மிஷ்கினுடைய சைக்கோ படத்தில், சிசிடிவி மட்டும் இருந்திருந்தால் 37ஆவது நிமிடத்தில் படம் முடிந்திருக்கும் என்றார் நண்பரொருவர்.
இல்லை, 2015லேயே படம் முடிஞ்சிருக்கும் என்றேன். அவ்வளவு நேரம் வரிக்கு வரி படத்தின் குறைகளைப் பேசிக்கொண்டிருந்தவர் மனம் விட்டுச் சிரித்தார்!
200 ரூபாய் செலவு செய்து படம் பார்க்கச் சொல்லும் ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற கேள்விகளைக் கேட்க, அதிலும் தன்னை மேதையாக பாவித்துக்கொள்ளும் மிஷ்கினிடம் கேட்க, முழு உரிமை உண்டுதான். ஆனால் சினிமா என்பதே லாஜிக் மீறல்தானே? அங்கு இவ்வளவு லாஜிக் பார்க்கும் நம் அறிவுசார் கூட்டம், அசல் வாழ்வில், நம் கண்முன்னே நிகழும் பல குற்றங்களில், எங்க சார் போச்சு சிசிடிவி பதிவு? என்று மட்டும் சாலைவீதிகளில் இறங்கி அல்லது நீதிமன்றப் படிக்கட்டுகள் ஏறிக் கேட்டிருந்தால், எத்தனையோ குற்றங்களில் துப்புத்துலங்கி, அசல் சைக்கோ வில்லன்கள் பிடிபட்டுக் கம்பிகள் எண்ணிக் கொண்டிருந்திருப்பார்கள்!
ராதாபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டிய திரு.அப்பாவு அவர்கள், இதே சிசிடிவி பற்றி, சமீபத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் அமைச்சராக இருந்த பொழுதில்தான், மணல் கடத்தல்காரர்களுக்கு ஏதுவாக தொகுதியின் அனைத்து முக்கியமான சோதனைச்சாவடிகள் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலும், சிசிடிவி இல்லாதவாறும், ஒருவேளை இருந்தால் அதை நீக்குமாறும் வாய்மொழி உத்தரவிடப்பட்டிருந்தது என்று அந்தப் பதிவிலிருந்தது!
அதாவது தமிழகத்திலிருந்து மணல், எம்சாண்ட் போன்றவற்றைக் கேரளவுக்குக் கடத்தும் மாஃபியாக்களுக்கு உதவிசெய்யவே இத்தகைய ஏற்பாடுகள். இதனால் கடந்த ஐந்து வருடங்களாக இப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. அதனால்தான் களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளரைக் கொலைகாரர்கள் எளிதாக கொன்றுவிட்டுத் தப்பியோட முடிந்தது என்பதுதான் அந்தப் பதிவின் சாரம்!
சைக்கோ படத்தின் கதைக்களம் கோவை. என்னுடன் படம் பார்த்த இன்னொரு நண்பர், என்னய்யா கொடுமை இது, பொன்னார் தொகுதியிலயும் சிசிடிவி இல்ல, சிபிஆர் தொகுதியிலயும் சிசிடிவி இல்ல? என்றார்.
இப்போது துணை ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு தேசியப் பாதுகாப்பு புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்குமளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சோதனைச்சாவடி என்பது எவ்வளவு முக்கியத்துவமான இடம்? அங்குதானே பலவித கோணங்களில் படமெடுக்கும் நவீன கேமராக்களுடனான சிசிடிவிக்களைப் பொருத்தியிருந்திருக்க வேண்டும்? நம்மில் எத்தனை பேர் இந்தக் கேள்வியை எழுப்பியிருப்போம்? சரி, நாம் கேட்பதை விட்டுத்தள்ளுவோம். இதைக் கையிலெடுக்கும் புலனாய்வு துறையாவது அதன் முதல் கேள்வியாக இதைக் கேட்டு, அங்கு கேமராக்கள் இல்லாமல் போனதற்கான சைக்கோக்களை முதலில் கைது செய்து, கடுமையான தண்டனை பெற்றுத் தரட்டும்!
கவிஞர் மனுஷ்ய புத்திரனின் சிசிடிவி சார்ந்த முகநூல் பதிவொன்று உலகம் முழுக்க வாட்ஸ்அப்பில் பரவிக்கொண்டிருந்தது. அதை மெல்லிய கோபத்துடன் அவர் எழுதியிருந்தாலும் பலமான தர்க்கங்களைப் பல்வேறு தளத்திலும் எழுப்பியிருந்தது அந்தப் பதிவு!
