ஜெப்ரி அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த தேயிலைத் தோட்டத்தின் மலைக்குப் போவதற்கு முன்பு அடிவாரத்தில், மூட்டைப் பூச்சிகள் தலையணையில் ஊர்கிற மட்டரகமான விடுதியில் அறை எடுத்துத் தங்கினோம். அந்த அறை அப்போதைய அவனைப் போலவே இருந்தது. பெரியகுளம் தோட்டப் பண்ணையில், என்னுடைய கட்டுமானத் திட்டத்தில் நடுவதற்காகப் பழச் செடிகள் வாங்குவதற்காக ஜெப்ரியை அழைத்துக் கொண்டு போனேன். எனக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவனுக்கு எப்படி இதுபற்றி எல்லாம் தெரிந்திருக்கிறது என முதலிலேயே எனக்கு யோசனை வந்தது. அவன் கல்லூரியில் எனக்குத் தெரிந்து ’எகனாமிக்ஸோ’, ’ஹிஸ்டிரியோ’ எடுத்துப் படித்ததாகத்தான் நினைவு. ஆனால் தோட்டக் கலைத் துறையில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, தேயிலை எஸ்டேட்டில் எவ்வாறு பணிக்கு நுழைந்தான் என்பதில் இன்றளவும் எனக்கு ஆச்சரியம்தான்.
மதியம் வாக்கிலேயே பெரியகுளத்தில் எங்களது பணிகள் முடிந்து விட்டன. நான் செய்ததுதான் வேண்டாத வேலை. கழுதைக்கு வாக்கப்பட்டு விட்டுக் குத்துதே குடையுதே என்று சொல்ல முடியுமா? கொஞ்சமாய்க் குடித்து விட்டு மலையேறினால் நன்றாக இருக்குமென அவனைக் குடிக்க அழைத்துப் போனேன். கேரள எல்லையிலுள்ள, வாழைமரங்கள் வாசலில் காவல் காக்கிற வீடுகளைக் கடந்து சிறுகிராமத்துச் சாலையைத் தாண்டிச் சென்றால், மண்குடிசை ஒன்றிற்குப் பக்கத்தில் மதுபானக் கடை. அதை அவசர அவசரமாக எடுத்துக் கட்டி இருந்தார்கள் என்பது பாத்திர மாத்திரத்திலேயே தெரிந்தது. வெள்ளைச் சுவற்றில் ஊதா நிறம் திட்டுத் திட்டாய் பொறுப்பின்மையோடு வழிந்திருந்தது. சுவற்றிற்கு உஜாலா சொட்டுநீலம் போடுவார்களா என்ன? உச்சியில் சாந்து நிறம்பிடிக்காத செங்கல் ஒன்று எட்டிப் பார்த்தது. ஆனால் கதவை மட்டும் முதல் தர இரும்புக் கம்பியால் போட்டிருந்தார்கள். யானையே வந்து முட்டினால்கூட கதவை உடைக்க முடியாது.
மதுபானத்தை வாங்கிக் கொண்டு வந்து, குடிக்க இடம் தேடுகையில், அந்த மண்குடிசையின் பின்புறம் அமர்ந்து ஒரு தாயும் மகளும் முட்டை பொரித்துக் கொண்டிருந்த காட்சி தெரிந்தது. அந்தப் பெண்ணிற்கு பதினான்கு வயது இருக்கலாம். ஆனால் நறுங்கினாற்போல சிறுமியாகத் தெரிந்தாள். முதல்பார்வையை மீறி முகத்தில் வயதின் முதிர்ச்சி பட்டுப் பரவியிருக்கவே செய்தது. ” ஒக்காருங்க சார். உங்க ஊர் மாதிரி டிசைனா இருக்காது. பொரி இருக்கு. முட்டை பொறிச்சுத் தர்றேன். இங்க முன்ன கடை இருந்துச்சு. ஆனா கட்டுப்படியாகலைன்னு எடுத்து நடத்தினவங்க மூடிட்டாங்க. கொஞ்சம் காத்திருந்தா அதோ அந்தா இருக்கு என் வீடு. கொஞ்சம் சிக்கன் கூட பொரிச்சுத் தர்றேன்” என்றார் அந்த முதிய பெண்.
பொரியோடு முடித்துவிட்டுப் போய்விடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் ஜெப்ரி அதற்கு அடுத்து அங்கே செய்ததை எல்லாம் எந்தக் கணக்கில் சேர்க்கவெனத் தெரியவில்லை. மேலும் மேலும் பாட்டில்களை வாங்கி வந்தபடியே இருந்த அவன், என் இருப்பை அங்கே ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அந்தக் கடை நடத்திய குடும்பத்தோடு இன்னொரு உறுப்பினனாய் ஐக்கியம் ஆகி விட்டான். எங்களை மாதிரியே குடிக்க வந்த ஆட்களுக்கு அந்த அம்மாள் தயார் செய்துதந்த பொரியலை, பணியாளனைப் போல இவன் எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தான்.
