இந்தத் தலைப்பிற்குள் இருக்கும் இரண்டு விஷயங்களுக்கும் இடையே என்ன சம்பந்தம் என்று குழம்ப வேண்டாம். இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒன்று அதிகாரத்தை அடையும் வழிமுறை; இரண்டு அதிகாரத்தைச் செலுத்தும் வழிமுறை. ஒரு அரசின் கோரமுகத்தைக் காட்ட இந்த இரண்டையும் வைத்துப் பேசுவதே போதுமானது.
ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கும் எடப்பாடி பழனிசாமி அதிகார பீடத்திற்கு வந்து சேர்ந்ததற்கும் இடையிலான தொடர்புகளின் வலைப்பின்னல்கள் ஒரு கேங்க்ஸ்டர் படத்தையும் மிஞ்சக் கூடியது. ஒரு மாநிலத்தையே தனது ஒற்றை அதிகார பலத்தால் கட்டி ஆண்ட ஜெயலலிதாவின் மரணம் அவலமானது மட்டுமல்ல, நாம் யாரின் ஆட்சிக்குக் கீழ் இருக்கிறோம் என்பது குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஜெயலலிதா அதிகாரத்திற்கு வர எந்தக் குறுக்கு வழியையும் பின்பற்றத் தயங்காதவர். ஆனால் அவரையும் மிஞ்சி விட்டார்கள் அவரது அரசியல் வழித்தோன்றல்கள்.
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த ஐந்து கொலைகளுக்குப் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக தெஹல்கா புலனாய்வு இணைய இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் சுமத்திய குற்றச்சாட்டு சாதாரணமானதல்ல. இது எடப்பாடி பழனிச்சாமியை மிகவும் பதட்டமடைய வைத்துவிட்டது. அவை பொய்யான குற்றச்சாட்டுகள் என அவர் பதறினாலும் பதவி விலகி நேர்மையை நிரூபிக்கும்படி திமுக கோரிவருகிறது.
மேத்யூ தன் பத்திரிகையாளர் சந்திப்பில் கொடநாட்டுக்குத் தாம் சென்று பதிவு செய்ததாக, அங்கிருந்த சிலரின் பேட்டிகளை உள்ளடக்கிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டு, அதிமுகவினர் செய்த முறைகேடுகள் குறித்த ஒப்புதல் வாக்குமூலங்களை, காணொளியாகப் பதிவு செய்து கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா வைத்திருந்ததாகவும், அவற்றைக் கைப்பற்றினால் அமைச்சர்கள் உள்ளிட்டோரைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும் என்று எடப்பாடி நினைத்ததாகவும் கூறினார். கொடநாட்டில் கொள்ளை நடந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் உடனிருந்தனர். அப்போது பேசிய சயான், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் தமது நண்பர் என்றும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சில முக்கிய ஆவணங்களை எடுக்க கனகராஜ் தங்களை அழைத்ததாகவும், தங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி இருந்ததாக கனகராஜ் கூறியதாகவும் தெரிவித்தார். கனகராஜ் உள்ளிட்ட பதினோரு பேர் அங்கு சென்று, அவர்களில் நான்கு பேர் உள்ளே சென்றபின், கனகராஜ் சில ஆவணங்களை எடுத்ததாகவும் சயான் கூறினார்.
கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் ஏப்ரல் 2017இல் மரணமடைந்தார். அந்த இரவில் காவலாளி கொலை செய்யப்பட்டது குறித்துக் கேட்கப்பட்டபோது, அவரைக் கொலை செய்வது எங்களுக்கு நோக்கமில்லை என்றும், அவரைக் கட்டி மட்டுமே போட்டதாகவும், ஆனால் அவர் மூச்சு முட்டி இறந்ததாகவும் சயான் கூறினார். கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடிக்கவே அவர்கள் சென்றதாகக் காவல்துறை கூறியது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த சயன், “அது குற்றப்பத்திரிகையில் இல்லை. வெளியில் ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள்” என்றார். ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிச்சாமி அரசு மாத்யூ மற்றும் சயான், மனோஜைக் கைது செய்ய கடும் முயற்சியில் இறங்கியது. டெல்லிக்குச் சென்று சயானையும் மனோஜையும் கைது செய்து கொண்டு வந்தது. ஆனால் அவர்களைக் கைது செய்த சட்டப்பிரிவுகள் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அவர்களைப் பிணையில் விடுவித்துவிட்டது.
