ட்ரிங்ங்ங்ங்…..
திரையேற்றம்
கடவுள் வாழ்த்து
ராஜஸ்தான், சட்டீஸ்கர் உட்பட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன், நண்பர் ஒருவருடன் சேர்ந்து, இந்திய மேப்பை எடுத்து வைத்துக்கொண்டு, இதே நிலை நீடித்தால், 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என மிக மேலோட்டமாக, குருட்டாம்போக்கில் ஆராய்ந்தோம் !
நம்ப மாட்டீர்கள். முடிவு படுகோரமாக இருந்தது. ஆளும் பாரதீய ஜனதா பார்ட்டி இரட்டை இலக்கைத் தாண்டவே மிகவும் நொண்டியது. சரி, பத்துவருடங்கள் தொடர்ந்து ஆண்ட பாரம்பரியக் காங்கிரஸ் கட்சியையே, ஐம்பது தொகுதிக்குள் கட்டுப்படுத்திய நாட்டு மக்கள், தங்கள் வாழ்க்கையில் இதுவரை காணாத துன்பத்தைக் கண்ட காலகட்டமல்லவா? கோபம், சூடு, ஆற்றாமை இருக்காதா என்ன, என அந்த கூட்டுத்தொகையைப் பார்த்து சமாதானமடைந்தோம்.
ஆனால், இந்துத்துவ வெறிமிக்க சங் பரிவார்களும், இந்தச் சூழலை உள்வாங்கியிருக்குமே? வாகாகக் கிட்டிய ஆட்சியைப் பறிகொடுக்க விடுமா என்ன என்றும் யோசித்தோம். ஒருவேளை அவர்களின் கணிப்பு இன்னும் மோசமான எண்ணிக்கையைக் காட்டியதோ என்னமோ, உடனடியாக அதிரடி ஆட்டத்துக்குத் தயாரானார்கள்!
இதற்கு நடுவே நியூயார்க் டைம்ஸ் அமெரிக்கப் பத்திரிகையில் ஒரு சேதி. “இந்தியாவில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஆளுங்கட்சி, நாடு முழுக்க சாதி, மதக் கலவரங்களைத் தூண்டிவிடவும், குண்டுவெடிப்புகள் போன்றவற்றை நிகழ்த்தி, போர்ச்சூழலை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. இது சாத்தியமானால் எமர்ஜென்ஸியை அறிவித்து, அதன்மூலம் தேர்தலைத் தள்ளிப் போடவும் வாய்ப்பிருக்கிறது.” இப்படி அந்தப் பத்தி நீள்கிறது !
இவைகளை, இவர்கள் எடுத்தவுடன் செய்யவில்லை. மாறாக, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடியும் தறுவாயில், மக்களை ஏமாற்ற சில சர்ஜிக்கல் தாக்குதல் செய்தார்கள். எதிர்க்கட்சிகளே அதில் தடுமாறின என்றால் மிகையாகாது. அதுதான் அந்த 10 விழுக்காடு பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு !
அடடா, முற்பட்ட வகுப்பினர் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் யாரார் என அவர்கள் தகுதி வகுத்திருக்கிறார்கள் பாருங்கள். ஆண்டுக்கு எட்டு லட்சத்திற்கு மிகாத வருவாய் உள்ளவர்கள். அதாவது நாள் ஒன்றுக்கு 2190 ரூபாய் வருவாய் உள்ளவரும் இந்த ஒதுக்கீடுக்கு தகுதியானவர். அதாவது மாதத்திற்கு 66000 ரூபாய் சம்பாதித்தாலும் அவர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர். போக, அவரிடம் 1000 சதுர அடிக்குள் வீடு, ஐந்து ஏக்கர் வரை நிலம் இருப்பினும் ஏழைதான் !
