இஸ்லாமியர் விரோத சட்டத் திருத்தம் கொண்டு வந்து அவர்களை பதற்றத்திற்குள்ளாக்கி, அவர்களில் சிலரை சிறையிலடைத்து இந்துத்துவ அரசியலின் அடுத்த வெறியாட்ட அரசியலுக்கு நகர்வதுதான் நோக்கம். அதற்காகவே நிதி ஒதுக்கீடு செய்து, தென்னிந்தியாவிலும் ஞிணிஜிணிழிஜிமிளிழி சிணிழிஜிணிஸிகளை உருவாக்கும் பணியை முடுக்கிவிட்டிருக்கிறது இந்தப் பயங்கரவாத அரசு.
இது பிரச்சினைக்குத் தீர்வா?
இது அசாம் உள்ளிட்ட அகதிகள் தொடர்பான பிரச்சினையை தீர்க்குமா? இல்லவே இல்லை. அசாமிலும், வடகிழக்கிலும் நடக்கும் எதிர்ப்புப் போராட்டமும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் நடக்கும் போராட்டங்களும் ஒன்றல்ல. அசாமும் வடகிழக்கும் இஸ்லாமியரை மட்டும் வெளியேறச் சொல்லவில்லை, இந்துக்களையுமே வெளியேற்றுவதற்கான குரலே அது. இது இன்று உருவானதில்லை. எழுபதுகளில் உருவானது. அசாமின் இன, மொழி அடையாள மீட்புப் போராட்டம். இங்குதான் அமித் ஷா தீயை அணைப்பதற்கு பதிலாக பெட்ரோல் ஊற்றியிருக்கிறார். இந்தச் சட்டத் திருத்தம் அடிப்படையிலான ஒரு சிறு அசைவுகூட வடகிழக்கை கொழுந்து விட்டு எரியச் செய்து விடும். இந்த ஆபத்தின் ஆழம் தெரியாமலா இந்த பயங்கரவாத அரசு இதைச் செய்கிறது. நாட்டில் கலவரமும், துப்பாக்கி சூடும், பிணங்களின் குவியலும் இருந்தால்தான் மோடி / அமித் ஷா ஆகியோர் மகிழ்ச்சியாய் இருப்பர். இன்று நேற்றா 2002 லேயே குஜராத்தில் பல ஆயிரம் இஸ்லாமியரை கொன்று குவித்தவர்கள்தானே இவர்கள்.,. இதுவரையான ஆறு ஆண்டுகால ஆட்சியில் இந்த அரசின் நேர்மறையான நடவடிக்கைகள் ஒன்றுகூட இல்லையென்பது காழ்ப்பில் கூறப்படுவதன்று. மோடி ஆதரவாளர்களாகத் துவங்கியவர்களே, அவரது பணமதிப்பிழப்பு, அவசர ஜிஎஸ்டி, பொருளாதார படுபாதாள வீழ்ச்சி ஆகியவற்றைக் கண்டு சுரத்திழந்தே காணப்பட்டனர். சென்ற நாடாளுமன்றத் தேர்தல் அபார வெற்றி எண்ணிக்கை அளவிற்கு வாக்குகளாக இல்லை. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் என்ற ஒற்றை துருப்புச்சீட்டை வைத்து பாதுகாப்பு, பாகிஸ்தான் என்ற பூச்சாண்டியைக் காட்டி தேர்தல் சீட்டாட்டத்தில் வென்று விட்டார்கள் இந்தப் போலிகள். மிரட்டலுக்கும், பணத்துக்கும் விலைபோனது இந்திய ஊடகங்கள். இவ்வளவு பெரிய பெரும்பான்மை பலத்தையும், மாநிலங்களவை பலவீனத்தை அஇஅதிமுக போன்ற கப்பம் கட்டும் அடிமைகளை வைத்து நாடாளுமன்றத்தில் இவர்கள் கொண்டு வந்துள்ள சட்டங்கள், சட்டத் திருத்தங்கள் என்றென்றைக்குமாக இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை அசைத்துவிட்டது. ஏற்கனவே பலவீனமான அரசியலமைப்புச் சட்டம் இவர்களிடம் சாய்ந்தேவிட்டது. ஒன்றொன்றாய் சாய்த்தவர்கள் அதன் வேரறுக்கும் வேலையில் இந்தக் குடியுரிமைச் சட்டத்தை உருவாக்கிவிட்டார்கள்.