பின்பு குதித்துக் குதித்து ஓடிப் போய் அவர்கள் இருவரும் குத்த வைத்து அமர்ந்திருந்த அடுப்பிற்குப் பக்கத்தில் இவனும் அமர்ந்து கொண்டான், ஏதோ ஐந்து வயதுப் பையனைப் போல. தன்னியல்பை மீறிச் சளசளவென அவர்களிடம் பேசிக் கொண்டே இருந்தான். அவர்களுமே அவனுடைய இருப்பை அச்சமாகப் பார்க்கவில்லை. “வெள்ளந்தியா இருக்கற மனுஷன். விட்டிருங்க. மனசில ஏதோ பாரம் போல இருக்கு. இந்த விலங்கு மனுஷங்களை கடிச்சு வைக்காது” என்றாள் அந்த முதியவள். “நம்ம தாத்தா இருக்காருல்ல. அவரு அடிமுறை ஆசான். ஒரு காலத்தில பெரிய தோட்டம் தொறவுன்னு இருந்தவரு. அவருதான் முதல்ல என் கைப்பிடிச்சு அழைச்சுட்டு போயி செடிக ஒவ்வொண்ணையா காட்டித் தந்தாரு. இப்ப எனக்கு இந்த பூமியில இருக்க பாதி செடிக பேரும் தெரியும். ஒவ்வொண்ணோட மணமும் எனக்கு தனிச்சுத் தெரியும். என்ன நான் எங்க தாத்தா கூடயே இருந்திருக்கணும். அவர் இல்லாத அருமை இப்பத்தான் எனக்கு தெரியுது” என அந்தப் பெண்ணிடம் அவன் ஏதோ சொந்தக் குடும்பத்தில் சொல்வதைப் போலவொரு பாவனையில் முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு கொஞ்சம் அடங்கிய குரலில் சொன்னான். அவனுக்கு எப்படி தோட்டக்கலைத் துறையில் ஆர்வம் வந்தது என்பதை அந்த நேரத்தில்தான் அறிந்து கொண்டேன்.
வேப்பமரத்தில் வழிகிற பிசினைப் போல அவன் அந்தக் குடும்பத்தோடு ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனை இப்போதைக்கு அதில் இருந்து சுரண்டி எடுக்க முடியாது எனத் தோன்றியது. போகிற மட்டும் போகட்டும் என அவனின் விநோதங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த இடத்தில் குடித்த மற்றவர்களுக்கு எந்தத் துயரையும் அவன் அளிக்கவில்லை என்பதும் விட்டுப்பிடிக்க ஒரு காரணம். கோமாளியைப் போல அந்தக் குடிமேடையில் அவனை முன்வைத்ததைத்தான் என்னால் தாங்க முடியவில்லை. ஒருகாலத்தில் அவன் எல்லோருக்கும் நாயகனாக இருந்தவன் என்பது அந்த இடத்தில் முட்டைப் பொரியல் மணமாய் எழுந்தது. துயர நாடகம் ஒன்று நடப்பதைப் போலப் புகைமூட்டம் அங்கே சூழ்ந்தது.
ஒருகட்டத்தில் அமர்ந்த நிலையிலேயே போதையின் உச்சத்தில் ஜெப்ரியின் தலை தொங்கி, அவனது கடைவாயில் எச்சில் வழிந்தது. அங்கே இருந்தவர்களின் தயவோடு அவனைத் தூக்கி காரில் வைத்துக் கொண்டு அந்த விடுதிக்கு வந்தேன். அழைத்து வருகையில் திமிறிக் கொண்டுதான் நடந்து வந்தான். “எங்க வீட்டில இருந்து எதுக்கு என்னை கூப்டு வர்ற” என்பதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தான்.
“டேய், உன் வீடு அது இல்லடா தாயோளி. நச்சு எடுத்திருவேன். ஒழுங்கா கிட” என அவனை ஒருதடவை அதட்டவும் செய்தேன். மறுநாள் காலையில் அவனுக்கு அது நினைவிலேயே இருக்காது என்கிற எண்ணமும் ஆசுவாசமாக இருந்தது. அறையில் இருந்த கட்டிலில் அவனை அமர வைத்தபோது, அப்படியே அதில் சரிந்து விழுந்து குப்புறத் திரும்பிப் படுத்தான். இனி போதை தெளிந்து அவனாக எழுந்து கொண்டால்தான் உண்டு. மதியத்தில் இருந்து குடித்ததால் எனக்குமே தலை வலித்தது. இரண்டு பழங்களை மட்டும் இரவு உணவாக உட்கொண்டு விட்டுச் சீக்கிரமே போய்ப் படுத்தேன். இரவு சிறுநீர் கழிக்க எழுந்த போது ஜெப்ரி அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து என்னுடைய செல்போனை நோண்டிக் கொண்டிருந்த காட்சி தெரிந்தது.
எழுந்து கண்களைக் கசக்கிப் பார்த்தபோது, “அவகூட சண்டையா? இவ்ளோ மெசேஜ் கோவமா அனுப்பிருக்கா? சண்டையெல்லாம் போடாத மக்கா. அவ ரெம்ப நல்ல பொண்ணு. எத்தனை பேரை மீறி உனக்குக் கிடைச்சிருக்கா” என்றான். அவன் சொன்னது அனுசரணையாகத்தான் முதலில் எனக்குத் தோன்றியது. பின்னர்தான் அவன் என் செல்போனை எனக்குத் தெரியாமல் நோண்டிக் கொண்டிருந்தது உறைத்தது.
“ங்கோத்தா அறிவு மயிரே கிடையாது. அடுத்தவன் போனை எடுத்து நோண்டக் கூடாதுன்னு தெரியலை” என்று சொல்லிவிட்டு எழுந்து போய் அதைப் பறித்தேன். “இரு இன்னும் ஒரே மெசேஜ். அதைப் படிச்சிட்டு தந்திடறேன்” எனச் சொன்ன போது அவனது கன்னத்தில் அறைந்தேன். அதிர்ச்சியாகி என்னையே வெறித்துப் பார்த்தான். அவனொரு மகா நடிகன்தான். நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் அவனது கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது. எழுந்து சட்டையைப் போட்ட அவன், பையில் பணம் இருக்கிறதா எனத் தடவி உறுதி செய்து கொண்டான். பிறகு கதவைச் சத்தமே இல்லாமல் மூடிவிட்டு வெளியே போனான். எந்த நேரத்தில் போனாலும் அங்கே சரக்கு கிடைக்கும் என்பது எனக்கும் தெரியும்.
