முதலில் எனக்கும் வேம்புவுக்கும்தான் காம்பினேஷன் இருந்தது. நான்தான் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டு சிலுக்கின் பர்ஃபாமென்ஸையும் சேர்த்துப் பண்ணியதில் வந்தது வினை. நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்த யாரோ ஒருவர் நிகழ்வு ஏற்பாட்டாளரான சுப்ரமணியண்ணன் காதில் சென்று கடித்துவைக்க, நேராக சுப்ரமணியண்ணன் என்னிடம் வந்தார். “கதிரேசா… நேத்து ராத்திரி யம்மா பாட்டை மறுபடி போட்டு நீ மட்டும் ஆடு. ஒருத்தர் கேட்ருக்கார். நல்லா ஆடுறியாம். நீ மட்டும் தனியா ஆடு.’’ அது மிகப்பெரிய பாராட்டாகப்பட்டது எனக்கு. மைக்கில் வேறு ‘வேண்டுகோளுக்கிணங்க மறுபடியும்,  ‘நேத்து ராத்திரி யம்மா’ என்று சொல்ல விசில் சத்தம் பறந்தது. புகழின் உச்ச போதையில் முழு சிலுக்காகவே மாறி நேத்து ராத்திரி யம்மா பாட்டின் ஆரம்பத்தில் எஸ்.ஜானகி முக்கி முனகும் ‘ம்… ம்…’ என்பதற்கு அர்ப்பணிப்புடன் மேடையில் மல்லாந்து படுத்து இரண்டுமுறை உருண்டு எழுந்து இடுப்பு வளைத்து ஆடியதற்குப் பின்புதான் துரத்தல்களும் தப்பித்தல்களுமாய் மாறிப்போனது வாழ்வு.

அப்போது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். 11 வயசு என்று ஞாபகம். நாகப்பட்டினம்தான் பிறந்து வளர்ந்தது எல்லாம். நாகப்பட்டினம் என்றால் ஊரின் கடைசியில் என் வீடு. என் வீட்டிலிருந்து 10 நிமிடம் வேகமாய் நடையைப் போட்டால் பக்கத்து ஊரான புத்தூர் வந்துவிடும். என் வீட்டின் அருகில் வயல்வெளி இருந்தது. விளைச்சலும் இருந்தது. வரப்பில் கால்வைத்து வயல் வழியே நடந்துபோனால் பக்கத்து ஊரான புத்தூரில் யார் வீட்டு வயலிலாவது நிற்கலாம். மெயின் ரோட்டை ஒட்டி கொஞ்சம் இடம் விளைச்சல் இல்லாத வயல் வெளியாய் கிடந்தது. அந்த இடத்தில்தான் சுப்ரமணியண்ணன் வருடா வருடம் காணும் பொங்கல் அன்று பலவிதமான போட்டிகள் நடத்துவார். சுப்ரமணியண்ணன் டீச்சர் ட்ரெய்னிங் முடித்துவிட்டு வாத்தியார் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தவர். சுப்ரமணியண்ணனுக்கு சொந்தமாய் காய்கறித் தோட்டம் இருந்தது. அங்கு விளைந்த காய்கறிகளை சுப்ரமணியண்ணனின் அம்மா மார்க்கெட்டில் விற்றுக் காசாக்கி வருவார்கள். மொத்த விலைக்கும் விற்பதுண்டு. அம்மா கஷ்டப்பட்டு சம்பாரிக்கும் காசில் இப்படி ஊதாரித்தனமாய் செலவு பண்ணிக்கொண்டிருந்தார் பொறுப்பில்லாத சுப்ரமணியண்ணன். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் அம்மா, அக்கா, அண்ணன்கள் என்று யாராவது சினிமாவுக்குப் போனால் வீட்டின் கடைக்குட்டி என்பதால் துணைக்கு என்னையும் அழைத்துக்கொண்டு போய்விடுவார்கள். அப்படிப் பார்த்த சினிமாக்கள் என் ரத்தத்தில் ஊறிக்கிடந்தன. பார்த்த சினிமாக்களை அப்படியே ஒரு சீன் விடாமல் மறுநாள் வகுப்பிலும் தெருவிலும் நண்பர்களிடமும் நடித்துக் காட்டுவேன். அசல் சினிமா பார்ப்பது போன்ற உணர்வைத் தருவதால் என்னிடம் கதை கேட்க