இவர்களின் இந்தத் திடீர் கரிசனம், மத்தியப் பிரதேசத்தில், ராஜஸ்தானில், சட்டீஸ்கரில் தங்களின் பரம ரசிகர்களான, உயர்சாதி இந்துக்களாகக் கருதப்படும் ரஜ்புத்கள், மார்வாடி ஜெயின்கள், ஜாட்கள் கைவிட்டதால் இருக்குமோ என்கிற அச்சத்தால் கிளர்ந்ததாக இருந்திருக்க வேண்டும். ஆனால், உண்மையில் என்னதான் கசப்பு இருந்தாலும், மத ரீதியாக அவர்கள் (சட்டீஸ்கரைத் தவிர்த்து) பாஜகவுக்கே தங்கள் வாக்கை அளித்திருக்கிறார்கள். ஏனெனில், முடிவுகளுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில், மாஸ் மெஜாரிட்டி காங்கிரசுக்கு கிட்டும் எனச் சொல்லியிருந்த நிலையில், தேர்தல் முடிவோ, இந்த இரு மாநிலங்களிலும், தனிப்பெரும்பான்மை பெற காங்கிரஸ் மிகவும் திணறியதுதான் சாட்சி !
இருந்தாலும் அவர்களுக்கு உள்ளுக்குள் உறுத்தல் இருந்திருக்கலாம் அல்லது இதையே சாக்காக வைத்து ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தங்களில் ஒன்றான, இட ஒதுக்கீட்டு முறையைத் தகர்க்க, சிறிது சிறிதாக முற்றிலும் குலைக்க, இந்த விளையாட்டைத் துவக்கியிருக்கலாம் !
அகில இந்திய ரீதியில் இதை முழுமூச்சாக எதிர்த்தது தமிழகக் கட்சிகள்தான். மாறாக, பகுஜன் சமாஜ் கட்சி தொடங்கி, கம்யூனிஸ்ட்கள் வரை இதை ஆதரித்துத் தொலைத்தன. வாக்கரசியல் அந்தளவு அவர்கள் கொள்கையை நாசம் செய்து வைத்திருக்கிறது. இவர்களே இப்படி என்றால், காங்கிரசும், சமாஜ்வாடி, திரிணாமுல், ஆம் ஆத்மி மட்டும் எதிர்க்குமா என்ன? நாலே நாட்களில் மசோதாவை அறிமுகப்படுத்தி, இரு அவைகளிலும் வெல்ல வைத்து, குடியரசுத் தலைவர் கையெழுத்துக்கும் அனுப்பி, அரசிதழிலும் வெளியிட்டு, அதை இந்த கல்வியாண்டு முதலே அமல்படுத்தவும் உத்தரவிட்டார்கள் ! கொடுக்கிற அடியை இப்படி முரட்டுத்தனமாக கொடுத்துவிட்டால் அரசியல்வாதக் காரியக் கிறுக்குகளுக்குத்தான் என்னமாய் சுறுசுறுப்பு வந்துவிடுகிறது ? பணக்கார முற்பட்ட வகுப்பினருக்கே இவ்வளவு வேகம் காட்டிய இவர்கள், ஆட்சியிலமர்ந்த நாளிலிருந்தே அனைத்து மக்களுக்கும் உழைத்திருந்தால், நாடு எந்தளவு வளர்ந்திருக்கும் ? அதுசரி, முற்பட்ட வகுப்பினரைக் கொஞ்சம் சாதுர்யமாக ஏமாற்ற வேண்டும். மற்றவர்களை எளிதில் ஏமாற்ற இருக்கவே இருக்கு நாட்டுப்பற்று !
நாயகன் தரிசனம்
பிப்ரவரி 14. உலகம் முழுவதும் காதலர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும்போது, புல்வாமாவில் ஒரு தற்கொலைப்படைத் தாக்குதல். மத்திய ரிசர்வ் போலீஸ் படை, பேருந்துகளில் முகாம் மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் ஒரு பேருந்தைக் குறிபார்த்து கார் மூலம் வந்த ஒரு பயங்கரவாதி மோதினான். அந்தக் கார் முழுக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு. பேருந்தில் வந்துகொண்டிருந்த 44 போலீசாரும் தூள் தூளாகச் சிதறி வீரமரணம் அடைந்தனர். எந்த உடலையும் அடையாளம் காணமுடியாதளவு மகாசேதம், மகாகோரம்!
