தமிழர்கள் ஏன், எப்போதும் தமிழுக்காகப் போராட நிர்பந்திக்கப்படுகிறார்கள்? வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி நிகழ்கிறதா? அமித் ஷா, இந்தியை முதன்மைப்படுத்திப் பேசியபோது, தமிழகம் மட்டும் ஏன் கொந்தளித்தது? அமித் ஷா கவர்னர்மூலம், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அழைத்துத் தன் பேச்சிற்கு விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. உண்மையில், தமிழர்கள் இந்தி திணிக்கப்படுவது குறித்து அதிக அளவில் அச்சப்படுகிறார்களா? இந்தக் கேள்விகள் எண்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மொழிப்போரின் வரலாற்றோடு தொடர்புடையது. 1938லிருந்தே தமிழகம், தனிக்குரலாக இந்திக்கு எதிராகப் போராடிக்கொண்டே இருக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழர்கள் ஒருகாலத்தில் திராவிட நாடு கோரிக்கை வரை சென்றார்கள். உலக வரலாற்றிலேயே ஒரு மொழிக்காக நடந்த போரில், இவ்வளவுபேர் உயிரிழந்து இரத்தம் சிந்தியது வேறெங்கும் இல்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்திக்கு எதிரான போராட்டம் மட்டும்தானா?
நிச்சயமாக இல்லை. இந்தி என்பது ஒரு மொழியைக் கற்பது தொடர்பான பிரச்சினை அல்ல. அதுவொரு அரசியல் ஆதிக்கத்தின் கருவி, ஒரு பொருளாதார ஆதிக்கத்தின் கருவி. இதை இன்று மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்ட, இந்தி பேசாத பல மாநிலங்கள் உணர்ந்து இந்திக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கின்றன. இந்தியை ஏற்றுக்கொண்ட மாநிலங்கள் இந்தியினால் தங்களுடைய தாய்மொழியின் தனித்துவமும் பண்பாடும் எவ்வாறு சிதைக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் காலதாமதமாகவே உணர்ந்துகொண்டன. அன்று இந்திக்கு எதிராக தமிழகம் மூட்டிய தீ, இந்தி பேசாத பல மாநிலங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்பது என்பது இந்தி பேசும் வடமாநிலங்கள், இந்தி பேசாத பிற மாநிலங்கள்மீது செலுத்தும் பொருளாதார, அரசியல் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தும் போர் என்பதை புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கின்றன. இதைத்தான் எண்பது ஆண்டுகளுக்குமுன்பே திராவிட இயக்கமும் தமிழ்த்தேசிய இயக்கங்களும் கண்டுகொண்டன. இந்த வரலாற்றுப் புரிதலை தமிழ்ச்சமூகம் பெற்றது தற்செயலானதல்ல. கி.பி. 12ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழ்மொழி அந்நிய படையெடுப்பாளர்களாலும் கலாச்சார ஊடுருவல்கள் காரணமாகவும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. தமிழின் உயரிய செழுமையான மொழித்திறன் சிதைக்கப்பட்டு, பிறமொழிக் கலப்பால் முக்கியமாக, சமஸ்கிருதத்தின் தாக்கத்தால் ‘மணிப்பிரவாளம்’ என்ற பெரும் அவலத்தை அடைந்தது. 