இந்த விவகாரம் குறித்துப் பத்திரிகையாளர்களிடம் பேசிய திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா பல்வேறு முக்கியமான கேள்விகளை எழுப்பினார். “ஜெயலலிதா இறந்த இரண்டு மாதங்களிலேயே சசிகலாவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். 24.2.2017 அன்று கொடநாட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்படுகிறார். அடுத்த இரண்டு மாதங்களில் 28.4.2017 அன்று ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணமடைந்தார். இந்த நிகழ்வு நடந்து 24 மணி நேரத்துக்குள் கேரளாவில் நடந்த இன்னொரு வாகன விபத்தில் சயான் தன் மனைவி மற்றும் குழந்தைகளை இழந்தார். பின்னர் கொடநாட்டில் சி.சி.டி.வி. பொறுப்பாளராக இருந்தவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. நான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோதுதான், கொடநாட்டில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க, சிறப்பு அனுமதி பெற்று தனி மின் இணைப்பு வழங்கப்பட்டது. நிலைமை அப்படி இருக்க, காவலாளி கொலை மற்றும் கொள்ளை நடந்த இரவில் குறிப்பிட்ட நேரம் மட்டும் எப்படி மின்சாரம் இல்லாமல் போனது? எப்படி 27 சி.சி.டி.வி. கேமராக்கள் இயங்காமல் போயின? கொடநாட்டில் இருந்து தமிழக அரசின் பணிகளை மேற்கொள்வதை ஜெயலலிதாவே ஒப்புக்கொண்டுள்ளார். தமிழகத்தின் தலைமைச் செயலகம் போல ஒரு முதல்வர் பயன்படுத்திய வளாகத்தில், அந்த இரவில் ஒரு காவலர் கூட இல்லையா?” என்ற அவரது கேள்விகள் இன்றளவும் பதிலளிக்கப்படாமல் இருக்கின்றன. அப்படியென்றால் இந்த ஆவணங்களின் அடிப்படையில்தான் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். அணிகளின் இணைப்பு நடந்ததா? தினகரன் அணிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மேலும் செல்லாமல் தடுத்து வைக்கப்பட்டார்களா?
ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சந்தேகத்தின் புள்ளிகளை சசிகலா தரப்பை நோக்கி முழுமையாக நகர்த்திக் கொண்டிருந்தபோது கொடநாடு விவகாரம் சந்தேகப் பார்வையை மாநில முதலமைச்சரின்மீது கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. மர்ம மரணமடைந்தவர் ஒரு முன்னாள் முதல்வர். சந்தேகம் இந்நாள் முதல்வர்மீது. ஒரு மாநிலத்திற்கு இதைவிட அவலமும் அவமானமும் வர முடியுமா?
இப்படி மர்மங்கள் சூழ அதிகாரத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமியின் அரசு மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் சூறையாடி வருகிறது. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு படுகொலைகள், எட்டு வழிச்சாலைக்கு எதிராகப் போராடிய மக்கள்மீது செய்யப்பட்ட பெரும் கொடுமைகள் என அதன் பாசிச வெறியாட்டத்தின் அடுத்த கட்டம்தான் அரசு ஊழியர்கள் போராட்டத்தை ஒடுக்கி வரும் விதம். அரசு ஊழியர்கள் அப்படி என்ன கேட்டார்கள்?