என் நண்பர்கள் எப்போதும் தயாராய் இருப்பார்கள். இதில் ஞாயிற்றுக்கிழமையானால் பக்கத்துத் தெருவிலிருக்கும் சாந்தி வீட்டுக்குப் போய்விடுவதுண்டு. சாந்தி வீட்டுக்குப் பக்கத்து வீடுதான் வேம்புவின் வீடு. சாந்தி, நான், வேம்பு எல்லோரும் ஐந்தாவது வரையில் தேர்முட்டி பள்ளியில்தான் ஒன்றாய்ப் படித்தோம். ஆறாம் வகுப்புக்குதான் தனித்தனி பள்ளிக்குப் போனோம். சாந்தி வீட்டுக் கொல்லைப்புறத்தில் நெல்லி மரங்கள் இரண்டு இருந்தன. புளிப்பும் இனிப்பும் கலந்து கட்டி இழுக்கும் சிறு நெல்லிக்காய்கள். நெல்லிக்காய் பறிக்கவும் மருதாணி பறிக்கவும் சாந்தி வீட்டுக்குப் போகும்போதெல்லாம் வேம்புவும் வந்துவிட்டால் அந்த வாரத்தில் நான் பார்த்த சினிமாக்கள் எல்லாம் திரை கட்டாமல் ஓடத் துவங்கிவிடும். சண்டைக்காட்சி என்றால் டிஷ்யூம் என்று வாயிலேயே பாம் வெடித்து, பாட்டுக் காட்சிக்கு நெல்லி மரத்தைச் சுற்றிப் பாடி ஆடிக் காண்பித்து கதை சொன்னதில் சாந்திக்கு நான் நன்றாக டான்ஸ் ஆடுவேன் என்று பட்டிருக்கிறது. சாந்தியும் சுப்ரமணியண்ணன் தங்கை பாப்பாவும் ஒரே வகுப்பு.

அந்த வருடம் மாட்டுப்பொங்கலுக்கு வெறும் கபடிப்போட்டிகள், ஓட்டப்பந்தயம் வைத்து சோப்பு டப்பா மட்டும் பரிசு கொடுக்காமல் கொஞ்சம் சிறப்பு சேர்க்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த சுப்ரமணியண்ணனுக்கு கலை நிகழ்ச்சி நடத்தலாம் என்று யாரோ ஓதி விட்டிருக்கிறார்கள். நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் திருவிழா ராத்திரிகளில் பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் வந்து கலை நிகழ்ச்சி நடத்திவிட்டுப் போவது சுப்ரமணியண்ணன் கண்ணை உறுத்தியிருந்தது போலும். காலையில் வழக்கமான போட்டி பந்தயங்கள் இரவு கலை நிகழ்ச்சிக்குப் பின் பரிசளிப்பு விழா என்று தீர்மானிக்கப்பட்டது. சாந்தியும் பாப்பாவும் பெரிய மனுஷிகளாட்டம் சுப்ரமணியண்ணனிடம் ‘‘கதிரேசன் நல்லா டான்ஸ் ஆடுவான். அவன ஆடவிடலாம்’’ என்று ஏத்தி விட்டிருக்கிறார்கள். சாந்தி மூலமாய் என் காதுக்கும் தகவல் வந்தது. ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே சாந்தி வீட்டில் ரிகர்சல் ஆரம்பமானது. நான் தனியாய் சில பாடல்களுக்கும் சாந்தியுடன் சேர்ந்து ‘இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ’ பாட்டுக்கும் வேம்புவுடன் ‘விளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான்’ பாட்டுக்கும் ‘நேத்து ராத்திரி யம்மா’ பாட்டுக்கும் ஆடுவதாய் தீர்மானமானது. சுப்ரமணியண்ணனிடம் இன்னின்ன பாட்டுகள் என்று எழுதித் தர அதைத் தனி கேசட்டில் பதிவுசெய்து கொடுத்துவிட்டார். சுப்ரமணியண்ணனை நேரில் பார்த்து நான் ஒரு சிறந்த கதை சொல்லி, டான்ஸ் மாஸ்டர், சினிமாக்காரன் என்பதெல்லாம் என் வீட்டுக்குத் தெரியவேண்டாம் என்று சொல்லியிருந்தேன். நிகழ்ச்சி அன்று என் குடும்ப சகிதம் அனைவரும் வந்து என் ஆட்டத்தைக் கண்டு களிப்பார்களென்று கனவிலும் நான் நினைக்கவில்லை என்பதே நிஜம்.

