சமீபத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பேசியதாக சொல்லப்படும் ஒரு ஆடியோ பதிவை வைத்துக்கொண்டு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் அவருடைய ஊடக எடுபிடிகளும் தி.மு.க. தொடர்பான அவதூறு பரப்பும் வேலையை செய்துவருகின்றனர். இந்த ஆடியோ போலியானது. சம்மந்தமில்லாத வெவ்வேறு குரல் பதிவுகளிலிருந்து வெட்டி ஒட்டப்பட்டது என்பதை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சான்றுகளுடன் பொதுவெளியில் முன் வைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, முதலமைச்சரின் குடும்பத்தினர் தொடர்பாக தான் பேசியதாக பரப்பப்படும் அந்த ஆடியோ யாருடன் பேசப்பட்டது என்பதை வெளியிடத் தயாரா என்ற சவாலையும் அவர் முன்வைக்கிறார். இது எதற்கும் இந்த ஆடியோவை பரப்புகிறவர்களிடமிருந்து எந்த பதிலுமில்லை. அதேபோலத்தான் ‘டி.எம்.கே ஃபைல்ஸ்’ என்று தமிழக பா.ஜா.க. அண்ணாமலை வெளியிட்ட போலிப்பட்டியல். இதற்கெதிராக தி.மு.க. மான நஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

ஆதாரமற்ற, நிரூபிக்க முடியாத, போலியான இந்த ஆவணங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன என்பதுதான் முக்கியமான கேள்வி. இது நம்காலத்தினுடைய மிகப்பெரிய பிரச்சனையும்கூட. அரசியல் என்பது கொள்கைகள், எதிர் கொள்கைகள் ஆகியவற்றிற்கு இடையிலான மோதல் என்பது மாறி ‘கேரக்டர் அசாசினேஷன்’ என்பதன் வழியே ஒரு இயக்கத்தின், ஒரு தலைவரின் பொது பிம்பத்தை தொழில்நுட்பத்தின் வழியாக சிதைக்கக்கூடிய பெரும் அபாயம் உருவாகியிருக்கிறது. இது இன்று உலகலாவிய பிரச்சனையாக மாறியிருக்கிறது. செயற்கை நுண்ணறிவுத்துறை இதன் அபாயங்களை இன்று தீவிரமாக்கிவிட்டது.

செயற்கை நுண்ணறிவுத்துறையைப் பயன்படுத்தி எந்த ஒரு மனிதரின் அச்சு அசல் போன்ற குரலையோ நிழற்படங்களையோ காணொலிகளையோ உருவாக்கக்கூடிய காலம் வந்துவிட்டது. இன்றைய பிரபல நடிகர்களின் தோற்றங்களை அவர்கள் இல்லாமலேயே உருவாக்கி ஒரு முழுநீளத் திரைப்படத்தையே உருவாக்க முடியும். மேலும் செயற்கை நுண்ணறிவுத்துறை அலுவலக அறிக்கைகளைத் தயாரிக்கிறது, கவிதைகள் எழுதுகிறது, கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. தன்னிடமிருக்கும் தகவல்களின் தொகுப்புகள் மூலமாக அதனால் எந்த ஒன்றையும் புதிதாக படைக்க முடியும். அதனுடைய துள்ளியத்தன்மையும் நம்பகத்தன்மையுடைய மாயத் தோற்றமும் பல்வேறு அபாயங்களை முன்னிறுத்துகிறது.

இன்று இதன் முதன்மையான அபாயமாக விவாதிக்கப்படுவது இந்த தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி ஆபாசப் படங்களை வெகு எளிதாக தயாரிக்க முடியும் என்பதுதான். செயற்கையாக புனையப்படும் கதாபாதிரங்களை வைத்து மட்டுமல்ல, நிஜ உலகில் வாழும் ஒரு குறிப்பிட்ட மனிதர் பாலியல் செயல்களில் ஈடுபடுவது போன்ற பிம்பங்களை வெகு எளிதில் உருவாக்க முடியும். குறிப்பாக பிரபல மனிதர்கள் அரசியல் எதிரிகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ‘கேரக்டர் அசாசினேஷன்’ செய்ய விரும்பும் தனி மனிதர்கள் பாலியல் செயல்களில் ஈடுபடுவது போன்ற துல்லிமான காணொலிகளை உருவாக்கி பொது வெளியில் பரப்ப முடியும். அது போலி என்று நிறுவப்படுவதற்குள் அந்த மனிதர்களின் தனி மனித கண்ணியத்திற்கு பெரும் சேதம் விளைந்து முடிந்துவிடும். இது தனி மனித சுதந்திரத்தின் மீதும் பண்பாட்டு வாழ்வின்மீதும் ஏற்படுத்தப்போகும் அபாயங்கள் மோசமானதாக இருக்கப்போகின்றன.