சனியன் போய்த் தொலைந்தால் சரிதான் என நினைத்து செல்போனை தலையணைக்கு அடியில் வைத்து விட்டு உறங்கினேன். காலையில் எழுந்த போது ஜெப்ரியை அறையில் காணவில்லை. இனி அவன் முகத்தில் விழிக்கவே கூடாது என்கிற தீர்மானத்தில் மலைக்குப் போகிற திட்டத்தைக் கைவிட்டு என்னுடைய ஊருக்குக் கிளம்பினேன். ஆனால் வரும் வழியெல்லாம் அவனைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டு வந்தேன். வேண்டாமென்பதுதான் எப்போதுமே விடாப்பிடியாகத் தொற்றிக் கொண்டு வருகிறது உடன்.
என்னுடைய கல்லூரியில் நான் இளங்கலை படித்துக் கொண்டிருந்தபோது அங்கே அவன் முதுகலை படித்தான். இருவரும் ஒரே மாணவர் விடுதியில்தான் தங்கி இருந்தோம். அந்த மாணவர் விடுதியைப் பொறுத்தவரை வயதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. எல்லோரும் அவரவர் பெயரைச் சொல்லித்தான் அழைக்க வேண்டுமென விதியே இருந்தது. “ஊர் நாட்டான் மாதிரி அண்ணே சித்தப்பான்னு கூப்டுகிட்டு அலையக் கூடாது. ஒழுங்கா பேரைச் சொல்லிக் கூப்பிடு” என வயதில் மூத்த மாணவர்களே அழைத்துச் சொல்வார்கள்.
அந்த விடுதியில் ஒரு புகைமூட்டம் சூழ்ந்த அறையைப் போலவே இருந்தது ஜெப்ரியின் உடையது. யாருமே அவனது அறைப் பக்கம் போகவே மாட்டார்கள். குளியலறைக்குப் போகும் வழியில் கடைசியாய் இருந்தது அவனது அறை. எந்நேரமும் கஞ்சா மணம் அந்தக் கதவில் இருந்த அடுக்கடுக்கான செவ்வக ஓட்டைகள் வழியாகத் தவழ்ந்து வந்தபடியே இருக்கும். அந்த மணத்தைப் போல யாருடனும் ஒட்டாமல் அவன் தனித்தே அலைந்தான். “நல்ல பெரிய குடும்பம். அம்மாவும் அக்காவும் இருக்காங்க. இவன் யூஜி படிச்ச காலேஜ்லயும் இப்படித்தானாம். வீட்டில காசு குடுக்கறாங்க. ஆனா இவன் ஊர்பக்கமே போற மாதிரி தெரியலை” என்றான் அவனுடைய ஊர்க்காரன் ஒருத்தன்.
வார்டனின் அறையில் ஒருதடவை அவன் மணியார்டரில் வந்த பணத்தை எண்ணிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவனைப் பற்றி இதைத் தவிர எந்தக் கதைகளுமே யாருக்கும் தெரியவில்லை. அவன் யாரிடமாவது பேசுவானா? என்றெல்லாம் யோசித்து இருக்கிறேன். ஒருநாள் விடுதியில் இருந்த மீன் தொட்டிக்குப் பக்கத்தில் இருந்த போது பின்னால் வந்து நின்ற ஜெப்ரி, “வரணும்னா ரூமுக்கு வர வேண்டியதுதானே? நான் என்ன மிருகமா? அப்புரானிப்பா நானு” என்றான் சிரித்தபடி. அறையில் அவன் கட்டிலில் அமர்ந்து கஞ்சாவை அவன் சுருட்டும் விதத்தை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பேப்பரை நாக்கில் ராவி எச்சில் வைத்துத் தடவுகையில் மட்டும் கண்களை உயர்த்தி என்னைப் பார்த்தான். “சொல்றதுக்கு கதைன்னு பெரிசா எதுவும் இல்லை. அம்மாவும் அக்காவும் ஊர்ல இருக்காங்க. அக்கா குடும்பமும் ஒண்ணாத்தான் இருக்கு. எனக்குத் தங்கச்சி இருந்திருக்கலாம். வேற என்ன சொல்ல? சொன்னா நைட் பூராம் சொல்வேன். ஆனா நட்புக்கு இந்தக் கதையெல்லாம் தேவையே இல்லை. ஏன் உன் அக்காவை எனக்குப் பொண்ணு கட்டிக் குடுக்கப் போறியா என்ன?” என்றான்.
அதை அவன் சொன்ன விதம் மிக மரியாதையாக இருந்தது. அவனுக்கு நேர் எதிராகச் சளசளவெனப் பேசும் குணம் கொண்டவன் நான். “கொஞ்சமா பேசு. அப்பத்தான் வார்த்தைல கனம் ஏறும்” என்பான் அப்போதே. கஞ்சா புகைத்தால் இப்படிச் சில நேரங்களில் கருத்தாய்ச் சிலர் பேசுவதையும் கவனித்திருக்கிறேன். அதற்கப்புறம் அவன் குடும்பம் குறித்த கதைகள் எல்லாம் எனக்குமே ஒரு பொருட்டாகவும் இல்லை. அவனோடு ஒட்டி உறவாடுகிற உறவும் இல்லை கல்லூரியில் படிக்கையில். அவனிருந்த பதிமூன்றாம் எண் கொண்ட அறை ஒரு மர்மதேசத்தைப் போலவே மற்றவர்களால் கருதப்பட்டது. அந்தத் தேசத்தில் இருந்து கதவைத் திறந்து புகைத்தபடி வெளியே வரும் ஜெப்ரி, நெற்றியில் விழும் முடியைக் கையால் கோதிக் கொண்டு, ஒரு நாயகனைப் போலவே நடந்து போவான். என் காதலியோடு கல்லூரி வளாகத்தில் நடந்து போகிற போது, நின்று நிதானமாகக் குறுகுறுவென எங்களைப் பார்ப்பான். என் காதலிக்கு மட்டும் கைகாட்டி வணக்கம் சொல்லுவான். அவளுமே சிரித்துக் கொள்வாள் சிநேகமாக. இருவருக்கிடையிலான இந்தச் செய்கைகளுக்குள் நான் தலையிடவே மாட்டேன். தலையிடுவது பண்பாடாகவும் கருதப்படவில்லை அங்கே.