முதல்வராயிருந்த ஜெயலலிதா அவர்களுடைய சிகிச்சையின் சிசிடிவி எங்கே? சிறையில் மின்கம்பியைப் பல அடி உயரமேறித் தன் வாயில் கவ்விச் செத்துப்போன ராம்குமார் மரணச் சம்பவத்தின் சிசிடிவி எங்கே, கொடநாடு கொள்ளைக்கான சிசிடிவி பதிவுகள் எங்கே என்று அந்தப் பதிவின் கேள்விகள் ஆணித்தரமாயிருந்தன!
நுங்கம்பாக்கம் ரயிலடியில் அவ்வளவு பரபரப்பான காலையில் இளம்பெண் ஸ்வாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டபோது நம்மை ஆண்டு கொண்டிருந்தது ஜெயலலிதா. அது 2016. ஜெயலலிதா மீண்டும் வென்றிருந்த ஆரம்பக்காலம். அவர் மீண்டும் வென்றதற்கே காரணம் பல இடங்களில் சிசிடிவி இல்லாததால்தான் இருக்கும். ஆனா இப்ப நாம அதுக்குள்ள போகாம, ஸ்வாதி இறந்துகிடந்த அந்த நுங்கம்பாக்கம் ரயிலடிக்கே போவோம்!
அன்று அங்கு எங்குமே ஒத்த சிசிடிவி கிடையாது. படுகொலையானது பார்ப்பனப் பெண் என்றதும் தமிழகமே தணலில் வறுபடும் சோளத்தட்டைபோல வெடிக்க ஆரம்பித்தது!
ஓரிரு நாட்கள் கழித்து எங்கோ வெளியே கிடைத்த சிசிடிவி புட்டேஜ் என்று ஒரு மங்கலான படத்தைக் காட்டி இவன்தான் ஸ்வாதியைக் கொன்றவன் என்றது காவல்துறை. ஆனால் அந்தப் படத்துக்குச் சற்றும் பொருந்தாத ஓர் இளைஞனைக் கைது செய்தது. அவனைப் பிடிக்க அவ்வளவு பெரிய படை போனபின்னரும், அவனைக் கைது செய்தபின், அத்தனை பேர் நடுவே அவன் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டான். இன்னும் கொஞ்ச நாளுக்கு அவனால் பேச முடியாது என்று நம்மிடம் கூறிவிட்டு, அவனிடம் விசாரிக்க ஏதுமில்லையென புழல் சிறையில் வைத்தது!
கிட்டத்தட்ட இரு மாதங்கள் முழுதாய் முடிந்த பின்னரும் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. அவனுடன் யாரும் பேசிடாதவாறு, அவனும் யாருடனும் பேசிடாதவாறு கடுமையாகப் பார்த்துக்கொண்டது காவல்துறை. குற்றப்பத்திரிகைகூடத் தாக்கல் செய்யாமல் வைத்திருந்த அந்த வழக்கு, ஒருகட்டத்தில் பிணை நோக்கி நகர்ந்தது. எங்கே அவன் பிணை கிட்டி வெளியே போய் ஏதேனும் பேசிவிடுவானோ என அஞ்சி, அவசர அவசரமாக அவன் சாவுக்கு நேரமும், திட்டமும் யாராலோ குறிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைவரை அநீதியே ராம்குமாருக்குக் கிட்டியது!
அன்றும் நாம் லாஜிக்கேயில்லாத இந்தக் கொலைக்கதைகளை, ரஜினி படம்போல சகித்துக்கொண்டோமேயன்றி, சிசிடிவி லாஜிக் பேசவில்லை. முற்பகல் செய்யின் என்கிற பழஞ்சொல்லுக்கேற்ப இவன் செத்த மூன்றாம் நாள் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மிகச் சாதாரண காய்ச்சல், நோய்த் தொற்று என்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்!
அப்பல்லோவில் அந்தம்மா சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, இரண்டாம் நாளே பூரண குணமடைந்துவிட்டதாகவும், இட்லி, வேகவைத்த ஆப்பிள் சாப்பிட்டதாகவும் சொன்னார்கள். இந்தப் பொய்களைப் பற்றிய எந்த அக்கறையும் நமக்கில்லை. ஆனால் அரசு சம்பந்தப்பட்ட வேலைகளிலும் ஜெயலலிதா அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, அரச முடிவுகள் எடுப்பதாக சேதிகள் வெளியாகின.
அப்போதுதான் நம்மைப் போலவே எங்கய்யா சிசிடிவி? எங்கய்யா புகைப்பட ஆதாரம்? உங்க அம்மா செய்ற ஆலோசனையை வீடியோவா போடுங்கய்யா என்று யார் கோரியது தெரியுமா? பேராசான் முத்தமிழ் அறிஞர் கலைஞர்!
