2019  பாராளுமன்றத் தேர்தலுக்கான பரபரப்புகள் ஏற்கனவே களை கட்டிவிட்டன. இந்திய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை சூடுபிடித்துவிட்டது. இந்திய அளவிலான ஆளும் சங்பரிவார் பாஜக அரசிற்கெதிரான மாபெரும் கூட்டணி அமைக்கும் முயற்சி பெரிய அளவில் வெற்றியடையவில்லை. அதாவது பாஜகவிற்கு மாற்றான கூட்டணியை, ஒற்றைக் கூட்டணியை காங்கிரஸ் தலைமையில் உருவாக்க இயலவில்லை. 1980களிலும், 1990களிலும் சாத்தியமான இந்திய அளவிலான மெகா கூட்டணி இப்போது ஏன் வாய்ப்பில்லை? அதைவிடக் கூடுதலாக 90களின் ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்றிய மூன்றாவது அணி வாய்ப்பும் அற்றுப் போனது. தேசியக் கட்சிகளாகக் கருதப்படுவையும் தமது அணி சேர்க்கையை உறுதி செய்வது என்பது அநேகமாக மாநில அளவில் மட்டுமே சாத்தியம் என்பதாகிவிட்டது. மற்றபடி பாஜக தலைமையிலான அணியும், காங்கிரஸ் தலைமையிலான அணியும் சில பிரதேசங்களில், அதன் அரசியல் கள தட்பவெட்ப நிலைக்குத்தக மட்டுமே நடந்துள்ளது. இதற்கான காரணமென்ன என்பதுகுறித்த வாசிப்பு அரசியல் கட்சிகள் ( தேசிய / பிரதேச / மாநில ) , அவற்றின் வளர்ச்சி, வீழ்ச்சி, கூட்டணிகள் கட்டப்படும் விதம்பற்றிய அறிதலை சாத்தியமாக்கும்.

முதலில் தேசியக்கட்சிகள் என்பனவற்றைப் பற்றிப் பார்ப்போம். இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் ஒன்றுமட்டுமே இந்திய அளவிலான பரந்துபட்ட இருப்பு கொண்ட கட்சியாக 1980களின் இறுதிவரை இருந்தது. அதற்குப் பின்னரான அதன் தேய்முகம் தொடர்கதையாகிவிட்டது. அந்தப் போக்கில் அக்கட்சி சமீபத்திய மாநிலத் தேர்தலில் மேகாலயா போன்ற அதன் ஆக வலுவான எஃகு கோட்டையை இழந்தது. பாரதீய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை அது ஒருபோதும் நாடு முழுதும் இருப்பு கொண்ட கட்சியல்ல. அதன் வலுவான இருப்பு ஐந்து சில்லரை இந்தி மாநிலங்களிலும், குஜராத், மகராஷ்ட்ரா போன்ற மாநிலங்களோடு முடிவுறுவது.எனவே ஏறத்தாழ பத்திற்கும் மேலான ஆண்டுகால ஒன்றிய ஆட்சி அதிகாரத்தோடும் அந்தப் பெரும்பான்மை “இந்து’’ என்ற மதவாத அடையாளக்கட்சி தனது ‘தேசியக்கட்சி’ மதிப்பைப் பெற்று விடவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த 2014-2019 கால மோடியின் பெரும்பான்மை ஆட்சி அதன்பாரம்பர்யமான கூட்டாளிகளையும் எதிரிகளாக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தல் அனுக்கத்தில் மராட்டியத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் பாஜக-சிவசேனா கூட்டணி, அதன் ‘பொத்தலாகிப் போன’ உறவை அடையாளப்படுத்துகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் உருவாகி இருக்கும் பாஜக – அஇஅதிமுக – பாமக கூட்டணி பாஜகவின் ‘மிரட்டல் + கொடை’ கூட்டணி என்பதுதான் அவலம்( இதுபற்றிப் பின்னர் விரிவாகப் பேசலாம்).

தேசியக்கட்சிகளின் பட்டியலில் அடுத்து வருபவை கம்யூனிஸ்ட் கட்சிகள். அவற்றின் இருப்பு இந்திய அளவிலானது என்றாலும், அவற்றின் துலக்கமான இருப்பு காணப்படுவதில்லை. அதிலும் சிபிஎம் கட்சியைப் பொருத்தவரை அது ஆட்சியில் இருக்கும் கேரளத்தையும், மேற்கு வங்கம், திரிபுரா தாண்டி தெளிவாக இல்லை. அதிலும் மேற்கு வங்காள மற்றும் திரிபுரா ஆட்சி அதிகார இழப்பிற்குப் பிறகு, அக்கட்சியின் இருப்பு ஒரு அடையாள ரீதியானதாகவும், அதன் ஆதரவுவெளிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் விரவியும் இருக்கிறது என்பதே உண்மை. அடுத்த நிலையில் தங்களைத் தேசியக் கட்சிகளாகக் கருதும் சிலகட்சிகளான பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி போன்றவை அதன் ஆதரவுதளம் (வேறென்ன சாதித்தளம்தான்) இந்தி பேசும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் கடந்து ஒன்றிரண்டு மாநிலங்களிலும் இருப்பது கொண்டு அப்படித் தம்மை அழைத்துக் கொள்பவை.