கல்லூரி முடித்து வேலைக்கு வந்தபிறகு யார் யார் எங்கே இருக்கிறார்கள் எனப் பேசிக் கொண்டிருந்தபோது, ஜெப்ரியின் பெயரும் வந்தது. அவன் மலையொன்றில் தேயிலைத் தோட்ட மேலாளராக இருக்கிறான் என நண்பன் ஒருத்தன் சொல்லி, அவனுடைய எண்ணையும் தந்தபோது, உடனே வாங்கிக் குறித்துக் கொண்டேன். ஏனெனில் அப்போதெல்லாம் மலையில் வசிப்பவர்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்களைப் பெரியவர்களாகக் கருதும் மனநிலையில் இருந்தேன். மலைப் பயணம் என்பது உல்லாசத்தோடு தொடர்புடையதாக மட்டுமே எனக்கு இருந்தது. நான்கு பேர் சேர்ந்து விட்டாலே ஏதோவொரு மலைக்குக் கிளம்பிப் போய் அறையெடுத்துக் குடித்துவிட்டுத் திரும்பி வருவோம். அதனாலேயே மலையில் விருந்தினர் விடுதி வைத்திருப்பவர்களை மரியாதையான தட்டில் வைத்திருந்தேன். அவர்களுடைய உறவைப் பேணுவதில் அக்கறை காட்டுவேன். மலையொன்றில் மீன் பொரித்துக் கொடுக்கிற ஒருத்தன்கூட அடிக்கடி எனக்கு அழைத்துப் பேசுவான். அந்தளவிற்கு மலையோடு ஒரு பந்தத்தைப் பேணுவேன்.
அப்படியொரு மலைப் பயணம் குறித்த கனவொன்றில் இருந்த போதுதான் ஜெப்ரி எண்ணில் இருந்து எனக்குத் தொலைபேசி வந்தது. ஆர்வமாய்ப் பாய்ந்து எடுத்தேன் அந்த அழைப்பை. அப்போது அவன் வண்டிப் பெரியாறுக்கு மேலே உள்ள எஸ்டேட் ஒன்றில் பணிபுரிவதாகச் சொன்னான். அதற்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்றுதான் உடனடியாக எனக்குக் கேட்கத் தோன்றியது. அப்போது நானுமே இரண்டு சுற்று மது அருந்தி இருந்ததால் உற்சாகமாகி, அடுத்த வாரமே கிளம்பி வருகிறேன் எனச் சொன்னேன்.
கல்லூரியில் படித்த போது இருந்த ஜெப்ரியா அது? ஆளே உருக்குலைந்து போய் இருந்தான். விடுதி அறைக்குள் ஒரு குண்டு மஞ்சள் பல்ப் வெளிச்சத்தில் அமர்ந்து அவன் கித்தார் வாசிக்கும் காட்சியை அரைக்கதவு திறந்து கிடந்த நிலையில் பார்த்து இருக்கிறேன். உற்சாகமான முகமாக மட்டுமே எனக்குள் பதிந்திருந்தான். மாறாக, அப்போது என் முன்னால் ஒரு குடுகுடுக் கிழவன் நின்றிருந்தான். தலைமுழுக்க வழுக்கை விழத் துவங்கி இருந்தது. மனசு சரியில்லாவிட்டால் முதலில் முடிதான் கொட்டுகிறது என்பதை என் அனுபவத்தில் ஏற்கனவே கண்டறிந்தும் இருந்தேன்.
அவனை அப்படி எனக்குப் பார்க்கச் சகிக்கவே இல்லை. கல்லூரியில் அவன் பெரும்பாலும் குடித்ததே இல்லை. எப்போதாவது பார்ட்டிகள் நடக்கையில், வற்புறுத்தலுக்காக மட்டும் கொஞ்சமாய் எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு தனியே நின்று கொண்டிருப்பான். “கஞ்சா தளர்த்தும் மக்கா. சரக்கு முறுக்கும். ரெண்டும் எதிரெதிரா ஓடுற கடிகார முள்ளுக. ரெண்டையும் போட்டுக் குழப்பக் கூடாது” என்றான் என்னிடம்.
முதல்முறை அவனுடைய அந்தப் பெரிய பங்களாவிற்குச் சென்றபோது அந்த வீட்டில் தரித்திரியம் ஒளிப்படலமாய்ச் சூழ்ந்திருந்ததைக் கண்டேன். அவனுடைய பணியாளர்களுக்கு அளவிற்கு மீறிச் செல்லம் கொடுத்துக் கெடுத்தும் வைத்திருப்பதைப் பார்த்தேன். “எஜமானுக்கு என்ன கேடோ? ரேஷன் அரிசிதான் சமைக்கணும்ங்கறாரு. அதிலதான் ஏதோ சத்தாம்” என்றான் சமையலாள். ஜெப்ரியிடம் இதைச் சொல்லிக் கேட்ட போது, “என்னோட அக்கா ஒருத்தியைப் பிடிச்சு கட்டி வச்சிருக்கா. என் பொண்ணுக்காகத்தான் அவளோட இருக்கேன். காசுகாசுன்னு குடும்பமே நச்சு எடுக்குது. குடும்பத்தில இருந்த அத்தனையையும் என் அம்மாவும் அக்காளும் ஆட்டமா ஆடித் தொலைச்சிட்டாளுக. அத்தான் வேற செத்திட்டாரு. இப்ப சமீபத்தில ஒரு பெருந்தொகையை அவளுகளுக்கு அழ வேண்டிருந்துச்சு. அத்தனையும் பொம்பளைக. ஒத்த ஆம்பளை நான். என்ன பண்றதுன்னு தெரியாம அலையறேன்” என்றான் சுற்றி வளைத்து.