மாட்டுப்பொங்கல் அன்று பகலெல்லாம் பல்லைக் காட்டி இளித்துக்கொண்டு கிடந்த வானம் மாலை 5 மணிக்கு மேல் வேகமாய் இருட்டத் தொடங்கியது. அபாய எச்சரிக்கையாய் கடும் குளிரையும் சேர்த்து அனுப்பியது. சுப்ரமணியண்ணன் வீட்டில் இருந்த மூன்று மர பெஞ்சுகளை ஒன்று சேர்த்துப் போட்டு அதன்மீது கனமான ஜமுக்காளம் விரித்துச் சுற்றிலும் தார்ப்பாய்க் கொண்டு அடைத்து ஒருவழியாக ரெடிமேட் மேடையை ஏற்பாடு செய்திருந்தார். மொத்தமே 20 நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. காய்ந்த வயல்வெளி என்பதாலும் அந்தப் பகுதி மக்களுக்குத் தேவை ஒரு பொழுதுபோக்குதானே தவிர நாற்காலி இல்லை என்பதும் சுப்ரமணியண்ணனுக்குத் தெரிந்திருந்தது. மைக் செட் கட்டி பாட்டு போட்டது மட்டும் வெளிச் செலவாக இருக்கும். 6 மணிக்கு ஆட்டம் ஆரம்பமானது. முதல் பாடலாய் சலங்கை ஒலியின் ‘ஓம் நமச்சிவாயா’ என்ற பக்திப் பாடலுக்கு நான் மட்டும் ஆடினேன். வெள்ளை முழுக்கைச் சட்டை, மஞ்சள் நிறத்தில் தொளதொளவென ஒரு பேண்ட் சகிதம் அந்தப் பாட்டுக்கு நான் ஆடிய பரதத்தை நல்லவேளை கமல்ஹாசன் பார்க்கவில்லை. வேம்புதான் காஸ்ட்யூம் டிசைனர். ஏற்கனவே ஸ்கூலில் அந்தப் பாட்டுக்கு ஆடி தோற்றுப் போயிருந்த வெறியில் சலங்கை கட்டாமலே சன்னதம் கொண்டு ஆடினேன். மின்னல் மின்னியதில் அரண்டுபோன சுப்ரமணியண்ணன் சீக்கிரம் முடிப்பதற்காக இரண்டாவது பாடலான ‘இந்திரலோகத்து சுந்தரி’க்கு ஆடச் சொல்லிவிட்டார். புடவை கட்டிக்கொண்டு வந்த சாந்தி நான் சொல்லித் தந்த ஸ்டெப் ஒன்றுகூட மாறாமல் கட்டியிருந்த புடவைக்கும் வலிக்காமல் ஆடி முடித்துப்போக, நான் வழக்கம்போல் கலையுடன் ஒன்றி ஆடினேன். என் முக பாவனைகள் பக்கத்திலிருக்கும் சாந்திக்கே சரியாகத் தெரியப் போவதில்லை என்பதெல்லாம் என் மூளைக்கு அப்போது உறைக்கவில்லை.