அடுத்ததாக இந்த செயற்கை நுண்ணறிவுத்துறை ஒரு மிகப்பெரிய அரசியல் கருவியாகவும் பயன்படப்போகிறது என்பதை நமது காலத்தில் நாம் தெளிவாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக அவர்மீது தொடரப்பட்ட வழக்கு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக அவர் கைது செய்யப்பட்டு போலீசாரால் இழுத்து செல்லப்படுவது போன்ற காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவின. பலரும் அதை உண்மை என்றே நம்பினார்கள். பின்னர் அது செயற்கை நுண்ணறிவுத்துறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என நிரூபணம் ஆனது. ‘டீப் ஃபேக்ஸ்’ ( deep fakes) ஜெனரேடிவ் ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் குறித்து இன்றுபெரும் விவாதங்கள் உருவாகியுள்ளன. 2019 நவம்பரில் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘ஃபியூச்சர் அட்வகேசி’மற்றும் ‘ஆர்டிஸ்ட் பில் போஸ்டர்ஸ்’ என்ற ஆய்வு நிறுவனங்களால் வெளியிடப்பட இரண்டு காணொலிகள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் அவரது போட்டியாளரான தொழிலாளர் கட்சியின் ஜெர்மி கார்ப்பினும் ஒருவரை ஒருவர் ஆமோதிப்பதுபோலக் காட்டியது. அதேபோல அதற்கு முந்தைய வருடம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா டொனால்ட் டிரம்ப்பைப் பற்றி பேசியதுபோல ஒரு போலிக்காணொலி வெளிவந்தது. இந்தியாவிற்குள் இவை அறிமுகமாக அதிக நேரமாகவில்லை. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப்பில் பேசுவது போன்ற ஒரு ஒரு போலி காணொலி வெளியிடப்பட்டது. 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பா.ஜா.க. தலைவர் மனோஜ் திவாரி இரு மொழிகளில் வெளியிட்ட தேர்தல் பிரச்சாரக் காணொலி மிகத்துல்லியமாக சந்தேகத்திற்கு இடமின்றி தயாரிக்கப்பட டீப் ஃஃபேக் காணொளி. எதிர்காலத்தில் காந்தி பா.ஜ.க.விற்காக தண்டி யாத்திரையில் வாக்கு கேட்கும் துல்லியமான கருப்பு வெள்ளைக் காணொலிகள் நமக்கு காணக்கிடைக்கலாம். எல்லாமே இங்கு சாத்தியம். சீனத் தெருக்களை குஜராத் தெருக்களென காட்டி தேர்தலில் வென்றவர்களால், எங்கோ நடந்த கலவரங்களை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதலாகச் சித்தரித்து பெரும் கலவரங்களை உருவாகியவர்களால் இந்த செயற்கை நுண்ணறிவுத்துறையை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமென யோசித்துப் பாருங்கள். அறமற்ற அரசியலை வழிமுறையாகக் கொண்டவர்களுக்கு எல்லாமே சாத்தியம். போலியாக ஒருவரின் குரலையோ பிம்பத்தையோ உருவாக்குவது மட்டுமல்ல, வேறொரு பொருளில் கூறியவற்றை மிகத் துல்லியமாக வெட்டியும் ஒட்டியும் முற்றிலும் வேறொரு பொருளில் தொணிக்கும்படியான பதிவுகளை உருவாக்க முடியும் என்பதற்கு ஏராளமான எளிய வழிமுறைகள் இருக்கின்றன.

இந்தப் போலிப் பதிவுகள் எப்படி மக்களிடம் பொதுக் கருத்துகளை உருவாக்குகின்றன? இன்று மக்களுடைய சிந்தனாமுறையின்பெரும் பகுதி சமூக வலைதளங்கலினால் கட்டுப்படுத்தப்படுகிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால், நமது மூளையின் ஒரு பகுதியாகவே சமூக வலைதளங்கள் மாறிவிட்டன. நீங்கள் எந்த ஒரு போலி பிம்பத்தையோ புனைவையோ உண்மை போல திரும்பத் திரும்ப சமூக வலைதளங்களில் பரப்பிக்கொண்டே இருந்தால் எளிய மனங்கள், அரசியல் புரிதலற்ற மனங்கள் அவற்றை எளிதில் நம்பிவிடுகின்றன. இதுதான் நவீன வெகுசன உளவியல் செயல்படும் விதம். தமிழ்நாட்டில் மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்தே ஏராளமான யூ ட்யூப் சேனல்கள் புற்றீசல்போலத் தொடங்கப்பட்டன. இவற்றிற்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்ற சந்தேகம் அப்போதே எழுந்தது. சமீபத்தில் நடுநிலை முகமூடி அணிந்த பல நடுநிலை ஊடகவியலாளர்கள் எவ்வாறு சிலருக்கு எதிராகவும் சிலருக்கு ஆதரவாகவும் ஊடகக் கூலிப்படைகளாக செயல்படுகிறார்கள் என்பது காணொலிகளாக அம்பலமானது.