அவனை அழைத்துக் கொண்டு போய் ஒரு மாதத்திற்குத் தேவைப்படுகிற மாதிரி மளிகைச் சாமான்களை வாங்கிக் கொண்டு வந்து போட்டேன். “சங்கோஜம்லாம் நான் படலை. நீ செய்யாம யாரு செய்வா?” என்றான் கையைப் பிடித்து. எனக்குமே அப்போது கொஞ்சம் நெகிழ்வான மனநிலை கூடிக் கண்களில் ஈரம் துளிர்த்தது. உடனடியாகவே பேச்சை மாற்றி ஆட்டுக்கறிக் கடைப் பக்கம் ஒதுங்கினோம். அன்றைக்கு அவன் மாடு கழனித் தண்ணீரைக் குடிப்பதைப் போல நான் கொண்டு போயிருந்த ரம்மை குடித்தான். மேலும் குடிக்குத் தொட்டுக் கொள்வதைப் போலக் கஞ்சாவையும் புகைத்தான். அவன் கல்லூரியில் படிக்கும்போது சொன்னதை அப்போது நினைவுபடுத்தினேன். “எல்லா ஒழுக்கத்தில இருந்தும் வெளிய வந்த பெறகு ஒரு விதியும் கிடையாது” என்றான். எனக்கு அவன் சொன்னதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. மிக மோசமாக அவன் குடியைக் கையாண்ட விதம் மட்டும் எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது. போதையில் மேலும் அவன் வயதானவனாகத் தெரிந்தான் என்பதும் துயரளித்தது.
தலையைத் தொங்கப் போட்டு அமர்ந்த அவன் திடீரென எழுந்து போய் ஒருமூலையில் கிடந்த கிதாரைக் கொண்டு வந்து மடியில் வைத்து வாசிக்க முற்பட்டான். வழுக்கைத் தலையோடு சோர்ந்து போன ஒருத்தன் கையில் இருந்த அது ரசிக்கவே இல்லை. பிறகு என்ன நினைத்தானோ திரும்பவும் கொண்டு போய் வைத்து விட்டு வந்தான். அவன் வசித்த அந்த நூறாண்டுப் பழமையான பிரிட்டிஷ் பங்களாவில் பழைய பியானோ ஒன்றும் இருந்தது. அதனருகே நின்று கொண்டு, “இப்ப இந்த பியானோவ நான் வாசிச்சா யானை சத்தம்தான் கேட்கும்” என்றான். பிறகு கையில் இருந்த மதுவை அப்படியே வாயில் கவிழ்த்து விட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த என்னருகே வந்து காலடியில் அமர்ந்தான்.
தலையைக் குனிந்தபடி அடக்க மாட்டாமல் அழத் துவங்கினான். “நான் சொல்றதைக் கவனமா கேளு மக்கா. எல்லாரும் என்னை லூசுங்கறாங்க. நைட் ஒரு கூப்பு யானை வருது. கூப்பு யானை தெரியும்ல. அந்தக் காலத்தில மரம் வெட்டற வேலைக்கு வந்தது. அந்த வேலை இப்பல்லாம் நடக்கறதில்லை. அப்படி கொண்டு வந்த யானை ஒண்ணைத் திரும்பவும் கூப்டு போகாம இங்கயே விட்டுட்டாங்க. அதால காட்டு யானைக கூடயும் சேர முடியலை. தனியா பசியில இந்தக் காட்டில அலையுது. என் வீட்டில கஞ்சி காய்ச்சறப்பல்லாம் வந்து நின்னு அழுகுது. சத்தியமா அது சத்தம் போட்டு அழுது. பத்து நாளைக்கு ஒருதடவை இங்க என் வாசல்ல நின்னு அழுகுது” என்றான் அவனும் மூச்சுமுட்ட அழுதபடியே.
உடனடியாக எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனக்கு யானைகளைப் பற்றிக் கொஞ்சம் தெரியும். என்னுடன் கல்லூரியில் படித்த மணிகண்டன் யானையைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்றில்தான் பணியில் இருக்கிறான். உடனடியாகவே அவனைத் தொலைபேசியில் அழைத்து ஜெப்ரி சொன்னதைச் சொன்னேன். “அவன் லூசு மாதிரி உளர்றான். கூப்பு வேலையெல்லாம் எயிட்டீஸ்லயே நிறுத்திட்டாங்க. யானைங்கறது பொன்னு மாதிரி. அப்டீல்லாம் விட்டுட்டு வர மாட்டாங்க. அந்தமான்ல இந்த மாதிரி கூப்புக்கு மரம் வெட்டற வேலை முன்ன நடந்துச்சு. அப்படி அங்க மட்டும் கொஞ்சம் யானைகளை விட்டுட்டு வந்தாங்க. அதுக அங்க கடல்ல நீச்சல் அடிச்சுட்டு சுத்தற காட்சிகள்லாம் இருக்கு. ஆனா தமிழ்நாட்டில அப்படி நடக்கவே இல்லை. இவன் கஞ்சாவை போட்டு உளர்றான்னா நீயும் போனைப் போட்டுருக்க. இருந்தாலும் அவண்ட்ட போனை குடு. ஒரு ஹாய் சொல்லிக்கிறேன்” என்றான்.
தொலைபேசியைப் பாய்ந்து வாங்கிய ஜெப்ரி, “சத்தியமா சொல்றேன். அது வாசல்ல வந்து நின்னு அழுகுது. அது கன்பார்மா அனாதையா விட்டுட்டுப் போன யானைதான். ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் அது தன்னைத் தெரிஞ்சுக்க போகுது. அன்னைக்கு இருக்கு உங்களுக்கெல்லாம் கதை. அயோக்கிய ராஸ்கல்” என்று சத்தம் போட்டுக் கத்தினான். தொலைபேசியைப் பிடுங்கிப் பார்த்த போது, ஏற்கனவே மணிகண்டன் இணைப்பைத் துண்டித்திருப்பது தெரிந்தது.