அடுத்த பாட்டு ‘வௌக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான்’. வேம்புவும் நானும் அவரவர் இடுப்பில் இரு கையையும் ஊன்றிக்கொண்டு விளக்கு ஏற்றுவது போலவும் உச்சி வெயிலைச் சுட்டிக் காட்டுவது போலவும் மிக எளிதான ஸ்டெப்சில் வெகு ரிலாக்ஸாக ஆடி முடித்த தருணத்தில் வந்தது அடுத்த பாட்டு. ‘நேத்து ராத்திரி யம்மா’ பாட்டு போட்டதுமே கூடியிருந்த கூட்டம் வெகு ஜோராகக் கைத்தட்டியதில் எனக்கு உற்சாகம் மண்டைக்கு ஏறியதில் வேம்புவுக்கு சொல்லிக் கொடுத்த ஸ்டெப்ஸையும் சேர்த்து நானே ஆடத் தொடங்கினேன். முந்தைய பாட்டுக்கெல்லாம் சாதாரணமாக இருந்த அந்த முழுக்கைச் சட்டையின் கடைசி இரண்டு பட்டன்கள் சிலுக்கை மனதில் வைத்து தங்களை விடுவித்திருந்தன. நான் சரியாகத் தொப்புளின்மீது முடிச்சு போட்டு சுருட்டி விட்டிருந்தேன். ஆடி முடித்து திரைக்குப் பின்னால், மேடைக்குக் கீழே அமர்ந்திருந்தபோது சுப்ரமணியண்ணன் தனியாய் என்னை மட்டும் ஆடச் சொன்னார். என்னை யார் ஆடச் சொல்லியிருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் கலந்து கூட்டத்தை முதன் முறையாகப் பார்த்தேன். ஆச்சரியம் மின்னி வெட்டியது. 20 பேர் அமரும் நாற்காலிகள்தானே என்ற எண்ணம் மட்டும்தான் எனக்குள் இருந்தது. ஆனால் நேரம் செல்லச் செல்ல ரோட்டில் போய்க்கொண்டிருந்த டூ வீலர் வாகனங்களில் இருந்தவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு நின்ற இடத்திலிருந்தே ஆட்டத்தைப் பார்க்கத் தொடங்கியிருந்தார்கள். கீழேயும் நல்ல கூட்டம். 100 பேர் மேல் கூடியிருப்பார்கள்.

நான் தனியாக ஆடுவதற்குத் தயார் செய்து வைத்திருந்த எந்தப் பாட்டுக்கும் ஆட முடியாமல் மழை தன் முதல் துளியை விசிறியிருந்தது. லேசான சாரலிலேயே சுப்ரமணியண்ணன் பரிசுகள் வழங்க ஆரம்பித்துவிட்டார். காற்று பலமாக வீச ஆரம்பித்ததுமே மைக்செட்காரர் எல்லாவற்றையும் பொட்டி கட்டிக்கொண்டு புறப்பட, தொண்டை கிழிய கத்தி பரிசினைப் பெயர் சொல்லி அறிவித்துக்கொண்டிருந்தார் சுப்ரமணியண்ணன். எனக்கு ரோஸ் கலரில் சோப்பு டப்பா பரிசுப்பொருளாய் கிடைத்தது. தமிழ் இலக்கியப் போட்டிகளில் வென்று முதல் பரிசாக குண்டான இங்க் பேனா இரண்டுமுறை வாங்கியது போக வெளியில் அதுதான் என் முதல் பரிசு. எல்லாம் முடிந்து மூன்று பெஞ்சுகளைவிட்டு- மேடை என்றும் சொல்லலாம்- கீழே இறங்கியதும் குடையுடன் என் அருகில் வந்த என் அம்மா மழையைத் தடுத்து என்னை வீட்டுக்குக் கூட்டிப்போனார். என் டான்ஸைப் பார்க்க அக்காக்கள் மூவரும் அம்மாவோடு வந்திருக்கிறார்கள். நான் மேடையில் மிக பிசியாக இருந்ததால் அவர்களைக் கவனிக்கவில்லை. ‘‘சொல்லாம கொள்ளாம இப்படிப் பண்ணுவியா?’’ என்று சொல்லிக் கடிந்துகொண்ட அம்மா வீட்டுக்கு வந்ததும் தலை துவட்டிவிட்டார். வேறு ட்ரெஸ் மாற்றச் சொல்லி நடு வீட்டில் என்னை உட்காரவைத்து கைநிறைய மிளகாயும் உப்பும் வைத்துக்கொண்டு மூன்றுமுறை என் தலையைச் சுற்றி என்னை எச்சில் துப்பச்சொல்லி அப்படியே அடுப்பில் கொண்டுபோய் போட்டார். ‘‘எல்லா கண்ணும் இவன்மேலதான் இருந்துச்சி. எப்படி ஆடுறான் பாத்தியா… ஆடுறான் பாத்தியான்னு ஒரே பொறாம பேச்சுதான்’’ முணுமுணுத்துக்கொண்டே படபடவென்று எரிந்து போனது கண் கொள்ளா திருஷ்டி.