அங்கு காஷ்மீரில் அந்தக் கோரச்சம்பவம் நிகழ்ந்த வேளையில், இங்கு தலைநகரத்தில், பிரதமர் ஒரு தேர்தல் விளம்பரத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருந்திருக்கிறார். விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் அவர் உடனடியாக அந்த சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு, காஷ்மீர் புறப்பட்டிருப்பாரே என்று கேட்கிறீர்கள். அதுதான் நடக்கவில்லை. சம்பவம் என்னவோ ஆஃப்கானிஸ்தானில் நடந்தது போல, தன் நவரச நடிப்பைப் பிழிந்திருக்கிறார். சிரித்திருக்கிறார், கைகளை ஆட்டி ஆர்ப்பரித்திருக்கிறார். சாவகாசமாக மாலை வீட்டுக்குப் போனபின், ஆவேசமாக முகத்தை வைத்துக்கொண்டு, கொல்லப்பட்ட ஒவ்வொரு வீரர்களும் விதைக்கப்பட்டிருக்கிறார்கள், பாகிஸ்தானைப் பழிவாங்காமல் விடமாட்டோம் என்று ஊடகக் காமிராக்கள் முன், அங்கும் சாமர்த்தியமாக நடித்துத் தொலைத்தார். சம்பவத்தைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் உடனடியாக அத்தனைக் கட்சித் தலைவர்களும் தங்கள் பிரச்சாரக் கூட்டங்கள், அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளையெல்லாம் ரத்து செய்துவிட, பிரதமர் மறுநாள் காலை நடந்த வந்தே பாரத் ரயிலைத் தொடங்கிவைத்துக் கொடியை ஆட்டிக் கொண்டிருந்தார். மேக் இன் இந்தியாவின் மிகப் பெருமிதமான அந்த ரயில் அன்று நடுவழியிலேயே கோளாறாகி நின்றது. அதை, மிகச் சாதாரணமாக அந்த ரயில்வே மண்டல மேலாளரை வைத்தேகூட செய்திருக்க முடியும்தான், ஆனால் ஓர் அதி தீவிர விளம்பர மோகியிடம் அதையெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியுமா என்ன?
ஆனால், நாடே கொதிமன நிலைக்குப் போனது. இன, மதப் பாகுபாடில்லாமல் அனைத்து மக்களும் இந்தச் சம்பவத்தினால் வருந்தினர். பயங்கரவாதிகளைக் கடுமையாகக் கண்டித்து, அவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும் என விரும்பினர். இதைத்தானே அந்த சூத்திரதாரிகளும் விரும்பினர் ?
அவ்வளவு பெரிய ராணுவ நகர்வு நிகழும்போது (70 பேருந்துகளில் 2500க்கும் மேற்பட்ட காவலர்கள்) பாதுகாப்பு எவ்வளவு உச்சத்தில் இருந்திருக்கும்? மாநிலமும், மத்திய அரசும் அவர்கள் கையில் இருக்கும்போது, உளவுத்துறை எவ்வளவு துல்லியமாகச் செயல்பட்டிருக்கும்? ஒவ்வொரு சோதனைச் சாவடிகளிலும் எவ்வளவு தீவிரச் சோதனைகள் நிகழ்ந்திருக்கும்? ஆனால் இதையெல்லாம் தாண்டி, ஒரு காரில் 300 கிலோ அளவுக்கு (முதல் தகவல் இப்படித்தான் வந்தது, பிறகு அதை 80 கிலோ என்றார்கள், அப்புறம் இல்லையில்லை. 56 கிலோதான் என்றார்கள். உண்மை நிலை மோடிஜிக்குத்தான் வெளிச்சம்) நவீன RDX பாம்களை எடுத்துக்கொண்டு போய், அணிவகுப்பில் வரும் ஒரு பேருந்தைக் குறிபார்த்து மோத முடியும் என்பதெல்லாம் அறிவார்ந்த யாராலும் நம்ப முடியாது. ஆனால், அப்படி யாரும் சிந்தித்துவிடக் கூடாது என்பதில் பக்தாள்கள் கவனமாகச் செயல்பட்டனர். அப்படி எவரேனும் எழுதினவுடன் பாய்ந்து வந்து ‘ஏ தேசத்துரோகி, பாகிஸ்தானுக்குப் போ’ என்றார்கள். டிஜிட்டல் போர்டில் ராணுவ உடை அணிந்துகொண்டு எழுதும் சங்கி ஒருவர், இப்படி சிந்திக்கும் எல்லோரையும் சுட்டுக் கொல்ல வேண்டுமென்றார். முன்னாள் பத்திரிகையாளரும் இந்நாள் காவியுமாகிக் கிடக்கும் எழுத்தாளரொருவர், இந்தச் சம்பவத்துக்கு உடனடி பதிலடியாக, செய் ஏதாவது செய், சொல்லாததைச் செய் என்று மோடிக்கு மெயில் அனுப்பிக் கொண்டிருந்தார். உணர்ச்சிப் பிழம்பில் தகித்துக் கிடந்தது நாடு !