1940கள் வரைகூட, எழுதப்பட்ட தமிழ் உரைநடை நூல்களை எடுத்துப் பார்த்தால் அவை தமிழ்தானா? என்று அஞ்சும் அளவுக்கு தமிழ் சீரழிக்கப்பட்டது. இந்த சீரழிவுக்கு எதிராகத்தான் தமிழ்த்தேசிய இயக்கமும் திராவிட இயக்கமும் எழுந்துவந்தன. திராவிட இயக்கத்துக்கு மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, ஆண்-பெண் ஏற்றத்தாழ்வுகள் ஒழிப்பு எனப் பல முக்கிய நோக்கங்கள் இருந்தபோதும், மொழி அரசியல் அதனுடைய முதன்மையான நோக்கமாக இருந்தது. திராவிட இயக்கம், இரண்டு வழிகளில் இந்த மொழி அரசியலை முன்னெடுத்தது. ஒன்று, இந்தி திணிப்புக்கு எதிரான சமரசமற்ற கடும் போராட்டம். இந்தியா முழுக்க மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டபோதும் தமிழகம் அதிலிருந்து விலக்குப் பெற்று, இருமொழிக் கொள்கையில் உறுதியுடன் நின்றது. மற்றொன்று, சமஸ்கிருதம் கலந்த நல்ல தமிழை ஜனநாயகப்படுத்தியது. திராவிட இயக்கம், பொதுமேடைகளிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும், அது நடத்திய நூற்றுக்கணக்கான பத்திரிகைகளிலும் இந்தத் தமிழ் மீட்புப்பணி பேரியக்கமாகச் சென்றடைந்தது. அதுமட்டுமல்ல; பழந்தமிழ் பேரிலக்கியங்கள் மக்களிடம் பரவலாகக் கொண்டுசெல்லப்பட்டன, திருக்குறளும் சிலப்பதிகாரமும் தமிழர்களின் அடையாளம் என்பதை திராவிட இயக்கம் கட்டியெழுப்பியது. குறளும் சிலம்பும், சங்க இலக்கியத் தொகைநூல்களும், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடமாயின. ஊர்தோறும் மேடைகளில் அவை முழங்கப்பட்டன. தமிழர் பண்பாடு சமயம்சாராத, ஒரு இயற்கைசார் பண்பாடு என்பதை இந்தத் தமிழ் அடையாளப் பண்பாட்டு உருவாக்கம் நிலைநிறுத்தியது. பெரியார் மூட்டிய இந்த நெருப்பை தமிழ் மனங்கள் அனைத்திலும் நிலைநிறுத்திய பெருமை அண்ணாவுக்கும் கலைஞருக்குமே சாரும். அவர்கள் அரசியல் அதிகாரத்தின்மூலம் இதை வென்று காட்டினார்கள். இப்படித்தான், பல நூற்றாண்டுகளில் பண்பாட்டுப் பேரழிவிலிருந்து தமிழ் மொழியும் தமிழ்ச்சமூகமும் மீண்டுவந்தது. அதேசமயம், தங்களுடைய வளமான மொழி மற்றும் இலக்கிய மரபை நீண்டகாலம் அந்நியர்களிடம் பறிகொடுத்திருந்த ஒரு இனம், எப்போதும் அதுகுறித்த நினைவுகளுடனும் அச்சத்துடனும் இருப்பது இயல்பானது. ஒடுக்கப்பட்ட ஒரு பண்பாட்டு வெளியிலிருந்து உருவாகிவரும் இந்த உணர்வை பிறரால் புரிந்துகொள்ளமுடியாது. இந்தி எதிர்ப்புப் போராட்டம், இன்றளவும் தமிழகத்தில் நீறுபூத்த நெருப்பாக எரிந்துகொண்டிருப்பதன் வரலாற்று உளவியல் பின்னணி இதுதான்.