பொங்கல் லீவெல்லாம் முடிந்து பள்ளிக்கூடம் செல்லும்போதுதான் பிரச்சனை ஆரம்பித்தது. தெருவில் ஒன்றாக கோலி, பம்பரம், கிட்டிப்புள் விளையாடும் மாணிக்கம்தான் முதலில் ‘‘டேய் சிலுக்கு நில்லுடா. நானும் வரேன்’’ என்றான். எனக்குத் தாங்க முடியாத கோபம் வந்தது. அப்படிக் கூப்பிடக் கூடாதெனப் பலமுறை எச்சரித்தும் அவன் கேட்ட பாடில்லை. வகுப்பில் எல்லோரிடமும் நான் மேடையில் டான்ஸ் ஆடியதைச் சொல்லி ‘‘சிலுக்கு மாதிரியே ஆடுறாண்டா’’ என்பதை மறுபடி மறுபடிச் சொல்லி என்னைக் கோபத்தின் உச்சிக்கே கொண்டுபோனான். ஓங்கி அவன் முகத்தில் அறைந்தேன். என் கைதான் சுரீரென்று வலித்தது. அவன் முகம் சிவந்து கண்கள் கலங்கி ‘‘என்கூட இனிமே பேசாதடா சிலுக்கு’’ என்று திட்டிவிட்டுச் சென்றுவிட்டான். அழுகையும் ஆற்றாமையுமாக வீட்டுக்குத் திரும்பினேன். அந்தவார லீவில் சாந்தி வீட்டுக்குப் போகவில்லை. சுப்ரமணியண்ணன் என் வீட்டுக்கே வந்து என்னை அவர் தோட்டத்துக்குக் கூட்டிப்போனார். கண்ணுக்கெட்டிய தொலைவுவரை தோட்டம் பச்சைப் பசேலென்று குளிர்ந்துகிடந்தது. தோட்டத்தின் முடிவில் கயிற்றுக் கட்டில் கிடந்தது. அதில்தான் சுப்ரமணியண்ணன் படுத்து ரெஸ்ட் எடுப்பார் போலும். கட்டிலில் என்னை அமரவைத்துவிட்டு வெளியில் சென்றார். யாராவது வியாபாரிகள் பணம் தருவதற்கும் காய்கறிகள் வாங்குவதற்கும் வந்து போய்க்கொண்டு இருந்தார்கள். சிறிது நேரத்தில் கட்டிலில் வந்து அமர்ந்த சுப்ரமணியண்ணன் என்னைத் தன்மடியில் அமரவைத்துக்கொண்டார். வியாபாரிகள் வரும்போதெல்லாம் என் உடம்பை விட்டு தன் கைகளை விலக்கிக்கொள்வதும் அவர்கள் சென்றபிறகு என் உடம்பைத் தடவித் தருவதுமாக இருந்தார். அன்று நடந்த ஆட்டத்தைப் பற்றிப் பேசினார். வீட்டில் என்ன சொன்னார்கள் என்று கேட்டார். அவர் மடியிலிருந்து என்னை இறக்கவேயில்லை. மதியம் ஆனதும் சாப்பிட நான் என் வீட்டுக்கு வந்துவிட்டேன். ‘‘ஒனக்கு டான்ஸ் நல்லா வருது. விட்ராத. தொடர்ந்து ஆடிப் பழகு. சினிமால பெரிய ஆளாகிடலாம்’’ என்று சொன்னது மட்டும் காதை விட்டு வெளியேறாமல் உள்ளேயே இருந்தது.