சரியாய் இரண்டு வாரங்களுக்குப் பிறகு 12 மிராஜ் 2000 ரக நவீன போர் விமானங்கள் மூலம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியான பாலக்கோட்டில் துல்லியத் தாக்குதல் நடத்தி, 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளையும், அவர்களுடைய ஃபைவ் ஸ்டார் முகாம்களையும் அழித்துவிட்டதாகக் கூறியது மத்திய அரசு. ஆனால் ஏனோ இந்த நடவடிக்கை பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்கான கதையானது!
டெர்ரர் வில்லன் என்ட்ரி
1000 கிலோ வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி பயங்கரவாத முகாம்களை அழித்ததாக அரசு கூற, இல்லையில்லை, அவர்கள் அத்துமீறி நுழைந்ததை நாங்கள் தடுத்து விரட்டினோம், அவர்கள் போகும் வழியில் எங்கள் காட்டில் குண்டு வீசி, மரங்களைச் சேதப்படுத்தினார்கள். பசுமை இயக்கத்தைப் பாழ்படுத்தி சுற்றுச்சூழலை இந்தியா கெடுத்துவிட்டதாக நாங்கள் ஐநாவில் புகார் கொடுக்கவிருக்கிறோம் என்றது பாகிஸ்தான். இதுவாவது பரவாயில்லை.
பாகிஸ்தானின் F16 ரகப் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகவும், அதை இந்திய விமானங்கள் விரட்டிச் சென்று துரத்தியதாகவும் இந்தியா கூற, ஆமாமா… அப்படித் துரத்தி வந்த ஒரு விமானத்தை நாங்க சுட்டு வீழ்த்திவிட்டோம் என்றது பாகிஸ்தான்.
இதை அடியோடு மறுத்தது இந்திய ராணுவம். அடுத்த அதிரடியாக பாகிஸ்தான், ஓர் இந்திய வீரர் பிடிபட்டிருப்பதாகச் சொல்ல, மெல்ல தடுமாற ஆரம்பித்தது அரசு. அதுவரை வீராவேசம் காட்டி வந்த அரசியல்வாதிகள் மெல்ல பதுங்க ஆரம்பித்தார்கள். மதியத்திற்கு மேல், பொதுமக்களால் தாக்கப்பட்டு, முகமெல்லாம் கிழிந்து வீங்கி, கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்த, இந்தியன் ஏர்ஃபோர்ஸ் விங் கமாண்டர் அபிநந்தன் புகைப்படத்தை வெளியிட்டது பாகிஸ்தான் அரசு!