1)01-.04.-2003க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும். 2) இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும். 3) சிறப்புக் காலமுறை ஊதியம் பெற்றுவரும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். 4) 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்கிட வேண்டும். 5) 2003, 2004 மற்றும் பல்வேறு காலகட்டங்களில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்குப் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும். 6)அரசாணை எண் 56இல் இளைஞர்களின் வேலை வாய்ப்பினைப் பறிக்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் பகுப்பாய்வுக் குழுவினை ரத்து செய்ய வேண்டும். 7) 5000 அரசுப்பள்ளிகள் மூடுவதை உடனடியாகக் கைவிட்டு, சமூக நீதியினைப் பாதுகாத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 8) 3500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3500 சத்துணவு மையங்களை மூடும் முடிவினையும் ரத்து செய்ய வேண்டும். 9) அங்கன்வாடி மையங்களில் லிரிநி மற்றும் ஹிரிநி வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளில் என்ன சட்டவிரோதத் தன்மை இருக்கிறது? தங்களுக்குத் தரவேண்டிய சம்பளப் பாக்கியையும் ஓய்வூதியத் தொகையையும் கேட்பது குற்றமா? தங்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட 10 சதவிகிதப் பணமான இருபத்தெட்டாயிரம் கோடி ரூபாய் எங்கே என்றுதானே அவர்கள் கேட்கிறார்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் அந்தப் பணத்தின் நிலை என்ன? அரசு ஊழியர்களுக்குத்தான் அரசின் வருமானத்தின் 71 சதவிகிதம் போகிறது என்பது ஒரு பொய்யான பிரச்சாரம். அரசு ஊழியர்கள் இல்லாமல் அரசாங்கம் என்பது ஏது? அவர்கள் மூலமாகத்தானே கல்வி, சமூகநலத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த முடியும்? இன்னும் சொல்லப்போனால் மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டிய அரசுப்பணியாளர்களில் பாதிப்பேர்தான் இப்போது இருக்கிறார்கள். மேலும் அரசு உயர் அதிகாரிகளுக்கு சம்பளப் பாக்கியையும் ஊதிய உயர்வையும் தயக்கமின்றி வழங்கி வரும் அரசு, இடைநிலை, கீழ்மட்ட ஊழியர்களின் வயிற்றில் அடிக்கிறது. அரசின் நிதிப்பாற்றாக்குறைக்குக் காரணம், மத்திய அரசு மாநில அரசின் வருவாயின் பெரும்பகுதியைப் பறித்துக்கொண்டதும் மாநில அரசின் வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும் முறையற்ற நிதி மேலாண்மையும் வீண் செலவினங்களும் ஊழலுமே தவிர, அரசு ஊழியர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தினால் அல்ல. அரசு ஊழியர்கள் போராடும்போதெல்லாம் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தச் சொன்ன நீதிமன்றமோ அரசு முடியாது என்று கை விரித்ததும் அரசின் நிதி விவகாரங்களில் தான் தலையிட முடியாது என்று கை விரிக்கிறது. அரசு ஊழியர்களுக்கு எதிராகப் பொதுமக்களைத் திருப்பி விடும் சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் அரசின் ஏஜெண்டுகள் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது போராடும் ஆசிரியர்களைப் பணிநீக்கம் செய்துவரும் அரசின் செயல் கடந்தகால ஜெயலலிதா அரசின் தொடர்ச்சியாகவே இருக்கிறது.
கடந்த 2003ஆம் ஆண்டு இது போன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இறுதியில் ஜெயலலிதா போராட்டக்காரர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். காவல்துறை 30.06.2003 அன்றும் 01.07.2003 அன்றும் நள்ளிரவில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் வீடுகளில் வேட்டையாடினர். இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேரைப் பணியிலிருந்தும் நீக்கம் செய்தார் ஜெயலலிதா. தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுத் தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டனர். சிறைகள் நிரம்பி வழிந்தன. இவ்வாறு சிறைகளில் அடைக்கப்பட்டோருக்கும் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. கழிவறை வசதிகளோ, குடிநீர் வசதிகளோ முறையாகச் செய்து கொடுக்கப்படவில்லை. இப்படிப் போராடியவர்களில் 88 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடுங்கோன்மையின் தொடர்ச்சியே இன்றைய அரசு ஊழியர் போராட்டம் ஒடுக்கப்படும் விதம்.
இந்த ஆட்சியின் ரத்தக் கறைகள் தமிழக மக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் படிந்துகொண்டிருக்கிறது.