எங்கள் வீட்டுக்கு எதிரே சற்றுத் தள்ளி ஈபி ஆபீஸ். ஆபீஸ் உள்ளே பின்பக்கமாய் வரிசையாய் மூன்று கொடுக்காப்புளி மரங்கள். பச்சை உறைக்குள்ளே வெள்ளையாய் மலர்ந்திருக்கும் கொடுக்காப்புளியின் ருசியில் ஈரம் மிதந்திருக்கும். கைக்கெட்டும் தொலைவில் குண்டு குண்டாய் காய்த்துத் தொங்கும். கோடை விடுமுறையில் தெருப் பசங்களோடு சேர்ந்து காயடிக்கப் போவதுண்டு. ஈ.பி. குவார்ட்டர்ஸ் வீடுகள் தாண்டித்தான் கொடுக்காப்புளி மரங்கள் இருக்கும் இடம். கேட் ஏறிக் குதித்து யாருக்கும் தெரியாமல் உள்ளே சென்று காய் பறித்து வந்துவிடுவோம். அணில் கடித்துக் கீழே போட்டிருக்கும் பழங்கள் பொறுக்கத்தான் பெரும் சண்டையே வரும். ஆம்பளைப் பசங்க எங்களோடு வேம்பும் சாந்தியும் சரிக்குச் சரியாய் மல்லு கட்டுவார்கள். ஒருநாள் காய் பறித்துக் கொண்டிருக்கும்போது அங்கு தங்கியிருக்கும் ஒரு ஆபீஸர் எங்களைப் பார்த்துவிட்டார். டவுசர் பாக்கெட் நிறைய கொடுக்காப்புளி காய்களோடு அவர் முன் போய் நின்றோம். எங்களைக் கட்டிப் போடப்போவதாகவும் போலீஸில் பிடித்துக் கொடுக்கப் போவதாகவும் மிரட்டிக் கொண்டிருந்தார். பயத்தில் அழுகை திமிற நின்றிருந்த என்னையே உற்றுப் பார்த்தவர், ‘‘நீதான அன்னைக்கு சிலுக்கு டான்ஸுக்கு ஆடுன பையன்’’ என்றார். உடனே வேம்புவின் அண்ணன் மூர்த்தி ‘‘ஆமா சார்… இவன் சூப்பரா ஆடுவான் சார். சிலுக்கு மாதிரியே ஆடுவான் சார். நாங்க இவனை சிலுக்குன்னுதான் சார் கூப்பிடுவோம்’’ என்றான். ஏற்கனவே அன்றைய டான்ஸுக்கு நான் போட்டிருந்த பேண்ட் இவனுடையதுதான் என்று ஊர் முழுவதும் தம்பட்டம் அடித்தவன் மூர்த்தி. மறக்காமல் ஈ.பி. ஆபீஸரிடமும் அதைச் சொல்லிவைத்தான். நான் அவனை முறைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். ‘‘அதான பாத்தேன். அன்னைக்கு நல்லா ஆடுனடா… நான்தான் பாதியோட வந்துட்டேன். இன்னிக்கு இங்க ஆடு. நான் போலீஸ்கிட்ட சொல்லல. உங்கள விட்டுடுறேன்’’ என்றார். உடனே மூர்த்தியும் ‘‘அதெல்லாம் ஆடுவான் சார். டேய் சிலுக்கு ஆடுறா’’ என்றான். நான் காய் பறித்து இவரிடம் மாட்டிய விஷயம் என் அப்பாவுக்குத் தெரியாமல் இருந்தால் போதும் என்றிருந்தது. டவுசர் பாக்கெட்டிலிருந்து காய்களை வெளியே எடுக்காமலே ஆடத் தொடங்கினேன். அந்தப் பாட்டு முழுவதும் எனக்கு மனப்பாடம் என்பதால் பாடிக்கொண்டே ஆடியதில் கஷ்டம் தெரியவில்லை. ஆனால் அவர் வீட்டு ஹால் சிமெண்ட் தரையில் கால்களை உதைத்து ஆடியதுதான் வலித்தது. ‘அந்தப்புரம் வந்தவுடன் அந்தரங்கம் கண்டவுடன் ஆசைகள் அப்பப்பா’ என்று சுற்றி தரையில் அமர்ந்தபோது மூச்சிறைத்தது. அங்கிருந்து புறப்படும்போது என்னிடம் தனியாக ‘‘நாளைக்கு காய் பொறுக்கி வைக்கிறேன். வந்து என்னைப்பாரு. நான் தர்றேன்’’ என்றார்.

ஒரு வாரம் கழித்து அம்பிகா டீக்கடையில் அவரைப் பார்த்தேன். கைலி கட்டியிருந்தார். டீ வாங்குவதற்கான தூக்கு வாளியை டீ மாஸ்டரிடம் தந்துவிட்டு நின்று கொண்டிருந்தேன். டீ குடித்துக்கொண்டிருந்த ஈபிக்காரர் என்னைப் பார்த்ததும் ‘‘ஏண்டா காய் பொறுக்கி வைக்கிறேன். வான்னு சொன்னேன்ல. ஏன் வரல்ல’’ என்றபடி என் கைகளை இறுகப் பிடித்தார். டீக்கடை வாசலில் அவரவர்கள் அவரவர் வேலைகளில் மூழ்கியிருந்தனர். ஈபிக்காரர் என்னை அவர் அருகில் இழுத்து இடுப்போடு சேர்த்து அணைத்துப் பிடித்தார். அவர் உடம்போடு நான் ஒட்டியிருக்க, என்னை அவர் விலக்குவதும் அணைப்பதுமாய் இருந்தார். ஏதோ உறுத்தலாகத் தெரிய அவர் பிடியைவிட்டு வெளியேற நினைத்தேன். ‘‘என்னடா பொட்டக்குட்டி மாதிரி நெளியிறே’’ என்றபடி மேலும் இறுக்கி அணைத்தார். என் வயிற்றில் கைவைத்து அவர் தொடையோடு சேர்த்து அணைத்தவர் என் காதில் ‘‘இப்போ வர்றியா காய் பறிக்கலாம்’’ என்றார். டீ மாஸ்டர் தந்த வாளியை வாங்கிக்கொண்டு ஈபிக்காரரைப் பார்த்து ‘‘இன்னொரு நாளைக்கு வர்றேன்’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு விரைந்தேன்.