போர், அழி, கொல் என வாய்ச்சொல்லில் வீரம் காட்டி வந்த அனைத்து தைரிய சிகாமணிகளும், கப்சிப்பென ஒடுங்கி, பதுங்குகுழியில் போய் படுத்துக்கொண்டார்கள். பாகிஸ்தானோ, இந்த விஷயத்தில் அதி சாமர்த்தியமாக காய் நகர்த்தியது. உலக அரங்கில் தாங்கள் மனித நேயர்கள், அமைதியை விரும்புபவர்கள், போர்க் குற்றவாளிகளுக்கு உரிய மரியாதையைத் தருபவர்கள் என்று அபிநந்தனுக்கு HIGH TEA கொடுத்து உபசரித்து, அதை வீடியோவாகவும் எடுத்து உலகம் முழுக்க உலவவிட்டது. சொன்ன வாக்கு பிறழாமல் அவரை இரண்டே நாட்களில் இந்திய எல்லையில் ஒப்படைத்தது. அவர் இந்திய வசம் வந்துவிட்டார் என்று உறுதியானவுடன், கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அது கூட மோடியின் சாதுர்யம் என்றவாறே வெளியே வந்தார்கள் பயந்தாங்கொள்ளிகள் !
வகுப்புக் கலவரங்களைத் தூண்டி அதில் பலனறுக்க தமிழகத்தில் ஒரு வேலை நடந்தது. புவனகிரி அருகே ராமலிங்கம் என்கிற ஒரு சங்கி வாய்த்துடுக்காய் இஸ்லாமியர்களை இகழ்ந்தது வீடியோவாக வாட்ஸ்அப்பில் பரப்பப்பட்டது. சரியாய் அது அனைத்து இந்துத்துவர்களையும் அடைந்த அன்று இரவே யாரோ சிலரால் அவர் கைகள் வெட்டப்பட்டு, அதனால் ரத்தப்போக்கு அதிகமாகி அவர் இறந்தும் போகிறார். முதலில் இது தொழில்போட்டி, என்னைப் பிடிக்காத என் நண்பர்கள்தான் என் அப்பாவை வெட்டினார்கள் என்று ராமலிங்கம் மகனே வாக்குமூலம் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட சில மணி நேரங்களிலேயே, கொலை செய்தார்கள் என்று சில இஸ்லாமியர்களைக் கைது செய்தது காவல்துறை. ராமலிங்கத்துக்கு உரிய சிகிச்சைகள் கொடுத்திருப்பதன் மூலம் அவர் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்கிற நிலையில், வேண்டுமென்றே அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போகச் சொன்னதாகவும், அதிக தூரத்தால் ரத்தப்போக்கும் அதிகரித்து தன் தந்தை இறந்துவிட்டார் என்றும் அவர் மகன் கூறியிருந்திருக்கிறார். ஆனால் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் அமுக்கி, சில இஸ்லாமியர்களைக் கைது செய்தது காவல்துறை. இஸ்லாமியர்களையும், இஸ்லாத்தையும் இகழ்ந்தார், பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார், எல்லாவற்றுக்கும் வீடியோ ஆதாரங்களிருக்கிறது. அப்படியிருந்தும் மதவெறி பிடித்த இஸ்லாமியர்கள் அவரைக் கொன்றுவிட்டார்கள். ஏ இந்து ரத்தங்களே, உங்களுக்குக் கொதிக்கவில்லையா? சுரணை இல்லையா ? என்றெல்லாம் வலைத்தளங்களில் இந்தச் சம்பவத்தை வைத்து, வாக்கு பலனை அறுக்க இந்து அமைப்புகள் வெகுவாக முயன்றன. பெரியார் மண்ணில் இவர்களுடைய எந்த முகமூடிகளும் உடனுக்குடன் கிழிக்கப்படுவதால் அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. சமூக வலைத்தளங்களால் மட்டுமே இது சாத்தியமானது. வெறுமனே இன்றைய ஊடகங்களை நம்பி நாம் இருந்திருந்தோமானால், அவர்கள் என்ன எழுதுகிறார்களோ/காட்டுகிறார்களோ அது மட்டுமே உண்மை என்றாகியிருந்திருக்கும் !
இடைவேளை
கேன்டீனில் அறுசுவை அரசின் வழுவழு கோதுமை அல்வா மைசூர் போண்டா கும்பகோணம் ஃபில்டர் காபி
ட்ரிங்ங்ங்ங்…..