கிளம்புகையில் ஜெப்ரிக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தபோது வாங்கிக் கொள்ள மறுத்து விட்டான். என்னுடைய ஷூ ஒன்றைத் தந்த போது மறுக்காமல் வாங்கிக் கொண்டு, “கிழிஞ்சிருந்ததைப் பாத்தியோ?” என்றான். இன்னொரு முறை உறுதியாக வருவதாக வாக்களித்துக் கிளம்பியபோது, ஜெப்ரி ஒரு எண்ணை பேப்பரில் எழுதி என் கையில் கொடுத்து விட்டு, “எனக்கு ஏதாச்சும்னா இந்த நம்பர்க்கு கூப்பிடு. எனக்கு இப்பல்லாம் கொஞ்சம் பயமா இருக்கு” என்றான். யார் எண் அது என்று நான் கேட்கவே இல்லை. காரில் இருந்து இறங்கி அவனைக் கட்டியணைத்து விட்டுக் கிளம்பினேன். கார் மறைகிற வரை அவன் பின்னால் நின்று பார்த்துக் கொண்டு இருந்தான்.
நண்பர்களிடம் ஜெப்ரியைப் பார்க்கப் போனது, வந்தது பற்றிப் பெரிதாக எதையும் சொல்லிக் கொள்ளவில்லை. அவர்களாகப் போய்ப் பார்த்தால் தெரிந்து கொள்ளட்டும் என அமைதி காத்தேன். அப்புறம் அடிக்கடி எனக்கு ஜெப்ரி அழைத்துக் கொண்டே இருந்தான். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதையாவது பேசிவிட்டு அவனே தொலைபேசியை வைத்துவிடுவான். நிறைபோதையில் இருக்கிறான் என்பதை எளிதிலேயே ஊகித்து விடலாம். சிலநேரங்களில் அவனுடைய அழைப்பை எடுக்காமலும் இருப்பேன். அதைப் பற்றி எல்லாம் அவன் கவலை கொள்வதும் இல்லை.
ஒருநாள் வீட்டில் இருந்த போது அழைப்பு மணிச் சத்தத்திற்கு எழுந்து போனால், இரண்டு பேரோடு வந்து நின்றான் ஜெப்ரி. ஒரு வயதானவர், இன்னொருத்தன் சின்னப் பையன். சின்னப் பையன் கார் டிரைவர் என்று தெரிந்தது. கையோடு அப்சல்யூட் வோட்கா முழுப் பாட்டிலை கொண்டு வந்திருந்தான். கூடவே நடப்பது பறப்பது என ஏகப்பட்ட சமைத்த இறைச்சிப் பொட்டலங்கள். எல்லாம் சேர்ந்து இரண்டு கிலோ போல எடையிருக்கலாம். அப்படியெல்லாம் அவன் கலந்து கட்டி உண்பதைப் பார்த்ததே இல்லை. நாசுக்கைக் காலடியில் போட்டு, தரையில் அமர்ந்து கால்பரப்பி குடிக்கத் துவங்கினான். அவனது முகத்தில் தீவிரத்தன்மை ஏறி இருந்தது. வழக்கத்திற்கு மாறாகக் கொஞ்சம் கடுமையான குரலில் வேறு பேசிக் கொண்டிருந்தான். பக்கத்து வீடுகளுக்கு எல்லாம் கேட்கும்படி இருந்தது அவனுடைய சத்தம். உடனடியாக அவன் கிளம்பிப் போனால் போதும் என நினைத்தேன்.
உடன்வந்த பெரியவர் வழியில் பழக்கமானவர் என்பது தெரிந்தது. சிகரெட் சாம்பலை அவரது முடியே இல்லாத வழுக்கைத் தலையில் தட்டிய போது அவர் சிரித்தபடி புரோட்டா தின்று கொண்டிருந்தார். இது என்ன விதமான கூட்டு என எனக்குத் தோன்றியது. கூட வந்த டிரைவர், “அண்ணே என் காசை கொடுத்திட்டீங்கன்னா கிளம்பிருவேன்” என்றான் மெதுவாக. அவனைக் காலால் பலமாக எட்டி உதைத்தான் ஜெப்ரி. நிலைமையை உணர்ந்து அவனோடு நைச்சியமாகப் பேசிக் கையில் இருந்து மூவாயிரம் ரூபாயைக் கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தேன். ஜெப்ரியா இப்படி? எனக்கு மனம் கொள்ளாமல் நண்பர்களை அழைத்து இந்த விஷயத்தைச் சொன்னேன்.
அடுத்த ஒருவாரம் முழுக்க ஜெப்ரியைப் பற்றிய தகவல்கள் எல்லோருக்கும் வந்து கொண்டே இருந்தன, ஈக்கள் மொய்ப்பதைப் போல. என்னுடைய வீட்டில் இருந்து கிளம்பிப் போன அவன் இன்னொரு நண்பனின் பார்ட்டியில் நுழைந்து பாட்டிலைத் தூக்கி உடைத்து விட்டுக் கிளம்பி இருக்கிறான். இன்னொரு நண்பனை போலீஸ்காரர் ஒருத்தர் அழைத்து, “யாருங்க உங்க பிரெண்டா. பயங்கர குடி. போற வாறவங்ககிட்ட வம்பு. கேட்டா துப்பாக்கியை எடுத்து நீட்டறார். எதுக்கு வம்புன்னு அவர் பேசச் சொன்னார்னு உங்களை கூப்டறேன். உடனடியா பேசி அப்புறப்படுத்துங்க. இல்லாட்டி பெரிய கேஸாயிடும். எனக்கு ரிடையர்ட்மெண்ட் சீக்கிரமே. இந்த நேரத்தில சனியனைத் தூக்கி வேட்டிக்குள்ள விடவேண்டாம்னு பார்க்கறேன். இல்லாட்டி கோர்ட்டுக்கு அலையணும்” என்று சொல்லி இருக்கிறார். கஷ்டப்பட்டு அவனை அங்கிருந்து பேசி அப்புறப்படுத்தி விட்டுத்தான் என்னிடம் இந்தக் கதையைச் சொன்னான். துப்பாக்கியைப் பற்றி விசாரித்தபோது, அது காடுகளில் பயன்படுத்தப்படும் ஏர்கன் என்று தெரிந்தது.