இந்த உலகின் ஆட்சி அடிப்படைகள் வலதுசாரிப் போக்கில் இருப்பது இவர்களுக்கு சாதகமாகிப் போனது. எந்த தேசமும் தங்களது அரசியலமைப்பை மாற்றாமலே, வலதுசாரி சுதந்திரவாத நடவடிக்கைகளைத் தொடர முடிகிறது. சீனா கம்யூனிச நாடாகவே முதலீட்டிய வல்லரசாகிவிட்டது. அரசே முதலின்மூலம் ஆன நிலையை மார்க்சிய சிந்தனைகளே கட்டவிழ்க்க முடியாமல் திணறுகின்றன. ஆனால் உலகின் பெரும்பானமை வலதுசாரி போக்குகள் பொருளாதார நலன் கருதியவையாகவும் உள்ளன. ஆனால் இந்தப் போக்கில் இந்தியா மட்டுமே பொருளாதார படுபாதாள வீழ்ச்சியையும் கருதாமல் மத அடிப்படைவாதத்தை நோக்கி வெகுவேகமாக முன்னேறுகிறது. வெகு சீக்கிரம் உலகின் பேசு பொருளாகும் இந்துத்துவ அடிப்படைவாத நாடாகும் வாய்ப்பு பிரகாசமாய் இருக்கிறது. அதுவும் மோடியின் இந்த ஐந்து ஆண்டுகால ஆட்சிக்குள்ளாக நிகழ்த்தி விடவே இவ்வளவு அவசரம். இன்னொரு ஆப்கானிஸ்தானாகவோ, சிரியாவாகவோ ஆக்குவதற்கும் தயங்கமாட்டார்கள் மோடியும் அமித் ஷாவும். அவர்களது நோக்கம் வேதஆரிய இந்துத்துவ மேலாண்மை. அகண்ட பாரதக் கனவை மெய்ப்பிக்க முதல் நடவடிக்கை, அதன் குடிமக்களின் பெருந்தொகுதியை ‘நாடற்றவர்களாக்குவதுதான்’. உலகின் இரண்டாவது பெரு எண்ணிக்கையிலான இஸ்லாமியர் வாழும் நாட்டில் அவர்களை குடியுரிமையற்றவர்களாக்கும் செயல் இந்த இரட்டையருக்கு களிப்பூட்டும் நடவடிக்கை. அமித் ஷா ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்துக்கள் குடியுரிமை பெற எந்த ஆவணமும் தேவையில்லை. நான் இந்து என்று சொன்னால் போதும். இந்தியாவில் தன்னை இந்துவாக உணராதவரும் தன்னை இந்து என்று அறிவித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இஸ்லாமியர் நிலை? அதுதான் ஆர்.எஸ்.எஸ். ஏற்கனவே அறிவித்து விட்டதே, பாரதத்தில் / இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்களே. அப்படியானால் இஸ்லாமியர் தன்னை ‘இந்து’ என அறிவித்துவிட்டு குடியுரிமை பெற்றுக் கொள்ளலாம், இல்லையேல் ‘நாடற்றவராய்’ அலைவுறலாம். அதாவது, இந்திய அரசே நடத்தும் ‘கர்வாப்சி’. இதுதான் இறுதி நோக்கம்.
நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவை மறந்து குடியுரிமை குறித்த ஜீவாதாரப் பிரச்சினையைப் பேசிக் கொண்டிருக்கிறோம். நாடு நலிவுற்றது குறித்து கவலைகொண்ட மோடி ஆதரவாளர்கள், இடையில் ஏற்பட்ட விலகலிலிருந்து முற்றாக மீண்டு விட்டனர். இப்போது அவர்களும் தங்களது முகத்திரையை விலக்கி தங்கள் அசலான இந்துத்துவா ஆதரவை வெளிப்படையாகக் கொண்டாடத் துவங்கிவிட்டனர். ஒருநாளில் கருத்து மாறுபாடுகளோடும் கொண்டிருந்த மோடி ஆதரவாளர்களுடனான உறவு முற்றாக முறிந்துபோனது. பார்ப்பனரும் பார்ப்பனீயமும் வேறு என்ற நிதானப் பார்வைக்கு இனி வேலையில்லை. பார்ப்பனர் என்று இந்த நாளிலும் உணர்பவர் ஒரு போதும் சனாதனப் பிடியிலிருந்து விலக முடியாது. அவர்கள் பூசும் தத்துவ முலாம்கள் வெளிறி போய் பார்ப்பனீயம் பல்லிளிக்கிறது. அதாவது ஆறு ஆண்டு கால மோடி ஆட்சி இந்திய சமூகத்தில் மிக ஆழமான பிளவை உருவாக்கிவிட்டது. மதரீதியான பிளவு முழுமை பெற்று விட்டது. மோடி / அமித் ஷாவிற்கு வழங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். கட்டளை முற்றாக நிறைவேற்றப்பட்டுவிட்டது. அப்படியானால் இதுதான் இறுதியா?