பாஜக மற்றும் இந்தி ஆதரவாளர்கள் ஒருபோதும் தமிழகத்தின் இந்த வரலாற்றுக் காயங்களையோ, உணர்வுகளையோ புரிந்துகொள்வதில்லை. அதுமட்டுமல்ல; தாய்மொழியைப் பாதுகாப்பதன்மூலமே ஒரு சமூகம் தன்னுடைய அரசியல், பொருளாதார நலன்களைப் பாதுகாக்கமுடியும் என்பதை திராவிட இயக்கம் ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டது. தமிழகம் என்று மனித வளர்ச்சி சார்ந்த குறியீடுகள் பலவற்றில் தொடர்ந்து முன்னணியில் இருப்பதன் காரணம், தமிழையும் தமிழர்களையும் மையமாகக் கொண்ட ஒரு மொழி, அரசியலையும் அதற்கேற்ற ஒரு பொருளாதாரக் கட்டமைப்பையும் உருவாக்கியதுதான். திராவிட இயக்கம், ஆட்சியதிகாரத்தின்மூலம் இந்தப் பணியை தொடர்ச்சியாகச் செய்துவந்திருக்கிறது. மையநீரோட்டத்திலிருந்து தனது அரசியல், பொருளாதார நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு தமிழ் அடையாளம் சார்ந்த அரசியலே தமிழகத்திற்கு பெரிதும் அரணாக இருந்தது. இதனை வெறுமனே இந்திமீதான வெறுப்பு அல்லது தமிழ்மீதான பற்று மட்டுமே எனப் புரிந்துகொள்பவர்கள் – சமூக வரலாற்றுப் பார்வையற்றவர்கள். பண்பாட்டு அரசியலும் பொருளாதார வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டவை.
உதாரணமாக, தமிழகம் இந்தியைப் புறக்கணித்து தமிழோடு ஆங்கிலம் மட்டும் போதும் என எடுத்த நிலைப்பாடு, தமிழகத்தின் நவீனமயமாக்கலுக்கும் தொழில் வளர்ச்சிக்கும் பெரிதும் காரணமாக அமைந்தது. உலகமயமாதலுக்குப் பிறகு தகவல் தொழில்நுட்ப தொழிலின் பெரும் அலை இந்தியாவிற்கு வந்தபோது, அதைப் பெரிதும் வரவேற்று உள்வாங்கிக்கொண்ட மாநிலமாக தமிழகம் இருந்தது, தற்செயலானதல்ல. தமிழகத்தில் அதிகளவில் ஆங்கிலம் கற்ற இளைஞர்கள் இருந்ததால் இயல்பாகவே தகவல் தொழில்நுட்பத் தொழிலின் வளர்ச்சி தமிழகத்தை வந்தடைந்தது. இங்கு ஐ.டி. பூங்காக்கள் உருவாக்கப்பட்டதும் தகவல் தொழில்நுட்பத் தொழிற்துறை சார்ந்து இலட்சக்கணக்கான இந்தியர்கள் உலகெங்கும் பணிபுரிவதற்கான வாய்ப்பைப் பெற்றதும் இந்தப் பின்புலத்தில்தான். ஆனால் தமிழையும் ஆங்கிலத்தையும் முதன்மைப்படுத்தி தமிழகம் கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் அடைந்த வளர்ச்சியை விழுங்குவதற்கு இந்தி பேசும் மாநிலங்களும் அவற்றைச் சார்ந்திருக்கும் மத்திய அரசும் கடுமையாக முயற்சித்துவருகின்றன. இந்தியைப் பரப்புவது மட்டுமல்ல; ஆங்கிலத்தை எப்படியாவது பின்னுக்குத் தள்ளவேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். அதற்காகவே இந்தியை கட்டாயமாக்கும் பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. அதோடு, தமிழை முதன்மைப்படுத்திச் செயல்பட்டுவந்த கல்விக் கட்டுமானத்தைத் தகர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தின்வழி தமிழர்கள் பெற்றுவந்த வாய்ப்புகள் சிதைக்கப்பட்டு, இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழகத்தின் தொழிற்துறையிலும் அரசுப்பணியிலும் நவீன குடியேற்றங்களை, ஆக்கிரமிப்புகளைச் செய்வதற்கு