இது நடந்து இரண்டு நாள் கழித்து வந்த இரவில், நண்பர்கள் குழுவில் ஒரு வீடியோ வந்து விழுந்தது. ஜெப்ரி ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றின் வரவேற்பறையில் பொருட்களை எல்லாம் போட்டு நொறுக்கும் காட்சி அது. காவல்துறையில் உயர் பொறுப்பில் பணியாற்றும் எங்களது நண்பன் ஒருத்தன் தலையிட்டு அவனை மீட்க முயலும் செய்தியும் கூடவே வந்தது. நட்சத்திர விடுதியில் போய் அவன் அழைத்துக் கொண்டு போன ஆட்களோடு அறை எடுத்திருக்கிறான் ஜெப்ரி. அறைக்கான பணத்தை முன்பே தந்து விட்டான். ஆனால் இரண்டு நாட்கள் தங்கியிருந்த வகையில் அவனோடு போயிருந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து ஐம்பதாயிரம் ரூபாய்க்குப் பக்கத்தில் குடித்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் அவனது ஆங்கிலத்தையும் அதை வெளிப்படுத்திய தோரணையையும் கண்டு நம்பிய நிர்வாகம், பின்னால் சுதாரித்துக் கொண்டு அவனை நெருக்கிய போது அங்கிருந்து தப்ப முயன்று சண்டை உருவாகி இருக்கிறது. ஜெப்ரியால் ஏகப்பட்ட சேதம் அந்த ஹோட்டலுக்கு.
பணிபுரிந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து அவனை அடித்து அம்மணமாக்கி, மூன்று மணிநேரம் வரை ஒரு காரினுள் அடைத்து வைத்து இருந்திருக்கிறார்கள். நண்பர்கள் எல்லோரும் போய் அந்தக் கோலத்தில்தான் அவனை மீட்டுக் கொண்டும் வந்தோம். யாரிடமும் பேசாமல் இருந்த அவன் சாந்தம் கூடித் தெரிந்தான் அப்போது. கிளம்புகையில் அவனிடம் சொல்லிக் கொண்டு எழுந்த போது, “என் வாழ்க்கையில இப்படி அடிவாங்குவேன்னு நெனைச்சதே இல்லை. வண்டிக்குள்ள வெயிலு. கடுமையான தாகம் எடுத்துச்சு. தண்ணி கேட்டேன். ஒண்ணுக்க குடிக்கிறியான்னு ஒருத்தன் கேட்டான். அவன் முகம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அவனைப் பழிவாங்காம விட மாட்டேன்” என்றான். பழி, பாவம் என்றெல்லாம் பேசுவது அவனது இயல்பே இல்லையே?
கொஞ்சகாலம் ஜெப்ரியைப் பற்றிய பேச்சு நண்பர்கள் குழாமில் இல்லாமல் இருந்தது. அப்புறம் எதிர்பார்க்காத நேரத்தில் பெய்கிற கோடை மழையைப் போல அவன் குறித்த செய்திகள் மறுபடியும் அடித்தூற்றத் துவங்கின. பௌர்ணமி போனால் அமாவாசைதானே? திடீர் திடீரென யாராவது அவன் அங்கே இருக்கிறான், இங்கே இருக்கிறான் என்றெல்லாம் செய்தி சொல்வார்கள். மனநலம் தப்பிப் போய் அவன் மருத்துவமனையில் இருந்ததாக ஒருத்தன் சொன்னான். கொத்துக் கொத்தாய் அவன் அதற்காக மாத்திரைகளைத் தின்பதாக இன்னொருத்தன் சொன்னான். பேருந்து நிலையம் ஒன்றில் அவன் டிரைவரிடம் அடி வாங்கும் காட்சி ஒன்றை அவனோடு போன நண்பன் ஒருத்தனே படம் பிடித்து ஒருநாள் குழுவில் போட்டிருந்தான். அந்தப் படத்தோடு “வாழ்க்கையில் அரிய பாடம்” என எழுதியும் போட்டிருந்தான். எதையாவது கற்றுத் தர முனையும் இந்தப் பாடத்துக்கும் ஒருவேலையும் இல்லை, இதைத் தவிர.
என் சொந்த ஊரில் இருந்த தோட்டத்திற்குப் போயிருந்தபோது, ஜெப்ரியின் எண்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. வேண்டா வெறுப்பாக எடுத்தபோது என்னைத் தேடி வந்து கொண்டிருப்பதாகச் சொன்னான். தவிர்க்கலாமா என நினைத்துக் கொண்டிருந்த போதே, “கடைசியா ஒரு தடவை வந்து பார்த்திட்டு தொயரம் இல்லாம போயிடறேன்” என்றான். எனக்குமே அப்போது அவனைப் பார்க்க வேண்டும் போலத் தோன்றியதால் வரச் சொன்னேன்.