திரையேற்றம்
தன் ஆறாவது பட்ஜெட்டை (இடைக்கால பட்ஜெட்) பாஜக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அப்போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு உடல் நலமில்லாததால், நிதித்துறையில் இணை அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்திருக்க வேண்டியதை, துறைக்குச் சம்பந்தமே அற்ற, பியூஷ்கோயல் தட்டிப்பறித்து வாசித்தார்.
இதற்கு முன் சாதித்திருக்க வேண்டிய, நன்மைகள் புரிந்திருக்க வேண்டிய, கொஞ்சமேனும் கருணையுடன் செவி சாய்த்திருக்க வேண்டிய விவசாயிகளுக்கு, ஐந்து மெயின் பட்ஜெட்டுகளிலெல்லாம் ஒன்றுமே செய்யாமல், இடைக்கால பட்ஜெட்டில் நலிந்த விவசாயிகளுக்காக, 6000 ரூபாயை ஒரு வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படும் என அறிவித்தது மோடி அரசு !
தேர்தல் அறிவிக்கப்படும் முன்பு இந்த சாகஸத்தை சாதுர்யமாகச் செய்தது மோடி அரசு. முதல் தவணையாக மார்ச் மாதத்தில் 2000 ரூபாயை வழங்கப்போவதாக உறுதி கொடுத்திருக்கிறது. அதாவது இப்போது தேர்தல் அறிவித்தாயிற்று. தேர்தல் நெருக்கத்தில் 2000 ரூபாயை கணக்கில் வரவைத்து அவர்களைக் கவர்கிறார்களாம். எவ்வளவு வக்கிரமான மனசு கொண்ட அரசு? டெல்லியின் உக்கிர வெயிலில் அரை நிர்வாணமாய் எத்தனை ஆயிரம் விவசாயிகள் தங்கள் கடன்களை ரத்து செய்யக் கோரியும், உதவித் தொகைக்காகவும் போராடினார்கள்? ஒரே ஒரு சாதாரண மந்திரியாவது போய் அவர்களைப் பார்த்தார்களா? மோடிக்கு அவர்கள் அப்படிப் போராடுகிறார்கள் என்றாவது தெரிந்திருக்குமா ? பசிக்கு அவர்கள் கதறியபோதெல்லாம் துளி தண்ணீரைக் கூட வார்க்காதவர்கள், உயிர் போகவிருந்த தருணத்தில், தேனை எடுத்து நாக்கில் தடவி விட்டாற் போன்ற செயலைச் செய்திருக்கிறது பாசிஸ அரசு !
காமெடிக் காட்சிகள்
அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) நடந்த கும்பமேளாவில், அங்கு சுத்தம் செய்த சுகாதாரப் பணியாளர்களின் காலைக் கழுவி, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார் பிரதமர் மோடிஜி. நாட்டின் முதல் குடிமகனே ஆனாலும் அவர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்றால் கோவிலுக்குள்ளேயே அனுமதிக்காத கலாச்சாரம் ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் அவர்களின் கால்களைப் பிரதமரே கழுவுவாராம். அப்படிக் கழுவிவிட்டால் இனி நாட்டில் எந்தத் தாழ்த்தப்பட்டவர்களையும் யாரும் இழிவாக நடத்த மாட்டார்களாம். தேர்தல் நேரமென்றால் வீடு வீடாகப் போய் அவர்களை குளிப்பாட்டவும் செய்வார் பிரதமர். அவர்கள் குழந்தைகளுக்கு ஆய் கழுவி விட்டாலும் விடுவார் !
இறுமாப்புடன், சரக்கு மற்றும் சேவை வரி(GST)யை, மிகக் கடுமையான அளவுகளில் அறிமுகப்படுத்தி, நாட்டுப் பொருளாதாரத்தை நிர்மூலமாக்கிய மோடி அரசு, ஒவ்வொரு தேர்தல்களின்போதும், வரிச்சலுகை, நெகிழ்வுகளை வழங்க ஆரம்பித்தது. அதுவும், தங்களுடைய கோட்டைகளை இழந்தபிறகு, நள்ளிரவில் நிலவை நோக்கி, சூரிய நமஸ்காரம் செய்தது. பெட்ரோல் – டீசல் – எரிவாயு விலைகளிலும் இதே ஜிக் ஜாக்கைத்தான் பண்ணியது !