எல்லாம் 2024 தேர்தலையொட்டி சில ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள்.
குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட பல யூ ட்யூப் சேனல்கள், அந்த நோக்கங்களுக்காக விலைக்கு வாங்கப்பட்ட ஊடவியலாளர்கள், அண்ணாமலை போன்றவர்கள் தொடர்ந்து பரப்பும் போலிக் குற்றச்சாட்டுகள், சவுக்கு சங்கர் போன்ற அரசியல் தரகர்கள்… இவர்கள்தான் இன்று சமூக வலைதளங்களை ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஒரு மரபார்ந்த அரசியல் இயக்கத்தால் இவர்களின் வழிமுறைகளை கைக்கொள்ள முடியாது.அவற்றிற்கென சில அடிப்படைச் சித்தாந்தங்களும் வழிமுறைகளும் இருக்கின்றன. ஆனால் எந்த தார்மீக அடிப்படையுமற்ற அண்ணாமலை, சவுக்கு சங்கர் போன்ற லும்பன்கள் தங்கள் நோக்கங்களுக்காக எந்த நிலைக்கும் இறங்குவார்கள், எந்தப் பொய்யையும் தயங்காமல் கூறுவார்கள். அவற்றைக் கடைக்கோடி மனிதன் வரை கொண்டுசெல்வதற்கான தொடர்பியல் கட்டமைப்புகள் அவர்களிடம் இருக்கின்றன.

இன்று எந்த அரசியல் புரிதல்களுமற்ற ஒரு தலைமுறை நம் கண் முன்னால் வளர்ந்து வருகிறது. அவர்கள் கவர்ச்சிகரமான பொத்தாம் பொதுவான புனைவுகளை எளிதில் நம்புகிறார்கள். மேலோட்டமான எளிய புனைவுகளின் அடிப்படையில் அரசியல் முடிவுகளுக்கு வருகிறார்கள். இவர்களை இலக்காகக் கொண்டே இந்த கருத்துருவாக்கங்கள் செய்யப்படுகின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தல் பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளுக்கு இரண்டு சித்தாந்தங்களுக்கு இடயிலான போராட்டம் என்பதைக் காட்டிலும் புனைவுகளுக்கும் உண்மைக்குமிடையிலான போராட்டமாக இருக்கப்போகிறது. எதிர்க்கட்சிகள் மீதான அவதூறுகள், அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் புலனாய்வு சோதனைகள், பொய் வழக்குகள், ஊடக புனை சுருட்டுகள் என சகல ஆயுதங்களுடனும் பா.ஜ.க.தனது படைகளை களமிரக்கியிருக்கிறது. வரப்போகிற இந்த நாடாளுமன்றத் தேர்தல் எதிர்க்கட்சிகள் இதுவரை சந்தித்த தேர்தல்களிலேயே சவாலானதாக இருக்கப்போகிறது. அரசியல் எதிரிகளை அல்ல. ஒரு மாபெரும் கிரிமினல் கும்பலை எதிர் கட்சிகள் சந்திக்கவேண்டிய தேர்தல் இது. அதற்கேற்ற புதிய வழிமுறைகளை உருவாக்காவிட்டால் இவர்கள் பரப்புகிற போலி பிம்பங்களை எதிர்கொள்வது மிகவும் சவாலானதாகிவிடும்.

ஒவ்வொரு நவீன தொழில்நுட்பத்தையும் குற்றத்தன்மையுடையவர்கள்தான் முதலில் முழுவீச்சுடன் பயன்படுத்துகிறார்கள். இன்று நீதிமன்றங்கள் புலனாய்வு அமைப்புகள், ஊடகங்கள் அனைத்தும் பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் இருக்கும் சூழலில் எதிர்க்கட்சிகள் மக்களை மேலும் நெருங்கிச்செல்வதற்கான புதிய ஆயத்தங்களில் ஈடுபடுவதுதான் ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டத்தில் நமது முன்முயற்சிகளாக இருக்க வேண்டும்.