இல்லை. அதுதான் இல்லை. அவர்களது சதிவேலையின் விளைவு அவர்களுக்கெதிரான தன்னெழுச்சியான போராட்டங்களின் வடிவில் அச்சுறுத்தியபடி எழுந்து நிற்கிறது. பாப்ரி மஸ்ஜித் துரோகம், காஷ்மீர் துரோகம், முத்தலாக் விவகாரமென அனைத்தையும் மௌனமாக கடந்த பொதுச் சமூகம் / சிவில் சமூகம் கிளர்ந்து எழுந்துவிட்டது. காவல்துறையின் குண்டாந்தடியை ஒரு சிறு பெண் தன் விரலால் எச்சரித்து நிற்கிறாள். அந்தக் குட்டிப் பெண் நமக்கான உத்வேகமாய் எழுந்து நிற்கிறாள். இதோ, இளம்பெண்கள் போராட்டப் படையினை வழிநடத்துகிறார்கள். ஒரு பெண் தெளிவான வார்த்தைகளில் பேசுகிறாள். இன்று இஸ்லாமியருக்கெதிரானது, நாளை மொழிக்கெதிரானதாக வரும், அதற்கடுத்த நாள் சாதிய மேலாதிக்கமாக வரும், அதற்கும் மறுநாள் இனக்குழு சமூகங்களின் அழித்தொழிப்பாக மாறும். இதோ அறிவுத் தெளிவு இளம் சமூகத்திடம். இந்துத்துவ வெறியர்கள் எவ்வளவு ஆழமான பிளவை உருவாக்க முனைந்தார்களோ அதைவிட ஆழமான மதநல்லுறவை சமூகநல்லிணக்கத்தை இங்கே வேறோடியிருந்த கலாச்சார பன்மைத்துவ மாண்பு போற்றும் வெகுமக்களே உருவாக்கி விட்டார்கள். இன, மொழி, கலாச்சார பன்மைத்துவம்கொண்ட நாட்டில் இஸ்லாமியச் சோதரர் தனித்துவிடப்பட மாட்டார்கள் என்பதை திட்டமிடப்படாத போராட்டங்கள் நிருபித்தபடி உள்ளன. இந்த இந்துத்துவ ‘ஒற்றை’களுக்கு ஒன்று தெரியாது, இந்து என்ற ஓற்றை அடையாளத்தில் நீர்த்துப் போகும் கலாச்சாரமல்ல இங்கு நெடுநாள் வாழ்ந்திருக்கும் கலாச்சாரம். அதிலும் இந்தத் திராவிடத் தமிழர் மண்ணில் இந்துத்துவ வெறியாட்டம் ஒருபோதும் அனுமதிக்கப்படாது. இப்போது தனித்துப்போனது வேத ஆரிய பார்ப்பனரும் பார்ப்பனீயமும்தான்.