எனவே ஆரம்பகால நீண்ட காங்கிரஸ் ஆட்சியும், சமீபத்திய மோடி பாஜக அரசின் ஆட்சியின் அலங்கோலங்களும், தேசியக்கட்சிகளை ஏற்காத போக்கை உருவாக்கி விட்டிருக்கிறது. அதிகாரத்தை தமதாக்கி மையத்தில் குவிக்கும் அவற்றின் போக்கு தீவிரமடையத் துவங்கியது மாநிலக் கட்சிகளின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது என்பதே உண்மை. இன்றைய தேதியில் பெரும்பான்மை மாநிலங்களின் மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் அதிருப்தியாளர்களின் தலையிலானதாகவோ அல்லது ஒருநாளைய “ ஜனதா கட்சி” யில் இணைந்து பிரிந்து தனி அவதாரம் கண்ட கட்சிகளாக இருப்பதே கண்கூடு. உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாடி, பிகாரின் ஜனதாதள் (யு), ராஷ்ட்ரிய லோக்தள், ஒரிசாவின் பிஜு ஜனதா, கர்நாடகத்தின் ஜனதாதள் (எஸ்) என நீளும் அப்பட்டியல் அது. இதற்கு இணையானதுதான் காங்கிரஸ் சிதைவுகள். மகாராஷ்ட்ராவின் சரத் பவார் துவங்கி, மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி, தெலுங்கானா சந்திரசேகர ராவ், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என நீளும்.இதில் வேடிக்கை என்னவெனில் இந்திரா அம்மையாரின் அவசரநிலைக்கால ஜனநாயக விரோத நடவடிக்கைகளால்,  ஜெயப்பிரகாஷ் நாராயண் முன்னெடுப்பில் உருவான “ஜனதா கட்சி’’ எனும் கதம்பக்கட்சியின் அங்கமானதன் மூலம் ஜனசங்கம் எனும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல்கட்சி மக்கள் அங்கீகாரம் பெற்ற பொது நீரோட்டத்தில் இணைந்ததுதான். ஜனதா எனும் கூட்டுக்கட்சி தாய்க்கட்சிகளாக சிதறியபோது, தங்களை மீண்டும் ஜனசங்கம் என்றழைத்துக் கொள்ளாமல் ‘‘பாரதீய ஜனதா கட்சி’’ என ஜனதா கட்சியின் நீட்சியாக தங்களை மாற்றி சாமர்த்தியம் புரிந்தனர் அந்த இந்துத்துவா சனாதனிகள்.

இந்திய அளவில் மிகச் சிறந்த தேர்தலுக்கு முன்னரான தேசிய அளவிலான கூட்டணியை இரண்டாவது முறையாக உருவாக்கியவர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களே. அதிலும் அந்தக் கூட்டணி ஜனதா போல இந்திராவையும், காங்கிரஸ் எதேச்சதிகாரத்தையும் ஒழிக்க வேண்டுமென்ற ஒற்றைக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவானது அல்ல. மாறாக, அதுதான் இந்தியாவில் முதன் முதலில் உருவான மூன்றாவது அணி. அதன் அலகுகள் மிக நுட்பமான கூறுகளைக் கொண்டிருந்தன. ஆம், அது மாநில உரிமைகளுக்கான அணி. ஒற்றை மையத்தை உருவாக்கும் தேசியவாதத்திற்கு எதிரான கூட்டணி. இவையெல்லாவற்றையும் விட அதுதான் இந்தியாவில் சாத்தியமான ஒரே சமூகநீதிக் கூட்டணி. மரியாதைக்குரிய வி.பி.சிங் அவர்களைப் பிரதமராக்கி, இந்திய வரலாற்றின் சமுகநீதி வெற்றியை நிறுவிய மண்டல் அறிக்கை ஏற்பு எனும் சாதனையை நிகழ்த்தி, ஒருமுறை சனாதனிகளைத் தெருவில் இறங்கிக் கதற வைத்த அணி. அதற்குப் பின்னரான 90களின் மூன்றாவது அணிகள் பலவீனமாக காரணமானது காங்கிரஸ் கட்சியே. தன்னை வலுவாக்கிக் கொள்வதாக எண்ணி, தாங்களும் ஆதரிக்க நேர்ந்த ஆட்சிகளைக் கலைத்து விளையாடியது காங்கிரஸ். இந்த ரீதியான காங்கிரஸ் நகர்வில் மதவாத எதிர்ப்புக் கட்சிகளும், மாநில உரிமைக்கான கட்சிகளும் வலுவிழக்கச் செய்யப்பட்டன. குறிப்பாக, இந்தவிதமான மூன்றாவது அணி மாதிரியை வெற்றிகரமாக இயங்கத் துணை நின்ற திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளை நலிவுறச் செய்யும் முயற்சியில் இறங்கியது காங்கிரஸ். விளைவு, தானும் பலமடையாது, இந்துத்துவ மதவாதக் கட்சியான பாரதீய ஜனதாவை ஆட்சியில் அமர்த்தி முடித்தது.