அதுக்கு என்னா வசவு? மாலன்கள் எல்லாம் குடுமியை அள்ளி முடிந்துகொண்டு அதெப்படி ஒரு பொம்மனாட்டியை அப்படிக் கேக்கப் போச்சு என்று முகம் சிவக்க கேட்டார்கள். அன்று மட்டும் அந்த 93 வயது பெரியவர், மிக நியாயமான ஒன்றைத்தானே கோருகிறார்? அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யுமொருவர், இட்லி சாப்பிடும் சாதாரண நோயாளி ஒருவரின் புகைப்படமோ, வீடியோவோ தருமாறு கோருவதில் என்ன அபத்தம்? ஜெயலலிதாவின் படத்தைக் கேட்கவில்லையே? அரசின் முக்கிய முடிவுகளை முதல்வர்தான் எடுக்கிறாரா என்று தெரிந்துகொள்ளத்தானே கேட்டார்? முதிர்ந்த அந்த வயதில் அவர் ஒரு பெண்ணின் ஆபாசப் படத்தை எதிர் நோக்குகிறார் என படித்த மேதைகள்வரை அல்லவா எள்ளல் செய்தனர்?
உண்மையிலேயே நம் சாபம் அதன்பின் கலைஞர் இயங்கமுடியாமல் முடங்கியதுதான். இல்லையேல் அவருடைய அறிக்கை ஏவுகணைகள் எங்கிருந்தேனும் ஒரு ஸ்டிங் வீடியோவையாவது கொண்டுவரச் செய்து உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காட்டியிருந்திருக்கும். ஜெயாவின் மரணத்தை விசாரித்துக் கொண்டிருந்த ஆணையம், அப்பல்லோ மருத்துவமனையின் சிசிடிவி பற்றி நோண்ட ஆரம்பித்த ஒரே ஒரு காரணத்துக்காக உச்சநீதிமன்றம்வரை சென்று அந்த ஆணையத்தை கமலாதாஸைப்போல படிகளில் தள்ளிவிட்டு, சக்கர நாற்காலியில் அமரவைத்து, துளிவெளிச்சம் படாத இருட்டறைக்குள் தள்ளி விட்டிருக்கிறது அதிகார வர்க்கம். மனசாட்சி இருந்திருந்தால் நாம் அந்த சைக்கோக்களிடம்தான் சிசிடிவி புட்டேஜ் கோரியிருந்திருக்க வேண்டும். ஆனால், அந்தம்மாவுக்காக மண் சோறு தின்னவன், தீச்சட்டி எடுத்தவனே நா அறுந்த நிலையில் முடங்கியிருக்க, நாமெங்கு பொங்க?
கொடநாடு கொள்ளைகள், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சீரியல் கொலைகளுக்குக்கூட எங்குமே சிசிடிவி சான்றுகளில்லை. அட, ஏன் காவல்துறை விசாரணை, சட்ட நடவடிக்கைகளென ஏதுமே இங்கில்லை. ஆனால், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் முதல்வர் இருக்கிறார் என்ற பேட்டிக்கு மட்டும் சிசிடிவி இருந்தது. அதைவைத்தே அவரைக் கைது செய்து குண்டர் சட்டத்திலுமடைத்தது காவல்துறை. அடடா!
நீட் தேர்வு மையத்திற்குள் மாணவர்களை அனுமதிக்கும் முன் இவர்கள் அவர்களுக்குச் செய்யும் சோதனைகள் பற்றி நமக்கு நன்றாகவேத் தெரியும். சட்டைகளைக் கிழிப்பது, கூந்தலை விரித்துவிடச் செய்து உதறுவது, பார்வைக் குறைபாடுகளுக்காக அணிந்திருக்கும் கண்ணாடிகளைக்கூட அகற்றுவது, காது மூக்கு, வாய்களுக்குள் எல்லாம் விளக்கடித்துப் பார்ப்பது…
இவ்வளவெல்லாம் செய்வார்கள், ஆனால் அங்கு சிசிடிவி இருக்காது. இருந்தாலும் அது வேலை செய்யாது. வேலை செய்தாலும், குறிப்பிட்ட மையத்தில் குறிப்பிட்ட நாளில் மட்டுமேனும் அது ரிப்பேர் ஆகியிருந்திருக்கும். எதுக்குச் சொல்றேன்னா கோடிகளில் லஞ்சம் கொட்டி, சில பயிற்சி மையங்கள் வழியே, போலி ஆட்களைக் கொண்டு தேர்வெழுதி, நல்ல மதிப்பெண்களைப் பெற்று, அரசுக் கல்லூரி டீன்களின் உதவியோடு இப்படி ஆள்மாறாட்டம் செய்தெழுதிய மாணவர்கள் போன ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். அவ்வளவு கடுமையாகச் சோதனையிடுவார்களாம். ஆனால் ஹால்டிக்கெட்டுக்கும், எழுத வரும் ஆளுக்கும் வேறுபாடு தெரியாதாம். அங்கு சிசிடிவி இல்லாதது போலவே, கல்லூரியிலும் அது இருக்காதாம், கண்டறிய முடியாதாம், என்னாங்கடா டேய்? இதையெல்லாம் நம்மிடம் மிஷ்கின் கேட்டால் நாம் எங்கே போய் முகத்தை வைக்க?