அலைவுறும் மானுடம்
உகாண்டா இனவரைவியலாளர் மஹமுத் மம்தானி அவர்களின் நூலான ‘பாதிக்கப்பட்டவர்கள் கொலையாளிகளானபோது’ (கீபிணிழி க்ஷிமிசிஜிமிவிஷி ஙிணிசிளிவிணி ரிமிலிலிணிஸிஷி; 2001) நூலில், மிகச் சாதாரணமான, வழக்கமான அரசுசார்ந்த நடவடிக்கைகளையே / செயல்பாடுகளையே வளைத்து மிக மோசமான விளைவுகள் கொண்டதாக்க முடியும் என்கிறார். (இதோ அதற்கான நிரூபணமாகி நிற்கிறது மோடி அரசின் குடியுரிமை தொடர்பான நடவடிக்கைகள்). ஒரு தரப்பு இன்னொரு தரப்பின்மீது நடத்தும் கொடூரத் தாக்குதல்களின் நோக்கத்திற்காகப் பரிந்துபேசுபவர்கள், அதனை ஒரு விபரீதமான திசைதிருப்பல் அரசியல் நிலைப்பாட்டிலிருந்தே செய்வர் என்கிறார். இதேபோன்ற ஒன்றுதான் இன்று இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது என்கிறார் சஞ்சய் பார்போரா. காலனியம் இங்கு உருவாக்கிய விளைவுகள் குறித்த வரலாற்று வாசிப்பு, சில குறிப்பிட்ட, தேர்வு செய்யப்பட்ட வாசிப்புகள்வழியாகவே நடக்கின்றன. இந்த மனச்சாய்வு சார்ந்த வாசிப்பின்வழியாக வந்தடையும் கருத்துகளும், அரசியல் நிலைப்பாடுகளும் ஒருபக்கச் சார்பு கொண்டவையாகின்றன. இதன் விளைவாக, சில வரலாறுகள் முன்னுரிமை பெறுவதும், சில வரலாறுகள் புறந்தள்ளப்படுவதுமான போக்கு நிகழ்கிறது என்கிறார். இந்திய கலாச்சார மரபின் பன்மைத்துவத்தை மறுத்து அதை வேத ஆரிய பார்ப்பன இந்துத்துவ பண்பாடாக மாற்றியது, இந்தவகையான நடவடிக்கைதானே. இந்து எனும் ஒற்றை அடையாளத்தை அரசின் சட்டங்களின்மூலம் இஸ்லாமியர், கிறித்துவர் போன்ற சிறுபான்மையினர் அல்லாத அனைத்துக் குடிநபர்கள்மீதும் திணித்தது முதல் நகர்வு. அது ஒருவேளை தவிர்க்கப்பட்டிருந்தால் இந்தியர்களின் மதங்களின் பட்டியல் பௌத்தம், சமணம், வேத ஆரிய சைவம், வைணவம், தமிழ்ச் சைவம், தமிழர் சன்மார்க்கம், பலி தெய்வ / குல தெய்வ வழிபாடு செய்வோர் என்றுதானே நீண்டிருக்கும்.
இவ்வளவு வேதனைகளுக்கும் மையமானது மனிதர்களின் இடப்பெயர்வுகளும் வாழ்விட மாற்றங்களுமே. ஆனால் மனிதசமூகங்கள் / இனக்குழுக்கள் இடம் பெயர்வது எப்போதும் தங்களது தேர்வாக மட்டும் அல்ல, மாறாக, நிலவியல் நெருக்கடி அல்லது அரசியல் நெருக்கடிகளாலும் இடப்பெயர்வும் நிகழ்கிறது என்பதை நினைவில் கொள்தல் வேண்டும். பல்லாயிரமாண்டுகளாக மனித சமூகம் இந்த பூமிப்பந்தின் வெளியெங்கும் அலைவுற்றபடியே இருப்பதுதான் மனித நாகரிகத்தின் வரலாறு. அதேபோல் வரலாற்றின் பக்கங்களில் அடையாளம் சார்ந்த முரண்களிலான மோதல்கள் நிறைந்தே காணப்படுகின்றன. ஐரிஷ் கவிஞர் சீமஸ் ஹீனி, தனது நோபல் ஏற்புரையில் கூறியது இங்கு கவனத்திற்குரியது. ‘வன்முறை நிகழ்வுகளைத் தூண்டும் காரணிகள் நிறைய உள்ளது. ஆனால் பிரதேசம் எதுவானாலும், காரணங்கள் என்னவாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் முரண்களின் களமாவது வந்தேறிகள் / மண்ணின் மைந்தர்கள்; குடியேறியவர்கள் / பூர்வகுடிகள்; குடிநபர் / அந்நியர்; நாட்டினர் / அயலவர்கள் என்ற முரண்களே.’ இந்தவிதமான எதிர்மறைகளின் செயல்களம் இன்னும் மோசமான பிளவுகளை உருவாக்கும் மதவாதம் சார்ந்ததாக ஆகும் போது ஹிட்லரின் நாஜி ஜெர்மனியும், தடுப்பு முகாம்களும் ( சிஷீஸீநீமீஸீtக்ஷீணீtவீஷீஸீ நீணீனீஜீs ) உயிரோடு மனிதர்களை எரித்த கேஸ் சேம்பர்களின் நினைவுகள் தவிர்க்கமுடியாமல் நம்மை ஆக்கிரமிக்கவே செய்யும். இந்தப் போராட்டக் களம் தொடர்பான மோடியின் உரைகளின் ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே அட்சரம் பிசகாமல் ஹிட்லரின் சொற்களாகவே இருப்பது நிச்சயமாக சந்தர்ப்பவசமானது இல்லை.