கடந்த இரண்டு மாதங்களாகத் தொலைக்காட்சிகளிலும், பண்பலை வானொலிகளிலும், நாளிதழ்களிலும், ஆட்டோ – வாடகைக் கார்களின் பின்புறங்களிலும், அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் மோடி முகத்துடன், ஏகப்பட்ட விளம்பரங்கள். அதற்கெல்லாம் எத்தனை கோடிகள் செலவு என்று கணக்கு பார்த்தால் நிச்சயம் அதிர்ச்சியில் நமக்கு மாரடைப்பு வரும். அரசு சாதனைகளை எதற்கு இவ்வளவு விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் எனக்குப் புரியவில்லை ? வீடு கட்டு, தொழில் தொடங்கு, ரோடு போடு, பெண் குழந்தைகளைப் படிக்க வை, லைட் போடு, கக்கூஸ் கட்டு. அடப்பாவிகளா, இதையெல்லாம் இந்தியாவிலேயே முதன்முதலாக நீங்கள்தான் செய்கிறீர்களா ? இதற்கு முன் எந்த அரசும், இதைச் செய்யவில்லையா ? உலக வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய விளம்பர வெறி பிடித்த ஒரு சைக்கோவை எவருமே கண்டிருக்க முடியாது !
2013 – 2014களில், குஜராத் பற்றி வந்த போட்டோஷாப் செட்டிங் பொய்களை நம்பிய முட்டாள்களில் நானும் ஒருவன். இப்ப அங்க ஃப்யூஸ் போச்சோ என்னமோ, இதோ மோடி கட்டிய வைகை அணை, இதோ மோடி மதுரையில் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை என்று போட்டோஷாப் செய்து, வடக்கில் பரவ விட்டிருக்கிறார்கள். அதுவும் சென்னையில் கலைஞர் கட்டிய, பிரம்மாண்ட சட்டசபை கட்டிடத்தை, ஏழாம் முறையாக அடிக்கல்கள் மட்டுமே நாட்டப்பட்டிருந்த, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையாக்கி இருந்தார்கள் !
கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டுமே 200க்கும் மேற்பட்ட அடிக்கல் நாட்டல்கள், என்றோ கட்டிய பாலங்களை, கட்டிடங்களைத் தன் பெயரால் திறந்து வைத்தல் என்று மோடி & கோ ஆடிய ஆட்டங்கள் சகிக்க முடியாதவை!
சண்டைக்காட்சிகள்
2G விவகாரத்தில் எந்த சி.ஏ.ஜி.யை வைத்து, உலக மகா பொய்யைச் சொன்னார்களோ, அதை வைத்தே ரஃபேல் போர் விமானங்களை சல்லிசாக வாங்கினார்கள் என்று, நாடாளுமன்றக் கூட்டத்தின் இறுதி நாளில் சொல்லவைத்தார்கள். ஆனால் கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கு? ரஃபேல் விவகாரத்தில் மறுசீராய்வு மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் அரசை குடாய ஆரம்பிக்க, அங்கே கண்ணீர்விட்டுக் கதறியழுதார் அட்வகேட் ஜெனரல். அய்யய்யோ, எங்க ரஃபேல் ஆவணங்களெல்லாம் திருட்டுப் போச்சே? அதுவும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திலிருந்து ? போச்சே போச்சே. நம்ம சவுக்கிதார்களின் லட்சணமே இவ்வளவுதான்! இவர்களால் ஆட்டுவிக்கப்பட்ட சி.பி.ஐ.க்கு என்னாச்சு தெரியுமா ?
சி.பி.ஐ இயக்குனர் நாகேஸ்வர ராவை மிகவும் கடுமையாகத் தண்டித்தது உச்சநீதிமன்றம். கவரிமான் இனமாக இருந்திருந்தால் இந்நேரம் அவர் நாண்டுக்கிட்டிருந்திருக்க வேண்டும். அவர் அப்படிப்பட்டவர் இல்லை அல்லவா ? அதனால் லட்ச ரூபாய் அபராதத்தையும், ஒரு நாள் முழுக்க கோர்ட்டில் முதுகைக் காட்டித் திரும்பி நின்றும் அவமானப்பட்டார்!