மத்திய அரசின் மொழிக்கொள்கை பயன்படுத்தப்படுகிறது. தமிழகம், இந்திக்கு எதிராக நடத்தும் போராட்டம் இப்படித்தான், ஒரு மாநிலத்தில் அனைத்து நலன்களுக்குமான போராட்டமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, தமிழைக் கொண்டாடுவதுபோன்ற ஒரு போலித்தோற்றத்தை தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டே இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. பாரதியார் பாடல், கணியன் பூங்குன்றனின் பாடல், புறநானூற்றுப் பாடல் எதிலிருந்தாவது இரண்டு வரியை ஆங்காங்கே எடுத்துப் பேசினால் தமிழர்கள் ஏமாந்துவிடுவார்கள் என மோடியும் அவரது சகாக்களும் நம்புகிறார்கள். இந்த நாடகத்தை நம்புவதற்கு இங்கு யாருமில்லை. மத்தியில் ஆளும் பாஜக அரசின் நோக்கம், இந்தியை திணிப்பதும் தமிழை அழித்தொழிப்பதும்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
சமீபத்தில் வெளிவந்த கீழடி ஆய்வறிக்கை, தமிழர்களின் வரலாற்றுணர்வை வரலாற்றுப் பெருமிதத்தைப் பெரிதும் புத்துணர்ச்சிகொண்டதாக மாற்றியிருக்கிறது. இது, தமிழர்களின் பண்பாட்டு தொன்மைகுறித்த சுயபெருமை அல்ல; மாறாக, ஆசியக் கண்டத்தில் மனிதகுல பண்பாட்டு வரலாற்றில் இதுவரை சொல்லப்பட்ட கருதுகோள்களை பெரிதும் மாற்றியமைக்கக்கூடியது. திராவிட நாகரிகத்தின் இந்தத் தொன்மையை ஏற்றுக்கொண்டால், ஆரிய நாகரிகம் மற்றும் அதன் மேலாதிக்கம்குறித்து உருவாக்கப்படும் பல்வேறு வரலாற்றுப் புனைவுகள் அடியோடு தகர்க்கப்பட்டுவிடும். இதற்கு எதிராகவே கீழடி ஆய்வுகள் மட்டுமல்ல; தமிழகத்தின் பல்வேறு தொல்பொருள் ஆய்வுகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்திருக்கின்றன. மூடிமறைக்கும் இம் முயற்சிகளைத் தாண்டித்தான் இன்று கீழடிக்குக் கீழிருக்கும் தொன்மையான தமிழர் வரலாறு பிரமாண்டமாக மேலெழுந்து வந்திருக்கிறது. இதை, இங்கே குறிப்பிடுவதன் காரணம், தமிழர் வரலாறு தமிழர் பண்பாடுசார்ந்த விசயங்களில் மத்திய அரசு எவ்வாறு ஓர் ஒடுக்குமுறை அரசியலைத் தொடர்ந்து பிரயோகித்து வந்திருக்கிறது என்பதற்காகத்தான். இன்று கீழடியில் கண்டறியப்பட்ட திராவிட தொல்பண்பாட்டை, தமிழகத்து நிலப்பரப்போடு சுருக்குகிற முயற்சியில் தமிழ்த்தேசியவாதிகளும் இந்துத்துவா சக்திகளும் ஒன்றாகக் களமிறங்கியிருக்கின்றன. திராவிடம் என்பது ஒரு அரசியல் – சமூகநீதிச் சொல்லாடல் என்பதால், அந்தச் சொல்லை ஒழிப்பது இவர்களுக்கு அவசியமாக இருக்கிறது. சமூகநீதியை ஒழிக்கவேண்டுமென்றால் திராவிடத்தை ஒழிக்கவேண்டும். திராவிடத்தை ஒழிப்பதற்கு திராவிடத்தையும் தமிழையும் நேரெதிராக நிறுத்தவேண்டும். இதற்கான மிகப்பெரிய செயல்திட்டம் கீழடியை முன்வைத்து இங்கு உருவாக்கப்பட்டுவிட்டது. திராவிடம் என்ற சமூகநீதி சித்தாந்தத்திற்கும் தமிழ் அடையாளத்திற்கும் எதிராக பின்னப்படும் சூழ்ச்சிவலைகளை, தமிழகம் எப்படி அறுத்தெறியப்போகிறது என்பதில்தான் அதனுடைய நிகழ்காலமும் எதிர்காலமும் இருக்கிறது.