‘‘இவன் ஆட்டத்துக்கு முன்னாடி சிலுக்கு தோத்தா போ…’’ என்றார் பக்கிரியண்ணன். இட்லி தோசைக்கு மாவரைக்க பக்கிரியண்ணன் வீட்டுக்குதான் செல்ல வேண்டும். கிலோவுக்கு இவ்வளவு என்று காசு வசூலிப்பார் பக்கிரியண்ணனின் அம்மா. மூன்று கிரைண்டர்கள் சாயங்காலம் 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை ஓடிக்கொண்டிருக்கும். ‘‘எங்கே… வெளிய தெருவு கௌம்ப முடியுதா… அன்னிக்கு நானும் வந்துருந்தா ஒன் ஆட்டத்த பாத்துருப்பேன். ஹ்ம்ம்ம்’’ என்றார். ‘‘அதுக்கென்ன… இப்போ இங்க ஆடுடான்னா ஆடிட்டுப் போறான். டேய் ஒரு ஆட்டம் போடுடா’’ என்றார் பக்கிரியண்ணன். ‘‘ம்ஹும்’’ என்று தலையாட்டினேன். ‘‘வெக்கப்படாதடா… வேணும்னா ரூமுக்குப் போயிடலாம். அம்மா பாக்கணும்னு ஆசப்படுறாங்கள்ல… காசு தரேன்டா. சும்மா ஆடு’’ என்றார் என் கையைப் பிடித்து நெரித்தபடி. ‘‘எங்க அம்மா இனிமே எங்கையும் ஆடக் கூடாதுன்னு சொல்லிடுச்சி. தெரிஞ்சா அடிக்கும்’’ என்றேன் பொய்யாய். எவ்வளவு வற்புறுத்தினாலும் ஆடிவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தேன். ‘‘யாருக்கும் தெரியாதுடா… ஏன் இப்பிடி பயப்படுறே… அதெல்லாம் ஆடுவான். நீ பாரும்மா’’ என்றார். பக்கிரியண்ணன் வீட்டில் அன்று நான் ஆடவில்லை. அதன்பின் எங்குமே ஆடவில்லை.

ப்ளஸ் டூ முடிப்பதற்குள் மூன்று அக்காக்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அப்பாவின் மரணம் தொடர்ந்து அம்மாவின் மரணம் என்று எங்கள் குடும்பம் கொஞ்சம் கலகலத்துப்போனது. சொந்த இடத்தை விற்று அண்ணன்களும் அக்காக்களும் பங்கு போட்டுக்கொண்டார்கள். நான் பெரியண்ணனோடு செல்வதாய் தீர்மானமாயிற்று. பெரியண்ணன் திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் செட்டிலானவர். எனது கல்லூரிப் படிப்பும் எதிர்காலமும் சென்னையில்தான் என்று முடிவானது. பிறந்து வளர்ந்து வாழ்ந்த நாகப்பட்டினத்தை விட்டு நிரந்தரமாய்ப் பிரிவது என்று தீர்மானமான அன்றுதான் வேம்புக்குக் கல்யாணம் ஆகியிருந்தது. தெருக்காரர்களுக்கு யாருக்கும் சொல்லாமல் உறவுகளுக்குள் சொல்லி முடித்த கல்யாணம். கடைசியாய் ஒருமுறை என் வீட்டைப் பார்த்துவிட்டு அண்ணனுடன் பஸ் ஸ்டாண்டுக்குப் போகும் வழியில் எதிரே மாப்பிள்ளையுடன் வேம்பு மணக்கோலத்தில் வந்தது, 22 வருடம் கழித்து இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது. என் தொழில் நிமித்தம் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் நான் பிறந்த ஊருக்கு வந்திருக்கிறேன். ஆனால் சொந்த ஊரல்ல. காரில் ஊரை ஒரு சுற்று