தோட்டத்தில் என்னுடைய பணியாளரிடம் முன்கூட்டியே அவனைப் பற்றிச் சொல்லி, அவன் எப்படி நடந்து கொண்டாலும் மரியாதை தரச் சொல்லி வலியுறுத்தினேன். அவன் தங்கும் திட்டத்தில் வரவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. ஆட்டோ ஒன்றில் வந்து இறங்கினான். ஆட்டோக்காரரை நன்றாகக் கவனித்திருப்பான் போல, அது பணிவிலேயே தெரிந்தது. என்னுடைய அனுமதி எல்லாம் இல்லாமலேயே கொண்டு வந்ததைக் குடிக்கத் துவங்கினான். கல்லூரியில் கற்ற பண்பாட்டிற்கு எதிரான செயலது என்பதால், கவனமாக அவனோடு குடிப்பதைத் தவிர்த்தேன். அவனது காலடியைச் சுற்றி வந்த என்னுடைய குட்டி நாயான டோனியை ஓங்கி மிதித்தபோது எனக்கு எரிச்சல் வந்து விட்டது. “ஜெப்ரி, உன்னோட பிரச்சினை என்ன? ஏன் உன்னைவிட பலம் குறைஞ்சதுககிட்ட வயலண்ட்டா இருக்க? எனக்கு அவமானமா இருக்கு” என்றேன்.
என்னுடய கூர்மையினால் தாக்கப்பட்டுப் பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டவன், திடீரென எழுந்து செடிகளுக்குள் மறைந்து போய் யாரிடமோ சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தான். பிறகு திரும்பி வந்த அவன் தரையில் புரண்டு தெருவில் தனித்து விடப்பட்ட குழந்தையைப் போலக் கதறி அழத் துவங்கினான். அந்தக் காட்சியைத் தூரத்தில் இருந்து சிகரெட் புகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய பணியாளர் அவனது பக்கத்தில் போன போது தரையில் அமர்ந்தவாறே அவரது முகத்தில் எச்சில் துப்பினான். அவர் கோபத்தில் செருப்பைக் கழற்றி அடிக்கப் போனபோது, ஓடிப் போய் அவரைத் தடுத்தேன்.
ஜெப்ரியை எழுந்து அமர வைத்துக் கிளப்ப எத்தனிக்கையில், என் தோளில் சாய்ந்து சத்தம் போட்டு அழுதபடி, “எங்கம்மா என்னை விட்டுட்டுப் போயிட்டா. இனிமே எங்க போவேன்?” என்றான். தேம்பித் தேம்பி அவன் அழுததைப் பார்த்த என்னுடைய பணியாளரும், “அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லைங்க. ஏதோ அம்மா செத்த மனக் கோளாறு. அதான் அப்படி நடந்துக்கிட்டாரு” என்றார். உடனடியாக ஆட்டோவில் ஏற்றி அவனைப் பேருந்து நிலையத்தில் விட்டுவிடுமாறு சொல்லி, நானும் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பி வைத்தேன். ஆட்டோக்காரர் பேருந்து நிலையத்தில் இருந்து அழைத்து ஏற்றி விட்டுத் திரும்பி விட்டதாகவும் சொன்னார். அழைப்பைத் துண்டிப்பதற்கு முன்பு கடைசியாக, ”நல்ல மனுஷன். காலையில இருந்து சரக்கு வாங்கித் தந்ததுக்காக இதைச் சொல்லலை” என்றார்
அவனால் போய்ச் சேர்ந்து விடமுடியுமா என்கிற பயம் எனக்குள் வந்தது. அவனது எண்ணிற்கு அழைத்துப் பார்த்தால் அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. ஏதோவொரு குறுகுறுப்பில் அன்றொரு நாள் அவன் அளித்த, ஏற்கனவே அவனது பெயரிட்டுச் சேமித்து வைத்திருந்த எண்ணைத் தொடர்பு கொண்டேன். எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல், “சொல்லுங்கண்ணே. உங்க நம்பரை ஏற்கனவே எனக்குப் பதிஞ்சு குடுத்திருக்கார். எதுனா அவசரம்னா கூப்ட சொல்லி. நல்லா இருக்கீங்களா?” என்றது. உடனடியாகவே அது ஜெப்ரியின் மனைவி என்பதை உணர்ந்தேன். அவளுக்குச் செய்தி தெரியவில்லையோ என யோசித்தபடி, “ஜெப்ரி இங்க வந்திருந்தான். திடீர்னு அவங்க அம்மா செத்துட்டாங்கன்னு சொல்லி அங்கதான் கிளம்பி வர்றான். என்னாச்சு அவுங்களுக்கு? இன்னும் மூணு நாலு மணிநேரத்தில உங்க ஊருக்கு வந்திடுவான். பஸ் ஸ்டாண்ட்ல போயி நான் குடுக்கிற பஸ் நம்பர்ல பார்க்கச் சொல்லுங்க யாரையாச்சும்” என்றேன் தயங்கித் தயங்கி.
“அதெல்லாம் சும்மாங்கண்ணே. இதுவரைக்கும் அவர் அவங்க அம்மாவையும் அக்காவையும் என்னையும் நூறுதடவை கொன்னுட்டார். அடிக்கடி இப்படி எங்களை சாகடிச்சுப் பார்க்கறதுல அவருக்கு ஒரு சந்தோஷம். இப்ப நீங்க கூப்டு எழவு கேட்டு விசாரிக்கறீங்கள்ள. அதுக்குத்தான்” என்று அவன் மனைவி சொன்ன போது அவன் அழுத அழுகை எல்லாம் கண்முன்னே காட்சியாகவே ஓடியது. அத்தனை தத்ரூபமாக இருந்ததுவே அது?
“ஏன் இப்படிச் செய்றானாம்?” என்றேன் உடனடியாக.
“யாரோ இவரைக் காட்டுக்குள்ள விட்டுட்டுப் போயிட்டாங்களாம். பசியில சுத்துறாராம். கஞ்சி மணம் இழுக்குதாம் அவரை. ஏன்னு கேட்டா இதை மட்டும்தான் லூஸு மாதிரி திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டு இருக்கார்” என்றாள்.
கண் முன்னே கூப்பு யானையொன்று, எனக்கு முன்னே விரிந்து கிடந்த இருளிற்குள், அழுதபடி நின்று கொண்டிருந்த காட்சி சத்தியமாகத் தெரிந்தது. டோனி அதைப் பார்த்துக் குரைத்தது.