அட, இப்ப நடந்த குரூப் 4 சர்வீஸ் கமிஷன் நடத்திய தேர்வின் லட்சணம்? விடைத்தாளில் அழியும் மை கொண்ட பேனாவால எழுதுவாங்களாம், அப்புறம் அதுக்கு சீல் வச்சு சென்னைக்குக் கொண்டுபோற வழியில எதுனா உணவகத்துல நிறுத்துவாங்களாம், அங்க இந்தப் பேப்பரைத் தூக்கிட்டு வேற பேப்பர வைப்பாங்களாம். இங்கிட்டாவது சிசிடிவி இருக்கா, அது கோர்ட்ல வருமான்னு பார்ப்போம்!
ஐ.ஐ.டி. மாணவி ஃபாத்திமா தற்கொலைக்கு முன்பான பின்பான சிசிடிவி காட்சிகளெல்லாம் இருந்ததாகவும், அழிக்கப்பட்டதாகவும், அதனால்தான் சம்பந்தப்பட்ட சைக்கோக்களைக் கைது பண்ணமுடியவில்லையென்றும் கழுகார் மோரை உறிஞ்சிக்கொண்டே நம்மிடம் கூறினார்!
போனமாசம் ஊரகங்களுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடந்ததா? அதில் அதிக இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணிகள் வெற்றி பெற்றதுதான், தாம் தேர்தலை நேர்மையாக நடத்தியதற்கான சான்று என்கிறது தமிழகத் தேர்தல் ஆணையம். ஆனால் இவர்கள் எத்தனை ஆயிரம் முடிவுகளை நிறுத்திவைத்தார்கள், தாமதம் செய்யும் சாக்கில் எத்தனை முடிவுகளை மாற்றிச் சொன்னார்கள் என்பதில் எந்த ஒளிவுமறைவுமில்லை. எனவேதான் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், சிசிடிவி, வீடியோ பதிவு கட்டாயம் என்பதை நீதிமன்ற ஆணையாகவே பெற்று சாதித்தது திமுக!
ஆனால் பல வழக்குகளில் சான்றாக இந்த சிசிடிவி பதிவுகளை நீதிமன்றம் கோரினால் ‘ஹி… ஹி…’ எனக்கு அவகாசம் வேணும் எஜமான் என்கிறது தேர்தல் ஆணையம். சரி, ஒரு வாரம் எடுத்துக்கோங்க என்றால் மூன்று மாதங்கள் தேவை எனக் கூசாமல் அதனால் சொல்ல முடிகிறது!
அதுவரை நீங்கள் அதில் திருத்தம் செய்யாமல் இருப்பீர்கள் என்பதற்கு யார் உத்தரவாதம்? அதெல்லாம் அவ்வளவு நாட்கள் கொடுக்க முடியாது என உயர்நீதிமன்றம் ஆணையிட்ட ஒரே ஒரு காரணத்துக்காக, உச்சநீதிமன்றம் சென்று அதற்குத் தடையாணை வாங்கியுள்ளது தமிழகத் தேர்தல் ஆணையம்!
பகிரங்கமாக, அப்பட்டமாக, வெளிப்படையாக குற்றங்களுக்கு, மக்களாட்சியின் தூண்களே துணைபோகின்றன. அதிகார வர்க்கத்தின் சிசிடிவி ஆவணங்கள் மட்டும் முறையாகக் கேள்விகள் கேட்கப்படும் இடத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், நம்முடைய அவலங்கள் எவ்வளவோ மட்டுப்படும்!
காவல்துறையிடம் சிக்காத சீரியல் சைக்கோ கில்லர்களைப் போலவேதான், தொடர் அட்டூழியங்கள் புரியும் சைக்கோக்களும் நம்மிடம் சிக்காது நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார்கள். லாஜிக்கை சினிமாக்களில் அதீதமாக எதிர்பார்க்கும் நாம், நம்மால் நம்மை ஆள்பவர்களை நோக்கி, லாஜிக் பற்றி இனியேனும் உரக்கப் பேசுவோம்!