சுற்றியதில் ஏகப்பட்ட மாற்றங்களுடன் ஊர் விரிந்திருந்தது. எங்கள் வீடு இருந்த இடத்தில் இன்ஜினீயரிங் வொர்க்‌ஷாப் ஒன்று இருந்தது. பழைய கிராமத்து வாசனைகள் அற்றுப்போய் முழு நகரமாக மாறியிருந்த இடத்தில் ஏகப்பட்ட கட்டிடங்கள். ஈபி ஆபீஸ் அப்படியே இருந்தது. ஊருக்கே மின்சாரம் விநியோகம் செய்யும் இடம் மாற வழியில்லை. ஆனால் அந்த வயல்வெளிகளெல்லாம் காணாமல் போய் நான் மேடை போட்டு ஆடிய இடத்தில் ‘வெங்கடேஸ்வரா இன்ஜினீயரிங் லேத் ஒர்க்ஸ்’ அருகில் ‘ஜி.கே. திருமண மண்டபம்’ அதற்குப் பக்கத்தில் ‘அப்பு வெல்டிங் ஒர்க்ஸ்’ என்று ஏகப்பட்ட கிரீஸ் கறைகளுடன் இரைச்சல் சத்தத்துடன் பழைய அடையாளங்கள் அழிந்து புதியதோர் நகரமாய் கண்முன் இருந்தது ஊர்.

இந்த ஊரைவிட்டுப் போனாலாவது நான் சிலுக்காய் வாழ்ந்த சில நாட்கள் என்னைவிட்டு மறைந்துபோகும் என்பதற்காகத்தான் இங்கிருந்து சென்றேனோ என்று தோன்றியது. சுப்ரமணியண்ணனும் ஈபிக்காரரும் என்னிடம் நடந்துகொண்டதன் அர்த்தம் அப்போது புரியவில்லை. புரிந்த சமயம் அருவருப்பாய் இருந்தது. எத்தனை பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்திருக்கிறோம் என்று ஆசுவாசமாய் இருந்தது.

சென்னைக்குச் சென்றபின்னும் பல நாட்களுக்கு அந்தப் பெயர் எனக்கு மட்டும் அலர்ஜியாய்தான் இருந்தது. எல்லோரையும் மயக்கி தன்வசம் இழுக்கும் ஒரு பெயர் எனக்கு மட்டும் தாங்க முடியாத கசப்பைத் தந்தபடி இருந்தது. போன் வந்தது. எடுத்துக் காதில் வைத்தேன். ‘‘டைரக்டர் சார் உங்களுக்காக வெயிட்டிங்’’ என்றான் என் அசிஸ்டெண்ட். காலேஜ் முடித்து சினிமா ஆசையில் சினிமாவுக்குள் நுழைந்து தெரிந்த வேலையைச் செய்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பன்ச் பலராமன் மாஸ்டரிடம் 15 படங்களுக்கு மேல் அசிஸ்டெண்ட்டாக வேலை பார்த்து இப்போது தனியாகப் படம் பண்ணத் தொடங்கியிருக்கிறேன். எங்கெங்கோ நான் விரிந்து பரந்திருந்தாலும் என் வேர் என்பது நான் பிறந்த ஊர்தான். அந்த நினைப்பில் எந்த மாற்றமுமில்லை. சுப்ரமணியண்ணனின் கருநாக்குச் சொல்தானே இப்போதும் பலித்திருக்கிறது. ‘சினிமாவுல பெரிய ஆளாகலாம்’ என்பது நாள் கடந்தாலும் பலித்துவிட்டதே. தியேட்டரில் படம் பார்க்கும்போது டைட்டில் கார்டில் ‘சண்டைப்பயிற்சி- கராத்தே கதிர்’ என்று வரும்போது கைத்தட்டுங்கள். கைத்தட்டலில் எழும் போதை என்பது எத்தனை உச்சம் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்தானே. அதுதானே ஒருவனை இந்த நிலை வரைக்கும் கொண்டுவந்து விட்டிருக்கிறது. மகிழ்ச்சியாய் கைத்தட்டுங்களேன்.