இங்கே தமிழகத்தில், இவர்களுக்காக மாரடிக்கும் குருமூர்த்தி, மாலன், சுமந்த் சி.ராமன், பத்ரி போன்றோர்களின் பேச்சுக்களையெல்லாம் பார்க்கும் போது, ஏதேது அதிமுககிட்ட 20 சீட்டுகள் கேட்பார்கள் போலிருக்கிறதே என எதிர்பார்த்தால் அவர்கள் கொடுத்தது, ஆமாம் அஞ்சே அஞ்சு சீட். அதுல ஒண்ணு தூத்துக்குடி, இன்னொன்று ராமநாதபுரம்.
பொழுதன்னிக்கும் இவர்கள் புலம்பி வந்த ‘ஊழல்வாத, அராஜக, திராவிடக் கழக’ கட்சிகளுடன் இவர்கள் கூட்டணி வைத்ததோடல்லாமல், கொடுத்த அல்ப சீட்டுகளையும் வாங்கி அமைதியாகச் சென்றதைக் கண்டு, அதிர்ச்சியில் மொத்த தமிழ்ச் சங்கி கூடாரமே உறைந்து போனது. பிறகு சமாளித்து, “விட்றா விட்றா EVM நம்ம பக்கம்தான, பாத்துக்கலாம்” என ஆறுதலும் கொண்டது!
நாடகம் விடும் வேளைதான் உச்சகாட்சி நடக்குதய்யா
நீரவ் மோடி யாருங்க? அவர் எப்ப கடன் வாங்கினார்? எதற்கு வாங்கினார்? எவ்வளவு வாங்கினார்? எவ்வளவு கட்டினார்/கட்டலை ? யாருக்கு இழப்பு? யார் ஆட்சியில் ஓடிப்போனார்? எங்கு ஓடிப்போனார்? இதற்கெல்லாம் எளிதான விடைகள், நிகழ்கால அரசியல் பதிவுகளை வாசிக்கும் அனைத்து மக்களுக்கும் தெரியும். எல்லாவற்றையும் செய்தது மோடி அரசு. பாஜாகவினர் என்னிடம் 542 கோடிகளை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டுதான் லண்டனுக்குத் தப்ப விட்டார்கள் என்று இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் நீரவ்மோடி. ஆனால் இவரைக் கைது செய்துவிட்டார்கள் என்று இங்கு மாலன்கள் பெருமைப்பட்டதைப் பார்த்துக் குமட்டல்தான் வந்தது!
ஊழல்கள் செய்யவும் மாட்டோம், செய்யவும் விடமாட்டோம். ஆம். நாங்கள் காவல்காரர்கள். சவுக்கிதார்கள் என்று தங்கள் பெயர்களின் முன்பு பொறித்துக் கொண்டு காமெடி செய்தார்கள் பாஜகவினர். அப்படி நீங்கள் ஏன் போட்டுக்கொள்ளவில்லை என்று சுப்ரமணிய சுவாமியிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்கள். அவர் சொன்ன பதில்தான் இன்றைய சூழலுக்கு மிக முக்கியமான ஒன்று.
நான் பார்ப்பனன். காவல் காக்கும் வேலையெல்லாம் எங்களுடையது அல்ல. அதெல்லாம் ‘அவர்கள்’ தொழில். எங்கள் வேலை, எங்கள் இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி மூலம், இவர்களைப் போன்ற ஆட்களை இன்ன இன்ன வேலைக்குத் தகுதியானவர்கள் எனத் தேர்ந்தெடுப்பது மட்டுமே!
தேசப்பற்று பாடல். நடித்தவர்களின் அறிமுகம். பிரியாவிடை.
ட்ரிங்ங்ங்ங்….திரை விழுகிறது.
நன்றி.
சங்கிவிலாஸ் நாடக சபா